அத்தியாயம்  யாஸீன்  36 : 28-83 / 83
36:28 அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை. 36:29 ஒரே ஓர் உரத்த ஓசைதான் (முழங்கியது). அவர்களெல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகிவிட்டனர். 36:30 அந்தோ! இம்மக்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. அவர்களிடம் எந்த இறைத்தூதர் வந்தபோதும், அத்தூதரை அவர்கள் ஏளனம் செய்துகொண்டுதான் இருந்தார்கள். 36:31 இவர்களுக்கு முன்பு (வாழ்ந்த) எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். (பிறகு) அவர்கள் ஒருபோதும் இவர்களிடம் திரும்பிவர மாட்டார்கள் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? 36:32 மேலும், திண்ணமாக இவர்கள் அனைவருமே (ஒருநாள்) நம்முன் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள். 36:33 உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதற்கு உயிர்கொடுத்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம்; அதிலிருந்து அவர்கள் புசிக்கிறார்கள். 36:34 மேலும், நாம் இதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினோம்; மேலும், இதில் நீரூற்றுகளைப் பீரிட்டெழச் செய்தோம்; 36:35 இதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக! இவையனைத்தும் அவர்களுடைய கைகள் உருவாக்கியவை அல்லவே! பிறகு ஏன், அவர்கள் நன்றி செலுத்துவதில்லை? 36:36 மிகவும் தூய்மையானவன்; எல்லா வகையான ஜோடிகளையும் படைத்திருப்பவன்! அவை பூமி முளைக்கச் செய்யக்கூடியவையானாலும் சரி; அவர்களுடைய இனத்திலிருந்தானாலும் சரி; அவர்கள் அறிந்திராத மற்ற பொருள்களிலிருந்தானாலும் சரியே! 36:37 மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்று ஆகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றிவிடும்போது அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது. 36:38 மேலும், சூரியனும் (பிறிதொரு சான்றாகும்). அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும். 36:39 மேலும், சந்திரன் (இன்னொரு சான்றாகும்). அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகி விடுகிறது. 36:40 சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. 36:41 மேலும், நிரம்பிய பெரிய தோணியில் நாம் அவர்களின் வழித்தோன்றல்களை ஏற்றியதும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். 36:42 பிறகு, அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய அதைப் போன்றவற்றையும் அவர்களுக்காக நாம் படைத்திருக்கின்றோம். 36:43 மேலும், நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்துவிடுவோம். அப்போது அவர்களுடைய முறையீடுகளைக் கேட்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் (எந்த வகையிலும்) மீட்கப்படவும் மாட்டார்கள்; 36:44 ஆயினும் நம்முடைய கருணையே அவர்களைக் காப்பாற்றுகிறது; மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கின்றது. 36:45 மேலும், “உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவற்றின் விளைவுகளிலிருந்தும், உங்களைக் கடந்து சென்று விட்டவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள் கேட்டும் கேளாதவர்கள் போல் இருந்து விடுகின்றார்கள்). 36:46 மேலும், அவர்களிடம் தம் இறைவனின் சான்றுகளிலிருந்து எந்த ஒரு சான்று வந்தாலும் அவர்கள் அதனை ஏறிட்டும் பார்ப்பதில்லை. 36:47 மேலும், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேறுகளிலிருந்து (இறைவழியிலும் பிறருக்கு) செலவழியுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் இறைநிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கிக் கூறுகின்றார்கள்: “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு அவனே உணவளித்திருப்பானே! திண்ணமாக, நீங்கள் முற்றிலும் வழிபிறழ்ந்து விட்டிருக்கிறீர்கள்!” 36:48 மேலும் அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மை கூறுவோராயின், (மறுமைநாளைப் பற்றிய உங்களின்) இந்த அச்சுறுத்தல் எப்போது நிறைவேறப் போகிறது? (என்பதை அறிவியுங்களேன்)” 36:49 அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் (உலக விவகாரங்கள் குறித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கும்போதே (திடீரென்று) அது அவர்களைப் பிடித்துக்கொள்ளும். 36:50 அப்போது அவர்களால் மரண சாஸனம் அளிக்கவோ, தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவோ முடியாது. 36:51 பிறகு ஒரு சங்கு ஊதப்படும். அப்பொழுது உடனே அவர்கள், (தத்தம்) அடக்கத்தலங்களிலிருந்து தம் இறைவனை நோக்கி விரைந்து வருவார்கள். 