அத்தியாயம்  அல்அன்ஆம்  6 : 36-110 / 165
6:36 செவியுறுபவர்கள்தாம் சத்திய அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள். இறந்து போனவர்களை அல்லாஹ் (அடக்கத் தலங்களிலிருந்து) எழுப்பியே தீருவான். பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக்காக) கொண்டு வரப்படுவார்கள். 6:37 ‘இந்த நபி மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனுமொரு சான்று இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று அவர்கள் வினவுகிறார்கள். நீர் கூறும்: “சான்றினை இறக்குவதற்கு அல்லாஹ் முழு ஆற்றல் பெற்றவன்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.” 6:38 பூமியில் வாழும் எல்லாப் பிராணிகளும், தன் இரு சிறகுகளின் துணைகொண்டு பறந்து செல்லும் எல்லாப் பறவைகளும் உங்களைப் போன்ற உயிரினங்களாகவே இருக்கின்றன (என்பதைக் கவனியுங்கள்). நாம் அவர்களைப் பற்றிப் பதிவு செய்வதில் யாதொரு குறையையும் வைக்கவில்லை. பிறகு இவர்கள் அனைவரும் தம் இறைவனிடமே ஒன்று சேர்க்கப்படுவார்கள். 6:39 ஆயினும் எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் என வாதிடுகின்றார்களோ அவர்கள் செவிடர்களாயும், ஊமையர்களாயும் இருள்களில் உழன்று கொண்டுமிருக்கின்றார்கள். தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் வழிகேட்டில் சிக்கவைக்கிறான். மேலும் தான் நாடுகின்றவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான். 6:40 இவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் பெருந் துன்பம் உங்களுக்கு வந்துவிடும்போது அல்லது உங்களுக்கு இறுதி நேரம் வந்துவிடும்போது அப்போது அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரையா அழைக்கிறீர்கள்? நீங்கள் வாய்மையுடையோராயின் சற்று சிந்தித்துக் கூறுங்கள்! 6:41 உண்மையில் நீங்கள் அல்லாஹ்வையே அழைக்கின்றீர்கள்; பிறகு எதற்காக அவனை அழைக்கின்றீர்களோ அத்துன்பத்தை அவன் நாடினால் (உங்களை விட்டு) நீக்கி விடுகின்றான். இறைவனோடு நீங்கள் இணைவைக்கும் கடவுள்களை (இத்தகைய சந்தர்ப்பங்களில்) மறந்து விடுகின்றீர்கள்.” 6:42 (நபியே!) உமக்கு முன்னரும் பல சமூகத்தாரிடம் நாம் தூதர்களை அனுப்பியிருந்தோம். மேலும், அச்சமூகத்தார் நமக்குப் பணிந்திட வேண்டும் என்பதற்காக அவர்களைத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கினோம். 6:43 ஆனால் நம்மிடமிருந்து இவர்களுக்குத் துன்பங்கள் வந்தபோது இவர்கள் ஏன் பணியவில்லை? உண்மை யாதெனில் இவர்களுடைய உள்ளங்கள் அதிகம் இறுகிவிட்டன. மேலும், இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தான். 6:44 பின்னர், அவர்களுக்கு போதிக்கப்பட்ட நல்லுரைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அருள்வளங்களின் அனைத்து வாயில்களையும் அவர்களுக்காக நாம் திறந்து விட்டோம். எதுவரையெனில், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இன்ப நலன்களில் அவர்கள் திளைத்திருந்தபோது திடீரென்று அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் முற்றிலும் நிராசை கொண்டோராய் ஆகிவிட்டனர்! 6:45 இவ்வாறு, அக்கிரமம் செய்த அச்சமுதாயத்தினர் அடியோடு வேரறுக்கப்பட்டார்கள். அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியதாகும். (அவனே அக்கிரமக்காரர்களை வேரறுத்தான்!) 6:46 (நபியே!) நீர் அவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களின் செவிப்புலனையும் பார்வைப் புலனையும் பறித்து உங்கள் இதயங்களிலும் முத்திரையிட்டுவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் இவ்வாற்றல்களை உங்களுக்குத் திரும்பத் தர முடியும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?” நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எப்படி வைக்கிறோம் என்பதையும், பிறகு அவர்கள் எவ்வாறெல்லாம் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டே செல்கின்றார்கள் என்பதையும் பாருங்கள். 