அத்தியாயம்  அந்நபா  78 : 1-40 / 40
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
78:1 இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்? 78:2 அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா? 78:3 அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். 78:4 ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும். 78:5 ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும். 78:6 நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? 78:7 மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா? 78:8 மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா? 78:9 மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா? 78:10 மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா? 78:11 மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா? 78:12 மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? 78:13 மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா? 78:14 மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா? 78:15 தானியங்களையும் தாவரங்களையும் மற்றும் 78:16 அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக! 78:17 திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது; 78:18 (சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள். 78:19 மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்! 78:20 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும். 78:21 திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது. 78:22 வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது. 78:23 அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள். 78:24 அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள். 78:25 கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர! 78:26 (இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்! 78:27 அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை. 78:28 மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள். 78:29 அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம். 78:30 “இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.” 78:31 திண்ணமாக, இறையச்சமுள்ளவர்களுக்கு வெற்றியளிக்கும் ஓர் இடம் இருக்கின்றது. 78:32 “தோட்டங்களும் திராட்சைகளும் 78:33 சமவயதுடைய கன்னிப்பெண்களும், 78:34 நிறைந்த கிண்ணமும் உள்ளன. 78:35 அங்கு வீணான பேச்சையோ, பொய்யுரையையோ அவர்கள் கேட்க மாட்டார்கள். 78:36 இது உம்முடைய அதிபதியிடமிருந்து கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும். 78:37 வானங்கள் மற்றும் பூமிக்கும் அவற்றிற்கிடைப்பட்ட ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அந்தக் கருணைமிக்க இறைவனிடமிருந்து (கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்). அவனுக்கு முன்னால் பேசுவதற்கு யாருக்கும் திராணி இல்லை.” 78:38 ரூஹும்* வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் எவரும் பேசமாட்டார்; ஆனால், கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதி கொடுப்பானோ அவரையும், நேர்மையைச் சொல்பவரையும் தவிர! 78:39 அந்நாள் (வருவது) உண்மையாகும். எனவே, நாடியவர் தம்முடைய இறைவனின் பக்கம் மீளும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். 78:40 நெருங்கிவிட்டிருக்கும் வேதனை குறித்துத் திண்ணமாக நாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன்னுடைய கைகளால் முன்னர் செய்தனுப்பிய அனைத்தையும் காண்பான். நிராகரித்தவனோ புலம்புவான்: “அந்தோ! நான் மண்ணாய் இருந்திருக்கக்கூடாதா?”
அத்தியாயம்  அந்நாஸிஆத்  79 : 1-46 / 46
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
79:1 ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற, 79:2 மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக! 79:3 மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற 79:4 மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக! 79:5 பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக! 79:6 எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ 79:7 அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ 79:8 அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும். 79:9 அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும். 79:10 இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா, 79:11 இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?” 79:12 இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.” 79:13 உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும். 79:14 உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்! 79:15 மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா? 79:16 ‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்: 79:17 “ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான். 79:18 எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா? 79:19 மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!” 79:20 பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார். 79:21 ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான். 79:22 பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான். 79:23 மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து, 79:24 “நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான். 79:25 இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான். 79:26 அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது. 79:27 உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா? 79:28 அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான். 79:29 மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான். 79:30 இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்! 79:31 அதனுள்ளிலிருந்து அதன் தண்ணீரையும் மேய்ச்சலுக்கானவற்றையும் வெளிக்கொணர்ந்தான். 79:32 மேலும் (அதில்) மலைகளை ஊன்றி வைத்தான்; 79:33 உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருள்களாய் ஆகும் பொருட்டு! 79:34 எனவே, மாபெரும் அமளி தோன்றும்போது, 79:35 அன்று மனிதன் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பான். 79:36 மேலும், பார்ப்பவர் ஒவ்வொருவர் கண்ணெதிரிலும் நரகம் திறந்து வைக்கப்படும். 79:37 எவன் வரம்பு மீறியிருந்தானோ 79:38 மேலும், உலக வாழ்வுக்கு முன்னுரிமை தந்தானோ 79:39 அவனுடைய இருப்பிடம் நரகமாகவே இருக்கும். 79:40 மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளைவிட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ 79:41 அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும். 79:42 “அந்த இறுதிநேரம் எப்பொழுது வரும்?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். 79:43 அந் நேரத்தைப் பற்றிக் கூறுவது உம்முடைய பணியல்ல! 79:44 அதைப் பற்றிய ஞானமோ அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது. 79:45 அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். 79:46 இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும்.
