அத்தியாயம்  அன்னிஸா  4 : 148-176 / 176
4:148 அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 4:149 (அநீதி இழைக்கப்பட்ட நிலையில், தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேச உங்களுக்கு அனுமதியுண்டு.) ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயலை செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியாளர்களின் தீங்கை) மன்னித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கின்றான். (ஆயினும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். 4:150 எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, மேலும் நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்; சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்றார்களோ, மேலும், இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட ஒரு வழியினை அமைத்திட விரும்புகின்றார்களோ 4:151 அவர்கள்தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். 4:152 (ஆனால்) எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்கள் அனைவரையும் நம்பி தூதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவுமில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலிகளை நிச்சயம் வழங்குவோம். மேலும், அல்லாஹ் அதிக மன்னிப்பு வழங்குபவனும் கருணை நிறைந்தோனுமாய் இருக்கின்றான். 4:153 (நபியே!) வேதம் அருளப்பட்டவர்கள் (எழுதப்பட்ட நிலையில்) ஒரு வேதத்தை வானத்திலிருந்து தங்கள் மீது இறக்கி வைக்குமாறு இன்று உம்மிடம் கேட்கின்றார்கள் எனில், உண்மையில் இவர்கள் மூஸாவிடம் இதைவிடக் கொடூரமான கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவரிடமோ அவர்கள், “அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டுவீராக!” என்று கூறியிருந்தனர். இவ்வாறு அவர்கள் அக்கிரமமாக நடந்து கொண்டதால், திடீரென அவர்களை ஒரு பேரிடி தாக்கியது. பிறகு அவர்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் பசுவின் கன்றைத் தங்களுடைய தெய்வமாக்கிக் கொண்டார்கள். அதனையும் நாம் மன்னித்தோம். நாம் மூஸாவிற்குத் தெளிவான கட்டளையை வழங்கினோம். 4:154 இன்னும், தூர்மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தி (இக்கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு) அவர்களிடம் வாக்குறுதி வாங்கினோம். “தலை தாழ்த்தியவாறு வாயிலில் நுழையுங்கள்!” என்று நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டோம். ஸப்த் சனிக்கிழமை விதியை மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம்; மேலும், இவ்விஷயத்தில் திடமான வாக்குறுதியையும் அவர்களிடம் நாம் வாங்கினோம். 4:155 அவர்கள் தம் வாக்குறுதியை மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததாலும், இறைத்தூதர்கள் பலரை நியாயமின்றி அவர்கள் கொலை செய்ததாலும், மற்றும் எங்களுடைய உள்ளங்கள் உறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியதாலும் அவர்களை நாம் சபித்தோம் உண்மை என்னவெனில், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவே அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான். எனவே, அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். 4:156 மேலும், அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், (அவர்களை நாம் சபித்தோம்). 4:157 மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை. 4:158 மாறாக, அல்லாஹ் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். 4:159 வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமைநாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார். 4:160 யூதர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் வழியிலிருந்து அதிகமான மனிதர்களை அவர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாலும், (முன்பு) அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்துவிட்டோம். 4:161 மேலும் வட்டி அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்க அதனை அவர்கள் வாங்கிக் கொண்டிருப்பதாலும், மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் அவர்கள் விழுங்கிக் கொண்டிருப்பதாலும் (முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்து விட்டோம்). மேலும் அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்செய்து வைத்துள்ளோம். 4:162 ஆனால், அவர்களில் அறிவுத்திறன் மிக்கவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் (நபியே!) உம்மீதும், உமக்கு முன்னரும் இறக்கியருளப்பட்ட அறிவுரைகளை நம்புகின்றார்கள்! (இவ்வாறு நம்பிக்கை கொண்டு) தொழுகையையும், ஜகாத்தையும் முறையாகப் பேணுபவர்கள், மேலும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் உறுதியாக நம்புபவர்கள் ஆகியோருக்கு அதிவிரைவில் மகத்தான கூலியை நாம் நிச்சயமாக வழங்குவோம். 