அத்தியாயம்  அல்அஃராஃப்  7 : 88-170 / 206
7:88 அவருடைய சமுதாயத்தாரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள் கூறினார்கள்: “ஷûஐபே! உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிவரும். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்.” அதற்கு ஷûஐப் பதில் தந்தார்: “நாங்கள் விரும்பாதவர்களாய் இருந்தாலுமா (எங்களைவற்புறுத்தி உங்கள் மார்க்கத்திற்குத் திருப்பி விடுவீர்கள்)? 7:89 உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் அதன் பக்கமே நாங்கள் திரும்பினால், நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்களாய் ஆவோம்! மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி! எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே! எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக! நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கிறாய்.” 7:90 (அவர் கூறியதை) ஏற்க மறுத்துவிட்ட அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (தமக்கிடையே) கூறிக் கொண்டார்கள்: “நீங்கள் ஷûஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக அழிந்து போவீர்கள்.” 7:91 ஆனால் (நடந்தது என்னவெனில்) திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள். 7:92 (ஆம்!) ஷûஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள் அவ்வில்லங்களில் வசிக்காதவர்கள் போன்று அடியோடு அழிந்து போய் விட்டார்கள். ஷûஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள்தாம் இறுதியில் இழப்புக்குரியவர்களானார்கள். 7:93 மேலும், ஷûஐப், “என்னுடைய சமுதாயத்தாரே! நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன்?” என்று கூறியபடி (அவ்வூரைவிட்டு) வெளியேறிவிட்டார். 7:94 நாம் நபியை அனுப்பி வைத்த எந்த ஊர் மக்களையும் அவர்கள் பணிந்து நடந்திட வேண்டும் என்பதற்காக, (முதலில்) கடுமையான துன்ப துயரங்களைக் கொண்டு சோதிக்காமல் இருக்கவில்லை. 7:95 பிறகு அவர்களின் துன்பத்தை இன்பமாய் மாற்றினோம். எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, “எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று அவர்களைப் பிடித்தோம். 7:96 ஆனால், அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுள்ள நடத்தையை மேற் கொண்டிருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம். ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களின் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம். 7:97 இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களைத் திடீரென தாக்காது என்று இவ்வூர்களில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா? 7:98 அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களைத் தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா? 7:99 என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள். 7:100 முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா? (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.) மேலும், இவர்களுடைய உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். எனவே, இவர்கள் (எதனையும்) செவியேற்பதில்லை. 7:101 அவ்வூர்களின் வரலாறுகளை உமக்கு நாம் கூறுகின்றோம். (அவை உமக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.) அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அம்மக்கள் முன்னர் எதனைப் பொய்யெனக் கூறிவிட்டிருந்தார்களோ அதனைப் பிறகு அவர்கள் ஏற்பவர்களாயில்லை. (பாருங்கள்) இவ்வாறே சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகின்றான்! 7:102 அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே நாம் காண்கிறோம். 7:103 பின்னர், (மேற்கூறப்பட்ட) அந்தச் சமூகங்கள் சென்ற பிறகு மூஸாவை, நம்முடைய சான்றுகளோடு ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தின் தலைவர்களிடமும் நாம் அனுப்பினோம். ஆயினும், அவர்களும் நம்முடைய சான்றுகளுக்கு அநீதி இழைத்தார்கள். எனவே, பாருங்கள் (இவ்வாறு) குழப்பம் செய்து திரிந்த அவர்களின் கதி என்னவாயிற்று என்பதை! 7:104 மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நான் அகிலமனைத்தின் அதிபதியிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன். 7:105 அல்லாஹ்வின் பெயரால் சத்தியத்தைத் தவிர வேறெதனையும் சொல்லமாட்டேன். இதுவே என்னுடைய பொறுப்பாகும். நான் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வைத்துவிடு!” 7:106 அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான சான்று ஏதேனும் கொண்டு வந்திருப்பீராயின் நீர் (உம்முடைய வாதத்தில்) உண்மையானவரானால் அதனைக் காட்டும் பார்க்கலாம்!” என்று கூறினான். 7:107 அப்போது மூஸா தம்முடைய கைத்தடியை எறிந்தார். உடனே அது உயிருள்ள பெரியதொரு பாம்பாக மாறியது. 7:108 பிறகு அவர் தமது (கட்கத்திலிருந்து) கையை வெளியே எடுத்தார். பார்ப்பவர் முன்னிலையில் அது வெண்மையாய்ப் பளிச்சிட்டது. 7:109 (இதனைக் கண்ணுற்ற) ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள், “உண்மையிலேயே இவர் ஒரு திறமை மிக்க மந்திரவாதிதான். 7:110 உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிவிட இவர் நினைக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 7:111 பிறகு அவர்கள் எல்லாரும் (ஃபிர்அவ்னுக்கு) ஆலோசனை கூறினார்கள்: “இவரையும் இவருடைய சகோதரரையும் சற்று நிறுத்தி வையுங்கள்! எல்லா ஊர்களுக்கும் ஆட்களை அனுப்புங்கள் 7:112 தேர்ச்சி பெற்ற மந்திரவாதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களிடம் அழைத்து வருவதற்காக (ஆட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புங்கள்). 