அத்தியாயம்  அல்மாயிதா  5 : 82-120 / 120
5:82 திண்ணமாக யூதர்களும், இணைவைப்பவர்களும் மற்ற அனைத்து மக்களையும் விட இறைநம்பிக்கையாளர்களுக்குக் கடும் பகைவர்களாக இருப்பதை (நபியே!) நீர் காண்பீர். நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்பவர்கள்தாம் மற்ற அனைவரையும்விட இறைநம்பிக்கையாளர்களுடன் நேசம் கொண்டிருப்பதை நீர் காண்பீர். இதற்குக் காரணம் அவர்களுள் வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை. 5:83 இறைத்தூதர் மீது இறக்கியருளப்பட்ட இவ் வேதத்தை அவர்கள் செவியுறும்போது சத்தியத்தை அவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்கிறீர். மேலும், அவர்கள் இறைஞ்சுகின்றார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம். எனவே சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக!” 5:84 மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுடைய இறைவன் எங்களை ஒழுக்க நலமுடையவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?” 5:85 அவர்கள் இவ்வாறு கூறியதால் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே நன்மை புரிவோருக்கான கூலியாகும். 5:86 மேலும் எவர்கள் நம் திருவசனங்களை நிராகரித்து, அவற்றைப் பொய்யானவை என வாதிட்டார்களோ அத்தகையோர் நரகவாசிகளே ஆவர்! 5:87 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூய பொருள்களை ஹராமானவை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், வரம்பு மீறாதீர்கள்! திண்ணமாக வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். 5:88 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள் (பருகுங்கள்)! மேலும், எந்த இறைவன்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள்! 5:89 நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை. ஆயினும் நீங்கள் உறுதிப்படுத்திச் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப்பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இவற்றில்) எதற்கும் சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்து விட்டால், இதுதான் அவற்றுக்குரிய குற்றப்பரிகாரமாகும். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள்! இவ்வாறு தன்னுடைய சட்ட திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துபவராய்த் திகழக் கூடும் என்பதற்காக! 5:90 இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். 5:91 மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா? 5:92 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் (மாறு செய்வதிலிருந்து) விலகியிருங்கள். இதனை (ஆணையை) நீங்கள் புறக் கணித்து விட்டால் (நமது தூதைத்) தெள்ளத் தெளிவாய் எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 5:93 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. (ஆனால் இனி) தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்த எந்தப் பொருள்களைவிட்டு தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும் இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான். 5:94 இறைநம்பிக்கை கொண்டவர்களே! (இஹ்ராமுடைய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகள் ஏதாவதொன்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். மறைவான நிலையிலும் தன்னை அஞ்சக்கூடியவர்கள் யார் என்று அல்லாஹ் அறிந்து கொள்வதற்காக! இவ்வாறு எச்சரித்த பிறகு யார் (அல்லாஹ் நிர்ணயித்த) வரம்பை மீறுகின்றாரோ அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. 