அத்தியாயம்  ஆலு இம்ரான்  3 : 15-92 / 200
3:15 (நபியே!) நீர் கூறும்: “இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்.” அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான். 3:16 இவர்கள் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பார்கள்: “எங்களுடைய இறைவனே! திண்ணமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்; இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!” 3:17 இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள். 3:18 வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும், அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்தவண்ணம் சான்று பகர்கின்றனர். 3:19 திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். வேதம் அருளப்பட்டவர்கள் இந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து பல்வேறு வழிகளை மேற்கொண்டது, அவர்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவுபடுத்தப்படாததனால் அல்ல. மாறாக, தம்மிடம் மெய்யறிவு வந்த பிறகுதான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள்; தங்களுக்கிடையே அநீதி இழைப்பதற்காக! மேலும் யாரேனும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களிடம் கணக்கு வாங்குவதில் திண்ணமாக அல்லாஹ் விரைவானவனாய் இருக்கின்றான். 3:20 (நபியே! இனி) அவர்கள் உம்மோடு தர்க்கம் புரிந்தால் அவர்களிடம், “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் முன் அடிபணிந்து விட்டோம்” என்று கூறுவீராக! இன்னும் வேதம் அருளப்பட்டவர்களையும் வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி, “நீங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டீர்களா?” என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் திண்ணமாக நேர்வழி அடைந்தவர்களாவர். அவர்கள் புறக்கணித்தாலோ (இறைத்தூதை அவர்களிடம்) எடுத் துரைப்பது மட்டுமே உம்மீது கடமையாகும். அல்லாஹ் தன் அடிமைகளின் செயற்பாடுகளை நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான். 3:21 நிச்சயமாக யார் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் நல்லொழுக்க அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை புரிகிறார்களோ, இன்னும் மனிதர்களில் நீதியைக் கைக்கொள்ளுமாறு ஏவியவர்களை கொலை செய்கின்றார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் “நற்செய்தி” சொல்வீராக! 3:22 இவர்களின் செயல்கள் இம்மை, மறுமை இரண்டிலும் வீணாகி விட்டன. மேலும் இவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். 3:23 வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு கொடுக்கப்பட்டோரின் நிலை என்னவென்று நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப்படும் போது, அவர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்துத் திரும்பிச் செல்கிறார்கள். 3:24 அவர்களின் இந்நடத்தைக்குக் காரணம், “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். தாமே இயற்றிக் கொண்ட கோட்பாடுகள்தாம் அவர்களின் சமய விவகாரங்களில் அவர்களைப் பல தவறான கருத்துகளில் உழல வைத்திருக்கின்றன. 3:25 ஆனால் ஐயமின்றி வரவிருக்கின்ற ஒருநாளில் நாம் அவர்களை ஒன்று திரட்டும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்ததற்குரிய கூலி முழுமையாய் வழங்கப்படும். மேலும் யார் மீதும் அநீதி இழைக்கப்படமாட்டாது. 3:26 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன். 3:27 நீயே இரவைப் பகலில் கோக்கச் செய்கின்றாய்; மேலும் பகலை இரவிலும் கோக்கச் செய்கின்றாய்; இன்னும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய். மேலும் நீ நாடுபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.” 3:28 இறைநம்பிக்கையாளர்கள், (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய், ஆதரவாளர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி! உங்களில் எவரேனும் அவ்வாறு நட்புகொண்டால், அவர்களுக்கு அல்லாஹ்வுடன் எத்தகைய தொடர்பும் இல்லை. மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. 3:29 நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: “உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிகின்றான்.” மேலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். 3:30 ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும். அப்போது, “அந்தோ! தனக்கும் அந்நாளுக்குமிடையே மிக தூரமான இடைவெளி இருந்திருக்கக் கூடாதா!” என மனிதன் ஆவலுறுவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் இரக்கமுள்ளவனாய் இருக்கின்றான். 3:31 (நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.” 3:32 (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படிய) மறுப்பவர்களை நேசிக்க மாட்டான். 3:33 திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித்தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். 