அத்தியாயம்  அஸ்ஸாஃப்பாத்  37 : 145-182 / 182
37:145 இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம். 37:146 பிறகு படர்கின்ற கொடியை அவர் மீது (நிழலிட) முளைக்கச் செய்தோம். 37:147 பின்னர், அவரை நாம் ஓர் இலட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் அனுப்பினோம். 37:148 அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களை வாழவிட்டோம். 37:149 பின்னர், இவர்களிடம் சற்று வினவுவீராக: உம் இறைவனுக்குப் பெண்மக்கள்; இவர்களுக்கு ஆண் மக்களா? (இந்தப் பேச்சு இவர்களின் மனதுக்கு சரியெனப் படுகிறதா என்ன?) 37:150 அல்லது உண்மையில், நாம் வானவர்களைப் பெண் மக்களாகவே படைத்திருக்கின்றோமா? கண்ணால் பார்த்தவற்றைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா? 37:151 நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்; 37:152 அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர். 37:153 ஆண்மக்களை விட்டு விட்டு பெண்மக்களை அல்லாஹ் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? 37:154 உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எப்படிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்! 37:155 நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? 37:156 அல்லது (உங்களின் வாதங்களுக்கு) தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா? 37:157 நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் அத்தகைய உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்! 37:158 அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள். 37:159 (மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்:) அல்லாஹ் தூய்மை வாய்ந்தவன், அந்தத் தன்மைகளை விட்டு! 37:160 அதாவது, அவனுடைய வாய்மையான அடியார்களைத் தவிர மற்றவர்கள் (அவனைக் குறித்து) கற்பிக்கின்ற தன்மைகளை விட்டு! 37:161 ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் , 37:162 அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது; 37:163 ஆனால், கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் எரிந்து கரிந்து போகக் கூடியவனைத்தவிர! 37:164 மேலும், எங்களுடைய நிலைமை என்னவெனில், எங்களில் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடம் இருக்கின்றது. 37:165 மேலும், திண்ணமாக, நாங்களே அணிவகுத்து நின்று பணிபுரிபவர்களாய் இருக்கின்றோம். 37:166 இன்னும் திண்ணமாக, நாங்களே துதி செய்பவர்களாய் இருக்கின்றோம். 37:167 திண்ணமாக, இவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்தார்கள், 37:168 “முந்தைய சமுதாயங்களுக்குக் கிடைத்திருந்த அறிவுரை எங்களுக்கும் கிடைத்திருந்தால், 37:169 நாங்களும் அல்லாஹ்வின் வாய்மை மிக்க அடியார்களாக விளங்கி இருப்போம்” என்று! 37:170 ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள். 37:171 நம்மால் தூதர்களாக அனுப்பப்பட்ட நம்முடைய அடியார்களுக்கு நாம் முன்னரே இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளோம். 37:172 நிச்சயமாய், அவர்கள் உதவி செய்யப்படுவார்கள். 37:173 மேலும், திண்ணமாக நமது படையினர்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வார்கள். 37:174 ஆகவே, (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே சிறிது காலம் விட்டுவிடும்! 37:175 மேலும், பார்த்துக் கொண்டிரும்! மிக விரைவில் இவர்களும் தாங்களாகவே கண்டு கொள்வார்கள். 37:176 என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா? 37:177 அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாள் மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும். 37:178 எனவே, சிறிது காலத்திற்கு இவர்களை விட்டுவிடும்! 37:179 மேலும், பார்த்துக் கொண்டிரும்; மிக விரைவில் இவர்களும் தாமாகவே கண்டு கொள்வார்கள்! 37:180 தூய்மையானவன் உம் இறைவன்; கண்ணியத்திற்கு உரித்தானவன்; இவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டு (அவன் தூய்மையானவன்!) 37:181 மேலும், சாந்தி உண்டாகட்டும்; இறைத்தூதர்கள் அனைவர் மீதும்! 37:182 இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தானது!
