அத்தியாயம்  அர் ரஹ்மான்  55 : 1-78 / 78
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
55:1 அளவிலாக் கருணையுள்ள (இறை)வன் 55:2 இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான். 55:3 அவனே மனிதனைப் படைத்தான்; 55:4 அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான். 55:5 சூரியனும், சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. 55:6 மேலும், நட்சத்திரங்கள், மரங்கள் ஆகிய அனைத்தும் சிரம்பணிந்து கொண்டிருக்கின்றன. 55:7 அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலைநாட்டினான், 55:8 நீங்கள் தராசில் நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக! 55:9 மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்! 55:10 பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான். 55:11 அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரீத்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாளைகளால் மூடப்பட்டு இருக்கின்றன. 55:12 விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு. 55:13 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:14 ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான். 55:15 மேலும், ஜின்களைத் தீப்பிழம்பிலிருந்து படைத்தான். 55:16 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:17 இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே! 55:18 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:19 அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்; 55:20 ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை. 55:21 ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:22 இந்தக் கடல்களிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன. 55:23 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த சிறப்புகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:24 மேலும், கடலில் மலைகளைப் போன்று உயர்ந்து நிற்கும் இந்தக் கப்பல்களும் அவனுக்கே உரியன. 55:25 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்? 55:26 இந்தப் பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே! 55:27 கம்பீரமும், கண்ணியமும் உடைய உம் அதிபதி மட்டுமே நிலைத்திருப்பவன் ஆவான். 55:28 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த சிறப்பம்சங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:29 பூமியிலும் வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தம் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும், அவன் ஒரு புதிய மாட்சிமையின் நிலையில் இருக்கின்றான். 55:30 ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழ்மிக்க எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:31 பூமிக்குச் சுமையாய் இருப்பவர்களே! அதிவிரைவில் நாம் உங்களை விசாரணை செய்வதற்காக ஓய்வாகிவிடுவோம். 55:32 பின்னர் உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள் (என்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.) 55:33 ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும். 55:34 உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:35 (அவ்விதம் நீங்கள் தப்பியோட முயன்றால்) உங்கள் மீது தீ ஜுவாலையும் புகையும் ஏவிவிடப்படும். அவற்றை எதிர்த்து நிற்க உங்களால் இயலாது. 55:36 (ஓ, ஜின்களே! மனிதர்களே!) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் மறுப்பீர்கள்? 55:37 பின்னர், வானம் பிளந்து செந்தோலைப் போன்று சிவப்பாகிவிடும்போது (என்ன நிகழும்?) 55:38 ஓ, ஜின்களே! மனிதர்களே! அப்போது நீங்கள் உங்கள் இறைவனின் எந்த எந்த ஆற்றல்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:39 அந்நாளில், எந்த மனிதனிடமும் எந்த ஜின்னிடமும் அவரவருடைய பாவத்தைப் பற்றி வினவ வேண்டிய அவசிய மிராது! 55:40 நீங்கள் இரு கூட்டத்தாரும் உங்களுடைய இறைவனின் எந்த எந்த பேருபகாரங்களை மறுக்கிறீர்கள்? (எனத் தெரிந்துவிடும்). 55:41 அங்கு குற்றவாளிகள் தங்களின் முகக்கூறுகளால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். மேலும், அவர்களின் உச்சி முடிகளையும் கால்களையும் பிடித்து இழுக்கப்படும். 55:42 (அவ்வேளை) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:43 அப்பொழுது கூறப்படும்: ஆம்! இதுவேதான் அந்த நரகம்! இதனைத்தான் குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தார்கள். 55:44 அதே நரகத்துக்கும், மிகக் கடுமையாக கொதிக்கும் நீருக்கும் இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப் பார்கள். 55:45 பின்னர், உங்கள் இறைவனின் எந்த எந்த வலிமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:46 மேலும், தன் அதிபதியின் திருமுன் நிற்க வேண்டியது குறித்து அச்சம் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இரண்டு சுவனங்கள் உள்ளன. 55:47 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:48 அவையிரண்டும் பசுமையான கிளைகள் நிறைந்தவை! 55:49 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:50 அந்த இரண்டு சுவனங்களிலும் இரண்டு ஊற்றுகள் ஓடிக்கொண்டிருக்கும். 55:51 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:52 அந்த இரண்டு சுவனங்களில் இருக்கும் ஒவ்வொரு பழமும் இரு வகையானவை. 