அத்தியாயம்  அல் முல்க்  67 : 1-30 / 30
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
67:1 யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான். 67:2 அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். 67:3 அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். கருணைமிக்க இறைவனின் படைப்பில் எந்த முரண்பாட்டையும் நீர் காணமாட்டீர்! பிறகு, திரும்பவும் பாரீர்! எங்காவது பழுதுகளேதும் உமக்குத் தென்படுகின்றதா? 67:4 மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்துவீர்! உமது பார்வை தளர்வுற்று, தோல்வியடைந்த நிலையில் திரும்பும்! 67:5 நாம் உங்களுக்கு அருகிலிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை நாம் ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்துவிட் டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். 67:6 எவர்கள் தங்களுடைய அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கின்றது. அது மிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும். 67:7 அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும் 67:8 கடுமையான கோபத்தால் வெடித்துவிடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும்போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று! 67:9 அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: “ஆம்! எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்யரெனத் தூற்றினோம். அல்லாஹ் எதனையும் இறக்கி வைக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்றும் கூறினோம்.” 67:10 மேலும் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் செவிதாழ்த்திக் கேட்பவர்களாய் அல்லது புரிந்துகொள்பவர்களாய் இருந்திருந்தால், (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பின் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோம்.” 67:11 இவ்வாறு அவர்களே தங்களின் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். சாபம் உண்டாகட்டும், இந்த நரகவாசிகள் மீது! 67:12 பார்க்காமலேயே தங்களின் அதிபதிக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு. 67:13 மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி! (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்!) திண்ணமாக அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகிறான். 67:14 எவன் படைத்து இருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான். 67:15 அவனே பூமியை உங்களுக்கு வசப்பட்டதாக அமைத்து வைத்திருக்கின்றான். அதன் மார்பின் மீது நடந்து செல்லுங்கள். மேலும் அல்லாஹ்வின் உணவை உண்ணுங்கள். நீங்கள் (மரணித்த பின்) மீண்டும் உயிர் பெற்று அவனிடமே செல்ல வேண்டி இருக்கிறது. 67:16 வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும் அப்போது உடனே பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? 67:17 அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? பிறகு உங்களுக்குத் தெரிந்துவிடும், எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று! 67:18 இவர்களுக்கு முன்னர் சென்றுபோன மக்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றார்கள். பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்; என்னுடைய பிடி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை! 67:19 சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்களுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா என்ன? அவற்றைத் தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறு எவருமில்லை! திண்ணமாக, அவனே ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். 67:20 சொல்லுங்கள் பார்ப்போம்; கருணைமிக்க இறைவனுக்கு எதிராக உங்களுக்கு உதவி புரிவதற்கு உங்களிடம் எந்தப் படை இருக்கிறது? உண்மை யாதெனில், இந்த நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் 67:21 அல்லது கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக்கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்பதைச் சொல்லுங்கள் பார்ப்போம்! உண்மை யாதெனில், இவர்கள் வரம்பை மீறுவதிலும், சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள். 67:22 சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில் நடந்து சென்று கொண்டிருப்பவனா? 67:23 (இவர்களிடம்) கூறும்: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்து, கேட்கின்ற மற்றும் பார்க்கின்ற ஆற்றல்களையும் சிந்தித்துணரும் உள்ளங்களையும் உங்களுக்கு வழங்கியுள்ளான்.” ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். 67:24 (இவர்களிடம் கூறும்:) “அல்லாஹ்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்பட இருக்கின்றீர்கள்.” 67:25 மேலும் இவர்கள் கேட்கின்றார்கள்: “இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், காண்பித்துத் தாருங்கள்!” 67:26 நீர் கூறும்: “இதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. நானோ தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான்!” 67:27 பின்னர், அவர்கள் அதை அருகில் பார்க்கும் போது, எவர்கள் அதை நிராகரித்தார்களோ அவர்களின் முகங்கள் அலங்கோலமாகிவிடும். (அவர்களிடம்) கூறப்படும்: “நீங்கள் எதனைக் குறித்து வற்புறுத்திக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!” 67:28 (இவர்களிடம்) கேளும்: “அல்லாஹ் என்னையும் என் தோழர்களையும் அழித்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணை புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்பாளர்களைக் காப்பாற்றுபவன் யார் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?” 67:29 மேலும் (இவர்களிடம்) கூறும்: “அவன் பெரும் கருணையாளனாவான். அவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்பது விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும். 67:30 (இவர்களிடம்) கேளும்: “உங்கள் (கிணறுகளின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக்கொணர்பவன் யார் என்பதையும் நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?”
