அத்தியாயம்  அல்அன்ஃபால்  8 : 41-75 / 75
8:41 மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! போரில் ஏதேனும் பொருள்களை நீங்கள் பெற்றால் அவற்றில் ஐந்திலொரு பாகம், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், அதாவது (பத்ரு போரின்போது) இரு படைகளும் மோதிக் கொண்ட நாளில் நம் அடியாருக்கு நாம் இறக்கியருளியதன் மீதும் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் (இந்தப் பாகத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி விடுங்கள்!) அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான். 8:42 நீங்கள் (பள்ளத்தாக்கிலிருந்து) மிக நெருங்கிய பகுதியிலும் அவர்கள் மிகத் தொலைவான பகுதியிலும் (தளம் அமைத்து) இருந்ததையும், மேலும் பயணக் கூட்டம் உங்களுக்குக் கீழே (கடற்கரை ஓரமாக) இருந்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்! (முன்னரே) நீங்களும் அவர்களும் (எங்காவது குறிப்பிட்ட இடத்தில் போர் செய்வதென) முடிவு செய்திருப்பீர்களாயின் அப்போது அந்த முடிவிலிருந்து நிச்சயம் நீங்கள் நழுவிச் சென்றிருப்பீர்கள். ஆயினும், தீர்மானிக்கப்பட்டிருந்த விஷயத்தை அல்லாஹ் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக (இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன). ஏனெனில், அழிய வேண்டியவன் தக்க காரணத்துடன் அழிய வேண்டும்; மேலும், உயிர்வாழ வேண்டியவன் தக்க காரணத்துடன் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக! மேலும், திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான். 8:43 (நபியே!) அல்லாஹ் உம்முடைய கனவில் அவர்களின் எண்ணிக்கையை குறைவாய்க் காண்பித்ததை நீர் நினைத்துப் பாரும். அவன் உமக்கு அவர்களுடைய எண்ணிக்கையை அதிகமாய்க் காண்பித்திருந்தால், நிச்சயம் நீங்கள் ஊக்கம் குன்றியிருப்பீர்கள்; மேலும், போர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் பிணங்கியிருப்பீர்கள். எனினும், அல்லாஹ்தான் (உங்களை இதிலிருந்து) காத்தருளினான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றைக்கூட நன்கறிந்தவனாய் இருக்கின்றான். 8:44 மேலும், இதனையும் நினைத்துப்பாருங்கள்: நீங்கள் போரிட்டபோது அவன், உங்களுடைய கண்களுக்கு அவர்களின் எண்ணிக்கையைக் குறைவாகவும், அவர்களுடைய கண்களுக்கு உங்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகவும் காண்பித்தான்; எதற்காகவெனில், நிகழ வேண்டிய செயலை அல்லாஹ் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக! (இறுதியில்) விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே திரும்பக்கொண்டு வரப்பட இருக்கின்றன. 8:45 இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஏதேனும் ஒரு குழுவினரோடு நீங்கள் போரிடும்போது நிலைகுலையாமல் இருங்கள்! மேலும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி அடையலாம். 8:46 மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். 8:47 மேலும், இறுமாப்புடனும் (தன் மதிப்பை) பிற மக்களுக்குக் காட்டும் வகையிலும் தங்களுடைய இல்லங்களிலிருந்து எவர்கள் வெளியேறினார்களோ, மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான். 8:48 மேலும், இதையும் நினைத்துப்பாருங்கள்: ஷைத்தான் அவர்களுடைய (தீய) செயல்களை அவர்களின் பார்வையில் அழகாக்கிக் காட்டினான். மேலும், “இன்று மக்களில் எவரும் உங்களை வென்றிட முடியாது. நான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கின்றேன்” என்றும் அவர்களிடம் கூறினான். ஆயினும் இரு படைகளும் மோதிக்கொண்டபோது அவன் புறங்காட்டித் திரும்பிச் சென்றுவிட்டான். மேலும், அவன் கூறினான்: “நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நான் அல்லாஹ்வைக் குறித்து அஞ்சுகின்றேன். மேலும், அல்லாஹ் தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவன்.” 8:49 இதனையும் நினைத்துப் பாருங்கள்: நயவஞ்சகர்களும், எவர்கள் உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும் “இவர்களுடைய மார்க்கம் இவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று கூறினார்கள். உண்மை யாதெனில், எவரேனும் அல்லாஹ்வை முழுதும் சார்ந்து வாழ்வாரானால் (அல்லாஹ் அவருக்குப் போதுமானவன் ஆவான்.) திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்! 8:50 (வீழ்த்தப்பட்ட) நிராகரிப்பாளர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்ததை நீர் கண்டிருக்க வேண்டுமே! அந்த வானவர்கள் அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும், (அவர்களிடம்) கூறிக் கொண்டிருந்தார்கள்: “இதோ, சுட்டுப் பொசுக்குகின்ற தண்டனையைச் சுவையுங்கள்! 