அத்தியாயம்  அஸ்ஸுக்ருஃப்  43 : 24-89 / 89
43:24 ஒவ்வொரு தூதரும் அந்த மக்களிடம் இதைத்தான் கேட்டார்: “உங்கள் முன்னோர் எந்த வழியில் செல்வதைக் கண்டீர்களோ அதைவிடச் சரியான வழியை நான் காண்பித்தாலுமா நீங்கள் அந்த வழியில் சென்று கொண்டிருப்பீர்கள்?” அவர்கள் எல்லா இறைத்தூதர்களுக்கும் அளித்து வந்த பதில் இதுவே: “நீங்கள் எந்த தீனின் (மார்க்கத்தின்) பக்கம் அழைப்பதற்காக அனுப்பப்பட்டீர்களோ அந்த மார்க்கத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம்.” 43:25 இறுதியில், அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். பொய்யென வாதிட்டவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக்கொள்ளும்! 43:26 இப்ராஹீம் தம்முடைய தந்தையிடமும், தம்முடைய சமூகத்தாரிடமும் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் எவற்றை வணங்குகின்றீர்களோ அவற்றுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. 43:27 என் தொடர்போ என்னைப் படைத்த வனுடன் மட்டும்தான் இருக்கின்றது. அவனே எனக்கு வழி காட்டுவான்.” 43:28 மேலும், இப்ராஹீம் தமக்குப் பின், தம் வழித்தோன்றல்களிடம் இதே வார்த்தைகளை விட்டுச் சென்றார்; அவர்கள் அவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக! (அத்துடன் இவர்கள் மற்றவர்களை வழிபடத் தொடங்கிய போதும் நான் இவர்களை அழித்துவிடவில்லை.) 43:29 ஆயினும், இவர்களுக்கும் இவர்களின் முன்னோருக்கும் நான் வாழ்க்கை வசதிகளை வழங்கிக் கொண்டிருந்தேன் எதுவரையெனில் இவர்களிடம் சத்தியமும், தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு தூதரும் வரும் வரை! 43:30 ஆனால், அந்த சத்தியம் இவர்களிடம் வந்தபோது “இதுவோ சூனியம்; இதனை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்” என்று இவர்கள் கூறிவிட்டனர். 43:31 மேலும், இவர்கள் கூறுகின்றனர்: “இந்தக் குர்ஆன் இவ்விரு ஊர்களிலுமுள்ள பெரிய மனிதர்களில் எவரேனும் ஒருவர் மீது ஏன் இறக்கியருளப்படவில்லை?” 43:32 என்ன, இவர்கள் உம் இறைவனிடம் அருட்கொடையைப் பங்கிடுகின்றார்களா? உலக வாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களிடையே பகிர்ந்தளிக்கின்றோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர் வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக! மேலும், உன் இறைவனின் அருட்கொடை (அதாவது தூதுத்துவம்) இவர்(களுடைய தலைவர்)கள் குவித்துக் கொண்டிருக்கும் செல்வத்தைவிட மதிப்பு வாய்ந்ததா கும். 43:33 மனிதர்கள் அனைவரும் (தீய) வழிமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரே சமுதாயத்தினராகி விடுவார்கள் எனும் நிலை இல்லாதிருந்தால் கருணைமிக்க இறைவனை நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும், அவர்கள் ஏறிச்செல்கின்ற படிக்கட்டுகளையும், 43:34 அவர்களுடைய வீட்டுக் கதவுகளையும், அவர்கள் சாய்ந்திருக்கின்ற மஞ்சங்களையும் அனைத்தையும் வெள்ளியாகவும் தங்கமாகவும் நாம் ஆக்கியிருப்போம். 43:35 இவை அனைத்தும் உலக வாழ்வுக்குரிய அற்ப சாதனங்களே அன்றி வேறில்லை. மறுமையோ உம் அதிபதியிடத்தில் இறையச்சமுடையவர்களுக்கே உரியதாகும்! 43:36 எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான். 43:37 அந்த ஷைத்தான்கள் இப்படிப்பட்டவர்களை நேர்வழியில் வரவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவர்களோ தாம் சரியான வழியில் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். 43:38 இறுதியில் இந்த மனிதன் நம்மிடம் வந்து சேரும்போது (தனது ஷைத்தானை நோக்கிச்) சொல்வான்: “அந்தோ! எனக்கும் உனக்குமிடையே கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலான இடைவெளி இருந்திருக்க வேண்டுமே! நீயோ மிக மோசமான நண்பனாய் இருந்திருக்கின்றாய்.” 43:39 அந்நேரம் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் கொடுமைகளை புரிந்துவிட்ட பின் இன்று இந்தப் பேச்சு உங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. நீங்களும் உங்களுடைய ஷைத்தான்களும் வேதனையில் பங்காளிகளாவீர்கள்!” 