6:47 “திடீரென்றோ முன்னறிவிப்புடனோ அல்லாஹ்வின் தண்டனை உங்களிடம் வந்துவிடுமாயின் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு எவரேனும் அழிக்கப்படுவார்களா? இதனை நீங்கள் எப்பொழுதேனும் சிந்தித்ததுண்டா?” என்று நீர் கேளும். 6:48 (நல்லவர்களுக்கு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீயவர்களை) எச்சரிப்பவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தூதர்களை அனுப்புகின்றோம். பிறகு எவர்கள் அத்தூதர்கள் கூறுவனவற்றை ஏற்றுக்கொண்டு, மேலும் தமது நடத்தையைத் திருத்திக்கொள்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 6:49 மேலும், நமது திருவசனங்களைப் பொய்யென்று வாதிட்டவர்கள் நமக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்து கொண்டிருந்ததன் காரணமாக தண்டனையை அனுபவித்தே தீருவார்கள். 6:50 (நபியே!) இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், மறைவானவற்றை நான் அறிகிறேன் என்றும் உங்களிடம் நான் கூறவில்லை; மேலும் நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை; என் மீது இறக்கியருளப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்.” மேலும் நீர் அவர்களிடம் கேளும்: “பார்வையுள்ளவனும் பார்வையற்றவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?” 6:51 மேலும், (நபியே!) தங்கள் இறைவன் முன்னிலையில் தாம் கொண்டு வந்து நிறுத்தப்படுவோம் என்றும், அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பாதுகாப்பு அளித்து உதவிபுரிபவரோ, பரிந்துரை செய்பவரோ வேறு யாருமில்லை என்றும் அஞ்சக்கூடிய மக்களுக்கு நீர் இந்த வஹி மூலம் அறிவுரை கூறுவீராக! (இந்த அறிவுரையால் உணர்வு பெற்று) அவர்கள் இறையச்சமுள்ள நடத்தையை மேற்கொள்ளக் கூடும். 6:52 மேலும், எவர்கள் காலையிலும் மாலையிலும் தங்களுடைய இறைவனைப் பிரார்த்தித்த வண்ணம் இருக்கின்றார்களோ, இன்னும் அவனுடைய உவப்பைத் தேடிய வண்ணம் இருக்கின்றார்களோ அவர்களை நீர் (உம்மை விட்டு) விரட்டி விடாதீர்! அவர்களுடைய கேள்வி கணக்குகளிலிருந்து எந்தச் சுமையும் உங்கள் மீதில்லை; உம்முடைய கேள்வி கணக்கிலிருந்து எந்தச் சுமையும் அவர்கள் மீதில்லை. இதன் பின்னரும் நீர் அவர்களை விரட்டி விட்டால் அக்கிரமக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர். 6:53 உண்மையில், இவ்வாறு நாம் அவர்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கியுள்ளோம். இதன் விளைவாக அவர்கள் இவர்களைப் பார்த்து, “நம்மிடையே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்கள் இவர்கள் தாமா?” என்று கூறுகின்றனர் ஆம்; தனக்கு நன்றி செலுத்துவோரை (இவர்களைவிட) அல்லாஹ் அதிகம் அறிந்தவனல்லவா? 6:54 நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடம் நீர் கூறும்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். (மேலும் அவனுடைய கருணையின் வெளிப்பாடு இது:) உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக அல்லாஹ் (அவரை) மன்னித்துவிடுகிறான்; மேலும், அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான். 6:55 மேலும், குற்றவாளிகளின் வழி இதுதான் என்று ஐயமறத் தெளிவாகிவிட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நாம் நம்முடைய சான்றுகளைத் தெள்ளத்தெளிவாய் விவரிக்கின்றோம்.” 