அத்தியாயம்  அத்தவ்பா  9 : 34-92 / 129
9:34 இறைநம்பிக்கையாளர்களே! (வேதம் வழங்கப்பட்டவர்களைச் சார்ந்த) பெரும்பாலான அறிஞர்களும், துறவிகளும் மக்களின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக! 9:35 ஒருநாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்! 9:36 உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 9:37 ‘நஸீஃ’ நிராகரிப்பை அதிகப்படுத்தும் செயலாகும். நிராகரிப்பை மேற்கொண்ட மக்கள் இதனால் மேலும் வழிகெடுக்கப்படுகின்றார்கள். ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் விலக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். ஏனெனில், அல்லாஹ்வினால் (போர்புரிய) தடைசெய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக! இவ்வாறாக அல்லாஹ்வினால் தடுக்கப்பட்ட மாதத்தை இவர்கள் அனுமதிக்கப்பட்டதாய் ஆக்கிக் கொள்கின்றனர் அவர்களுடைய தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. சத்தியத்தை மறுக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 9:38 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? ‘அல்லாஹ்வின் வழியில் புறப்படுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டால், பூமியிலேயே அமிழ்ந்து கிடக்கின்றீர்களே! மறுமையைவிட உலக வாழ்க்கையில் நிறைவடைந்து விட்டீர்களா? (அவ்வாறாயின் அறிந்து கொள்ளுங்கள்:) உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு முன் மிக அற்பமானவையாகவே இருக்கும். 9:39 நீங்கள் இறைவழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், உங்களுக்குப் பதிலாக வேறொரு சமூகத்தினரைக் கொண்டு வருவான். மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்த ஒரு தீங்கும் செய்திட முடியாது. அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 9:40 நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன), நிராகரிப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறைநிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். 9:41 கனமாக இருந்தாலும் சரி, இலேசாக இருந்தாலும் சரி, நீங்கள் புறப்படுங்கள்! உங்களுடைய உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள்! நீங்கள் அறிவுடையோராயின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். 9:42 (நபியே!) விரைவில் பலன் கிட்டுவதாயும், பயணம் சிரமமின்றியும் இருந்திருப்பின், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்தொடர்ந்து வந்திருப்பார்கள். ஆனால், இப்பயணம் அவர்களுக்கு மிகவும் சிரமமாகத் தோன்றியது. “எங்களால் இயலுமாயின் நிச்சயம் நாங்கள் உங்களோடு கிளம்பியிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். 9:43 (நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போரில் கலந்திடாமல் இருக்க) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதி அளித்தீர்? (நீர் அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால்) வாய்மையாளர்கள் யார் என்றும், பொய்யர்கள் யார் என்றும் உமக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே! 9:44 அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றவர்கள் தங்களுடைய உடைமைகளையும், உயிர்களையும் அர்ப்பணித்துப் போர்புரிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று ஒருபோதும் உம்மிடம் கோரமாட்டார்கள். அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை நன்கறிபவனாக இருக்கின்றான். 9:45 எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லையோ, மேலும் தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ, மேலும், அந்த சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இத்தகைய கோரிக்கைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றனர். 9:46 மேலும், உண்மையிலேயே (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்கள் நாடியிருந்தால், அதற்கு வேண்டிய சில ஆயத்தங்களை அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கிளம்புவதை அல்லாஹ் விரும்பவேயில்லை. எனவே, அவன் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டான். ஆகவே, ‘தங்கியிருப்பவர்களோடு சேர்ந்து நீங்களும் தங்கி விடுங்கள்!’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. 9:47 அவர்கள் உங்களோடு வந்திருந்தால், வீண் குழப்பங்களைத் தவிர வேறு எதனையும் அவர்கள் உங்களிடையே அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக உங்களுக்கிடையே விஷமம் செய்துகொண்டு திரிந்திருப்பார்கள். ஆனால் (உங்களுடைய நிலை என்னவெனில்) இன்னும்கூட அவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர் உங்களில் பலர் இருக்கின்றனர். அல்லாஹ் அக்கிரமக்காரர்களை நன்கறிபவனாய் இருக்கின்றான். 9:48 இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பம் செய்ய முயன்றிருக்கிறார்கள். மேலும், உம்மைத் தோல்வியுறச் செய்ய எல்லாவிதமான தில்லுமுல்லுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் விரும்பாத நிலையிலும் சத்தியம் வந்தது; அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கவே செய்தது. 