அத்தியாயம்  அல் அன்கபூத்  29 : 46-69 / 69
29:46 மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுள் கொடுமையாளர்களிடம் தவிர! மேலும், அவர்களிடம் கூறுங்கள்: “எங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஒருவனே! மேலும், நாம் அவனுக்கே கீழ்ப்படிந்தவர்களாய் (முஸ்லிம்களாய்) இருக்கின்றோம்.” 29:47 (நபியே!) இதே போன்று உமக்கும் வேதத்தை இறக்கியருளியிருக்கின்றோம். ஆகையால், முன்னர் எவர்களுக்கு வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் இதனை நம்புகின்றார்கள். இவர்களிலும்கூட பெரும்பாலோர் இதன்மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமே நம்முடைய வசனங்களை மறுக்கின்றனர். 29:48 (நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் படித்ததில்லை. உம்முடைய கையால் எழுதியதுமில்லை. அவ்வாறிருந்திருந்தால் அசத்தியவாதிகள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். 29:49 உண்மையில் இவை ஞானம் வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாய்த் திகழ்கின்றன. நம்முடைய வசனங்களை எவரும் மறுப்பதில்லை கொடுமைக்காரர்களைத் தவிர! 29:50 இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.” 29:51 அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன. 29:52 (நபியே!) நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சி அளிக்க அல்லாஹ்வே போதுமானவன். அவன் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிகின்றான். எவர்கள் அசத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்களோ மேலும், அல்லாஹ்வை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்கு உரியவர்கள்.” 29:53 விரைவில் வேதனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் இவர்கள் கோருகின்றார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படாதிருந்தால் அவர்கள்மீது வேதனை வந்துவிட்டிருக்கும். மேலும், திண்ணமாக, அது (உரிய நேரத்தில்) அவர்களிடம் திடீரென வந்தே தீரும். அதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில்! 29:54 வேதனையை விரைவில் கொண்டு வருமாறு இவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். அதே நேரத்தில் நரகம் இந்நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது! 29:55 மேலும், அந்நாளை (இவர்கள் அறிந்து கொள்வார்கள்) அன்று வேதனை இவர்களின் மேலிருந்தும், இவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் இவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். மேலும், கூறுவான்: “இப்பொழுது சுவையுங்கள், நீங்கள் செய்து கொண்டிருந்த இழிசெயல்களின் விளைவை!” 29:56 நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! திண்ணமாக, என்னுடைய பூமி விசாலமானது. எனவே, எனக்கே நீங்கள் அடிபணியுங்கள். 29:57 ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது. பின்னர் நீங்கள் அனைவரும் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்! 29:58 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருக்கின்றார்களோ, அவர்களை சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் வசிக்கச் செய்வோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கே அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். நற்செயல் புரிபவர்களுக்குரிய இக்கூலி எத்துணைச் சிறப்பானது! 29:59 அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில் பொறுமையை மேற்கொண்டார்கள்; தம் இறைவனேயே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றார்கள் 29:60 எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான். உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 29:61 வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருப்பவனும் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் திண்ணமாக, இவர்கள் ‘அல்லாஹ்’ என்று பதில் தருவார்கள். பிறகு, இவர்கள் எங்கிருந்து ஏமாற்றப்படுகின்றார்கள்! 29:62 அல்லாஹ் தன்னுடைய அடிமைகளில் தான் நாடுவோருக்கு உணவைத் தாராளமாய் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு அளவோடு வழங்குகின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 29:63 மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் இறந்துகிடக்கின்ற பூமியை உயிர்ப்புறச் செய்தவன் யார்? என்று இவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று திண்ணமாக அவர்கள் பதில் சொல்வார்கள். ‘அல்ஹம்துலில்லாஹ்’ புகழ் அனைத்தும் இறைவனுக்கு உரியது என்று கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்வதில்லை. 29:64 மேலும், இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும் அன்றி வேறொன்றுமில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ, இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! 29:65 இந்த மக்கள் கப்பலில் பயணமாகும்போது தங்களுடைய தீனைமார்க்கத்தை அல்லாஹ்வுக்கு உரித்தாக்கிய வண்ணம் அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டால் அவனுக்கு இணை வைக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். 29:66 அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஈடேற்றத்திற்கு நன்றி கொல்வதற்காகவும் உலக வாழ்க்கையின் இன்பத்தை அவர்கள் அனுபவிப்பதற்காகவும்தான்! சரி, விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்! 29:67 இவர்களின் அக்கம்பக்கங்களில் இருக்கும் மக்கள் இறாஞ்சிச் செல்லப்படும் நிலையில் இருக்க ஹரமை நாம் அபயமளிக்கும் புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகு என்ன, இவர்கள் அசத்தியத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி கொல்கின்றார்களா? 29:68 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தன் முன் சத்தியம் வந்திருக்கும்போது அதைப் பொய்யென வாதிட்டவனைவிடப் பெரும் கொடுமைக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகம் இருப்பிடமல்லவா? 29:69 மேலும், எவர்கள் நமக்காக ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். மேலும், திண்ணமாக, அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான்.
