அத்தியாயம்  அன்னிஸா  4 : 24-87 / 176
4:24 மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 4:25 மேலும், ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உங்களில் எவர் வசதி வாய்ப்புப் பெறவில்லையோ அவர் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளட்டும்! அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறியக்கூடியவன். நீங்கள் ஒருவர் இன்னொருவரிலிருந்து தோன்றியிருக்கிறீர்கள். எனவே அவ்வடிமைப் பெண்களை, அவர்களைப் பராமரிப்போரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்! மேலும் அவர்களுக்குரிய மஹ்ரை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அப்பெண்கள் திருமண வரையறைக்கு உட்பட்டவர்களாகவும், தகாத உறவில் ஈடுபடாதவர்களாகவும், மற்றும் கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக (இந்த வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன!) மேலும் அவ்வடிமைப் பெண்கள் திருமண வரம்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு ஒழுக்கக்கேடான செயல் எதனையும் செய்து விட்டால் அடிமைகளல்லாத பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. திருமணம் முடிக்காத காரணத்தால் இறையச்சமுடைய வாழ்விலிருந்து பிறழ்ந்து விடுவோமோ என்ற அச்சமுடையவர்க்கே (அடிமைப் பெண்களை மணந்து கொள்ளலாம் எனும்) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயினும், நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனும் ஆவான். 4:26 உங்களுக்கு முன்சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலே உங்களை நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான் அவன் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான். 4:27 ஆம்! அல்லாஹ் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவே விரும்புகிறான். ஆனால், தம் மன இச்சைகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களோ நேரிய வழியிலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். 4:28 அல்லாஹ் உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புகின்றான். ஏனென்றால், மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான். 4:29 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொரு வரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல்வாங்கல் இருக்க வேண்டும். உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான். 4:30 எவன் வரம்பு மீறியும் அநீதியாகவும் இவ்வாறு செய்கின்றானோ அவனை நாம் நெருப்பில் வீசியே தீருவோம்! மேலும், இது அல்லாஹ்வுக்கு இலகுவானதாக உள்ளது. 4:31 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம். 4:32 அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும், பெண்களுக்கு அவர்கள் சம்பாதித் ததற்கேற்ப பங்கு உண்டு. இருப்பினும் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 4:33 தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்துக்களிலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். 4:34 ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான். 4:35 மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 4:36 மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. 4:37 அவர்கள் தாமும் உலோபிகளாயிருந்து பிற மக்களையும் உலோபித்தனம் புரியுமாறு ஏவுவார்கள். மேலும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை மறைப்பார்கள். (இத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.) இத்தகைய நன்றி கெட்ட ஈனர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றோம். 4:38 மேலும், எவர்கள் தம் பொருளை பிறர் மெச்சுவதற்காகச் செலவழிக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றார்களோ அத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உண்மை என்னவெனில், ஷைத்தான் யாருக்குத் தோழனாகின்றானோ அவர் மிகவும் கெட்ட தோழனையே அடையப் பெற்றவராவார். 4:39 இவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் தமக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்தால் இவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? (இவ்வாறு செய்திருந்தால்) இவர்கள் புரிந்த நன்மை அல்லாஹ்வைவிட்டு மறைந்துவிடாது. 4:40 திண்ணமாக, அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அல்லாஹ் அதனை இரட்டிப்பாக்குகின்றான். தன்னிடமிருந்து மாபெரும் கூலியையும் வழங்குகின்றான். 4:41 (முஹம்மதே!) நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியாளர் ஒருவரைக் கொண்டு வந்து, உம்மையும் இவர்கள் மீது சாட்சியாளராகக் கொண்டு வரும் வேளையில் இவர்கள் என்ன செய்வார்கள் (என்று சிந்தியுங்கள்). 4:42 எவர்கள் இறைத்தூதரின் சொல்லைக் கேட்காமலும், அவருக்கு மாறு செய்து கொண்டும் இருந்தார்களோ அவர்கள் பூமி பிளந்து தங்களை விழுங்கியிருக்கக் கூடாதா என அந்நாளில் ஏங்குவார்கள். அங்கு அவர்கள் (தம்முடைய) எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது. 4:43 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும். மேலும், நீங்கள் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்! பாதையைக் கடப்பவர்களாக இருந்தாலே தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், பிறகு தண்ணீர் உங்களுக்குக் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணைக் கொண்டு உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அதாவது (அதனை) உங்களின் முகங்களிலும் கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் கனிவு உடையவனாகவும், மன்னிப்பு வழங்குபவனாகவும் இருக்கின்றான். 