6:56 (நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு யார் யாரையெல்லாம் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்களுக்கு அடிபணியக்கூடாது என்று நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” நீர் கூறும்: “நான் உங்களின் விருப்பங்களைப் பின்பற்ற மாட்டேன். அவ்வாறு பின்பற்றினால் நான் வழிதவறியவனாகி விடுவேன்; இன்னும் நேர்வழி அடைந்தவர்களிலும் நான் சேர முடியாது.” 6:57 நீர் கூறும்: “திண்ணமாக, நான் என்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றின் மீதே நிலைத்துள்ளேன். நீங்களோ அதனைப் பொய் எனக் கூறிவிட்டீர்கள். எது சீக்கிரம் வரவேண்டும் என்று நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைக் கொண்டு வரும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை. தீர்ப்பின் அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்குத்தான் உரியன. அவன்தான் சத்தியத்தைத் தெளிவாய் விவரிக்கின்றான். மேலும், அவன்தான் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.” 6:58 மேலும், நீர் கூறும்: “நீங்கள் எது சீக்கிரம் வரவேண்டுமென்று அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைக் கொண்டுவரும் ஆற்றல் என்னிடத்தில் இருந்திருக்குமேயானால், எனக்கும் உங்களுக்குமிடையே உள்ள விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.” ஆயினும் இத்தகைய அக்கிரமக்காரர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். 6:59 மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும், தரையிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிந்திருக்கின்றான். மரத்திலிருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையையும் அவன் அறியாமல் இல்லை. பசுமையான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிக்கப்பட்டிருக்கின்றன. 6:60 அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுகின்றான். இன்னும் நீங்கள் பகலில் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அறிகின்றான். பிறகு மறுநாள் இந்த வாழ்க்கை எனும் செயற்களத்தில் மீண்டும் உங்களை எழுப்புகின்றான்; நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைத் தவணையை நிறைவு செய்யும் பொருட்டு! இறுதியில் நீங்கள் அவனிடமே செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது பற்றி உங்களுக்கு அவன் அறிவித்துவிடுவான். 6:61 அவன் தன்னுடைய அடிமைகள் மீது பேரதிகாரம் கொண்டவனாக இருக்கின்றான். மேலும், உங்களைக் கண்காணிப்பவர்களை நியமித்து அனுப்புகின்றான். எதுவரையெனில் உங்களில் ஒருவருக்கு மரண(நேர)ம் வந்துவிட்டால் அவன் அனுப்பிய வானவர்கள் அவருடைய உயிரைக் கைப்பற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் (தமது கடமையினை நிறைவேற்றுவதில்) எவ்விதக் குறையும் வைப்பதில்லை. 6:62 பிறகு அனைவரும் தங்களின் உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! தீர்ப்பு வழங்கும் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியனவாகும். மேலும் அவன் கணக்கு வாங்குவோரில் மிக விரைவானவன். 6:63 (நபியே! நீர் இவர்களிடம்) கேளும்: “தரை மற்றும் கடலின் இருள்(களின் அபாயங்)களிலிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் யார்? (துன்பம் வரும்போது) நடுங்கியவாறும் மெதுவாகவும் யாரிடம் நீங்கள் இறைஞ்சுகின்றீர்கள்? ‘இத்துன்பங்களிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றி விட்டால் நாங்கள் நிச்சயம் நன்றி செலுத்துவோராயிருப்போம்’ என்று யாரிடம் கூறுகின்றீர்கள்?” 6:64 நீர் கூறும்: “இத்துன்பங்களில் இருந்தும் மற்றும் எல்லாவிதமான இடர்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்தான். இதற்குப் பின்னரும் நீங்கள் அவனுக்கு இணை வைக்கின்றீர்களே!” 