5:95 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும். உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பலிப் பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அல்லது (அச்செயலுக்கு) குற்றப்பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும். தான் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே (இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது). முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விட்டான். எனவே யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால், அல்லாஹ் அவரைப் பழிவாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். 5:96 (இஹ்ராமுடைய நிலையில்) நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கும் பயணக்கூட்டத்தாருக்கும் பயன் தருவதற்காக கடல் வேட்டையும் அதனை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் வரை தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. யார் முன்னிலையில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழுங்கள்! 5:97 அல்லாஹ், கண்ணியமிக்க ஆலயமாகிய கஅபாவை மக்களுக்கு (அவர்களின் கூட்டு வாழ்க்கைக்கான) கேந்திரமாய் அமைத்தான். மேலும், சங்கைக்குரிய மாதத்தையும், பலி பிராணிகளையும் (அவற்றின் கழுத்தில் இடப்பட்ட) அடையாள மாலைகளையும் இதற்குத் துணை புரியக் கூடியனவாய் ஆக்கினான். எதற்கு எனில் நீங்கள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அல்லாஹ் திண்ணமாக நன்கு அறிகின்றான்; மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிபவனாக இருக்கின்றான். 5:98 இன்னும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தண்டனையளிப்பதில் கடுமையானவன்; மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான். 5:99 தூதுச் செய்தியை எடுத்துரைப்பதே தூதரின் பொறுப்பாகும்; நீங்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும், மூடி மறைக்கின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். 5:100 (நபியே!) நீர் அவர்களிடம் கூறிவிடும்: “தூய்மையானவையும், தூய்மையற்றவையும் ஒரு போதும் சமமாகமாட்டா. தூய்மையில்லாதவை பெருகிக்கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” 5:101 இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். 5:102 உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு கூட்டத்தார் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவற்றின் காரணமாகவே அவர்கள் நிராகரிப்பில் ஆழ்ந்து விட்டார்கள். 5:103 ‘பஹீரா’, ஸாயிபா, வஸீலா, ஹாம்,* என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆயினும் நிராகரிப்போர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர். 5:104 “மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தின் பக்கமும், இறைத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படுமாயின் “எங்கள் மூதாதையர் எவ்வழியில் வாழக்கண்டோமோ அவ்வழியே எங்களுக்குப் போதுமானது” என்று பதில் கூறுகிறார்கள். இவர்களின் மூதாதையர் எதையும் புரியாதவர்களாகவும், நேர்வழியைக் குறித்து எதையும் அறியாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களை இவர்கள் பின்பற்றிச் செல்வார்கள்? 5:105 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது. அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். 