அத்தியாயம்  அல் ஃபத்ஹ்  48 : 18-29 / 29
48:18 இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான். 48:19 ஏராளமான போர்ச்செல்வங்களையும் அவர்களுக்கு வழங்கினான். அவற்றை அவர்கள் (விரைவில்) பெற்றிடுவார்கள். அல்லாஹ் மிக வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 48:20 ஏராளமான போர்ச்செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றான்; அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்! மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். மேலும், மக்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதைத் தடுத்துவிட்டான்; இது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்வதற்காகவும், அல்லாஹ், நேர்வழியின் பக்கம் செல்லும் பேற்றினை உங்களுக்கு வழங்குவதற்காகவும்தான்! 48:21 (இவை தவிர) இப்போது உங்களால் சாதிக்க முடியாத வேறு பல கனீமத் போர்ச் செல்வங்களையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ் அவற்றை முழுமையாகச் சூழ்ந்திருக்கின்றான் மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். 48:22 இந்த இறைநிராகரிப்பாளர்கள் (இந்த நேரத்தில்) உங்களுடன் போரிட்டிருந்தால் நிச்சயம் புறங்காட்டி ஓடியிருப்பார்கள். மேலும், எந்தப் பாதுகாவலரையும் உதவியாளரையும் பெற்றிருக்க மாட்டார்கள். 48:23 முன்பிருந்தே நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் நியதியாகும் இது. மேலும், அல்லாஹ்வின் நியதியில் எந்த மாறுதலையும் நீர் காண மாட்டீர். 48:24 அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான். 48:25 அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது)! அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம். 48:26 (இதே நோக்கத்திற்காக) இந்த இறைநிராகரிப்பாளர்கள் தங்களின் உள்ளங்களில் வைராக்கியத்தை மூட வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டபோது அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் நிம்மதியை இறக்கியருளினான். மேலும், நம்பிக்கையாளர்களை இறையச்சமுள்ள வாக்கைப் பேணி நடப்போராய் விளங்கச் செய்தான். அவர்கள்தாம் அதற்கு மிகவும் அருகதையுடையோராயும், உரிமையுடையோராயும் இருந்தார்கள். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். 48:28 அல்லாஹ்தான் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அவர், அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக! இந்த உண்மைக்கு அல்லாஹ்வின் சாட்சி போதுமானதாகும். 48:29 முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர்களும் தங்களுக்கிடையே கருணைமிக்கவர்களுமாவர். அவர்கள் ருகூவு, ஸுஜூது* செய்பவர்களாயும், அல்லாஹ்வின் அருளையும், திருப்தியையும் தேடுபவர்களாயும் இருப்பதை நீர் காண்பீர். அவர்களின் முகங்களில் ஸுஜூதின் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளப்படுகிறார்கள். இது தவ்ராத்தில் • காணப்படுகின்ற அவர்களின் தன்மையாகும். மேலும், இன்ஜீலில் # அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள உவமை வருமாறு: ஒரு பயிர்; அது முதலில் குருத்தை வெளிப்படுத்தியது. பின்னர் அதை வலுப்படுத்தியது; பின்னர் அது பருத்தது. பிறகு, அது தன்னுடைய தண்டின் மீது செவ்வனே நின்றது. விவசாயிகளை அது மகிழ்விப்பதற்காகவும், அவர்கள் பூத்துக் குலுங்குவதைக் கண்டு நிராகரிப்பாளர்கள் பொறாமை அடைவதற்காகவும்தான்! இக்குழுவினரில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
அத்தியாயம்  அல் ஹுஜுராத்  49 : 1-18 / 18
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
49:1 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். 49:2 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக் கொள்வதைப் போல், நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்கள் அனைத்தும் வீணாகிவிட வேண்டாம், நீங்கள் அதனை அறியாத நிலையில்! 49:3 திண்ணமாக, எவர்கள் இறைத்தூதரின் திருமுன் (உரையாடும்போது) தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றன. 49:4 (நபியே, உமது) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மைக் கூப்பிடுவோரில் பெரும்பாலோர் அறியாதவர்களே! 