அத்தியாயம்  அல் அஹ்காஃப்  46 : 1-35 / 35
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
46:1 ஹாமீம். 46:2 இந்த வேதம், வல்லமை மிக்கோனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டதாகும். 46:3 நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள். 46:4 (நபியே! இவர்களிடம்) கூறும்: இறைவனை விட்டுவிட்டு எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவை எப்படிப்பட்டவை என்று நீங்கள் எப்போதாவது கண்களைத் திறந்து பார்த்ததுண்டா? சற்று எனக்குக் காண்பித்துத் தாருங்கள். அவர்கள் பூமியில் எதையாவது படைத்திருக்கின்றார்களா? அல்லது வானங்களைப் படைத்து நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், இதற்கு முன் வந்த ஏதேனும் வேதமோ அல்லது எஞ்சியுள்ள ஏதேனும் ஞானமோ (இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக) உங்களிடம் இருப்பின் அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள். 46:5 பிறகு இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழிதவறியவன் யார் இருக்க முடியும்? அவன் அல்லாஹ்வை விடுத்து, மறுமைநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைக்கின்றான். அதுமட்டுமல்ல, அழைப்பவர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள். 46:6 மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள். 46:7 நம்முடைய தெளிவான வசனங்கள் இம்மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டு, சத்தியம் இவர்கள் முன் வந்துவிட்டபோது இந்நிராகரிப்பாளர்கள் சத்தியத்தைக் குறித்து “இது வெளிப்படையான சூனியம்” என்று கூறுகின்றார்கள். 46:8 என்ன, இவர்கள் “இறைத்தூதர் இதனைச் சுயமாகப் புனைந்துள்ளார்!” என்று கூறுகின்றார்களா? இவர்களிடம் கூறும்: “இதனை நான் சுயமாகப் புனைந்து கூறுகிறேன் எனில், இறைவனின் பிடியிலிருந்து சிறிதும் என்னை உங்களால் காப்பாற்ற முடியாது! நீங்கள் இட்டுக்கட்டும் பேச்சுக்களை அவன் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான். எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியம் அளிப்பதற்கு அவனே போதுமானவன். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 46:9 இவர்களிடம் கூறும்: “இறைத்தூதர்களில் நான் ஒன்றும் புதுமையானவன் அல்லன். மேலும் (நாளை) எனக்கு என்ன நேரும் என்பதையும், உங்களுக்கு என்ன நேரும் என்பதையும் நான் அறியேன். என்னிடம் அனுப்பப்படும் வஹியைத்தான்* நான் பின்பற்றுகின்றேன். நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறல்லன்.” 46:10 (நபியே இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எப்போதேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாய் இருந்து, அதனை நீங்கள் நிராகரிக்கின்றீர்களெனில், (உங்கள் கதி என்னவாகும் என்று!) மேலும், இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்து சான்றுபகர்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்தின் மீது சான்று பகர்ந்துள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்; ஆனால், நீங்கள் உங்களின் ஆணவத்திலேயே உழன்று கொண்டு இருந்தீர்கள். இத்தகைய கொடுமைக்காரர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை!” 46:11 இறைநிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி கூறுகிறார்கள்: “இந்த வேதத்தை ஏற்றுக் கொள்வது ஒரு நற்செயலாக இருந்திருந்தால் இதனை ஏற்றுக் கொள்வதில் இவர்கள் நம்மை முந்தியிருக்க முடியாது.” இப்படியாக இதன் மூலம் இவர்கள் நேர்வழி பெறாதபோது “இதுவோ பழைய பொய்!” என்று திண்ணமாகக் கூறுவார்கள். 46:12 இதற்கு முன்பு மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் வந்துவிட்டிருந்தது. இந்த வேதம் (அதனை) உண்மைப்படுத்தக்கூடியதாகவும், அரபிமொழியிலும் வந்துள்ளது; அக்கொடுமைக்காரர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் நல்ல நடத்தையை மேற்கொள்கிறவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காகவும்தான்! 46:13 திண்ணமாக எவர்கள் “அல்லாஹ்தான் எங்கள் அதிபதி” என்று கூறினார்களோ பின்னர் அதில் அவர்கள் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 46:14 இத்தகையவர்களே சுவனம் செல்பவர்கள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்; (உலகில்) அவர்கள் செய்துகொண்டிருக்கின்ற செயல்களின் பலனாக! 46:15 தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன. இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: “என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! மேலும், நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன். மேலும், கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.” 46:16 இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள். 46:17 ஒருவன் தன் தாய்தந்தையரிடம் இவ்வாறு கூறுகின்றான்: “சீ! என்னை நீங்கள் கஷ்டப்படுத்திவிட்டீர்கள். நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் ஏராளமான தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் எழுந்து வரவில்லையே!)” தாய்தந்தையர் இருவரும் அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாகக் கூறுகின்றார்கள்: “அட, துர்ப்பாக்கியமுடையவனே! ஏற்றுக்கொள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது!” ஆனால், அவனோ “இவையெல்லாம் முற்காலத்துக் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றான். 46:18 இத்தகைய மக்கள் மீது வேதனையின் தீர்ப்பு உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற இத்தகைய தவறான நடத்தை கொண்ட ஜின் மற்றும் மனித இனத்தாருடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஐயமின்றி, இவர்கள் மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டவர்களாய் இருக்கின்றார்கள். 