அத்தியாயம்  அல் ஜுமுஆ  62 : 1-11 / 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
62:1 அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றன வானங்களில் உள்ள ஒவ்வொன்றும்; பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! அவன் அரசனாக இருக்கிறான். மிகவும் தூய்மையானவன்; யாவரையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன். 62:2 அவன்தான் உம்மிகளிடையே* ஒரு தூதரை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள். 62:3 இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 62:4 இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான். 62:5 எந்த மக்கள் மீது ‘தவ்ராத்’ சுமத்தப்பட்டதோ பின்னர் அவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுச் செயல்படவில்லையோ அந்த மக்களின் உதாரணம், வேதங்களைச் சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று தூற்றிய மக்களின் உதாரணம் இதனைவிட மோசமானதாகும். இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 62:6 (இவர்களிடம்) கூறும்: “யூதர்களாக ஆகிவிட்டவர்களே! மக்கள் அனைவரையும்விட நீங்கள்தாம் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் என்று கர்வத்துடன் எண்ணுவீர்களானால் உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், மரணத்தை விரும்புங்கள்!” 62:7 ஆனால், அவர்கள் செய்துவிட்ட தீய செயல்களின் காரணத்தால் அதனை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். மேலும், அல்லாஹ் இந்தக் கொடுமைக்காரர்களை நன்கு அறிந்தே இருக்கின்றான். 62:8 (இவர்களிடம்) கூறும்: “எந்த மரணத்தைவிட்டு நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அது திண்ணமாக உங்களை அடைந்தே தீரும். பின்னர், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாகிய இறைவனின் முன் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். மேலும், நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவித்துத் தருவான்.” 62:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை யன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! 62:10 பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும். 62:11 அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அல் முனாஃபிகூன்  63 : 1-11 / 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
63:1 (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான். 63:2 இவர்கள் தங்களுடைய ‘சத்தியங்களை’க் கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமாக அல்லாஹ்வின் வழியிலிருந்து தாங்களும் விலகி, பிறமக்களையும் அதில் (செல்லவிடாமல்) தடுக்கின்றார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பவை எத்துணை மோசமான செயல்! 63:3 இவை அனைத்திற்கும் காரணம், இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டதுதான். இதனால் அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. 63:4 நீர் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடலமைப்பு உமக்குக் கம்பீரமாகத் தெரியும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த ஓசையையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தாம் கடும் பகைவர்களாவர். இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இரும். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்? 63:5 “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றார்கள். மேலும், இவர்கள் பெரும் ஆணவத்தால் வராமல் நின்றுவிடுவதை நீர் காண்பீர். 63:6 (நபியே!) நீர் இவர்களுக்குப் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினாலும், இறைஞ்சாவிட்டாலும் இவர்களைப் பொறுத்து சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை! 63:7 இவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள்; “இறைத்தூதரின் தோழர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால் அவர்கள் சிதறிப் போகட்டும்!” உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை. 63:8 மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் எவர் கண்ணியமிக்கவரோ அவர் கேவலமானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்.” ஆயினும், கண்ணியமானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிவதில்லை. 63:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். எவர்கள் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். 63:10 நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” 63:11 ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அத்தகாபுன்  64 : 1-18 / 18
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
64:1 அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன். 64:2 அவனே உங்களைப் படைத்தான். பிறகு, உங்களில் சிலர் நிராகரிப் பாளர்களாய் இருக்கிறார்கள். சிலர் இறைநம்பிக்கையாளர்களாக விளங்குகின்றார்கள். மேலும், நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 64:3 அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக்கொண்டு படைத்தான். மேலும், உங்களுக்கு வடிவம் அமைத்தான். உங்கள் வடிவங்களை மிகவும் அழகிய முறையில் அமைத்தான். இறுதியில் அவனிடமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கிறது. 64:4 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் அறிகின்றான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். மேலும், அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான். 64:5 எவர்கள் இதற்கு முன்பு நிராகரிக்கவும், பின்னர் தங்களுடைய செயல்களின் கெடுதல்களைச் சுவைக்கவும் செய்தார்களோ அவர்களைப் பற்றி உங்களுக்குச் செய்தி எதுவும் எட்டவில்லையா, என்ன? மேலும், துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு இருக்கின்றது. 64:6 அவர்கள் இந்தக் கதிக்கு ஆளாகக் காரணம் அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் வெளிப்படையான ஆதாரங்களைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் கூறினார்கள்: “மனிதரா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்?” இவ்விதம் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. மேலும், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். 