அத்தியாயம்  அந்நம்ல்  27 : 56-93 / 93
27:56 ஆயினும், அவருடைய சமூகத்தார் இதைத் தவிர வேறு எந்த பதிலையும் கூறவில்லை; அது இதுதான்: “வெளியேற்றுங்கள் லூத்துடைய குடும்பத்தாரை, உங்களுடைய ஊரைவிட்டு! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள்!” (என்று எள்ளினர்). 27:57 இறுதியில், லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கியவளாகிவிட வேண்டுமென நாம் முடிவு செய்துவிட்டிருந்தோம். 27:58 மேலும், பொழியச் செய்தோம் அம்மக்களின மீது ஒரு மழையை! எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு அது மிகவும் கெட்ட மழையாய் இருந்தது! 27:59 (நபியே!) நீர் கூறும்: “புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! மேலும், சாந்தி உண்டாகுக, அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது!” (இவர்களிடம் கேளும்:) “அல்லாஹ் மேலானவனா அல்லது அவனுடன் இந்த மக்கள் இணைவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் மேலானவையா?” 27:60 வானங்களையும், பூமியையும் படைத்தவனும் மேலும், உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்தவனும் பிறகு, அதன் மூலம் அழகான தோட்டங்களை வளரச் செய்தவனும் யார்? அவற்றின் மரங்களை முளைக்கச் செய்வதற்கு உங்களால் இயலாதிருந்ததே! அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? (இல்லை!) மாறாக, இதே மக்கள்தாம் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். 27:61 மேலும், பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாய் இருக்கின்றார்கள். 27:62 துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்! 27:63 தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? மேலும், தன்னுடைய அருளுக்கு முன்னர் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளேனும் (இப்பணியைச் செய்துகொண்டு) இருக்கின்றதா? அல்லாஹ் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான்; இவர்கள் செய்கின்ற இணைவைப்புச் செயல்களை விட்டு! 27:64 முதன் முறையாய்ப் படைக்கின்றவனும் பிறகு, மீண்டும் படைக்கப் போகின்றவனும் யார்? மேலும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணியில் பங்கு கொண்டு) உள்ளதா? கூறுவீராக: “கொண்டு வாருங்கள் உங்கள் அத்தாட்சியை, நீங்கள் உண்மையாளர்களாய் இருப்பின்!” 27:65 இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார். மேலும், (உங்களுடைய கடவுளர்களான) அவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அறிவதில்லையே!” 27:66 உண்மை யாதெனில், மறுமையைப் பற்றிய அறிவு இம் மக்களை விட்டு மறைந்தே போய்விட்டது. இல்லை, இவர்கள் அதைப் பற்றிய சந்தேகத்தில் உழல்கின்றார்கள்! இன்னும் சொல்வதானால், மறுமையைப் பற்றி இவர்கள் குருடர்களாயிருக்கின்றார்கள். 27:67 மேலும், இந்நிராகரிப்போர் கூறுகின்றார்கள்: “நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிப் போய்விட்டால் நாங்கள் உண்மையிலேயே மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா? 27:68 இந்த விஷயங்கள் பற்றி எங்களுக்கு (அதிகம்) எச்சரிக்கப்பட்டுள்ளது; முன்னர் எங்கள் மூதாதையர்களும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் இவை முன்னோர்களின் காலத்திலிருந்து கேள்விப்பட்டு வருகின்ற வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!” 27:69 கூறுவீராக: “சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்.” 27:70 (நபியே!) இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். இவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் நீர் மனக்கஷ்டமும் அடையாதீர்! 27:71 இவர்கள் கேட்கின்றனர்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த எச்சரிக்கை எப்போது நிறைவேறும்?” 27:72 நீர் கூறும்: “எந்த ஒரு தண்டனைக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்களோ அதன் ஒரு பகுதி உங்களுக்கு நெருக்கமாக வந்து விட்டிருந்தாலும் அதில் வியப்பொன்றுமில்லை!” 27:73 உண்மையில் உம் அதிபதி மக்களின் மீது பெரிதும் அருள் புரிபவனாக இருக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. 27:74 அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்திருக்கின்றவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றவற்றையும் திண்ணமாக, உம் இறைவன் நன்கறிகின்றான். 27:75 வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை. 