6:65 (நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு மேலிருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்.” பாருங்கள்! அவர்கள் உண்மையை உணரும் பொருட்டு நம் சான்றுகளை எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். 6:66 (நபியே!) உம்முடைய சமுதாயத்தினர் இதனைப் பொய்யென்று வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் இதுதான் உண்மை! “நான் உங்களுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்படவில்லை” என்பதை அவர்களிடம் நீர் கூறிவிடும். 6:67 ஒவ்வொரு செய்திக்கும் (அது வெளிப்படுவதற்கென) குறிப்பிட்ட காலம் இருக்கிறது. (இறுதி முடிவு என்னவென்று) விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும். 6:68 மேலும், (நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களைவிட்டு ஒதுங்கிவிடும்! மேலும், எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்திவிட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர்! 6:69 அவர்களுடைய கேள்வி கணக்குகளில் எதற்கும் இறையச்சமுடையோர் பொறுப்பாளிகள் அல்லர். ஆயினும் அறிவுரை கூறுவது அவர்கள் மீது கடமையாகும். இதனால் அவர்கள் (அந்த மக்கள்) தவறான போக்கிலிருந்து விலகிக் கொள்ளக்கூடும். 6:70 யார் தங்களுடைய தீன் எனும் வாழ்க்கை நெறியை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை நீர் விட்டுவிடும்! உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது! ஆனால் எந்த மனிதனும் தான் செய்த தீய செயல்களின் காரணமாக துன்பத்தால் பீடிக்கப்படாமலிருக்க (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுரை கூறி (எச்சரித்து)க் கொண்டேயிருப்பீராக! அப்படி பீடிக்கப்பட்டால், அல்லாஹ்விடமிருந்து அவனுக்குப் பாதுகாப்பளித்து உதவி புரிபவரோ பரிந்துரை செய்பவரோ எவரும் இருக்க மாட்டார்கள். மேலும், (தன் கைவசத்திலுள்ள) எல்லாப் பொருள்களையும் ஈடாகச் செலுத்தி அதிலிருந்து விடுபட நாடினாலும் அதுவும் அவனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் அவர்கள், தாம் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக பீடிக்கப்பட்டிருந்தார்கள். சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால், நன்கு கொதிக்கும் நீரும், துன்புறுத்தும் வேதனையும்தான் அவர்களுக்குக் கிடைக்கும். 6:71 (நபியே!) அவர்களிடம் நீர் கேளும்: “அல்லாஹ்வை விடுத்து எங்களுக்கு நன்மையோ தீமையோ அளித்திட முடியாதவற்றிடமா நாங்கள் பிரார்த்திப்போம்? அல்லாஹ் எங்களை நேரான வழியில் செலுத்திய பிறகு முந்தைய (நிராகரிப்பு) நிலைக்கு நாங்கள் திரும்பி விடுவோமா? ஒருவருக்கு அவருடைய நண்பர்கள் நேர்வழிகாட்டி ‘எங்களிடம் வந்துவிடு!’ என அழைத்துக் கொண்டிருக்கும் போது, ஷைத்தான்கள் அவரை வழிகெடுத்து, அதன் காரணமாக பூமியில் அவர் தட்டழிந்து திரிவதைப் போன்று நாங்கள் ஆகிவிடுவோமா என்ன?” (நபியே!) நீர் கூறும்: “உண்மையில் அல்லாஹ் காட்டும் வழியே நேர்வழியாகும். அகிலமனைத்திற்கும் அதிபதியான இறைவனுக்கு நாங்கள் முற்றிலும் அடிபணிந்து வாழ வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளோம். 6:72 மேலும், தொழுகையை நிலைநிறுத்துங்கள்! அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில் நீங்கள் அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்றும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.” 