அத்தியாயம்  அல்அஃராஃப்  7 : 1-87 / 206
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
7:1 அலிஃப், லாம், மீம், ஸாத். 7:2 (நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது. 7:3 (மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள். 7:4 எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது. 7:5 அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர! 7:6 எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம். 7:7 பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை. 7:8 மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 7:9 மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்! 7:10 நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். 7:11 நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை. 7:12 “சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான். 7:13 அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.” 7:14 (இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” 7:15 அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான். 7:16 அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். 7:17 பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய்.” 7:18 அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு! (உன்னையும்) அவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன். 7:19 மேலும், ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள்! நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள்! ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள்! அவ்வாறு நெருங்கினால், நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் சேர்ந்து விடுவீர்கள்.” 7:20 ஆனால் அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்; மேலும், இவ்வாறு கூறினான்: “உங்கள் இறைவன் இம்மரத்தின் அருகே செல்லக் கூடாது என்று உங்கள் இருவரையும் தடுத்ததற்கான காரணம், நீங்கள் இருவரும் வானவர்கள் ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!” 7:21 மேலும், அவன் அவர்களிடம் சத்தியம் செய்து கூறினான்: “நான் உங்கள் இருவருக்கும் உண்மையான நலம் நாடுபவனாவேன்.” 7:22 இவ்வாறு அவ்விருவரையும் ஏமாற்றி படிப்படியாக தன்வசப்படுத்தினான். கடைசியில் அவர்கள் அம்மரத்தி(ன் கனியி)னைச் சுவைத்ததும் அவர்களின் வெட்கத்தலங்கள் பரஸ்பரம் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்களை சுவனத்தின் இலைகளால் மூடிக்கொள்ளலாயினர். (அப்போது) அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இம் மரத்(தின் அருகில் செல்வ)தைவிட்டு உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா? மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?” 7:23 அதற்கு அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.” 7:24 அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். மேலும், ஒரு குறிப் பிட்ட காலம் வரை பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கைச் சாதனங்களும் உள்ளன.” 7:25 (மேலும்) கூறினான்: “நீங்கள் அங்கேயே வாழ்ந்து அங்கேயே மரணமடைவீர்கள்; பின்னர், அங்கிருந்தே நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.” 7:26 ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும். 7:27 ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம். 7:28 அவர்கள், ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால், “இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக் கண்டோம்” என்றும் “இவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்தான் எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்றும் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளையிடுவதில்லை. எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதானா என்பதை) நீங்கள் அறியமாட்டீர்களோ அந்த விஷயங்களையா அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்கள்?” 7:29 (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “என் அதிபதி நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளான்; மேலும் (இதுவும் அவனது கட்டளைதான்:) ஒவ்வொரு வழிபாட்டிலும் நீங்கள் முன்னோக்கும் திசைகளைச் சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள்! அவன் உங்களை இப்பொழுது எவ்வாறு படைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப் படுவீர்கள். 7:30 ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழிப்படுத்தி விட்டான்; மேலும், மற்றொரு கூட்டத்தார் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை உதவியாளர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக தாம் நேர்வழியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.” 7:31 ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. 7:32 (நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும் மேலும், அவன் வழங்கியுள்ள தூய்மையான உண்பொருள்களையும் தடைசெய்தது யார்?” நீர் கூறும்: “இறைநம்பிக்கையாளர்களுக்கு இப்பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையில் கிடைக்கும். மறுமைநாளில் அவர்களுக்கே அவை உரியனவாயிருக்கும்.” இவ்வாறு நாம் நம்முடைய வசனங்களை அறிவுடைய சமூகத்தாருக்குத் தெளிவாக விவரிக்கின்றோம். 7:33 (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி! பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்!” 7:34 ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். 7:35 (மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 7:36 ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள். 7:37 எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள். 7:38 அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.” 7:39 மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள். 7:40 (உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும். 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்! 7:42 (இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். 7:43 மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!” 7:44 பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக! 7:45 அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள். 7:46 மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். 7:47 மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!” 7:48 பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.” 7:49 மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.” 7:50 மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.” 7:51 அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!” 7:52 திண்ணமாக, நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது எத்தகையதென்றால், அறிவின் அடிப்படையில் நாம் அதில் (அனைத்தையும்) விவரித்திருக்கின்றோம். (மேலும் அது) இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. 7:53 இப்பொழுது சிலர் இவ்வேதம் எச்சரிக்கின்ற இறுதி முடிவைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றார்களா? அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்! (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா? அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா?” அவர்கள் தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும், அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை எல்லாம் இன்று அவர்களை விட்டுக் காணாமல் போய்விட்டன. 7:54 திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான். 