27:76 உண்மை இதுவே: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்களின் உண்மை நிலையை அவர்களுக்கு இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது! 27:77 மேலும், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றது. 27:78 (இதேபோன்று) திண்ணமாக, உம் இறைவன் இந்த மக்களிடையேயும் தன்னுடைய கட்டளையால் தீர்ப்பு வழங்குவான். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். 27:79 எனவே (நபியே!) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப் பீராக! திண்ணமாக, நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர்! 27:80 இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. புறங்காட்டியோடும் செவிடர்களுக்கும் (உம்முடைய) அழைப்பை எடுத்துரைக்க முடியாது. 27:81 குருடர்களை வழிகேட்டிலிருந்து மீட்டு நேர்வழியில் சேர்த்திடவும் உம்மால் முடியாது! எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும், கீழ்ப்படிபவர்களாயும் விளங்குகின்றார்களோ அவர்களையே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும். 27:82 மேலும், அவர்கள் மீது நம்முடைய ஆணை நிறைவேறும் நேரம் வந்துவிட்டால் நாம் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்முடைய வசனங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருந்தார்கள் என்று அது அவர்களிடம் எடுத்துக்கூறும். 27:83 மேலும், சற்று சிந்தித்துப் பாருங்கள்; அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ அவர்களை படைபடையாகத் திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, அவர்கள் (வகை மற்றும் தகுதியைப் பொறுத்துப் பல படித்தரங்களில்) முறைப்படுத்தப்படுவார்கள். 27:84 இவ்வாறாக, அவர்கள் அனைவரும் வந்துவிடும்போது (இறைவன் அவர்களிடம்) வினவுவான்: “என்னுடைய சான்றுகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் அவற்றைப் பொய்யென்று கூறினீர்களா? இல்லை எனில், நீங்கள் வேறு என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?” 27:85 மேலும், அவர்கள் கொடுமை செய்த காரணத்தினால் வேதனை பற்றிய கட்டளை அவர்கள் மீது நிறைவேற்றப்படும். அப்போது, அவர்களால் எதுவும் பேச முடியாது. 27:86 இரவை அவர்களுக்கு நிம்மதி அளிக்கக் கூடியதாகவும், பகலைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இறைநம்பிக்கை கொண்ட சமூகத்தினர்க்கு இவற்றில் அநேக சான்றுகள் இருந்தன! 27:87 மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது, வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை அல்லாஹ் காப்பாற்ற நாடுவானோ அவர்களைத் தவிர! மேலும், அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள். 27:88 (இன்று) நீர் மலைகளைப் பார்க்கும்போது அவை நன்கு நிலைகொண்டிருப்பதாகக் கருதுகின்றீர். ஆனால் (அன்றைய நாளில்) அவை மேகங்களைப் போன்று பறந்தோடிக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவினால் செம்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய பேராற்றலின் விந்தை இது! நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை திண்ணமாக அவன் நன்கறிந்தவன். 27:89 எவர் நன்மையைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு அதைவிடச் சிறந்த பிரதிபலன் கிடைக்கும். அத்தகையவர்கள் அந்நாளின் திகிலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். 27:90 ஆனால், எவர்கள் தீமையைக் கொண்டு வருகின்றார்களோ அவர்கள் அனைவரும் முகங்குப்புற நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். நீங்கள் இதைத் தவிர ஏதேனும் கூலி பெறுவீர்களா என்ன செய்த வினைக்கு ஏற்பவே அனுபவிப்பதைத் தவிர? 27:91 (நபியே! இவர்களிடம் கூறும்:) “எனக்கு இவ்வாறுதான் கட்டளை இடப்பட்டுள்ளது: இந்த (மக்கமா) நகரின் அதிபதிக்கு கீழ்ப்படியுங்கள்; அவனே அதை சங்கை மிக்கதாக ஆக்கினான். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் அவனே உரிமையாளனாய் இருக்கின்றான். மேலும், நான் அடிபணிந்தவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றும், 27:92 இந்தக் குர்ஆனை ஓதிக் காண்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” எவர் நேர்வழியை மேற்கொள்கின்றாரோ அவர் தம்முடைய நன்மைக்காகவே நேர்வழியை மேற்கொள்கின்றார். மேலும், எவன் வழிபிறழ்ந்து போகின்றானோ அவனிடம் கூறிவிடுவீராக: “நான் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் மட்டுமே இருக்கின்றேன்.” 27:93 மேலும், (இம்மக்களிடம்) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றைக் கவனிக்காமல் இல்லை!