6:73 வானங்களையும் பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்தவன் அவனே! மேலும், எந்நாளில் அவன் ‘ஆகுக’ என்று கூறுவானோ அந்நாளில் அது (மறுமை) ஆகிவிடும். அவனுடைய கூற்றுதான் முற்றிலும் உண்மையானது. மேலும், எந் நாளில் ‘ஸூர்’ (எக்காளம்) ஊதப்படுமோ அந்நாளில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியதாயிருக்கும். அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். மேலும், அவனே நுண்ணறிவாளனாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 6:74 மேலும், இப்ராஹீம் தம் தந்தை ஆஜரை நோக்கி, “சிலைகளையா நீங்கள் கடவுளராக்குகின்றீர்கள்? நிச்சயமாக நீங்களும், உங்களுடைய சமூகத்தாரும் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றேன்” என்று கூறிய சந்தர்ப்பத்தை நீர் நினைவுகூரும். 6:75 இவ்வாறே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியமைப்பை நாம் இப்ராஹீமுக்குக் காண்பித்துக் கொடுத்தோம்; உறுதியான நம்பிக்கையுடையோரில் ஒருவராய் அவர் திகழ வேண்டும் என்பதற்காக! 6:76 எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுதான் என்னுடைய இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, “மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன்” என்று உரைத்தார். 6:77 பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் “இதுதான் என்னுடைய இறைவன்” என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது “என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன்” என்று கூறினார். 6:78 பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது “இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது” என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, “என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். 6:79 வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்” என்று கூறினார். 6:80 மேலும், அவருடைய சமூகத்தார் அவரிடம் தர்க்கம் செய்தபோது அவர் (தம் சமூகத்தாரை நோக்கி) கூறினார்: “திண்ணமாக அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருக்க, அவனைப் பற்றியா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? மேலும், எவற்றை நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றீர்களோ அவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன். என் இறைவன் நாடினால்தான் எது ஒன்றும் நிகழ முடியும். என் இறைவனின் ஞானம் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? 6:81 எவற்றைக் குறித்து (இவை இறைமையில் கூட்டானவைதாம் என்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திடவில்லையோ அவற்றை அவனுக்கு இணையாக்க நீங்கள் அஞ்சாதபோது நீங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட கடவுளருக்கு நான் எப்படி அஞ்சுவேன்? எனவே, நம் இரு கூட்டத்தாரில் அச்சமற்று வாழ்வதற்கு அதிகம் தகுதியுடையோர் யார்? நீங்கள் அறிவுடையோராயின் இதற்குப் பதில் தாருங்கள்! 6:82 எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையை இணை வைப்பு எனும் அநீதியால் மாசுபடுத்தவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவார்கள்.” 6:83 மேலும், இப்ராஹீம் தம்முடைய சமூகத்தாருக்கு எதிராக வாதம் புரிய நாம் அவருக்கு வழங்கிய ஆதாரங்கள் இவைதாம்! நாம் நாடுகின்றவர்களுக்கு உயர்ந்த படித்தரங்களை வழங்குகின்றோம். நிச்சயமாக உம்முடைய இறைவன் நுண்ணறிவாளனும், பேரறிவாளனும் ஆவான். 6:84 பிறகு நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக், யஃகூப் போன்ற வழித்தோன்றல்களையும் வழங்கினோம். மேலும், ஒவ்வொருவருக்கும் நேர்வழி காட்டினோம். (எத்தகைய வழி எனில்) அதற்கு முன்பு நூஹுக்கும் (அந்த) நேர்வழியினைக் காட்டியிருந்தோம். மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றலைச் சேர்ந்த தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு நாம் நல்லவர்களுக்கு (அவர்களுடைய நற்செயல்களுக்காக) கூலி வழங்குகின்றோம். 