64:7 இறந்த பின் மீண்டும் ஒருபோதும் அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரிப்பாளர்கள் மிக அழுத்தம் திருத்தமாக வாதாடுகின்றார்கள். (அவர்களிடம்) நீர் கூறும்: “இல்லை, என் அதிபதி மீது சத்தியமாக! நீங்கள் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர் (உலகில்) நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று உங்களுக்கு அறிவித்துத் தரப்படும். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதாகும்.” 64:8 எனவே, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும், நாம் இறக்கி வைத்திருக்கும் ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். 64:9 நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். ஒன்றுகூடும் நாளில் அவன் உங்கள் அனைவரையும் திரட்டும்போது (இதுபற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்துவிடும்). அந்த நாள் மக்கள், ஒருவர் மற்றவரைப் பொறுத்து வெற்றி தோல்வி பெறும் நாளாக இருக்கும். மேலும், யாரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரெனில், அவருடைய பாவங்களை அல்லாஹ் அகற்றிவிடுவான்; கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் அவர்களை நுழைவிப்பான். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே, மகத்தான வெற்றியாகும். 64:10 மேலும், யார் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். அதிலேயே அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். 64:11 ஒருபோதும் எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல்! எவரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுதலை வழங்குகின்றான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிபவனாக இருக்கின்றான். 64:12 அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். எனினும் நீங்கள் கீழ்ப்படிவதைவிட்டு முகம் திருப்பினால் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர நம்முடைய தூதரின் மீது வேறெந்தப் பொறுப்பும் இல்லை. 64:13 அல்லாஹ் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை. எனவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும். 64:14 இறைநம்பிக்கைகொண்டவர்களே! உங்களுடைய மனைவியரிலும், பிள்ளைகளிலும் சிலர் உங்கள் பகைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால் மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். 64:15 உங்களுடைய செல்வங்களும் உங்களுடைய பிள்ளைகளும் ஒரு சோதனையே! மேலும், அல்லாஹ்விடம்தான் மகத்தான கூலி உள்ளது. 64:16 எனவே, உங்களால் முடிந்தவரை அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள். மேலும், செவிதாழ்த்திக் கேளுங்கள்; கீழ்ப்படியுங்கள். மேலும், உங்கள் செல்வத்தைச் செலவு செய்யுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் உலோபித்தனத்தை விட்டு எவர்கள் விலகி இருக்கின்றார்களோ அத்தகையவர்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். 64:17 நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்குப் பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். அல்லாஹ் உரிய மதிப்பளிப்பவனாகவும், சகிப்புத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்; 64:18 மறைந்திருப்பவை மற்றும் வெளிப்படையானவை அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்; வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
அத்தியாயம்  அத்தலாக்  65 : 1-12 / 12
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
65:1 (நபியே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா* (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள். மேலும், இத்தாவின் காலத்தைச் சரியாகக் கணக்கிடுங்கள். மேலும், உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (இத்தாகாலத்தில்) அப்பெண்களை அவர்களின் இல்லங்களிலிருந்து நீங்களும் வெளியேற்ற வேண்டாம்; அவர்களாகவும் வெளியேற வேண்டாம். அவர்கள் ஏதேனும் வெளிப்படையான மானக்கேடான செயல்கள் செய்தாலே தவிர இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். யாரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவாராயின் திண்ணமாக, அவர் தனக்குத்தானே கொடுமை புரிந்து கொண்டவராவார். இதற்குப் பிறகு (ஒத்துப் போவதற்கான) ஏதேனும் சூழ்நிலையை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவது இல்லை. 65:2 அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) இறுதிக் காலகட்டத்தை எட்டிவிட்டால், அவர்களை நல்ல முறையில் (திருமண பந்தத்தில்) நீடித்து இருக்கச் செய்யுங்கள்; அல்லது நல்ல முறையில் அவர்களை விட்டுப் பிரிந்து விடுங்கள். மேலும், உங்களில் நேர்மைமிக்க இருவரைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். மேலும், (சாட்சி சொல்பவர்களே!) அல்லாஹ்வுக்காகச் சரியான முறையில் சாட்சியம் வழங்குங்கள். இவற்றின் மூலம் உங்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கப் படுகின்றது. மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். 65:3 மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். திண்ணமாக, அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான். 65:4 உங்கள் பெண்களில், எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தாகாலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே! மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான். 65:5. இது அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கும் கட்டளையாகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய தீமைகளை அவரை விட்டு அல்லாஹ் போக்கிவிடுவான். மேலும், அவருக்குப் பெரும் கூலியையும் வழங்குவான். 65:6 உங்கள் வசதி வாய்ப்புக்கேற்ப நீங்கள் எந்த இடத்தில் வசிக்கின்றீர்களோ அந்த இடத்திலேயே அவர்களை (இத்தா) காலத்தில் வசிக்கச் செய்யுங்கள். அவர்களை நெருக்கடியில் ஆழ்த்துவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பிணிகளாய் இருந்தால், குழந்தை பெற்றெடுக்கும் வரையில் அவர்களுக்கு செலவுக்குக் கொடுங்கள். மேலும் அவர்கள் உங்களுக்காக வேண்டி (குழந்தைக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய ஊதியத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். மேலும், (ஊதியம் பெறும் விஷயத்தை) உங்களுக்கிடையே பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் (நல்ல முறையில்) முடிவுசெய்து கொள்ளுங்கள். ஆயினும் (ஊதியத்தை நிர்ணயிப்பதில்) நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கடிக்கு ஆளானால், குழந்தைக்கு வேறொரு பெண் பாலூட்டிக் கொள்ளட்டும். 