அத்தியாயம்  அல்அஃராஃப்  7 : 171-206 / 206
7:171 மேலும், இதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக; நாம் மலையைப் பெயர்த்து அதனை அவர்களுக்கு மேல் குடையைப் போன்று நிழலிடச் செய்தோம். அது தங்கள் மீது விழுந்துவிடுமோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். (அப்போது நாம் அவர்களிடம் கூறினோம்:) “நாம் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள்! (அதனால்) நீங்கள் தவறான நடத்தையிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.” 7:172 மேலும், (நபியே! இதனையும் இம்மக்களுக்கு) நினைவூட்டுவீராக! உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். “ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவன்; இதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக நாம் இவ்வாறு செய்தோமெனில், மறுமைநாளில், “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாயிருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடக் கூடாது; 7:173 அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இறைவனுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் வந்த வழித்தோன்றல்கள்தாம்! எனவே தவறான மக்கள் செய்த செயலுக்காக எங்களை நீ தண்டிக்கப் போகின்றாயா என்றும் நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகத்தான்! 7:174 மேலும், இவ்வாறு நாம் சான்றுகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றோம்; (நல்வழியின் பக்கம்) அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக! 7:175 மேலும், (நபியே!) ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் எத்தகையவன் என்றால், நாம் அவனுக்கு நம்முடைய வசனங்களின் அறிவை வழங்கியிருந்தும் அவன், அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில், ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக, அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான். 7:176 நாம் நாடியிருந்தால், அவ்வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான்; மேலும், தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்! நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக்கூடும்! 7:177 நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது! 7:178 அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வழிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்! 7:179 மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள். 7:180 அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்! மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள். 7:181 நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள். 7:182 நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம். 7:183 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது. 7:184 இவர்கள் (எப்போதேனும்) சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை. அவர் (தீய விளைவு ஏற்படும் முன்னர் அதைப் பற்றி) தெளிவான முறையில் எச்சரிக்கை செய்பவரேயாவார். 7:185 வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியமைப்பைக் குறித்து இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா? இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா? ஆக, (தூதரின்) இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீதுதான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்? 7:186 அல்லாஹ் எவரை வழிதவறச் செய்கின்றானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் எவருமிலர். மேலும், அல்லாஹ் இவர்களை தங்களுடைய ஆணவப் போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு விட்டுவிடுகின்றான். 7:187 இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமேயுள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்றுதான் உங்களை வந்தடையும்.” அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: “அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள். 7:188 (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்: “நான் எனக்கு எவ்வித நன்மையையும், இழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றிலேன். அல்லாஹ் எதை நாடுகின்றானோ அதுவே நிகழ்கிறது. மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் எனக்கு நானே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருப்பேன். மேலும், எந்தத் தீங்கும் என்னை அணுகியிருக்காது. என்னை நம்புகின்ற மக்களுக்கு நான் எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி அறிவிப்பவனுமாகவே இருக்கின்றேன்.” 7:189 அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக! பிறகு ஆண், பெண்ணோடு கூடியபோது அவள் இலேசான கர்ப்பம் தரித்தாள். அதனை அவள் சுமந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். பின்னர், அது கனமானபோது இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தந்தால், திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராயிருப்போம்.” 7:190 ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கியபோது அவன் அவர்களுக்கு வழங்கிய கொடையில், அவனோடு மற்றவர்களையும் இணையாக்கினார்கள். அவர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன் ஆவான். 7:191 (எத்தகைய அறிவிலிகளாக இருக்கின்றார்கள், இவர்கள்!) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்? அவையே இறைவனால் படைக்கப்பட்டவைதாமே! 7:192 இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்திட அவற்றால் முடியாது. ஏன் தமக்குத்தாமே உதவி செய்யும் நிலையில்கூட அவை இல்லை. 7:193 நேரான வழியில் வருமாறு அவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், அவை உங்களைப் பின்பற்றி வரமாட்டா! நீங்கள் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அல்லது நீங்கள் மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்தவரை சமமே! 7:194 அல்லாஹ்வை விடுத்து எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களைப் போன்ற படைப்பினங்களே! அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள்! அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவை உங்கள் அழைப்பை ஏற்று பதில் தரட்டுமே! 7:195 அவற்றிற்கு கால்கள் இருக்கின்றனவா, நடப்பதற்கு? கைகள் இருக்கின்றனவா, பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா, பார்ப்பதற்கு? காதுகள் உள்ளனவா, கேட்பதற்கு? (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக்கடவுள்களை அழையுங்கள்! பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள்! எனக்கு அறவே அவகாசம் அளிக்காதீர்கள்! 7:196 இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்களுக்கு பாதுகாப்பு நல்குகின்றான். 7:197 ஆனால் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவற்றால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏன், அவற்றால் தமக்குத்தாமேகூட உதவி செய்து கொள்ள முடியாது! 7:198 மேலும், நீங்கள் அவற்றை நேரிய வழியில் வருமாறு அழைத்தால் உங்கள் பேச்சை அவற்றால் கேட்கவும் இயலாது. வெளித்தோற்றத்தில் அவை உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை (எதையும்) பார்ப்பதில்லை”. 7:199 (நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! 7:200 எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 7:201 உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது. 7:202 ஆனால், அவர்களின் (ஷைத்தான்களின்) சகோதரர்களையோ அவர்களின் வழிதவறிய போக்கிலேயே ஷைத்தான்கள் இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். மேலும் அவர்களை வழிகெடுப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. 7:203 மேலும் (நபியே!) ஏதேனும் சான்றினை (முஃஜிஸா அற்புதத்தை) நீர் இவர்களுக்குச் சமர்ப்பிக்கவில்லையாயின் அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் உமக்காக ஒரு சான்றினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?” (அதற்கு) நீர் கூறும்: “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது. 7:204 மேலும், குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.” 7:205 மேலும் (நபியே!) காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும்! மேலும் அலட்சியமாய் இருப்போர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்! 7:206 உம் இறைவனிடத்தில் நெருக்கமாய் இருக்கும் வானவர்கள் அவனை வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. மாறாக அவனை அவர்கள் துதிக்கிறார்கள். அவனின் திருமுன்னர் மட்டுமே பணிகின்றார்கள்.