36:52 அவர்கள் (திகிலடைந்தவாறு) கேட்பார்கள்: “அந்தோ, எங்கள் பரிதாபமே! நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” (அப்போது), “கருணைமிக்க இறைவன் வாக்களித்திருந்தது இதுவேயாகும்! இறைத்தூதர்களின் வாக்கும் உண்மையாகிவிட்டது!” (என்று பதில் சொல்லப்படும்) 36:53 அது ஒரே ஓர் உரத்த ஓசையாகத்தான் இருக்கும். அக்கணம் அவர்கள் அனைவருமே நம்முன் கொண்டு வரப்படுவார்கள். 36:54 இன்று எவர் மீதும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எத்தகைய செயல்கள் புரிந்து கொண்டு இருந்தீர்களோ அவற்றிற்குத் தகுந்தாற்போல்தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும் 36:55 திண்ணமாக, இன்று சுவனவாசிகள் இன்பநுகர்ச்சியில் திளைத்திருப்பார்கள். 36:56 அவர்களும், அவர்களின் மனைவியரும் அடர்ந்த நிழலில் சாய்வாசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். 36:57 அவர்களுக்காக அங்கே உண்ணவும் பருகவும் வித விதமான சுவைமிக்க பொருள்கள் இருக்கும். மேலும், அவர்கள் விரும்பிக்கேட்கும் அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். 36:58 கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை (ஸலாம்) கூறப்படும். 36:59 மேலும், “குற்றம் புரிந்தவர்களே! இன்று நீங்கள் தனியே பிரிந்து நில்லுங்கள். 36:60 ஆதத்தின் மக்களே, நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவன் என்றும், 36:61 எனக்கே அடிபணியுங்கள்; இதுவே நேரான வழி என்றும் நான் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கவில்லையா? 36:62 (அவ்வாறிருந்தும்) அவன், உங்களில் பெரும்பாலான மக்களைத் திண்ணமாக வழிபிறழச் செய்துவிட்டான். நீங்கள் அறிவு பெற்றவர்களாய் இருக்கவில்லையா? 36:63 எதனைக் குறித்து நீங்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தீர்களோ அந்த நரகம் இதுவேயாகும். 36:64 நீங்கள் (உலகில் சத்தியத்தை) நிராகரித்து வந்ததன் விளைவாக இன்று அதன் எரிபொருளாகுங்கள்!” 36:65 இன்று, அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும். 36:66 மேலும், நாம் நாடினால் அவர்களுடைய கண்களை அவித்து விடுவோம். பிறகு, அவர்கள் பாதையை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால், எவ்வாறு அவர்களுக்குப் (பாதை) புலப்படும்? 36:67 மேலும், நாம் நாடியிருந்தால் முன்னோக்கிச் செல்லவும், பின்னோக்கித் திரும்பவும் அவர்களால் முடியாதவாறு தம் இருப்பிடத்திலேயே அவர்களை உருமாற்றி விட்டிருப்போம்! 36:68 மேலும், நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம். (இவை அனைத்தையும் பார்த்து) அவர்களுக்கு அறிவு வர வேண்டாமா, என்ன? 36:69 மேலும், (நபியாகிய) இவருக்கு நாம் கவிதை கற்றுக்கொடுக்கவில்லை; அது (கவிதை புனைதல்) அவருக்கு ஏற்றதுமன்று. திண்ணமாக இது ஒரு நல்லுரையாகவும், தெளிவாக ஓதப்படுகின்ற வேதமாகவும் இருக்கின்றது. 36:70 இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்! 36:71 அவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? திண்ணமாக, நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது அவர்கள் அவற்றிற்கு உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள். 36:72 மேலும் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில், சிலவற்றின்மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். மேலும், சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள். 36:73 மேலும், அவற்றில் அவர்களுக்குப் பலவிதமான பயன்களும் பானங்களும் இருக்கின்றன. (பிறகும்) அவர்கள் நன்றி செலுத்துவோராய் இருக்க வேண்டாமா, என்ன? 36:74 (இவ்வாறெல்லாம் இருந்தும்) அல்லாஹ்வை விடுத்து பிற கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், தாம் உதவி செய்யப்படலாமென்று ஆசை கொள்கிறார்கள். 36:75 அவற்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது! (இதற்கு நேர்மாறாக) அம்மக்கள், அவற்றிற்காக தயார் நிலையிலிருக்கும் சேனையாக விளங்குகிறார்கள். 36:76 (இட்டுக்கட்டிப் பேசும்) அவர்களின் பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவை அனைத்தையும் திண்ணமாக நாம் அறிகின்றோம். 36:77 திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான். 36:78 மேலும், அவன் நமக்கு உவமையைப் பொருத்துகின்றான். ஆனால் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிடுகின்றான். மக்கிப் போய்விட்ட நிலையிலுள்ள இந்த எலும்புகளை உயிர்ப்பிப்பவர் யார்? என்று அவன் கேட்கின்றான். 36:79 அவனிடம் கூறுங்கள்: “எவன் முதலில் அவற்றைப் படைத்தானோ அவனே அவற்றை உயிர்ப்பிப்பான். மேலும், அவன் படைப்பு நுட்பம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.” 36:80 அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பைப் படைத்தான். இப்போது நீங்கள் அதன் மூலம் (தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்! 36:81 வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவா? ஏன் இல்லை! நன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே. 36:82 அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ‘ஆகுக!’ என்று அதற்கு ஆணை இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது! 36:83 தூய்மையானவன், ஒவ்வொரு பொருளின் முழு அதிகாரமும் எவனுடைய கையில் உள்ளதோ அவன்! மேலும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்கள்.