46:19 (இந்த இரு பிரிவினர்களில்) அவரவருடைய செயல்களுக்கேற்பவே அவரவருடைய நிலைகள் இருக்கும். மேலும், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு முழுக்க முழுக்க அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான் (இவ்வாறு செய்கின்றான்). அவர்கள் மீது ஒருபோதும் கொடுமை இழைக்கப்படமாட்டாது. 46:20 பின்னர் இந்த இறைநிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது அவர்களிடம் கூறப்படும்; நீங்கள் உங்கள் (பங்கில் உள்ள) அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள். அவற்றால் பயன் அடைந்துவிட்டீர்கள். நீங்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டிருந்ததற்கும், பாவம் செய்து கொண்டிருந்ததற்கும் பகரமாக இன்று உங்களுக்கு இழிவுமிக்க வேதனை கூலியாகத் தரப்படும். 46:21 ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூது நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறும். அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்திருந்தார் எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது, “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிகப் பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்!” 46:22 அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்களை எங்கள் கடவுள்களை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி! நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும்.” 46:23 அவர் கூறினார்: “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், அறியாமையில் மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கிறேன்.” 46:24 பின்னர், அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது கூறலாயினர். “இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” “இல்லை! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது புயல்காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது. 46:25 தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும்.” இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே, குற்றம்புரியும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம். 46:26 உங்களுக்கு நாம் தந்திடாத சிலவற்றை அவர்களுக்கு வழங்கி இருந்தோம். அவர்களுக்கு நாம், காதுகளையும், கண்களையும், இதயத்தையும் கொடுத்திருந்தோம். ஆனால், அவர்களின் காதுகளும், கண்களும் இதயமும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்! எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. 46:27 உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். நாம் நம்முடைய வசனங்களை பல தடவை அருளி அவர்களுக்கு விதவிதமாக விளக்கினோம்; அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக! 46:28 அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கான காரணமாகக் கருதிக்கொண்டு தமது கடவுளராக ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை? உண்மையாதெனில், அவர்கள் இவர்களைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள்! இதுவே, இவர்களின் பொய்யும் இவர்கள் இட்டுக்கட்டிய கொள்கையின் விளைவுமாகும். 46:29 (பின்வரும் நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கதாகும்:) ஒருபோது நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் பேசிக் கொண்டன: “மௌனமாய் இருங்கள்!” பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய்த் திரும்பிச் சென்றனர்; 46:30 சென்று கூறினர்: “எங்களின் சமூகத்தாரே! நாங்கள் மூஸாவுக்குப் பின் இறக்கியருளப்பட்டிருக்கும் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழிகாட்டுகின்றது. 46:31 எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.” 46:32 இன்னும், யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருடைய சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) தோல்வியுறச் செய்திட எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கக் கூடிய எந்த ஆதரவாளர்களும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களாவர். 46:33 இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவனும் அவற்றைப் படைப்பதனால் களைப்புறாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு திண்ணமாக ஆற்றலுள்ளவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? ஆம்! புலப்படுகிறது. திண்ணமாக, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவனாயிருக்கின்றான். 46:34 மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன்னால் கொண்டு வரப்படும் நாளில், அவர்களிடம் வினவப்படும்: “இது சத்தியம் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம்! எங்கள் இறைவன்மீது ஆணையாக! இது உண்மையில், சத்தியம்தான்.” அல்லாஹ் கூறுவான்: “சரி! நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குப் பதிலாக இப்போது வேதனையைச் சுவையுங்கள்.” 46:35 எனவே (நபியே!) நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக; மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று! இவர்களின் விவகாரத்தில் அவசரப்படாதீர். இவர்களுக்கு எது பற்றி அச்சுறுத்தப்படுகின்றதோ அதை இவர்கள் கண்கூடாகப் பார்க்கும் நாளில் இவர்களுக்குப் புரிந்துவிடும்; ஒரு நாழிகையே அன்றி அதிகமாக உலகில் அவர்கள் தங்கியிருக்கவில்லை என்பது! செய்தி எடுத்துச்சொல்லப்பட்டு விட்டது; கீழ்ப்படியாத மக்களைத் தவிர வேறெவரேனும் இனி அழிவுக்குள்ளாக்கப்படுவார்களா, என்ன!
