அத்தியாயம்  ஆலு இம்ரான்  3 : 93-170 / 200
3:93 (முஹம்மத் நபியுடைய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) உண்பொருள்கள் அனைத்தும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தவ்ராத் அருளப்படுவதற்கு முன் சில பொருட்களை இஸ்ராயீல் (அதாவது யஃகூப்) தாமாகவே தமக்கு தடுக்கப்பட்டனவாய் (ஹராமாய்) ஆக்கிக் கொண்டிருந்தார். எனவே நபியே! அவர்களிடம் நீர் கூறும்: (“உங்கள் ஆட்சேபணையில்) நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், தவ்ராத்தைக் கொண்டுவந்து அதிலிருந்து ஒரு வாசகத்தையேனும் படித்துக் காட்டுங்கள்!” 3:94 எனவே அதற்குப் பின்னரும் யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தவாறு இருக்கின்றார்களோ, அவர்கள்தாம் உண்மையில் கொடுமையாளர்கள் ஆவர். 3:95 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்! மேலும் இப்ராஹீம் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் இருந்ததில்லை.” 3:96 திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது. 3:97 அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். 3:98 (நபியே!) நீர் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்” 3:99 (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டவரை அல்லாஹ்வுடைய வழியில் செல்லவிடாமல் ஏன் தடுக்கின்றீர்கள்? (அவர்கள் நேரான வழியில்தான் செல்கின்றார்கள் என்பதற்கு) நீங்களே சான்று வழங்குவோராயிருந்தும், அவர்கள் கோணலான வழியில் செல்ல வேண்டுமென ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் செயல்களைக் குறித்து அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.” 3:100 இறைநம்பிக்கை கொண்டவர்களே! வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுடைய நம்பிக்கையிலிருந்து உங்களைப் பிறழச் செய்து இறைமறுப்பின்பால் உங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். 3:101 உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. மேலும் அவனுடைய தூதரும் உங்களிடையே இருக்கின்றார். அவ்வாறிருக்க, இறைமறுப்பின்பால் செல்ல உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? யார் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்கின்றாரோ, அவர் நேரான வழியினை நிச்சயம் பெற்றுக் கொள்வார். 3:102 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். 3:103 நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக! 3:104 நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர். 3:105 எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். (யார் இத்தகைய நடத்தையை மேற்கொள்கிறார்களோ) அவர்களுக்கு மறுமைநாளில் மாபெரும் தண்டனை உண்டு. 3:106 அந்நாளில் சிலரின் முகங்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருக்கும். மற்றும் சிலரின் முகங்களோ துயரத்தால் கறுத்துப் போயிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்திருக்குமோ அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை எனும் அருட்கொடையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நன்றி கொல்லும் போக்கினை மேற்கொண்டீர்களல்லவா? இவ்வாறு நீங்கள் நன்றி மறந்து வாழும் போக்கினை மேற்கொண்டதால் இப்போது நரக வேதனையைச் சுவையுங்கள்!” என்று சொல்லப்படும். 3:107 எவருடைய முகங்கள் மின்னிக் கொண்டிருக்குமோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளில் இருப்பார்கள். மேலும் அதிலே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். 3:108 இவை அல்லாஹ்வின் அருளுரைகள்! இவற்றை மிகச் சரியாக உமக்கு நாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், அல்லாஹ் அகிலத்தாருக்குக் கொடுமைபுரிய நாடுவதில்லை. 3:109 வானங்கள், பூமி இவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். மேலும் எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன. 3:110 இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். 3:111 அவர்களால் உங்களுக்குத் தீங்கு எதையும் இழைத்துவிட முடியாது; சிறுசிறு தொல்லைகள் தருவதைத் தவிர! ஆயினும் உங்களோடு போரிட்டால் அவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள். பிறகு எங்கிருந்தும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. 3:112 அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; அவர்கள் (இறைவனுக்கு) மாறு செய்ததாலும் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும் ஏற்பட்ட விளைவுகளாகும் இவை! 3:113 ஆனால், வேதம் அருளப்பட்டோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்களாய் இல்லை. அவர்களில் நேரிய வழியில் நிலைத்து நிற்கும் ஒரு குழுவினரும் இருக்கின்றனர்; அவர்கள் இராக்காலங்களில் இறைவசனங்களை ஓதுகின்றனர். (அல்லாஹ்வின் முன்னிலையில்) ஸுஜூது சிரம்தாழ்த்திப் பணிகின்றனர். 3:114 இன்னும் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றனர். நல்லவை புரியுமாறு ஏவி, தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். மேலும், நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இவர்கள்தாம் நன் மக்களில் உள்ளவர்களாவர். 3:115 மேலும், இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது புறக்கணிக்கப்படமாட்டாது. இறையச்சமுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான். 3:116 எவர்கள் நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களும் சரி, பிள்ளைகளும் சரி அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலனளிக்கமாட்டா! அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 3:117 இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பதற்கான உவமை கடும் பனிப்புயல் போன்றதாகும். அதுவோ தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் வேளாண்மை நிலத்தைத் தாக்கி நாசப்படுத்துகிறது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை; உண்மையில் அவர்கள் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக் கொள்கிறார்கள். 