அத்தியாயம்  அஸ்ஸாஃப்பாத்  37 : 1-144 / 182
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
37:1 அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக! 37:2 பின்னர், கண்டித்து விரட்டுவோர் மீது சத்தியமாக! 37:3 பின்னர், நல்லுரையை எடுத்தியம்புவோர் மீது சத்தியமாக! 37:4 உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்; 37:5 அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் அதிபதியும் கிழக்குகளின் உரிமையாளனுமாவான். 37:6 அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம். 37:7 மேலும், மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்திருக்கின்றோம். 37:8 ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள். 37:9 அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது. 37:10 ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் பிரகாசமான தீச்சுவாலை ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது. 37:11 இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம். 37:12 உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்! 37:13 விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. 37:14 ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள். 37:15 மேலும், கூறுகின்றார்கள்: “இது அப்பட்டமான சூனியமே; 37:16 நாம் இறந்து மண்ணாகி, எலும்புக்கூடாகி விட்டாலும் மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? 37:17 முன்பு வாழ்ந்து சென்ற நம்முடைய மூதாதையர்களும்கூட எழுப்பப்படுவார்களா?” 37:18 இவர்களிடம் நீர் கூறும்: “ஆம்! (அல்லாஹ்வுக்கு எதிராக) நீங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாவீர்கள்.” 37:19 ஒரே ஒரு பேரிரைச்சல்தான்! உடனே அவர்கள் (தங்களுக்குக் கூறப்பட்டு வரும் விஷயங்கள் அனைத்தையும் திடீரென்று தம் கண்களால்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்! 37:20 அவ்வேளை அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! எங்கள் துர்ப்பாக்கியமே! இது கூலி கொடுக்கப்படும் நாளாயிற்றே!” 37:21 எதனை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதே தீர்ப்புநாள்தான் இது! 37:22 (இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள். 37:23 பிறகு அவர்கள் அனைவருக்கும் நரகத்துக்கான வழியினைக் காட்டுங்கள் 37:24 சற்றே அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கிறது! 37:25 உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை? 37:26 அடே! இன்று அவர்கள் தங்களையும் (ஒருவருக்கொருவர் மற்றவர்களையும் இறைவனிடம்) சரணடையச் செய்து கொண்டிருக்கின்றார்களே!” 37:27 பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள். 37:28 (பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.” 37:29 அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “இல்லை, நீங்கள்தான் நம்பிக்கை கொள்வோராய் இருக்கவில்லை! 37:30 எங்களுக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இருந்ததில்லை. நீங்களே வரம்புமீறிய மக்களாய் வாழ்ந்தீர்கள். 37:31 இறுதியில், ‘நாங்கள் வேதனையைச் சுவைத்தே ஆக வேண்டும்’ எனும் எங்கள் இறைவனின் தீர்ப்புக்கு உரித்தானவர்களாகிவிட்டோம்! 37:32 ஆகவே, நாங்கள் உங்களை வழிதவறச்செய்தோம். ஏனெனில், நாங்களே வழிதவறிப்போயிருந்தோம்!” 37:33 இவ்வாறு அந்நாளில் அவர்கள் அனைவரும் வேதனையில் பங்கு பெறுபவர்களாய் இருப்பார்கள். 37:34 திண்ணமாக, நாம் குற்றவாளிகளை இவ்வாறுதான் நடத்துகின்றோம். 37:35 இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்; 37:36 மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’ 37:37 அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார். 37:38 (இப்போது அவர்களிடம் கூறப்படும்:) ‘துன்புறுத்தும் வேதனையின் இன்பத்தை நீங்கள் சுவைக்கப் போவது திண்ணம். 37:39 உங்களுக்கு எவ்விதக் கூலி கொடுக்கப்பட்டாலும் நீங்கள் செய்துகொண்டிருந்த அதே செயல்களுக்குப் பதிலாகத்தான் அது கொடுக்கப்படும்.’ 37:40 ஆயினும், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் இந்தத் தீயகதியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். 