8:51 உங்கள் கைகள் முன்பே சம்பாதித்த செயல்களினால் விளைந்த தண்டனைதான் இது! திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகளுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.” 8:52 இவர்களுக்கு நேர்ந்த கதி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் நேர்ந்தது போன்றதாகும். அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகையால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். திண்ணமாக, அல்லாஹ் மிக்க வலிமையுடையவனாகவும் கடும் தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான். 8:53 ‘எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடை முறையை மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட் கொடையையும் மாற்றுவதில்லை’ எனும் அல்லாஹ்வின் நியதிக்கேற்பவே இது நடைபெற்றது. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 8:54 ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கும் நேர்ந்த கதி இந்த நியதியின்படியே ஏற்பட்டது. தங்களுடைய இறைவனின் சான்றுகளை அவர்கள் பொய்யெனக் கூறினார்கள். அப்போது, அவர்கள் செய்த பாவச் செயல்களின் காரணமாக அவர்களை நாம் அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் கொடுமை இழைப்பவர்களாய் இருந்தார்கள். 8:55 திண்ணமாக, எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ, பிறகு (எவ்விதத்திலும்) அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லையோ அவர்கள்தாம் பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் மோசமானவர்கள். 8:56 (குறிப்பாக) உம்மோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பின்னர் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஒப்பந்தத்தை எவர்கள் முறிக்கின்றார்களோ, மேலும் கொஞ்சமும் இறையச்சம் கொள்ளாதிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இவர்களில் மிகவும் கெட்டவர்களாவர். 8:57 எனவே, போரில் அவர்களை நீர் சந்தித்தால் அவர்களைச் சின்னாபின்னமாய்ச் சிதற அடித்து அவர்களுக்குப் பின்வருவோரைத் திகிலடையச் செய்திட வேண்டும். (உடன்படிக்கையை மீறுவதால் ஏற்படும் தீய கதியினைக் கண்டு) அவர்கள் படிப்பினை பெறக்கூடும். 8:58 (உடன்படிக்கை செய்து கொண்டு) ஏதாவது ஒரு கூட்டத்தினர் உம்மிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீர் அஞ்சினால் (அவர்களின் உடன்படிக்கையை) வெளிப்படையாக அவர்களிடமே எறிந்து விடும்! திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை நேசிப்பதில்லை. 8:59 மேலும், இறைமறுப்பாளர்கள், தாம் தப்பித்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். திண்ணமாக, அவர்கள் நம்மை இயலாமையில் ஆழ்த்திட முடியாது. 8:60 மேலும், அவர்களை எதிர்ப்பதற்கென உங்களால் முடிந்த அளவு அதிகமான வலிமையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள்! இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும். அந்தப் பகைவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை அறிவான். மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதனைச் செலவு செய்தாலும் அதற்குரிய முழுமையான கூலி உங்களுக்கு வழங்கப்படும். மேலும், நீங்கள் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். 8:61 (நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகிவிடும். இன்னும், அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 8:62 அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கின்றான். தன்னுடைய உதவியினாலும் இறைநம்பிக்கையாளர் மூலமாகவும் உமக்கு வலுவூட்டியவனும் அவனே. 8:63 அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். 8:64 நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகின்ற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். 8:65 நபியே! போர்புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் நிலைகுலையாத இருபது பேர் இருப்பின் (இறைமறுப்பாளர்களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும், இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால், இறை மறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள். 8:66 இப்போது அல்லாஹ் உங்கள் சுமையைக் குறைத்துவிட்டான். இப்பொழுதும் உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே, உங்களில் நூறு பேர் உறுதி குலையாதவர்களாய் இருந்தால், இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். அத்தகையோர் உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் பேரை அவர்கள் வென்று விடுவார்கள். மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். 