7:55 உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் இறைஞ்சுங்கள்! திண்ணமாக, அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. 7:56 மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது. 7:57 மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்!) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும். 7:58 நல்லபூமி தன்னுடைய இறைவனின் கட்டளைப் படி (நல்ல) விளைச்சலைத் தருகின்றது. ஆனால் கெட்ட பூமியோ மோசமான விளைச்சலைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம், நன்றி செலுத்துகின்ற மக்களுக்கு நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் விவரித்துக் கூறுகின்றோம். 7:59 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.” 7:60 அதற்கு அவருடைய சமுதாயத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: “நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்.” 7:61 அதற்கு நூஹ் சொன்னார்: “என்னுடைய சமுதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன். 7:62 நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுக்கு நலம் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன். 7:63 உங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், தவறான நடத்தையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உங்கள் மீது இரக்கம் காட்டப்படுவதற்காகவும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனுடைய அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா?” 7:64 ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யரென்று கூறிவிட்டார்கள். இறுதியில், நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் ஒரு கப்பலில் (ஏற்றி) காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களை நாம் மூழ்கடித்தோம். திண்ணமாக, அவர்கள் கண்மூடித்தனமாக வாழும் மக்களாக இருந்தார்கள். 7:65 மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?” 7:66 (அவருடைய இக்கூற்றை) ஏற்க மறுத்த அவரது சமுதாயத் தலைவர்கள், “திண்ணமாக, நீர் அறியாமையில் உழல்வதை நாங்கள் காண்கின்றோம். மேலும், நீர் பொய்யராக இருப்பீரோ என்றும் நாங்கள் ஐயங்கொள்கின்றோம்” என்று பதில் கூறினார்கள். 7:67 அதற்கு அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! நான் அறியாமையில் உழன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, நான் அகிலங்களுடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன். 7:68 நான் என் அதிபதியின் தூதுச்செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். மேலும், நான் உங்களின் நம்பிக்கைக்குரிய நலம்விரும்பியாக இருக்கின்றேன். 7:69 உங்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனின் அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா? உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள்! எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்!” 7:70 அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்தவற்றையெல்லாம் நாங்கள் விட்டுவிட வேண்டும் என்ப(தைச் சொல்வ)தற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்? நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!” 7:71 அதற்கு அவர் கூறினார்: “உங்கள் இறைவனின் வேதனையும் சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஏற்படுத்திக்கொண்ட பெயர்களைக் குறித்தா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை! எனவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.” 7:72 இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம். 7:73 மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும். 7:74 மேலும், நினைத்துப் பாருங்கள்; ஆத் சமுதாயத்திற்குப் பின் அல்லாஹ் உங்களை வாரிசுகளாக்கினான். மேலும், இப்பூமியில் சிறப்பான வசதிகளையும் உங்களுக்கு வழங்கினான். இப்போது அதன் சமவெளிகளில் நீங்கள் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்புகின்றீர்கள்; மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். எனவே, அல்லாஹ்வின் (வல்ல மைக்குச் சான்றான) அருட்கொடைகளை நினைவு கூருங்கள்! மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்!” 7:75 அவருடைய சமுதாயத்தவரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள், இறைநம்பிக்கை கொண்டிருந்த பலவீனமான மக்களை நோக்கி வினவினார்கள்: “உண்மையில் ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எச்செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டுள்ளாரோ அதனை நாங்கள் திண்ணமாக ஏற்றுக் கொள்கின்றோம்.” 7:76 அதற்கு அந்த ஆணவக்காரர்கள், “எதனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்களோ, அதனை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள். 7:77 பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள். மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த வேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!” 7:78 இறுதியில் திடுக்குறச் செய்யும் ஒரு நிலநடுக்கம் அவர்களைத் தாக்கியது. உடனே, அவர்கள் தம்முடைய இல்லங்களில் முகங்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள்! 7:79 பிறகு, ஸாலிஹ் “என் சமூகத்தாரே! நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும்?) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே!” என்று கூறியவாறு அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார். 7:80 பிறகு, லூத்தை நாம் தூதராக அனுப்பினோம். அவர் தம்முடைய சமுதாயத்தாரை நோக்கி இவ்வாறு கூறியதை நினைத்துப் பாருங்கள்: “இந்த மானக்கேடான செயலைச் செய்கின்ற (அளவுக்கு நீங்கள் வெட்கமற்ற) வர்களாகி விட்டீர்களா? உங்களுக்கு முன்னர் அகிலத்தாரில் எவருமே இதனைச் செய்ததில்லை. 7:81 பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.” 7:82 அதற்கு அக் கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.” 7:83 இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் (வேதனையை அனுபவிக்க) பின்தங்கி விட்டவர்களில் ஒருத்தி யாக இருந்தாள். 7:84 பிறகு அக்கூட்டத்தார்கள் மீது நாம் பொழிந்தோம் (கல்) மழையை! பிறகு பாருங்கள், அக்குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று? 7:85 மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான ஷûஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள்! உண்மையிலேயே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது. 7:86 மேலும் (வாழ்வின்) ஒவ்வொரு பாதையிலும் (கொள்ளைக்காரர்கள் போல) மக்களைப் பயமுறுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்களாகவும் இருக்காதீர்கள்; மேலும், நேரான வழியைக் கோணலாக்க முயலாதீர்கள்! நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பிறகு அல்லாஹ் உங்களைப் பல்கிப்பெருகச் செய்தான். இன்னும் (கண்திறந்து) பாருங்கள்; (உலகில்) குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை! 7:87 நான் என்னென்ன அறிவுரைகளுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அவற்றின் மீது உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தீர்களானால், அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் (காத்துக் கொண்டு) இருங்கள்! அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)