37:41 நன்கு அறியப்பட்ட அருட்பேறுகள் அவர்களுக்கு இருக்கின்றன; 37:42 எல்லாவகையான சுவையான பொருள்களும்! அவர்கள் கண்ணியத்தோடு அமர்த்தப்படுவார்கள். 37:43 அருள் நிறைந்த சுவனப்பூங்காக்களில் 37:44 மஞ்சங்களில் எதிரெதிரே உட்கார்ந்திருப்பார்கள். 37:45 மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும். 37:46 ஒளிரக்கூடிய மது அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும். 37:47 (அவர்களின் உடல்களுக்கு) அதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது; அவர்களின் மதியும் கெட்டுப்போகாது. 37:48 மேலும், தாழ்த்திய பார்வை உடைய அழகிய கண்களைக்கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர். 37:49 அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாய் இருப்பார்கள். 37:50 பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரின் பக்கம் முன்னோக்கி நிலைமைகளை விசாரிப்பார்கள். 37:51 அவர்களில் ஒருவர் கூறுவார் “(உலகில்) எனக்கு ஒரு நண்பன் இருந்தான். 37:52 ‘என்ன, உண்மை என ஏற்றுக்கொள்பவரில் நீயும் ஒருவனா? 37:53 நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான். 37:54 (இப்போது அவன் எங்கிருக்கின்றான் என்பதை) நீங்கள் காண விரும்புகின்றீர்களா?” 37:55 இவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனிவார். அப்போது நரகின் ஆழத்தில் அவனைக் கண்டு கொள்வார். 37:56 மேலும், அவனை நோக்கிக் கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்திருந்தாய். 37:57 என் இறைவனின் அருள் என்னை அரவணைக்காதிருந்தால், பிடித்துக் கொண்டு வரப்பட்டிருப்பவர்களில் நானும் ஒருவனாகி இருந்திருப்பேன். 37:58 சரி, இனி நாம் மரணிக்கக்கூடியவர் அல்லவே! 37:59 நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!” 37:60 திண்ணமாக, இதுவே மகத்தான வெற்றியாகும். 37:61 செயல்படுவோர் இத்தகைய வெற்றிக்காகவே செயல்பட வேண்டும்! 37:62 இந்த விருந்து சிறந்ததா? அல்லது ‘ஜக்கூம்’ மரமா? (என்பதை நீங்கள் கூறுங்கள்). 37:63 நாம் அந்த மரத்தை அக்கிரமக்காரர்களுக்கு ஒரு சோதனையாக ஆக்கியிருக்கிறோம். 37:64 அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து முளைத்து வருகின்ற ஒரு மரம். 37:65 அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும். 37:66 நரகவாசிகள்தாம் அதனைத் தின்பார்கள். மேலும் அதனைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள். 37:67 பிறகு, அத்துடன் அவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிக்கக் கிடைக்கும். 37:68 பின்னர் அதே நரகத்திற்குத்தான் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும். 37:69 இவர்கள் எப்படிப்பட்ட மக்களென்றால், தம் முன்னோர்கள் நெறிதவறிச் செல்பவர்களாய் இருக்கக் கண்டார்கள். 37:70 மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள். 37:71 உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள். 37:72 மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்களையும் நாம் அனுப்பியிருந்தோம். 37:73 இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று? 37:74 ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே! 37:75 (இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்). 37:76 அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம். 37:77 இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம். 37:78 மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். 37:79 சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்! 37:80 நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம். 37:81 உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார். 37:82 பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம். 37:83 மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்; 37:84 தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது, 37:85 தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்? 37:86 அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? 37:87 பிறகு அகில உலகங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?” 37:8898 பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார். 37:89 மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.” 37:90 எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். 37:91 பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை? 37:92 நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?” 