அத்தியாயம்  அல் முஃமின்  40 : 41-85 / 85
40:41 மேலும், என் சமூகத்தினரே, இது என்ன நியாயம்? நானோ உங்களை ஈடேற்றத்தின் பக்கம் அழைக்கின்றேன். ஆனால், நீங்களோ என்னை நெருப்பின் பக்கம் அழைக்கின்றீர்கள். 40:42 அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், நான் அறிந்திடாதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அதே நேரத்தில் நானோ வல்லமை மிக்கவனும் பெரும் மன்னிப்பாளனுமான இறைவனின் பக்கம் உங்களை அழைத்துக்கொண்டிருக்கின்றேன். 40:43 இல்லை; சத்தியம் இதுதான்; இதற்கு மாறாக நடக்காது; அதாவது, நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவற்றிற்கு எவ்வித அழைப்பும் இந்த உலகில் இல்லை. மறுமையிலும் இல்லை. மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டியுள்ளது. வரம்பு மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர். 40:44 இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். மேலும், நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான். 40:45 இறுதியில், (அந்நம்பிக்கையாளருக்கு எதிராக) அந்த மக்கள் கையாண்ட எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளிலிருந்தும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டான். மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கொடிய வேதனை சூழ்ந்து கொண்டது. 40:46 நரக நெருப்பு! அதன் முன்பு காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது ஆணையிடப்படும்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மிகக் கடுமையான வேதனையில் புகுத்துங்கள்! 40:47 பிறகு, நரகத்தில் இவர்கள் ஒருவர் மற்றவருடன் தர்க்கம் செய்துகொண்டிருக்கும் நேரத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள். (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டவர்களை நோக்கிச் சொல்வார்கள்: “நாங்கள் உங்களைப் பின்பற்றுவோராய் இருந்தோம். (இப்போது இங்கு) நரக வேதனையிலிருந்து சிறிதளவாவது எங்களைக் காப்பாற்றுவீர்களா?” 40:48 பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டிருந்தவர்கள் பதில் அளிப்பார்கள்: “நாம் அனைவரும் இங்கு ஒரே நிலையில் இருக்கின்றோம்; அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து விட்டான்.” 40:49 மேலும், நரகத்தில் வீழ்ந்துகிடக்கும் அம்மக்கள் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்: “எங்களின் வேதனையை ஒரு நாளைக்கேனும் குறைப்பதற்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.” 40:50 அதற்கு அவர்கள் கேட்பார்கள்: “உங்களிடம் இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்து கொண்டிருக்கவில்லையா? அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளிப்பார்கள். அப்பொழுது நரகத்தின் காவலர்கள் கூறுவர்: “அப்படியாயின் நீங்களே இறைஞ்சிக் கொள்ளுங்கள்!” நிராகரிப்பாளர்களின் இறைஞ்சுதல் பயனற்றுப் போய்விடும். 40:51 உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்: நாம் நம்முடைய தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்விலும் அவசியம் உதவி செய்கின்றோம்; சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். 40:52 அந்நாளில் கொடுமைக்காரர்களுக்கு அவர்களுடைய சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளித்திடமாட்டா; அவர்கள் மீது சாபம் உண்டாகும். மேலும், மிக மோசமான தங்குமிடம் அவர்களுக்குக் கிடைக்கும். 40:53 தெரிந்துகொள்ளுங்கள்: மூஸாவுக்கு நாம் நேர்வழி காட்டினோம். மேலும், இஸ்ராயீலின் வழித் தோன்றல்களை வேதத்தின் வாரிசுகளாய் ஆக்கினோம்; 40:54 அவ்வேதம் அறிவுடையோருக்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் திகழ்ந்தது. 40:55 எனவே, (நபியே!) நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும், உம் தவறுக்காக மன்னிப்புக் கோரும்! காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதித்துக் கொண்டுமிரும். 40:56 சான்றோ, ஆதாரமோ எதுவுமே தங்களிடம் வந்திருக்காத நிலையில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் புரிகின்றார்களோ அவர்களின் நெஞ்சங்களில் (தாமே பெரியவர்கள் எனும்) அகங்காரம் நிறைந்துள்ளது. ஆனாலும், அவர்கள் அந்தப் பெருமையை அடையப் போவதில்லை. எனவே (நபியே!) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! திண்ணமாக, அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான். 40:57 வானங்களையும் பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட நிச்சயம் மாபெரும் சாதனையாகும். எனினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 40:58 மேலும், குருடனும் பார்வையுள்ளவனும் சமமாக முடியாது; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவரும் தீயவரும் சமமாக முடியாது; ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே உணர்கின்றீர்கள். 