8:67 பூமியில் பகைவர்களை முற்றிலும் முறியடிக்காத வரையில் அவர்களைச் சிறைப்பிடிப்ப(தில் ஈடுபடுவ)து எந்த நபிக்கும் உகந்ததல்ல. நீங்கள் உலக ஆதாயங்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமை நலன்களை விரும்புகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 8:68 அல்லாஹ்வின் தீர்ப்பு முன்னரே எழுதப்படாமல் இருந்தால், நீங்கள் (கைதிகளிடமிருந்து) பெற்றுக் கொண்டவற்றுக்குப் பகரமாக உங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். 8:69 எனவே, நீங்கள் போரில் கைப்பற்றிய பொருள்களை உண்ணுங்கள்; அவை அனுமதிக்கப்பட்டவையும் தூய்மையானவையுமாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்து வாருங்கள்! திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். 8:70 நபியே! உங்கள் கைவசத்திலுள்ள கைதிகளிடம் நீர் கூறும்: “உங்கள் உள்ளங்களில் (சிறிதளவாவது) நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிவானாகில், உங்களிட மிருந்து வாங்கப்பட்டதை விடவும் சிறப்பானதை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.” 8:71 ஆயினும், அவர்கள் உமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய நினைத்தால் இதற்கு முன் அவர்கள் அல்லாஹ்வுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் உம்மைக் கொண்டு அவர்களைக் கைது செய்யவைத் தான் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 8:72 எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் ஹிஜ்ரத் செய்து (நாட்டைத் துறந்து சென்று) அல்லாஹ்வின் வழியில் தங்களின் உயிர்களாலும் உடைமைகளாலும் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு) தஞ்சம் அளித்து உதவியும் புரிந்தார்களோ அவர்களும் உண்மையில் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் (தாருல் இஸ்லாமிற்கு) ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விஷயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில்! ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவிகோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவிகூட) உங்களோடு உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 8:73 சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருப்போர் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். எனவே, நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் பூமியில் குழப்பமும் பெரும் சீர்குலைவும் ஏற்பட்டுவிடும். 8:74 மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும்தாம் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது. மேலும் நற்பேறுகளும் இருக்கின்றன. 8:75 மேலும் அவர்களுக்குப் பின்னர் எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, மேலும் உங்களுடன் சேர்ந்து போராடினார்களோ, அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆயினும், அல்லாஹ்வின் வேதப்படி, இரத்தபந்தமுடையவர்கள்தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமையுடையவர்களாவர். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அத்தவ்பா  9 : 1-33 / 129
9:1 நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு, அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுக்கப்படும் அறிவிப்பாகும் இது. 9:2 எனவே, (இணை வைப்பாளரான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள்; மேலும் திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும், சத்தியத்தை நிராகரிப்பவர்களை நிச்சயம் அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! 9:3 மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் திண்ணமாக விலகி விட்டார்கள். ஆகவே, நீங்கள் பாவமன்னிப்புத் தேடி மீளுவீர்களாயின் அது உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான வேதனை உண்டெனும் நற்செய்தியை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக! 9:4 ஆனால் இணைவைப்பாளர்களில் எவர்களுடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில்) உங்களிடம் எந்தக் குறைபாடும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அத்தகையவர்களின் உடன்படிக்கையை உரிய தவணை வரை நிறைவாக்குங்கள்! ஏனெனில், திண்ணமாக அல்லாஹ் இறையச்சம் உடையோரையே நேசிக்கின்றான். 