43:40 (நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கச் செய்வீரா? அல்லது குருடர்களுக்கும், வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களுக்கும் வழிகாட்டி விடுவீரா? 43:41 இப்போது நாம் இவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியுள்ளது; நாம் உம்மை உலகிலிருந்து எடுத்துக் கொண்டாலும் சரி 43:42 அல்லது நாம் இவர்களுக்கு வாக்களித்திருக்கும் தீயகதியை உம் கண்களுக்குக் காண்பித்துக் கொடுத்தாலும் சரி; திண்ணமாக, நாம் இவர்களின் மீது முழுஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம். 43:43 ஆகவே, வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப் பட்டிருக்கும் வேதத்தை நீர் உறுதியாய்ப் பற்றிப் பிடிப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியில் இருக்கின்றீர். 43:44 உண்மையில், இந்த வேதம் உமக்கும் உம் சமுதாயத்தினருக்கும் ஒரு மாபெரும் சிறப்பாகும். மேலும், விரைவில் நீங்கள் இதற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும். 43:45 உமக்கு முன்னர் நாம், நம்முடைய எத்தனை தூதர்களை அனுப்பியிருந்தோமோ அவர்கள் அனைவரிடத்திலும் நீர் கேட்டுப் பாரும்; கருணைமிக்க ஏக இறைவனைத் தவிர வழிபடுவதற்கு வேறு கடவுளரை நாம் நியமித்திருந்தோமா, என்ன? 43:46 நாம் மூஸாவை நம்முடைய சான்றுகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரதானிகளிடமும் அனுப்பினோம். அவர் சென்று கூறினார்: “நான் உலக மக்கள் அனைவருடைய இறைவனின் தூதராய் இருக்கின்றேன்.” 43:47 பின்னர் அவர் நம்முடைய சான்றுகளை அவர்கள் முன் சமர்ப்பித்தபோது, அவற்றை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தார்கள். 43:48 ஒன்றன் பின் ஒன்றாக நாம் அவர்களுக்கு எப்படிப்பட்ட சான்றுகளைக் காண்பித்து வந்தோமெனில், அதில் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய சான்றைவிடக் கடினமானதாக இருந்தது! மேலும், அவர்களை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; அவர்கள் தங்களுடைய நடத்தையிலிருந்து விலகிவிட வேண்டும் என்பதற்காக! 43:49 (வேதனையில் ஆழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்) அவர்கள் கூறினார்கள்: “சூனியக்காரரே! உம் அதிபதியிடமிருந்து உமக்குக் கிடைத்திருக்கும் அந்தஸ்தின் அடிப்படையில் எங்களுக்காக அவனிடம் இறைஞ்சும். நாங்கள் திண்ணமாக நேரியவழிக்கு வந்துவிடுவோம்!” 43:50 ஆனால், அவ்வாறே அவர்களைவிட்டுத் தண்டனையை நாம் விலக்கியபோது அவர்கள் வாக்கு மீறினார்கள். 43:51 (ஒருநாள்) ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என் மக்களே! எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகள் எனக்குக் கீழேயல்லவா ஓடிக் கொண்டிருக்கின்றன? என்ன, உங்களுக்குத் தெரியவில்லையா? 43:52 நான் சிறந்தவனா? அல்லது கேவலமானவனும் (தன்னுடைய கருத்தைத்) தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாதவனுமான இந்த மனிதன் சிறந்தவனா? 43:53 ஏன், இவனுக்குத் தங்கக் காப்புகள் இறக்கித் தரப்படவில்லை? அல்லது வானவர்களின் ஒரு குழு இவனுடன் ஏன் வரவில்லை?” 43:54 அவன் (ஃபிர்அவ்ன்) தன்னுடைய சமூகத்தாரைச் சாதாரணமாகக் கருதினான். அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். உண்மையில் அவர்கள் பாவம் புரியும் மக்களாகவே இருந்தனர். 43:55 இறுதியில், அவர்கள் நம்மைக் கோபமடையச் செய்தபோது நாம் அவர்களிடம் பழி வாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம். 43:56 பிற்கால மக்களுக்கு முன்னோடிகளாகவும், படிப்பினையூட்டும் முன்னுதாரணங்களாகவும் அவர்களை ஆக்கி வைத்தோம். 43:57 மேலும், மர்யத்தின் குமாரர் உதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்ட உடனேயே உம் சமூக மக்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர். 