அத்தியாயம்  அத்தவ்பா  9 : 93-129 / 129
9:93 ஆனால், எவர்கள் செல்வந்தர்களாயிருந்தும் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கோருகின்றார்களோ அவர்கள் மீதே ஆட்சேபணை இருக்கின்றது. வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்திருக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டுவிட்டான்! ஆகவே, இவர்கள் (தங்களின் இந்த நடத்தை அல்லாஹ்வின் திருமுன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை) இப்பொழுது அறிந்தார் இலர். 9:94 நீங்கள் அவர்களிடம் திரும்ப வருவீர்களானால், உங்களிடம் அவர்கள் (விதவிதமான) சாக்குப் போக்குகள் கூறுவார்கள். ஆனால், நீர் கூறும்: “சாக்குப் போக்கு கூறாதீர்கள்; நீங்கள் கூறும் எதனையும் நாங்கள் ஏற்கமாட்டோம். உங்களுடைய நிலைமைகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல் முறையை நிச்சயம் பார்ப்பார்கள்! பின்னர் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறியக் கூடியவன் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்! அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.” 9:95 நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். 9:96 நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது ஒருபோதும் திருப்தி கொள்ள மாட்டான். 9:97 இந்த நாட்டுப்புற அரபிகள் இறைநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்களாவர். மேலும், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது இறக்கியருளிய தீனின் (நெறியின்) வரையறைகளை அவர்கள் அறியாதிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களிடம் அதிகம் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 9:98 இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இப்படியும் இருக்கின்றனர்; இறைவழியில் சிறிதளவு செலவு செய்வதை (தங்கள் மீது விதிக்கப்பட்ட) தண்டத் தொகையாகக் கருதுகின்றார்கள். உங்களுக்குக் கெட்ட காலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (அதாவது, நீர் ஏதேனும் துன்பத்தில் மாட்டிக் கொண்டால் அப்போது நீர் எந்த அமைப்பில் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கின்றீரோ அந்த அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.) உண்மை யாதெனில், கெட்ட காலம் அவர்களையே சூழ்ந்துள்ளது. மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 9:99 இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இவ்வாறும் உள்ளனர்: அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், அவர்கள் எதனைச் செலவழித்தாலும், அதனை அல்லாஹ்விடம் நெருக்கத்தையும் தூதரிடமிருந்து அருள்பாலிக்கப்படுவதற்குரிய பிரார்த்தனைகளையும் அடைவதற்கான சாதனமாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆம்! திண்ணமாக, அது (அல்லாஹ்விடம்) அவர்கள் நெருங்குவதற்குரிய சாதனமாகும். தன்னுடைய கருணையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் நுழைவிப்பான்! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 9:100 (இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். 9:101 உங்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளில் பலர் நயவஞ்சகர்களாக இருக்கின்றனர். இதேபோன்று மதீனாவாசிகளிலும் உள்ளனர். அவர்களோ நயவஞ்சகத்தில் ஊறித் திளைத்து இருக்கிறார்கள். அவர்களை நீர் அறிய மாட்டீர்; நாம் அறிவோம். வெகு விரைவில் அவர்களுக்கு இருமடங்கு தண்டனை வழங்குவோம். பிறகு, அவர்கள் மாபெரும் தண்டனைக்காக திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். 9:102 மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலோடு தீயசெயலையும் கலந்துவிட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும். ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான். 9:103 (நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக! ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்கு சாந்தி அளிக்கக்கூடியதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 9:104 திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான்; அவர்களின் தானதர்மங்களை அங்கீகரிக்கின்றான் என்பதையும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? 9:105 மேலும், (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடுவீராக: “நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும் உங்களுடைய நடத்தை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் செய்வார்கள். பிறகு, மறைவான வெளிப்படையான அனைத்தையும் அறிந்தவனிடம் அதிவிரைவில் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவித்து விடுவான்.” 