அத்தியாயம்  ஸபஃ  34 : 24-54 / 54
34:24 (நபியே,) இவர்களிடம் கேளும்: “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” கூறும்: “அல்லாஹ்தானே!” இப்போது திட்டவட்டமாக நம் இருவரில் நாமோ அல்லது நீங்களோ யாராவது ஒருவர்தான் நேர்வழியில் இருக்கிறோம். அல்லது வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்திருக்கின்றோம்.” 34:25 (இவர்களிடம்) கூறும்: “நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி எங்களிடம் கேட்கப்பட மாட்டாது.” 34:26 கூறும்: “நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான். பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான். அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்.” 34:27 (இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எவர்களை அவனோடு இணையானவர்களாய்ச் சேர்த்து வைத்திருக்கின்றீர்களோ அவர்களை எனக்குக் கொஞ்சம் காண்பியுங்களேன்!” ஒருபோதும் முடியாது! உண்மையில் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவாளனும் அந்த அல்லாஹ் ஒருவன்தான்! 34:28 மேலும், (நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கின்றோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 34:29 மேலும், இவர்கள் உம்மிடம் “நீங்கள் உண்மையாளராயின் அந்த (மறுமையைப் பற்றிய) வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்” என்று கேட்கின்றார்கள். 34:30 நீர் கூறும்: “உங்களுக்காக எத்தகைய ஒரு நாள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது எனில், அதன் வருகையை ஒரு நிமிடம் பிற்படுத்தவும் உங்களால் முடியாது; ஒரு நிமிடம் முற்படுத்தவும் முடியாது.” 34:31 இந்நிராகரிப்பாளர்கள் (உம்மிடம்) கூறுகின்றார்கள்: “நாங்கள் ஒருபோதும் இந்தக் குர்ஆனையும் நம்ப மாட்டோம்; இதற்கு முன்பு வந்திருந்த எந்த வேதத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” அந்தோ! கொடுமை புரியும் இவர்கள் தம்முடைய இறைவனின் திருமுன் நிறுத்தப்படும்போது இவர்களின் நிலையை நீர் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை) இவர்கள் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருப்பார்கள். (உலகில்) தங்களைப் பெரியவர்களாய்க் கருதிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “நீங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்திருப்போம்.” 34:32 தங்களைப் பெரியவர்களாய்க் காட்டிக்கொண்டிருந்தவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி பதில் சொல்வார்கள்: “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர் நாங்களா அதனை விட்டு உங்களைத் தடுத்தோம்? இல்லை! மாறாக, நீங்களே குற்றவாளிகளாயிருந்தீர்கள்.” 34:33 ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியவர்களாய்க் காட்டிக் கொண்டிருந்தவர்களிடம் கூறுவார்கள்: “இல்லை; இரவு பகலாக நீங்கள் செய்துகொண்டிருந்த வஞ்சனையாகும் இது! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிக்கும்படியும் மற்றவர்களை அவனுக்கு இணையாக்கும்படியும் நீங்கள் எங்களிடம் கூறியவண்ணம் இருந்தீர்கள்.” இறுதியில் இவர்கள் வேதனையைக் காணும்போது உள்ளூர வருந்துவார்கள். மேலும், நாம் இந்நிராகரிப்பாளர்களின் பிடரிகளில் விலங்குகளைப் பூட்டுவோம். தாம் எவ்விதம் செயல்பட்டார்களோ அதற்கேற்பவே கூலி கிடைக்கும் என்பதைத் தவிர வேறு பிரதிபலன் ஏதேனும் மக்களுக்குக் கிடைக்குமா என்ன? 34:34 எச்சரிக்கை செய்யக்கூடிய ஒருவரை எந்த ஊருக்கு நாம் அனுப்பி வைத்தாலும் அவ்வூரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், “நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற தூதுச் செய்தியை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றே கூறினார்கள். 34:35 மேலும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உங்களைவிட) அதிகமான செல்வமும் சந்ததிகளும் உடையவர்கள். நாங்கள் ஒருபோதும் தண்டனை பெறக்கூடியவர்கள் அல்லர்.” 34:36 (நபியே, இவர்களிடம் நீர்) கூறும்: “என் இறைவன் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அளவோடு கொடுக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் (இந்த உண்மையை) அறிவதில்லை.” 34:37 உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர! அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடிருப்பார்கள். 34:38 ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காகக் கடும் முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள். 