அத்தியாயம்  அல்மாயிதா  5 : 27-81 / 120
5:27 (நபியே!) இனி, அவர்களுக்கு ஆதமுடைய இரு மகன்களின் வரலாற்றைக் கூடுதல் குறைவின்றி எடுத்துரைப்பீராக! அவர்கள் இருவரும் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவருடைய குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றொருவருடையது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டா மவர், “திண்ணமாக நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கூறினார். அதற்கு முதலாமவர் கூறினார்: “இறையச்சமுடையோரின் வழிபாடுகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்; 5:28 நீ என்னைக் கொல்வதற்குக் கை நீட்டினாலும் நான் உன்னைக் கொல்வதற்குக் கை நீட்ட மாட்டேன். நான் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறேன். 5:29 என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்தையும் நீயே சேகரித்துக் கொண்டு நீ நரகவாசியாகி விடுவதை நான் விரும்புகின்றேன். இதுதான் அக்கிரமக்காரர்கள் புரிந்த கொடுமைக்குச் சரியான கூலியாகும்.” 5:30 இறுதியில் தன்னுடைய சகோதரரைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவன் அவரைக் கொலை செய்து பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான். 5:31 பிறகு அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று; அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக! இதனைக் கண்ணுற்ற அவன், “அந்தோ, என் துயரமே! இந்த காகத்தைப் போன்றுகூட நான் இல்லையே! (அவ்வாறு இருந்திருந்தால்) என்னுடைய சகோதரருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே! எனப் புலம்பினான். பின்னர், தான் செய்தது குறித்து அவன் பெரிதும் வருந்தினான். 5:32 இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர். 5:33 எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களுடைய மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவாகும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கிறது. 5:34 எனினும் உங்கள் பிடியில் நீங்கள் அவர்களைக் கொண்டு வருவதற்கு முன் எவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்களோ நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனும், மிகுந்த கருணை உள்ளவனுமாவான். 5:35 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும். 5:36 நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்! 5:37 அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும். 5:38 திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினைமிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனும் ஆவான். 5:39 எனவே, யாரேனும் அநீதி இழைத்தபின் பாவ மன்னிப்புக்கோரி, தன்னைச் சீர்திருத்திக் கொண்டால் அல்லாஹ்வின் கருணைப் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்புகிறது. நிச்சயமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும் அளப்பரிய கருணையுள்ளவனுமாவான். 5:40 அல்லாஹ் வானங்கள், பூமி இவற்றின் ஆட்சிக்கு உரியவன் என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடுபவர்களை அவன் தண்டிப்பான்; மேலும் நாடுபவர்களை மன்னிப்பான்; அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான். 5:41 தூதரே! நிராகரிப்பில் முனைப்புடன் இருக்கின்றவர்கள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று வாயளவில் கூறிவிட்டு, உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களாயினும் சரி, அல்லது யூதர்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் சரி! அவர்களின் நிலை எவ்வாறு உள்ளதென்றால் பொய்யுரைகளை அதிகமாகச் செவிமடுக்கின்றார்கள்; உங்களிடம் என்றுமே வந்திராத மற்றவர்களுக்காக இரகசியங்களைத் துப்பறிந்து கொண்டு திரிகின்றார்கள். இறைவேதத்தின் சொற்களை அவற்றிற்குரிய சரியான இடங்கள் வரையறுக்கப்பட்டிருக்க, அவற்றின் உண்மையான பொருளிலிருந்து மாற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் மக்களிடம் “உங்களுக்கு இன்ன கட்டளை கொடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிடில் ஏற்க மறுத்து விடுங்கள்” என்று கூறுகின்றார்கள். ஒருவனைக் குழப்பத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டானாகில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்ற உம்மால் முடியாது. இவர்களுடைய உள்ளங்களைத் தூய்மை செய்ய அல்லாஹ் நாடவில்லை. இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான்; மறுமையிலும் கடும் தண்டனைதான் இருக்கின்றது. 5:42 அவர்கள், பொய்யுரைகளைச் செவியேற்பவர்களும் தடுக்கப்பட்ட பொருள்களை அதிகம் உண்பவர்களுமாவார்கள். எனவே, அவர்கள் உம்மிடம் (தமது வழக்குகளைச் சமர்ப்பிக்க) வந்தால் விரும்பினால் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும், அல்லது மறுத்து விடுவதற்கும் உமக்கு உரிமை உண்டு; நீர் மறுத்து விட்டால் அவர்களால் எந்தத் தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்து விட முடியாது. மேலும், தீர்ப்பு வழங்குவீராயின் அவர்களிடையே நீதியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவீராக! திண்ணமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான். 