9:5 எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 9:6 இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உம்மிடம் (அல்லாஹ்வின் வேதத்தைச் செவியுறுவதற்காக) வந்தால், அப்பொழுது அல்லாஹ்வின் வேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக! இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் எனில், திண்ணமாக அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கின்றனர். 9:7 அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் இந்த இணைவைப்பாளர்களின் உடன்படிக்கைக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? ஆனால் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்திருந்தீர்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் உங்களோடு நேர்மையுடன் நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாய் நடந்துகொள்ளுங்கள்! ஏனென்றால், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை விரும்புகின்றான் . 9:8 (அவர்களைத் தவிர மற்ற இணைவைப்பாளர்களிடம்) எவ்வாறு உடன்படிக்கை வைத்துக்கொள்ள முடியும்? அவர்கள் (இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.) உங்களை வெற்றிகொண்டு விட்டால் உங்கள் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; மேலும் ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் மதிப்பதில்லை. தங்களுடைய வாய்ப்பேச்சுகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களின் உள்ளங்கள் அவற்றை மறுக்கின்றன. மேலும், அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாவர். 9:9 அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் எத்துணைக் கெட்டவை! 9:10 இறைநம்பிக்கையாளனின் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் அவர்கள் மதிப்பதில்லை. மேலும், இத்தகையவர்கள்தாம் எப்போதும் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். 9:11 ஆயினும், இவர்கள் பாவமீட்சி பெற்று தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால், தீனில் மார்க்கத்தில் இவர்கள் உங்கள் சகோதரர்களாவர். மேலும், அறியக்கூடிய சமூகத்தாருக்கு நம்முடைய கட்டளைகளை நாம் நன்கு விளக்கிக் கூறுகின்றோம். 9:12 உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களுடைய மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால், இறைநிராகரிப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள்! ஏனென்றால், அவர்களுடைய சத்தியங்களுக்கு எவ்வித மதிப்பு மில்லை. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) விலகியிருக்கக்கூடும். 9:13 எவர்கள் தங்கள் உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டே இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் இறைத்தூதரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்திருந்தார்களோ அக்கிரமம் செய்யத் தொடங்கியது முதலில் அவர்களாகவே இருந்தும் அத்தகைய மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களுக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? நீங்கள் நம்பிக்கையுடையவர்களாயின் நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுள்ளவன் அல்லாஹ்வே ஆவான். 9:14 நீங்கள் அவர்களோடு போர் புரியுங்கள்; அல்லாஹ் உங்களுடைய கைகளால் அவர்களுக்குத் தண்டனை அளிக்கச் செய்வான். மேலும், அவர்களை இழிவுபடுத்துவான். இன்னும் நீங்கள் அவர்களை வென்றிட உங்களுக்கு உதவி புரிவான். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களின் இதயங்களைக் குளிரச் செய்வான்; 9:15 மேலும், அவர்களுடைய உள்ளங்களிலிருந்து கடுஞ்சினத்தையும் அகற்றிவிடுவான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறுவதற்கான பேற்றை அருள்வான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். 9:16 உங்களில் (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்தவர்கள் யார், இன்னும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் விடுத்து வேறெவரையும் அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என அல்லாஹ் இன்னும் வேறுபடுத்தி அறிந்திடாத நிலையில் நீங்கள் வெறுமனே விடப்பட்டு விடுவீர்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா? நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான். 9:17 தாங்கள் நிராகரிப்பாளர்கள் என்பதற்குத் தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு இறையில்லங்களைப் பராமரிக்கும் உரிமை இல்லை. அத்தகையவர்களின் எல்லாச் செயல்களும் பாழாகிவிட்டன. மேலும், அவர்கள் நரகத்திலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 9:18 யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ, மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்கள்தாம் இறையில்லங்களைப் பராமரிப்பவர்களாய் (அவற்றின் ஊழியர்களாய்) ஆக முடியும்! அத்தகையவர்களே நேர்வழியில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். 