அத்தியாயம்  அல் முஜாதலா  58 : 1-22 / 22
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
58:1 தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும், அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். உங்கள் இருவரின் உரையாடலை அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான். 58:2 உங்களில் எவர்கள் தம்முடைய மனைவியரை ‘ளிஹார்’* செய்கின்றார்களோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகிவிடமாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவர்களே அவர்களின் அன்னையர் ஆவர். அவர்கள் கடும் வெறுப்புக்குரிய, பொய்யான சொல்லைக் கூறுகின்றார்கள். மேலும், உண்மை யாதெனில், அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 58:3 எவர்கள் தங்களுடைய மனைவியரை ‘ளிஹார்’ செய்து பின்னர், தாங்கள் கூறிய சொல்லைவிட்டுத் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீண்டும் முன்பாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உங்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. மேலும், நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான். 58:4 இனி, எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லையானால், அவ்விருவரும் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கும் சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகின்றது என்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்! இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும், நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது. 58:5 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்; அவர்களுக்கு முன்பிருந்தவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்பட்டதைப் போன்று! நாம் தெள்ளத் தெளிவான சான்றுகளை இறக்கிவிட்டோம். இனி, நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை இருக்கின்றது. 58:6 அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்கள் என்னவெல்லாம் செய்துவிட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நாளில் (இந்த இழிவுமிக்க வேதனை கிட்டும்.) அவர்கள் மறந்து போய்விட்டனர். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் எண்ணி எண்ணி பாதுகாத்து வைத்திருக்கின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாகவும் இருக்கின்றான். 58:7 வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா, என்ன? மூன்று மனிதர்களிடையே இரகசியப் பேச்சுவார்த்தை எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர்களிடையே இரகசியப் பேச்சு எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ் இருந்தே தவிர! இரகசிய பேச்சுக்களைப் பேசுவோர் இதனைவிடக் குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். பின்னர், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கின்றார்கள் என்பதை அவன் மறுமைநாளில் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். 58:8 எவர்கள் இரகசியப் பேச்சுகள் பேசுவதைவிட்டுத் தடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்கின்றார்கள். மேலும், இவர்கள் தங்களிடையே ஒளிந்து ஒளிந்து பாவமான வரம்பு மீறுகின்ற, தூதருக்கு மாறு செய்கின்ற பேச்சுகளையே பேசுகின்றார்கள். மேலும், இவர்கள் உம்மிடம் வரும்போது எந்த முறையில் அல்லாஹ் உமக்கு வாழ்த்து (ஸலாம்) கூறவில்லையோ அந்த முறையில் இவர்கள் உமக்கு ஸலாம் சொல்கின்றார்கள். மேலும், தங்களுடைய உள்ளங்களில் கூறிக்கொள்கின்றார்கள்: “நம்முடைய இந்தப் பேச்சுகளுக்காக அல்லாஹ் நமக்கு ஏன் தண்டனை தருவதில்லை?” அவர்களுக்கு நரகமே போதுமானது! அதற்கே அவர்கள் எரிபொருளாகுவார்கள். அவர்களின் கதி எத்துணைத் தீயது! 58:9 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உங்களுக்குள் இரகசியம் பேசுவீர்களாயின் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள்; மாறாக, நன்மையானதும் இறையச்சமுடையதுமான பேச்சுகளையே பேசுங்கள்! மேலும், எந்த இறைவன் முன்னிலையில் நீங்கள் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சியவாறு இருங்கள். 58:10 கிசுகிசுப்பது ஷைத்தானியச் செயலாகும். இறைநம்பிக்கை கொண்டோரை மனம் நோகச் செய்வதற்காகத்தான் அது செய்யப்படுகின்றது. ஆயினும், இறைவனின் அனுமதியின்றி அதனால் அவர்களுக்குச் சிறிதும் நஷ்டம் ஏற்படுத்த முடியாது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும். 58:11 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அவைகளில் நகர்ந்து இடம் ஏற்படுத்திக் கொடுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால், இடம் ஏற்படுத்திக் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருவான். மேலும், “எழுந்து செல்லுங்கள்!” என உங்களிடம் சொல்லப்பட்டால், எழுந்து செல்லுங்கள். உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும், எவர்கள் ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான். 58:12 இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் தனிமையில் பேசுவதாயின் அவ்வாறு பேசுவதற்கு முன் சிறிது தானதர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும் மிகத் தூய்மையானதுமாகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் உங்களிடம் இல்லையென்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். 