அத்தியாயம்  ஸாத்  38 : 1-88 / 88
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
38:1 ஸாத், அறிவுரை நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக! 38:2 ஆயினும், எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள்தாம் பெரும் ஆணவத்திலும், பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். 38:3 இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை. 38:4 அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்; 38:5 என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!” 38:6 மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது; 38:7 அண்மைக்காலத்து எந்தச் சமுதாயத்திடமும் இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனைசெய்து கூறப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை. 38:8 நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்! 38:9 என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா? 38:10 அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும். 38:11 பல கூட்டத்தினரிடையே இவர்கள் ஒரு சிறு கூட்டத்தினர்தாம்; இவர்கள் இதே இடத்தில் தோல்வி அடைய இருக்கின்றார்கள். 38:12 இவர்களுக்கு முன் நூஹுடைய சமூகத்தினரும், ஆத் சமூகத்தினரும், முளைகளுடைய ஃபிர்அவ்னும், 38:13 மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள். 38:14 கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது. 38:15 இந்த மக்களும் ஒரே ஓர் உரத்த ஓசையையே எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்குப் பிறகு மற்றோர் உரத்த ஓசை இராது. 38:16 இவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவனே! கேள்வி கணக்கிற்குரிய நாளுக்கு முன்பே எங்களின் பங்கினை எங்களுக்கு விரைவாகத் தந்துவிடு!” 38:17 (நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளை பொறுத்துக் கொள்ளும். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீர் எடுத்துக்கூறும். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார். 38:18 நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும், மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம் இருந்தன. 38:19 பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன. 38:20 நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம்; நுண்ணறிவையும் அவருக்கு வழங்கியிருந்தோம். மிக நுட்பமான தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கி இருந்தோம். 38:21 மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? 38:22 அவர்கள் தாவூதிடம் வந்தபோது அவர், அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! நாங்கள் ஒரு வழக்கு சம்பந்தமான இரு பிரிவினராவோம். எங்களில் ஒருவர் இன்னொருவருக்கு அநீதி இழைத்துள்ளார். நீர் எங்களிடையே மிகச்சரியாகத் தீர்ப்பு வழங்குவீராக! நேர்மை தவறிவிடாதீர்; எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவீராக! 38:23 இதோ! இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரே ஒரு செம்மறி ஆடுதான் இருக்கின்றது. ‘இந்த ஒரு செம்மறி ஆட்டையும் என்னிடம் ஒப்படைத்துவிடு!’ என்று என்னிடம் இவர் கூறுகின்றார். பேச்சுசாதுர்யத்தால் இவர் என்னை மடக்கிவிட்டார்.” 38:24 தாவூத் பதிலளித்தார்: “இவர் தன்னுடைய செம்மறி ஆடுகளுடன் உம்முடைய செம்மறி ஆட்டையும் இணைத்துக் கொள்வதாகக் கோரியதன் மூலம் திண்ணமாக உமக்கு அநீதி இழைத்து விட்டார். உண்மையில் ஒன்றுகூடி வாழும் மக்களில் பெரும்பாலோர், ஒருவர் மற்றவர் மீது வரம்புமீறி நடந்து கொள்கின்றார்கள். ஆயினும் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்கள்தாம் இதிலிருந்து தப்பித்திருக்கின்றார்கள். இத்தகையோர் மிகச்சிலரே ஆவர்.” (இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோதே) உண்மையில் நாம் அவரை சோதித்திருக்கின்றோம் என்பதை தாவூத் உணர்ந்து விட்டார். உடனே தம்முடைய இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் ஸஜ்தாவில்* விழுந்து விட்டார்; இறைவன் பக்கம் மீண்டார். 