55:53 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:54 சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத்துணியால் ஆனவையாகும். மேலும், இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்துவிட்டிருக்கும். 55:55 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:56 இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நாணும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள்; இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த் திருக்க மாட்டார்கள். 55:57 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:58 அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று! 55:59 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:60 நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறெதுவாய் இருக்க முடியும்? 55:61 பின்னர் ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழுக்குரிய எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்? 55:62 அந்த இரு தோட்டங்களைத் தவிர வேறு இரண்டு தோட்டங்களும் இருக்கும். 55:63 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:64 அடர்த்தியான, பசுமையான சுவனங்கள்! 55:65 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:66 அவ்விரு தோட்டங்களிலும் இரு ஊற்றுகள் நீர்த்தாரைகளைப் போன்று பீறிட்டுப் பொங்கிக் கொண்டிருக்கும். 55:67 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:68 அவ் விரண்டிலும் ஏராளமான கனிகளும், பேரீச்சம் பழங்களும், மாதுளங்கனிகளும் இருக்கும். 55:69 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:70 இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும், பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர். 55:71 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:72 கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர். 55:73 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:74 இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் ஜின்னும் அந்தப் பெண்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். 55:75 உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:76 அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். 55:77 உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்? 55:78 பெரும் அருட்பாக்கியங்கள் கொண்டதாக இருக்கின்றது, மாட்சிமையும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!
அத்தியாயம்  அல் வாகிஆ  56 : 1-96 / 96
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
56:1 நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது, 56:2 அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார். 56:3 அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும். 56:4 அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும். 56:5 மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ; 56:6 பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்! 56:7 அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள். 56:8 வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது! 56:9 மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது! 56:10 மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே! 56:11 அவர்கள்தாம் நெருக்கமானவர்கள். 56:12 அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள். 56:13 முன்னோரில் நிறையப் பேரும் 56:14 பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள். 56:15 தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில் 56:16 எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள். 56:17 அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள் 56:18 மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள். 56:19 அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது. 56:20 அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்; 56:21 மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள். 56:22 மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்; 56:23 அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள். 56:24 இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும். 56:25 அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள். 56:26 எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும். 56:27 மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது? 56:28 அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள், 56:29 மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்; 56:30 பரந்து விரிந்திருக்கும் நிழல், 56:31 எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர், 56:32 என்றைக்கும் தீர்ந்துவிடாத 56:33 தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ; 56:34 மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள். 56:35 அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம். 56:36 மேலும், அவர்களைக் கன்னிகளாகவும், 56:37 தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம். 