5:106 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவருக்கேனும் மரண வேளை நெருங்கி விட்டால், அவர் வஸிய்யத் மரண சாசனம் தரும் நேரத்தில் அதைப் பற்றிச் சாட்சியம் அளிப்பதற்கான விதிமுறை இதுவே; உங்களிடையே நீதமுள்ள இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரண வேதனை உங்களுக்கு வந்துவிட்டால் உங்களைத் தவிர வேறு இருவரைச் சாட்சிகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொள்வீர்களாயின் தொழுகைக்குப் பிறகு (பள்ளியில்) அவர்களை நீங்கள் தடுத்து வையுங்கள்! அவ்விருவரும் இறைவன் மீது ஆணையிட்டு (இவ்வாறு) கூறவேண்டும்: “நாங்கள் சொந்த லாபத்திற்காக சாட்சியத்தை விற்கமாட்டோம். மேலும், யாருக்காக சாட்சி சொல்கிறோமோ அவர் எங்கள் உறவினராக இருந்தாலும் சரியே! (அதற்காக அவருக்கு எந்தச் சலுகையும் காட்ட மாட்டோம்.) மேலும், அல்லாஹ்வுக்காக கூறும் சாட்சியத்தில் நாங்கள் எதையுமே மறைக்க மாட்டோம். அவ்வாறு செய்வோமாயின் திண்ணமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்.” 5:107 ஆனால் அவ்விருவரும் (பொய் சாட்சியம் கூறி) பாவத்திற்கு ஆளாகி விட்டார்கள் என்று திண்ணமாக அறியப்பட்டால் உரிமை பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அதிகத் தகுதி வாய்ந்த வேறு இருவர் அவ்விருவருடைய இடத்தில் (சாட்சிகூற) நிற்க வேண்டும். மேலும், “எங்களுடைய சாட்சியம் திண்ணமாக அவ்விருவருடைய சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியங் கூறுவதில்) வரம்பு மீறவில்லை. அவ்வாறு வரம்பு மீறியிருந்தால் திண்ணமாக நாங்கள் கொடுமைக்காரர்களாகி விடுவோம்” என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூற வேண்டும். 5:108 மக்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு அல்லது (குறைந்தபட்சம்) தம் சாட்சியங்களுக்குப் பிறகு (பிறர் சாட்சியம் அளித்து) தம் சாட்சியங்கள் மறுக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சி, (உண்மையாக) சாட்சி அளிப்பதற்கு இந்த வழிமுறைதான் அதிகப் பொருத்தமானதாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள்! அவனுக்கே செவிசாயுங்கள்! அல்லாஹ் (தனது கட்டளைக்கு) கீழ்ப்படியாதவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை. 5:109 அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்த்து, “உங்களு(டைய அழைப்பு)க்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?” என்று கேட்கும் நாளில், “எங்களுக்கு எதுவும் தெரியாது. மறைவான உண்மைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவன் நீயே!” என்று அவர்கள் (பணிந்து) கூறுவார்கள். 5:110 அல்லாஹ், இவ்வாறு கூறும் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! நான் உமக்கும் உம்முடைய அன்னைக்கும் வழங்கியிருந்த அருட்கொடைகளை நினைவுகூரும். பரிசுத்த ஆன்மாவின் மூலம் உமக்கு நான் உதவி செய்திருந்தேன். (அதனால்) நீர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் உரையாடினீர்; மேலும், நான் உமக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுத் தந்திருந்தேன். மேலும், நீர் எனது கட்டளைப்படி களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதினீர். அது எனது கட்டளைப்படி (உயிருள்ள) பறவையாகிவிட்டது. நீர் பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் எனது கட்டளைப்படி குணப்படுத்தினீர். நீர் மரணித்தவர்களை எனது கட்டளைப்படி வெளிக்கொணர்ந்தீர். மேலும், நீர் இஸ்ராயீலின் வழித்தோன்றலிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுசென்ற போது, அவர்களில் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் “இச்சான்றுகள் தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று கூறிய வேளையில், அவர்களை விட்டும் நான் உம்மைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாரும்!” 5:111 மேலும், “என்மீதும், என்னுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என்று திருத்தொண்டர்களாகிய ஹவாரிகளுக்கு நான் உணர்த்தியபோது அவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், நாங்கள் முஸ்லிம்கள் (முற்றிலும் அடிபணிந்தவர்கள்) என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று கூறினார்கள். 