7:113 அவ்வாறே மந்திரவாதிகள் அனைவரும் ஃபிர்அவ்னிடம் வந்தார்கள். “நாங்கள் வெற்றி பெற்றால் அதற்கான வெகுமதி எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள். 7:114 அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம்! மேலும், திண்ணமாக நீங்கள் அரசவையில் நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்று பதிலுரைத்தான். 7:115 பிறகு அவர்கள் மூஸாவிடம் கேட்டார்கள்: “நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் எறியட்டுமா?” 7:116 அதற்கு மூஸா, “நீங்களே எறியுங்கள்!” என்று கூறினார். அவர்கள் (தம்முடைய மந்திர சாதனங்களை) எறிந்தபோது (அவற்றின் மூலம்) மக்களின் கண்களை மயக்கி அவர்களைப் பீதிகொள்ளச் செய்தார்கள்; இவ்வாறு மாபெரும் சூனியத்தைச் செய்து காட்டினார்கள். 7:117 “நீர் உமது கைத்தடியைப் போடும்!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப் பொழுதில்) விழுங்கி விட்டது! 7:118 இவ்வாறு சத்தியம், சத்தியம்தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்தவை யாவும் வீணாகி விட்டன. 7:119 (ஃபிர்அவ்னும்) அவனுடைய நண்பர்களும் (வெற்றிவாகை சூடுவதற்குப் பதிலாக) இழிவை அடைந்தார்கள். அங்கே (போட்டி அரங்கில்) முறியடிக்கப்பட்டார்கள். 7:120 மேலும், அந்த மந்திரவாதிகளின் நிலை என்னவாயிற்று எனில், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களை ஸஜ்தாவில் வீழ்த்தியது; 7:121 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அகிலங்களின் அதிபதியை! 7:122 மூஸா மற்றும் ஹாரூனின் அதிபதியை!” 7:123 ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக! விரைவில் (இதன் விளைவை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். 7:124 திண்ணமாக, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றிவிடுவேன்.” 7:125 அவர்கள் பதில் கூறினார்கள்: “(எவ்வாறாயினும்) நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம். 7:126 எங்கள் இறைவனுடைய சான்றுகள் எங்களிடம் வந்துவிட்டன; அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம் எனும் காரணத்திற்காகத்தான் நீ எங்களை பழிவாங்க நாடுகிறாய்! எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறு மையை அருள்வாயாக! மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக!” 7:127 ஃபிர்அவ்னின் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (ஃபிர்அவ்னிடம்) கேட்டார்கள்: “பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவும் உமக்கும் உம்முடைய கடவுள்களுக்கும் பணிந்து வாழ்வதைக் கைவிட்டு விடுவதற்குமா மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் நீர் விட்டு வைக்கின்றீர்?” அதற்கு ஃபிர்அவ்ன் பதிலளித்தான்: “நாம் அவர்களுடைய ஆண்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிர் வாழ விடுவோம். திண்ணமாக, அவர்கள் மீது நம்முடைய ஆதிக்கம் வலுவாக இருக்கிறது.” 7:128 மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: “அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள்! திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது.” 7:129 அதற்கு மூஸாவின் சமுதாயத்தார் கூறினார்கள்: “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோம். இப்போது, எங்களிடம் நீர் வந்த பின்பும் (துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்).” அதற்கு மூஸா பதிலுரைத்தார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது.” 7:130 ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பல ஆண்டுகளாய் நீடித்த பஞ்சத்தினாலும், விளைபொருள் குறைவினாலும் சோதித்தோம்; அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக! 7:131 ஆனால் (அவர்களின் நிலை எவ்வாறிருந்ததெனில்) அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டால், “நாங்கள் இதற்கு உரியவர்கள்தாம்!” என்று கூறுவார்கள்; அவர்களுக்கு கெட்டகாலம் ஏற்பட்டு விட்டாலோ மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாய்க் கருதுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: உண்மையில் அவர்களுடைய அபசகுனம் அல்லாஹ்விடமே இருக்கிறது. ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாயிருந்தார்கள். 7:132 அவர்கள் (மூஸாவிடம்) கூறினார்கள்: “நீர் எங்களைக் கவர்ந்திழுப்பதற்காக எந்தச் சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தாலும், நாங்கள் நீர் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்களாய் இல்லை.” 7:133 இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர். 7:134 (எப்பொழுதேனும்) அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், அவர்கள் கூறுவார்கள்: “மூஸாவே! உம்முடைய இறைவனிடம் உமக்கு அவன் அளித்துள்ள அந்தஸ்தைக் கொண்டு எங்களுக்காக நீர் பிரார்த்தனை புரியும்; எங்களை விட்டு இத்துன்பத்தை நீர் நீக்கச் செய்தால், திண்ணமாக, நாங்கள் உம் கூற்றை ஏற்றுக்கொள்வோம்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் உம்முடன் அனுப்பி வைப்போம்.” 7:135 ஆயினும், எந்த நிலையிலும் அவர்கள் அடையவிருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு வேதனையை நாம் நீக்கிவிட்டாலோ உடனே அவர்கள் (தம் வாக்குறுதியை) முறித்துவிடுகின்றார்கள். 