அத்தியாயம்  அர்ரூம்  30 : 1-60 / 60
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
30:1 அலிஃப்லாம்மீம். 30:2 ரோமானியர் அண்டை நாட்டிலே தோல்வி அடைந்துள்ளனர். 30:3 மேலும், அவர்கள் தங்களுடைய இந்தத் தோல்விக்குப் பின் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வெற்றியடைந்துவிடுவார்கள். 30:4 முன்பும் பின்பும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியதாகும். மேலும், அந்நாளில் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட வெற்றியைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள். 30:5 தான் நாடுவோருக்கு அல்லாஹ் உதவி செய்கின்றான். மேலும், அவன் வலிமை மிக்கவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 30:6 இது அல்லாஹ் அளித்த வாக்குறுதி ஆகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதில்லை. ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 30:7 மக்கள் உலக வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமையைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். 30:8 என்ன, அவர்கள் தங்களைப்பற்றி என்றைக் கேனும் சிந்தித்ததில்லையா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்துப் பொருட்களையும் சத்தியத்துடனும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவுமே படைத்துள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் தங்கள் அதிபதியின் சந்திப்பை நிராகரிப்பவர்களாய் இருக்கின்றனர். 30:9 மேலும், இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள். 30:10 இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தார்கள். 30:11 அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். 30:12 மேலும், அந்த நேரம் வரும்நாளில் குற்றவாளிகள் நிலைகுலைந்து போவார்கள். 30:13 அவர்கள் ஏற்படுத்தியிருந்த இணைக்கடவுளர்களில் யாரும் அவர்களுக்குப் பரிந்துரைக்கக் கூடியவராக இருக்கமாட்டார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய இணைக் கடவுள்களை நிராகரிப்பவர்களாகி விடுவார்கள். 30:14 அந்நேரம் வரும்நாளில் (எல்லா மனிதர்களும்) தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து போவார்கள். 30:15 எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துள்ளார்களோ அவர்கள் சுவனத் தோட்டத்தில் மகிழ்ச்சியுடனும் இன்பத்துடனும் தங்க வைக்கப்படுவார்கள். 30:16 மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களையும் மறுமைச் சந்திப்பையும் பொய்யென்று கூறியிருந்தார்களோ அவர்கள் வேதனையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். 30:17 எனவே துதியுங்கள் அல்லாஹ்வை நீங்கள் மாலை நேரத்தை அடையும் போதும், காலை நேரத்தை அடையும்போதும்! 30:18 வானங்களிலும் பூமியிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் (துதியுங்கள் அவனை) நீங்கள் பிற்பகலிலும் மதிய வேளையை அடையும்போதும்! 30:19 அவன் உயிருள்ளவற்றை உயிரில்லாதவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். உயிரில்லாதவற்றை உயிருள்ளவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். மேலும், பூமி இறந்து போனதன் பின்னர் அதற்கு உயிரூட்டுகின்றான். இதைப்போன்றுதான் நீங்களும் (மரணமான நிலையிலிருந்து) வெளிக்கொணரப்படுவீர்கள். 30:20 அவனுடைய சான்றுகளில் ஒன்று அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதாகும். பின்னர், திடீரென நீங்கள் மனிதர்களாக இருக்கிறீர்கள்; (பூமியில்) பரவிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். 30:21 மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. 30:22 வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. 30:23 இரவிலோ பகலிலோ நீங்கள் உறங்குவதும், அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, (உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன. 30:24 மேலும், அச்சமும் ஆர்வமும் அளிக்கும் வகையில் அவன் உங்களுக்கு மின்னலைக் காண்பிப்பதும், மேலும், வானிலிருந்து அவன் மழையைப் பொழியச் செய்வதும், அதன் மூலம் பூமிக்கு அது இறந்துபோன பின் உயிர் கொடுப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையாகும். திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன. 30:25 மேலும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் ஒன்றாகும். பிறகு, அவன் உங்களைப் பூமியிலிருந்து (வெளியேறி வரும்படி) அழைத்தான். ஒரே ஓர் அழைப்பில் திடீரென நீங்கள் வெளியேறி வருவீர்கள். 