அத்தியாயம்  அல்கஸஸ்  28 : 51-88 / 88
28:51 மேலும், தொடர்ந்து (அறிவுரை மிக்க) வார்த்தைகளை அவர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றோம்; அவர்கள் அலட்சியத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்பதற்காக! 28:52 இதற்கு முன்பு எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் குர்ஆன் ஆகிய இதன் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள். 28:53 மேலும், இந்த வேதம் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் போது, “நாங்கள் இதன்மீது நம்பிக்கை கொண்டோம். உண்மையாக, இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். நாங்களோ முன்பிருந்தே முஸ்லிம்களாக கீழ்ப்படிந்தவர்களாக இருந்து வருகின்றோம்” என்று கூறுகின்றார்கள். 28:54 அவர்கள் நிலைகுலையாமல் இருந்ததற்குப் பகரமாக அவர்களுடைய கூலி அவர்களுக்கு இரு தடவை வழங்கப்படும். மேலும், அவர்கள் தீமையை நன்மையின் மூலம் தடுக்கின்றார்கள், மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள். 28:55 இன்னும் அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகிவிடுகின்றார்கள். மேலும், கூறுகின்றார்கள்: “எங்களுடைய செயல் எங்களுக்கு; உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள் அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை.” 28:56 (நபியே!) நீர் விரும்புகின்றவருக்கு நேர்வழி காட்டிட உம்மால் முடியாது. ஆயினும், அல்லாஹ் தான் நாடுவோருக்கு வழிகாட்டுதலை அளிக்கின்றான். மேலும், வழிகாட்டுதலைப் பெறக்கூடியவர்களை அவன் நன்கறிகின்றான். 28:57 மேலும்; அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றினால், எங்கள் பூமியிலிருந்து நாங்கள் இறாஞ்சிக்கொண்டு செல்லப்பட்டு விடுவோம்.” அமைதி நிறைந்த ஹரம்* பகுதியை அவர்களுக்கு நாம் தங்குமிடமாக்கிக் கொடுக்கவில்லையா? நம்மிடமிருந்து உணவு எனும் முறையில் அனைத்துவிதமான கனிகளும் அதன் பக்கம் கொண்டுவரப்படவில்லையா? ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை! 28:58 மேலும், எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள். (இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர! இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம். 28:59 மேலும், உம் இறைவன் எந்த ஊர்களையும் அழிப்பவனாக இருந்ததில்லை, அவற்றின் மத்தியில் மக்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காட்டும் தூதர் ஒருவரை அனுப்பாதவரையில்! ஊரில் வாழ்பவர்கள் கொடுமை புரிபவர்களாய் இருந்தாலே தவிர, அந்த ஊர்களை நாம் அழிப்பவர்களல்லர்! 28:60 உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் சாதனங்களும் அதன் அலங்காரமும்தான்! ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதுதான் இவற்றை விடச் சிறந்ததும் நிலையானதுமாகும். நீங்கள் சிந்தித்துணரமாட்டீர்களா? 28:61 எவனுக்கு நாம் நல்ல வாக்குறுதி அளித்து, அவன் அதனை அடையவும் இருக்கின்றானோ அவன், நாம் உலக வாழ்க்கையின் வசதிகளை மட்டும் வழங்கி, பிறகு மறுமைநாளில் தண்டனைக்காகக் கொண்டு வரப்பட இருக்கின்றவனுக்கு சமம் ஆவானா? 28:62 மேலும், அந்த மறுமைநாளினை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு யாரை இணையானவர்களென்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” 28:63 இந்தக் கேள்வி எவர்களுக்குப் பொருந்துமோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! திண்ணமாக, நாங்கள் வழிகெடுத்தது இவர்களைத்தாம்! நாங்கள் எவ்வாறு வழிகெட்டுப் போனோமோ அவ்வாறே இவர்களையும் வழிகெடுத்தோம். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று உன் முன்னிலையில் முறையிடுகின்றோம். இவர்கள் எங்களை ஒன்றும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை. 28:64 பின்னர், இவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் எனக்கு இணையாக ஏற்படுத்திய தெய்வங்களை அழையுங்கள்”. அப்போது இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு யாதொரு பதிலும் அளிக்கமாட்டார்கள். மேலும், இந்த மக்கள் வேதனையைக் கண்டுகொள்வார்கள். அந்தோ! இவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோராய் இருந்திருக்க வேண்டுமே! 28:65 மேலும், அந்நாளை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்து, “இறைதூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” என்று கேட்பான். 