5:43 மேலும், உம்மை நீதிபதியாக அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவர்களிடமோ அல்லாஹ்வின் சட்டங்கள் அடங்கிய தவ்ராத் இருந்த போதிலும் அவர்கள் அதனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை. 5:44 திண்ணமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழி காட்டுதலும் ஒளியும் இருந்தது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் அடிபணிந்த நபிமார்கள் அனைவரும் அதைக் கொண்டே இந்த யூதர்(களின் விவகாரங்)களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். அவ்வாறே ரப்பானிகளும், அஹ்பாரும்* (அதனைக் கொண்டே தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்)! ஏனெனில், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாகவுமிருந்தார்கள். எனவே (யூதக் கூட்டத்தாரே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்! மேலும், என்னுடைய திருவசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள். 5:45 அ(த் தவ்ராத்)தில் யூதர்கள் மீது “உயிருக்குப் பதில் உயிரும், கண்ணுக்குப் பதில் கண்ணும், மூக்குக்குப் பதில் மூக்கும், காதுக்குப் பதில் காதும், பல்லுக்குப் பதில் பல்லும் (இதே போன்று) காயங்களுக்கும் சமமான முறையில் பழிவாங்கப்படும்” என்று நாம் விதியாக்கியிருந்தோம். ஆயினும், யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டுவிடுவாராகில், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள். 5:46 பிறகு அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளில் மர்யம் உடைய குமாரர் ஈஸாவை நாம் பின்தொடரச் செய்தோம். தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அவர்முன் (எஞ்சி) இருந்தனவோ அவற்றை அவர் மெய்ப்படுத்துபவராய் இருந்தார். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. இன்னும் தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அப்போது எஞ்சியிருந்தனவோ அவற்றை மெய்யென உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அது திகழ்ந்தது. மேலும், இறையச்சமுடையவர்களுக்கு முற்றிலும் நேர்வழி காட்டக் கூடியதாகவும், நல்லுரை யாகவும் அது இருந்தது. 5:47 மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர். 5:48 பிறகு (நபியே!) சத்தியத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்வேதத்தை உம்மளவில் நாம் அனுப்பினோம். இது, அல்கிதாபின் அறிவுரைகளில் தன் முன்னே எவை எஞ்சி நிற்கின்றனவோ அவற்றை உறுதிப்படுத்தக்கூடியதாயும், அவற்றைப் பாதுகாக்கக் கூடியதாயுமிருக்கின்றது; எனவே, நீர் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப மக்களின் விவகாரங்களில் தீர்ப்பளிப்பீராக! மேலும், உம்மிடம் வந்திருக்கும் சத்தியத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர் நாம் (மனிதர்களாகிய) உங்களில் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஷரீஅத்தையும் ஒரு செயல்வழியையும் அமைத்துத் தந்தோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாகவும் ஆக்கியிருக்க முடியும்! ஆனால் அவன் உங்களுக்கு அளித்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகத்தான் (இவ்வாறு செய்தான்). எனவே நன்மைகளில் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்! இறுதியில் நீங்கள் எல்லாரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது. பிறகு நீங்கள் எவற்றைக் குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அவற்றின் உண்மை நிலையை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். 5:49 எனவே (நபியே!) அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள்; அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களைத் துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர். 5:50 (அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களென்றால்) பிறகு ஜாஹிலியத்தின்* தீர்ப்பினையா அவர்கள் விரும்புகிறார்கள்! ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்கக்கூடியவன் யார்? 5:51 இறைநம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் சிலர் சிலருக்கு நெருங்கிய நண்பர்களாய் இருக்கின்றனர். மேலும், உங்களில் எவரேனும் அவர்களைத் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொண்டால், அவரும் அவர்களைச் சார்ந்தவராகவே கணிக்கப்படுவார். திண்ணமாக, அல்லாஹ் அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை. 5:52 எவருடைய உள்ளங்களில் நயவஞ்சகப் பிணி உள்ளதோ அத்தகையோர் அவர்களிடையிலேயே முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காண்கின்றீர். “ஏதேனுமொரு துன்பம் எங்களைப் பிடித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ் தன்னிடமிருந்து (தீர்க்கமான) வெற்றியையோ ஏதேனுமோர் உதவியையோ அளித்துவிடக்கூடும்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த (நயவஞ்சகத்)தைக் குறித்து வருந்துவார்கள். 