37:93 அதன் பிறகு அவர் அவற்றின் மீது பாய்ந்து வலக்கரத்தால் தாக்கினார். 37:94 பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர, 37:95 அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்? 37:96 உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய அப்பொருள்களையும் படைத்தான்?” 37:97 அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!” 37:98 அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச்செய்தோம். 37:99 இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான். 37:100 என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்.” 37:101 (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம். 37:102 அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.” 37:103 இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார். 37:104 அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராஹீமே! 37:105 நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். 37:106 திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது.” 37:107 மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம். 37:108 பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம். 37:109 சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது! 37:110 நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம். 37:111 திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார். 37:112 மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார். 37:113 மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள். 37:114 மேலும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பேருபகாரம் செய்தோம். 37:115 அவர்களையும் அவர்களின் சமூகத்தார்களையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம். 37:116 அவர்களுக்கு உதவி வழங்கினோம். அதன் காரணமாக அவர்களே வெற்றி கொள்வோராகத் திகழ்ந்தார்கள். 37:117 மிகத் தெளிவான வேதத்தை அவர்களுக்கு வழங்கினோம். 37:118 மேலும், அவர்களுக்கு நேரிய வழியையும் காண்பித்தோம். 37:119 பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் நிலைத்திருக்கச் செய்தோம். 37:120 சாந்தி உண்டாகட்டும், மூஸா மற்றும் ஹாரூன் மீது! 37:121 நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய நற்கூலியையே வழங்குகின்றோம். 37:122 உண்மையில் அவ்விருவரும் நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் உள்ளவர்களாவர். 37:123 மேலும், இல்யாஸும் திண்ணமாக இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். 37:124 அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? 37:125 ‘பஅலை’* அழைக்கின்றீர்கள். படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டுவிடுகின்றீர்களே! 37:126 அதாவது, உங்களின் அதிபதியும், உங்களுக்கு முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை! 37:127 ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் இப்போது தண்டனைக்காகக் கொண்டுவரப்படுபவர்களாய் உள்ளனர். 37:128 ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர! 37:129 மேலும், பின் தோன்றிய தலைமுறைகளில் இல்யாஸுடைய நற்புகழை நிலைப்படுத்தினோம். 37:130 சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது! 37:131 நன்மை செய்வோருக்குத் திண்ணமாக நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம். 37:132 உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார். 37:133 மேலும், இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டவர்களுள் லூத்தும் ஒருவராய்த் திகழ்ந்தார். 37:134 அந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: லூத்தையும், அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம். 37:135 பின்தங்கியவர்களோடு சேர்ந்துவிட்ட ஒரு கிழவியைத் தவிர! 37:136 பின்னர், எஞ்சியிருந்த மற்றவர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிட்டோம். 37:137 நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்! 37:138 நீங்கள் அறிவு பெறமாட்டீர்களா, என்ன? 37:139 திண்ணமாக, யூனுஸும் இறைத்தூதர்களுள் ஒருவராய் இருந்தார். 37:140 அவர் ஒரு நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைத்துப் பாருங்கள்! 37:141 பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் தோற்றுப் போனார். 37:142 இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது; அவரோ பழிப்புக்குரியவராய் இருந்தார். 37:143 அவர் இறைவனைத் துதிப்பவர்களுள் ஒருவராய் இல்லாதிருந்தால் 37:144 மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)