அத்தியாயம்  அல்கஸஸ்  28 : 1-50 / 88
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
28:1 தாஸீம்மீம். 28:2 இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும். 28:3 நம்பிக்கை கொள்ளும் மக்களின் நலனுக்காக மூஸா மற்றும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில செய்திகளை மிகத் துல்லியமாக உங்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம். 28:4 திண்ணமாக, ஃபிர்அவ்ன் பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான். அதில் வசிப்பவர்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான்; அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டுவிட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரைச் சேர்ந்தவனாக இருந்தான். 28:5 மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம். 28:6 மேலும், அவர்களின் மூலமாக ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம். 28:7 மேலும், நாம் மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம், “இக் குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி, அதன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நீர் அஞ்சினால் அதனை ஆற்றில் விட்டுவிடும். நீர் யாதொரு அச்சமும், கவலையும் கொள்ளவேண்டாம். திண்ணமாக நாம், அவரை உம்மிடமே திரும்பக் கொண்டுவந்துவிடுவோம். மேலும், அவரைத் தூதர்களில் ஒருவராயும் ஆக்குவோம்!” 28:8 இறுதியில், ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை (ஆற்றிலிருந்து) கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமையவேண்டும் என்பதற்காக! உண்மையில் ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படையினரும் (தங்கள் திட்டத்தில்) பெரிதும் தவறிவிட்டிருந்தார்கள். 28:9 ஃபிர்அவ்னுடைய மனைவி (அவனிடம்) கூறினாள்: “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாய் உள்ளது. நீங்கள் இதனைக் கொன்றுவிடாதீர்கள். இக்குழந்தை நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இதனை நாம் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் (விளைவை) உணராதிருந்தார்கள். 28:10 அங்கே.. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. (நமது வாக்குறுதியின்மீது) நம்பிக்கை கொள்வோரில் அவரும் ஒருவராக வேண்டும் என்பதற்காக, நாம் அவருடைய உள்ளத்தை உறுதிப்படுத்தவில்லையானால் நிச்சயம் அக்குழந்தையின் இரகசியத்தை அவர் வெளிப்படுத்த முனைந்திருப்பார். 28:11 அவர் அக்குழந்தையின் சகோதரியிடம் கூறினார்: “அதைப் பின்தொடர்ந்தே செல்!” அவ்வாறே (எதிரிகள்) அறிந்து கொள்ளாத வகையில் தூரத்திலிருந்து அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 28:12 மேலும், இதர பெண்களின் மார்பகங்களிலிருந்து பால் அருந்துவதை விட்டு முன்னரே, அக்குழந்தையைத் தடுத்திருந்தோம். (இந்நிலையைக் கவனித்து) அச்சிறுமி கூறினாள்: “இக்குழந்தையைப் பரிபாலித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீட்டாரைப்பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” 28:13 இவ்வாறு நாம் மூஸாவை அவருடைய தாயாரிடம் திரும்பக் கொண்டு வந்தோம்; அவர் கண்குளிர்ந்து, கவலை மறந்திருப்பதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதென்று அறிந்து கொள்வதற்காகவும்தான்! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை அறிவதில்லை. 