43:58 “எங்கள் கடவுள்கள் சிறந்தவையா அல்லது அவரா?” என்று கேட்டனர். அவர்கள் இந்த உதாரணத்தை முன்வைத்தது வெறும் வீண் வாதத்திற்குத்தான். உண்மையில் இவர்கள் குதர்க்கம் செய்யும் மக்களேயாவர். 43:59 மர்யத்தின் குமாரரைப் பொறுத்த வரையில், அவர் ஓர் அடியாரேதான். அவர் மீது நாம் அருள்புரிந்திருந்தோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நமது ஆற்றலின் முன்னுதாரணமாக அவரை நாம் ஆக்கி இருந்தோம். 43:60 நாம் நாடியிருந்தால் உங்களிலிருந்து வானவர்களைப் படைத்திருப்போம்; அவர்கள் உங்களின் பிரதிநிதிகளாய்ப் பூமியில் திகழ்ந்திருப்பார்கள். 43:61 மேலும், அவர் (மர்யத்தின் குமாரர்) உண்மையில் மறுமையின் ஓர் அறிகுறியாகத் திகழ்கின்றார். எனவே, நீங்கள் அதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே நேரிய வழியாகும். 43:62 ஷைத்தான் உங்களை இதிலிருந்து தடுத்துவிட வேண்டாம். அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவனாய் இருக்கின்றான். 43:63 மேலும், ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது கூறினார்: “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன்; மேலும், நீங்கள் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றீர்களோ அவற்றில் சிலவற்றின் உண்மை நிலையை உங்களிடம் விளக்கிக் காட்டுவதற்காகவும் வந்திருக்கின்றேன். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்குக் கீழ்ப்படியுங்கள். 43:64 உண்மையில், அல்லாஹ்தான் என்னுடைய அதிபதி; உங்களுடையவும் அதிபதி. ஆகவே, அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரிய வழியாகும்.” 43:65 ஆனால், (அவர் இந்தத் தெளிவான அறிவுரையை வழங்கியும்) அந்தக் கூட்டத்தினர் தமக்குள் வேறுபட்டனர். எனவே, கொடுமை புரிந்தவர்களுக்கு அழிவுதான்; துன்புறுத்தக்கூடிய ஒருநாளின் தண்டனையின் வாயிலாக! 43:66 என்ன, இவர்கள் அறியாதிருக்கும் நிலையில் திடீரென மறுமைநாள் தங்களிடம் வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? 43:67 அந்த நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள். 43:68 அந்நாளில், கூறப்படும்: “என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை; உங்களுக்கு எவ்விதத் துயரமும் ஏற்படாது. 43:69 இவர்கள்தாம் நம் வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் கீழ்ப்படிந்தவர்களாகவும் விளங்கினர் 43:70 நுழைந்துவிடுங்கள் சுவனத்தில்; நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்.” 43:71 தங்கத்தட்டுகளும், கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருக்கும். மனங்கள் விரும்பக்கூடிய கண்களுக்கு இன்பம் அளிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். (அவர்களிடம் கூறப்படும்:) “இங்கு நீங்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பீர்கள். 43:72 நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களின் காரணத்தால், இந்தச் சுவனத்திற்கு வாரிசுகளாய் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள். 43:73 உங்களுக்காக இங்கு ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் உண்பீர்கள்.” 43:74 குற்றவாளிகளோ நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். 43:75 அவர்களின் வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நிராசையுற்றிருப்பார்கள். 43:76 நாம் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே கொடுமை இழைத்துக் கொண்டார்கள். 43:77 அவர்கள் மன்றாடுவார்கள்: “மாலிகே!* உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடித்துவிட்டால் நன்றாய் இருந்திருக்குமே!” அவர் பதிலளிப்பார்: “நீங்கள் இப்படியே கிடப்பீர்கள்! 43:78 நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தோம். ஆனால், உங்களில் பெரும்பாலோருக்குச் சத்தியமே வெறுப்பாக இருந்தது.” 43:79 என்ன, இவர்கள் ஏதேனும் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றார்களா? அப்படியானால் நாமும் உரிய நடவடிக்கை எடுத்தே தீருவோம். 