40:59 திண்ணமாக, மறுமை நாள் வரத்தான் போகின்றது; அதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும், மக்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. 40:60 உங்கள் இறைவன் கூறுகின்றான்: “என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன். திண்ணமாக, எவர்கள் தற்பெருமை கொண்டு எனக்கு வழிபட மறுக்கின்றார்களோ அவர்கள் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகி அவசியம் நரகில் நுழைவார்கள். 40:61 அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான்; அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக! மேலும், பகலை ஒளியுடையதாக்கினான். உண்மையில், அல்லாஹ் மக்கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான். ஆனால், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. 40:62 (உங்களுக்காக இவை அனைத்தையும் செய்திருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; ஒவ்வொரு பொருளின் படைப்பாளன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. பின்னர் நீங்கள் எங்கிருந்து வழிபிறழச் செய்யப்படுகின்றீர்கள்? 40:63 இவ்வாறே, அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வழிபிறழச் செய்யப்படுகிறார்கள். 40:64 அல்லாஹ்தான் உங்களுக்காகப் பூமியைத் தங்குமிடமாகவும் மேலே வானத்தை முகடாகவும் அமைத்தான். அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான்; உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான். மேலும், அவன் உங்களுக்குத் தூய்மையான பொருள்களிலிருந்து உணவளித்தான். (இவற்றைச் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; அகில உலகங்களுக்கும் அதிபதியாகிய, 40:65 அவனே நித்திய ஜீவனாக இருக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறெவரும் இல்லை. ஆகவே, அவனிடமே இறைஞ்சுங்கள்; உங்களுடைய தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கியவர்களாய்! புகழ் அனைத்தும் அகில உலகங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். 40:66 (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடும்: “நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றையெல்லாம் அழைக்கின்றீர்களோ அவற்றை வணங்குவதைவிட்டு நான் தடுக்கப்பட்டிருக்கின்றேன்; என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்திருக்கும்போது (நான் இதனை எப்படிச் செய்ய முடியும்?) அகில உலகங்களின் அதிபதியின் முன்னால் கீழ்ப்படிந்துவிட வேண்டும் என நான் பணிக்கப்பட்டிருக்கின்றேன். 40:67 அவனே உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின்னர் விந்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டியிலிருந்து! பின்னர், அவன் உங்களைக் குழந்தையின் வடிவில் வெளிக்கொணர்கின்றான். பின்னர், நீங்கள் உங்கள் முழு வலிமையை அடையும் வரை உங்களை வளர்த்து வருகின்றான்; பிறகு நீங்கள் முதுமையை அடையும் வரையிலும் வளர்க்கின்றான்! மேலும், உங்களில் சிலர் முன்னதாகவே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். எதற்காக இவையனைத்தும் செய்யப்படுகின்றனவெனில் உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் உண்மையை அறிவதற்காகவும்தான்! 40:68 அவனே வாழ்வளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் ஆவான். அவன் எந்த விஷயத்தைத் தீர்மானித்தாலும் ‘ஆகு!’ என்றுதான் ஆணையிடுகின்றான். உடனே அது ஆகிவிடுகின்றது. 40:69 அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? எங்கிருந்து அவர்கள் திசைதிருப்பப்படுகின்றார்கள்? 40:70 இவர்கள் இந்த வேதத்தையும் நாம், நம் தூதர்களுடன் அனுப்பிவைத்திருந்த அனைத்து வேதங்களையும் பொய்யெனக் கூறுகின்றார்கள். விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; 40:71 அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும். 40:72 அவர்கள் கொதிநீரின் பக்கம் இழுத்துவரப்படுவார்கள்; பின்னர் நரகத்தில் வீசியெறியப்படுவார்கள். 40:73 “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்த மற்ற கடவுள்கள் இப்போது எங்கே?” என்று அவர்களிடம் கேட்கப்படும். 40:74 அப்போது அவர்கள் பதில் அளிப்பார்கள்: “அவர்கள் எங்களை விட்டும் காணாமல் போய் விட்டார்கள். உண்மையில், நாங்கள் இதற்கு முன்பு எதனையும் அழைத்துக் கொண்டிருக்கவில்லை.” இவ்வாறாக, நிராகரிப்பாளர்கள் வழிகெட்டிருப்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தி விடுவான். 40:75 அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் உண்மைக்கு மாற்றமானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள்; பூரிப்பில் இறுமாந்து கொண்டும் இருந்தீர்கள். 40:76 இப்போது நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள்; நீங்கள் அதிலேயே நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டியுள்ளது, அகங்காரம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும். 