28:66 அந்நேரம் அதற்கு என்ன பதில் அளிப்பது என்றே அவர்களுக்குப் புலப்படாது. தங்களிடையே பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடம் கேட்கவும் முடியாது. 28:67 ஆயினும், எவர் (இன்று) பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிந்தாரோ அவர்தாம் (அங்கு) வெற்றி அடைந்தவராவார். 28:68 மேலும், உம்முடைய இறைவன் தான் நாடுவதைப் படைக்கின்றான். மேலும், (தன்னுடைய பணிக்காகத் தான் நாடுவோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இப்படித் தேர்ந்தெடுப்பது, இவர்கள் செய்கின்ற பணியன்று; அல்லாஹ் தூய்மையானவன்; மிகவும் உயர்ந்தவன், இவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து! 28:69 இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றையும், வெளிப்படுத்துகின்றவற்றையும் உம்முடைய இறைவன் அறிவான். 28:70 அவனே, அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். 28:71 (நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் இரவை உங்கள் மீது மறுமைநாள் வரை நிரந்தரமானதாக்கி இருந்தால், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா?” 28:72 மேலும், இவர்களிடம் கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் பகலை மறுமை நாள் வரை உங்களுக்கு நிரந்தரமானதாக ஆக்கியிருந்தால், நீங்கள் அமைதி பெறுகின்ற இரவை உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் கொண்டு வரமுடியும்? என்ன, உங்களுக்குப் புலப்படவில்லையா? 28:73 அவன் தன்னுடைய கருணையினால்தான் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருக்கின்றான். இரவில் நீங்கள் அமைதி பெற வேண்டும். மேலும், பகலில் அவனுடைய அருட் கொடையை நீங்கள் தேட வேண்டும்: அதனால் நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும் என்பதற்காக! 28:74 மேலும், அந்நாளை (இவர்கள் நினைவில் வைக்க வேண்டும்). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு இணை ஆனவர்கள் என்று நீங்கள் யாரைக் குறித்து எண்ணிக்கொண்டு இருந்தீர்களோ அவர்கள் எங்கே?” 28:75 மேலும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை வெளிக் கொணர்வோம்; பிறகு கூறுவோம்: “இப்போது கொண்டு வாருங்கள் உங்களுடைய ஆதாரத்தை!” அப்போது, உண்மை அல்லாஹ்வின் பக்கம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்த அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்து போகும்! 28:76 உண்மை யாதெனில், காரூன், மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்புமீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினார்கள். “நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. 28:77 அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப்பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்துவிடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உதவி செய்திருப்பது போல் நீயும் உதவி செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.” 28:78 அதற்கவன், “இவையனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன!” என்றான்அவனுக்கு முன்னால் அவனைவிட அதிக வலிமையையும் ஆள் பலத்தையும் பெற்றிருந்த சமூகங்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பது இவனுக்குத் தெரியாதா? மேலும், குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்கள் பற்றிக் கேட்கப்படுவதில்லை. 28:79 (ஒருநாள்) அவன் தன்னுடைய முழு அலங்கார மிடுக்குடன் தன் சமூகத்தார் முன்னிலையில் வந்தான். எவர்கள் உலக வாழ்க்கையை விரும்புவோராய் இருந்தனரோ அவர்கள் (அவனைப் பார்த்து) கூறலானார்கள்: “ஆஹா! காரூனுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று நமக்கும் கிடைத்திட வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியசாலிதான்!” 28:80 ஆயினும் ஞானம் வழங்கப்பட்டவர்கள் கூறலானார்கள்: “உங்கள் நிலை குறித்து வருந்துகின்றோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் நற்கூலி சிறந்ததாகும். மேலும், பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்குத்தான் இந்த நற்பாக்கியம் கிடைக்கும்.” 28:81 இறுதியில், நாம் அவனையும் அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்துவிட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை. தனக்குத்தானே உதவி செய்து கொள்ளக்கூடியவனாகவும் அவன் இல்லை. 