9:49 மேலும் (போருக்குச் செல்லாதிருக்க) “எனக்கு அனுமதி தாரும்; என்னைச் சோதனைக்குள்ளாக்காதீர்!” என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர். இதோ கேளுங்கள்; சோதனையிலேயே அவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். மேலும் நரகம் இத்தகைய இறைநிராகரிப்பாளர்களைத் திண்ணமாக சூழ்ந்து கொண்டிருக்கிறது. 9:50 உமக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், அது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. மேலும், உமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் “நாங்கள் முன்னரே எங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்துகொண்டோம்” என்று கூறிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர். 9:51 நீர் அவர்களிடம் கூறுவீராக: “(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமை யாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.” 9:52 அவர்களிடம் கூறும்: “எங்கள் விஷயத்தில் இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? ஆனால், நாங்கள் உங்கள் விஷயத்தில் எதிர்பார்ப்பது, அல்லாஹ்வே உங்களுக்குத் தண்டனை கொடுக்கின்றானா? அல்லது எங்கள் கைகளின் மூலம் கொடுக்க வைக்கின்றானா என்பதைத்தான்! ஆக, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்! நாங்களும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.” 9:53 அவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் பொருளை) விருப்புடனோ, வெறுப்புடனோ எவ்வாறேனும் செலவு செய்யுங்கள்; ஆனால், அது உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், திண்ணமாக நீங்கள் பாவம் செய்யும் சமூகத்தினராய் இருக்கின்றீர்கள்.” 9:54 அவர்கள் செலவு செய்த பொருள்கள் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும், தொழுகைக்கு வரும்போது சோம்பல் பட்டவர்களாகவே வருகின்றார்கள். இறைவழியில் செலவழிக்கும்போதும் மனமில்லாமலேயே செலவழிக்கின்றார்கள். 9:55 அவர்களிடமுள்ள செல்வங்களும், அவர்களின் மக்களும் உம்மை வியப்பில் ஆழ்த்திட வேண்டாம்! அல்லாஹ்வோ இவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை வேதனையில் ஆழ்த்திட வேண்டும் என்றும், சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் நாடுகின்றான். 9:56 மேலும், “நாங்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தாம்” என்று அல்லாஹ்வின் மீது மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், ஒருபோதும் அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்லர். உண்மையில், அவர்கள் (உங்களைக் கண்டு) அஞ்சுகின்ற மக்களாவர்; 9:57 ஏதேனும் ஒரு தஞ்சம் புகும் இடத்தையோ, குகையையோ, நுழைவிடத்தையோ அவர்கள் காண்பார்களானால் அங்கே விரைந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்! 9:58 மேலும், (நபியே!) அவர்களில் சிலர், தானதர்மங்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறுகிறார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்குச் சிறிது கொடுக்கப்பட்டால் மனநிறைவு கொள்கின்றார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் கோபம் அடைகிறார்கள். 9:59 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு கொண்டு “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து எங்களுக்கு இன்னும் அதிகம் வழங்குவான். அவனுடைய தூதரும் எங்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் ஆவல் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்களேயானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! 9:60 இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், பிடரிகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான். 9:61 மேலும், நபிக்கு மனவேதனை அளிக்(கும் முறையில் பேசு)கின்ற சிலரும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: “இவர் தம்முடைய காதில் விழுவதையெல்லாம் நம்புகிறார்!” நீர் கூறும்: “உங்களுக்கு நன்மை அளிப்பவற்றைத் தான் செவியேற்கிறார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார். மேலும் நம்பிக்கையாளர்களை நம்புகின்றார். உங்களில் யார் நம்பிக்கையாளர்களாய் விளங்குகின்றார்களோ அவர்களுக்கு முற்றிலும் அருட்கொடையாயும் இருக்கிறார். ஆனால், எவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு நோவினை தருகின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.” 9:62 அவர்கள் உங்களைத் திருப்தியுறச் செய்வதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயர் கூறி சத்தியம் செய்கின்றார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாய் இருந்தால், அவர்கள் திருப்தியுறச் செய்வதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் தகுதியானவர்கள். 9:63 எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைக்கின்றானோ அவனுக்குத் திண்ணமாக நரக நெருப்பு இருக்கிறது! அதில் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்! இது மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? 