4:44 வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள், வழிகேட்டினை விலைக்கு வாங்குகின்றார்கள்; நீங்களும் வழிதவறிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். 4:45 அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிபவனாயிருக்கின்றான். மேலும் உங்களுக்கு ஆதர வளிக்கவும், உதவி செய்யவும் அல்லாஹ்வே போதுமானவன். 4:46 யூதர்களில் சிலர் (வேதத்தின்) சொற்களை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். சத்திய நெறியைப் பழித்துரைத்தவாறு தம் நாவுகளைச் சுழற்றி ‘ஸமிஃனா, வ அஸய்னா’ என்றும் ‘இஸ்மஃ கைர முஸ்மயின்’ என்றும் ‘ராயினா’ என்றும் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ‘ஸமிஃனா வ அதஃனா’ என்றும் ‘இஸ்மஃ’ என்றும் ‘உன்ளுர்னா’ என்றும் கூறியிருப்பார்களேயானால் அது அவர்களுக்கு நன்மையானதாகவும், மிக நேர்மையான வழிமுறையாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களின் அசத்தியப் போக்கின் காரணமாக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றார்கள். 4:47 வேதம் வழங்கப்பட்டவர்களே! (இப்போது) நாம் இறக்கி வைத்துள்ள (வேதத்)தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடம் இருந்த (வேதத்)தை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது! நாம் முகங்களை உருக்குலைத்து அவற்றைப் பின்புறமாய்த் திருப்பி விடுவதற்கு முன்பே அல்லது அஸ்ஹாபுஸ் ஸப்த்தை சபித்தது போல நாம் சபிப்பதற்கு முன்பே! (நம்பிக்கை கொண்டு விடுங்கள்.) இன்னும் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும் (என்பதை நினைவில் வையுங்கள்.) 4:48 திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள், திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்; மேலும் பாவத்தைப் புரிந்தவராவர். 4:49 தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். (அவர்கள் தூய்மைப்படுத்தப்படவில்லை எனில் அதற்கு யார் பொறுப்பு?) மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. 4:50 பாருங்கள்! இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்க சற்றும் தயங்குவதில்லையே! மேலும், வெளிப்படையான பாவியாவதற்கு இது ஒன்றே போதுமானதாகும். 4:51 வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ ஜிப்தையும்*, தாஃகூத்தையும் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் நம்பிக்கையற்றவர்களைக் குறித்து, “இவர்கள்தாம் இறை நம்பிக்கை கொண்டவர்களைவிட மிகவும் நேர்வழியிலிருக்கின்றார்கள்” என்று கூறுகிறார்கள். 4:52 இத்தகையோரைத்தான் அல்லாஹ் சபித்துள்ளான். மேலும், யாரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அத்தகையவருக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்! 4:53 ஆட்சி அதிகாரத்தில் இவர்களுக்கு ஏதாவது பங்குண்டா? அப்படி இருக்குமாயின் இவர்கள் மற்றவர்களுக்கு அற்பப் பொருளைக்கூட கொடுக்க மாட்டார்கள். 4:54 மேலும், இவர்கள் அல்லாஹ் தன் அருளினால் மக்களுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவர்கள்மீது பொறாமை கொள்கின்றார்களா? அப்படியென்றால் நாம் இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே! 4:55 ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும். 4:56 எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான். 4:57 மேலும் எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அங்கு அவர்களுக்கு மிகத் தூய்மையான துணைவியர் இருப்பர். மேலும் அவர்களை நாம் அடர்ந்த நிழலில் அமரச் செய்வோம். 4:58 (முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். 4:59 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்.) பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்; இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது. 4:60 (நபியே!) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? “உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம்” எனக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாஃகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். ஆயினும் தாஃகூத்தை நிராகரிக்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழிகெடுத்து வெகுதூரம் கொண்டு செல்ல விரும்புகின்றான். 4:61 மேலும், ‘அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கின்றீர். 4:62 பின்னர் அவர்களின் கைகள் செய்த தீவினைகளின் காரணத்தால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது நிலைமை என்னவாகும்? பிறகு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும், இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்துகொண்டு உம்மிடம் வருவார்கள். 4:63 இத்தகையவர்களின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். எனவே, நீர் அவர்களின் நடத்தையைப் புறக்கணித்து விடுவீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! மேலும் அவர்களின் உள்ளங்களில் பதியக்கூடிய நல்லுரையை நீர் அவர்களுக்குக் கூறுவீராக! 4:64 மேலும் (அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக:) அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள். 4:65 இல்லை! (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். 4:66 உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்றோ, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்றோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களில் சிலர்தான் அதன் படி செயல்பட்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால், அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் (சத்தியத்தில்) அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும். 