65:7 வசதியுள்ளவர் தம் வசதிக்கேற்ப ஜீவனாம்சம் அளிக்கட்டும். எவருக்கு வாழ்வாதாரம் குறைவாக அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர் அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் எவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கின்றானோ அதற்கு மேலாக அவர் மீது அவன் பொறுப்பு சுமத்துவதில்லை. வசதிக் குறைவுக்குப் பிறகு, அதிக வசதிவாய்ப்புகளையும் அல்லாஹ் வழங்கக்கூடும். 65:8 எத்தனையோ ஊர்கள் தங்கள் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளையை மீறிவிட்டன. எனவே நாம் அவர்களைக் கடுமையாக கேள்விக்கணக்கு கேட்டோம். மேலும், அவர்களுக்கு மோசமான தண்டனையும் அளித்தோம். 65:9 அவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவைச் சுவைத்துவிட்டார்கள். மேலும், அவர்களின் இறுதி முடிவு நஷ்டத்திலும் நஷ்டமாக இருந்தது. 65:10 அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்குக் கடும் வேதனையைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். எனவே, நம்பிக்கை கொண்டிருக்கும் அறிவுடைய மக்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் உங்கள் பக்கம் ஓர் அறிவுரையை இறக்கியுள்ளான். 65:11 அதாவது, ஒரு தூதரை! அவரோ தெளிவாக வழிகாட்டக் கூடிய இறைவசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டுகின்றார். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக! யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் சுவனங்களில் நுழைவிப்பான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மக்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் இத்தகையவருக்கு மிக அழகிய வாழ்வாதாரத்தை வைத்திருக்கின்றான். 65:12 அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
அத்தியாயம்  அத்தஹ்ரீம்  66 : 1-12 / 12
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
66:1 நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கிய பொருளை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? நீர் உம் மனைவியரின் திருப்தியை விரும்புகின்றீர் (என்பதற்காகவா?) அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான். 66:2 அல்லாஹ், நீங்கள் செய்யும் சத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித் துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன்! 66:3 (மேலும், இந்த விவகாரமும் கவனிக்கத்தக்கதாகும்:) நபி தம்முடைய ஒரு மனைவியிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். பிறகு, அந்த மனைவி அதனை (வேறொருவரிடம்) தெரிவிக்கவும் (அப்படி இரகசியம் வெளிப்பட்டதை) அல்லாஹ் நபியிடம் அறிவிக்கவும் செய்தபோது, அதில் சிலவற்றை அந்த மனைவியிடம் அவர் தெரியப்படுத்தினார். வேறு சிலவற்றைப் புறக்கணித்தார். பின்னர், (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் மனைவியிடம் தெரிவித்தபோது மனைவி கேட்டார், “தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்?” என்று! அதற்கு நபி பதிலளித்தார்: “அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்.” 66:4 நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி மீண்டால், (அது உங்களுக்கு சிறந்ததாகும்.) ஏனெனில், உங்களுடைய உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன. மேலும், இறைத்தூதருக்கு எதிராக நீங்கள் அணி சேர்ப்பீர்களானால் அறிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக, அல்லாஹ் அவருடைய பாதுகாவலனாக இருக்கின்றான். மேலும், அவனுக்கு அடுத்து ஜிப்ரீலும் சான்றோர்களான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும், அனைத்து வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாக இருக்கின்றார்கள். 66:5 நபி தம் மனைவியராகிய உங்கள் அனைவரையும் மணவிலக்கு செய்துவிடுவாராயின், உங்களுக்குப் பதிலாக உங்களை விடவும் சிறந்த மனைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கிவிடலாம். அவர்கள் வாய்மையான முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுடையோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயினும் கன்னிகளாயினும் சரியே! 66:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். 66:7 அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்வதில்லை. அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். (அப்போது கூறப்படும்:) “நிராகரிப்பாளர்களே! நீங்கள் இன்று எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்பவே உங்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்றது.” 66:8 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; தூய்மையான பாவமன்னிப்பு! விரைவில் அல்லாஹ் உங்கள் தீமைகளை உங்களைவிட்டு அகற்றவும் செய்யலாம்; மேலும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்படியான சுவனங்களில் உங்களைப் புகுத்தவும் செய்யலாம். அது எப்படிப்பட்ட நாளெனில், அன்று அல்லாஹ் தன்னுடைய தூதரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப்பக்கத்திலும் பாய்ந்து கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறிக் கொண்டிருப்பார்கள்: “எங்கள் அதிபதியே! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கித் தருவாயாக! மேலும், எங்களை மன்னிப்பாயாக! திண்ணமாக, அனைத்தின் மீதும் நீ பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றாய்!” 66:9 நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் போர்புரிவீராக! மேலும், அவர்களிடம் கடுமையாக நடப்பீராக! அவர்கள் போய்ச் சேருமிடம் நரகமாகும். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். 66:10 நூஹ் உடைய மனைவியையும் லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். எனினும், அவ்விரு வரும் தத்தம் கணவருக்கு துரோகம் செய்தனர். பிறகு, அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க இயலவில்லை (அவ்விருவரையும் நோக்கிக்) கூறப்பட்டது: “நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்.” 66:11 ஃபிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒருபோது அவர் இறைஞ்சினார்: “என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலைவிட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!” 66:12 மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம்.* மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)