43:80 என்ன, இவர்களின் இரகசியங்களையும், கிசு கிசுப்புகளையும் நாம் கேட்பதில்லை என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்களா? நாம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். நம் வானவர்கள் அவர்களின் அருகில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். 43:81 அவர்களிடம் கூறும்: “உண்மையில் கருணைமிக்க இறைவனுக்கு ஏதேனும் பிள்ளைகள் இருந்திருக்குமானால் அனைவரையும்விட முதலில் வணங்குபவனாக நான் இருந்திருப்பேன்!” 43:82 தூய்மையானவன், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் அர்ஷின் • உரிமையாளனுமான இறைவன், இவர்கள் அவனோடு சேர்த்துச் சொல்கின்ற அனைத்தையும்விட்டு! 43:83 சரி, இவர்களை நீர் விட்டுவிடும், அவர்கள் தங்களின் வீண் கற்பனைகளில் மூழ்கியிருக்கட்டும், தங்களின் விளையாட்டில் இலயித்திருக்கட்டும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நாளை அவர்கள் சந்திக்கும் வரை! 43:84 அவன் ஒருவனே வானத்திலும் இறைவன்; பூமியிலும் இறைவன்! மேலும் அவனே நுண்ணறிவாளன்; யாவும் அறிந்தவன்! 43:85 மேலும், வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலுள்ள அனைத்தினுடையவும் ஆட்சி எவனுடைய பிடியில் உள்ளதோ அவன் மிக உயர்ந்தவன். மேலும், மறுமை எப்போது வரும் எனும் ஞானம் அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். 43:86 அவனை விட்டுவிட்டு இவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ, அவர்கள் பரிந்துரைக்கும் எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால், எவர்கள் ஞானத்தின் அடிப்படையில் சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்களோ அவர்களைத் தவிர! 43:87 “இவர்களைப் படைத்தவன் யார்?” என்று நீர் இவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்” என்று இவர்களே கூறுவார்கள். பிறகு, எங்கிருந்து இவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்? 43:88 “என் அதிபதியே! இவர்கள் ஏற்றுக்கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர்” எனும் இறைத்தூதரின் இந்த வார்த்தையின் மீது சத்தியமாக! 43:89 சரி, (நபியே!) இவர்களுடைய செயல்களைப் பொறுத்துக்கொள்ளும். ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்று கூறும்! விரைவில் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
அத்தியாயம்  அத்துகான்  44 : 1-59 / 59
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
44:1 ஹாமீம்; 44:2 தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! 44:3 நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்! 44:4 அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது. 44:5 நாம் ஒரு தூதரை அனுப்புகிறவர்களாய் இருந்தோம். 44:6 உம் இறைவனுடைய கருணையின் அடிப்படையில்! திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்கக்கூடியவனாகவும், அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான் 44:7 நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்). 44:8 அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி. 44:9 (ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். 44:10 சரி, இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும். 44:11 அது மக்கள் மீது மூடிக்கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய தண்டனையாகும். 44:12 (அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.” 44:13 இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும், 44:14 இவர்கள் அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை என்பதுதானே இவர்களின் நிலை! “இவர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்!” என்று சொன்னார்கள். 44:15 நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள். 