அத்தியாயம்  அபஸ  80 : 1-42 / 42
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
80:1 முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார், 80:2 அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக! 80:3 அவர் சீர்திருந்தக்கூடும் 80:4 அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன? 80:5 எவன் அலட்சியம் செய்கின்றானோ 80:6 அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர். 80:7 அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன? 80:8 மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ 80:9 (இறைவனை) அஞ்சியவராக 80:10 அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்! 80:11 அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும். 80:12 எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும். 80:13 இது கண்ணியமிக்க, 80:14 உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. 80:15 (அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன. 80:16 (அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள். 80:17 மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்! 80:18 அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்? 80:19 ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான். 80:20 பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான். 80:21 பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான். 80:22 பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான். 80:23 ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை! 80:24 பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும். 80:25 நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம். 80:26 பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம். 80:27 பிறகு, அதில் தானியங்களையும், 80:28 திராட்சைகளையும், காய்கறிகளையும், 80:29 ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும், 80:30 அடர்ந்த தோட்டங்களையும், 80:31 விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம், 80:32 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு! 80:33 இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது 80:34 அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும் 80:35 தாயையும் தந்தையையும் விட்டும் 80:36 தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும். 80:37 அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்! 80:38 சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்; 80:39 சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும். 80:40 மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும். 80:41 அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும். 80:42 அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.
அத்தியாயம்  அத்தக்வீர்  81 : 1-29 / 29
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
81:1 சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது, 81:2 மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது, 81:3 மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது, 81:4 மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது, 81:5 மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது, 81:6 மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது, 81:7 மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது, 81:8 மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது, 81:9 எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று 81:10 மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது, 81:11 மேலும், வானத் திரை அகற்றப்படும்போது, 81:12 மேலும், நரகம் எரிக்கப்படும்போது 81:13 மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது, 81:14 அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான். 81:15 அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும், 81:16 மறையக்கூடிய தாரகைகள் மீதும், 81:17 விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும், 81:18 புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். 81:19 உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும். 81:20 அவர் வலிமையுடையவர்; அர்ஷûக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர். 81:21 அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார். 81:22 மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர். 81:23 திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார். 81:24 மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர். 81:25 மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று. 81:26 பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்? 81:27 இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்; 81:28 உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது. 81:29 மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!
அத்தியாயம்  அல் இன்ஃபிதார்  82 : 1-19 / 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
82:1 வானம் வெடித்து விடும்போது 82:2 மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது 82:3 மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது 82:4 மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது 82:5 ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான். 82:6 மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? 82:7 அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான். 82:8 மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான். 82:9 ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள். 82:10 நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 82:11 அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்; 82:12 உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள். 82:13 திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள். 82:14 மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள். 82:15 கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள். 82:16 மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது. 82:17 மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா? 82:18 ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன? 82:19 அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும்.
அத்தியாயம்  அல் முதஃப்ஃபிஃபீன்  83 : 1-36 / 36
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
83:1 அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்! 83:2 அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள். 83:3 அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள். 83:4 திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா? 83:5 ஒரு மாபெரும் நாளில், 83:6 அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள். 83:7 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது. 83:8 சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 83:9 அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். 83:10 அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்! 83:11 அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள். 83:12 அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர! 83:13 நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான். 83:14 ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது. 83:15 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள். 83:16 பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள். 83:17 பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும். 83:18 ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது. 83:19 அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 83:20 அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்; 83:21 (இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள். 83:22 திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள். 83:23 உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். 83:24 அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர். 83:25 முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். 83:26 அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்! 83:27 மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும். 83:28 அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள். 83:29 திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள். 83:30 மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள். 83:31 மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். 83:32 மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 83:33 ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை. 83:34 இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள். 83:35 சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள். 83:36 கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!