34:39 (நபியே, இவர்களிடம்) கூறும்: என்னுடைய இறைவன் தன் அடிமைகளில் தான் நாடுவோருக்கு தாராளமாய் வாழ்வாதாரம் வழங்குகின்றான். இன்னும் தான் நாடுவோருக்கு அளவோடு கொடுக்கின்றான். நீங்கள் செலவு செய்கின்றவற்றுக்குப் பகரமாக இன்னும் பலவற்றை அவனே உங்களுக்குத் தருகின்றான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவனாவான். 34:40 மேலும், அந்நாளில் அவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவான். பிறகு வானவர்களிடம் கேட்பான்: “என்ன, இவர்கள் உங்களைத்தானா வணங்கிக் கொண்டிருந்தார்கள்?” 34:41 அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்: “தூய்மையானவன் நீ! எங்களுடைய தொடர்பு உன்னுடன்தானே தவிர இவர்களுடன் அல்ல! இவர்கள் வணங்கிக் கொண்டிருந்தது எங்களை அல்ல; ஜின்களைத்தான்! இவர்களில் பெரும்பாலோர் அந்த ஜின்களின் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.” 34:42 (அவ்வேளை நாம் கூறுவோம்:) “இன்று உங்களில் எவரும் வேறெவர்க்கும் இலாபம் அளிக்கவும் முடியாது; நஷ்டம் ஏற்படுத்தவும் முடியாது.” மேலும், கொடுமை புரிந்து கொண்டு இருந்தவர்களிடம் நாம் கூறுவோம்: “இப்பொழுது சுவையுங்கள் இந்த நரகவேதனையை! இதைத்தான் நீங்கள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்கள்!” 34:43 இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்படும்போது இவர்கள் கூறுகின்றார்கள். “இந்த மனிதர் விரும்புவதெல்லாம் உங்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை விட்டு உங்களைத் தடுத்துவிடுவதுதான்.” மேலும், கூறுகின்றார்கள்: “(குர்ஆன்) புனைந்துரைக்கப்பட்ட வெறும் பொய்யே தவிர வேறில்லை.” இந்நிராகரிப்பாளர்களின் முன்னால் சத்தியம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இதுவோ வெளிப்படையான சூனியம்!” 34:44 நாம் இந்த மக்களுக்கு இவர்கள் படிக்கக்கூடிய வகையில் எந்த வேதத்தையும் முன்னர் வழங்கவில்லை. மேலும், உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரையும் இவர்களிடம் நாம் அனுப்பவுமில்லை 34:45 இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்களும் பொய்யென்று தூற்றிவிட்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றில் பத்திலொரு பங்குகூட இவர்கள் பெறவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய தூதர்களைப் பொய்யர்கள் எனத் தூற்றியபோது பாருங்கள்! என்னுடைய வேதனை எத்துணைக் கடுமையாக இருந்தது! 34:46 (நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன்: நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித் தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்; உங்களுடைய தோழரிடம் பைத்தியக்காரத்தனம் என்ன இருக்கிறது என்று! அவரோ ஒரு கடினமான வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார்.” 34:47 இவர்களிடம் கூறும்: “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவன் அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.” 34:48 இவர்களிடம் கூறும்: “என்னுடைய இறைவன் (என்னுள்) சத்தியத்தை உதிக்கச் செய்கின்றான். அவன் மறைவான உண்மைகளை நன்கறிபவனாக இருக்கின்றான்.” 34:49 கூறுவீராக: “சத்தியம் வந்துவிட்டது. இனி, அசத்தியத்தினால் எதுவும் செய்ய முடியாது!” 34:50 கூறுவீராக: “நான் வழிதவறிப் போய்விட்டால், எனது வழிகேட்டின் தீயவிளைவு என்னையே சாரும். நான் நேர்வழியில் இருக்கிறேனென்றால், அது என்னுடைய இறைவன் எனக்கு அனுப்புகின்ற வஹியின்* காரணத்தினாலாகும். அவன் எல்லாவற்றையும் செவியுறுபவனும் அருகிலேயே உள்ளவனுமாவான்.” 34:51 (மேலும்) அந்தோ! இவர்கள் திகைப்புற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களை நீர் காண வேண்டுமே! இவர்களால் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. மாறாக, அருகிலிருந்தே பிடிக்கப்படுவார்கள். 34:52 அப்போது, இவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம்.” ஆயினும், அவர்களை விட்டு தூரமாகச் சென்றுவிட்ட ஒன்றை எங்ஙனம் அவர்களால் கைக்கொள்ள முடியும்? 34:53 இதற்கு முன்போ அவர்கள் அதனை நிராகரித்துவிட்டிருந்தார்கள். மேலும், உண்மையான அறிவில்லாமல், புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தூரமான விஷயங்கள் குறித்து கற்பனைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள். 34:54 அந்நேரத்தில் எவற்றிற்காக இவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்களோ அவற்றைவிட்டு இவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள் இவர்களுக்கு முன்னர் இவர்களைப் போல் வாழ்ந்தவர்கள் தடுக்கப்பட்டதைப் போல! திண்ணமாக, இவர்கள் வழிகெடுக்கும் பெரும் ஐயப்பாட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.
