அத்தியாயம்  அல் அஹ்ஸாப்  33 : 31-73 / 73
33:32 நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய்ப் பேசுங்கள். 33:33 மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான். 33:34 உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், விவேகமான விஷயங்களையும் நினைவில் வையுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் நுண்மையானவனாகவும் யாவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். 33:35 ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். 33:36 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான். 33:37 மேலும் (நபியே!) அந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய்திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்: “உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு” நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (விவாகரத்து செய்யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவிமார் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (விவாகரத்தான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளர்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டிய தாகவே இருந்தது. 33:38 அல்லாஹ் எந்த ஒரு பணியை நபிக்காக நிர்ணயித்துள்ளானோ அந்தப் பணியை ஆற்றுவதில் நபியின் மீது எந்தத் தடையும் இல்லை. முன்பு சென்ற நபிமார்களின் விவகாரத்திலும் இதுதான் அல்லாஹ்வுடைய நியதியாய் இருந்திருக்கின்றது. மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாய் இருக்கின்றது. 33:39 (இது அல்லாஹ்வின் நியதியாகும்; இந்த மக்களுக்காக) அவர்களோ அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை சேர்ப்பிக்கின்றார்கள். அவனுக்கே அஞ்சுகின்றார்கள். மேலும், ஓரிறைவனைத் தவிர வேறு எவருக்கும் அவர்கள் அஞ்சுவதில்லை. மேலும், கணக்கு வாங்கிட அல்லாஹ் போதுமானவன். 33:40 (மக்களே!) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதிநபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். 33:41 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள். 33:42 மேலும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள். அவனே உங்கள் மீது கருணை பொழிகின்றான். 33:43 அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகின்றார்கள்; அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டுவருவதற்காக! அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங்கருணை பொழிபவனாக இருக்கின்றான். 33:44 அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள். மேலும், அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியை தயார் செய்து வைத்துள்ளான். 33:45 நபியே! (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும், 33:46 அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும், சுடர்வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம். 33:47 எனவே, எவர்கள் (உம்மீது) நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு, அல்லாஹ்விடமிருந்து திண்ணமாக, பெரும் வெகுமதி இருக்கின்றது எனும் நற்செய்தியினை அறிவிப்பீராக! 33:48 நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நீர் பணிந்துவிடாதீர். அவர்களுடைய துன்புறுத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! (மனிதன் தன்னுடைய) விவகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 33:49 நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக விவாகரத்துச் செய்து விட்டால், நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள். 33:50 நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத்* செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும் அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்). இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை! ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்களின் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 33:51 உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் அழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது, (இந்த விவகாரத்தில்) உம் மீது எத்தகைய தவறுமில்லை. இதனால் இவர்கள் கண் குளிர்ந்தும் வருத்தமற்றும் இருப்பார்கள் என்பதையும், மேலும், எதனை நீர் அவர்களுக்கு அளித்தாலும் அதனைக் குறித்து அவர்கள் அனைவரும் திருப்தி கொள்வார்கள் என்பதையும் அதிகம் எதிர்பார்க்கலாம். உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும், அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். 33:52 இதற்குப் பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும், இம்மனைவியருக்குப் பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உமக்கு மிகவும் பிடித்தமானதாயினும் சரியே! ஆயினும் உமக்கு அடிமைப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாயிருக்கின்றான். 33:53 நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்; உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை கொடுப்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும். 33:54 நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும், திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 33:55 நபியின் மனைவியர் மீது இவ்விஷயத்தில் எந்தக் குற்றமும் இல்லை; அவர்களின் தந்தைகள், அவர்களின் மகன்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களின் சகோதரர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரிகளின் மகன்கள், அவர்களுடன் நட்பு கொண்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஆகியோர் அவர்களுடைய இல்லங்களுக்கு வரலாம். (பெண்களே!) அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் நேரடிப் பார்வை வைத்திருக்கின்றான். 33:56 அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துக்களை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள். 33:57 எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கின்றார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான். 33:58 மேலும், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்துகொள்கிறார்கள். 33:59 நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். 33:60 நயவஞ்சகர்களும், எவர்களின் உள்ளங்களில் பிணி படிந்துள்ளதோ அவர்களும் மற்றும் மதீனாவில் கொந்தளிப்பை உருவாக்கும் வதந்திகளைப் பரப்பக்கூடியவர்களும் (தங்களின் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உம்மை வீறுகொண்டு எழச்செய்வோம். பிறகு, அவர்களால் இந்நகரத்தில் சொற்பகாலமே உம்முடன் வசிக்க முடியும். 33:61 (எல்லாத் திசைகளிலிருந்தும்) அவர்கள் சரமாரியாய் சபிக்கப்படுவார்கள்; காணுமிடமெல்லாம் அவர்கள் பிடிக்கப்படுவார்கள். மேலும், மோசமான முறையில் கொல்லப்படுவார்கள். 33:62 இது அல்லாஹ்வின் நியதியாகும். இத்தகையவர்களின் விவகாரத்தில் இந்நியதி முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது! மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர். 33:63 மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம். 