38:25 அப்போது நாம் அவருடைய அந்தத் தவறை மன்னித்து விட்டோம். திண்ணமாக நம்மிடத்தில் அவருக்கு நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன. 38:26 (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நாம் உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம். எனவே, நீர் மக்களிடையே நீதியுடன் ஆட்சி செலுத்தும். மேலும், மன இச்சைகளைப் பின்பற்றாதீர். அது, அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மைப் பிறழச் செய்துவிடும். எவர்கள் அல்லாஹ்வுடைய வழியிலிருந்து பிறழ்ந்துவிடுகின்றார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக கடும் தண்டனை இருக்கிறது; கேள்வி கணக்கிற்குரிய நாளை அவர்கள் மறந்துவிட்ட காரணத்தால்! 38:27 நாம் இந்த வானத்தையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை. நிராகரிப்பாளர்களின் கருத்தாகும் இது. இத்தகைய நிராகரிப் பாளர்களுக்கு நரக நெருப்பின் மூலம் அழிவுதான் இருக்கின்றது. 38:28 நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கிவிடுவோமா, என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன? 38:29 இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! 38:30 நாம் தாவூதுக்கு ஸுலைமா(ன் போன்ற மைந்த)னை வழங்கினோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும், தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் திகழ்ந்தார். 38:31 அந்தச் சந்தர்ப்பம் நினைவு கூரத்தக்கதாகும். நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் மாலை நேரத்தில் அவர் முன்னால் கொண்டு வரப்பட்டபோது, 38:32 அவர் கூறினார்: “என்னுடைய இறைவனை நினைவுகூர்வதற்காகவே நான் இச்செல்வத்தை நேசிக்கின்றேன்.” இறுதியாக அக்குதிரைகள் கண்ணைவிட்டு மறைந்தபோது (அவர்கட்டளையிட்டார்:) 38:33 “அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள்!” பிறகு அவற்றின் கெண்டைக் கால்களையும், பிடரிகளையும் கையினால் தடவினார். 38:34 பிறகு (பாருங்கள்) நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். பிறகு அவர் (தம்முடைய இறைவன் பக்கம்) திரும்பினார். 38:35 “என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!” 38:36 அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது. 38:37 கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும், 38:38 சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். 38:39 (நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.” 38:40 திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன. 38:41 நம்முடைய அடியார் அய்யூபையும் நினைவுகூர்வீராக! ஒருபோது அவர், “ஷைத்தான் என்னைச் சிரமத்திலும், துன்பத்திலும் ஆழ்த்திவிட்டானே!” என்று தன்னுடைய இறைவனை அழைத்து முறையிட்டார். 38:42 (அப்பொழுது நாம் அவருக்குக் கட்டளையிட்டோம்:) பூமியில் உம்முடைய கால்களைக் கொண்டு உதையும். இதோ குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீர்! 38:43 நாம் அவருக்கு அவருடைய குடும்பத்தாரைத் திருப்பிக் கொடுத்தோம். மேலும், அவர்களோடு அதே அளவுக்கு மற்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். நமது சார்பிலிருந்து அருளாகவும், அறிவுடையோருக்குப் படிப்பினையாகவும்! 38:44 மேலும், (நாம் அவரிடம் கூறினோம்:) ‘ஒருபிடி புல்லை எடுத்து அதைக்கொண்டு அடியும்; உம்முடைய சத்தியத்தை முறித்து விடாதிரும்.’ அவரை நாம் பொறுமையாளராய்க் கண்டோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும் தம் இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவராகவும் திகழ்ந்தார். 38:45 மேலும், நம்முடைய அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைவுபடுத்துவீராக! அவர்கள் மிகுந்த செயலாற்றல் கொண்டவர்களாகவும், நுண்ணோக்கு உடையவர்களாகவும் இருந்தார்கள். 38:46 மறுமையை நினைவுகூர்வது எனும் ஒரு தூய பண்பு அவர்களிடம் இருந்தமையால் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தோம். 