அத்தியாயம்  அல்அன்ஃபால்  8 : 1-40 / 75
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
8:1 (நபியே!) அன் ஃபால் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள். கூறுவீராக: “அன் ஃபால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீராக்கிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” 8:2 உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள். 8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள். 8:4 இத்தகையோர்தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உயர்ந்த படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், தவறுகளுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன. 8:5 (இந்தப் போர்ப் பொருட்கள் விவகாரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற நிலை, முன்பு ஏற்பட்ட நிலையைப் போன்றே உள்ளது. அப்போது) உம் இறைவன் உம்மைச் சத்தியத்துடன் உம் வீட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான். இறைநம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினருக்கு அது வெறுப்பாக இருந்தது. 8:6 அவர்கள் சத்தியம் தெளிவாகி விட்ட பின்னரும் அது குறித்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை, கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரணத்தின் பக்கமாக இழுத்துச் செல்லப்படுவது போன்று இருந்தது. 8:7 மேலும், இதனையும் நினைத்துப் பாருங்கள்; “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்து விடுவர்” என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் வாக்குகளால் சத்தியத்தை சத்தியம் என்று காட்டவும், நிராகரிப்பாளர்களை வேரறுக்கவுமே நாடியிருந்தான். 8:8 ஏனெனில், சத்தியம் சத்தியம்தான் என்றும், அசத்தியம் அசத்தியம்தான் என்றும் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் (இதனை எவ்வளவு) வெறுத்தாலும் சரியே! 8:9 உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள்; அப்போது அவன் பதிலளித்தான்; “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.” 8:10 அல்லாஹ் இதனை அறிவித்தது, உங்களுக்கு ஒரு நற் செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே! தவிர, வெற்றி என்றைக்கும் அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது! நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான். 8:11 இதையும் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான். 8:12 இதனையும் நினைவுகூருங்கள்: உம் இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: “நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்! இதோ! நிராகரிப் பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!” 8:13 இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான்! மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கின்றார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான். 8:14 “இதுதான் உங்களுக்குரிய தண்டனை. இப்பொழுது இதனைச் சுவையுங்கள்!” மேலும், சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்குத் திண்ணமாக நரக வேதனை இருக்கிறது (என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்). 8:15 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறைநிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்! 8:16 அந்நாளில் யாரேனும் புறமுதுகு காட்டி ஓடினால் போர்த் தந்திரத்திற்காகவோ, வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ செல்பவரைத் தவிர மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும், அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும். 8:17 உண்மை யாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்! மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது உண்மையில் எறிந்தது நீரல்லர். மாறாக, அல்லாஹ்தான் எறிந்தான். மேலும், (இறை நம்பிக்கையாளர்களை இதில் பங்கேற்கச் செய்தது எதற்காகவெனில், அல்லாஹ் நம்பிக்கையாளர்களை நன்மை தரக்கூடிய சோதனையில் ஆழ்த்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 8:18 இது உங்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையாகும். ஆனால் நிராகரிப்பாளர் (களின் நிலை யாதெனில் அவர்)களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக, அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான். 8:19 (இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக) “நீங்கள் ஒரு முடிவை விரும்புகின்றீர்கள் என்றால், இதோ! அந்த முடிவு உங்கள் முன் வந்துவிட்டது. இனி நீங்கள் தவறான போக்கைத் தவிர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு நல்லதாகும். (அறிவற்ற இதே செயலின் பக்கம்) நீங்கள் மீண்டும் திரும்பினால், நாமும் மீண்டும் தண்டிப்போம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு அதிகமாயினும் சரியே, அது உங்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது. திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.” 8:20 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! மேலும் (கட்டளையைச்) செவியேற்ற பின் அதைப் புறக்கணிக்காதீர்கள்; 8:21 மேலும், செவியேற்காமல் இருந்து கொண்டு “நாங்கள் செவியேற்றோம்” என்று கூறியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! 8:22 திண்ணமாக சிந்தித்து உணராத செவிடர்களும், ஊமையர்களும்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர். 