49:5 நீர் வெளியே வரும் வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால், அது அவர்களுக்கே நலம் தரத்தக்கதாய் இருந்திருக்கும். அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான். 49:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. 49:7 நன்றாக அறிந்து கொள்ளுங்கள்; உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்; பல விவகாரங்களில் உங்கள் சொல்லை அவர் ஏற்றுக் கொள்வாராயின், நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள். ஆனால், அல்லாஹ் உங்களுக்கு (ஈமானில்) நம்பிக்கையில் பற்றுதலை ஏற்படுத்தினான். அதனை உங்கள் உள்ளத்திற்கு உகந்ததாய் ஆக்கினான். மேலும், நிராகரிப்பையும் பாவம்புரிவதையும் மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் ஆக்கினான். இத்தகையவர்களே நேரியவழியில் இருப்பவர்கள்; 49:8 அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும். இன்னும் அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 49:9 மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான். 49:10 இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும். 49:11 இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். 49:12 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 49:13 மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 49:14 இந்த நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள்: “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.” இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; வேண்டுமானால், ‘நாங்கள் கீழ்ப்படிந்தோம்’ என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அடிபணிந்தீர்களாயின், அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எந்தக் குறையும் வைக்கமாட்டான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான். 49:15 உண்மையில், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்! 49:16 (நபியே! நம்பிக்கைகொண்டதாக வாதிடுகின்ற) இவர்களிடம் கூறும்: “என்ன, உங்களது மார்க்கம் குறித்து அல்லாஹ்வுக்கு நீங்கள் அறிவித்துக்கொடுக்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அறிகின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 49:17 இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! மாறாக, நம்பிக்கை கொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ்தான் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கின்றான். (நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில்) நீங்கள் வாய்மையாளர்களாய் இருந்தால்! 49:18 நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவான ஒவ்வொன்றையும் அறிகின்றான். நீங்கள் செய்பவை அனைத்தும் அவனது பார்வையில் இருக்கின்றன.
அத்தியாயம்  காஃப்  50 : 1-45 / 45
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
50:1 காஃப் மாட்சிமை மிக்க குர்ஆனின் மீது ஆணையாக! 50:2 உண்மை யாதெனில், இவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் இவர்களிலிருந்தே வந்திருப்பது பற்றி இவர்கள் வியப்படைந்துள்ளார்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் கூறத் தொடங்கினார்கள்: “இது வியப்புக்குரிய விஷயம்தான்! 50:3 நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) மீண்டும் எழுப்பப்படுவது எனும் இவ்விஷயம் அறிவுக்குப் புறம்பானதாகும்.” 50:4 (உண்மை யாதெனில்) பூமி, இவர்களின் உடம்பிலிருந்து எவற்றைத் தின்கிறது என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். மேலும், அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. 50:5 ஆயினும், சத்தியம் இவர்களிடம் வந்தபோது அதனை இவர்கள் வெளிப்படையாகப் பொய்யெனக் கூறிவிட்டார்கள். இதனால்தான் இப்போது இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். 50:6 சரி, இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை எப்பொழுதுமே பார்த்ததில்லையா, என்ன? அதனை நாம் எவ்வாறு அமைத்துள்ளோம்; எவ்வாறு அலங்கரித்துள்ளோம் என்று! அதில் எங்கும் எந்த ஒரு பிளவும் இல்லை. 50:7 மேலும், பூமியை நாம் விரித்தோம். இன்னும் அதில் மலைகளை நாட்டினோம். மேலும், எல்லாவிதமான அழகிய தோற்றமுடைய தாவரங்களையும் முளைக்கச் செய்தோம். 