4:163 (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததுபோல திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் ஸுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஜபூரை வழங்கினோம். 4:164 மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான். 4:165 இறைத்தூதர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏனெனில், அத்தூதர்கள் அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்விடம் முறையிட மக்களுக்கு ஆதாரம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக! மேலும், எந்நிலையிலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 4:166 (இவர்கள் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி) ஆனால் (நபியே!) அல்லாஹ் உம்மீது இறக்கியருளியவற்றை தன் பேரறிவைக்கொண்டே இறக்கியருளினான் என்பதற்கு தானே சான்று வழங்குகின்றான்; வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வின் சான்றே முற்றிலும் போதுமானது; 4:167 எவர்கள் (இவற்றை) தாமும் ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மற்றவர்களையும் தடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக வழிகேட்டில் (மூழ்கி, சத்தியத்தைவிட்டு) வெகுதூரம் சென்றுவிட்டார்கள். 4:168 எவர்கள் இவ்வாறு நிராகரிப்பை அல்லாஹ்வை எதிர்க்கும் போக்கை மேற்கொண்டு, அக்கிரமம் புரிந்தார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். 4:169 அவர்களுக்கு நரகத்திற்கான வழியினைத் தவிர வேறெந்த வழியையும் காட்டவும் மாட்டான். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்து கிடப்பார்கள்! இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான செயலே ஆகும். 4:170 மனிதர்களே! இந்தத் தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். எனவே, நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கே நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் நிராகரித்தால் வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 4:171 வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான். 4:172 தான் அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதை மஸீஹ் எப்போதுமே இழிவாகக் கருதியதில்லை. இறையண்மை பெற்ற வானவர்களும் அதனை இழிவாகக் கருதுவதில்லை. எவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி, தற்பெருமையும் கொள்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் விரைவில் அல்லாஹ் ஒன்று திரட்டித் தன்முன் கொண்டுவருவான். 4:173 (அவ்வேளையில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு அவன் அவர்களுடைய கூலிகளை நிறைவாகக் கொடுப்பான். மேலும், தனது அருளால் இன்னும் அதிகம் (கூலி) வழங்குவான். மேலும், எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமையும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், அல்லாஹ்வை அன்றி (தாம் நம்பிக்கை கொண்டிருந்த) பாதுகாவலர் மற்றும் உதவியாளர் எவரையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள். 4:174 மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம். 4:175 (இனி) எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும் அவனிடம் புகலிடம் தேடுகின்றார்களோ அவர்களை அதிவிரைவில் தனது கருணையிலும் அருளிலும் அல்லாஹ் நுழையச் செய்வான். மேலும், தன் பக்கம் வருவதற்கான நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான். 4:176 (நபியே!) மக்கள் உம்மிடம் கலாலா பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு கலாலா பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன், ஒரு சகோதரி அவனுக்கு இருக்கும் நிலையில் இறந்துவிட்டால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் பாதி அவளுக்கு உரியதாகும். குழந்தை இல்லாமல் அந்தச் சகோதரி இறந்துவிட்டால் சகோதரன் அவளுக்கு வாரிசாவான். இறந்து போனவருக்கு இரு சகோதரிகள் இருந்தால், அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு உரியதாகும். சகோதர சகோதரிகள் பலர் இருந்தால், அவர்களில் ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானதாகும். அல்லாஹ் உங்களுக்குச் சட்ட திட்டங்களைத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அல்மாயிதா  5 : 1-26 / 120
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