40:77 (நபியே!) பொறுமையைக் கைக்கொள்ளும்! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எந்தத் தீய விளைவுகளைப் பற்றி நாம் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றோமோ அவற்றில் சிலவற்றை நாம் உம் கண்ணெதிரில் காட்டித் தந்தாலும் சரி; அல்லது (அதற்கு முன்பே) உலகைவிட்டு உம்மை எடுத்துக் கொண்டாலும் சரி. இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது. 40:78 மேலும், (நபியே!) நாம் உமக்கு முன்பு இறைத்தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரைக் குறித்து உமக்கு எடுத்துரைத்திருக்கின்றோம். வேறு சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சான்றையும் சுயமாகக் கொண்டு வரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. பிறகு, அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது சத்தியத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது; மேலும், அப்போது தவறு செய்தவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். 40:79 அல்லாஹ்தான் உங்களுக்காக இந்தக் கால்நடைகளைப் படைத்திருக்கின்றான் அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்வதற்காகவும், வேறு சிலவற்றின் இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும்! 40:80 அவற்றில் உங்களுக்கு இன்னும் பல பயன்கள் உள்ளன. உங்கள் இதயம் விரும்புகின்ற இடத்தை நீங்கள் அடைவதற்கு அவற்றின் மீது சவாரி செய்கிறீர்கள். அந்தக் கால்நடைகளின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் ஏற்றிச்செல்லப் படுகின்றீர்கள். 40:81 அல்லாஹ் இத்தகைய தன்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறிருக்க, அவனுடைய எந்தெந்தச் சான்றுகளை நீங்கள் மறுப்பீர்கள்? 40:82 பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை இவர்கள் காணவில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக எண்ணிக்கையுடையவர்களாகவும், மிக்க பலமுடையவர்களாகவும் இருந்தனர். மேலும், பூமியில் இவர்களைவிட மாபெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் சம்பாதித்தார்களோ அவை இறுதியில் அவர்களுக்கு என்ன பயனைத் தந்தது? 40:83 அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். 40:84 அவர்கள் நம்முடைய தண்டனையைக் கண்டபோது, “இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அவனுக்கு இணையானவையாக நாங்கள் ஏற்படுத்தியிருந்த தெய்வங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம்” என்று உரக்கக் கூறினர். 40:85 ஆனால், நம்முடைய தண்டனையைக் கண்ட பின்னால் அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது போயிற்று. ஏனெனில், இதுவே அல்லாஹ்வின் நியதி; இது அவனுடைய அடிமைகளுக்கிடையே என்றென்றும் நடைபெற்று வருகின்றது. மேலும், அந்நேரம் நிராகரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு ஆளாகி விட்டார்கள்.
அத்தியாயம்  ஹாமீம் அஸ்ஸஜ்தா  41 : 1-46 / 54
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
41:1 ஹாமீம் 41:2 இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். 41:3 இது எத்தகைய வேதமெனில், அதனுடைய வசனங்கள் நன்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன; அரபி மொழியிலுள்ள குர்ஆன் ஆகவும் இருக்கின்றது; அறிவுள்ள மக்களுக்கு 41:4 நற்செய்தி சொல்லக்கூடியதும், எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகும். ஆனால், இந்த மக்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். மேலும், அவர்கள் செவிமடுப்பதுமில்லை. 41:5. அவர்கள் கூறுகின்றார்கள்; “எதன் பக்கம் நீர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றீரோ, (அதன் பக்கம் நோக்காதபடி) எங்கள் உள்ளங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன. எங்கள் காதுகள் செவிடாகிவிட்டிருக்கின்றன. மேலும், எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு திரை விழுந்து விட்டிருக்கின்றது. நீர் உமது பணியைச் செய்யும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்கின்றோம்.” 41:6 (நபியே! இவர்களிடம்) கூறும்: நான் ஒரு மனிதன்தான், உங்களைப் போன்று! வஹியின்* மூலம் எனக்கு அறிவிக்கப்படுகின்றது, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, நீங்கள் அவனுடைய திசையிலேயே நேராக நிலைகொள்ளுங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள். இணைவைப்பாளர்களுக்கு அழிவுதான்! 41:7 அவர்களோ, ஜகாத் வழங்குவதில்லை; இன்னும் மறுமையை நிராகரிக்கின்றார்கள். 41:8 ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கின்றது. 41:9 (நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா?” அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்! 