28:14 மேலும், மூஸா வாலிபத்தை அடைந்து முழு வளர்ச்சியும் பெற்றபோது, நாம் அவருக்கு நுண்ணறிவையும் ஞானத்தையும் வழங்கினோம். நன்மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம். 28:15 (ஒருநாள்) நகர மக்கள் கவனக்குறைவாய் இருந்தபோது அவர் நகரினுள் நுழைந்தார். அங்கு இருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவன் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவன். மற்றவன் அவருடைய எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவருடைய சொந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன், எதிர் சமுதாயத்தைச் சேர்ந்தவனுக்கு எதிராகத் தனக்கு உதவும்படி இவரை அழைத்தான். மூஸா அவனை ஓங்கிக் குத்தினார்; அவன் கதையை முடித்தார். (இவ்வாறு நிகழ்ந்ததும்) மூஸா கூறினார்: “இது ஷைத்தானின் செயல்; அவன் கடும் பகைவனும், வெளிப்படையாக வழி கெடுப்பவனுமாவான்.” 28:16 மூஸா இறைஞ்சினார்: “என் இறைவா! என்மீது நானே கொடுமை இழைத்துக் கொண்டேன். என்னை மன்னித்தருள்வாயாக!” அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு வழங்கினான். அவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் கிருபை புரிபவனாகவும் இருக்கின்றான். 28:17 மூஸா உறுதியாகக் கூறினார்: “என் இறைவா! நீ என்மீது அருளிய இந்த உபகாரத்திற்காக இனி ஒருபோதும் நான், குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன்.” 28:18 மறுநாள் அதிகாலையில் அஞ்சியபடியும் (நாற்புறங்களிலிருந்து) அபாயத்தை உணர்ந்தவாறும் நகரில் அவர் போய்க் கொண்டிருந்தார். அப்போது நேற்றைய தினம் அவரை உதவிக்கு அழைத்த அதே மனிதன் இன்றும் உதவிக்காக அழைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றார். “நிச்சயம் நீ வெளிப்படையான வழிகேடன்தான்” என்று மூஸா அவனை நோக்கிக் கூறிவிட்டு, 28:19 தங்கள் எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்த மனிதனைத் தாக்க விரும்பியபோது அவன் உரக்கக் கூறினான்: “மூஸாவே! நேற்று ஒருவனை நீர் கொலை செய்தது போல இன்று என்னையும் கொலை செய்யலாமென்று கருதுகின்றீரா? நீர் இந்த நாட்டில் அடக்குமுறையாளராய் இருக்க நினைக்கின்றீரே தவிர, சீர்திருத்தவாதியாய்த் திகழ விரும்பவில்லை.” 28:20 (இதன் பின்னர்) நகரின் கோடியிலிருந்து ஒருவர் ஓடிவந்து கூறினார்: “மூஸாவே! தலைவர்கள் உம்மைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, நீர் இங்கிருந்து வெளியேறிவிடும். நான் உமக்கு நலம் நாடுபவனாய் இருக்கின்றேன். 28:21 (இச்செய்தியைக் கேட்டதும்) மூஸா அஞ்சியவராய் முழு எச்சரிக்கையோடு வெளியேறிவிட்டார். மேலும் இறைஞ்சினார்: “என் இறைவா! என்னை கொடுமையாளர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!” 28:22 மூஸா (எகிப்திலிருந்து வெளியேறி) மத்யனை நோக்கித் திரும்பியபோது “என்னுடைய இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டக்கூடும்!” என்று கூறினார். 