44:16 நாம் பலத்த அடி கொடுக்கும் நாளில் நாம் உங்களிடம் பழி வாங்கியே தீருவோம். 44:17 திண்ணமாக, நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்திருக்கிறோம். அவர்களிடம் கண்ணியமான ஓர் இறைத்தூதர் வந்தார். 44:18 மேலும், அவர் கூறினார்: “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் உங்களுக்காக அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய இறைத்தூதராவேன். 44:19 மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன். 44:20 நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன். 44:21 நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.” 44:22 இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார். 44:23 (பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள். 44:24 கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!” 44:25 எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும், 44:26 வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும், 44:27 அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள். 44:28 இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம் 44:29 பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை. 44:30 இவ்வாறு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நாம் கடும் இழிவுபடுத்தும் வேதனையிலிருந்து அதாவது ஃபிர்அவ்னிடமிருந்துகாப்பாற்றினோம். 44:31 உண்மையில், அவன் வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான். 44:32 மேலும், அவர்களின் நிலைமையை அறிந்தே உலகின் பிற சமுதாயங்களைவிட அவர்களுக்கு முன்னுரிமை அளித்தோம். 44:33 மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது. 44:34 இந்த மக்கள் கூறுகின்றார்கள்: 44:35 “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதன் பிறகு நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம். 44:36 நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், எங்களுடைய முன்னோரை எழுப்பிக் கொண்டு வாருங்கள்.” 44:37 இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்! 44:38 இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. 44:39 அவற்றைச் சத்தியத்துடன் படைத்திருக்கின்றோம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 44:40 இவர்கள் அனைவரையும் எழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் காலம் தீர்ப்பளிக்கும் நாளாகும். 44:41 அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது; 44:42 ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான். 44:43 ‘ஸக்கூம்’ மரம்; 44:44 பாவியின் உணவாக இருக்கும். 44:45 அது எண்ணெய்க் கசடு போலிருக்கும். 44:46 சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும். 44:47 “பிடியுங்கள் அவனை! நரகத்தின் நடுப்பகுதியில் இழுத்துச் செல்லுங்கள். 44:48 அவனது தலைமீது கொதிக்கும் நீரை ஊற்றி வேதனைப்படுத்துங்கள். 44:49 நீ சுவைத்துப் பார், இதன் சுவையை! பெரும் வல்லமை படைத்த கண்ணியமிக்கவனல்லவா நீ 44:50 நீங்கள் எதன் வருகையை சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!” 44:51 இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்; 44:52 தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். 44:53 தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். 44:54 இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம். 44:55 அங்கு அவர்கள் மன நிம்மதியுடன் எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள். 44:56 ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான். 44:57 இதுவே மாபெரும் வெற்றியாகும். 44:58 (நபியே!) இவர்கள் அறவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம். 44:59 இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!