3:34 இவர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிபவனுமாய் இருக்கின்றான். 3:35 இம்ரானைச் சார்ந்த பெண் “என் இறைவனே! நான் எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை உனது திருப்பணிக்காக அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துள்ளேன். எனவே இதனை (காணிக்கையை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீ நன்கு செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைஞ்சிக் கொண்டிருந்ததையும் அல்லாஹ் செவியுற்றவனாகவே இருந்தான். 3:36 பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.” 3:37 ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார். 3:38 அங்கு இந்நிலையைக் கண்ட ஜகரிய்யா தம் இறைவனிடம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்குத் தூய ஒரு வழித் தோன்றலை உனது ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்!” 3:39 அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: “அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்.” 3:40 ஜகரிய்யா வினவினார்: “என் இறைவா! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்? நானோ முதுமையடைந்து விட்டேன்; என் மனைவியோ மலடியாய் இருக்கின்றாள்.” அதற்கு இறைவன் “இவ்வாறே நடைபெறும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்(தே தீரு)வான்” என்று பதிலளித்தான். 3:41 அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்!” என்று (பணிந்து) கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேச மாட்டீர் (பேச இயலாது) என்பதே அடையாளமாகும். இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாய் நினைவுகூருவீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக!” எனக் கூறினான். 3:42 மேலும், அந்நேரம் வந்தபோது வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். 3:43 மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும் ஸஜ்தா செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!” 3:44 (நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள். இவற்றை உமக்கு, வஹி மூலம் நாம் அறிவிக்கின்றோம். (வழிபாட்டில்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை. 3:45 வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். 3:46 மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.” 3:47 (இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:) 3:48 “இன்னும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பான். தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுத்தருவான். 3:49 மேலும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவரைத் தன் தூதராகவும் நியமிப்பான்.” (இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் வந்தபோது கூறினார்:) “திண்ணமாக நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும் நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதி கொண்டு உயிர்பெற்றெழச் செய்வேன். அதுமட்டுமன்று! நீங்கள் உண்பவற்றையும் உங்கள் இல்லங்களில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின் இவற்றிலெல்லாம் உங்களுக்குப் போதிய சான்று உண்டு. 3:50 மேலும் தற்பொழுது தவ்ராத்தின் அறிவுரைகளிலிருந்து எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள். 3:51 உறுதியாக அல்லாஹ்தான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாவான்! எனவே நீங்கள் அவனுக்கே பணிந்து வாழுங்கள்! இதுதான் நேரான வழியாகும்.” 3:52 இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’* பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீரே சாட்சியாக இரும். 3:53 எங்கள் இறைவனே! நீ இறக்கியருளிய கட்டளைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தூதரையும் பின்பற்றுகின்றோம். எனவே நீ எங்கள் பெயர்களை சத்தியத்திற்குச் சான்று வழங்குவோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:54 பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள். (அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன். 3:55 (அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். மேலும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்வேன்; உம்மை நிராகரித்தவர்களிடமிருந்து (அதாவது அவர்களுடைய தொடர்பிலிருந்தும், அவர்களுடைய தூய்மையற்ற சூழ்நிலையில் நீர் வாழ்வதிலிருந்தும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; இறுதித் தீர்ப்புநாள்வரை உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களைவிட உயர்த்தியே வைப்பேன். இறுதியில் என்னிடம் நீங்கள் அனைவரும் வந்தேயாக வேண்டும். அப்போது நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தவற்றில் நான் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்; 3:56 ஆகவே அவர்களில் எவர் நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இம்மை, மறுமை இரண்டிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். மேலும், அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார். 