அத்தியாயம்  முஹம்மத்  47 : 1-38 / 38
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
47:1 எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான். 47:2 எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான். 47:3 இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான். 47:4 எனவே, இறைநிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால் முதல் வேலை கழுத்துகளை வெட்டுவதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கி விட்டால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள்; அதன் பிறகு (அவர்களின் மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெறலாம்; (உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது) போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி. அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் (இந்த வழியை அவன் மேற்கொண்டது) உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவார்களோ, அவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டான். 47:5 அவன் அவர்களுக்கு வழிகாட்டுவான்; அவர்களின் நிலைமையைச் சீர்படுத்துவான். 47:6 மேலும், எந்தச் சுவனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றானோ, அந்தச் சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான். 47:7 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிபுரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான். 47:8 ஆனால், யார் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு அழிவுதான்! மேலும், அல்லாஹ் அவர்களுடைய செயல்களைப் பயனற்றதாக்கிவிட்டிருக்கிறான். 47:9 அதற்குக் காரணம், அல்லாஹ் இறக்கிவைத்ததை அவர்கள் வெறுத்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான். 47:10 அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்க்கவில்லையா? அவர்களுக்குரிய அனைத்தையும் அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்பிவிட்டான். மேலும், இதைப் போன்ற விளைவுகள்தாம் இந்த நிராகரிப்பாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 47:11 இதற்குக் காரணம், நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாகவும், உதவி புரிபவனாகவும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதே! மேலும், நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலனும் உதவியாளனும் எவரும் இல்லை. 47:12 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரைத் திண்ணமாக அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், நிராகரிப்பாளர்கள் உலகின் சிலநாள் வாழ்வின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கால்நடைகளைப் போன்று உண்டு, பருகிக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்கள் இறுதியில் சென்றடையும் இடம் நரகமாகும். 47:13 (நபியே!) உம்மை வெளியேற்றிய உம்முடைய ஊரை விடவும் அதிக வலிமை கொண்ட எத்தனையோ ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பிறகு அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்கவில்லை. 47:14 தம் அதிபதியிடமிருந்து வந்த தெளிவான வழிகாட்டுதலில் இருப்பவர், எவர்களுக்குத் தங்களின் தீயசெயல்கள் அழகாக்கப்பட்டு தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு சமம் ஆக முடியுமா, என்ன? 47:15 இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மகத்துவம் இதுவே: அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு எல்லாவிதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும். (இத்தகைய சுவனப்பேறுகளைப் பெறும் மனிதர்களுக்கு) நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாக்கப்படுகின்றவர்கள் ஒப்பாவார்களா? 47:16 அவர்களில் சிலர் உமது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பிறகு, உம்மைவிட்டு வெளியே சென்றால், ஞானம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்கின்றார்கள்: ‘இவர் இப்போது என்ன சொன்னார்?’ இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றுவோராய் இருக்கின்றனர். 47:17 ஆனால், எவர்கள் நேர்வழி பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியில் இன்னும் அதிக முன்னேற்றத்தை அளிக்கின்றான். அவர்களுக்குரிய இறையச்சம் எனும் தன்மையையும் அவர்களுக்கு வழங்குகின்றான். 47:18 என்ன, இந்த மக்கள் மறுமைநாள் தங்களிடம் திடீரென வந்துவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? அதன் அடையாளங்கள் வந்துவிட்டனவே! அந்நாளே அவர்களிடம் வந்துவிட்டால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த வாய்ப்புதான் எஞ்சி இருக்கப்போகிறது? 47:19 (நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை. மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும்! அல்லாஹ் உங்கள் செயல்பாடுகளையும் அறிகிறான்; உங்கள் தங்குமிடத்தையும் அறிகிறான். 