அத்தியாயம்  அஸ்ஸாரியாத்  51 : 31-60 / 60
51:31 இப்ராஹீம் கேட்டார்: “இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?” 51:32 அவர்கள் கூறினர்: “குற்றம் புரிந்த ஒரு சமுதாயத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்.” 51:33 சுட்ட கற்களை அவர்கள்மீது பொழிவதற்காக! 51:34 அவை வரம்பு மீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடத்தில் அடையாளமிடப்பட்ட கற்களாகும். 51:35 பின்னர், அந்த ஊரில் இருந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாம் வெளியேற்றினோம். 51:36 மேலும், அங்கு ஒரேயொரு வீட்டைத் தவிர முஸ்லிம் வீடுகள் வேறு எதையும் நாம் காணவில்லை. 51:37 இதன் பின்னர், நாம் அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம், துன்புறுத்தும் வேதனைக்கு அஞ்சுகின்ற மக்களுக்காக! 51:38 மேலும், மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது 51:39 அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான். 51:40 இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம். அவர்கள் அனைவரையும் கடலில் எறிந்துவிட்டோம். மேலும், அவன் பழிப்புக்குரியவனாகிவிட்டான். 51:41 மேலும், ஆத் சமூகத்தினரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) அவர்கள் மீது நாம் நாசத்தை ஏற்படுத்தும் காற்றை அனுப்பினோம். 51:42 அது எந்த ஒரு பொருளின்மீது பட்டபோதிலும் அதனைச் சிதைத்து அழித்துவிட்டது. 51:43 மேலும், ஸமூத் கூட்டத்தாரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) “ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது; 51:44 (இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது. 51:45 பின்னர், அவர்களால் எழுந்து நிற்கவும் முடியவில்லை; தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியவில்லை. 51:46 மேலும், இவர்கள் அனைவருக்கும் முன்பு நூஹின் சமூகத்தினரை நாம் அழித்தோம்; ஏனெனில், அவர்கள் தீய மக்களாய் இருந்தனர். 51:47 வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம். 51:48 பூமியை நாம் விரித்திருக்கின்றோம். நாம் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்துபவர்களாய் இருக்கின்றோம். 51:49 மேலும், நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்! 51:50 எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன். 51:51 அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்! 51:52 இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள். 51:53 இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர். 51:54 ஆகவே (நபியே!) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும். நீர் பழிப்புக்குரியவரல்லர். 51:55 ஆயினும், அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும். 51:56 நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை. 51:57 நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை. 51:58 நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான். 51:59 இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம். 51:60 நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ, அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது.
அத்தியாயம்  அத்தூர்  52 : 1-49 / 49
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
52:1 தூர் மலையின் மீது சத்தியமாக! 52:2 மெல்லிய தோலில் எழுதப்பட்ட 52:3 திறந்த புத்தகத்தின் மீது சத்தியமாக! 52:4 மக்கள் நடமாட்டமுள்ள இல்லத்தின்மீது சத்தியமாக! 52:5 உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக! 52:6 அலைபுரளும் கடலின் மீது சத்தியமாக! 52:7 உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும். 52:8 அதனைத் தடுப்பவர் எவருமிலர். 52:9 அது நிகழும் நாளில் வானம் கடுமையாக நடுங்கும்; 52:10 மலைகள் பறந்து கொண்டிருக்கும். 52:11 கேடுதான் இருக்கிறது அந்நாளில், பொய் என்று தூற்றியவர்களுக்கு! 52:12 அவர்களோ இன்று வீண் வாதங்களில் விளையாட்டாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 52:13 எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்; 52:14 அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அந்த நரக நெருப்பு; இதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள். 52:15 இப்போது கூறுங்கள், இது சூனியமா அல்லது உங்களுக்குப் புலப்படவில்லையா? 52:16 இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.” 