அத்தியாயம்  அல் இன்ஷிகாக்  84 : 1-25 / 25
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
84:1 வானம் பிளக்கின்றபோது 84:2 மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும். 84:3 மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது 84:4 இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது 84:5 மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும். 84:6 “மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக்கூடியவனாகவும் இருக்கின்றாய். 84:7 எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ 84:8 அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும். 84:9 மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார். 84:10 ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ 84:11 அவன் மரணத்தை அழைப்பான். 84:12 பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான். 84:13 அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான். 84:14 (தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான். 84:15 ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்! 84:16 அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும், 84:17 இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் 84:18 மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். 84:19 திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. 84:20 பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே! 84:21 மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே! 84:22 மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள். 84:23 உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான். 84:24 எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக! 84:25 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.
அத்தியாயம்  அல் புரூஜ்  85 : 1-22 / 22
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
85:1 உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக! 85:2 வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக! 85:3 மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக! 85:4 தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்! 85:5 (அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது. 85:6 அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து 85:7 இறைநம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த செயல்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள். 85:8 அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்என்பதுதான்! 85:9 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 85:10 இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு, 85:11 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும். 85:12 உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது. 85:13 திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான். 85:14 மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான். 85:15 அர்ஷின் உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும், 85:16 தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான். 85:17 படைகளைப் பற்றிய செய்தி உமக்கு எட்டியதா? 85:18 ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் சமுதாயத்தினரின் (படைகளைப் பற்றிய) செய்தி 85:19 ஆனால், நிராகரிப்பாளர்கள் பொய்யெனத் தூற்றுவதில் முனைந்துள்ளார்கள். 85:20 ஆயினும், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். 85:21 (அவர்கள் பொய்யெனத் தூற்றுவதால் இந்தக் குர்ஆனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடாது) மாறாக, இந்தக் குர்ஆன் அதிக மகத்துவம் மிக்கது; 85:22 பாதுகாக்கப்பட்ட பலகையில் (பதிக்கப்பட்டு) உள்ளது.
அத்தியாயம்  அத்தாரிக்  86 : 1-17 / 17
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
86:1 வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக! 86:2 இரவில் தோன்றக்கூடியது எது என்று உமக்குத் தெரியுமா, என்ன? 86:3 அது ஓர் ஒளிரும் தாரகை. 86:4 பாதுகாப்பாளன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை. 86:5 பிறகு, மனிதன் தான் எப்பொருளிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதையாவது சற்று கவனித்துப் பார்க்கட்டுமே! 86:6 பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்! 86:7 அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது. 86:8 திண்ணமாக, அவன் (அந்தப் படைப்பாளன்) மீண்டும் அவனைப் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். 86:9 எந்நாளில் மறைவான இரகசியங்கள் சோதனை இடப்படுமோ அந்நாளில் 86:10 மனிதனிடம் எந்த சுய வலிமையும் இராது; அவனுக்குத் துணை புரிபவர் எவரும் இருக்கமாட்டார். 86:11 மழையைப் பொழிகின்ற வானத்தின் மீது சத்தியமாக! 86:12 மேலும் (தாவரங்கள் முளைக்கின்ற போது) பிளந்துவிடுகின்ற பூமியின் மீது சத்தியமாக! 86:13 திண்ணமாக, இது தீர்க்கமான சொல்லே 86:14 தவிர கேலியோ விளையாட்டோ அல்ல! 86:15 (மக்காவின் இறைநிராகரிப்பாளர்களான) இவர்கள் சில சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். 86:16 நானும் ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். 86:17 எனவே (நபியே!) விட்டுவிடுவீராக, இந்நிராகரிப்பாளர்களை! சொற்ப காலம் (அவர்களுடைய நிலையிலே) அவர்களை விட்டுவிடுவீராக!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)