56:38 இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை. 56:39 அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும், 56:40 பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள். 56:41 மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது? 56:42 அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும், 56:43 கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள். 56:44 அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது. 56:45 இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்; 56:46 மேலும், பெரும் பாவங்கள் புரிவதில் பிடிவாதமாக இருந்தார்கள். 56:47 “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன? 56:48 முன்பு வாழ்ந்துசென்ற எங்களுடைய மூதாதையர்களும் எழுப்பப்படுவார்களா, என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். 56:49 (நபியே!) இவர்களிடம் கூறும்: “முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரும் 56:50 திண்ணமாக ஒன்றுகூட்டப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், நேரம் குறிக்கப்பட்ட ஒரு நாளில்! 56:51 பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே! 56:52 நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்! 56:53 நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள். 56:54 அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள், 56:55 அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று! 56:56 இதுதான் (இந்த இடப்பக்கத்தார்க்குரிய) விருந்து உபசாரப் பொருட்களாகும், கூலி கொடுக்கும் நாளில்! 56:57 நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை? 56:58 நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? 56:59 இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா? 56:60 நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம். 56:61 மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர். 56:62 உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை? 56:63 நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? 56:64 இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? 56:65 நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள்; 56:66 அனைத்தும் தண்டமாகிவிட்டதே; 56:67 நாம் பெரும் துர்ப்பாக்கியவான்களாய் ஆகிவிட்டோமே என்று! 56:68 நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண்திறந்து பார்த்திருக்கின்றீர்களா? 56:69 மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா? அல்லது அதனைப் பொழியச் செய்தது நாமா? 56:70 நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை? 56:71 நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா? 56:72 அதன் மரத்தை நீங்கள் படைத்திருக்கின்றீர்களா? அல்லது அதனைப் படைத்தவர் நாமா? 56:73 நாம் இதனை நினைவூட்டும் சாதனமாகவும் தேவையுடையோருக்கு வாழ்க்கைச் சாதனமாகவும் அமைத்துள்ளோம். 56:74 எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக! 56:75 இல்லை, நட்சத்திரங்களின் அமைநிலைகள் மீது நான் சத்தியம் செய்கின்றேன். 56:76 நீங்கள் உணர்வீர்களேயானால், திண்ணமாக இது ஒரு மகத்தான சத்தியம்தான்! 56:77 இது ஓர் உன்னதமான குர்ஆன். 56:78 இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 56:79 தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது. 56:80 இது அகிலத்தின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும். 56:81 பிறகு என்ன, இந்த வசனத்தையா நீங்கள் அலட்சியப்படுத்துகின்றீர்கள்? 56:82 மேலும், இதனைப் பொய்யென்று தூற்றுவதுதான் இந்த அருட்கொடையில் உங்களுக்குரிய பங்கா? 56:83 இறந்துபோகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருக்கும்போது; 56:84 உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். 56:85 அப்போது உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம். ஆனால், அது உங்களுக்குத் தென்படுவதில்லை. 56:86 நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால் 56:87 உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை? 56:88 பின்னர், இறக்கின்ற அந்த மனிதர் நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால் 56:89 அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன. 56:90 மேலும், அவர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருந்தால், 56:91 “சாந்தி உண்டாகட்டும், உம்மீது! நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்!” என்று கூறி வரவேற்கப்படுவார். 56:92 மேலும், அவர் பொய் எனத் தூற்றியவர்களில் ஒருவராகவும், வழிகேடர்களில் ஒருவராகவும் இருந்தால், 56:93 கொதிக்கும் நீரும், 56:94 நரகத்தில் வீசப்படுவதும்தாம் அவருக்குரிய ‘உபசாரம்’ ஆகும்! 56:95 திண்ணமாக, இவை அனைத்தும் திட்டவட்டமான உண்மைகளாகும். 56:96 எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
அத்தியாயம்  அல் ஹதீத்  57 : 1-29 / 29
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