58:13 தனிமையில் உரையாடுவதற்கு முன் தான தர்மங்கள் வழங்க வேண்டியிருக்குமே என்று நீங்கள் பயந்துவிட்டீர்களா? பரவாயில்லை. நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் அதற்காக அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் நீங்கள் தொழுகையை நிலைநாட்டிக் கொண்டும் ஜகாத்தைக் கொடுத்துக் கொண்டும் இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழுங்கள். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 58:14 அல்லாஹ்வின் சினத்திற்குள்ளான ஒரு கூட்டத்தாருடன் தோழமை பாராட்டியவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்; அவர்களைச் சார்ந்தவர்களும் அல்லர். மேலும் அவர்கள் அறிந்துகொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றார்கள். 58:15 அல்லாஹ் அவர்களுக்குக் கடும்வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அவர்கள் செய்து கொண்டிருப்பவை மிகவும் தீயசெயல்களே! 58:16 அவர்கள் தங்களுடைய சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுக்கின்றார்கள். இதற்காக அவர்களுக்கு இழிவுதரும் வேதனை இருக்கின்றது. 58:17 அவர்களின் செல்வங்களும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவாது; அவர்களின் பிள்ளைகளும் உதவ மாட்டார்கள். அவர்கள் நரகத்தின் தோழர்கள்! அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 58:18 எந்நாளில் அல்லாஹ், அவர்கள் அனைவரையும் உயிர்கொடுத்து எழுப்புவானோ அந்நாளில் அவனது திருமுன் சத்தியம் செய்வார்கள் உங்கள் முன் சத்தியம் செய்வது போல்! அதனால் தங்களுக்குச் சிறிது பயன் கிடைக்குமென்றும் எண்ணிக் கொள்வார்கள். நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெரும் பொய்யர்கள். 58:19 ஷைத்தான் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்திவிட்டான்; இறைவனைப் பற்றிய நினைப்பை அவர்களின் உள்ளங்களிலிருந்து மறக்கடித்து விட்டான். அவர்கள் ஷைத்தானுடைய கட்சியினராவர். தெரிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய கட்சியினர்தாம் நஷ்டம் அடையக் கூடியவர்கள். 58:20 எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் திண்ணமாக, மிகவும் கேவலமான படைப்பினங்களைச் சேர்ந்தவர்களாவர். 58:21 நானும் என்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்லுவோம் என்று அல்லாஹ் எழுதிவிட்டான். உண்மையில், அல்லாஹ் பேராற்றல் உடையோனும் வலிமைமிக்கோனுமாய் இருக்கின்றான். 58:22 அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர்! அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்து வைத்துவிட்டான். மேலும், தன் சார்பிலிருந்து ரூஹை* வழங்கி அவர்களுக்கு வலிமை சேர்த்தான். மேலும், கீழே ஆறுகள் ஓடும் சுவனங்களில் அவன் அவர்களைப் புகச் செய்வான். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்சியினராவர். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் கட்சியினர்தாம் வெற்றி அடையக்கூடியவர்கள்.
அத்தியாயம்  அல் ஹஷ்ர்  59 : 1-24 / 24
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
59:1 வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வையே துதி செய்து கொண்டிருக்கிறது. மேலும், அவனே யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 59:2 அவனே வேதம் வழங்கப்பட்டவர்களில் நிராகரிப்பாளர்களாய் இருந்தவர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பிலேயே வெளியேற்றினான். அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தங்களின் கோட்டைகள், அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றிவிடும் என்று அவர்களும் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திராத புறத்திலிருந்து அல்லாஹ் அவர்கள் மீது வந்தான். அவன் அவர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விட்டான். (பிறகு ஏற்பட்ட விளைவு இதுவே:) அவர்கள் தங்களுடைய கைகளைக் கொண்டே தங்களின் இல்லங்களை அழித்துக் கொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் கைகளைக் கொண்டும் அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, பார்க்கும் கண்கள் உடையீர் படிப்பினை பெறுவீர். 59:3 அல்லாஹ் அவர்கள் மீது நாடுகடத்தலை விதித்திராவிடில் உலகிலேயே அவர்களுக்கு வேதனை அளித்திருப்பான். மறுமையிலோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கவே செய்கிறது. 59:4 இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்ததுதான். மேலும், அல்லாஹ்வை யார் எதிர்ப்பினும் திண்ணமாக, அல்லாஹ் (அவர்களுக்குத்) தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான். 59:5 நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்.) 59:6 மேலும், அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து, தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும், ஒட்டகங்களையும் நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிட்டியதல்ல. மாறாக, அல்லாஹ் தான் நாடுபவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். 59:7 ஊர்வாசிகளிடமிருந்து தன் தூதரின் பக்கம் அல்லாஹ் திருப்பியவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் சேரக்கூடியவை ஆகும். ஏனெனில் அது உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக! இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுந்தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான். 