33:64 எவ்வாறாயினும் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் திண்ணமாகச் சபித்துவிட்டான். மேலும், அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துவிட்டிருக்கின்றான்; 33:65 அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெறமாட்டார்கள். 33:66 எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தோமில்லையே!” 33:67 மேலும், கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்துவிட்டார்கள். 33:68 எங்கள் இறைவனே! இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுப்பாயாக! மேலும், அவர்களைக் கடுமையாக சபிப்பாயாக!” 33:69 நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவுக்கு தொல்லை அளித்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் இட்டுக் கட்டிக் கூறிய விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்து விட்டான். மேலும், அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார். 33:70 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், நேர்மையான சொல்லை மொழியுங்கள். 33:71 அல்லாஹ் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்திவிடுவான்; மேலும், உங்களுடைய குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான். 33:72 நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான். 33:73 ஏனெனில், (இந்த அமானிதம் எனும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான். அதன் தவிர்க்க முடியாத விளைவு இதுதான்:) நயவஞ்சகம் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இணைவைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அத்தியாயம்  ஸபஃ  34 : 1-23 / 54
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
34:1 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது. அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 34:2 பூமியினுள் செல்பவற்றையும் அதிலிருந்து வெளிப்படுபவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும் அதில் ஏறுகின்றவற்றையும் ஆக எல்லாவற்றையும் அவன் நன்கறிகின்றான். அவன் தனிப்பெருங் கிருபையாளனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். 34:3 “மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” 34:4 மேலும், இந்த மறுமை வருவதுநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன. 34:5 எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச்செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கிறது. 34:6 (நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள். 34:7 நிராகரிப்பாளர்கள் (மக்களிடம்) கூறுகின்றார்கள்: “(நீங்கள் மரணமாகி) உங்கள் உடல் அணு அணுவாய் சிதைந்து போய்விட்ட பிறகு நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களுக்குச் செய்தி அறிவிக்கும் ஒருவரை நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தரவா?” 34:8 “இந்த மனிதர் அல்லாஹ்வின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுகின்றாரா? அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதா என்பது புரியவில்லையே!” இல்லை, உண்மையில், மறுமையை நம்பாதவர்கள்தாம் வேதனைக்கு ஆளாகப் போகிறார்கள். மேலும், மிக மோசமாக வழிகெட்டுப் போனவர்களும் அவர்கள்தாம்! 34:9 இவர்கள் தங்களுக்கு முன்னாலும் பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா, என்ன? நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம். இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கிறது. 34:10 நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம். 34:11 “போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக” என்ற கட்டளையுடன்! (தாவூதுடைய வழித்தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். 34:12 மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம். 34:13 அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர். 34:14 பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே! 34:15 ஸபஃ சமுதாயத்தினர்க்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது. வலப்புறமும் இடப்புறமும் இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள், உங்கள் இறைவன் வழங்கிய உணவை! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். நாடோ நன்கு தூய்மையாக இருக்கிறது. படைத்த இறைவனோ பெரும் மன்னிப்பாளனாக இருக்கின்றான். 34:16 ஆயினும், அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே, அவர்கள் மீது அணை உடைத்து ஓடும் வெள்ளத்தை நாம் அனுப்பினோம். மேலும், அவர்களுடைய (முந்தைய) இரு தோட்டங்களுக்குப் பகரமாக வேறு இரு தோட்டங்களைக் கொடுத்தோம். அவற்றில் கசப்பான காய்களும், காற்றாடி மரங்களும் இன்னும் மிகச் சில இலந்தை மரங்களுமே இருந்தன. 34:17 இதுவே அவர்கள் நிராகரித்ததற்குப் பகரமாக நாம் வழங்கிய கூலியாகும். மேலும், நன்றி கொல்லும் மனிதர்களுக்கே அன்றி வேறெவருக்கும் நாம் இத்தகைய கூலி கொடுப்பதில்லை. 34:18 மேலும், அவர்களுக்கும் நாம் அருட்பேறுகள் வழங்கியிருந்த ஊர்களுக்குமிடையில் எல்லோருக்கும் தெரியும்படியான ஊர்களை அமைத்திருந்தோம். அவற்றில் பயணத்தூரத்தை அளவிட்டு நிர்ணயித்திருந்தோம். “பயணம் செய்யுங்கள் இவ்வழிகளினூடே; இரவு பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்!” 34:19 ஆயினும், அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களின் பயணத் தூரத்தை நீளமாக்கித் தருவாயாக!” அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்தார்கள். இறுதியில் அவர்களை நாம் வெறும் பழங்கதைகளாக்கி விட்டோம். அவர்களை முற்றிலும் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்து விட்டோம். ஒவ்வொரு பொறுமைசாலிக்கும் நன்றி உடையவர்க்கும் இதில் திண்ணமாக சான்றுகள் இருக்கின்றன. 34:20 அவர்களின் விவகாரத்தில் இப்லீஸ் தன் எண்ணம் சரியாக நிறைவேறக் கண்டான். மேலும், அவர்கள் அவனையே பின்பற்றினார்கள், இறைநம்பிக்கையாளர்களின் ஒரு சிறு பிரிவினரைத் தவிர! 34:21 இப்லீசுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆனால் (இதெல்லாம் நடந்தது) மறுமையை நம்புகின்றவர் யார், அதைப்பற்றி சந்தேகப்படுகின்றவர் யார் என்பதை நாம் கண்டறிந்து கொள்வதற்காகத்தான்! உம் இறைவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கக்கூடியவனாக இருக்கின்றான். 34:22 (நபியே, இந்த இணைவைப்பாளர்களிடம்) கூறும்: “அல்லாஹ்வை விடுத்து உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உடைமையில் அவர்கள் பங்காளியாகவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை. 34:23 மேலும், அல்லாஹ்விடத்தில் எந்த ஒரு பரிந்துரையும் யாருக்காகவும் பயனளிக்க முடியாது யாருக்கு அல்லாஹ் பரிந்துரை வழங்க அனுமதி தந்திருக்கின்றானோ அவரைத்தவிர! இவ்வாறு மக்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் அகலும்போது (பரிந்துரைப்பவர்களிடம்) “உங்களுடைய இறைவன் என்ன பதிலுரைத்தான்?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, “சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் மாபெரியவனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவார்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)