3:57 ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாக வழங்கப்படும். மேலும் (நன்கு அறிந்து கொள்ளுங்கள்:) அநீதி இழைப்போரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. 3:58 (நபியே!) நாம் எடுத்துரைக்கும் இவை, சான்றுகளும் ஞானமும் நிறைந்த அறிவுரைகளாகும். 3:59 திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதத்தைப் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார். 3:60 இந்த உண்மைகள் உம்முடைய இறைவனிடமிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிடாதீர். 3:61 இந்த அறிவு உம்மிடம் வந்த பின்பு யாரேனும் உம்மிடம் இவ்விவகாரத்தில் தர்க்கம் செய்தால் (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “வாருங்கள்! உங்கள் மக்களையும் எங்கள் மக்களையும், உங்கள் பெண்களையும், எங்கள் பெண்களையும், நாங்களும் நீங்களும் அழைத்துக் கொண்டு ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று பணிந்து இறைஞ்சுவோம்.” 3:62 இவை யாவும் முற்றிலும் சரியான நிகழ்ச்சிகளாகும். மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. உண்மை யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வுடைய வலிமையே அனைத்தையும்விட மேலோங்கியிருக்கிறது. மேலும், அவனுடைய நுண்ணறிவே இப்பேரண்டத்தின் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 3:63 எனவே அவர்கள் (மேற்கூறப்பட்ட நிபந்தனையின்படி தர்க்கம் புரிய) முன் வராமல் புறக்கணித்து விட்டால் (அவர்கள் குழப்ப வாதிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.) குழப்ப வாதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். 3:64 (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும் எவரையும் நாம் இணைவைக்க மாட்டோம். மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாய் ஆக்கிக் கொள்ளக்கூடாது.’ அவர்கள் (இந்த அழைப்பினை) ஏற்க மறுப்பார்களேயானால், திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (தெளிவாகக்) கூறி விடுங்கள். 3:65 வேதம் அருளப்பட்டவர்களே! இப்ராஹீம் (உடைய தீனைப்) பற்றி ஏன் தர்க்கம் புரிகின்றீர்கள்? அவருக்குப் பின்னர் தாம் தவ்ராத்தும் இன்ஜீலும் இறக்கியருளப்பட்டன. (இதனைக் கூட) நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா? 3:66 நீங்கள் எவற்றை அறிந்து வைத்திருக்கின்றீர்களோ, அவற்றில் நன்கு தர்க்கம் புரிந்துவிட்டீர்கள். (இப்போது) நீங்கள் முற்றிலும் அறியாதவற்றில் தர்க்கம் புரிய ஏன் முற்படுகின்றீர்கள்? அல்லாஹ் நன்கறிகின்றான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். 3:67 இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை. 3:68 இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான். 3:69 (இறைநம்பிக்கை கொண்டோரே!) வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் உங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்திட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆயினும், அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டிலாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை அவர்கள் உணர்வதில்லை! 3:70 வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கின்றீர்கள்? 3:71 வேதம் அருளப்பட்டவர்களே! சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்து ஏன் அதனைச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்குகின்றீர்கள்? நீங்கள் நன்கு அறிந்துகொண்டே சத்தியத்தை ஏன் மறைக்கின்றீர்கள்? 3:72 வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் (தங்களுக்கிடையே) கூறிக் கொள்கிறார்கள்: “(இந்த நபியை) நம்பியவர்கள் மீது இறக்கியருளப்பட்டவற்றை முற்பகலில் நம்பி, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்! (இப்படிச் செய்வதால்) நம்பிக்கையாளர்கள் (தம் நம்பிக்கையை விட்டு) திரும்பிவிடக்கூடும். 3:73 மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்!” (நபியே!) நீர் கூறும்: “திண்ணமாக, அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்தான் உண்மையான வழிகாட்டுதலாகும். மேலும் உங்களுக்குக் கிடைத்திருப்பது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அல்லது உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக வலுவான வாதங்கள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அது இறைவன் வழங்கியதேயாகும்.” (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “திண்ணமாக, சிறப்பனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. தான் நாடுபவர்களுக்கே அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த நோக்குடையவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாவான். 