59:8 (மேலும், அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்*களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது உவப்பையும் விரும்புகின்றார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கின்றார்கள். இவர்களே, வாய்மையுள்ள மக்களாவர். மேலும் (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத்* செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானதே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. 59:9 மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர். 59:10 மேலும், இந்த முன்னோடிகளுக்குப் பிறகு வருகின்ற மக்களுக்கு (உரியதாகும் அந்தச் செல்வம்!) அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் அதிபதியே! எங்களையும் எங்களைவிட முந்தி நம்பிக்கை கொண்டு விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களின் பேரில் எந்தக் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் அதிபதியே! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்!” 59:11 நயவஞ்சகத்தனமான நடத்தையை மேற்கொண்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? இவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறைநிராகரிப்பாளர்களாய் உள்ள தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்றார்கள்: “நீங்கள் வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விவகாரத்தில் நாங்கள் எவருடைய பேச்சையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உங்களின்மீது போர் தொடுக்கப்பட்டால் நாங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வோம்!” ஆனால், இவர்கள் சுத்தப்பொய்யர்கள் என்பதற்கு இறைவன் சாட்சியாக இருக்கின்றான். 59:12 அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள். மேலும், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால், இவர்கள் அவர்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யச் சென்றாலும்கூட புறமுதுகு காட்டிக் கொண்டு ஓடிவிடுவார்கள். பிறகு, எங்கிருந்தும் எந்த உதவியும் அவர்கள் பெறமாட்டார்கள். 59:13 இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைவிட, உங்களுடைய அச்சமே அதிகமாக உள்ளது. ஏனெனில், இவர்கள் ஒன்றும் புரியாத மக்களாய் இருக்கின்றார்கள். 59:14 இவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு (திறந்த மைதானத்தில்) ஒருபோதும் உங்களுடன் போரிட மாட்டார்கள். போரிட்டாலும் அரண்களுடைய ஊர்களினுள் அமர்ந்து கொண்டோ, சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டோதான் போரிடுவார்கள். அவர்கள் தங்களுக்கிடையே மோதிக் கொள்வதில் கடுமையாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் கருதுகின்றீர். ஆனால், இவர்களுடைய இதயங்கள் சிதறிக் கிடக்கின்றன. இவர்கள் இந்நிலைக்கு ஆளானதன் காரணம், இவர்கள் சிந்திக்காத மக்களாய் இருப்பதுதான்! 59:15 இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்பு தம் செயல்களின் தீயவிளைவை சுவைத்து விட்டிருந்த மக்களைப் போன்றுதான் இவர்களும் இருக்கின்றனர். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது. 59:16 இவர்கள் ஷைத்தானுக்கு ஒப்பாக இருக்கின்றார்கள். அவன் ‘நிராகரித்து விடு!’ என்று முதலில் மனிதனிடம் கூறுகின்றான். அதன்படி மனிதன் நிராகரித்துவிடுகிறபோது ஷைத்தான் கூறுகின்றான்: “நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். அகிலமனைத்திற்கும் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று! 59:17 பிறகு, நிரந்தரமாக நரகத்தில் வீழ்ந்து கிடப்பதே இருவரின் கதியாகும். மேலும், கொடுமைக்காரர்களின் கூலி இதுவேயாகும். 59:18 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான். 59:19 எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அதனால், அவர்கள் தங்களையே மறந்துவிடும்படி அல்லாஹ் செய்துவிட்டான். இவர்கள்தாம் பாவிகளாவர். 59:20 நரகத்திற்குச் செல்பவர்களும், சுவர்க்கத்திற்குச் செல்பவர்களும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்! சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள்தாம் உண்மையில் வெற்றியாளர்கள்! 59:21 நாம் இந்தக் குர்ஆனை ஏதேனும் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது பணிவுள்ளதாகவும், அல்லாஹ்வின் அச்சத்தால் அது பிளந்துபோவதாகவும் நீர் கண்டிருப்பீர்! நாம், இந்த உதாரணங்களை மக்கள் முன் விளக்கிக் கூறுவது, அவர்கள் (தங்களின் நிலைமையைப் பற்றிச்) சிந்திக்கட்டும் என்பதற்காகத்தான்! 59:22 அவன்தான் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறெவரும் இல்லை. அவன் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அறிபவன். அவன் அளவிலாக் கருணையும் இணையிலாக்கிருபையும் உடையவன். 59:23 அவன்தான் அல்லாஹ்! அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. அவன்தான் அரசன்; மிகவும் தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன்; அமைதி அளிப்பவன்; பாதுகாவலன்; அனைவரையும் மிகைத்தவன்; தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்; பெருமைக்குரியவன். தூய்மையானவன் அல்லாஹ், மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு! 59:24 அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான். அவனுக்கு மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றான்.