5:1 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதென்று கருதிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவதைக் கட்டளையிடுகின்றான். 5:2 இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவழிபாட்டுக்குரிய சின்னங்களை அவமதிக்காதீர்கள். சங்கைக்குரிய எந்த மாதத்தையும் போர் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டதாய் கொள்ளாதீர்கள்! இன்னும் குர்பானிக்குரிய பிராணிகளையும், இறைவனுக்காக நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அறிகுறியாக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணிகளையும் துன்புறுத்தாதீர்கள்! இன்னும் தன்னுடைய இறைவனின் திருவருளையும், திருப்பொருத்தத்தையும் பெற எண்ணி புண்ணியத்தலம் (கஅபா) நோக்கிச் செல்வோரை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்! ஆனால், இஹ்ராமின் நிலையிலிருந்து விலகி விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். மேலும் பாருங்கள்: மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படிச் செய்துவிடக்கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது. 5:3 செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெரிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய தீன்வாழ்க்கை நெறி குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். (எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ஹலால், ஹராமெனும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்.) ஆயினும் கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான். 5:4 மக்கள் எவை தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்துப் பொருட்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.” மேலும் எந்த வேட்டைப் பிராணிகளுக்கு நீங்கள் வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கின்றீர்களோ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அறிவைக் கொண்டு அவற்றுக்கு வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கிறீர்கள் பிறகு அந்த வேட்டைப் பிராணிகள் உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம். ஆயினும் அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள்! இன்னும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாறு செய்ய அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன். 5:5 இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்க (ஹலாலாக்க)ப்பட்டிருக்கின்றன. வேதம் அருளப்பட்டவர்களின் உணவு உங்களுக்கும், உங்களது உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், நல்லொழுக்கமுள்ள பெண்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களே; அவர்கள் ஈமான் இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி; உங்களுக்கு முன்னர் வேதம் அருளப்பட்டவர்களின் சமுதாயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பாதுகாவலர்களாய் நீங்கள் திகழவேண்டுமே தவிர, அவர்களுடன் விபச்சாரத்திலோ கள்ளக் காதலிலோ ஈடுபடக்கூடாது. மேலும், எவன் ஈமானின் வழியில் செல்ல மறுக்கின்றானோ அவனது வாழ்வின் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும். மேலும், அவன் மறுமையில் பேரிழப்புக்கு ஆளாவான். 5:6 இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும். 5:7 இன்னும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேற்றினை நினைத்துப் பாருங்கள். மேலும் உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட உறுதிமொழியை மறந்து விடாதீர்கள். அப்பொழுது நீங்கள் “செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறியிருந்தீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், இதயங்களில் மறைந்திருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். 5:8 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். 5:9 எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமென்றும் மகத்தான நற்கூலி அவர்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றான். 5:10 மேலும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே! 5:11 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு (அண்மையில்) செய்த பேருதவியை நினைத்துப் பாருங்கள்! ஒரு கூட்டத்தார் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்டிட நாடியிருந்தபோது, அல்லாஹ் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும் தடுத்து நிறுத்தினான். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள்! நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்து நிற்க வேண்டும். 