9:106 மேலும், இப்படியும் சிலர் இருக்கின்றார்கள்: அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் ஆணைக்காக தாமதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவன் நாடினால் அவர்களைத் தண்டிப்பான்; நாடினால் அவர்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். 9:107 மேலும், (அவர்களில்) சிலர் ஒரு பள்ளிவாசலை உருவாக்கியிருக்கின்றார்கள்; எதற்காகவெனில் (சத்திய அழைப்பிற்கு) ஊறு விளைவிக்க வேண்டும்; (அல்லாஹ்வுக்கு அடிபணிவதற்குப் பதிலாக அவனை) நிராகரிக்க வேண்டும்; மேலும், நம்பிக்கையாளர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும்; மேலும், இதற்குமுன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்குப் பதுங்குமிடமாக்க வேண்டும் என்பதற்காக! மேலும், “நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். ஆனால், திண்ணமாக அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி அளிக்கின்றான். 9:108 அப்படிப்பட்ட இடத்தில் நீர் ஒருபோதும் தொழ வேண்டாம். தொடக்க நாளிலிருந்து இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்ற பள்ளிவாசல்தான் நீர் தொழுவதற்கு மிகவும் தகுதியானதாகும். தூய்மையுடன் வாழ விரும்பும் மனிதர்கள் அங்கு உள்ளனர். தூய்மையை மேற்கொள்பவர்களைத்தாம் அல்லாஹ்வும் நேசிக்கின்றான். 9:109 (இனி நீர் என்ன கருதுகின்றீர்?) இறையச்சத்தையும், இறை உவப்பையும் அடிப்படையாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா? அக்கிரமம் இழைக்கும் இத்தகையக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 9:110 அவர்கள் எழுப்பிய இந்தக் கட்டடம் அவர்களின் உள்ளங்களில் என்றைக்கும் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்; அவர்களின் உள்ளங்கள் நொறுங்கினால் ஒழிய (அந்த அமைதியின்மை நீங்குவதற்கு எவ்வழியும் இல்லை!) அல்லாஹ் அனைத்தையும் தெரிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 9:111 உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள் அவர்களுக்கு (சுவனம் கிடைக்கும் எனும் இந்த வாக்குறுதி) அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒரு திடமான வாக்குறுதியாகும். இதுவோ தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றிலும் உள்ளது. மேலும், அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை சிறப்பாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உங்களுடைய இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! இதுவே மாபெரும் வெற்றியாகும். 9:112 அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் திரும்புபவர்கள். அவனுக்கு அடிபணிந்து வாழ்பவர்கள், அவன் புகழ்பாடுபவர்கள், அவனுக்காகச் சுற்றித்திரிபவர்கள், அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குபவர்கள், நன்மை புரியுமாறு ஏவுபவர்கள், மேலும் தீமையிலிருந்து தடுப்பவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைக் காப்பவர்கள் (இத்தகைய மாண்புடைய இறை நம்பிக்கையாளர்கள் தாம் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஆவர்). மேலும் (நபியே!) நீர் இந்நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவிப்பீராக! 9:113 இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே! 9:114 இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்குத் தாம் அளித்திருந்த வாக்குறுதியின் காரணமாகத்தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்குப் பகைவனாக இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்குத் தெளிவாகி விட்டபோது, அவர் தம் தந்தையை விட்டு விலகிக் கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உடையவராய் இருந்தார். 9:115 ஒரு சமூகத்தாருக்கு நேர்வழி அளித்த பின்னால், எவற்றிலிருந்தெல்லாம் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்காத வரை அவர்களை வழிகேட்டிற்குள்ளாக்குவது அல்லாஹ்வின் நியதி அல்ல! திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாய் இருக்கின்றான். 9:116 உண்மையாகவே வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாகும். வாழ்வும், மரணமும் அவன் கைவசமே உள்ளன. மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவிபுரிபவரும் யாருமில்லை. 9:117 நபியையும், துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும்* அல்லாஹ் பொறுத்தருளினான், அவர்களில் ஒரு சிலரின் உள்ளங்கள் நெறி தவறுதலின்பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த போதிலும்! (ஆனால் அவர்கள் நெறி தவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தனர். அப்போது) அல்லாஹ் அவர்களை மன்னித்துவிட்டான். திண்ணமாக, அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான். 