5:112 ஹவாரிகள் (இவ்வாறு) கேட்டதையும் நினைவு கூரும்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! உம்முடைய இறைவனால் வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கி வைக்க முடியுமா?” அதற்கு ஈஸா “நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பின், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று பதில் தந்தார். 5:113 அதற்கு அவர்கள் “நாங்கள் விரும்புவது இவற்றை மட்டுமே: நாங்கள் அத்தட்டிலிருந்து புசிக்க வேண்டும். அதன் மூலம் எங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைய வேண்டும்; மேலும் நீர் எங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையானவை என்று நாங்கள் அறிந்து அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்கள். 5:114 மர்யத்தின் குமாரர் ஈஸா “அல்லாஹ்வே! எங்கள் அதிபதியே! வானத்திலிருந்து எங்களுக்கு ஓர் உணவுத்தட்டை இறக்கி வைப்பாயாக! அது, எங்களுக்கும் எங்கள் காலத்தில் வாழ்பவர்களுக்கும் இனி வரக்கூடியவர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பாகவும் மேலும், உன்னிடமிருந்து ஒரு சான்றாகவும் திகழட்டும்! மேலும், எங்களுக்கு ஆகாரம் வழங்குவாயாக! வழங்குவோரில் மிகச் சிறந்தவன் நீயே!” என்று இறைஞ்சினார். 5:115 அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்கு அதனை இறக்கித் தருகிறேன். ஆனால், அதன் பின்னர் உங்களில் யாரேனும் நிராகரித்தால், அகிலத்தாரில் இதுவரை யாரையும் தண்டிக்காத அளவுக்கு அவரை நான் மிகவும் கடுமையாகத் தண்டிப்பேன்” என பதில் அளித்தான். 5:116 (ஆக இப்பேருதவிகளையெல்லாம் நினைவுபடுத்தி) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய். 5:117 “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே அடிபணியுங்கள்!” என்று நீ எனக்குக் கட்டளையிட்டதைத் தவிர வேறெதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய்! மேலும் நீ அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய். 5:118 (இப்போது) நீ அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்.” 5:119 அப்போது அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கக்கூடிய நாளாகும் இது. இத்தகையோருக்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் உண்டு. அங்கு அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.” 5:120 வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்புகளின் பேராட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான்!
அத்தியாயம்  அல்அன்ஆம்  6 : 1-35 / 165
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
6:1 வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அப்படியிருந்தும் சத்தியத்தை ஏற்க மறுத்தோர், மற்றவர்களையும் தம் இறைவனுக்குச் சமமாக்குகின்றார்கள். 6:2 அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு உங்களுக்காக ஒரு வாழ்க்கைத் தவணையை நிர்ணயித்தான். மேலும், அவனிடத்தில் முடிவு செய்யப்பட்ட மற்றொரு தவணையும் உண்டு. ஆனால் நீங்களோ சந்தேகத்தில் உழல்கின்றீர்கள். 6:3 மேலும், அந்த ஏகனாகிய அல்லாஹ்தான் வானங்களிலும், பூமியிலும் இறைவனாக இருக்கின்றான். உங்களுடைய மறைவான, வெளிப்படையான அனைத்து நிலைமைகளையும் அவன் அறிகின்றான். மேலும், நீங்கள் சம்பாதிக்கின்ற (நல்வினை, தீவினை ஆகிய)வற்றையும் அறிகின்றான். 6:4 (மக்களின் நிலை என்னவெனில்) அவர்களுடைய அதிபதியின் சான்றுகளில் எந்த ஒரு சான்று அவர்களிடம் வந்தபோதும் அதனை அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர். 