3:74 தான் நாடுபவர்களைத் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக்குகின்றான். மேலும் அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகும்.” 3:75 வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள். 3:76 அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப்படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். 3:77 எவர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது. 3:78 அவர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்; வேதத்தைப் படிக்கும்போது தம் நாவுகளை அவர்கள் சுழற்றுகின்றார்கள்; அவர்கள் படிக்கின்ற யாவும் வேதத்தில் உள்ளவையே என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக! உண்மை யாதெனில், அவர்கள் படிப்பவை வேதத்திலுள்ளவையல்ல. (நாங்கள் படிக்கின்ற) “இவை யாவும் இறைவனிட மிருந்து வந்தவை” என்று அவர்கள் கூறுகின்றார்கள்; ஆனால் அவை உண்மையில் இறைவனிடமிருந்து வந்தவையல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். 3:79 ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், இறைத்தூதுத் துவத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்க அதனைப் பெற்ற பின்னர், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகி விடுங்கள்!” என்று மக்களிடம் கூறுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதன்று. மாறாக, “நீங்கள் ஓதிக்கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் வேத அறிவுரைகளின் தேட்டப்படி ரப்பானீகளாய்த் திகழுங்கள்!” என்றே அவர் கூறுவார். 3:80 வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன? 3:81 அல்லாஹ் நபிமார்களிடம் இவ்வாறு உறுதிமொழி வாங்கிய நேரத்தை நினைவுகூருங்கள்: “நான் (இப்போது) உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கியிருக்கின்றேன். இனி ஏற்கனவே உங்களிடமுள்ள அறிவுரைகளை மெய்ப்படுத்தக்கூடிய வேறோர் இறைத்தூதர் உங்களிடம் வந்தால் கண்டிப்பாக அவர் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் அவருக்கு உதவி புரிந்திடவும் வேண்டும்” (இவ்வாறு கூறிவிட்டு) அல்லாஹ் வினவினான்: “இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மேலும், இதற்காக என்னுடன் நீங்கள் செய்துகொண்ட பெரும் ஒப்பந்தத்தை (அதனால் ஏற்படும் மாபெரும் பொறுப்புகளை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” அவர்கள், “(ஆம்!) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “அப்படியானால் நீங்கள் (இதற்கு) சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சியாக இருக்கின்றேன். 3:82 இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.” 3:83 இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர். 3:84 நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்டிருக்கும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்களுக்கு அவர்களுடைய அதிபதியிடமிருந்து இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கிடையே நாங்கள் எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை. மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம். 3:85 இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான். 3:86 இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அவர்களோ இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். மேலும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்திருந்தன. இவ்வாறு கொடுமை புரியும் சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 3:87 (அவர்கள் புரிந்த கொடுமைக்காக) அல்லாஹ்வும் வானவர்களும், மக்கள் அனைவரும் அவர்கள் மீது இடுகின்ற சாபம்தான் அவர்களுக்குரிய சரியான கூலியாகும்! 3:88 சாபக்கேடான நிலையிலேயே அவர்கள் என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள்; தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்படவும் மாட்டாது. மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது. 3:89 ஆயினும் அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தமது நடத்தையைத் திருத்திக் கொண்டவர்களைத் தவிர! (அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.) ஏனெனில் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், கருணை பொழிபவனும் ஆவான். 3:90 ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டனரோ, மேலும் நிராகரிப்பிலேயே மூழ்கிக் கொண்டு போகின்றனரோ அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அவர்கள்தான் (முதிர்ந்த) வழிகேடர்கள். 3:91 திண்ணமாக, எவர்கள் நிராகரிப்பை மேற்கொண்டு அதே நிலையில் மரணமடைந்து விடுகின்றார்களோ அவர்கள் தம்மைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பூமி நிரம்பப் பொன்னை ஈட்டுத் தொகையாகத் தந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார். 3:92 உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)