38:47 திண்ணமாக அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்கள். 38:48 இஸ்மாயீல், அல் யஸஃ, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவுகூர்வீராக! இவர்கள் எல்லோரும் நன்மக்களாய் விளங்கினர். 38:49 இது ஒரு நல்லுரையாகும். (இப்போது கேளுங்கள்!) இறையச்சம் உள்ளவர்களுக்கு திண்ணமாக அழகிய தங்குமிடம் இருக்கிறது. 38:50 நிலையாகத் தங்குகின்ற சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்திருக்கும். 38:51 அங்கே அவர்கள் மஞ்சங்களில் சாய்ந்திருப்பார்கள். நிறையக் கனிகளையும், பானங்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். 38:52 மேலும், அவர்களின் அருகில் நாணமுடைய சமவயதுடைய மனைவியர் இருப்பர். 38:53 கேள்விகணக்கு கேட்கும் நாளில் உங்களுக்குத் தருவதாக வாக்களித்துக் கொண்டிருப்பவை இவைதாம்! 38:54 இது நாம் வழங்கும் நற்பேறாகும். இதற்கு என்றுமே முடிவில்லை. 38:55 இதுதான் இறையச்சம் உடையவர்களின் நல்ல முடிவாகும். வரம்புமீறிச் செல்வோருக்கு மிகத் தீய இருப்பிடம் இருக்கிறது, 38:56 நரகம்! அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். அது மிகத் தீய தங்குமிடம்! 38:57 இதுதான் அவர்களுக்கு உரியது. எனவே, அவர்கள் சுவைக்கட்டும்; கொதித்த நீரையும் சீழ்சலத்தையும், 38:58 இதுபோன்ற வேறு பல கழிவுகளையும்! 38:59 (அவர்கள், தம்மைப் பின்பற்றியவர்கள் நரகத்தை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தமக்கிடையே கூறிக்கொள்வார்கள்:) “இதோ! ஒரு படை முண்டியடித்துக் கொண்டு உங்களிடம் வருகின்றது. எந்த வரவேற்பும் இவர்களுக்கு இல்லை; இவர்கள் நெருப்பில் எரிந்து பொசுங்கக்கூடியவர்கள்தாம்!” 38:60 அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். “இல்லை! நீங்கள்தாம் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்; எந்த வரவேற்பும் உங்களுக்குத்தான் இல்லை; நீங்கள்தாம் இந்தத் தீயகதிக்கு எங்களை ஆளாக்கினீர்கள். எவ்வளவு மோசமான தங்குமிடம் இது!” 38:61 பிறகு அவர்கள் கூறுவார்கள்: “இறைவா! எவர்கள் எங்களை இந்தத் தீயகதிக்கு ஆளாக்கிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களோ அவர்களுக்கு நரகத்தின் இருமடங்கு வேதனையை நீ கொடுப்பாயாக!” 38:62 அவர்கள் தமக்கிடையில் பேசிக்கொள்வார்கள்: “என்ன நாம் உலகில் யாரைத் தீயவர்களென்று கருதியிருந்தோமோ அவர்களை எங்குமே காணவில்லையே? 38:63 அவர்களை நாம் தாம் வெறுமனே பரிகாசம் செய்துகொண்டு இருந்தோமா? அல்லது அவர்கள் கண்ணில்படாமல் இருக்கின்றார்களா?” 38:64 சந்தேகமின்றி இது உண்மையான விஷயமாகும்; இதேபோன்ற தர்க்கங்கள் தாம் நரகவாசிகளிடையே நடைபெற இருக்கின்றன. 38:65 (நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; 38:66 மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்குமிடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.” 38:67 இவர்களிடம் கூறும்: “இது ஒரு மாபெரும் செய்தி! 38:68 நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!” 38:69 (இவர்களிடம் கூறுங்கள்:) “மேலுலகத்தில் தர்க்கம் நடைபெற்றபோது, அவர்களைப்பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 38:70 நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வஹியின் மூலம் இவ்விஷயங்கள் எனக்கு அறிவிக்கப்படுகின்றன.” 38:71 உம்முடைய இறைவன் வானவர்களிடம் “நான் களிமண்ணால் ஒரு மனிதனைப் படைக்கப்போகின்றேன்; 38:72 நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால், அவருக்கு முன்னால் சிரம் பணியுங்கள் எனக் கூறியபோது 38:73 (இக்கட்டளைக்கு இணங்கி) வானவர்கள் அனைவருமே சிரம் பணிந்தார்கள். 38:74 ஆனால், இப்லீஸைத் தவிர! அவன் தன்னைப் பெரியவனென்று கருதி கர்வம் கொண்டான். மேலும், நிராகரிப்பவர்களுடன் சேர்ந்துவிட்டான். 38:75 இறைவன் கூறினான்: “இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?” 38:76 அவன் (இப்லீஸ்) பதிலளித்தான்: “நான் அவரை விடச் சிறந்தவன்; என்னை நீ நெருப்பினால் படைத்தாய்; அவரையோ களிமண்ணால்!” 