30:26 வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர். 30:27 அவனே முதன் முறையாகப் படைக்கின்றான். பிறகு, அவனே அதை மறுமுறையும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய தன்மை மிக உயர்ந்ததாகும். மேலும், அவன் வலிமை மிக்கவன்; நுண்ணறிவாளன். 30:28 அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உவமையை கூறுகின்றான்: உங்களுக்குச் சொந்தமான அடிமைகளில் யாராகிலும் நாம் உங்களுக்கு வழங்கிய செல்வத்தில் உங்களுக்குச் சரியான பங்காளிகளாய் இருக்கின்றார்களா? மேலும், நீங்கள் உங்களுக்குச் சமமானவர்களுக்கு பரஸ்பரம் அஞ்சுவதுபோல் அவர்களுக்கு அஞ்சுகின்றீர்களா? சிந்தித்துச் செயல்படும் மக்களுக்கு இவ்வாறே நாம் நம்முடைய வசனங்களைத் தெளிவாக விளக்குகின்றோம். 30:29 ஆயினும், இந்த அக்கிரமக்காரர்கள் எவ்வித அறிவுமின்றி தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்கின்றார்கள். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ, இனி அவருக்கு வேறு எவரால் வழிகாட்ட முடியும்? இத்தகையோருக்கு உதவியாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 30:30 எனவே (நபியே, இன்னும் நபியைப் பின்பற்றுபவர்களே) ஒருமனப்பட்ட நிலையில் உங்களுடைய முகத்தை இந்த தீனின் பக்கம் நிலைப்படுத்துங்கள். அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது. இதுதான் முற்றிலும் நேரானசெம்மையான மார்க்கமாகும். ஆயினும் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. 30:31 அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாய் (அதில் நிலைத்திருங்கள்). மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள். மேலும், இணைவைப்பாளர்களுடன் நீங்கள் சேர்ந்து விடாதீர்கள்; 30:32 அவர்களோ தங்களுடைய மார்க்கத்தைத் தனித்தனியாகப் பிரித்து, பல குழுக்களாகப் பிரிந்து விட்டார்கள். மேலும், அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள். 30:33 மக்க(ளின் நிலைமை என்னவெனில், அவர்க)ளுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய இறைவனின் பக்கம் திரும்பியவாறு அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் தன்னுடைய அருட்கொடையில் சிறிதளவை அவர்களுக்குச் சுவைக்கக் கொடுத்தால், உடனே அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனுக்கு இணை வைக்கத் தொடங்கி விடுகின்றனர்; 30:34 நாம் அவர்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி கொல்லும் பொருட்டு! சரி, அனுபவித்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்! 30:35 இவர்கள் செய்துவரும் இணைவைப்புச் செயல் சரியானதுதான் எனச் சான்று பகர்கின்ற ஏதேனும் ஆதாரத்தை நாம் இவர்கள் மீது இறக்கி வைத்திருக்கின்றோமோ, என்ன? 30:36 நாம் மக்களுக்கு ஏதேனும் அருட்கொடையை சுவைக்கக் கொடுத்தால், அதில் அவர்கள் பூரித்துப் போய்விடுகின்றார்கள். மேலும், தாங்கள் செய்த தீவினைகளினால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டால் உடனே அவர்கள் நிராசை அடைந்துவிடுகின்றார்கள். 30:37 அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை தாராளமாகக் கொடுக்கின்றான்; (தான் நாடுவோர்க்கு) அளவோடு கொடுக்கின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன. 30:38 எனவே (நம்பிக்கையாளனே!) உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் (அவர்களின் உரிமையையும் தந்துவிடு). அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர். 30:39 மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத்அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர். 30:40 அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணமடையச் செய்கின்றான்; பிறகு மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். என்ன, நீங்கள் இணை வைக்கும் தெய்வங்களில் யாராவது இவற்றுள் எதையாவது செய்பவர் இருக்கின்றாரா? அவன் தூய்மையானவன்; இம் மக்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களைவிட்டு அவன் மிக உயர்ந்தவன். 