47:20 “(போர் புரியும் படி ஆணையிடும்) ஓர் அத்தியாயம் எதுவும் ஏன் இறக்கியருளப்படுவதில்லை?” என்று இறைநம்பிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், போர் பற்றிக் கூறப்பட்ட உறுதியான ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டபோது, உள்ளங்களில் பிணி இருந்தவர்கள் மரணத்தால் சூழப்பட்டவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்த்ததை நீர் கண்டீர்! அந்தோ, அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதுதான். 47:21 ‘கீழ்ப்படிந்தோம்’ என்று ஒப்புக்கொள்வதும், நல்ல நல்ல சொற்கள் பேசுவதும் (அவர்களின் உதட்டளவில்தான் உள்ளன!) திட்டவட்டமான கட்டளை கொடுக்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையானவர்களாய் அவர்கள் நடந்திருந்தால், அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும். 47:22 இனி இது தவிர வேறெதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா? நீங்கள் பின்வாங்கிச் செல்வீர்களாயின் பூமியில் நீங்கள் மீண்டும் அராஜகம் விளைவிப்பீர்கள் என்பதையும் மேலும், நீங்கள் பரஸ்பரம் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடுவீர்கள் என்பதையும் தவிர! 47:23 இத்தகையோரை அல்லாஹ் சபித்துவிட்டான். மேலும், அவர்களைச் செவிடர்களாயும், குருடர்களாயும் ஆக்கி விட்டான். 4724 இவர்கள் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? 47:25 உண்மையாதெனில், எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னர் அதனைப் புறக்கணித்துச் சென்று விட்டார்களோ, அவர்களுக்கு ஷைத்தான் இந்த நடத்தையை இலகுவாக்கி விட்டான். மேலும், அவர்களுக்காக பொய்யான எதிர்பார்ப்புகளின் ஒரு படலத்தை நீட்டிக் கொண்டே போகின்றான். 47:26 ஆகவேதான், அல்லாஹ் இறக்கியருளிய மார்க்கத்தை வெறுப்பவர்களிடம் அவர்கள் கூறிவிட்டார்கள், “சில விவகாரங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று! அல்லாஹ் அவர்களின் இந்த இரகசியப் பேச்சுகளை நன்கு அறிகின்றான். 47:27 பின்னர் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டு செல்லும்போது நிலைமை எப்படியிருக்கும்? 47:28 அதற்குக் காரணம், அல்லாஹ்வுக்குக் கோபமூட்டும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்றியதும், அவனது உவப்பைப் பெறும் பாதையை அவர்கள் விரும்பாததும்தான். இதனால், அவர்களின் செயல்கள் அனைத்தையும் அவன் வீணாக்கிவிட்டான். 47:29 எவர்களுடைய உள்ளங்களில் பிணி இருக்கிறதோ அவர்கள், தங்கள் உள்ளங்களில் உள்ள குரோதங்களை அல்லாஹ் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? 47:30 நாம் விரும்பினால் அவர்களை உமக்குக் கண் கூடாய்க் காட்டித் தந்திருப்போம். அப்போது, அவர்களின் முக அடையாளங்கள் மூலம் நீர் அவர்களை அறிந்துகொள்வீர். ஏன், அவர்கள் பேசும் தொனியிலிருந்தும் அவர்களை நீர் அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்கள் அனைவரின் செயல்களையும் நன்கு அறிந்திருக்கின்றான். 47:31 நாம் உங்களை நிச்சயமாகச் சோதனைக்குள்ளாக்குவோம் உங்கள் நிலைமைகளைப் பரிசீலித்து உங்களில் யார் முஜாஹிதுகள் போராளிகள், நிலைகுலையாது துணிச்சலுடன் இருப்பவர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக! 47:32 எவர்கள் நேரியவழி தங்களுக்குத் தெளிவாகி விட்ட பிறகு நிராகரிக்கவும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கவும், தூதரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்களோ, அவர்களால் உண்மையில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பாழாக்கி விடுவான். 47:33 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள். 47:34 எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து, அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். 47:35 எனவே, நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள். மேலும், சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்! அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான். 47:36 இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான். 47:37 ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும். 47:38 இதோ! (பாருங்கள்:) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தாம் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
அத்தியாயம்  அல் ஃபத்ஹ்  48 : 1-17 / 29
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
48:1 (நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம். 48:2 உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும், 48:3 இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும்தான்! 48:4 அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ‘ஸகீனத்’ நிம்மதியை இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். 