38:77 அல்லாஹ் கூறினான்: “சரி! நீ இங்கிருந்து வெளியேறி விடு; நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய். 38:78 மேலும், கூலி வழங்கும் நாள் வரை உன்மீது என்னுடைய சாபம் உண்டாகும்.” 38:79 அதற்கு அவன் கூறினான்: “என் இறைவா! அவ்வாறாயின் இவர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளித்திடுவாயாக!” 38:80 அல்லாஹ் கூறினான்: “சரி! உனக்கு அந்நாள்வரை அவகாசம் இருக்கிறது. 38:81 அந்நாள் வரும் நேரம் எனக்குத் தெரியும்.” 38:82 அவன் கூறினான்: “உன்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! இம்மக்கள் அனைவரையும் நான் வழிகெடுத்துக் கொண்டிருப்பேன்; 38:83 ஆனால், இவர்களில் நீ தூய்மைப்படுத்தியுள்ள உன்னுடைய அடியார்களைத் தவிர!” 38:84 இறைவன் கூறினான்: “அவ்வாறாயின், உண்மை இதுதான்: உண்மையைத்தான் நான் கூறுகின்றேன் 38:85 உன்னைக் கொண்டும் மனிதர்களில் யார் யார் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அனைவரைக் கொண்டும் நான் நிச்சயம் நரகத்தை நிரப்புவேன்.” 38:86 (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “இந்த அழைப்புப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் போலிக்குணம் உடையவர்களில் உள்ளவனல்லன். 38:87 இது உலகமக்கள் அனைவருக்கும் நல்லுரையேயாகும். 38:88 மேலும், சிறிது காலம் கழிவதற்குள்ளாக இதன் நிலைமை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்துவிடும்.”
அத்தியாயம்  அஸ்ஸுமர்  39 : 1-31 / 75
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
39:1 வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கிறது. 39:2 (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கியிருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்! 39:3 அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 39:4 அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான். 39:5 அவன் வானங்களையும், பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கின்றான். அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளுங்கள். அவன் வலிமை மிக்கவனும், மன்னித்து அருள்பவனுமாவான்! 39:6 அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? 39:7 நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 39:8 மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.” 39:9 (இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.” 39:10 (நபியே!) கூறுவீராக: “நம்பிக்கைக்கொண்டிருக்கின்ற என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு அஞ்சுங்கள். எவர்கள் இவ்வுலகில் நன்னடத்தையைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்.” 39:11 (நபியே! இவர்களிடம்) கூறும்: “தீனைகீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும்படி திண்ணமாக எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. 39:12 மேலும், நானே எல்லோருக்கும் முதலில் முஸ்லிமாக (இறைவனுக்கு அடிபணிந்தவனாக) இருக்க வேண்டும் என எனக்குப் பணிக்கப்பட்டுள்ளது.” 39:13 கூறுவீராக: “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மகத்தான நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்.” 39:14 கூறிவிடுவீராக: “நான் என்னுடைய தீனைகீழ்ப்படிதலை, அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்ணம் அவனையே வணங்குவேன். 39:15 நீங்கள் அவனை விடுத்து யார் யாரையெல்லாம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “மறுமை நாளில் யார் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் இழப்பிற்குள்ளாக்கினார்களோ, அவர்கள்தாம் உண்மையில் திவால் ஆனவர்கள்.” நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்! இதுதான் அப்பட்டமான திவால் ஆகும். 39:16 அவர்கள் மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். 