57:1 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவனே மிக வல்லமை மிக்கவன்; நுண்ணறிவாளன். 57:2 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன்; அவன் உயிரை வழங்குகின்றான்; மரணத்தை அளிக்கின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். 57:3 அவனே ஆதியும் அந்தமும் ஆவான். அவனே வெளிப்படையானவனும், மறைவானவனும் ஆவான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாயிருக்கின்றான். 57:4 வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் அவன்தான் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். பூமிக்குள் செல்பவற்றையும், அதிலிருந்து வெளியேறுகின்றவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும், அதில் ஏறுகின்றவற்றையும் அவன் அறிகின்றான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், நீங்கள் செய்யும் செயல்களையெல்லாம் அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 57:5 அவனே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு உரிமையாளன்; மேலும் அனைத்து விவகாரங்களும் தீர்ப்புக்காக அவனிடமே திருப்பிவிடப்படுகின்றன. 57:6 அவனே இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைக்கின்றான். மேலும், நெஞ்சங்களில் இருக்கும் இரகசியத்தையும் அவன் நன்கறிகின்றான். 57:7 அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவற்றின் விஷயத்தில் அவன் உங்களைப் பிரதிநிதியாக்கியிருக்கின்றானோ அவற்றிலிருந்து செலவழியுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ, மேலும், பொருளைச் செலவிடுவார்களோ அவர்களுக்குப் பெரும் கூலி உண்டு. 57:8 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் அல்லாஹ்வின் மீது ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? இறைத்தூதரோ உங்களை உங்கள் அதிபதியின்மீது நம்பிக்கை கொள்ளும்படி அழைத்துக் கொண்டிருக்கின்றார். மேலும், அவர் உங்களிடம் உறுதிப்பிரமாணம் வாங்கியிருக்கின்றார். நீங்கள் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (அல்லாஹ்வையே நம்புங்கள்). 57:9 அல்லாஹ்தான் தன் அடியார்மீது தெளிவான வசனங்களை இறக்கிக்கொண்டிருக்கின்றான், உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான். 57:10 நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமலிருப்பதற்கு என்னதான் காரணம்? உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் வாரிசுரிமையோ அல்லாஹ்விற்கே உரியதாகும். உங்களில் (யார் வெற்றிக்குப் பின் செலவு செய்வார்களோ, மேலும், அறப்போரும் புரிவார்களோ அவர்கள்) வெற்றிக்கு முன் செலவு செய்து, அறப்போரும் புரிந்தவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். அத்தகையவர்களின் அந்தஸ்து, பின்னர் செலவு செய்தவர்களைவிடவும், அறப்போர் புரிந்தவர்களைவிடவும் உயர்ந்ததாகும். ஆயினும், அல்லாஹ் இரு சாராருக்கும் நல் வாக்குறுதியினை அளித்திருக்கின்றான். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாயிருக்கின்றான். 57:11 அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? அழகிய கடன்! அல்லாஹ் அதனைப் பன்மடங்கு பெருக்கி அவருக்குத் திரும்பக் கொடுப்பதற்காக! மேலும், அவருக்கு மிகச் சிறந்த கூலியும் இருக்கின்றது. 57:12 அன்று நீர் காண்பீர், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும்! அவர்களுடைய ஒளி அவர்களின் முன்பும், அவர்களின் வலப்புறத்திலும் விரைந் தோடிக் கொண்டிருக்கும். கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இன்று உங்களுக்கு இருக்கின்றன என்று நற்செய்தி (அவர்களுக்குக் கூறப்படும்); அவற்றில் அவர்கள் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும். 57:13 அந்நாளில் நயவஞ்சகர்களான ஆண்கள் பெண்களின் நிலை எவ்வாறிருக்குமெனில், நம்பிக்கையாளர்களிடம் அவர்கள் கூறுவார்கள்: “சற்று எங்கள் பக்கம் பாருங்களேன். நாங்கள் உங்களுடைய ஒளியிலிருந்து சற்றுப் பயனடைந்து கொள்கின்றோம்.” ஆயினும் அவர்களிடம் சொல்லப்படும்: “பின்னால் தள்ளிப் போய் விடுங்கள்! (உங்களுக்குரிய) ஒளியை வேறெங்காவது தேடிக் கொள்ளுங்கள்!” பிறகு அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச்சுவர் எழுப்பப்படும். அதில் ஒரு கதவு இருக்கும். அந்தக் கதவுக்கு உட்புறத்தில் கருணை இருக்கும். அதன் வெளிப்புறத்தில் வேதனை இருக்கும். 57:14 அவர்கள் நம்பிக்கையாளர்களைக் கூப்பிட்டுக் கேட்பார்கள்: “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” அதற்கு நம்பிக்கையாளர்கள் பதிலளிப்பார்கள்: “ஆம்! ஆனால், நீங்களே உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டீர்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருந்தீர்கள்; ஐயத்தில் உழன்றுகொண்டிருந்தீர்கள். மேலும், வீணான எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தன. இறுதியில் அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது. மேலும் (இறுதி வரை) அந்தப் பெரும் ஏமாற்றுக்காரன் (ஷைத்தான்) உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிக்கொண்டிருந்தான். 57:15 எனவே, இன்று உங்களிடமிருந்து ஈடு எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், எவர்கள் வெளிப்படையாக நிராகரித்திருந்தார்களோ, அவர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நரகமே உங்களுடைய இருப்பிடம் ஆகும். அதுவே உங்களைக் கவனித்துக் கொள்ளும். மேலும், இது மிக மோசமான கதியாகும். 