5:12 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வலுவான உறுதிமொழி வாங்கியிருந்தான். மேலும் அவர்களில் பன்னிரண்டு பேரைக் கண்காணிப்பாளராய் நியமித்திருந்தான். இன்னும் அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “திண்ணமாக, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தியும் ஜகாத்தை அளித்தும், என்னுடைய தூதர்களை ஏற்று அவர்களுக்கு உதவி புரிந்தும், உங்களுடைய இறைவனுக்கு அழகிய கடன் அளித்தும் வந்தீர்களாயின் திண்ணமாக நான் உங்களுடைய தீமைகளைப் போக்கிவிடுவேன். மேலும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் உங்களை நுழைவிப்பேன். ஆனால் இதன் பின்னரும் உங்களில் எவரேனும் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டால் நிச்சயமாக அவர் “ஸவாவுஸ் ஸபீலை” இராஜபாட்டையை விட்டுப் பிறழ்ந்தவராவார்”. 5:13 பிறகு அவர்கள் தாம் செய்த வாக்குறுதியை முறித்ததற்காக நாமும் அவர்களை நமது அருளிலிருந்து தூர எறிந்துவிட்டோம். மேலும், அவர்களுடைய நெஞ்சங்களை இறுகச் செய்துவிட்டோம். இப்பொழுது அவர்களுடைய நிலை என்னவெனில் வேத வாக்குகளை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டியும் திரித்தும் விதவிதமாகப் பொருள் கொள்கின்றனர். இன்னும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட உயர் அறிவுரைகளில் பெரும்பாலானவற்றை மறந்தே போயினர். நாள்தோறும் அவர்களுடைய மோசடிச் செயல்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்களில் மிகச் சிலரே இத்தகைய இழி செயலிலிருந்து விலகி இருக்கிறார்கள். (அவர்கள் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்கி வந்தபின் அவர்கள் எத்தகைய குறும்புத்தனங்கள் புரிந்தாலும் அவை எதிர்பார்க்கப்பட்டவைதாம்) எனவே, அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களின் தவறான செயல்களைப் பொருட்படுத்தாதீர்கள். நன்னடத்தையை மேற்கொள்பவர்களையே திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான். 5:14 “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தவர்களிடமும் இவ்வாறே நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். அவர்களும்கூட தங்களுக்கு நினைவூட்டப்பட்ட நல்லுரைகளில் பெரும்பகுதியை மறந்தே போயினர். இறுதியில் நாம் அவர்களுக்கிடையே மறுமைநாள் வரை பகைமையையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைத்து விட்டோம். மேலும், அவர்கள் உலகில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அல்லாஹ் காண்பித்துத் தருகின்ற ஒரு நேரமும் நிச்சயமாக வரத்தான் போகின்றது. 5:15 வேதம் அருளப்பட்டவர்களே! நம்முடைய தூதர் உங்களிடம் வருகை தந்துள்ளார். இறைவேதத்தில் நீங்கள் மூடிமறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களைத் தெள்ளத் தெளிவாய் அவர் விளக்குகின்றார். இன்னும் பல விஷயங்களை மன்னித்தும் விடுகின்றார். அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது. 5:16 அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான். 5:17 திண்ணமாக “மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள். (நபியே!) அவர்களிடம் நீர் கூறும்: “மர்யத்தினுடைய மகன் மஸீஹையும் அவருடைய அன்னையையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்திட நாடினால் அவனைத் தடுத்திட யாருக்குத் துணிவு உண்டு? வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.” 5:18 “நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள்; மேலும், அவனது அன்பிற்குரியவர்கள்” என்றெல்லாம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “அவ்வாறாயின் உங்களின் பாவச் செயல்களுக்காக அவன் ஏன் உங்களுக்குத் தண்டனை அளிக்கின்றான்?” உண்மையில், அவன் படைத்த மற்ற மனிதர்களைப்போல் நீங்களும் மனிதர்கள்தானே! தான் நாடுபவர்களை அவன் மன்னிக்கின்றான். மேலும் தான் நாடுபவர்களைத் தண்டிக்கின்றான். பூமி, வானங்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கே உரியன. மேலும், அவனிடமே எல்லாரும் செல்ல வேண்டியிருக்கிறது. 5:19 வேதம் அருளப்பட்டவர்களே! தூதர்களின் வருகைத் தொடர் சிறிது காலம் வரை நின்று போயிருந்த சமயத்தில் எம்முடைய இந்தத் தூதர் உங்களிடம் வந்துள்ளார். மேலும், இறைநெறியின் தெளிவான அறிவுரைகளை உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். எதற்காகவெனில், நற்செய்தி கூறக்கூடிய, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய எவரும் எங்களிடம் வரவில்லையே என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக! (இதோ பாருங்கள்:) இப்போது நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான். 5:20 மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான். 5:21 என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.” 5:22 அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள். 5:23 அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!” 5:24 ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.” 5:25 அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார். 5:26 அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)