6:85 மேலும் (அவருடைய வழித்தோன்றலைச் சேர்ந்த) ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோருக்கும் (நாம் நேர்வழி காட்டினோம்.) அவர்கள் ஒவ்வொருவரும் உத்தமர்களாய் இருந்தார்கள். 6:86 (அவருடைய பாரம்பரியத்தில்) இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அகிலத்தார் அனைவரையும்விட மேலான சிறப்பினை வழங்கினோம். 6:87 மேலும், அவர்களின் மூதாதையர், வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களின் சகோதரர்கள் ஆகியோரில் எத்தனையோ பேருக்கு நாம் (நற்பேற்றினை) வழங்கினோம்! நமது பணிகளுக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேரிய வழியில் செலுத்தினோம். 6:88 இது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலாகும். தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு இதன் மூலம் அவன் வழிகாட்டுகின்றான். ஆனால், அவர்கள் இறைவனுக்கு இணை வைத்திருப்பார்களாயின் அவர்கள் செய்தவை யாவும் வீணாகிப் போயிருக்கும். 6:89 இவர்களுக்குத்தாம் நாம் வேதத்தையும், ஞானத்தையும், தூதுத்துவத்தையும் வழங்கியிருந்தோம். இனி (மக்காவாசிகளான) இம்மக்கள் இந்த அருட்கொடையை ஏற்க மறுப்பார்களாயின் (மறுத்துவிட்டுப் போகட்டும்!) நாம் இந்த அருட்கொடையை வேறு மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர்களோ அதனை மறுப்பவர்களாக இல்லை. 6:90 (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே (நபியே, நீரும்) பின்பற்றிச் செல்வீராக! “நான் இந்த (அழைப்புப்) பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லை” என்று கூறுவீராக! இது அகிலத்தார் அனைவர்க்கும் உரிய ஓர் அறிவுரையே ஆகும். 6:91 அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை. அதனால்தான் “அல்லாஹ் எந்த மனிதன் மீதும் எதனையும் இறக்கிடவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். “மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்?” என்று அவர்களிடத்தில் நீர் கேளும்! அதுவோ மனிதர்களுக்கு ஒளியாகவும், நேர்வழியாகவும் திகழ்ந்தது. அதனை நீங்கள் பகுதி பகுதிகளாய்ப் பிரித்து அதில் சிலவற்றை வெளிப்படுத்துகின்றீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்து விடுகின்றீர்கள். மேலும், நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும் அறிந்திராதவையெல்லாம் எதன் மூலம் உங்களுக்குப் புகட்டப்பட்டதோ அதனை இறக்கியவன் யார்? “அல்லாஹ்தான்” என்று கூறுவீராக! அவர்களைத் தங்களின் வீண் விவாதங்களிலேயே விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக! 6:92 (அந்த வேதத்தைப் போன்றே) இதுவும் ஒரு வேதமாகும். இதனை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். இது அருள்வள மிக்கதாகவும், தனக்கு முன்னால் வந்த வேதத்தை மெய்ப்படுத்துவதாகவும் இருக்கின்றது. மேலும், இத்தலைநகரத்திலும் (மக்காவிலும்) அதன் சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் இது அருளப்பட்டுள்ளது. மேலும், எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் நம்புவார்கள்; தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள். 