அத்தியாயம்  ஃபாத்திர்  35 : 1-45 / 45
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
35:1 வானங்களையும் பூமியையும் படைத்தவனும், வானவர்களைத் தூது கொண்டு செல்பவர்களாக நியமித்தவனும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (அவ்வானவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களுக்கு இரண்டிரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உள்ளன. அவன் தன்னுடைய படைப்புகளின் வடிவமைப்பில் தான் நாடுவதை அதிகப்படுத்துகின்றான். திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். 35:2 அல்லாஹ் எந்த ஓர் அருள்வாயிலை மக்களுக்காகத் திறந்துவிட்டாலும், அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமிலர். மேலும், அவன் அதனை அடைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதனைத் திறக்கக்கூடியவர் வேறு யாருமிலர். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 35:3 மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்துள்ள அருட்பேறுகளை நினைவில் வையுங்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றாரா? வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. பிறகு எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்? 35:4 (நபியே!) இப்பொழுது இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் (என்றால் இது புதிய விஷயமல்ல). உமக்கு முன்பும் தூதர்கள் பலர் பொய்யர்கள் என்று தூற்றப்பட்டிருக்கின்றார்கள். மேலும், அனைத்து விவகாரங்களும் இறுதியில் அல்லாஹ்விடம் தான் திரும்பக் கொண்டு வரப்பட இருக்கின்றன. 35:5 மனிதர்களே! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், அந்தப் பெரும் ஏமாற்றுக்காரனும் உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிவிட வேண்டாம். 35:6 உண்மையாக ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால், நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின் பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது, அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான்! 35:7 எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கின்றது. மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரும் கூலியும் இருக்கின்றன. 35:8 எந்த மனிதனுக்கு அவனுடைய தீயசெயல் அலங்காரமாக் கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?) திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே (நபியே!) இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப்போய்விட வேண்டாம். இவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிகின்றான். 35:9 மேலும், காற்றுகளை அனுப்புகின்றவன் அல்லாஹ்தான்! பின்னர் அவை மேகங்களை உயரே கிளப்புகின்றன. பிறகு அதனை வறண்ட பகுதிக்கு நாம் கொண்டு செல்கின்றோம். மேலும், இறந்து கிடக்கும் பூமியை அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்துபோன மனிதர்களை) மீண்டும் உயிரோடெழுப்புவதும் இவ்வாறுதான்! 35:10 எவரேனும் கண்ணியத்தை விரும்பினால் கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்). அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே! இன்னும் நற்செயல் அதனை மேலே உயர்த்துகின்றது. மேலும், எவர்கள் தீயசூழ்ச்சிகள் செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கிறது. மேலும், அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக்கூடியவையாக இருக்கின்றன. 35:11 அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பிறகு, இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், உங்களை (ஆண், பெண்) ஜோடிகளாய் ஆக்கினான். அல்லாஹ் அறியாமல் எந்த ஒரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; குழந்தையைப் பெறுவதுமில்லை! இவ்வாறே நீண்ட ஆயுள் உடையவர் அதிக வயதைப் பெறுவதுமில்லை, எவருடைய வயதும் குறைக்கப்படுவதுமில்லை; இவையெல்லாம் அந்த ஏட்டில் பதியப்படாமல்! திண்ணமாக, அல்லாஹ்வுக்கு இது மிக எளிய செயலாகும். 35:12 இரண்டு நீர்ப் பரப்புகள் சமமாகமாட்டா! ஒன்று சுவையானதாகவும், தாகம் தணிக்கக்கூடியதாகவும் குடிப்பதற்கு இன்பமாயும் இருக்கின்றது. மற்றொன்று, தொண்டையை கரகரக்கச் செய்யும் அளவு கடும் உவர்ப்பானதாய் இருக்கின்றது. ஆயினும், இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய இறைச்சியைப் பெற்றுக் கொள்ளுகின்றீர்கள். அணிவதற்கான அழகு சாதனங்களை வெளிக்கொணர்கிறீர்கள். மேலும் இந்த நீரில் (நீங்கள் பார்க்கின்றீர்கள்) அதன் மார்பைப் பிளந்துகொண்டு கப்பல்கள் செல்வதை நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேட வேண்டும்; அவனுக்கு நன்றி செலுத்துவோராய்த் திகழ வேண்டும் என்பதற்காக! 35:13 அவன் பகலினுள் இரவையும், இரவினுள் பகலையும் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும். (இந்தப் பணிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் அதிபதி. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனை விடுத்து நீங்கள் யார் யாரை அழைக்கின்றீர்களோ, அவர்கள் ஓர் இம்மியளவுப் பொருளுக்கும் உரிமையாளர்கள் அல்லர். 35:14 நீங்கள் அவர்களை அழைத்தால் அவ்வழைப்பினை அவர்களால் செவியேற்க முடிவதில்லை. மேலும், செவியேற்றாலும் அவர்களால் உங்களுக்கு எந்தப் பதிலையும் அளிக்க முடிவதில்லை. மேலும், மறுமை நாளில் உங்களுடைய இணைவைப்புச் செயலை அவர்கள் ஏற்க மறுத்துவிடுவார்கள். (எதார்த்த நிலை பற்றி இத்தகைய துல்லியமான தகவலை) யாவும் தெரிந்த ஒருவனைத் தவிர யாராலும் உங்களுக்கு அறிவித்துத் தர முடியாது. 35:15 மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடை யவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! 35:16 அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். 35:17 இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று! 35:18 சுமை சுமக்கும் எவரும் மற்றொருவருடைய சுமையைச் சுமக்க மாட்டார். மேலும், சுமை ஏற்றப்பட்ட ஒருவர் தன்னுடைய சுமையைச் சுமக்கும்படி கெஞ்சினாலும், அவருடைய சுமையின் ஒரு சிறு பாகத்தைக்கூட ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரமாட்டார். அவர்மிக நெருங்கிய உறவினரானாலும் சரியே! (நபியே!) நேரில் காணாமலேயே தங்களுடைய இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். எவர் தூய்மையை மேற்கொண்டாலும் அவர் தனது நலனுக்காகவே அதனை மேற்கொள்கின்றார். மேலும், அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. 35:19 பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாக மாட்டார்கள். 35:20 இருள்களும் ஒளியும் சமமானவை அல்ல; 35:21 குளிர்தரும் நிழலும், வெயிலின் வெப்பமும் ஒன்றுபோல் இல்லை. 35:22 மேலும், உயிருள்ளவர்களும், உயிரற்றவர்களும் சமமானவர்களல்லர். அல்லாஹ், தான் நாடுவோரைச் செவியேற்கச் செய்கின்றான். ஆயினும், (நபியே!) மண்ணறைகளில் அடக்கப்பட்டிருப்பவர்களைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. 35:23 நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். 35:24 நாமே உம்மை நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் நியமித்து, சத்தியத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும், எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை. 35:25 (இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் எனில், இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் பொய்யர் என்று தூற்றியிருக்கின்றார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் வெளிப்படையான சான்றுகளையும், ஆகமங்களையும், தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வேதத்தையும் கொண்டு வந்திருந்தார்கள். 35:26 பின்னர், எவர்கள் ஏற்கவில்லையோ, அவர்களை நான் பிடித்துக்கொண்டேன். மேலும், பார்த்துக் கொள்ளுங்கள் என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையாக இருந்தது என்பதை! 35:27 நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான்; பிறகு, அதன் மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும்கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய நிறக்கோடுகள் காணப்படுகின்றன. 35:28 மேலும், இவ்வாறே மனிதர்கள், விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றார்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். 35:29 எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலை நாட்டுகின்றார்களோ, மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து மறைவாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக, என்றைக்கும் நஷ்டமடையாத ஒரு வணிகத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள். 35:30 (இந்த வணிகத்தில் அவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் முதலீடு செய்வது) அவர்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டும்; மேலும், தன்னுடைய அருளிலிருந்து அதிகமாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும், உரிய மதிப் பளிப்பவனாகவும் இருக்கின்றான். 