52:17 இறையச்சமுள்ளவர்கள் அங்கு சுவனங்களிலும் அருட்பேறுகளிலும் இருப்பார்கள். 52:18 அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான். 52:19 (அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!” 52:20 எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம். 52:21 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான். 52:22 மேலும், நாம் எல்லாவிதமான பழங்களையும், இறைச்சியையும், அவர்களின் உள்ளம் விரும்புகின்றவற்றையும் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்போம். 52:23 அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது. 52:24 அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள். 52:25 மேலும், அவர்கள் (உலகில் நடந்த) நிலைமைகளைக் குறித்து பரஸ்பரம் விசாரிப்பார்கள். 52:26 அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் முன்பு எங்கள் குடும்பத்தாரிடையே அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வந்தோம். 52:27 இறுதியில், அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்தான்; மேலும், பொசுக்கிவிடும் காற்றின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டான். 52:28 திண்ணமாக, நாங்கள் முந்தைய வாழ்க்கையில் அவனிடமே இறைஞ்சிக்கொண்டிருந்தோம். அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்.” 52:29 (நபியே!) நீர் அறிவுரை வழங்கிய வண்ணம் இருப்பீராக! உம் இறைவனின் அருளால் நீர் சூனியக்காரருமல்லர்; பைத்தியக்காரரும் அல்லர். 52:30 “இவர் ஒரு கவிஞர்; இவர் விஷயத்தில் சுழற்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று இவர்கள் கூறுகின்றார்களா, என்ன? 52:31 இவர்களிடம் நீர் கூறும்: “சரி, எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்.” 52:32 இவர்களின் அறிவுதான் இவ்வாறெல்லாம் இவர்களைப் பேசத் தூண்டுகிறதா? அல்லது உண்மையில் இவர்கள் பகைமையில் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாய் இருக்கின்றார்களா? 52:33 அல்லது, “இந்த மனிதர் இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்திருக்கின்றார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை. 52:34 இவர்கள் உண்மையானவர்களாய் இருந்தால், இதே போன்ற மகத்துவமிக்க ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக்கொண்டு வரட்டும்! 52:35 படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? 52:36 அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை! 52:37 உம் அதிபதியின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் உள்ளனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகின்றதா? 52:38 அல்லது இவர்களிடம் ஏணி ஏதும் இருந்து அதில் ஏறிச்சென்று (மேலுலகின் செய்திகளை) இவர்கள் ஒட்டுக்கேட்டு வருகின்றார்களா, என்ன? இவர்களில் எவரேனும் அப்படிக் கேட்டிருந்தால் அவர் ஏதேனும் தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்! 52:39 என்ன, அல்லாஹ்விற்கு மட்டும் பெண்மக்கள்; உங்களுக்கு ஆண் மக்களா? 52:40 நீர் அவர்களிடம் ஏதாவது கூலியைக் கேட்கின்றீரா? அதன் சுமையால் அவர்கள் அழுத்தப்படுகின்றார்களா, என்ன? 52:41 அல்லது, இவர்களிடம் மறைவான உண்மைகளின் ஞானம் இருக்கின்றதா? (அதன் அடிப்படையில்) இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா? 52:42 அல்லது, இவர்கள் சூழ்ச்சி ஏதும் செய்ய விரும்புகின்றார்களா, என்ன? அப்படியென்றால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி அவர்களையே திருப்பித் தாக்கும். 52:43 அல்லாஹ்வைத் தவிர, வேறு ஒரு கடவுள் இவர்களுக்கு உண்டா? அல்லாஹ் தூய்மையானவன், இவர்களின் இணை வைப்பை விட்டு! 52:44 வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், “இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்” என்றுதான் கூறுவார்கள். 52:45 எனவே (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே விட்டுவிடும்; இவர்கள் எந்நாளில் அடித்து வீழ்த்தப்படுவார்களோ அந்நாளை அடையும் வரையில்! 52:46 அந்நாளில் இவர்களின் எந்த சூழ்ச்சியும் இவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. மேலும், இவர்களுக்கு உதவி செய்திட யாரும் வரமாட்டார்கள். 52:47 மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 52:48 (நபியே!) உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர். நீர் எழும்போது உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக! 52:49 இரவிலும் அவனைத் துதி செய்வீராக. தாரகைகள் மறையும் வேளையிலும் (துதிப்பீராக!)