அத்தியாயம்  அல் மும்தஹினா  60 : 1-13 / 13
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
60:1 இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் என் வழியில் அறப்போர் செய்வதற்காகவும், எனது உவப்பைப் பெறுவதற்காகவும் (தாயகத்தைத் துறந்து இல்லங்களை விட்டு) வெளியேறி இருந்தால், எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களுடன் நட்புறவு வைக்கின்றீர்கள். ஆனால், அவர்களோ உங்களிடம் வந்துள்ள சத்தியத்தை ஏற்க மறுத்துவிட்டிருக்கிறார்கள். மேலும், அவர்களின் நடத்தை இதுவே: இறைத்தூதரையும் உங்களையும், நீங்கள் உங்கள் அதிபதியாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள் எனும் தவறுக்காக நாடுகடத்துகின்றார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்கு இரகசியமாக நட்புத்தூதை அனுப்புகிறீர்கள். ஆயினும், நீங்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறிகின்றேன். உங்களில் யாரேனும் இவ்வாறு செய்தால், திண்ணமாக அவர் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்தவராவார். 60:2 (மேலும் அவர்கள் நடத்தை இதுவே:) உங்களை தங்களின் பிடியில் அவர்கள் கொண்டு வந்து விடுவார்களானால் உங்களுடன் பகைமை கொள்கின்றார்கள். மேலும், அவர்கள் தம்முடைய கையாலும், நாவாலும் உங்களுக்குத் தொல்லை தருகின்றார்கள். நீங்கள் எப்படியேனும் நிராகரிப்பாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். 60:3 மறுமைநாளில் உங்களுடைய இரத்த பந்த உறவினர்களோ, உங்களுடைய பிள்ளைகளோ உங்களுக்குப் பயனளிக்க மாட்டார்கள். (அந்நாளில்) அல்லாஹ் உங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவான். மேலும், அல்லாஹ்தான் உங்கள் செயல்களைப் பார்ப்பவனாக இருக்கின்றான். 60:4 உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் தெளிவாகக் கூறிவிட்டார்கள்: “உங்களை விட்டும், இறைவனை விடுத்து நீங்கள் வணங்குகின்ற கடவுளரை விட்டும் நாங்கள் திண்ணமாக விலகிவிட்டோம். நாங்கள் உங்களை நிராகரித்து விட்டோம். மேலும், உங்களுக்கும் எங்களுக்குமிடையே நிரந்தரப் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டன; ஏக அல்லாஹ்வின் மீது மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில்!” ஆனால் இப்ராஹீம் தன் தந்தையிடம் இவ்வாறு கூறியது (விதிவிலக்கானது): “நான் உங்களுக்காக நிச்சயம் பாவமன்னிப்புக் கோருவேன். மேலும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக எதையும் பெற்றுத்தருவது என் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல.” (இப்ராஹீமும் அவருடைய தோழர்களும் இவ்வாறு இறைஞ்சினார்கள்:) “எங்கள் அதிபதியே! உன்னையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். உன் பக்கமே நாங்கள் மீண்டுவிட்டோம். உனது திருச்சமூகத்திற்கே நாங்கள் திரும்பிவரவேண்டி இருக்கின்றது. எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே! 60:5 எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.” 60:6 அதே மக்களுடைய நடத்தையில் உங்களுக்கும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்ற ஒவ்வொருவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. எவரேனும் இதனைப் புறக்கணித்தால், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். 60:7 உங்களுக்கும், நீங்கள் (இன்று) யாருடன் பகைமை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் என்றைக்கேனும் அன்பை ஏற்படுத்தக்கூடும். அல்லாஹ் பேராற்றலுடையவன்; மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். 60:8 தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். 60:9 அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார்களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ மேலும், உங்களை வெளியேற்றுவதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான்! அவர்களுடன் எவரேனும் நட்பு கொண்டால் அவர்களே கொடுமையாளர்கள் ஆவர். 60:10 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கையுடைய பெண்கள் நாடு துறந்து உங்களிடம் வந்தார்களாயின் (அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதனைச்) சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய நம்பிக்கையின் உண்மைநிலையை அல்லாஹ்தான் நன்கறிவான். மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியாக இருக்க) ஆகுமானவர்களல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு ஆகுமானவர்கள் அல்லர். அவர்களுடைய (நிராகரிப்பாளர்களான) கணவன்மார்கள் அவர்களுக்கு அளித்திருந்த மஹ்ரை* அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மேலும், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, நீங்கள் அவர்களுக்குரிய மஹ்ரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால்! மேலும், இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள். நிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களிடம் திரும்பக்கேளுங்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் தங்களின் முஸ்லிமான மனைவிமார்களுக்குக் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களும் திரும்பக் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். 