அத்தியாயம்  அல்கலம்  68 : 1-52 / 52
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
68:1 நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக! 68:2 நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர். 68:3 என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது. 68:4 மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர். 68:5 விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள். 68:6 உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும் 68:7 அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான். 68:8 எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர். 68:9 நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள். 68:10 அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். 68:11 அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும், 68:12 நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும், 68:13 கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்; 68:14 அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்! 68:15 நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, இவை முற்காலத்துக் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான். 68:16 விரைவில் நாம் இவனுடைய மூக்கின் மீது சூடு இடுவோம்! 68:17 நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள். 68:18 அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை. 68:19 இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உம் இறைவனின் தரப்பிலிருந்து ஒரு பேரிடர் அந்தத் தோட்டத்தைப் பிடித்துக் கொண்டது. 68:20 அப்போது அது அறுவடை செய்யப்பட்ட வயலைப் போன்று ஆகிவிட்டது! 68:21 காலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கூறினார்கள், 68:22 “நீங்கள் கனிகளைப் பறிப்பதாக இருந்தால், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள்” என்று! 68:23 அவ்வாறே அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்: தங்களிடையே இரகசியம் பேசிக்கொண்டு. 68:24 “இன்று எந்த ஏழை எளியவனும் உங்களிடம் தோட்டத்திற்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!” 68:25 அப்படி எதையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அதிகாலையில் (கனிகளைப் பறிக்க) ஆற்றலுள்ளவர்கள் போன்று அவசர அவசரமாக அவர்கள் அங்கு சென்றார்கள்: 68:26 ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்; 68:27 இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!” 68:28 அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?” 68:29 அப்போது அவர்கள் கூறினார்கள்: “மிகத் தூய்மையானவன், எங்கள் அதிபதி! உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!” 68:30 பின்னர் அவர்கள் பரஸ்பரம் பழித்துரைக்கலாயினர். 68:31 இறுதியில் அவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய கேடே! ஐயமின்றி நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விட்டோம். 68:32 எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!” 68:33 இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே! 68:34 திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன. 68:35 கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன? 68:36 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்? 68:37 உங்களிடம் ஏதாவது வேதம் இருக்கின்றதா? 68:38 நீங்கள் உங்களுக்கு எதை விரும்புகின்றீர்களோ அது உங்களுக்கு அங்கே அவசியம் கிடைக்கும் என்று அந்த வேதத்தில் நீங்கள் படிக்கின்றீர்களா? 68:39 அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன? 68:40 உங்களில் எவர் இதற்குப் பொறுப்பாளி என்று இவர்களிடம் நீர் கேளும்! 68:41 அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்! 68:42 எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது. 68:43 இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்). 68:44 ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம். 68:45 நான் இவர்களுடைய கடிவாளத்தைத் தளர்த்தி விட்டிருக்கின்றேன். எனது சூழ்ச்சி மிக உறுதியானதாகும். 68:46 என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா? 68:47 அல்லது மறைவானவற்றைப் பற்றிய ஞானம் இவர்களுக்கு இருந்து அதனை இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா? 68:48 சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது, 68:49 அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்! 68:50 இறுதியில் அவருடைய அதிபதி அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், அவரை நல்லடியார்களில் ஒருவராயும் சேர்த்துக் கொண்டான். 68:51 இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள். 68:52 ஆனால் உண்மை நிலை யாதெனில், இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது.