அத்தியாயம்  அந்நஜ்ம்  53 : 1-62 / 62
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
53:1 தாரகைகளின்மீது ஆணையாக, அவை மறையும் போது! 53:2 உங்களின் தோழர் வழிதவறிப் போகவுமில்லை; நெறி பிறழ்ந்து செல்லவுமில்லை! 53:3 மேலும், அவர்தம் மன இச்சையின்படி பேசுவதில்லை. 53:4 இது (அவர்மீது) இறக்கியருளப்பட்ட வஹியே* ஆகும். 53:5 மாபெரும் நுண்ணறிவாளரும் அதிக வலிமை வாய்ந்தவருமான ஒருவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். 53:6 அவர் எதிரே வந்து நின்றார் ; 53:7 உயர்ந்த வானத்தின் கீழ் விளிம்பிலிருந்தபோது! 53:8 பிறகு, இன்னும் நெருங்கி வந்து அந்தரத்தில் நின்றார். 53:9 எந்த அளவுக்கெனில், இரண்டு வில்லுக்குச் சமமான அல்லது அதைவிடக் குறைவான இடைவெளியே இருந்தது. 53:10 அப்போது அவர் அல்லாஹ்வின் அடியாருக்கு அறிவிக்கவேண்டிய வஹியை அறிவித்தார். 53:11 (தம்முடைய) கண்கள் கண்டதைப்பற்றி (நபியுடைய) உள்ளம் பொய்யுரைக்கவில்லை. 53:12 எதனை அவர் கண்களால் பார்க்கின்றாரோ அதனைப்பற்றி நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா? 53:13 மற்றொரு முறை அவர் அவரை இறங்கிடக் கண்டார், 53:14 ‘ஸித்றதுல் முன்தஹா’* அருகில்; 53:15 அதன் அருகிலேயே ‘ஜன்னத்துல் மஃவா’ இருக்கிறது. 53:16 அந்த நேரத்தில் ‘ஸித்றதுல் முன்தஹா’ எது மூடிக்கொண்டிருந்ததோ அது மூடிக் கொண்டிருந்தது. 53:17 பார்வை விலகிவிடவுமில்லை; எல்லை கடந்துவிடவுமில்லை. 53:18 மேலும், அவர்தம் இறைவனின் பெரும் பெரும் சான்றுகளைக் கண்டார். 53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ; 53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? 53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா? 53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்! 53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது. 53:24 மனிதன் எதை விரும்புகின்றானோ அதுவே அவனுக்கு சத்தியம் (ஹக்) ஆகிவிடுமா என்ன? 53:25 இம்மைக்கும் மறுமைக்கும் அல்லாஹ்தான் உரிமையாளனாக இருக்கின்றான். 53:26 வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பரிந்துரை எந்தப் பயனும் அளிக்காது எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ, எவரைப் பற்றிய வேண்டுகோளை செவிமடுக்க நாடுகின்றானோ, (அத்தகையவருக்காக) பரிந்துரைக்குமாறு அல்லாஹ் அனுமதித்தாலே தவிர! 53:27 ஆனால் எவர்கள் மறுமையை ஏற்பதில்லையோ அவர்கள் வானவர்களுக்குப் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டுகின்றார்கள். 53:28 உண்மை யாதெனில் இவ்விஷயத்தைக் குறித்து ஞானம் எதுவும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், இவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சத்தியத்திற்கு எதிரில் ஊகம் எந்தப் பயனும் தருவது இல்லை. 53:29 (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். 53:30 இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! இறைவனே நன்கறிகின்றான் அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை! 53:31 மேலும், பூமி மற்றும் வானங்களிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளன் அல்லாஹ்தான்! தீமை செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய பிரதிபலனை அல்லாஹ் கொடுப்பதற்காகவும், நற்பணி ஆற்றியவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவதற்காகவும்தான்! 53:32 அவர்களோ பெரும் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். அவன் உங்களை எப்போது மண்ணிலிருந்து படைத்தானோ மேலும், எப்போது நீங்கள் உங்கள் அன்னையரின் வயிற்றில் கருவாக இருந்தீர்களோ அப்போதிருந்தே உங்களை அவன் நன்கு அறிந்திருக்கின்றான். எனவே, நீங்கள் உங்களைத் தூயவர்களென வாதிடாதீர்கள்! உண்மையில் யார் இறையச்சமுடையவர் என்பதை அவனே நன்கறிகின்றான். 53:33 பிறகு (நபியே!) எவன் இறைவழியை விட்டு விலகிச் சென்றானோ, 53:34 மேலும், சிறிது வழங்கிவிட்டு பின்னர் நிறுத்திக் கொண்டானோ அவனை நீர் பார்த்ததுண்டா? 53:35 மறைவானவற்றைப் பற்றிய ஞானம் அவனிடம் இருந்து, அதன் மூலம் யதார்த்த நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றானா? 53:36 மூஸாவின் ஆகமங்களிலும்; 53:37 வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் ஆகமங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றிய எந்தச் செய்தியும் அவனுக்குக் கிடைக்கவில்லையா, என்ன? 53:38 (அவையாவன): சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். 53:39 மேலும், மனிதனுக்குதான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! 