7:136 ஆகையால் அவர்களை நாம் பழிவாங்கினோம்; மேலும், கடலிலே அவர்களை மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள்; மேலும், அவற்றைக் குறித்து அலட்சியமாகவும் இருந்தார்கள். 7:137 பிறகு (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம். (இவ்வாறாக) உம் இறைவனின் சிறப்பான வாக்குறுதி இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஏனென்றால், அவர்கள் பொறுமையை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தாரும் உருவாக்கியிருந்தவற்றையும், உயர்த்திக் கட்டியிருந்தவற்றையும் நாம் பாழாக்கி விட்டோம். 7:138 நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தபோது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. (உடனே) அவர்கள் “மூஸாவே! இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும்!” என்று கூறலானார்கள். அதற்கு மூஸா கூறினார்: “திண்ணமாக, நீங்கள் அறிவில்லாமல் பேசும் கூட்டத்தினராய் இருக்கின்றீர்கள். 7:139 இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை நிச்சயம் அழிந்து போகக்கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை (முற்றிலும்) வீணானவையாகும்.” 7:140 மேலும், மூஸா கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளையா நான் உங்களுக்காகத் தேடுவேன்? உண்மையில் அவனே உங்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மை ஆக்கியுள்ளான்.” 7:141 மேலும் (அல்லாஹ் கூறுகின்றான்:) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனை அளித்துக் கொண்டிருந்தார்கள்; உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்து, உங்களுடைய பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்திருந்தார்கள். மேலும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.” 7:142 நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை (நாட்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். பிறகு அவற்றோடு பத்து இரவுகளை அதிகப்படுத்தினோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூஸா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், “நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர்!” என்று கூறினார். 7:143 நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா! எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.” 7:144 அதற்கு அல்லாஹ், “மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான். 7:145 இதன் பின்னர், நாம் மூஸாவுக்கு (வாழ்க்கைத் துறை) ஒவ்வொன்றுக்கும் வேண்டிய அறிவுரையையும், ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும் பலகைகளில் எழுதிக் கொடுத்தோம். மேலும், (நாம் அவருக்குக் கூறினோம்:) “இந்த அறிவுரைகளை நீர் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! அதிவிரைவில் பாவம் புரிவோர்க்குரிய இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். 7:146 பூமியில் நியாயமின்றிப் பெருமை கொள்பவர்(களின் பார்வை)களை என்னுடைய சான்றுகளை விட்டு நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் (ஒருபோதும்) அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை(த் தம் கண்ணெதிரே) அவர்கள் கண்டாலும்கூட அதனை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான பாதையைக் காண்பார்களானால், அதனை மேற்கொள்ள முனைந்து விடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள். மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 7:147 எனவே எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் எனக் கூறினார்களோ, மேலும் மறுமைநாளைச் சந்திக்க இருப்பதையும் மறுத்தார்களோ அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்குரிய கூலியைத் தவிர வேறு எதனை இவர்கள் பெறமுடியும்?” 7:148 மூஸா (சினாய் மலைக்குச்) சென்ற பிறகு அவருடைய சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களை உருக்கி, கன்றுக்குட்டியின் வடிவத்தை உருவாக்கி(வணங்கி)னார்கள். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர்களிடம் பேசுவதுமில்லை; (எந்த விவகாரங்களிலும்) அவர்களுக்கு வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? ஆயினும், அதனை அவர்கள் தெய்வமாக்கிக் கொண்டார்கள். மேலும், அவர்கள் பெரும் அக்கிரமக்காரர்களாகிவிட்டார்கள். 7:149 பிறகு அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் தகர்ந்துவிட்டன; மேலும், உண்மையிலேயே வழிதவறிவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது அவர்கள் கூறலானார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை புரிந்து, எங்களுக்கு மன்னிப்பு வழங்கியிராவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குள்ளாகியிருப்போம்!” 7:150 மூஸா தம் சமுதாயத்தாரிடம் கோபமும் வேதனையும் கொண்டவராகத் திரும்பினார். வந்தவுடனேயே அவர் கூறினார்: “நான் சென்ற பிறகு என்னுடைய பிரதிநிதிகளாய் இருந்து நீங்கள் செய்த செயல் எத்துணைக் கெட்டது! உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா?” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!” 7:151 (அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார். 