அத்தியாயம்  அல் ஜாஸியா  45 : 1-37 / 37
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
45:1 ஹாமீம். 45:2 இந்த வேதம், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். 45:3 உண்மை யாதெனில், இறைநம்பிக்கையுள்ளவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. 45:4 மேலும், உங்களைப் படைப்பதிலும், (பூமியில்) அல்லாஹ் பரப்பியிருக்கின்ற உயிரினங்களிலும், உறுதிகொள்ளும் மக்களுக்கு பெரும் சான்றுகள் உள்ளன. 45:5 இரவும் பகலும் வேறுபட்டு இருப்பதிலும், அல்லாஹ், வானத்திலிருந்து மழையை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும் மேலும், காற்றுகளின் சுழற்சியிலும் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல்வேறு அத்தாட்சிகள் உள்ளன. 45:6 இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகள். இவற்றை உம்மிடம் நாம் மிகச் சரியாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். இனி, அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பிறகு, இவர்கள் எந்த விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள்? 45:7 பொய்யனாகவும் கெட்டவனாகவும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவுதான். 45:8 அவன் முன்னிலையில் ஓதிக் காட்டப்படும் இறைவசனங்களை அவன் செவியேற்கிறான்; பிறகு முழு ஆணவத்துடன் (தன் நிராகரிப்பில்) அவன் பிடிவாதமாய் இருக்கின்றான், அவ்வசனங்களை அவன் செவியேற்காதது போன்று! இத்தகைய மனிதனுக்குத் துன்புறுத்தும் வேதனையைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவித்து விடும். 45:9 நம்முடைய வசனங்களிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவன் தெரிந்து கொள்ளும்போது அதனை பரிகாசமாய் ஆக்கிக் கொள்கிறான். இத்தகையோர் அனைவர்க்கும் இழிவு தரும் வேதனை இருக்கிறது. 45:10 அவர்களுக்கு எதிரில் நரகம் உள்ளது. (உலகில்) அவர்கள் சம்பாதித்தது எதுவும் எந்தப் பயனும் அவர்களுக்கு அளிக்காது. அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் யாரை பாதுகாவலர்களாய் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனை இருக்கிறது. 45:11 இந்தக் குர்ஆன் முற்றிலும் நேர்வழியாய்த் திகழ்கின்றது. தங்கள் இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்தவர்களுக்கோ பெரும் வேதனை தரும் தண்டனை இருக்கிறது. 45:12 அல்லாஹ்தான் உங்களுக்குக் கடலினை வசப்படுத்தித் தந்தான் அவனது கட்டளைப்படிக் கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும்! மேலும், நீங்கள் நன்றி செலுத்துவோராகத் திகழ்வதற்காகவும், 45:13 வானங்கள் மற்றும் பூமியின் அனைத்தையுமே உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அனைத்தையும் தன் சார்பாகவே செய்தான். சிந்திக்கக்கூடிய மக்களுக்குத் திண்ணமாக இதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன. 45:14 (நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக! 45:15 ஒருவர் ஏதேனும் நற்செயல்கள் செய்தால், அவற்றை அவர் தமக்காகவே செய்து கொள்கிறார். ஒருவர் ஏதேனும் தீய செயல் செய்தால் அவற்றின் விளைவை அவரே அனுபவிப்பார். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்பக் கொண்டு சொல்லப்பட இருக்கின்றீர்கள்.” 45:16 இதற்கு முன்பு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் வேதம், ஞானம், தூதுத்துவம் ஆகியவற்றை வழங்கியிருந்தோம். நாம், அவர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரங்களையும் வழங்கியிருந்தோம். மேலும், உலக மக்கள் அனைவரைக் காட்டிலும், அவர்களுக்குச் சிறப்பை வழங்கியிருந்தோம். 45:17 தீன் இறைமார்க்கம் சம்பந்தமாக அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினோம். பின்னர், அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது (அறியாமையின் காரணத்தினால் அல்ல; மாறாக) அறிவு ஞானம் வந்த பின்னர்தான் அதுவும் அவர்கள் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்க விரும்பிய காரணத்தால்தான் ஏற்பட்டது! திண்ணமாக, உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவான். 45:18 பிறகு (நபியே!) இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். எனவே, நீர் அதையே பின்பற்றும். அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின்பற்றாதீர். 45:19 அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான். 45:20 இவை, மனிதர்கள் அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. 