9:19 ஹஜ் செய்பவர்களுக்குத் தண்ணீர் புகட்டுவதும், சங்கைமிகு கஅபா பள்ளிவாசலுக்கு ஊழியம் புரிவதும் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கடுமையாக உழைப்பவனின் பணிக்குச் சமம் ஆகுமா? அல்லாஹ்விடத்தில் இவையிரண்டும் சமம் ஆகமாட்டா. மேலும், அக்கிரமம் புரியும் சமூகத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 9:20 எவர்கள் நம்பிக்கை கொண்டு, (இறைவழியில்) யாவற்றையும் துறந்து, தம் உயிர்களாலும், பொருள்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போராடினார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த படித்தரம் பெற்றவர்களாவர். மேலும், அத்தகையவர்கள் வெற்றியாளர்கள். 9:21 தன்னுடைய அருளும் உவப்பும் சுவனங்களும் அவர்களுக்கு இருக்கின்றன என்று அவர்களின் இறைவன் நற்செய்தி அறிவிக்கின்றான். அங்கே அவர்களுக்கு நிலையான அருட்பேறுகள் இருக்கின்றன. 9:22 அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். திண்ணமாக, சேவைகளுக்கான மாபெரும் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. 9:23 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் தந்தையரும், உங்களின் சகோதரர்களும் இறைநம்பிக்கையைக் கைவிட்டு நிராகரிப்புக்கு முன்னுரிமை தந்தால், நீங்கள் அவர்களை உங்களுடைய ஆதரவாளர்களாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களில் யார் அவர்களை ஆதரவாளர்களாக்கிக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அக்கிரமக்காரர்கள். 9:24 (நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.” 9:25 (இதற்கு முன்னர்) பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். (இப்போது) ஹுனைன் (போர் நடைபெற்ற) நாளிலும் (அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்). அன்று உங்களின் படைப்பெருக்கம் உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனுமளிக்கவில்லை. மேலும், பூமி இவ்வளவு விரிவாயிருந்தும் உங்களுக்குக் குறுகிப் போய்விட்டது. பின்னர் நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள். 9:26 பிறகு அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வையில் தென்படாதிருந்த படைகளை இறக்கி இறைமறுப்பாளர்களைத் தண்டித்தான். இதுதான் (சத்தியத்தை) மறுத்தோருக்குரிய கூலி! 9:27 பின்னர், இவ்வாறு தண்டனை வழங்கிய பிறகு அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறும் பேற்றினை வழங்குகின்றான் (என்பதையும் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். 9:28 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இணை வைப்பாளர்கள் அசுத்தமானவர்கள்தாம்! எனவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின் சங்கைமிகு கஅபா பள்ளிவாசலின் அருகில்கூட நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமைக்கு அஞ்சுவீர்களாயின், அல்லாஹ் நாடினால் தன் கருணையினால் விரைவில் உங்களுக்குச் செல்வத்தை வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 9:29 வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை ‘தடுக்கப்பட்டவை’ என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை! 9:30 “உஸைர் அல்லாஹ்வின் புதல்வர்” என்று யூதர்கள் கூறுகின்றார்கள். “மஸீஹ் அல்லாஹ்வின் புதல்வர்” என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய நாவினால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றுகளாகும் இவை. இவர்களுக்கு முன்னர் இறைநிராகரிப்பை மேற்கொண்டிருந்தவர்கள் கூறியதைப்போல் இவர்களும் கூறுகின்றனர். அல்லாஹ் இவர்களை நாசப்படுத்துவானாக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றார்கள்! 9:31 அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்). உண்மை யாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்க அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி யாரும் இல்லை. அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன். 9:32 அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! 9:33 அல்லாஹ்தான் தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான்; அவர் அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக! இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)