அத்தியாயம்  ஆலு இம்ரான்  3 : 171-200 / 200
3:171 அல்லாஹ் அளித்த கொடையினாலும், அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது. 3:172 (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும் தூதரு(டைய அழைப்பு)க்கும் மறுமொழியளித்தார்கள். அவர்களில் யார் நற்செயல் புரிந்து பாவங்களிலிருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மாபெரும் கூலியுண்டு. 3:173 “உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள். 3:174 இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான். 3:175 தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்! 3:176 (நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும். 3:177 எவர்கள் இறைநம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்களால் அல்லாஹ்வுக்கு எத்தகைய தீங்கினையும் திண்ணமாக ஏற்படுத்திட முடியாது. துன்புறுத்தும் வேதனைதான் அவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. 3:178 இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது. 3:179 இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். மேலும், மறைவானவற்றை உங்களுக்கு அறிவிப்பது அல்லாஹ்வின் நியதியல்ல. எனினும் (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்காக) தன்னுடைய தூதர்களில் தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். எனவே (மறைவானவற்றில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தோடும் வாழ்வீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலி இருக்கிறது. 3:180 அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும், பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். 3:181 “அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்!” என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை நாம் பதிவு செய்கின்றோம். (இதற்கு முன்) தூதர்களை நியாயமின்றி அவர்கள் கொலை செய்து வந்ததும் செயலேட்டில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், (தீர்ப்புக் கூறும் நேரம் வரும்போது) நாம் அவர்களிடம் கூறுவோம்: “இதோ, சுட்டுப் பொசுக்கும் நரக வேதனையை இப்பொழுது சுவையுங்கள்!” 3:182 இது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகள்மீது கொடுமை புரிபவன் அல்லன். 3:183 “(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?” 3:184 (முஹம்மதே! இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் எனக் கூறுகின்றார்கள். ஆனால், உமக்கு முன் தெள்ளத் தெளிவான சான்றுகளையும் ஆகமங்களையும், ஒளியூட்டும் வேதங்களையும் கொணர்ந்த தூதர்களில் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டனர். 3:185 ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை! 3:186 (முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும். 3:187 வேதம் அருளப்பட்டவர்களிடம், “வேதக் கருத்துகளை மக்களிடையே நீங்கள் பரப்பிட வேண்டும்; அவற்றை மறைத்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கியதை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! எனினும் அவர்கள் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டார்கள்! மேலும் அதனை அற்ப ஆதாயத்திற்காக விற்று விட்டார்கள். அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் எத்துணைத் தரங்கெட்டது! 3:188 தாம் செய்கின்ற இழிசெயல்களைக் குறித்து மகிழ்ந்திருப்பவர்கள் செய்யாத செயல்களுக்காகத் தாம் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று ஒருபோதும் நீர் கருதிவிட வேண்டாம். (உண்மையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது. 3:189 வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது! 3:190 திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன. 3:191 அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:192 எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 3:193 எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக! 3:194 எங்கள் இறைவா! மேலும், தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும், மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக, நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!” 3:195 அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது. 3:196 உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். 3:197 இது (சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம்தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது! 3:198 இதற்கு மாறாக எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களுக்கு, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படும் மிகச் சிறந்த உபசரிப்பாகும். மேலும், நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பவையே மிகவும் சிறந்தவையாகும். 3:199 திண்ணமாக, வேதம் அருளப்பட்டவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், உம்மீது இறக்கியருளப்பட்டதையும், (முன்னர்) தங்கள் மீது இறக்கியருளப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் திருமுன் பணிந்த வண்ணமிருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதில்லை. அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான். 3:200 இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! சத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!
அத்தியாயம்  அன்னிஸா  4 : 1-23 / 176
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
4:1 மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். 4:2 அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும். 4:3 அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். 4:4 மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம். 4:5 மேலும், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்; ஆனால், அப்பொருள்களிலிருந்து அவர்களுக்கு உண்ணவும், உடுக்கவும் அளியுங்கள்! மேலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள்! 4:6 மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன். 4:7 (மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும். 4:8 மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்! 4:9 மக்கள் தங்களுக்குப் பின்னால் ஒன்றுக்கும் இயலாத குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைய நேரிட்டால், அப்பொழுது தம் குழந்தைகள் குறித்து எந்த அச்சங்களுக்கு அவர்கள் ஆளாவார்களோ அதனைக் கருத்தில் கொண்டு (இவர்கள் விஷயத்திலும் இப்பொழுது) அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்; எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து வாழட்டும்; மேலும் நேர்மையான வார்த்தைகளையே பேசட்டும்! 4:10 அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். 4:11 உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்: ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது. (இறந்து போனவருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால், இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குரியதாகும். மேலும், ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குரியதாகும். இறந்துபோனவருக்குக் குழந்தைகள் இருப்பின், அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. மேலும், அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்; அவருக்கு சகோதர சகோதரிகளுமிருந்தால் தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள். இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரண சாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும், (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்). உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான். திண்ணமாக, அல்லாஹ் (எல்லா உண்மை நிலைகளையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்தவனாகவும் இருக்கின்றான். 4:12 மேலும் (மரணமடைந்த) உங்களுடைய மனைவியர் விட்டுச் சென்ற சொத்தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப்பங்கு உங்களுக்குரியது; அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் உங்களுக்குரியது. அவர்கள் செய்த மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவர்கள் விட்டுச் சென்ற கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு உங்களுக்கு உரியதாகும்). உங்களுக்குக் குழந்தைகள் இல்லையானால், நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவியர்க்குரியது; ஆனால், உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து எட்டில் ஒரு பாகம் அவர்களுக்குரியதாகும். நீங்கள் செய்கின்ற வஸிய்யத் மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பிறகும் உங்களுடைய கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு அவர்களுக்குரியதாகும்). தாய்தந்தையரும் பிள்ளைகளும் இல்லாத (நிலையில், இறந்து போன) ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணுடைய சொத்து பங்கிடப்பட வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருப்பின் அந்தச் சகோதரர் அல்லது சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் கிட்டும். உடன்பிறப்புகள் ஒருவருக்கு மேற்பட்டவர்களாயிருந்தால் முழுச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் எல்லோரும் பங்கு பெறுவார்கள். ஆனால், இது இறந்து போனவர் செய்திருந்த வஸிய்யத் மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவருடைய) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (அந்தப் பங்கை அவர்கள் பெறுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை:) அந்த மரண சாஸனம் யாருக்கும் கேடு விளைவிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். இது அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், மென்மையான இயல்புடையவனாகவும் இருக்கின்றான். 4:13 இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். 4:14 மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது. 4:15 உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்! 4:16 அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். 4:17 நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலைச் செய்துவிட்டாலும் உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். 4:18 எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். 4:19 இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும். 4:20 நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா? 4:21 சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்? 4:22 மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும். 4:23 (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன் பிறந்த சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்; மேலும், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், மேலும், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத் தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவிய ராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) ஆனால் முன்னால் நடந்தது நடந்துவிட்டது. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)