6:5 இவ்வாறே இப்போது அவர்களிடம் வந்துள்ள சத்தியத்தையும் அவர்கள் பொய்யென்று சொல்கிறார்கள். எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய சில செய்திகள் விரைவில் அவர்களிடம் வந்துவிடும் 6:6 (தத்தமது காலத்தில் ஆட்சியுரிமை பெற்றிருந்த) எத்தனையோ சமூகத்தாரை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்டிருக்கிறோம் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்கு வழங்கிடாத ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம். மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். இன்னும் (அவர்களுக்குப் பகரமாக) வேறு தலைமுறையினரை உருவாக்கினோம். 6:7 (நபியே!) தாளில் எழுதப்பட்ட ஒரு வேதத்தை நாம் உம்மீது இறக்கி, மக்கள் அதனைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் கூட, சத்தியத்தை நிராகரிப்பவர்கள், ‘இது அப்பட்டமான மந்திரவித்தையே அன்றி வேறில்லை’ என்றுதான் கூறியிருப் பார்கள். 6:8 மேலும், இந்நபியிடத்தில் ஏன் ஒரு வானவர் அனுப்பப்படவில்லை? என்றும் கேட்கிறார்கள். வானவரை நாம் இறக்கியிருப்போமாயின் எப்போதோ விவகாரம் முடிந்துவிட்டிருக்கும். பிறகு அவர்களுக்கு எத்தகைய அவகாசமும் கிடைத்திருக்காது. 6:9 இன்னும் நாம் வானவரை நபியாக அனுப்ப நேர்ந்தால்கூட அவரை மனித உருவிலேயே அனுப்பிவைத்திருப்போம். மேலும், இப்போது இவர்கள் உழன்று கொண்டிருக்கின்ற சந்தேகத்திலேயே (அப்போதும்) உழன்று கொண்டிருக்கும்படிச் செய்திருப்போம். 6:10 (நபியே,) உமக்கு முன்னரும் தூதர்களில் பலர் பரிகாசம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆயினும் அவர்களைக் கேலி செய்தவர்கள் எதனைக் குறித்துக் கேலி செய்து வந்தார்களோ, அதுவே கடைசியில் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. 6:11 (அவர்களிடம்) நீர் கூறும்: “(சற்று) பூமியைச் சுற்றிப் பாருங்கள், பிறகு சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனியுங்கள்!” 6:12 “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் யாருக்குரியவை?” என்று நீர் அவர்களிடம் கேளும். “அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை” என்று கூறும். கருணை புரிவதை அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (எனவே உங்களில் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்களையும், அதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்பவர்களையும் உடனே அவன் பிடிப்பதில்லை) மறுமைநாளில் அவன் உங்கள் அனைவரையும் திண்ணமாக ஒன்று திரட்டுவான். இது சந்தேகத்திற்கிடமில்லாத ஓர் உண்மையாகும். ஆனால், எவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்கிக் கொண்டார்களோ அவர்கள் இதனை ஏற்பதில்லை. 6:13 மேலும், இரவிலும், பகலிலும் நிலை கொண்டுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். மேலும், அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவுமிருக்கிறான். 6:14 (நபியே!) கூறுவீராக: “வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வையன்றி வேறு ஒருவரை நான் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவன் உணவு வழங்குபவனேயன்றி உணவைப் பெறுபவனல்லன்.” மேலும், நீர் கூறுவீராக: “அவன் முன்னிலையில் சிரம் பணிவோரில் முதன்மையானவனாய் நான் ஆகிவிடவேண்டும் என்பதே எனக்கு இடப்பட்ட கட்டளையாகும்.” (இன்னும் எனக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.) இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்! 6:15 கூறுவீராக: “நான் என்னுடைய அதிபதியின் கட்டளைக்கு அடிபணியாது போனால், ஒரு மாபெரும் (பயங்கரமான) நாளின் தண்டனையை அனுபவிக்க வேண்டி வருமே என்று நிச்சயம் நான் அஞ்சுகிறேன். 6:16 அன்றைய நாளில் தண்டனையிலிருந்து எவர் காப்பாற்றப்படுகின்றாரோ அவருக்கு உண்மையில் அல்லாஹ் தன் பெருங்கருணையைப் பொழிந்து விட்டான்! இதுதான் தெளிவான வெற்றியாகும். 