28:82 நேற்று அவன் பெற்ற அந்தஸ்தை அடைய ஏக்கம் கொண்டிருந்த அதே ஆட்கள் இப்போது கூற ஆரம்பித்தார்கள்: “ஐயகோ! நாம் மறந்துவிட்டிருந்தோம், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான்; மேலும், தான் நாடுவோர்க்கு அளவோடு கொடுக்கின்றான் என்பதை! அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்திராவிட்டால், எங்களையும் பூமியில் புதைத்திருப்பான். ஐயகோ! நிராகரிப்பாளர்கள் வெற்றியடைவதில்லை என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டதே!” 28:83 அந்த மறுமை வீட்டையோ எவர்கள் உலகில் பெருமையடிக்கவும் அராஜகம் விளைவிக்கவும் விரும்பமாட்டார்களோ அவர்களுக்கே உரித்தானதாக்கி வைத்துள்ளோம். மேலும், இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது. 28:84 ஒருவர் நன்மையைக் கொண்டு வருவாராயின், அவருக்கு அதைவிடச் சிறந்த நன்மை இருக்கின்றது. எவரேனும் தீமையைக் கொண்டுவருவாராயின், தீமைகள் செய்வோருக்கு அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளின் கூலியே கொடுக்கப்படும். 28:85 (நபியே! உறுதியாய் அறிந்து கொள்வீராக!) இந்தக் குர்ஆனை உம்மீது கடமையாக்கியவன் உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான். (இம்மக்களிடம்) கூறுவீராக: “வழிகாட்டுதலைக் கொண்டு வந்திருப்பவன் யார்; வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்று என் அதிபதி நன்கு அறிவான்.” 28:86 உம்மீது வேதம் இறக்கியருளப்பட இருக்கின்றது என்பதை நீர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கின்றது). எனவே, நீர் நிராகரிப்பாளர்களுக்கு உதவி செய்பவராய் இருக்காதீர். மேலும், அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறக்கியருளப்பட்ட பிறகு, பின்னர் இறைநிராகரிப்பாளர்கள் அவற்றை விட்டு உம்மை ஒருபோதும் தடுத்துவிட வேண்டாம். உம் இறைவனின் பக்கம் அழைப்பு விடுப்பீராக! 28:87 மேலும், இணைவைப்போருடன் நீர் ஒருபோதும் சேர்ந்துவிட வேண்டாம். 28:88 மேலும், அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க வேண்டாம். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்து போகக்கூடியதாகும். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரித்தானது. மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
அத்தியாயம்  அல் அன்கபூத்  29 : 1-45 / 69
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
29:1 அலிஃப், லாம், மீம். 29:2 “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன? 29:3 உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை! 29:4 தீமைகளைச் செய்வோர், நம்மை மிகைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மிகவும் மோசமானதாகும். 29:5 அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்திருப்பவர்கள் (தெரிந்துகொள்ள வேண்டும்:) அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தே தீரும். மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 29:6 எவன் ஜிஹாத் செய்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அதனை செய்கின்றான். திண்ணமாக, உலக மக்களை விட்டு அல்லாஹ் தேவைகள் அற்றவன். 29:7 மேலும், எவர்கள் நம் பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களைவிட்டு அவர்களின் தீமைகளை நாம் களைந்துவிடுவோம். மேலும், நாம் அவர்களுக்கு அவர்களின் அழகிய செயல்களுக்குரிய கூலியையும் வழங்குவோம். 29:8 தன்னுடைய தாய் தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். ஆனால், எதை (அதாவது, எந்தக் கடவுள் எனக்கு இணையானது என்பதை) நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணையாக்கும்படி அவர்கள் (பெற்றோர்) உன்னை வற்புறுத்தினாலோ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே. என்னிடம்தான் நீங்கள் அனைவரும் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருந்தீர்களோ அவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன். 29:9 மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருப்பார்களோ அவர்களை நாம் திண்ணமாக, சான்றோர்களுடன் சேர்த்துவிடுவோம். 