57:16 நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவர்கள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்டகாலம் அவர்கள் மீது உருண்டு ஓடிவிட்டபொழுது அவர்களின் இதயங்கள் இறுகிப்போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர். 57:17 நன்கறிந்து கொள்ளுங்கள்: பூமிக்கு அது இறந்துவிட்ட பிறகு அல்லாஹ் உயிரூட்டுகின்றான். நாம் சான்றுகளை உங்களுக்குத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம், நீங்கள் சிந்தித்து உணர்வதற்காக! 57:18 ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா தான தருமங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக பன்மடங்கு அதிகம் வழங்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் இருக்கிறது. 57:19 மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்களே தம் இறைவனிடத்தில் ‘ஸித்தீக்கு’ (வாய்மை மிக்கவர்களாகவும்) ‘ஷஹீத்’ (சான்றுபகர்பவர்களாகவும்) இருக்கின்றார்கள். அவர்களுக்காக அவர்களின் கூலியும் ஒளியும் இருக்கின்றன. எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். 57:20 நன்கு அறிந்து கொள்ளுங்கள்: இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்களிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முற்படுதலுமேயன்றி வேறில்லை. அதற்கான உவமை: மழை பொழிந்திடும்போது அதன்மூலம் விளைகின்ற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைவது போன்றதாகும். பின்னர், அதே பயிர் காய்ந்துவிடுகின்றது. அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர், பதராகிவிடுவதையும் நீர் பார்க்கலாம். (இதற்கு மாறாக) மறுமை எத்தகைய இடமெனில், அங்கு கடும் தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் இருக்கின்றன. ஆனால், உலக வாழ்க்கை ஓர் ஏமாற்றுச் சாதனமே தவிர வேறெதுவுமில்லை. 57:21 ஓடுங்கள்; ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு முயலுங்கள்; உங்கள் இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் வானம், பூமியின் அளவிற்கு விசாலமான சுவனத்தை நோக்கியும்! அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாக இருக்கின்றான். 57:22 பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்களின் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக்குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். 57:23 (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமை பேசித்திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை; 57:24 இவர்களோ தாமும் கஞ்சத்தனம் செய்கின்றார்கள்; பிறரையும் கஞ்சத்தனம் செய்திடத் தூண்டுகின்றார்கள். இனி எவரேனும் புறக்கணித்தால் திண்ணமாக, அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் மாபெரும் புகழுக்குரிய தன்மைகள் கொண்டவனாகவும் இருக்கின்றான். 57:25 நாம் நம் தூதர்களைத் தெளிவான சான்றுகளுடனும், வழிகாட்டுதல்களுடனும் அனுப்பினோம்; மேலும், அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும், துலாக்கோலையும் இறக்கினோம். மக்கள் நீதியில் நிலைத்திருக்கும் பொருட்டு! மேலும், இரும்பையும் இறக்கினோம்; அதில் பெரும் வலிமை உள்ளது. மக்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. (இவ்வாறெல்லாம் செய்யப்பட்டது எதற்காகவெனில்) அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் கண்டறிவதற்காகத்தான்! திண்ணமாக அல்லாஹ் பேராற்றல் கொண்டவனாகவும், வல்லமை மிக்கவனாகவும் இருக்கின்றான். 57:26 நாம் நூஹையும் இப்ராஹீமையும் அனுப்பினோம்; அவர்களின் வழித்தோன்றல்களில் தூதுத்துவத்தையும், வேதத்தையும் வைத்துவிட்டோம். பின்னர் அவர்களுடைய வழித்தோன்றல்களில் சிலர் நேர்வழியை மேற்கொண்டனர். அவர்களில் பலர் தீயவர்களாகிவிட்டனர். 57:27 அவர்களுக்குப் பின் ஒருவர் பின் ஒருவராக நம் தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்குப் பிறகு மர்யமின் குமாரர் ஈஸாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம். மேலும், துறவுக்கோட்பாட்டை அவர்களாகவே தோற்றுவித்துக் கொண்டார்கள். நாம் அதனை அவர்கள்மீது கடமையாக்கவில்லை. ஆயினும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் பொருட்டு அவர்கள் தாமாகவே இந்த நூதன முறையைத் தோற்றுவித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் எப்படி அதனைப் பேணவேண்டுமோ அப்படி அதனைப் பேணவில்லை. அவர்களில் யார் இறைநம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலியை நாம் வழங்கினோம். எனினும், அவர்களில் அநேகர் தீயவர்களாவர். 57:28 இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அவனுடைய தூதர் (முஹம்மத் (ஸல்)) மீது நம்பிக்கையும் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தன் கருணையிலிருந்து இரு மடங்கை வழங்குவான். மேலும், உங்களுக்கு ஒளியையும் அருளுவான்; அந்த ஒளியில் நீங்கள் நடந்து செல்வீர்கள். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 57:29 (இப்படிப்பட்ட நடத்தையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.) வேதம் அருளப்பட்டவர்கள் இவற்றை அறிந்து கொள்வதற்காக: ‘அல்லாஹ்வின் அருளில் அவர்களுக்கு எந்தக் குத்தகையும் இல்லை; மேலும், அல்லாஹ்வின் அருள் அவனுடைய கையில்தான் இருக்கிறது. தான் நாடுபவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாகவும் இருக்கின்றான்.’
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)