அத்தியாயம்  அல்ஹாக்கா  69 : 1-52 / 52
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
69:1 நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்! 69:2 நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்ன? 69:3 நிச்சயமாக நிகழ்ந்தே தீர வேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா? 69:4 ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர். 69:5 எனவே ஸமூது சமூகத்தினர் ஒரு கடுமையான விபத்தினால் அழிக்கப்பட்டார்கள். 69:6 ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள். 69:7 அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்! 69:8 இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன? 69:9 ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும், தலை கீழாகப் புரட்டப்பட்ட ஊர் (வாசி)களும் இதே பெருந்தவறைச் செய்தனர். 69:10 அவர்கள் அனைவரும் தங்களுடைய இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான். 69:11 வெள்ளப் பிரளயம் எல்லை கடந்து போனபோது நாம் உங்களைக் கப்பலில் ஏற்றினோம்; 69:12 இச்சம்பவங்களை நாம் படிப்பினையூட்டும் ஒரு பாடமாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், நினைவுகூரும் செவிகள் இதனை நினைவிலிருத்திப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும்தான்! 69:13 பிறகு ஒரே ஒரு தடவை எக்காளம் ஊதப்படும்போது 69:14 மேலும், பூமியையும் மலைகளையும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கி, துகள்துகளாக ஆக்கப்படும்போது ; 69:15 அந்த நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்! 69:16 மேலும் (அந்நாளில்) வானம் பிளக்கும், அதன் கட்டுக்கோப்பு குலைந்து போய்விடும். 69:17 வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். மேலும், உம் இறைவனின் அர்ஷை* அன்று எட்டு வானவர்கள் தங்களின் மீது சுமந்துகொண்டிருப்பார்கள். 69:18 அந்நாளில் நீங்கள் ஆஜர்படுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த இரகசியமும் அன்று மறைந்து இருக்காது. 69:19 அன்று தன் வலக்கையில் யாருக்குச் செயலேடு தரப்படு கிறதோ அவர் கூறுவார்: “இதோ, பாருங்கள்! படியுங்கள், என் வினைச் சுவடியை! 69:20 நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்று நான் எண்ணியேயிருந்தேன்!” 69:21 அவர் மனத்திற்குகந்த வாழ்க்கையில் இருப்பார், 69:22 உன்னதமான சுவனத்தில்; 69:23 அங்கு பழக்குலைகள் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். 69:24 (இத்தகையவர்களிடம்) கூறப்படும்: “சுவையாக உண்ணுங்கள்; பருகுங்கள்! கடந்து சென்ற நாட்களில் நீங்கள் ஆற்றிய நற்காரியங்களுக்குப் பகரமாக!” 69:25 மேலும், தன்னுடைய இடக்கையில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்: “அந்தோ! என்னுடைய செயலேடு எனக்குத் தரப்படாமல் இருந்திருக்கக் கூடாதா? 69:26 என் கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா? 69:27 அந்தோ! (உலகத்தில் வந்த) அந்த மரணமே இறுதியானதாய் இருந்திருக்கக் கூடாதா? 69:28 இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லையே! 69:29 என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!” 69:30 (ஆணை பிறக்கும்:) “பிடியுங்கள் இவனை! இவனுடைய கழுத்தில் விலங்கை மாட்டுங்கள்! 69:31 பின்னர் இவனை நரகத்தில் வீசி எறியுங்கள்! 69:32 பிறகு இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள்.” 69:33 மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான். 69:34 ஏழை எளியோர்க்கு உணவு அளிக்கும்படி தூண்டாமலும் இருந்தான். 69:35 எனவே, இன்று இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை. 69:36 சீழ்நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இங்கு இல்லை; 69:37 தவறிழைத்தவர்களைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை. 69:38 இல்லை! நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும், 69:39 நீங்கள் பார்க்காதவற்றின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்! 69:40 இது கண்ணியமான ஒரு தூதரின் சொல்லாகும். 69:41 யாரோ ஒரு கவிஞனின் சொல்லல்ல. நீங்கள் குறைவாகத்தான் நம்பிக்கை கொள்கின்றீர்கள். 69:42 இது யாரோ ஒரு ஜோதிடனின் சொல்லும் அல்ல. நீங்கள் குறைவாகத்தான் சிந்திக்கிறீர்கள். 