53:40 இன்னும், அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். 53:41 பின்னர், அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும். 53:42 மேலும், இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும். 53:43 இன்னும், சிரிக்க வைத்தவனும் அழ வைத்தவனும் அவனே! 53:44 மேலும் அவனே மரணமளிக்கின்றான்; அவனே வாழ்வளிக்கின்றான். 53:45 மேலும், ஆண்பெண் ஜோடிகளை அவனே படைத்தான்; 53:46 தெறித்து விழும் ஒரு விந்துத் துளியிலிருந்து! 53:47 இன்னும், மற்றொரு வாழ்க்கையை அளிப்பதும் அவனுடைய பொறுப்பேயாகும். 53:48 மேலும், அவனே செல்வந்தனாக்கினான்; சொத்துக்களை வழங்கினான். 53:49 இன்னும், அவனே ‘ஷிஃரா’*வின் அதிபதியாக இருக்கிறான். 53:50 மேலும், அவனே முந்தைய ‘ஆது’ சமூகத்தினரை அழித்தான். 53:51 ‘ஸமூது’ சமூகத்தினரையும் அவர்களில் எவரையும் பிறகு விட்டு வைக்காமல் அழித்தான். 53:52 மேலும் அவர்களுக்கு முன்பு நூஹின் சமூகத்தினரை அழித்தான். ஏனெனில், அவர்கள் பெரும் கொடுமைக்காரர்களாகவும் வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர். 53:53 தலைகீழாக விழுந்த ஊர்களையும் அவன்தான் தூக்கி எறிந்தான். 53:54 பின்னர் அவற்றை எது மூடியதோ, அது மூடியது. 53:55 (அதனை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்) ஆகவே மனிதனே, நீ உன் அதிபதியின் எந்தெந்த அருட்கொடைகளில் ஐயம் கொள்வாய்? 53:56 முன்னரே வந்துவிட்ட எச்சரிக்கைகளில் இதுவும் ஓர் எச்சரிக்கையாகும். 53:57 வரவேண்டிய நேரம் நெருங்கி வந்து விட்டது. 53:58 அதனைத் தடுத்து நிறுத்துவோர் அல்லாஹ்வை அன்றி வேறெவரும் இலர். 53:59 இனி என்ன, நீங்கள் இந்தச் செய்திகளைப் பற்றியா வியப்படைகிறீர்கள்? 53:60 சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அழாமல் இருக்கிறீர்களே? 53:61 ஆடிப்பாடி இதனைத் தடுக்க முயலுகிறீர்களா? 53:62 பணிந்து விடுங்கள், அல்லாஹ்வின் முன்பு! மேலும் (அவனுக்கே) அடிபணிந்துவிடுங்கள்.
அத்தியாயம்  அல் கமர்  54 : 1-55 / 55
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
54:1 மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது. 54:2 ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக் கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள். 54:3 இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும். 54:4 மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன; 54:5 மேலும், அறிவுரையின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் விவேகமும் உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை. 54:6 எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்; 54:7 மக்கள் பயந்த பார்வைகளுடன் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளிவருவார்கள்; சிதறிய வெட்டுக்கிளிகளைப்போல் 54:8 அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!” 54:9 இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார். 54:10 இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!” 54:11 அப்போது வானின் வாயில்களைத் திறந்துவிட்டு, மழையைக் கொட்டச் செய்தோம். 54:12 மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது. 54:13 மேலும், மரப்பலகைகளால் செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்டதில் (கப்பலில்) நாம் நூஹை ஏற்றினோம். 54:14 அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்! 54:15 அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா? 54:16 பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! 54:17 நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா? 54:18 ‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! 54:19 நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய ஒரு நாளில் நாம் கடுமையான புயல்காற்றை அவர்களின் மீது அனுப்பினோம். 54:20 அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள். 54:21 பார்த்துக் கொள்ளுங்கள்: எப்படி இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! 54:22 நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா? 54:23 ‘ஸமூத்’ சமுதாயத்தினரும் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதிட்டார்கள். 54:24 மேலும், கூறலானார்கள்: “நம்மிலுள்ள ஒரு தனிப்பட்ட மனிதரையா நாம் பின்பற்றிச் செல்வது? அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏற்றுக்கொண்டோமானால், நாம் வழிகெட்டுப் போய் விட்டோம்; நமது புத்தி பேதலித்துவிட்டது என்பது அதன் பொருளாகும். 