29:10 மனிதர்களில் சிலர் உள்ளனர். “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டால் மக்கள் தரும் இந்தச் சோதனையை அல்லாஹ்வுடைய தண்டனை போன்று கருதிவிடுகின்றார்கள். ஆனால், உம்முடைய இறைவனிடமிருந்து வெற்றியும் உதவியும் வந்துவிடுமாயின், இவர்களே கூறுவார்கள், “திண்ணமாக நாங்கள் உங்களுடன்தானே இருந்தோம்” என்று! உலக மக்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனன்றோ? 29:11 மேலும், அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; நம்பிக்கை கொண்டவர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்பதை! 29:12 இந்நிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம் “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள்; உங்களுடைய பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களின் பாவங்களிலிருந்து சிறிதளவுகூட இவர்கள் சுமந்து கொள்ளக் கூடியவர்களல்லர். நிச்சயமாக இவர்கள் பொய் சொல்கின்றார்கள். 29:13 ஆம்! இவர்கள் தங்களுடைய சுமைகளையும் சுமப்பார்கள்; தங்கள் சுமைகளுடன் வேறு பல சுமைகளையும் சுமப்பார்கள். மேலும், இவர்கள் புனைந்துரைக்கின்றவற்றைப் பற்றி மறுமை நாளில் திண்ணமாக விசாரிக்கப்படுவார்கள். 29:14 நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே வாழ்ந்தார். இறுதியில் அவர்கள் கொடுமை புரிந்து கொண்டிருக்கவே வெள்ளப் பிரளயம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. 29:15 பின்னர் நூஹையும், கப்பலில் ஏறியவர்களையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். மேலும், அதனை உலகத்தார் அனைவர்க்கும் ஒரு படிப்பினைக்குரிய சான்றாக்கிவிட்டோம். 29:16 மேலும், இப்ராஹீமை நாம் அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். 29:17 அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பூஜிப்பவை அனைத்தும் வெறும் சிலைகள்தாம்! மேலும், நீங்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ்வை விடுத்து யாரையெல்லாம் நீங்கள் வழிபடுகின்றீர்களோ அவர்கள் உண்மையில் உங்களுக்கு எந்த ஓர் உணவையும் அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. உணவை அல்லாஹ்விடமே கேளுங்கள். மேலும், அவனுக்கே அடிபணியுங்கள்; மேலும், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். 29:18 மேலும், நீங்கள் பொய்யென வாதிட்டால், உங்களுக்கு முன்னர் பல சமூகங்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றன. மேலும், தூதைத் தெளிவுற எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை.” 29:19 அல்லாஹ் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, அல்லாஹ்வுக்கு எளிதானதாகும். 29:20 இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், அல்லாஹ் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். 29:21 தான் நாடுபவர்களைத் தண்டிப்பான்; தான் நாடுவோர்க்குக் கருணை புரிவான். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். 29:22 பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை! 29:23 எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களையும் அவனை சந்திப்பதையும் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய அருளிலிருந்து நிராசை அடைந்துவிட்டிருக்கின்றார்கள். மேலும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது. 29:24 பிறகு, இப்ராஹீமுடைய சமூகத்தார் அளித்த பதில் இதைத் தவிர வேறு எதுவுமில்லை: “கொன்று விடுங்கள் அவரை; அல்லது எரித்து விடுங்கள் அவரை!” இறுதியில், அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டான். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன. 29:25 மேலும், அவர் கூறினார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வை விடுத்து உருவச்சிலைகளை நீங்கள் உங்களிடையே அன்பு செலுத்துவதற்குச் சாதனமாக்கிக் கொண்டுள்ளீர்கள். ஆயினும், மறுமை நாளில் நீங்கள் ஒருவரையொருவர் மறுத்துரைத்து, ஒருவரையொருவர் சபித்துக் கொள்வீர்கள்! மேலும், நெருப்பு உங்களின் இருப்பிடமாக அமையும். உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்.” 29:26 (அவ்வேளை) லூத் அவரை ஏற்றுக்கொண்டார். மேலும், இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் ஹிஜ்ரத்* செய்கின்றேன். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.” 