6:93 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தனக்கு வஹி வராத நிலையில் தனக்கு வஹி வருவதாகச் சொல்பவனைவிட மேலும், அல்லாஹ் இறக்கி வைத்தது போன்று (அதற்குப் போட்டியாக) நானும் இறக்கிக் காண்பிப்பேன் என்று பிதற்றுபவனைவிடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? அந்தோ! இந்த அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் சிக்கியிருக்கும்போது நீர் பார்க்க வேண்டும்! மேலும், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டியவாறு “உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள்; அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பானவற்றை நீங்கள் கூறிக் கொண்டிருந்ததாலும், அவனுடைய வசனங்களைப் புறக்கணித்து நீங்கள் ஆணவங் கொண்டிருந்ததாலும் இன்று உங்களுக்கு இழிவு மிக்க வேதனை கூலியாகத் தரப்படுகின்றது” (என்று கூறுவார்கள்). 6:94 மேலும், (அல்லாஹ் கூறுவான்:) நாம் முதன் முதலில் உங்களைப் படைத்தது போன்று நீங்கள் இப்போது தன்னந்தனியாக எம்மிடம் வந்துவிட்டீர்கள். நாம் உலகில் உங்களுக்கு வழங்கியவை அனைத்தையும் உங்களுக்குப் பின்னால் விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய செயல்களை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வுக்கு இணையாக யார் யாரையெல்லாம் நீங்கள் கருதி வந்தீர்களோ அத்தகைய உங்கள் பரிந்துரையாளர்களையும் இப்போது உங்களுடன் காணவில்லையே! உங்களுக்கிடையில் இருந்த அனைத்துத் தொடர்புகளும் முறிந்துவிட்டன! மேலும் (உங்களுக்கு உதவுவார்கள் என்று) நீங்கள் கருதி வந்த அனைவரும் உங்களை விட்டுக் காணாமல் போய்விட்டார்கள். 6:95 திண்ணமாக, விதையையும், கொட்டையையும் வெடிக்கச் செய்பவன் அல்லாஹ்தான்! உயிரில்லாததிலிருந்து உயிருள்ளதையும் அவனே வெளிக்கொணர்கிறான். மேலும், உயிருள்ளதிலிருந்து உயிரில்லாததை வெளிப்படுத்துபவனும் அவனே! இப்பணிகள் அனைத்தையும் செய்கின்றவன் அல்லாஹ்தான்! இதற்குப் பிறகும் நீங்கள் எங்கே வழிமாறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள்? 6:96 (இரவை அகற்றி) வைகறைப் பொழுதை வெளிப்படுத்துபவனும் அவனே! இரவை அமைதி பெறும் நேரமாக அமைத்தவனும் அவனே! சூரியன், சந்திரனுடைய (உதயம், மறைவு ஆகியவற்றின்) கணக்கினை வரையறுத்தவனும் அவனே! இது பேரறிவு கொண்டவனும், வல்லமை மிக்கவனுமான இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும். 6:97 அவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான்; அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக! திண்ணமாக, அறிவாற்றல் கொண்ட சமுதாயத்தினர்க்கு நாம் சான்றுகளை விவரித்துக் கூறிவிட்டோம். 6:98 மேலும் அவனே ஓருயிரில் இருந்து உங்களைப் படைத்தான். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு தங்குமிடமும் இருக்கிறது; ஒப்படைக்கப்படும் இடமும் இருக்கிறது. புரிந்து கொள்ளும் சமூகத்தினர்க்கு இத்தகைய சான்றுகளையெல்லாம் நாம் விளக்கிக் கூறிவிட்டோம். 6:99 மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தவன் அவனே! அதன் வாயிலாக எல்லாவிதமான தாவரங்களையும் வெளியாக்கினோம். பின்னர் அதிலிருந்து பசுமையான பயிர்களை உருவாக்கி, அவற்றிலிருந்து அடர்த்தியான தானியமணிகளை வெளிப்படுத்தினோம். மேலும், பேரீச்ச மரத்தின் பாளையிலிருந்து சுமை தாளாமல் தொங்கிக் கொண்டிருக்கும் பழக்குலைகளையும் வெளிப்படுத்தினோம். ஒன்றோடொன்று ஒப்பானவையாகவும் (அதே நேரத்தில்) தனித்தன்மைகளும் கொண்ட திராட்சை, ஜைத்தூன் (ஒலிவம்), மாதுளை ஆகியவற்றின் தோட்டங்களையும் அமைத்திருக்கின்றோம். இவை பருவகாலத்தில் எவ்வாறு கனிகின்றன என்பதனைச் சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்! இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்குத் திண்ணமாக இவற்றில் பல சான்றுகள் உள்ளன. 6:100 இருந்தும் மக்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கி விட்டார்கள். உண்மை யாதெனில், அவன்தான் அந்த ஜின்களைப் படைத்தவன். மேலும், அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வுக்கு ஆண்மக்களும், பெண்மக்களும் இருப்பதாகப் புனைந்து கூறுகிறார்கள். ஆனால் அவனோ தூய்மையானவன்; மேலும், இவ்வாறு அவர்கள் புனைந்து கூறுபவற்றிலிருந்து அல்லாஹ் உயர்ந்தவனாவான். 