41:10 அவன் (பூமியைப் படைத்த பிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் பாக்கியங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களை செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின. 41:11 பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும், பூமியிடமும் கூறினான்: “உருவாகி வாருங்கள்; நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!” அவை இரண்டும், “நாங்கள் கீழ்ப்படிந்த வண்ணமே வந்துவிட்டோம்” எனக் கூறின. 41:12 எனவே, அவன் இரண்டு நாட்களுக்குள் ஏழு வானங்களையும் அமைத்தான். மேலும், ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய நியதியை அறிவித்தான். உலகத்தின் அருகில் உள்ள வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். அதனை நன்கு பாதுகாத்து வைத்தோம். இவையனைத்தும் பேரறிவாளனும், வல்லமை மிக்கவனுமான இறைவன் நிர்ணயித்த அமைப்பாகும். 41:13 இனி, இவர்கள் புறக்கணித்தால் (இவர்களிடம்) கூறிவிடும்: ‘திடீரெனத் தாக்கும் வேதனை குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்; ஆத் சமுதாயத்தினர் மீதும், ஸமூத் சமுதாயத்தினர் மீதும் இறங்கிய வேதனை போன்று! 41:14 இறைவனின் தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஒவ்வொரு திசையிலிருந்தும் அவர்களிடம் வந்தார்கள். ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்’ என அவர்களுக்கு விளக்கினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பானே! எனவே நீங்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தியை நாங்கள் ஏற்பது இல்லை.” 41:15 ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?” அவர்களைப் படைத்த இறைவன் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்குப் புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். 41:16 இறுதியில், அபசகுனமுடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்கள் சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக! மேலும், மறுமையின் வேதனை இதைவிடவும் இழிவு தரக்கூடியதாகும். அங்கு அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார். 41:17 ஸமூத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: நாம் அவர்களுக்கு எது நேர்வழி என்பதை எடுத்துக் காட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைப் பார்ப்பதற்குப் பதிலாக குருடர்களாய் இருக்க விரும்பினார்கள்! இறுதியில், அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக இழிவான வேதனை அவர்களைத் திடீரெனத் தாக்கியது. 41:18 இறைநம்பிக்கை கொண்டு வழிகேட்டிலிருந்தும், தீய செயலில் இருந்தும் விலகியிருந்தவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம். 41:19 அந்த நேரத்தை சற்று நினைவுகூருங்கள்: அப்போது அல்லாஹ்வின் இந்தப் பகைவர்கள் நரகின் பக்கம் கொண்டு செல்வதற்காக ஒன்று திரட்டப்படுவார்கள். அவர்களில் முன்னோர்கள், பின்னோர்கள் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவார்கள். 41:20 இறுதியில், அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில் அவை என்னென்ன செயல்களைச் செய்து கொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். 41:21 அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்துக் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” அதற்கு அவை பதிலளிக்கும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ்தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், இப்போது அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள். 41:22 உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய காதுகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள். 41:23 உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்தி விட்டது. அதே காரணத்தால் நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள்.” 41:24 இந்நிலையில் அவர்கள் பொறுமையுடனிருந்தாலும் (இல்லாவிட்டாலும்) நரகமே அவர்களின் இருப்பிடமாகும். மேலும், அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பை விரும்பினாலும் எந்த வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. 41:25 அவர்கள் மீது சில நண்பர்களை நாம் சாட்டியிருந்தோம். அவர்களோ அவர்களுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள ஒவ்வொன்றையும் அழகுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஜின் இனத்தின் மீதும் மனித இனத்தின் மீதும் விதிக்கப்பட்ட வேதனையின் தீர்ப்பு அவர்கள் மீதும் விதிக்கப்பட்டு விட்டது. திண்ணமாக, அவர்கள் இழப்புக்குரியவர்களாகி விட்டனர். 41:26 சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்; இதன் மூலம் நீங்கள் வென்றுவிடலாம்.” 41:27 நாம் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்தே தீருவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த மிக மோசமான செயல்களுக்குரிய முழுக்கூலியையும் அவர்களுக்கு நாம் கொடுப்போம். 