29:27 மேலும், நாம் அவருக்கு இஸ்ஹாக் மற்றும் யஃகூப் போன்ற பிள்ளைகளை வழங்கினோம். மேலும், அவருடைய வழித்தோன்றல்களுக்கு தூதுத்துவத்தையும் வேதத்தையும் வழங்கினோம். உலகில் அவருக்குரிய கூலியை அவருக்கு அளித்தோம். மேலும், மறுமையில் திண்ணமாக அவர் உத்தமர்களோடு இருப்பார். 29:28 மேலும், நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “உங்களுக்கு முன்னர் உலக மக்களில் யாரும் செய்திராத மானக்கேடான செயலை நீங்கள் செய்கின்றீர்கள்; 29:29 என்னே உங்களின் இந்த நடத்தை! ஆண்களிடம் செல்கின்றீர்கள்; வழிப்பறி செய்கின்றீர்கள்; உங்கள் சபைகளில் வைத்தே தீயசெயல்களில் ஈடுபடுகின்றீர்கள்!” அவருடைய சமூகத்தாரிடம் இதைத் தவிர வேறெந்த பதிலும் இருக்கவில்லை: “கொண்டுவாரும் அல்லாஹ்வின் தண்டனையை, நீர் உண்மை யாளராயின்!” 29:30 லூத் வேண்டினார்: “என் இறைவா! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு எதிராக நீ எனக்கு உதவி புரிவாயாக!” 29:31 மேலும், நம்முடைய தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தபோது, அவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் இவ்வூர் மக்களை அழிக்கப்போகின்றோம். ஏனெனில், இங்குள்ளவர்கள் பெரும் கொடுமை புரிபவர்களாகி விட்டார்கள்.” 29:32 அதற்கு இப்ராஹீம், “அங்கு லூத் இருக்கின்றாரே!” என்றார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அங்கு யார் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். திண்ணமாக, அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள்.” 29:33 பின்னர், நம்முடைய தூதர்கள் லூத்திடம் வந்தபோது அவர்களுடைய வருகையால் அவர் மிகவும் பதற்றமடையவும், மனம் நொந்துவிடவும் செய்தார். அவர்கள் கூறினார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நாம் உம்மையும் உம்முடைய குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்வோம்; உம்முடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள். 29:34 நாம் இவ்வூர் மக்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்குபவர்களாவோம்; இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீய செயல்களின் விளைவாக!” 29:35 நாம் அவ்வூரின் தெளிவான தொரு சான்றை விட்டு வைத்திருக்கின்றோம், அறிந்துகொள்ளக் கூடிய மக்களுக்காக! 29:36 மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷûஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். இறுதிநாளை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். மேலும், பூமியில் அநீதி இழைத்துக்கொண்டு, குழப்பம் விளைவிப்பவர்களாய்த் திரியாதீர்கள்.” 29:37 ஆனால், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே குப்புற வீழ்ந்து மடிந்தார்கள். 29:38 மேலும், ஆத், ஸமூத் இனத்தார்களையும் நாம் அழித்தோம். அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். மேலும், அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காண்பித்தான். மேலும், அவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாய் இருந்தும்கூட, அவன் நேர்வழியினின்று அவர்களைப் பிறழச் செய்துவிட்டான். 29:39 மேலும், காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் நாம் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். ஆயினும், அவர்கள் பூமியில் தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள். உண்மையில், அவர்கள் வென்றுவிடுபவர்களாய் இருக்கவில்லை. 29:40 இறுதியில், ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம். பிறகு, அவர்களில் சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை நாம் பூமியில் புதைத்துவிட்டோம். அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்துவிட்டோம். அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக் கொண்டிருந்தார்கள். 29:41 எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! 29:42 அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். 29:43 மக்கள் புரிந்துகொள்வதற்காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞானமுடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்துகொள்கின்றார்கள். 29:44 அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டே படைத்திருக்கின்றான். திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கின்றது. 29:45 (நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)