6:17 அல்லாஹ் உமக்கு ஏதேனும் தீங்கினைத் தந்துவிட்டால், அதிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவர் அவனைத் தவிர வேறு யாருமில்லை. மேலும், அவன் உமக்கு ஏதேனும் நன்மை(யளித்துச் செழிப்புறச்) செய்வானாகில், அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். 6:18 அவன் தன் அடிமைகள் மீது முழு அதிகாரமுடையவன். மேலும், அவன் நுண்ணறிவாளனாகவும் யாவற்றையும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” 6:19 நீர் கேளும்: “யாருடைய சாட்சி எல்லாவற்றையும் விட மேலானது?” நீர் கூறும்: “எனக்கும், உங்களுக்கும் இடையில் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான். மேலும் இக்குர்ஆன் எனக்கு வஹி மூலம் அருளப்பட்டது. எதற்காகவெனில், உங்களையும் இன்னும் யார் யாரையெல்லாம் இது எட்டுகிறதோ அவர்களையும் இதன் மூலம் நான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக...! அல்லாஹ்வுடன் மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உண்மையிலேயே நீங்கள் சாட்சியங்கூற முடியுமா?” “நான் அவ்வாறு ஒருபோதும் சாட்சி அளிக்கமாட்டேன்” என்று கூறுவீராக! “திண்ணமாக, அல்லாஹ்தான் ஏக இறைவன். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கும் இணைவைப்புச் செயல்களிலிருந்து முற்றிலும் நான் விலகியவனாவேன்” என்றும் கூறுவீராக! 6:20 யாருக்கு நாம் வேதத்தை அருளினோமோ அவர்கள் தம் குழந்தைகளை (ஐயமற) அறிந்து கொள்வது போல், இந்த விஷயத்தையும் நன்கறிவார்கள். ஆயினும் எவர்கள் தம்மைத் தாமே பேரிழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்களோ, அவர்கள் இதனை ஏற்பதில்லை. 6:21 அல்லாஹ்வின் மீது பொய்யை ஏற்றிச் சொல்பவனைவிட அல்லது அவனுடைய சான்றுகளைப் பொய் என வாதிடுபவனைவிட அக்கிரமக்காரன் யார்? இத்தகைய அக்கிரமக்காரர்கள் திண்ணமாக ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள். 6:22 மேலும், அந்நாளில் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். பிறகு இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தவர்களிடம், “உங்களுடைய கடவுளெனக் கருதி யார் யாரையெல்லாம் நீங்கள் இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நாம் கேட்போம். 6:23 “எங்கள் இறைவனாகிய உன்மீது ஆணையாக! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை” என்று (ஒரு பொய்யைக்) கூறுவதைத் தவிர வேறு எந்தவொரு குழப்பத்தையும் அவர்கள் விளைவிக்க மாட்டார்கள். 6:24 பாருங்கள், (அவ்வேளை) அவர்கள் தங்களைப் பற்றியே எவ்வாறெல்லாம் பொய் உரைக்கின்றார்கள்! மேலும் அங்கு அவர்களின் போலிக் கடவுள்கள் எல்லாம் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும். 6:25 அவர்களில் சிலர், நீங்கள் கூறுவதைச் செவி சாய்த்துக் கேட்கின்றார்கள். ஆயினும் நிலைமை என்னவெனில், நாம் அவர்களுடைய இதயங்களில் திரையைப் போட்டிருக்கின்றோம். இதனால் அவர்கள் அதனைக் கொஞ்சமும் புரிந்துகொள்வதில்லை. மேலும், அவர்களுடைய காதுகளை நாம் மந்தமாக்கி விட்டோம். (எல்லாவற்றையும் செவியேற்ற பிறகும் எதனையும் செவியேற்காதவர்கள் போல் இருக்கின்றார்கள்.) அவர்கள் எந்த ஒரு சான்றினைப் பார்த்தாலும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எந்த அளவுக்கெனில், உம்மிடம் வந்து அவர்கள் தர்க்கம் புரியும்போது அவர்களில் யார் நிராகரித்திட வேண்டுமென முடிவு செய்துள்ளார்களோ, அவர்கள் (இந்த அறிவுரைகள் அனைத்தையும் கேட்ட பின்பும்) “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!” என்று தான் கூறுகிறார்கள். 6:26 அவர்கள் இந்த சத்தியத்தை ஏற்கவிடாமல் (மக்களையும்) தடுக்கிறார்கள்; தாமும் இதை விட்டு விலகி ஓடுகிறார்கள். (இவ்வாறு செய்வதனால் அவர்கள் உமக்கு ஏதோ தீங்கு இழைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர்.) உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே அழிவுக்குள்ளாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அதைப்பற்றி அவர்கள் உணர்வதில்லை. 