3:118 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றைவிட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்!) 3:119 அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கின்றார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கிச் சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” 3:120 உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. மேலும், உங்களுக்குத் துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். 3:121 (நபியே!) நீர் அதிகாலையில் உமது வீட்டை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம்களை (உஹதுப் போர்க்களத்தில் அவரவருக்குரிய அணிவகுப்பு) இடங்களில் போருக்காக நிறுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை (முஸ்லிம்களுக்கு) நினைவூட்டுவீராக! அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். 3:122 உங்களில் இரு பிரிவினர் கோழைத்தனம் காட்ட முனைந்த நேரத்தை நினைவுகூரும். அல்லாஹ்வோ அவர்களுக்கு உதவி செய்ய இருந்தான். எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களாய்த் திகழ வேண்டும். 3:123 (இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும். 3:124 “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும். 3:125 ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான். 3:126 அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது. 3:127 அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம், நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான்! 3:128 (நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். 3:129 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பை அருள்வான்; மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு வேதனையை அளிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான். 3:130 இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும். 3:131 இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள். 3:132 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம். 3:133 இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் (செல்லும் பாதையில்) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறையச்சமுடையோர்க்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. 3:134 அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான். 3:135 மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். 3:136 இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிட மிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது! 3:137 உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித் திரிந்து (அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்) பொய் என்று கூறியவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்! 3:138 இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும். 3:139 நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள். 3:140 (இப்பொழுது) உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும் இதேபோன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷûஹதா) உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத் தான்! ஏனெனில் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. 3:141 (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களைப் பிரித்துத் தேர்ந்தெடுக்கவும், நிராகரிப்போரை நசுக்கவும் அல்லாஹ் நாடியிருந்தான். 3:142 உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சுவனம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? 3:143 மரணம் உங்கள் எதிரில் வருவதற்கு முன்பு நீங்கள் நிச்சயமாக அதனை விரும்பிக் கொண்டிருந்தீர்கள். இதோ, இப்பொழுது அது உங்கள் முன் வந்துவிட்டது! அதனை நீங்கள் கண்கூடாய்ப் பார்த்துவிட்டீர்கள். 3:144 முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர். எனவே அவர் மரணமெய்திவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் முந்திய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களா? நினைவிருக்கட்டும்! எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ, அவனால் அல்லாஹ்விற்கு எத்தகையத் தீங்கும் செய்துவிட முடியாது. ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான். 3:145 எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி இறக்க முடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. எவர் உலகாயத லாபங்களைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். எவர் மறுமைப் பேற்றைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துவோர்க்கு அதிவிரைவில் நாம் கூலி வழங்கிடுவோம். 3:146 (இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். 3:147 அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!” 3:148 இறுதியில் இவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலக நன்மைகளையும் அளித்தான்; அதைவிட உன்னதமான மறுமைப் பேறுகளையும் வழங்கினான். இத்தகைய நற்செயல்கள் புரியும் முஹ்ஸின்கள் தாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவர்கள். 3:149 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டவர்களின் கூற்றுகளை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை முந்திய வாழ்க்கைக்குத் திருப்பி விடுவார்கள். மேலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள். (அவர்களுடைய கூற்று தவறானவையே! 3:150 உண்மை என்னவெனில்) அல்லாஹ்தான் உங்களின் பாதுகாவலன். மேலும் அவன் உதவி செய்வோரில் மிகச் சிறந்தவன். 