54:25 இறைவனின் அறிவுரை அருளப்படுவதற்கு நமக்கு மத்தியில் இவர் ஒருவர்தான் இருக்கின்றாரா, என்ன?” 54:26 (நாம் நம்முடைய தூதரிடம் கூறினோம்:) “நாளையதினம் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; யார் வடிகட்டிய பொய்யர், தற்பெருமைக்காரர் என்று! 54:27 நாம் பெண் ஒட்டகத்தை இவர்களுக்குச் சோதனையாக ஆக்கி அனுப்புகின்றோம். எனவே, இப்போது சற்றுப் பொறுத்திருந்து பாரும்; இவர்களின் கதி என்னவாகிறது என்று! 54:28 தண்ணீர் இவர்களுக்கும் ஒட்டகத்துக்கும் இடையே பங்கிடப்படும் என்றும், ஒவ்வொருவரும் (தம் முறை நாளில் தண்ணீருக்கு) வர வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவித்துவிடும்.” 54:29 இறுதியில், அவர்கள் தங்களுடைய ஆளை அழைத்தார்கள். அவர் இந்தப் பணியை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒட்டகத்தைக் கொன்றுவிட்டார். 54:30 பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்: எவ்வளவு கொடூரமாக இருந்தது நான் அளித்த வேதனை; எவ்வளவு உண்மையானவையாக இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்! 54:31 நாம் ஒரேயொரு ஓசையைத்தான் அவர்களின் மீது அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். 54:32 நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா? 54:33 லூத்தின் சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதித்தார்கள். 54:34 நாம் கல்மாரி பொழியும் காற்றை அவர்கள் மீது ஏவினோம். லூத்தின் குடும்பத்தினர் மட்டுமே அதிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். நாம் நம்முடைய அருளினால் இரவின் பின்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம். 54:35 இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்; நன்றி செலுத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும்! 54:36 லூத் தம்முடைய சமூக மக்களுக்கு நம்முடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் எல்லா எச்சரிக்கைகளையும் சந்தேகமானவை எனக் கருதி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள். 54:37 பின்னர் அவருடைய விருந்தாளிகளைப் பாதுகாப்பதிலிருந்து அவரை விலகியிருக்கச் செய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். இறுதியில், நாம் அவர்களுடைய கண்களை அவித்துவிட்டோம். சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்! 54:38 அதிகாலையில் ஒரு மாபெரிய வேதனை அவர்களை வந்தடைந்தது. 54:39 சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும் 54:40 நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுவதற்கு எவரேனும் இருக்கின்றாரா? 54:41 மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடம் எச்சரிக்கைகள் வந்திருந்தன. 54:42 ஆனால் அவர்கள் நம்முடைய சான்றுகள் அனைத்தையும் பொய்யென்று வாதித்தார்கள். இறுதியில், நாம் அவர்கள் அனைவரையும் பிடித்துக் கொண்டோம். யாவரையும் மிகைத்த, வலிமை மிக்க ஒருவன் பிடிப்பதைப் போன்று! 54:43 என்ன, உங்களுடைய நிராகரிப்பாளர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வான்மறைகளில் உங்களுக்காகப் பாவமன்னிப்பு ஏதும் எழுதப்பட்டு இருக்கிறதா? 54:44 அல்லது ‘நாங்கள் ஒரு பலமிக்க குழுவினர் ஆவோம். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்’ என்று இந்த மக்கள் கூறுகின்றார்களா? 54:45 இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம். 54:46 இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமைநாளாகும். மேலும், அது பெரும் ஆபத்தான, மிகவும் கசப்பான நேரமாகும். 54:47 இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும், இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது. 54:48 இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!” 54:49 நிச்சயமாக நாம் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கின்றோம். 54:50 மேலும், நமது கட்டளை ஒரே ஒரு கட்டளையாகவே இருக்கின்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அது அமலுக்கு வந்துவிடுகின்றது. 54:51 உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா? 54:52 இவர்கள் செய்தவை அனைத்தும் பதிவேடுகளில் பதிக்கப்பட்டுள்ளன. 54:53 ஒவ்வொரு சிறிய பெரிய விஷயமும் எழுதப்பட்டுள்ளது. 54:54 மாறு செய்வதை விட்டு விலகி இருப்பவர்கள் திண்ணமாக சுவனங்களிலும் ஆறுகளிலும் தங்கி இருப்பார்கள். 54:55 உண்மையான கண்ணியத்திற்குரிய இடத்தில், பெரும் அதிகாரம் உடைய அரசனுக்கருகில்!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)