41:28 அது நரகமாகும். அல்லாஹ்வின் பகைவர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும். அதிலேயே அவர்களுக்கு நிரந்தரமான இருப்பிடம் இருக்கும். நம் சான்றுகளை நிராகரித்து வந்த குற்றத்திற்கான தண்டனை இதுதான். 41:29 அங்கு இந்நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த ஜின்களையும், மனிதர்களையும் சற்று எங்களுக்குக் காண்பிப்பாயாக! அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழே போட்டு மிதித்து விடுகின்றோம், பெரும் கேவலத்தில் அவர்களை ஆழ்த்துவதற்காக!” 41:30 எவர்கள் “அல்லாஹ் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! 41:31 நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்! அங்கு நீங்கள் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொன்றும் உங்களுடையதாகிவிடும். 41:32 பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இது!” 41:33 எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்? 41:34 (நபியே!) நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர். 41:35 பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை. 41:36 மேலும், ஷைத்தானின் தரப்பிலிருந்து ஏதேனும் தூண்டுதலை நீர் உணர்ந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரும். திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். 41:37 இந்த இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளுள் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக, அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள், நீங்கள் உண்மையில் அவனையே வணங்குபவர்களாய் இருந்தால்! 41:38 ஆனால், இவர்கள் கர்வம் கொண்டு தம் போக்கிலேயே பிடிவாதமாய் இருந்தால் பரவாயில்லை; உம் இறைவனிடம் நெருக்கமாய் உள்ள வானவர்கள் அல்லும் பகலும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் களைப்படைவதில்லை. 41:39 பூமி வறண்டு கிடப்பதையும் நீர் காண்கிறீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர்பெறு வதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். திண்ணமாக, இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிரூட்டினானோ அந்த இறைவன், இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். திண்ணமாக, அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான். 41:40 எவர்கள் நம் வசனங்களுக்கு மாறுபட்ட பொருள் கற்பிக்கின்றார்களோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்திருப்பவர் அல்லர். நீங்களே சிந்தியுங்கள். நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமைநாளில் நிம்மதியாக வருகைதருபவன் சிறந்தவனா? செய்து கொண்டிருங்கள் நீங்கள் விரும்பியவற்றை! உங்கள் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 41:41 இவர்கள் தங்களிடம் அறவுரை வந்தபோது அதனை நிராகரித்துவிட்டவர்கள்! ஆனால், உண்மையில் இது ஓர் ஆற்றல் மிக்க வேதமாகும். 41:42 அசத்தியம் இதன் முன்னாலிருந்தும் வர முடியாது; பின்னாலிருந்தும் வர முடியாது. நுண்ணறிவாளனும், மிகுந்த புகழுக்குரியவனுமான இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும் இது! 41:43 (நபியே!) உமக்கு முன் சென்ற தூதர்களுக்குக் கூறப்படாத எந்த ஒன்றும் இதில் இல்லை. ஐயமின்றி உம்முடைய இறைவன் பெரிதும் பிழை பொறுப்பவன் ஆவான். (அத்துடன்) துன்புறுத்தும் தண்டனை அளிக்கக்கூடியவனுமாவான். 41:44 நாம் இதனை அரபி மொழியல்லாத குர்ஆனாக ஆக்கி அனுப்பியிருந்தால் இவர்கள் கூறியிருப்பார்கள்: “இதன் வசனங்கள் ஏன் தெளிவாக விவரிக்கப்படவில்லை? வசனங்களோ அரபியல்லாத மொழியில்! அவை எடுத்துரைக்கப்படுவதோ அரபிகளிடம்! என்ன விந்தை இது!” இவர்களிடம் கூறும்: “இந்த குர்ஆன் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியும் அருமருந்தும் ஆகும். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லையோ, இது அவர்களின் காதுகளுக்கு அடைப்பும் கண்களுக்குத் திரையுமாகும். ஆகையால் அவர்களின் நிலைமை தொலைவிலிருந்து அழைக்கப்படுபவர்கள் போன்று இருக்கின்றது. 41:45 இதற்கு முன்னால் நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். அதுபற்றியும் இதே கருத்துவேறுபாடு தான் ஏற்பட்டிருந்தது. உம் இறைவன் முன்பே ஒரு விஷயத்தை முடிவு செய்திராவிட்டால், கருத்து வேறுபாடு கொண்ட அம்மக்களிடையே தீர்ப்பு எப்பொழுதோ வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக இம்மக்கள் அதுபற்றி கடும் மனக் குழப்பத்தைத்தரும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். 41:46 யாரேனும் நற்செயல் புரிந்தால் அவர் தனக்கே நன்மை செய்து கொள்கின்றார். மேலும், யாரேனும் தீமை செய்தால் அதன் தீய விளைவு அவரையே சாரும். உம் இறைவன் தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப்பவன் அல்லன்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)