39:17 ஆனால் (இதற்கு மாறாக) எவர்கள் தாஃகூத்துக்கு* அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டார்களோ அவர்களுக்கு நற்செய்தி இருக்கிறது. எனவே அந்த அடியார்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக! 39:18 அவர்கள் எத்தகையவர்கள் எனில், சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு அவற்றின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுகின்றவர்கள். இத்தகையவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கிறான். அவர்களே விவேகம் உடையவர்களாவர். 39:19 (நபியே!) எவன் மீது தண்டனைக்கான தீர்ப்பு உறுதியாகிவிட்டதோ அவனை யாரால் காப்பாற்ற முடியும்? நெருப்பில் வீழ்ந்துவிட்டிருப்பவனை உம்மால் காப்பாற்ற முடியுமா என்ன? 39:20 ஆயினும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. 39:21 நீங்கள் காணவில்லையா என்ன? அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான். பின்னர் அந்த நீரின் வாயிலாக பல்வேறுபட்ட பயிர் வகைகளை விதவிதமான நிறங்களில் அவன் வெளிப்படுத்துகின்றான். பிறகு, அந்தப் பயிர்கள் முதிர்ந்து காய்ந்து விடுகின்றன. அப்போது அவை மஞ்சளித்துப் போவதை நீர் காண்கிறீர். இறுதியில் அல்லாஹ் அவற்றைப் பதராக்கிவிடுகின்றான். உண்மையில் விவேகம் உடையவருக்கு இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. 39:22 எவருடைய நெஞ்சத்தை அல்லாஹ் இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டிருக்கின்றானோ, மேலும் எவர் தன்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ஒளியில் நடந்து கொண்டிருக்கின்றாரோ (அவர் இவற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் பெறாத மனிதனைப் போன்று ஆக முடியுமா?) அல்லாஹ்வின் நல்லுரைகளுக்கு எதிராக எவர்களுடைய உள்ளம் இன்னும் அதிகமாக இறுகிவிட்டதோ, அவர்களுக்குக் கேடுதான்! அத்தகையவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். 39:23 அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. மேலும், அதில் கருத்துகள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கிறது. பின்னர், அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். அவன், தான் நாடுவோரை இதனைக் கொண்டு நேரிய வழியில் செலுத்துகின்றான். இனி எவருக்கு அல்லாஹ்வே நேர்வழி காட்டவில்லையோ, அவருக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இலர். 39:24 இனி மறுமைநாளில் வேதனையின் கடும் தாக்குதலைத் தன் முகத்தில் தாங்கிக்கொள்ள வேண்டிய மனிதனுடைய மோசமான நிலையைக் குறித்து நீங்கள் என்ன கணிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட கொடுமைக்காரர்களிடம் அப்பொழுது கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை!” 39:25 இவர்களுக்கு முன்பும் பலர் இதே போன்று பொய்யென வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் நினைத்தும் பார்த்திராத திசையிலிருந்து அவர்கள் மீது வேதனை வந்தது. 39:26 பின்னர், அல்லாஹ் உலக வாழ்விலேயே இழிவினை அவர்கள் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனையோ, இதனைவிடக் கடுமையானதாகும்; அந்தோ! இந்த மக்கள் அறிந்திருந்தால்! 39:27 நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருக்கின்றோம், அவர்கள் விழிப்படையவேண்டும் என்பதற்காக! 39:28 இது அரபி மொழியிலுள்ள குர்ஆன்; இதில் எவ்விதக் கோணலுமில்லை; தீயகதியிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக! 39:29 அல்லாஹ் ஓர் உதாரணம் சொல்கின்றான்; ஒரு மனிதன் இருக்கின்றான். அவன் மீது உரிமை கொண்டாடுவதில் துர்குணமுடைய மனிதர்கள் பங்காளிகளாய் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைத் தத்தம் பக்கமாக இழுக்கின்றனர். மற்றொரு மனிதன் முழுக்க முழுக்க ஒரே உரிமையாளனுக்கே அடிமையாக இருக்கின்றான். என்ன, இவ்விருவரின் நிலையும் சமமாக முடியுமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறியாமையில் கிடக்கின்றார்கள். 39:30 (நபியே!) நீரும் மரணமாகத்தான் போகிறீர். இவர்களும் மரணமாகக் கூடியவர்கள்தாம்! 39:31 பிறகு, மறுமை நாளில் திண்ணமாக நீங்கள் எல்லோரும் உங்கள் இறைவன் முன்னிலையில் தத்தம் வாதங்களை எடுத்துவைக்கப் போகிறீர்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)