30:41 மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும். 30:42 (நபியே! இவர்களிடம்) கூறும்: “பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள். முன்பு வாழ்ந்து சென்ற மக்களின் கதி என்னவாயிற்று என்பதை! அவர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களாகவே இருந்தனர்.” 30:43 எனவே (நபியே!) உமது முகத்தை இந்த நேரிய மார்க்கத்தின் பக்கம் உறுதியுடன் நிலைப்படுத்தி வைப்பீராக; அல்லாஹ்விடமிருந்து எவராலும் எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாத ஒருநாள் வருமுன்! அந்நாளில் மக்கள் பிளவுண்டு, தனித்தனியே பிரிந்து சென்று விடுவர். 30:44 எவன் நிராகரித்தானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்குக் கேடாக முடியும். மேலும், எவர்கள் நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் தங்களுக்காகவே (வெற்றியின் வழியைத்) தயார்படுத்துகின்றார்கள்; 30:45 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து கூலி வழங்குவதற்காக! திண்ணமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை. 30:46 மேலும், நற்செய்தி கூறுவதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும்தான்! 30:47 மேலும், நாம் உமக்கு முன்னர் தூதர்களை அவரவருடைய சமூகத்தாரிடையே அனுப்பினோம். அவர்கள் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர், எவர்கள் குற்றம் புரிந்தார்களோ அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவது நம்மீது கடமையாக இருந்தது. 30:48 அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான்; அது மேகத்தைக் கிளப்பிவிடுகின்றது. பிறகு அவன் நாடும் விதத்தில் மேகங்களை வானத்தில் பரப்புகின்றான். அவற்றைப் பல துண்டுகளாய்ப் பிரிக்கின்றான். பின்னர் அவற்றுக்கிடையில் இருந்து மழைத்துளிகள் உதிர்ந்து விழுவதை நீர் காண்கின்றீர். தன் அடிமைகளில் தான் நாடுபவர்கள் மீது அவன் இந்த மழையைப் பொழிவிக்கும்போது அவர்கள் உடனே மகிழ்ந்து போய்விடுகின்றார்கள். 30:49 ஆனால், அவர்கள் அது பொழியப்படுவதற்கு முன் நிராசையடைந்துவிட்டிருந்தார்கள். 30:50 அல்லாஹ்வுடைய அருளின் பலன்களைப் பாருங்கள். இறந்து கிடக்கும் பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கின்றான்? திண்ணமாக, அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியவனாவான். மேலும், அவன் யாவற்றின்மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். 30:51 மேலும், நாம் காற்றை அனுப்பி, அதனால் அவர்களின் பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் காண்பார்களானால், அப்பொழுது அவர்கள் நன்றி கொன்றவர்களாகி விடுகின்றார்கள். 30:52 (நபியே!) இறந்தவர்களைச் செவியேற்கச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை உம்முடைய அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது. 30:53 மேலும், குருடர்களை வழிகேட்டிலிருந்து வெளியேற்றி, அவர்களை நேர்வழியில் கொண்டு வரவும் உம்மால் முடியாது. ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் இருக்கின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும். 30:54 நீங்கள் பலவீனமான நிலையிலிருந்தபோது உங்களைப் படைக்கத் தொடங்கியவன் அல்லாஹ்தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத் தந்தான். பின்னர் அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும் முதியவர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான். மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், யாவற்றின்மீதும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். 30:55 மேலும், அந்த நேரம் வரும்போது குற்றவாளிகள், “நாங்கள் ஒரு நாழிகை நேரத்திற்குமேல் தங்கவில்லை” என்று சத்தியம் செய்து கூறுவார்கள். இதே போன்றுதான் இவர்கள் (உலக வாழ்க்கையில்) ஏமாற்றப்பட்டிருந்தார்கள். 30:56 ஆனால் ஞானமும், இறைநம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவர்: “அல்லாஹ்வின் பதிவேட்டிலுள்ளபடி, மரணித்தவர்களை மீண்டும் எழுப்பும் நாள்வரை நீங்கள் தங்கியிருந்திருக்கின்றீர்கள். இதோ, எழுப்பப்படும் அந்த நாள்தான் இது. ஆயினும், நீங்கள் அறியாதவர்களாய் இருந்தீர்கள்.” 