6:27 அந்தோ! நரகத்தின் விளிம்பில் அவர்கள் நிறுத்தப்படும்போது அந்நிலையை நீர் பார்க்க வேண்டுமே! அந்நேரத்தில் “அந்தோ! நாங்கள் உலகிற்குத் திரும்பிச் செல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா? (அவ்வாறு கிடைத்தால்) எங்களுடைய இறைவனின் சான்றுகளைப் பொய்யென்று வாதிடாமல், இறைநம்பிக்கை கொண்டவர்களாக திகழ்ந்திருப்போமே!” என்று அவர்கள் புலம்புவார்கள். 6:28 அவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், முன்பு எந்த உண்மையை அவர்கள் மூடிமறைத்திருந்தார்களோ அந்த உண்மை அப்போது அவர்கள் முன்னால் எந்தத் திரையுமின்றி தெளிவாகி விட்டிருக்கும். ஒருவேளை அவர்கள் முந்திய வாழ்க்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்வார்கள். திண்ணமாக, அவர்கள் பொய்யர்கள்தாம்! 6:29 (ஆகையால்தான் ‘உலகிற்குத் திரும்ப அனுப்பப்பட்டால் நம்பிக்கை கொள்வோம்’ என்று பொய் சொல்கிறார்கள். இவ்வுலகில்) அவர்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான். மேலும், நாம் இறந்த பிறகு ஒருபோதும் திரும்ப எழுப்பப்பட மாட்டோம்.” 6:30 அவர்கள் தம் அதிபதியின் திருமுன் நிறுத்தப்படும் காட்சியை நீர் காணவேண்டுமே! அப்போது அவன் அவர்களிடம் வினவுவான்: “இது உண்மை அல்லவா?” அதற்கவர்கள், “ஆம், எங்கள் அதிபதியே, இது உண்மையேதான்” என பதில் கூறுவார்கள். அதற்கு அவன் கூறுவான்: “சரி, நீங்கள் இந்த உண்மையை நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்!” 6:31 அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதைப் பொய் என்று வாதிட்டவர்கள் பேரிழப்புக்குள்ளாகி விட்டார்கள். எந்த அளவுக்கு எனில், அந்நேரம் திடீரென்று வந்துவிடும்போது, “ஐயகோ! இவ்விஷயத்தில் நாம் எத்தகைய குறைபாடுகளைச் செய்து விட்டோம்” என்று இவர்கள் புலம்புவார்கள். அப்பொழுது அவர்களின் நிலை எப்படி இருக்கும் எனில், தங்களுடைய பாவச்சுமைகளைத் தங்களுடைய முதுகுகளில் சுமந்தவாறு இருப்பார்கள். பாருங்கள்! அவர்கள் சுமந்து கொண்டிருப்பது எத்துணைக் கெட்டது! 6:32 உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. உண்மையில், எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகின்றார்களோ அவர்களுக்கு மறுமை இல்லமே மிகவும் நலமுடையதாயிருக்கும். அவ்வாறிருக்க, நீங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தமாட்டீர்களா? 6:33 (நபியே!) இவர்கள் (புனைந்து) கூறுபவை திண்ணமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் அவர்கள் உம்மைப் பொய்யரென்று தூற்றவில்லை; மாறாக அல்லாஹ்வின் வசனங்களையே இவ்வக்கிரமக்காரர்கள் மறுக்கின்றனர். 6:34 உமக்கு முன்னரும் தூதர்கள் பலர் பொய்யரென்று தூற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், நம்முடைய உதவி அவர்களிடம் வரும் வரை, பொய்யர்கள் என்று தாம் தூற்றப்பட்டதையும் பொறுமையுடன் அவர்கள் சகித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுவதற்கான வல்லமையுடையவர் எவருமிலர். இன்னும் முந்திய நபிமார்(களுக்கு ஏற்பட்ட நிலைமை)களின் செய்திகள் உமக்குக் கிடைத்தே உள்ளன. 6:35 இருப்பினும் இம்மக்கள் புறக்கணிப்பதை உம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால், உமக்கு வலிமையிருக்குமாயின் பூமியில் சுரங்க வழியைத் தேடியோ, வானில் ஏணிவைத்து ஏறியோ ஏதேனும் ஒரு சான்றினை நீர் அவர்களிடம் கொண்டுவர முயற்சி செய்வீராக! அல்லாஹ் நாடியிருந்தால் நிச்சயமாக அவர்கள் எல்லோரையும் நேர்வழியில் ஒன்று திரட்டியிருப்பான். எனவே அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிடாதீர்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)