35:31 (நபியே!) வஹி*யின் மூலம் நாம் உமக்கு அருளிய வேதம்தான் உண்மையானதாகும். இது தனக்கு முன் வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கு புரிந்தவனாகவும், அனைத்தையும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். 35:32 பிறகு, நாம் நம்முடைய அடிமைகளிலிருந்து (வேதத்தின் வாரிசுகளாக) எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை இவ்வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். இப்போது அவர்களில் சிலர் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாய் இருக்கின்றனர். மேலும் சிலர் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இன்னும் சிலர், அல்லாஹ்வின் கட்டளைப்படி நற்செயல்களில் முந்திச் செல்பவர்களாய் இருக்கின்றனர். இதுதான் மாபெரும் அருளாகும். 35:33 நீடித்த நிலையான சுவனங்களில் இவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கு அவர்களின் உடைகள் பட்டாக இருக்கும். 35:34 மேலும், அவர்கள் கூறுவார்கள்: “நம்மைவிட்டுக் கவலையை அகற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய மதிப்பை அளிப்பவனாகவும் இருக்கின்றான். 35:35 அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.” 35:36 மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் இருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கபடவுமாட்டாது; நரகத்தின் வேதனையில் ஒரு சிறிதும் அவர்களுக்குக் குறைக்கப்படவுமாட்டாது. இவ்வாறே நிராகரிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம் கூலி கொடுக்கின்றோம். 35:37 அவர்கள் அங்கு கூக்குரலிட்டுக் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை இங்கிருந்து வெளியேற்று; நாங்கள் முன்பு செய்துகொண்டிருந்த செயல்களுக்கு மாறுபட்டநல்ல செயல்களைப் புரிவதற்காக!” (அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்:) “ஒருவன் படிப்பினை பெற வேண்டுமென்று நினைத்தால் படிப்பினை பெறுவதற்குப் போதுமான ஆயுளை நாம் உங்களுக்கு வழங்கிடவில்லையா? மேலும், எச்சரிப்பவரும் உங்களிடம் வந்திருந்தாரே! இப்போது நன்கு சுவையுங்கள். கொடுமையாளர்களுக்கு (இங்கு) உதவி செய்வார் யாருமில்லை.” 35:38 திண்ணமாக, அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ள ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களைக்கூட நன்கறிகின்றான். 35:39 அவனே பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாய் ஆக்கியிருக்கின்றான். இனி, எவன் நிராகரித்தாலும் அவனுடைய நிராகரிப்பின் தீயவிளைவு அவனையே சாரும். மேலும், நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனின் கோபத்தை அவர்கள் மீது அதிகப்படுத்துமே தவிர வேறெந்த முன்னேற்றத்தையும் அவர்களுக்கு அளிக்காது. நிராகரிப்பாளர்களுக்கு இழப்பு அதிகமாவதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. 35:40 (நபியே!) இவர்களிடம் கேளும்: “இறைவனை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கின்ற உங்களுடைய இணைத் தெய்வங்களைப் பற்றி எப்போதேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பூமியில் எதைத்தான் அவர்கள் படைத்திருக்கின்றார்கள்? அல்லது வானங்களில் அவர்களுக்கு உரிய பங்கு என்ன என்பதை எனக்குக் காண்பியுங்கள். (அவர்களால் இதைக் காண்பிக்க முடியாவிட்டால், அவர்களிடம் கேளுங்கள்:) “நாம் ஏதேனும் எழுத்து மூலம் இவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கின்றோமா? அதன் அடிப்படையில் (தம் இணைவைப்புச் செயல்களுக்கு) ஏதேனும் தெளிவான சான்றுகளை இவர்கள் வைத்திருக்கின்றார்களா?” இல்லை! மாறாக, இந்த அக்கிரமக்காரர்கள் ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதி ஏமாற்றுதலேயாகும். 35:41 உண்மையில் அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அப்படி அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றைத் தடுத்து நிறுத்துவோர் வேறு யாருமில்லை. திண்ணமாக, அல்லாஹ் மிகவும் சகிப்புத்தன்மையுடையவனும் பெரிதும் மன்னிப்பவனும் ஆவான். 35:42 எச்சரிக்கை செய்பவர் எவரேனும் அவர்களிடம் வந்திருந்தால் (உலகிலுள்ள) ஏனைய சமூகத்தாரைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் நேர்வழி நடப்பவர்களாகி விடுவார்கள் என்று இந்த மக்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், எச்சரிக்கை செய்பவர் இவர்களிடம் வந்துவிட்டபோது, அவருடைய வருகை இவர்களில் சத்தியத்தைவிட்டு விரண்டோடுவதைத் தவிர வேறெதையும் அதிகமாக்கவில்லை. 