50:8 மேலும், இவை அனைத்தும் (சத்தியத்தின் பக்கம்) திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அகப்பார்வையையும் படிப்பினையையும் வழங்கக்கூடியதாய் இருக்கின்றன. 50:9 மேலும், நாம் வானத்திலிருந்து அருள்மிக்க நீரினை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், 50:10 கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். 50:11 இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். (இறந்துவிட்ட மனிதர்கள் பூமியிலிருந்து) வெளிப்படுவதும் இவ்விதமேயாகும். 50:12 இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமூகத்தினரும், ‘ரஸ்ஸு’ வாசிகளும், ஸமூத் கூட்டத்தார்களும், 50:13 மற்றும் ஆத் கூட்டத்தார்களும், ஃபிர்அவ்னும், லூத்தின் சகோதரர்களும் 50:14 மற்றும் ‘அய்கா’ வாசிகள், ‘துப்பஃவு’ சமுதாயத்தார் ஆகிய யாவரும் பொய்யெனத் தூற்றிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், எனது எச்சரிக்கை அவர்களின் மீது உண்மையாகிவிட்டது. 50:15 முதல் முறையாய்ப் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாயிருந்தோமா, என்ன? ஆனால், மீண்டும் புதிதாய்ப் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றார்கள். 50:16 நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம். 50:17 (இவ்வாறு நாம் நேரடியாய் அறிவதுடன்) இரு எழுத்தர்கள் அவனுடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து ஒவ்வொன்றையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். 50:18 எந்தச் சொல்லையும் அவன் சொல் வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்! 50:19 (இன்னும் பாருங்கள்) மரணவேதனை உண்மையைக் கொண்டு வந்துவிட்டது. “எதிலிருந்து நீ விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அதுதான் இது!” 50:20 மேலும், எக்காளம் ஊதப்பட்டது. “உனக்கு எச்சரிக்கப்பட்டு வந்தநாள் இதுதான்!” 50:21 ஒவ்வொரு மனிதனும் வந்து சேர்ந்து விட்டான்; அவனுடன் விரட்டிக்கொண்டு வருபவர் ஒருவரும் சாட்சியளிப்பவர் ஒருவரும் இருப்பார். 50:22 இந்த விஷயத்தைப் பற்றி நீ அலட்சியத்தில் இருந்தாய்! உனக்கு முன்பாக இருந்த திரையை நாம் அகற்றிவிட்டோம். மேலும், இன்று உனது பார்வை நன்கு கூர்மையாய் உள்ளது. 50:23 அவனுடன் இருந்தவர் பணிந்து கூறினார்: “என் பொறுப்பில் இருந்தவன், இதோ ஆஜராகி இருக்கின்றான்!” 50:24 (கட்டளையிடப்பட்டது:) “வீசி எறியுங்கள் நரகத்தில், ஒவ்வொரு நிராகரிப்பாளனையும்! அவனோ, சத்தியத்துடன் பகைமை பாராட்டுபவனாகவும், 50:25 நன்மையைத் தடுப்பவனாகவும், வரம்புமீறி நடப்பவனாகவும், சந்தேகத்தில் உழல்பவனாகவும், 50:26 அல்லாஹ்வுடன் இதர கடவுளை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். எனவே, வீசுங்கள் அவனை, கடுமையான வேதனையில்!” 50:27 அவனுடைய தோழன் கூறினான்: “எங்கள் இறைவா! இவனை வரம்புமீறக் கூடியவனாக நான் ஆக்கவில்லை. ஆயினும், அவனேதான் வழிகேட்டில் எல்லையைக் கடந்து விட்டிருந்தான்.” 50:28 (பதில் கூறப்பட்டது:) “என் முன்னிலையில் தர்க்கம் செய்யாதீர்கள். தீயகதியைப் பற்றி முன்பே நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தேன். 50:29 என்னிடத்தில் தீர்ப்பு மாற்றப்படுவதில்லை. மேலும், நான் என் அடிமைகள் மீது கொடுமை இழைப்பவன் அல்லன்.” 50:30 அந்த நாளில் நாம் நரகத்திடம், “உனக்கு நிரம்பிவிட்டதா?” என்று கேட்போம். அது கூறும், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று! 50:31 மேலும், சுவனம் இறையச்சம் கொண்டவர்களின் அருகில் கொண்டுவரப்படும். சிறிதளவு தூரம்கூட இருக்காது! 50:32 (கூறப்படும்:) “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக்கூடியவராகவும் மிகவும் பேணுதலுடன் வாழக்கூடியவராகவும் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது. 50:33 அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார். 50:34 நுழைந்துவிடுங்கள் சுவனத்தில், முழு அமைதியுடன்! அந்த நாள் நிரந்தர வாழ்வுக்குரிய நாளாகும். 