3:151 (சத்தியத்தை) நிராகரிப்போரின் உள்ளங்களில் வெகுவிரைவில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அவனுடன் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்துணைக் கெட்டது! 3:152 அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். துவக்கத்தில் அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள்தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள். ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவோராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு இறைமறுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடியாத வண்ணம் உங்களை திசை திருப்பிவிட்டான். இதன் பிறகும் அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறைநம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான். 3:153 இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு ஓடிக் கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். இதன் விளைவாக அல்லாஹ் உங்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது எனும் படிப்பினையை இதிலிருந்து பெறவேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் நன்கறிபவனாக இருக்கின்றான். 3:154 பின்னர் இத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது. ஆனால் மற்றும் சிலரோ தமது நலன்களையே முக்கியமாகக் கருதி உண்மைக்குப் புறம்பாக, அல்லாஹ்வைப் பற்றி அறியாமை மிக்க பல யூகங்களைக் கொண்டிருந்தனர். “இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா?” என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும்: “(யாருக்கும் எத்தகையப் பங்குமில்லை.) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன.” உண்மையில் அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை உம்மிடம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதன் பொருள் இதுதான்: “தலைமையதிகாரங்களில் எங்களுக்கும் சிறிது பங்கு இருந்திருந்தால், நாங்கள் இங்குக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றார்கள். அதற்கு நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!” மேலும் அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றைச் சோதிக்கவும் உங்கள் இதயங்களில் படிந்திருக்கும் மாசுகளை அகற்றவுமே இவ்வாறெல்லாம் நிகழும்படிச் செய்தான். அல்லாஹ் உங்கள் உள்ளங்களின் நிலையை நன்கறிபவனாக இருக்கின்றான். 3:155 இரு கூட்டத்தாரும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத்தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். எனினும் அல்லாஹ் அவர்களைப் பொறுத்தருளினான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத்தன்மையுடையவனுமாய் இருக்கின்றான். 3:156 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிப்போரைப் போன்று பேசாதீர்கள்! அவர்கள், தங்களுடைய உற்றார் உறவினர் எப்போதேனும் பயணம் சென்றால், அல்லது போரில் கலந்து (ஏதேனும் துன்பத்திற்குள்ளாகி) விட்டால், “இவர்கள் எங்களுடன் இருந்திருந்தால் மரணமடைந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய இப்படிப்பட்ட பேச்சுகளின் காரணமாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் கடுந்துயரத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்; மேலும், நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 3:157 நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோ, அப்போது உங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இ(ந்நிராகரிப்ப)வர்கள் திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும்விட மிகச் சிறந்தவையாகும். 3:158 நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். 3:159 (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான். 3:160 அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும். 3:161 வஞ்சனை செய்தல் எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே எவர் வஞ்சனை செய்கின்றாரோ அவர் மறுமைநாளில் தான் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. 3:162 எப்பொழுதுமே அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் அல்லாஹ்வின் சினத்துக்கு ஆளானவரைப் போலவும், மிகவும் கெட்ட இருப்பிடமான நரகத்தைப் புகலிடமாகப் பெற்றிருப்பவரைப் போலவும் செயல்படுவாரா? 3:163 அல்லாஹ்விடம் இவ்விரு வகை மனிதர்களுக்கும் இடையில் வேறுபட்ட படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் இவர்கள் அனைவரின் செயல்களையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். 3:164 திண்ணமாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள். 3:165 (என்னே உங்கள் நிலை!) உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்போது, “அது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறீர்கள். (ஆனால் பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்கு துன்பம் உங்கள் கைகளால் எதிரிகளுக்கு ஏற்பட்டிருந்ததே! (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறும்: “இத்துன்பம் உங்களால்தான் வந்தது. திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.” 3:166 இரு சாராரும் மோதிக் கொண்ட நாளில் உங்களுக்கு வந்த துன்பங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் ஏற்பட்டன. 3:167 மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். 3:168 இவர்கள் எத்தகையவர்களென்றால், தாம் போரில் கலந்து கொள்ளாததுடன் (அதில் பங்கு பெற்று கொல்லப்பட்ட தம் சகோதரர்களைப் பற்றி) “அவர்கள் எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (நபியே!) நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!” 3:169 இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 3:170 அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)