9:118 மேலும், விவகாரம் ஒத்திப்போடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்தான்; அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டிருந்ததெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர்வாழ்வதே கஷ்டமாகி விட்டிருந்தது! இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவனுடைய அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவமன்னிப்புக்கோரி தன்னிடம் மீண்டுவர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் மீது கருணை பொழிந்தான். திண்ணமாக, அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான். 9:119 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுக்குத் துணையாக இருங்கள்! 9:120 அல்லாஹ்வுடைய தூதருடன் போருக்குச் செல்லாமல் தங்கிவிடுவதும், அவரைப் பொருட்படுத்தாமல் தங்களைப் பற்றியே அதிக அக்கறை கொள்வதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றி வாழும் நாட்டுப்புற அரபிகளுக்கும் அழகல்ல! ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் உடற்களைப்பின் எந்த ஒரு துன்பத்தை அவர்கள் சகித்துக் கொண்டாலும், மேலும் சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பாக இருக்கும் பாதையில் எந்த ஓர் அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், மேலும் எந்த ஒரு பகைவனிடமும் (சத்திய விரோதப் போக்கிற்காக) எந்தப் பழியை அவர்கள் வாங்கினாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களின் பெயரில் ஒரு நன்மை எழுதப்படாமல் ஒருபோதும் விடப்படமாட்டாது. திண்ணமாக, அல்லாஹ்விடம் நன்னடத்தை உடையோரின் கூலி வீணாக்கப்படுவதில்லை. 9:121 (இதேபோல்) அவர்கள் (அல்லாஹ்வின் வழியில்) சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ செலவு செய்யும் எது ஒன்றும், மேலும் (ஜிஹாதுக்காக) ஏதேனும் ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்வதும் அவர்களுடைய பேரில் பதிவு செய்யப்படாமல் ஒருபோதும் விடப்பட மாட்டாது. எதற்காகவெனில், இவர்களுடைய சிறப்பான சாதனைகளுக்கான நற்கூலியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக! 9:122 மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்கள் அனைவருமே புறப்பட வேண்டுமென்பது தேவையில்லை. எனினும், அவர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு சிலர் மட்டும் புறப்படலாமே! எதற்காகவெனில், மார்க்க அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டு தம் சமுதாயத்தாரிடம் திரும்பிவந்து அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! இதன் வாயிலாக (இஸ்லாத்திற்கு மாற்றமான போக்கை) அவர்கள் தவிர்த்துக் கொள்ளக்கூடும்! 9:123 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 9:124 ஏதேனும் ஒரு (புதிய) அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சிலர் “இது உங்களில் எவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று (முஸ்லிம்களிடம் பரிகாசமாய்க்) கேட்கின்றார்கள். உண்மையில் யார் நம்பிக்கையாளர்களோ அவர்களின் நம்பிக்கையை ஒவ்வோர் அத்தியாயமும் அதிகமாக்கியே இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். 9:125 ஆயினும், எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி குடிகொண்டிருந்ததோ அவர்களிடம் ஏற்கனவே இருந்த அசுத்தத்தை அந்த (புதிய) அத்தியாயம் ஒவ்வொன்றும் மேலும் அதிகரிக்கச் செய்தது. மேலும், நிராகரிப்பாளர்களாகவே அவர்கள் மரணமடைந்தார்கள். 9:126 ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ இரு முறையோ அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; நல்லுரை பெறுவதும் இல்லை! 9:127 ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால் அவர்களில் ஒருவர் மற்றவரிடம் “உங்களை யாரும் பார்க்கவில்லையே?” என்று கண்களாலேயே சாடை காட்டி, (அங்கிருந்து) நழுவிச் சென்று விடுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுடைய இதயங்களைப் புரட்டி விடுகின்றான். ஏனெனில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர். 9:128 (பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்காளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார் 9:129 (இனி) அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறிவிடும்: “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அர்ஷின்* அதிபதியாயிருக்கின்றான்.”