6:101 வானங்களையும் பூமியையும், முன்மாதிரியின்றிப் படைத்தவன் அவனே! அவனுக்கு மனைவியே இல்லாதபோது குழந்தை எப்படி இருக்க முடியும்? அவனே ஒவ்வொன்றையும் படைத்திருக்கின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கிறான். 6:102 அவன்தான் உங்களைப் படைத்து, பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அவனே! எனவே நீங்கள் அவனுக்கே அடிபணியுங்கள்! அவன் எல்லாவற்றிற்கும் பொறுப்பாளனாக இருக்கிறான். 6:103 பார்வைகளால் அவனைப் பார்த்திட முடியாது. அவனோ எல்லாப் பார்வைகளையும் அறிந்து கொள்கின்றான். அவன் நுட்பமானவனும், எல்லாம் தெரிந்தவனுமாயிருக்கின்றான். 6:104 (பாருங்கள்:) உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்திருக்கின்றன. இனி, எவர் கண்ணை விழித்துப் பார்த்து செயல்படுகின்றாரோ அவர் தமக்கே நன்மை செய்து கொண்டவராவார். மேலும், எவர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகின்றாரோ அவர் தமக்கே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவராவார். மேலும், நான் உங்களைப் பாதுகாப்பவனல்லன். 6:105 இவ்வாறு நாம் நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் (பல்வேறு முறைகளில்) விவரிக்கின்றோம். மேலும், “நீர் யாரிடமிருந்தோ கற்றுக்கொண்டு வந்திருக்கிறீர்!” என்று அவர்கள் கூறிவிடுவார்கள் என்பதற்காகவும், அறிவுடைய மக்களுக்கு நாம் உண்மையினைத் தெளிவுபடுத்துவதற்காகவும்தான் (இவ்வாறு விவரிக்கின்றோம்.) 6:106 (நபியே!) உம்முடைய அதிபதியிடமிருந்து உமக்கு அருளப்படுகின்ற வஹியைப் பின்பற்றி நடப்பீராக! அந்த அதிபதியைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும், இறைவனுக்கு இணை வைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக! 6:107 அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அவனுக்கு இணை வைத்திருக்கமாட்டார்கள். (அத்தகைய ஏற்பாட்டை அவனே செய்திருப்பான்.) நாம் உம்மை அவர்களின் பாதுகாவலராக நியமிக்கவில்லை. மேலும், நீர் அவர்களின் பொறுப்பாளருமல்லர். 6:108 மேலும் (முஸ்லிம்களே!) அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! பிறகு அவர்கள் அறியாமையினால், எல்லைமீறி அல்லாஹ்வையே திட்ட ஆரம்பித்து விடுவார்கள். நாம் இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவருடைய செயலை அழகாக்கியிருக்கின்றோம். பிறகு அவர்கள் தம் இறைவனிடமே திரும்பி வரவேண்டியதிருக்கிறது. அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அவர்களுக்கு அவன் அறிவித்துவிடுவான். 6:109 அவர்கள் அல்லாஹ்வின் மீது அழுத்தமான சத்தியங்கள் செய்து “எங்களிடம் ஏதேனும் சான்று (முஃஜிஸா) வந்துவிட்டால் நிச்சயம் அதன்மீது நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகின்றார்கள். (நபியே!) அவர்களிடம் கூறும்: சான்றுகள் அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளன! மேலும், சான்றுகள் வந்துவிட்டாலும்கூட அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது? 6:110 ஆரம்பத்தில் அவர்கள் இவ்வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது போன்று (இப்போதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்காக) அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் நாம் திருப்புகின்றோம். மேலும், அவர்களை வரம்பு மீறிய போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு நாம் விட்டு விடுகின்றோம்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)