69:43 இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும். 69:44 மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால் 69:45 நாம் அவரது வலக்கையைப் பிடித்திருப்போம். 69:46 பிறகு அவருடைய பிடரி நரம்பைத் துண்டித்தும் இருப்போம். 69:47 பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து (நம்மைத்) தடுப்பவராய் இருக்க முடியாது! 69:48 உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும். 69:49 உங்களில் பொய்யென வாதிடுபவர்கள் சிலரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். 69:50 இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது மனவருத்தத்தை அளிக்கக்கூடியதே ஆகும். 69:51 மேலும், இது முற்றிலும் உறுதியான சத்தியமாகும். 69:52 எனவே, (நபியே) உம்முடைய மகத்தான அதிபதியின் பெயரைத் துதிப்பீராக!
அத்தியாயம்  அல்மஆரிஜ்  70 : 1-44 / 44
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
70:1 கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும், 70:2 நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை. 70:3 ஏறிச்செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும். 70:4 வானவர்களும் ரூஹும்* அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும். 70:5 (நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை! 70:6 இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள். 70:7 நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம். 70:8 (அந்த வேதனை ஏற்படும்) அந்நாளில் வானம், உருகிய வெள்ளியைப் போன்றும் 70:9 மலைகள், கடையப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்றும் ஆகிவிடும். 70:10 மேலும், அன்று எந்த உற்ற நண்பனும் தன்னுடைய நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான். 70:11 ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும், 70:12 தன் மனைவியையும், சகோதரனையும், 70:13 தனக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மிக நெருங்கிய குடும்பத்தையும், 70:14 ஏன் பூமியிலுள்ள அனைவரையுமே ஈடாகக் கொடுத்துவிட வேண்டும் என்றும், இது அவனுக்கு ஈடேற்றம் அளித்திட வேண்டும் என்றும் விரும்புவான். 70:15 ஒருபோதுமில்லை; அது சீறியெழுந்து எரியும் தீப்பிழம்பாகும். 70:16 அது தோலையும் சதையையும் பொசுக்கிவிடும். 70:17 எந்த மனிதன் சத்தியத்தைப் புறக்கணித்து, புறங்காட்டிச் சென்றானோ ; 70:18 மேலும் செல்வத்தைச் சேர்த்தானோ இன்னும் கஞ்சத்தனமாக தன்னிடம் தடுத்து வைத்தானோ அத்தகைய ஒவ்வொருவனையும் அது ‘வா வா’ என்று அழைக்கும். 70:19 மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான். 70:20 ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான். 70:21 ஆனால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான். 70:22 ஆயினும் தொழுகையாளிகள் (இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்). 70:23 அவர்களோ தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுகிறார்கள். 70:24 அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது. 70:25 யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்; 70:26 அவர்கள் கூலி வழங்கும் நாளினை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள். 70:27 மேலும், தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள். 70:28 ஏனெனில், அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக்கூடியதல்ல. 70:29 அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கிறார்கள்; 70:30 அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர். 70:31 ஆயினும் அதற்கு மேலும் எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள்தாம் வரம்புமீறுகிறவர்கள் ஆவர். 70:32 அவர்கள் தங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களைப் பாதுகாக்கிறார்கள். தாங்கள் செய்த ஒப்பந்தங்களைப் பேணி நடக்கவும் செய்கிறார்கள். 70:33 மேலும் தங்களுடைய சாட்சியங்களில் நேர்மையாக நிலைத்திருக்கிறார்கள். 70:34 மேலும் தங்களுடைய தொழுகைகளைப் பேணிக் காக்கிறார்கள். 70:35 இத்தகையவர்கள்தாம் சுவனத் தோட்டங்களில் கண்ணியத்துடன் தங்கி வாழ்பவர்கள். 