8:23 அவர்களிடம் கொஞ்சமேனும் நல்லியல்பு இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால், நிச்சயம் அவர்களுக்குச் செவியுறும் பேற்றினை அருளியிருப்பான். ஆனால் (நல்லியல்பற்றவர்களாய் இருந்தும்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்திருந்தால் புறக்கணித்தவர்களாய் முகம் திருப்பிக் கொண்டு போயிருப்பார்கள்! 8:24 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வு அளிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்! அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ணமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 8:25 மேலும் எந்த ஃபித்னாவின் குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாதோ அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாக தண்டனை அளிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 8:26 மேலும், இந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: நீங்கள் சிறுபான்மையோராய் இருந்தீர்கள்; பூமியில் வலிமையற்றவர்களாய்க் கருதப்பட்டீர்கள்; பிற மக்கள் உங்களை இறாஞ்சிச் சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு தஞ்சம் அளித்தான். தனது உதவியின் மூலம் உங்களுடைய கைகளை வலுப்படுத்தினான். மேலும், அவன் நல்ல பொருள்களிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான்; நீங்கள் நன்றி செலுத்தக் கூடும் என்பதற்காக! 8:27 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந்தும்) வஞ்சனை செய்யாதீர்கள்; அறிந்து கொண்டே உங்களுடைய அமானிதங்களில் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள். 8:28 உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உண்மையில் சோதனைப் பொருள்களே என்பதையும், திண்ணமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! 8:29 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய) “உரைகல்லை” வழங்குவான். மேலும், உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கி விடுவான். மேலும், உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கின்றான். 8:30 மேலும், இந்த நேரத்தையும் நினைவுகூருங்கள்: சத்தியத்தை நிராகரித்தவர்கள் உமக்கு எதிராக சதித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; உம்மைக் கைது செய்ய வேண்டும் அல்லது உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும் என்பதற்காக! (இவ்வாறாக) அவர்கள் தங்களுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தார்கள்; மேலும், அல்லாஹ் தன்னுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான். 8:31 மேலும், நம் வசனங்கள் அவர்கள் முன் ஓதிக் காண்பிக்கப்படும்போது கூறுவார்கள்: “நாங்கள் கேட்டுக் கொண்டோம்; நாங்கள் நினைத்தால் இதைப் போன்று நாங்களும் உருவாக்கிக் கூறமுடியும்! இவையெல்லாம் முன்னோர்கள் கூறிவரும் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.” 8:32 மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும்: “இறைவனே! இது உன்னிடமிருந்து அருளப்பட்ட சத்தியம் என்பது உண்மையாயின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” 8:33 ஆனால் நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவனாக இல்லை. மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் மீது வேதனையை இறக்கிவிடுவது அல்லாஹ்வின் நியதியல்ல. 8:34 அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்குச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்கு உள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுள்ளவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாய் ஆக முடியும்! எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள். 8:35 கஅபா ஆலயத்தில் அவர்களுடைய தொழுகை, சீட்டி அடிப்பதும் கை தட்டுவதுமே அன்றி வேறில்லை! எனவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்!” 8:36 சத்தியத்தை மறுத்தவர்கள், அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் (மக்களைத்) தடுப்பதற்காகத் தங்களுடைய பொருள்களைச் செலவழிக்கின்றார்கள். மென்மேலும் செலவழித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இறுதியில், இந்தச் செயல்களே அவர்கள் வருந்துவதற்குக் காரணமாய் அமைந்துவிடும். பிறகு அவர்கள் தோல்வி அடைவார்கள். மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்; 8:37 எதற்காகவெனில், அல்லாஹ் தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதைப் பிரித்தெடுத்து, தூய்மையற்ற ஒவ்வொன்றையும் ஒன்று சேர்த்து, பிறகு அந்தக் குவியலை நரகத்தில் வீசி எறிவதற்காக! இத்தகையோர் தாம் முற்றிலும் இழப்புக்குரியவர்களாவர். 8:38 (நபியே!) இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறும்: “(இப்போதேனும் அசத்தியப் போக்கிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், முன்பு செய்த குற்றங்கள் யாவும் மன்னிக்கப்படும். ஆனால், (பழைய போக்கிற்கு) அவர்கள் மீண்டும் திரும்புவார்களாயின் முற்கால மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே!” 8:39 (இறைநம்பிக்கை கொண்டவர்களே!) குழப்பம் இல்லாதொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள்! பிறகு, அவர்கள் (அதிலிருந்து) விலகிக்கொண்டால் அவர்களுடைய செயல்களைத் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கின்றான். 8:40 மேலும், அவர்கள் (ஏற்றுக் கொள்ளாமல்) புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலனும், சிறந்த முறையில் உதவி புரிபவனும் ஆவான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)