60:11 மேலும், இறைநிராகரிப்பாளர்களான உங்களுடைய மனைவிமார்களின் மஹ்ரில் சிறிதளவு நிராகரிப்பாளர்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பக் கிடைக்கவில்லையாயின், பின்னர் உங்கள் முறை வரும்போது உங்களில் யாருடைய மனைவிமார்கள் அங்கே சென்று விட்டார்களோ, அந்தக் கணவன்மார்களுக்கு கொடுத்துவிடுங்கள் அவர்கள் வழங்கிய மஹ்ருக்குச் சமமான தொகையை! மேலும், எந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அவனுக்கு அஞ்சி வாழுங்கள். 60:12 நபியே! இறைநம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும் தங்களுடைய கைகால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நல்ல காரியத்திலும் உமக்கு மாறு செய்யமாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப்பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணைபுரிபவனுமாய் இருக்கின்றான். 60:13. இறைநம்பிக்கைகொண்டவர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கின்றானோ அந்த மக்களுடன் நீங்கள் நட்புக்கொள்ளாதீர்கள். மறுமை குறித்து அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்; மண்ணறைகளில் அடங்கி விட்டிருக்கும் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கை இழந்திருப்பது போலவே!
அத்தியாயம்  அஸ்ஸஃப்  61 : 1-14 / 14
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
61:1 வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தோன்; நுண்ணறிவாளன்! 61:2 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? 61:3 நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும். 61:4 எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போர்புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். 61:5 மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூக மக்களே! எனக்கு ஏன் துன்பம் அளிக்கின்றீர்கள்? நான் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக அனுப்பப்பட்ட தூதராவேன் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள்.” பின்னர் அவர்கள் கோணல் வழியை மேற்கொண்டபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களைக் கோணலாக்கிவிட்டான். மேலும், பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 61:6 மர்யத்தின் குமாரர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள ‘தவ்ராத்’ வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றேன். மேலும், எனக்குப் பிறகு அஹமத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கின்றேன்.” எனினும் அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, இது வெளிப்படையான மோசடி என்று அவர்கள் கூறினார்கள். 61:7 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்பவனைவிட கொடுமைக்காரன் வேறு யார்? அதுவும் இஸ்லாத்தின் பக்கம் (முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் பக்கம்) வருமாறு அவனுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில்! இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 61:8 இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும்; இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! 61:9 அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! 61:10 இறைநம்பிக்கைகொண்டவர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? 61:11 அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத்* செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். 61:12 அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், தோட்டங்களில் உங்களை நுழையச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிலைத்திருக்கும் சுவனங்களில் மிகச்சிறந்த இல்லங்களையும் உங்களுக்கு வழங்குவான். இதுவே மகத்தான வெற்றியாகும். 61:13 மேலும், நீங்கள் விரும்பும் இன்னொன்றையும் உங்களுக்கு நல்குவான். அல்லாஹ்விடமிருந்து கிட்டும் உதவியும் அண்மையிலேயே கிடைக்கவிருக்கும் வெற்றியுமாகும் அது! (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்துவிடும். 61:14 இறைநம்பிக்கையாளர்களே மர்யத்தின் குமாரர் ஈஸா தம் சீடர்களை நோக்கி, “இறைவனின்பால் அழைப்பதில் எனக்கு உதவிபுரிபவர் யார்?” எனக் கேட்டபோது, “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளராக இருக்கின்றோம்” என சீடர்கள் மறுமொழி அளித்ததைப்போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளராகத் திகழுங்கள். அப்போது இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்துவிட்டார்கள். பின்னர், நாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவருக்கெதிராக உதவி நல்கினோம். மேலும் அவர்களே வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தார்கள்!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)