4:67 மேலும், அவ்வாறு செயல்பட்டிருந்தால் நம்மிடமிருந்து அவர்களுக்கு மகத்தான கூலியைக் கண்டிப்பாக நாம் வழங்கியிருப்போம். 4:68 மேலும், அவர்களுக்கு நாம் நேரான வழியைக் காட்டியுமிருப்போம். 4:69 எவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! 4:70 இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும் (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:71 நம்பிக்கையுடையவர்களே! (போராடுவதற்காக எந்நேரமும்) நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்! பிறகு (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப) தனித்தனிப் பிரிவுகளாகக் கிளம்புங்கள்! அல்லது எல்லோரும் சேர்ந்து புறப்படுங்கள்! 4:72 உண்மையில், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுபவனும் உங்களில் இருக்கின்றான். பிறகு உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவன் “திண்ணமாக, அல்லாஹ் என் மீது கருணை புரிந்துள்ளான். ஏனெனில், நான் அவர்களுடன் கலந்து கொள்ளவில்லை” என்று கூறுவான். 4:73 ஆனால், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நல்லருள் கிடைத்தால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே எவ்வித நட்பும் இல்லாததுபோல் “அய்யகோ! நானும் அவர்களுடன் இருந்திருக்கலாமே; அதன் மூலம் மாபெரும் வெற்றியை நான் அடைந்திருப்பேனே!” என்று புலம்புவான். 4:74 (இத்தகையோர்க்கு இவ்வுண்மை தெரிந்திருக்க வேண்டுமே:) இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வழியில் போர் புரியட்டும்! பிறகு, யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம். 4:75 மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள். 4:76 இறைநம்பிக்கையுடைய நடத்தையை மேற்கொண்டவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர்புரிவார்கள். நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டவர்கள் தாஃகூத்தின் வழியில் போர்புரிவார்கள். எனவே ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும். 4:77 (போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது. 4:78 நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே! மேலும், அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின், “(முஹம்மதே!) இது உம்மிடமிருந்து வந்தது” எனக் கூறுகிறார்கள். நீர் கூறுவீராக: அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன. இம்மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே! 4:79 (மனிதனே!) உனக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் அது அல்லாஹ்வின் அருளால்தான் கிடைக்கின்றது. ஆனால் உனக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது உன் வினையினால்தான் விளைகிறது. (முஹம்மதே!) மக்களுக்காக உம்மைத் தூதராய் நாம் அனுப்பியுள்ளோம். மேலும், இதற்கு அல்லாஹ்வின் சாட்சியே போதுமானது. 4:80 யார், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவராவார். மேலும் யாரேனும் புறக்கணித்துவிட்டால், அவர்களின் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. 4:81 ‘நாங்கள் கீழ்ப்படிகிறோம்’ என (நேரில்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், உம்மை விட்டு வெளியேறிவிட்டால், அவர்களில் ஒரு பிரிவினர் இரவில் கூடி நீர் கூறுகின்றவற்றிற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களின் இந்த இரகசி யப் பேச்சுக்களையெல்லாம் அல்லாஹ் பதிவு செய்து வைக்கிறான். எனவே நீர் அவர்களைப் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! சார்ந்திருப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். 4:82 அவர்கள் குர்ஆனைப் பற்றிச் சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள். 4:83 அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால், அதனை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும், தம்மில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அச்செய்தியின் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார்கள். (உங்களிடம் எந்த அளவுக்குப் பலவீனங்கள் இருந்தன என்றால்) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத் தவிர அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். 4:84 எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிவீராக! உம்மைத் தவிர வேறு யாருக்கும் நீர் பொறுப்பாளியல்லர். ஆயினும், இறைநம்பிக்கையாளர்களுக்கு(ப் போர் புரியும்படி) ஆர்வமூட்டுவீராக! அல்லாஹ் இறைமறுப்பாளர்களின் பலத்தை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் அனைவரையும்விட வலிமை மிக்கவன். மேலும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்! 4:85 யார் நன்மைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அந்நன்மையில் பங்கு பெறுவார்; மேலும், யார் தீமைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அத்தீமையில் பங்கு பெறுவார். மேலும், அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். 4:86 மேலும், உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான். 4:87 அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் உங்கள் அனைவரையும் மறுமைநாளில் திண்ணமாக ஒன்று திரட்டுவான். அ(ந் நாள் வருவ)தில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும், அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவர் வேறு எவருமில்லை.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)