35:43 இவர்கள் பூமியில் இன்னும் அதிகம் இறுமாப்புக் கொள்ளவும், தீய சூழ்ச்சிகளைச் செய்யவும்தான் தலைப்பட்டார்கள். உண்மையில், தீயசூழ்ச்சிகள் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும். முந்தைய சமூகத்தார்களுடன் அல்லாஹ்வின் நியதி எதுவாக இருந்ததோ அதுவே இவர்கள் விஷயத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவர்கள் இப்பொழுது எதிர்பார்க்கின்றார்களா? (அப்படியென்றால்) அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர். மேலும், அல்லாஹ்வின் நியதியை (அதற்கென நிர்ணயிக்கப்பட்ட வழியிலிருந்து ஏதேனும் ஒரு சக்தியால்) திருப்பிவிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர். 35:44 இவர்கள், பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விடவும் அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள்! அல்லாஹ்வை தோல்வியுறச் செய்யக்கூடிய எந்தப் பொருளும் இல்லை. வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை. அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாகவும் இருக்கின்றான். 35:45 அல்லாஹ் மக்களை அவர்கள் செய்யும் தீய செயல்களுக்காகத் தண்டிப்பானாகில், பூமியின் மீது எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் அவகாசம் அளித்துக் கொண்டிருக்கின்றான். பிறகு, அவர்களுக்குரிய காலம் பூர்த்தியானால் திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளைப் பார்த்துக் கொள்வான்!
அத்தியாயம்  யாஸீன்  36 : 1-27 / 83
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
36:1 யாஸீன். 36:2 ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக, 36:3 திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்; 36:4 நேரிய வழியில் இருக்கின்றீர். 36:5 (மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும். 36:6 தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! 36:7 அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. 36:8 நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். 36:9 மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை. 36:10 அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். 36:11 யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக! 36:12 திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம். 36:13 மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. 36:14 நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள். 36:15 “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள். 36:16 தூதர்கள் கூறினார்கள்: “திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான். 36:17 மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!” 36:18 அதற்கு அவ்வூர் மக்கள், “நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்களிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்!” எனக் கூறலானார்கள். 36:19 (அதற்கு) அத்தூதர்கள், “உங்களுடைய அபசகுனம் உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்!” எனப் பதிலளித்தார்கள். 36:20 (இதற்கிடையில்) நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து கூறினார்: “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின்பற்றுங்கள். 36:21 எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும், எவர்கள் நேர்வழியில் இருக்கிறார்களோ, அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள். 36:22 எவன் என்னைப் படைத்தானோ மேலும், எவன் பக்கம் நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்களோ அத்தகைய ஒருவனுக்கு நான் ஏன் அடிபணியக் கூடாது? 36:23 அவனை விடுத்து மற்றவர்களை அடி பணிவதற்குரியவர்களாய் நான் எடுத்துக் கொள்வேனா? உண்மையில், கருணைமிக்க இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்த நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. அவர்களால் என்னை விடுவிக்கவும் முடியாது. 36:24 நான் அவ்வாறு செய்தால், வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிடுவேன் என்பதில் ஐயமில்லை. 36:25 நானோ உங்கள் அதிபதியின் மீதே உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நீங்களும் நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.” 36:26 (இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்று விட்டார்கள். பிறகு) அவரிடம் “சுவனம் புகுவீராக!” என்று கூறப்பட்டது. அவர் கூறினார்: “ஆஹா! என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!” 36:27 என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதனை.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)