30:57 ஆக, அக்கிரமக்காரர்களுக்கு அந்நாளில் அவர்களுடைய சாக்குபோக்கு எந்த பலனையும் அளித்திடாது. மன்னிப்புக் கோரும்படி அவர்களிடம் கூறப்படவுமாட்டாது. 30:58 நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமாகப் புரியவைத்திருக்கின்றோம். நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் சரி, ஏற்க மறுத்து விட்டவர்கள் ‘நீர் அசத்தியத்தில் இருக்கின்றீர்’ என்று கூறுவார்கள். 30:59 இவ்வாறு, அறிவில்லாதவர்களின் இதயங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகின்றான். 30:60 எனவே (நபியே!) பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியான நம்பிக்கை கொள்ளாதோர் உம்மை மதிப்பற்றவராக (அலட்சியத்துக்குரியவராக) காணக்கூடாது.
அத்தியாயம்  லுக்மான்  31 : 1-21 / 34
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
31:1 அலிஃப், லாம், மீம், 31:2 இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். 31:3 இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. 31:4 அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள். 31:5 இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள். 31:6 மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது. 31:7 அவனிடம் நம் வசனங்கள் ஓதிக்காண்பிக் கப்பட்டால், அவனுடைய காதுகளில் மந்தம் ஏற்பட்டிருப்பது போன்றும், அவற்றை அவன் கேளாதது போன்றும் தற்பெருமையுடன் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றான். எனவே, துன்புறுத்தும் வேதனை குறித்து அவனுக்கு நற்செய்தி கூறிவிடும்! 31:8 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு அருள் நிறைந்த சுவனத்தோப்புகள் உள்ளன. 31:9 அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். மேலும், இது அல்லாஹ்வின் வலுவான வாக்குறுதியாகும். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 31:10 அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான். மேலும், அவன் மலைகளை பூமியில் ஊன்றியுள்ளான்; அது உங்களோடு சேர்ந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காக! மேலும் எல்லாவிதமான பிராணிகளையும் பூமியில் பரவச் செய்திருக்கின்றான். மேலும், வானிலிருந்து மழை பொழிய வைத்து பூமியில் விதவிதமான பயன்மிகு தாவரங்களை முளைக்கச் செய்தான். 31:11 இவை யாவும் அல்லாஹ்வின் படைப்புகள்! இனி அவனை விடுத்து மற்றவர்கள் என்ன படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள்! உண்மை யாதெனில், அக்கிரமக்காரர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். 31:12 நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம். நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத் தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். 31:13 மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்: “என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்” 31:14 மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது. 31:15 ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நீ நடந்துகொள்! மேலும், யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன். 31:16 (மேலும், லுக்மான் கூறினார்:) “என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். 31:17 என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும். 31:18 மேலும், மக்களைவிட்டு முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 31:19 உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்.” 31:20 நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், வெளிப்படையான மற்றும் மறைவான தன்னுடைய அருட்கொடைகளை உங்களுக்கு அவன் நிறைவாக்கித் தந்துள்ளான். (இவ்வாறிருந்தும்) மனிதர்களில் சிலர் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றார்கள்; எவ்வித ஞானமும், வழிகாட்டலும் அல்லது ஒளிதரும் வேதமும் அவர்களிடம் இல்லாமலேயே! 31:21 “அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “இல்லை, எங்கள் மூதாதையர்களை எவ்வழியில் கண்டோமோ, அவ்வழியையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தாலுமா, இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்?
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)