9:64 இறைநம்பிக்கையாளர்கள் மீது ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டு, அது தம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்திவிடுமோ என்று இந்நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். எவை வெளிப்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவற்றை அல்லாஹ் வெளிப்படுத்தியே தீருவான்.” 9:65 (நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் கூறுவர்: “நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக்கொண்டிருந்தோம்.” அவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும்தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா? 9:66 உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தாரை நாம் மன்னித்துவிட்டாலும் மற்றொரு கூட்டத்தாருக்கு நாம் தண்டனை வழங்கியே தீருவோம்! ஏனென்றால், அவர்கள் குற்றவாளிகளாகி விட்டனர்.” 9:67 நயவஞ்சக ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரேவித மானவர்கள்தாம்! அவர்கள் தீமை புரியுமாறு ஏவுகிறார்கள்; நன்மையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும், தங்களுடைய கைகளை (நன்மையானவற்றை விட்டு) முடக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்ததனால் அல்லாஹ்வும் அவர்களை மறந்தான்! திண்ணமாக, இந்நயவஞ்சகர்கள் தீயவர்கள்தாம்! 9:68 இந்நயவஞ்சக ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் நிராகரிப்பாளர்களுக்கும் நரக நெருப்பு உண்டென்று அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கின்றான். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! அதுவே அவர்களுக்குப் பொருத்தமான இடமாகும். மேலும், அவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும். அவர்களுக்கு நிலையான வேதனையும் இருக்கிறது. 9:69 உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் போன்றே நீங்களும் நடந்து கொள்கின்றீர்கள். அவர்கள் உங்களைவிடவும் அதிக ஆற்றல் பெற்றவர்களாயும், அதிகப் பொருள்களும் வழித்தோன்றல்களும் உடையவர்களாயும் இருந்தனர். உலகில் தமக்குரிய பங்கினை அவர்கள் அனுபவித்தார்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள், தமக்குரிய பங்கினை அனுபவித்தது போன்று நீங்கள் உங்களுக்குரிய பங்கினை அனுபவித்து விட்டீர்கள்! மேலும், வீண்வாதங்களில் ஈடுபட்டிருந்த அவர்களைப் போன்று நீங்களும் ஈடுபட்டீர்கள். (இறுதியில் அவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதென்றால்) அவர்கள் செய்த எல்லாச் செயல்களும் இம்மையிலும், மறுமையிலும் வீணாகிவிட்டன. மேலும், அத்தகையவர்களே இழப்புக்குரியவர்களாவர்! 9:70 தமக்கு முன்சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத் மற்றும் ஸமூத் கூட்டத்தினர், இப்ராஹீமின் சமூகத்தினர், மத்யன்வாசிகள் மற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தார்கள்! 9:71 இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்; தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும், தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும்! திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 9:72 கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்! மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும். இதுவே மாபெரும் வெற்றியாகும்! 9:73 நபியே! இறைநிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோருடன் (முழு வலிமையோடு) போராடுவீராக! மேலும், அவர்களிடம் கடினமாக நடந்து கொள்வீராக! இறுதியில், அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட இருப்பிடமாகும். 9:74 இறைநிராகரிப்புச் சொல்லினைத் திண்ணமாக கூறியிருந்தும், ‘நாங்கள் அவ்வாறு கூறவில்லை’ என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும் தம்மால் செய்ய முடியாத செயலைச் செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள். அவர்கள் தம்முடைய இந்நடத்தையிலிருந்து விலகிக்கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும். விலகிக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்பாரும், அவர்களுக்கு உதவி புரிவாரும் யாரும் இரார். 9:75 அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்: “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாவோம்” என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். 9:76 ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட் கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள். 9:77 எனவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும். 9:78 அவர்களுடைய அந்தரங்கத்தையும், அதைவிட இரகசியமானவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதையும் மறைவான உண்மைகள் அனைத்தையும் அவன் முழுமையாக அறியக்கூடியவன் ஆவான் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா? 9:79 இக்கஞ்சர்கள் (என்ன செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் அறிகிறான்.) இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் இவர்கள் குறை கூறுகின்றார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் இவர்கள் கேலி செய்கின்றார்கள். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கின்றான். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் இருக்கிறது. 9:80 (நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப் புக் கோரினாலும் சரி, கோராவிட்டாலும் சரி, எழுபது தடவைகள் இவர்களுக்காக நீர் மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! ஏனென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இவர்கள் நிராகரித்து விட்டார்கள். பாவம் புரியும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டு வதில்லை. 9:81 போருக்குச் செல்லாமல் தங்கிவிட அனுமதி பெற்றவர்கள், அல்லாஹ்வின் தூதர் புறப்பட்டதற்குப் பின்னால் தத்தம் வீடுகளில் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணித்துப் போராடுவதை வெறுத்தார்கள். மேலும், ‘கடுமையான இந்த வெப்ப காலத்தில் போருக்குப் புறப்படாதீர்கள்’ என்று (மக்களிடம்) கூறினார்கள். (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “நரக நெருப்பு இதைவிட அதிக வெப்பமுடையது.” அந்தோ! இதனை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டாமா! 9:82 இனி அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் விளைவு இவ்வாறுதான் இருக்கிறது. (அதனால் அவர்கள் அதிகம் அழட்டும்!) 9:83 அவர்களிடையே அல்லாஹ் உம்மைத் திரும்பக் கொண்டு வரும்போது (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்களில் ஒரு பிரிவினர் உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் (தெளிவாகக்) கூறிவிட வேண்டும்: “இனி ஒருபோதும் உங்களால் என்னுடன் வர இயலாது; என்னோடு வந்து எந்தப் பகைவர்களையும் எதிர்த்துப் போரிட உங்களால் முடியாது. ஏனெனில், முதல் தடவை (போருக்கு) வராமல் தங்கி விடுவதை நீங்கள் விரும்பினீர்கள். ஆகையால் (இனி) வராமல் தங்கி விட்டவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள்!” 9:84 (இனி,) அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்; மேலும், அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர்! ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள். மேலும், தீயவர்களாகவே அவர்கள் இறந்து போனார்கள். 9:85 அவர்களுடைய செல்வங்களும், அதிகமான பிள்ளைகளும் உம்மை வியப்பிலாழ்த்த வேண்டாம். இவற்றின் மூலம் அவர்களுக்கு இவ்வுலகிலே தண்டனை வழங்கிட வேண்டும் என்றும், நிராகரிப்பவர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் அல்லாஹ் நாடுகின்றான். 9:86 “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவனுடைய தூதருடன் சேர்ந்து ஜிஹாத் செய்யுங்கள்!” என்று (அறிவுறுத்தும்) ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சக்தி பெற்றவர்கள் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) அனுமதி வழங்குமாறு உம்மிடம் கோருவார்கள். “எங்களை விட்டுவிடும்; தங்கியிருப்பவர்களுடன் நாங்களும் சேர்ந்து விடுகின்றோம்” என்றும் கூறுவார்கள். 9:87 அத்தகையவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்துவிட விரும்பி விட்டார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். 9:88 ஆனால், இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தம் உயிர்களையும் உடைமைகளையும் அர்ப்பணித்து ஜிஹாத் செய்தார்கள். (இனி) அத்தகையவர்களுக்கே எல்லா நன்மைகளும் இருக்கின்றன. அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுமாவர். 9:89 கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும். 9:90 மேலும், (போருக்குச் செல்லாமலிருக்க) தங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சாக்குப் போக்குகள் கூறக்கூடிய நாட்டுப்புற அரபிகள் பலர் வந்தனர். இதுபோல், ஈமான் நம்பிக்கை கொள்வதாக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யான வாக்குறுதி அளித்தவர்களும் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்டார்கள். இந்த நாட்டுப்புற அரபிகளில் எவர்கள் நிராகரிக்கும் போக்கினைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனை அதிவிரைவில் சூழ்ந்து கொள்ளும்! 9:91 இயலாதவர்கள், நோயாளிகள் மற்றும் ஜிஹாதில் கலந்துகொள்ள வசதி வாய்ப்பு அற்றவர்கள் ஆகியோர் அவர்கள் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு வாய்மையாளர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை. இத்தகைய நன்னடத்தையுடையோரை ஆட்சேபிக்க எந்தக் காரணமும் இல்லை. மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 9:92 இதேபோன்று பின்வருபவர்கள் மீதும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை: அவர்களாகவே உம்மிடம் வந்து தங்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரினர். “உங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்வதற்கு என்னிடம் வசதி எதுவும் இல்லையே!” என நீர் கூறியபோது வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர். மேலும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக, சொந்தமாக செலவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லையே என்ற துயரத்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)