5:53 அவ்வேளை இறைநம்பிக்கை கொண்டவர்கள் வினவுவார்கள்: “நாங்களும் உங்களோடுதான் இருக்கின்றோம் என்று பேரார்வத்துடன் கூறி, அல்லாஹ்வைக் கொண்டு மிக உறுதியான முறையில் சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தாமா?” (இறுதியில்) அந்நயவஞ்சகர்களுடைய எல்லாச் செயல்களும் வீணாகி விட்டன. மேலும், அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். 5:54 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். 5:55 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும்தாம் உண்மையிலேயே உங்களுக்கு உற்ற நண்பர்கள். (அந்த இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர் எனில்,) தொழுகையை நிலைநாட்டுவார்கள்; மேலும், ஜகாத்தை அளிப்பார்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வார்கள். 5:56 எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொள்கின்றாரோ அவர் தெரிந்து கொள்ளட்டும்: ‘அல்லாஹ்வின் குழுவினர்தாம் வெற்றியாளர்கள்.’ 5:57 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் உங்களுடைய தீனை (நெறியை) கேலிக்கும் விளையாட்டுக்கும் உரித்தாக்கிக் கொண்டார்களோ அவர்களையும், மற்ற நிராகரிப்பாளர்களையும் உங்களின் உற்ற நண்பர்களாய் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். 5:58 மேலும், நீங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுத்தால், அதனை இவர்கள் கேலிக்கும் விளையாட்டுக்கும் உரியதாக எடுத்துக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம்: அவர்கள் அறியாத மக்களாய் இருப்பதேயாகும். 5:59 நீர் அவர்களிடம் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்களுக்கு இறக்கியருளப்பட்ட அறிவுரைகள் மீதும், இன்னும் எங்களுக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகத்தான் எங்கள் மீது நீங்கள் வெறுப்புக் காட்டுகின்றீர்கள். மேலும், உங்களில் பெரும்பாலோர் தீயவர்களாகவே இருக்கின்றீர்கள்.” 5:60 மேலும், கூறுங்கள்: “அல்லாஹ்விடத்தில் இ(த்தீய)வர்களின் கதியைவிட இன்னும் மோசமான கதியுடையோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” எவர்களை அல்லாஹ் சபித்தானோ, எவர்கள் மீது கோபம் கொண்டானோ, மேலும் எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றினானோ மேலும் எவர்கள் தாஃகூத்துக்கு அடிபணிந்தார்களோ அத்தகையவர்கள்தாம் அவர்களைவிட மிகவும் தரங்கெட்டவர்கள்; மேலும், அவர்கள் செம்மையான பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர். 5:61 அவர்கள் உங்களிடம் வரும்போது “நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆயினும் அவர்களோ இறைநிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இறைநிராகரிப்புடன்தான் திரும்பியும் சென்றார்கள். மேலும், (தம் உள்ளங்களில்) அவர்கள் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான். 5:62 மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறிய செயல்களிலும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காணுகிறீர். அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் எத்துணைத் தீமையானவை! 5:63 தீய வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலிருந்தும் அவர்களின் குருமார்களும் அறிஞர்களும் அவர்களை ஏன் தடுப்பதில்லை? வாழ்நாள் முழுவதும் இவர்கள் புரிந்து வரும் சாதனை எத்துணை மோசமானது! 5:64 யூதர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது.” கட்டப்பட்டிருப்பவை அவர்களுடைய கைகள்தாம். அவர்கள் பேசிக் கொண்டிருந்த இந்தப் பேச்சின் காரணமாக சாபத்திற்குள்ளானார்கள். அல்லாஹ்வின் கைகளோ விரிந்திருக்கின்றன. தான் நாடும் விதத்தில் அவன் அள்ளி வழங்குகின்றான். (உண்மை யாதெனில்) உம்முடைய இறைவனிடமிருந்து உம்மளவில் இறக்கிவைக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், அசத்தியப்போக்கையும் இன்னும் அதிகப்படுத்திவிட்டது. மேலும் (இதற்குத் தண்டனையாக) மறுமைநாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பு உணர்ச்சியையும் நாம் விதைத்து விட்டோம். போர் நெருப்பை அவர்கள் மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். அவர்கள் பூமியில் குழப்பத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். (ஆனால்) இத்தகைய குழப்பவாதிகளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. 5:65 வேதம் அருளப்பட்டவர்கள் (இவ்வரம்பு மீறிய போக்கினைக் கைவிட்டு) இறைநம்பிக்கை கொண்டு, மேலும் இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால், அவர்களின் தீமைகளை அவர்களை விட்டு நாம் அகற்றியிருப்போம். மேலும் அருட்கொடை நிரம்பிய சுவனங்களில் அவர்களை நுழையச் செய்திருப்போம். 5:66 மேலும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட இதர வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்காக ஆகாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும்; கீழிருந்தும் பொங்கிப் பெருகியிருக்கும். ஆயினும் அவர்களில் சிலர் நேர்மையாளர்களாய் இருக்கின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தீய செயல்கள் புரிபவர்கள் ஆவார்கள். 