70:36 (நபியே) என்ன விஷயம்? இந்நிராகரிப்பாளர்கள் உம்மை நோக்கி ஓடிவருகின்றார்களே, 70:37 வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும் கூட்டம் கூட்டமாக. 70:38 இவர்கள் ஒவ்வொருவரும் அருள்நிறைந்த சுவனத்தில் தாம் நுழைவிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா? 70:39 ஒருபோதும் நடக்காது! நாம் எப்பொருளிலிருந்து அவர்களைப் படைத்தோமோ அதை அவர்களே அறிந்திருக்கிறார்கள். 70:40 அவ்வாறில்லை. நான் சத்தியம் செய்கின்றேன். கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதியின் மீது! 70:41 இவர்களுக்குப் பகரமாக இவர்களைவிட சிறந்தவர்களைக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். மேலும் நம்மை வெற்றி கொள்ளக்கூடியவர் எவரும் இல்லை! 70:42 எனவே இவர்களை இவர்களுடைய அபத்தமான பேச்சுக்களிலும் விளையாட்டிலும் வீழ்ந்து கிடக்குமாறு நீர் விட்டுவிடும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளினை இவர்கள் அடையும் வரை! 70:43 இவர்கள் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளி யேறி ஓடிக்கொண்டிருக்கும் நாளில் தங்கள் தெய்வச் சிலைகளின் ஆலயங்களை நோக்கி விரைவாக ஓடுவதைப்போல; 70:44 இவர்களின் பார்வைகள் தாழ்ந்துவிட்டிருக்கும்; இழிவு இவர்களைக் கவ்வியிருக்கும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது அந்நாளே ஆகும்.
அத்தியாயம்  நூஹ்  71 : 1-28 / 28
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
71:1 நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக! 71:2 அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன். 71:3 (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 71:4 அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே! 71:5 அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன். 71:6 ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது. 71:7 மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள். 71:8 மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன். 71:9 பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன். 71:10 நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். 71:11 அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். 71:12 செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான். 71:13 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே! 71:14 உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான். 71:15 அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும், 71:16 அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? 71:17 மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான். 71:18 பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான். 71:19 மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்; 71:20 நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக! 71:21 நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இவர்கள் என் பேச்சை நிராகரித்து விட்டார்கள். மேலும், இவர்கள் சில (தலைவ)ர்களைப் பின்பற்றியுள்ளார்கள். அந்தத் தலைவர்களுக்குத் தங்கள் செல்வமும்பிள்ளைகளும் அதிக நஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. 71:22 இவர்கள் பெரியதொரு சூழ்ச்சி வலையை விரித்து வைத்திருக்கின்றார்கள். 71:23 “உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள். 71:24 இவர்கள் பலரை வழிகெடுத்திருக்கின்றார்கள். நீயும் இந்தக் கொடுமையாளர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதிலும் முன்னேற்றத்தை அளிக்காதே!” 71:25 தங்கள் தவறுகளின் காரணத்தால்தான் அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; மேலும், நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றி உதவுவோர் எவரையும் அவர்கள் பெற்றிடவில்லை. 71:26 மேலும், நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே! 71:27 நீ இவர்களைவிட்டு வைத்தால் இவர்கள் உன் அடிமைகளை வழிகெடுத்து விடுவார்கள். மேலும் இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும் நிராகரிப் பாளனாகவும்தான் இருப்பான். 71:28 என் அதிபதியே! எனக்கும் என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாக நுழைந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே!”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)