அத்தியாயம்  யூனுஸ்  10 : 1-25 / 109
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
10:1 அலிஃப், லாம், றா இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும். 10:2 (அலட்சியத்தில் மூழ்கியிருக்கும்) மக்களை எச்சரிப்பீராக என்றும், ஈமான் நம்பிக்கை கொள்வோர்க்கு அவர்களின் இறைவனிடம் உண்மையான மதிப்பும் கண்ணியமும் உண்டு என்று நற்செய்தி அறிவிப்பீராக என்றும் அவர்களிலிருந்தே ஒரு மனிதருக்கு நாம் வஹி அனுப்பியது அவர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? இதனைக் கண்டு இறைநிராகரிப்பாளர்கள் “இவர் ஒரு வெளிப்படையான சூனியக்காரர்” என்று கூறினார்கள். 10:3 உண்மை யாதெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உங்கள் அதிபதி; அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து (பேரண்டத்தின்) அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றான். எந்தப் பரிந்துரையாளரும் அவனது அனுமதி பெறாமல் பரிந்துரைக்க முடியாது! இத்தகைய அல்லாஹ்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, அவனையே வணங்குங்கள்! நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? 10:4 நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கின்றான். பின்னர், மறுமுறையும் அவனே அவற்றைப் படைப்பான்; ஏனெனில், இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! மேலும், எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டார்களோ அவர்கள் (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கொதிக்கும் நீரைக் குடிப்பார்கள்; துன்புறுத்தும் தண்டனையை அனுபவிப்பார்கள். 10:5 அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான். 10:6 திண்ணமாக, இரவு பகல் மாறி மாறி வருவதிலும்; வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள நாடும் மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 10:7 உண்மை யாதெனில், எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ, மேலும், உலக வாழ்க்கையில் மனநிறைவு கொண்டு அதிலே முழு நிம்மதியும் அடைந்தார்களோ, மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகளைக் குறித்து அலட்சியமாக இருக்கின்றார்களோ 10:8 அவர்களின் புகலிடம் (தங்களின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையினால்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகமாகும். 10:9 ஆனால், உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் ஈமான் நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; 10:10 “இறைவா! நீயே தூய்மையானவன்” என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும், “சாந்தி நிலவட்டும்!” என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். மேலும், “அகிலத்தார்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும். 10:11 மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங் காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல.) எனவே, எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ அவர்களை அவர்களின் வரம்பு மீறிய செயல்களிலேயே உழன்று கொண்டிருக்கும்படி நாம் விட்டுவிடுகின்றோம். 10:12 மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில், அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். ஆனால், நாம் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிடும் போது, அவன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே நம்மிடம் பிரார்த்திக்காதவன் போல் சென்று விடுகின்றான்! வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் இவ்வாறே அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன. 10:13 (மக்களே) உங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல சமுதாயத்தார்களை அவர்கள் கொடுமைகள் புரிந்தபோது நாம் அழித்துவிட்டோம். அவர்களிடமோ அவர்களின் தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தனர்; ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே இல்லை. இவ்வாறே குற்றம் புரியும் கூட்டத்தாருக்கு அவர்களின் குற்றத்திற்கான கூலியை நாம் அளிக்கின்றோம். 10:14 பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக! 10:15 மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பாதவர்கள், “இதைத் தவிர வேறொரு குர்ஆனைக் கொண்டு வாரும்; அல்லது இதில் கொஞ்சம் மாற்றம் செய்யும்!” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “என் விருப்பப்படி அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது என் பணியல்ல. எனக்கு அறிவிக்கப்படுகின்ற இறைச்செய்தியைத்தான் நான் பின்பற்றுகின்றேன். நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மாபெரும் பயங்கர நாளின் வேதனைக்கு அஞ்சுகின்றேன்.” 10:16 மேலும், நீர் கூறும்: “(நான் ஓதிக் காண்பிக்கக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் உங்களுக்கு இந்தக் குர்ஆனை ஒருபோதும் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும், அல்லாஹ்வும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். இதற்கு முன்னர் நீண்ட காலம் நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் சிந்தித்துணர வேண்டாமா? 10:17 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யென்று கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்!” 10:18 இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான். 10:19 மேலும், (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்; பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்தனர். உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டிராவிட்டால், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டிருக்கும். 10:20 மேலும், “இந்த நபியின் மீது அவருடைய இறைவனிட மிருந்து ஏதேனும் ஒரு சான்று இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். நபியே! நீர் கூறும்: “மறைவானவற்றுக்கு உரியவன் அல்லாஹ்வே ஆவான். நீங்கள் எதிர்பாருங்கள்; நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.” 10:21 மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். நீர் கூறுவீராக: “அல்லாஹ் சூழ்ச்சிகளை (முறியடிக்கச்) செய்வதில் மிக விரைவானவன். அவனுடைய வானவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.” 10:22 தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். 10:23 ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம். 10:24 (எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம். 10:25 (இந்த நிலையற்ற வாழ்வின் மோகத்தில் நீங்கள் மயங்கிக் கிடக்கின்றீர்கள்). அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)