7:152 (அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது:) “எவர்கள் கன்றுக்குட்டியைத் தெய்வமாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் தம் இறைவனின் சினத்திற்கு ஆளாகியே தீருவார்கள். மேலும், உலக வாழ்விலும் இழிவுக்குரியவர்களாகி விடுவார்கள். பொய் புனைந்துரைப்பவர்களுக்கு நாம் இவ்வாறே தண்டனை அளிக்கின்றோம். 7:153 மேலும், எவர்கள் தீவினைகள் புரிகின்றார்களோ, பின்னர் அவற்றிலிருந்து விலகி மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கையும் கொண்டார்களேயானால், அதன் பிறகு திண்ணமாக உம் இறைவன் அவர்களை அதிகம் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கின்றான்.” 7:154 மேலும், மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அப்பலகைகளை அவர் எடுத்துக் கொண்டார். மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ அவர்களுக்கு அவற்றில் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளில் வழிகாட்டலும் அருளும் இருந்தன. 7:155 மேலும், மூஸா தம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களில் எழுபது பேரை நாம் குறிப்பிட்ட நேரத்தி(ல் தம்முடன் வருவத)ற்காகத் தேர்ந்தெடுத்தார். கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்: “என் இறைவனே! நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்துவிட்டிருக்க முடியும்! எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே! எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக! நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.” 7:156 இன்னும், “எங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை எழுதிவைப்பாயாக! திண்ணமாக, நாங்கள் உன் பக்கம் திரும்பி விட்டோம்.” அதற்கு இறைவன், “நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன். ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது. எனவே, எவர்கள் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ மேலும், ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும், என்னுடைய வசனங்களையும் நம்புகின்றார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன்” என்று பதிலுரைத்தான். 7:157 (எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர். 7:158 (முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.” 7:159 சத்தியத்தின் அடிப்படையில் வழிகாட்டி, அதற்கு ஏற்பவே நீதி செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் மூஸாவுடைய சமுதாயத்தாரில் இருந்தனர். 7:160 மேலும், நாம் அச்சமூகத்தை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனிப் பெரும் சமுதாயங்களாக அமைத்தோம். மேலும், மூஸாவிடம் அவருடைய சமுதாயத்தார்கள் தண்ணீர் வேண்டியபோது, ‘இன்ன பாறையை உமது கைத்தடியைக் கொண்டு அடியும்!’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்!” (என்று கூறினோம்). ஆனால் அவர்கள் (இதன் பின்னரும் தீயசெயல்களை மேற்கொண்டதனால்) நமக்கு அநீதி இழைத்திடவில்லை; மாறாக தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்தனர். 7:161 மேலும், இவ்வாறு அவர்களிடம் கூறப்பட்டதை நீர் நினைவுகூரும்: “நீங்கள் இவ்வூரில் வசியுங்கள்! மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள்! நாம் உங்களுடைய தவறுகளை மன்னிப்போம். சிறந்த முறையில் நற்செயல் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்.” 7:162 ஆயினும், அவர்களில் அக்கிரமக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். ஆகவே இவ்வாறு அவர்கள் அக்கிரமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை அவர்கள்மீது அனுப்பினோம். 7:163 கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும்! அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும்! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால், அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம். 7:164 மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழு வினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள். 7:165 இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம். 7:166 பிறகு அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம். 7:167 மேலும், அவர்களுக்கு மோசமான வேதனையைக் கொடுக்கக்கூடியவர்களையே மறுமைநாள் வரை நாம் அவர்கள் மீது ஏவிக் கொண்டிருப்போம் என உம் இறைவன் அறிவித்ததை நீர் நினைவுகூருவீராக! திண்ணமாக, உம்முடைய இறைவன் தண்டனை வழங்குவதில் மிக விரைவானவன் ஆவான். மேலும், திண்ணமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். 7:168 நாம் இப்பூமியில் அவர்களைப் பல சமூகங்களாகப் பிரித்து பிளவுபடச் செய்தோம். அவர்களில் சிலர் நல்லவர்களாய் இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்கவில்லை. மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக! 7:169 ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின் பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப உலகின் ஆதாயங்களைப் பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள். பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும் பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே! இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும். இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா? 7:170 யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியைத் திண்ணமாக நாம் வீணாக்கமாட்டோம்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)