45:21 தீமைகளைச் செய்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இரு சாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்றுபோல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது! 45:22 அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும்; மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதற்காக! 45:23 தனது மன இச்சையைத் தன்னுடைய கடவுளாக்கிக் கொண்ட மனிதனின் நிலையை எப்போதேனும் நீர் சிந்தித்ததுண்டா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் தள்ளிவிட்டான். மேலும், அவனுடைய காதுகளிலும், இதயத்திலும் முத்திரையிட்டுவிட்டான். மேலும் அவனுடைய கண்கள்மீது திரையிட்டு விட்டான். இனி அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நேர்வழிகாட்டக்கூடியவர் யார்? என்ன, நீங்கள் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையா? 45:24 மேலும், இந்த மக்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இந்த உலக வாழ்க்கைதான். இங்குதான் நாம் மரணிக்கவும் உயிர்வாழவும் செய்கின்றோம். கால ஓட்டமல்லாமல் வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” உண்மையில் இது சம்பந்தமாக இவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இவர்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையில்தான் இப்படிக் கூறுகிறார்கள். 45:25 மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் எங்கள் முன்னோரை எழுப்பிக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இருப்பதில்லை. 45:26 (நபியே, இவர்களிடம்) கூறும்: அல்லாஹ்தான் உங்களை உயிர் வாழச் செய்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். பின்னர், அந்த மறுமைநாளின்போது அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். அந்நாளின் வருகையில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் பெரும்பாலோர் அறிவதில்லை. 45:27 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது அசத்தியவாதிகள் நஷ்டத்திலேயே கிடப்பார்கள். 45:28 அந்நேரம் ஒவ்வொரு சமூகமும் முழந்தாளிட்டு விழுந்திருப்பதை நீர் காண்பீர். “வாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர்களிடம் கூறப்படும்:) “நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பிரதிபலன் இன்று உங்களுக்குக் கொடுக்கப்படும். 45:29 இது, நாம் தயாரித்த வினைச்சுவடி. உங்கள் மீது மிகச் சரியாக சாட்சியம் அளித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துவந்த செயல்களை நாம் எழுதச் செய்துகொண்டிருந்தோம். 45:30 இனி எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, அவர்களின் அதிபதி தன் கருணையில் நுழைவிப்பான். இதுவே தெளிவான வெற்றியாகும்.” 45:31 மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ (அவர்களிடம் சொல்லப்படும்:) “என்னுடைய வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்படவில்லையா? ஆனால், நீங்கள் பெருமையடித்தீர்கள். மேலும், குற்றம்செய்யும் மக்களாய் இருந்தீர்கள். 45:32 மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் மறுமைநாள் வருவதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் சொல்லப்பட்டால் “மறுமை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெறும் ஊகம்தான் கொண்டிருக்கின்றோம்; உறுதிகொள்ளக் கூடியவர்களாய் இல்லை” என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்கள். 45:33 அந்த நேரம் அவர்களுடைய செயல்களின் தீய விளைவு அவர்களுக்குத் தென்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். 45:34 மேலும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் இந்நாளின் சந்திப்பை எப்படி மறந்திருந்தீர்களோ அப்படியே இன்று நாம் உங்களை மறந்துவிடுகின்றோம். உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான். மேலும், உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை. 45:35 உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தீர்கள். மேலும், உலக வாழ்வு உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. எனவே இன்று இவர்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்படவும் மாட்டார்கள். மன்னிப்புக்கோரி (உங்கள் அதிபதியின்) உவப்பைப் பெறுங்கள் என்று இவர்களிடம் கூறப்படவும் மாட்டாது. 45:36 வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 45:37 வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியதாகும். மேலும் அவன் மிகவும் வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)