48:5 (அவன் எதற்காக இவ்வாறெல்லாம் செய்துள்ளானெனில்) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் நிரந்தரமாக வாழச் செய்வதற்காக! கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் நுழையச் செய்வதற்காகவும் மேலும், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டு களைவதற்காகவும்தான். அல்லாஹ்விடத்தில் இது மகத்தான வெற்றியாக இருக்கிறது 48:6 மேலும், நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், இணை வைப்பாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவன் தண்டனை அளிப்பதற்காகவும்தான்! அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தீய எண்ணம் கொண்டிருக்கிறார்கள். தீமையின் சுழற்சியில் தாமே வீழ்ந்து விட்டார்கள். அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீது இறங்கியது. மேலும், அவன் அவர்களைச் சபித்தான். நரகத்தை அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். 48:7 வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுடைய வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிக வல்லமைமிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 48:8 (நபியே!) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்; 48:9 (எதற்காகவெனில் மக்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவருக்கு (தூதருக்கு) உறுதுணையாய் இருப்பதற்காகவும், அவரைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் மேலும், காலையிலும் மாலையிலும் நீங்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பதற்காகவும்தான்! 48:10 (நபியே!) எவர்கள் உம்மிடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் உண்மையில் அல்லாஹ்விடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தவர்களாவர். அவர்களுடைய கைகள் மீது அல்லாஹ்வின் கை இருந்தது. ஆகவே யாரேனும் இந்த உறுதிப் பிரமாணத்தை முறித்தால், அதை முறித்ததன் கேடு அவரையே சூழும். மேலும், எவர் அல்லாஹ்விடம் தான் செய்திருந்த உறுதிப் பிரமாணத்தை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் அதிவிரைவில் மகத்தான கூலியை வழங்குவான். 48:11 (நபியே!) பின்தங்கியிருந்துவிட்ட நாட்டுப்புற அரபிகள் திண்ணமாக இப்போது உம்மிடம் வந்து சொல்வார்கள்: “எங்களுடைய செல்வங்கள், மனைவி மக்கள் பற்றிய கவலைகள்தாம் எங்களை முற்றிலும் ஈர்த்து விட்டிருந்தன. எனவே, தாங்கள் எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்.” இவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் நாவுகளால் கூறுகிறார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “சரி, அவ்வாறெனில் உங்கள் விவகாரத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை அல்லாஹ் உங்களுக்கு ஏதேனும் நஷ்டத்தை அளிக்க அல்லது நன்மையை வழங்க நாடினால் அதைத் தடுத்திடும் அளவுக்கு சிறிதேனும் அதிகாரம் பெற்றவர் யாரேனும் உண்டா?” ஆனால், உங்களின் செயல்களை அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். 48:12 (உண்மை நிலவரம் நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதன்று.) மாறாக, இறைத்தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தங்களின் இல்லத்தாரிடம் ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தீர்கள். இந்தக் கருத்து உங்கள் உள்ளங்களுக்கு அழகாகத் தென்பட்டது. மேலும், நீங்கள் மிகப்பெரிய தீய எண்ணம் கொண்டுவிட்டீர்கள். நீங்கள் மிகவும் கொடிய உள்ளம் படைத்த மக்களாவீர். 48:13 அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். 48:14 வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சிக்கு உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். அவன் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றான்; நாடுகின்றவர்களுக்குத் தண்டனை அளிக்கின்றான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். 48:157 போர்ச் செல்வங்களை (கனீமத்) கைப்பற்றுவதற்காக நீங்கள் செல்லும்போது, போருக்குச் செல்லாமல் பின்தங்கியிருந்த இவர்கள் உங்களிடம் திண்ணமாகக் கூறுவார்கள்: “எங்களையும் உங்களுடன் வருவதற்கு அனுமதியுங்கள்.” இவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மாற்றிவிட நினைக்கின்றார்கள். இவர்களிடம் நீர் தெளிவாகக் கூறிவிடும்: “எங்களுடன் வருவதற்கு உங்களால் ஒருபோதும் இயலாது. இதனை அல்லாஹ் முன்னரே கூறிவிட்டான்.” இதற்கு அவர்கள் கூறுவார்கள்: “இல்லை, நீங்கள்தாம் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்.” (ஆனால், விஷயம் பொறாமையைப் பற்றியதல்ல.) மாறாக, இவர்கள் உண்மை நிலையைக் குறைவாகவே புரிந்து கொள்கிறார்கள். 48:16 பின்தங்கியிருந்து விட்ட இந்த நாட்டுப்புற அரபிகளிடம் நீர் கூறும்: “நீங்கள் மிக அதிக வலிமை கொண்ட மக்களுடன் போரிடுமாறு விரைவில் அழைக்கப்படுவீர்கள் நீங்கள் அவர்களுடன் போரிட வேண்டியிருக்கும். அல்லது அவர்கள் அடிபணிந்து விடுவார்கள். அப்போது ஜிஹாதுக்கான கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவான். அவ்வாறின்றி நீங்கள் முன்னர் செய்தது போன்று மீண்டும் புறக்கணித்தால், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.” 48:17 ஆம்! குருடர், முடவர் மற்றும் நோயாளி ஆகியோர் (போருக்கு வரவில்லையென்றால் அவர்கள்) மீது குற்றமேதும் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் கீழ்ப்படிந்தால் அவரை அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், எவரேனும் புறக்கணித்தால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)