5:67 தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! நீர் அவ்வாறு செய்யாவிடில் அவன் வழங்கிய தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றியவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுபவனாக இருக்கின்றான். (உங்களுக்கு எதிராக) நிராகரிப்போருக்கு வெற்றிக்கான பாதையை அல்லாஹ் ஒருபோதும் காண்பிக்க மாட்டான். 5:68 “வேதம் அருளப்பட்டவர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட இதர வேதங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாதவரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே!) தெளிவாய்க் கூறிவிடுங்கள். உம்மீது இறக்கி வைக்கப்பட்ட இந்த வேதக் கட்டளை அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், நிராகரிப்பையுமே இன்னும் அதிகப்படுத்தி விட்டது. ஆயினும் நிராகரிப்போரின் நிலை குறித்துச் சிறிதும் நீர் வருந்தாதீர்! 5:69 (இங்கு யாருக்கும் எதிலும் ஏகபோக உரிமை கிடையாது என்பதனை நன்கறிந்து கொள்ளுங்கள்.) முஸ்லிம்கள், யூதர்கள், ஸாபிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரில், யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 5:70 உண்மையில் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் (வலுவான) வாக்குறுதி வாங்கினோம். மேலும், அவர்களிடம் இறைத்தூதர்கள் பலரையும் அனுப்பினோம். (ஆயினும்) யாரேனும் ஒரு தூதர் அவர்களின் மனம் விரும்பாதவற்றை அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) சிலரை அவர்கள் பொய்யர் எனத் தூற்றினர்; சிலரைக் கொலை செய்தனர். 5:71 இதனால் எந்த ஃபித்னாவும் (குழப்பமும்) ஏற்படாது என்றும் தாங்களாகவே எண்ணிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் ஆகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களை மன்னித்தபோது அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அதிகமாக குருடர்களாயும் செவிடர்களாயும் ஆகிவிட்டனர். அவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான். 5:72 திண்ணமாக, “மர்யம் உடைய குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகிவிட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!” எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்திருக்கின்றான். மேலும், அவனுடைய இருப்பிடம் நரகமாகும். மேலும், இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. 5:73 நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறு எந்த இறைவனு மில்லை. தாம் இவ்வாறு கூறுவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், இத்தகைய நிராகரிப்பாளர்கள் அனைவர்க்கும் துன்புறுத்தும் தண்டனை கொடுக்கப்பட்டே தீரும். 5:74 (அவ்வாறிருக்க) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோரிட வேண்டாமா? மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும், மாபெரும் கருணையாளனும் ஆவான். 5:75 மர்யத்தின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் இறைத்தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். மேலும், அவருடைய அன்னை வாய்மையுள்ள ஒரு பெண்மணியாவார். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தார்கள். பாருங்கள்! நாம் (சத்தியத்திற்கான) சான்றுகளை எவ்வாறெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக்குகின்றோம். மீண்டும் பாருங்கள்; அவர்கள் எவ்வாறெல்லாம் உண்மையை விட்டுப் பிறழ்ந்து செல்கிறார்கள். 5:76 நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு இழப்பையோ லாபத்தையோ அளிப்பதற்கு சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்? ஆனால் அல்லாஹ்தான் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கு அறிபவனும் ஆவான்.” 5:77 நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர் களே! உங்கள் தீனில் (நெறியில்) அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்! மேலும், உங்களுக்கு முன்னர் தாமும் வழிகெட்டு, பலரையும் வழிகெடுத்து மேலும், நேரிய வழியிலிருந்து தடம்புரண்டு போன மக்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!” 5:78 இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும், இறைவரம்புகளை மீறியவாறு இருந்தார்கள். 5:79 தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன. 5:80 இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும், உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்கள் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங் கொண்டான். மேலும் நிரந்தரமான வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள். 5:81 உண்மையிலேயே அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின் மீதும் அவருக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)