50:35 அங்கு அவர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். மேலும், நம்மிடம் இதனைவிட அதிகமாக இன்னும் பலவும் (அவர்களுக்காக) இருக்கின்றன. 50:36 நாம் இவர்களுக்கு முன் இவர்களை விட அதிக வலிமை உடைய எத்தனையோ சமுதாயங்களை அழித்து விட்டிருக்கின்றோம். மேலும் அவர்கள் உலக நாடுகளில் (அக்கிரமம் செய்து கொண்டு) சுற்றித் திரிந்தார்கள். இருந்தும் அவர்களால் ஏதேனும் புகலிடத்தைப் பெறமுடிந்ததா, என்ன? 50:37 இதயமுள்ள அல்லது கவனத்தோடு செவிமடுக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணமாக, இந்த வரலாற்றில் படிப்பினையூட்டும் பாடம் இருக்கின்றது. 50:38 நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்குக் களைப்பேதும் ஏற்படவில்லை. 50:39 (நபியே!) இவர்கள் புனைந்துரைக்கும் பேச்சுகள் குறித்து பொறுமையை மேற்கொள்ளும். உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக; சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும்! மேலும், இரவு நேரத்திலும்! 50:40 அவனைத் துதிப்பீராக; சிரம்பணிந்து வணங்கி முடிந்த பின்பும் கூட! 50:41 மேலும், கேளுங்கள். எந்த நாளில், அழைப்பவர் (ஒவ் வொரு மனிதருக்கும்) அருகிலிருந்து அழைப்பாரோ 50:42 எந்நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி எழுப்புவதன் ஓசையை மிகச் சரியாகச் செவியுற்றுக் கொண்டிருப்பார்களோ அந்நாள்தான் பூமியிலிருந்து இறந்தவர்கள் வெளிப்படும் நாளாகும். 50:43 திண்ணமாக, நாமே வாழ்வை அருளுகின்றோம். நாமே மரணத்தை அளிக்கின்றோம். மேலும், அந்த நாளில் அனைவரும் நம் பக்கமே திரும்பி வர வேண்டியிருக்கிறது. 50:44 அன்று பூமி வெடிக்கும்; மக்கள் (அதனுள்ளிருந்து வெளிப்பட்டு) விரைவாக ஓடிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு எழச்செய்வது நமக்கு மிக எளிதானதாகும். 50:45 (நபியே!) இந்த மக்கள் பேசும் பேச்சுகளை நாம் நன்கு அறிகின்றோம். இவர்களை நிர்ப்பந்தப்படுத்தி ஏற்கச் செய்வது உமது பணியல்ல. என் எச்சரிக்கைக்கு அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!
அத்தியாயம்  அஸ்ஸாரியாத்  51 : 1-30 / 60
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
51:1 புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு, 51:2 நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய, 51:3 மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய, 51:4 பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக! 51:5 எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே! 51:6 மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே! 51:7 பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக! 51:8 (மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது. 51:9 எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான். 51:10 அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்! 51:11 அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள். 51:12 “கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர். 51:13 இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும். 51:14 (அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.” 51:15 இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். 51:16 அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள். 51:17 இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும் 51:18 பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள். 51:19 மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்! 51:20 உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன. 51:21 ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன? 51:22 வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்! 51:23 வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது. 51:24 (நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? 51:25 அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!” 51:26 பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து 51:27 அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!” 51:28 பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள். 51:29 (அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள். 51:30 அவர்கள் கூறினர்: “ ஆம், அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)