28:23 மேலும், அவர் மத்யனுடைய கிணற்றுக்கு அருகில் வந்தபோது, அங்கு மக்கள் பலர் தங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களைவிட்டு சற்று விலகி ஒருபுறம் இரண்டு பெண்கள் தம்முடைய கால்நடைகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருப்பதையும் கண்டார். மூஸா (அப்பெண்களிடம்) “உங்களுடைய பிரச்னை என்ன?” என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள்: “இந்த இடையர்கள் (தங்கள் கால்நடைகளை) திரும்ப ஓட்டிச் செல்லும் வரை (எங்களுடைய கால்நடைகளுக்கு) எங்களால் தண்ணீர் புகட்ட முடிவதில்லை. மேலும், எங்கள் தந்தையோ மிகவும் வயதானவராய் இருக்கின்றார்” 28:24 (இதைக் கேட்ட) மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டினார். பிறகு, ஒரு நிழலில் போய் அமர்ந்து கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றேன்” 28:25 (சிறிது நேரம்கூட செல்லவில்லை, அதற்குள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி நாணத்தோடு அவரிடம் நடந்து வந்து கூறினாள்: “என்னுடைய தந்தை உங்களை அழைக்கின்றார். நீங்கள் எங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியைத் தங்களுக்குத் தருவதற்காக!” மூஸா அவரிடம் வந்தார். மேலும், தனக்கு நேர்ந்த அனைத்து நிலைமைகளையும் அவரிடம் எடுத்துரைத்தபோது அவர் கூறினார்: “அஞ்சாதீர்! கொடுமையாளர்களிடமிருந்து நீர் தப்பித்துவிட்டீர்!” 28:26 அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையிடம் கூறினாள்: “என் தந்தையே! இவரைப் பணியாளாய் வைத்துக் கொள்ளுங்கள். எவர் வலிமை மிக்கவராயும் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்திக்கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்.” 28:27 அப்பெண்ணின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருத்தியை உமக்குத் திருமணம் செய்து தர நான் விரும்புகின்றேன். நீர் எட்டாண்டு காலம் எனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்கின்ற நிபந்தனையின் பேரில்! ஆனால், நீர் பத்து ஆண்டாக நிறைவு செய்தால் அது உம்முடைய விருப்பம்! 28:28 நான் உமக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால், என்னை நல்லவராக நீர் காண்பீர்.” அதற்கு மூஸா பதிலளித்தார்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் இந்த விஷயம் முடிவாகிவிட்டது. இவ்விரு தவணைகளில் எதனை நான் நிறைவேற்றினாலும் (அதன் பிறகு) எவ்விதத்திலும் எனக்கு சிரமம் தரக்கூடாது. மேலும், நாம் பேசித் தீர்மானித்திருக்கின்ற இந்த ஒப்பந்தத்துக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.” 28:29 மூஸா தவணையை பூர்த்தியாக்கி விட்டுத் தம் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபோது ‘தூர்’ அருகில் நெருப்பைக் கண்டார். அவர் தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “நில்லுங்கள்! நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் அங்கிருந்து ஏதேனும் செய்தியை அறிந்து வரலாம்; அல்லது அந்த நெருப்பிலிருந்து ஒரு கொள்ளியைக் கொண்டு வரலாம். அதன் மூலம் நீங்கள் குளிர்காயலாம்.” 28:30 அவர் அங்கு சென்றதும் பள்ளத்தாக்கின் வலக்கரையில் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து உருவிலி (அசரீரி) எழுந்தது: “மூஸாவே! நான்தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி”. 28:31 மேலும், (கட்டளையிடப்பட்டது) “உம்முடைய கைத்தடியைக் கீழே போடும்!” அத்தடி பாம்பைப்போல் அசைந்து நெளிவதை மூஸா பார்த்தபோது, பின் நோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. (அப்போது சொல்லப்பட்டது:) “மூஸாவே! திரும்பி வாரும்! அஞ்ச வேண்டாம். நீர் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவராவீர். 28:32 உம்முடைய கையை உம் சட்டையின் நெஞ்சுப் பகுதியில் புகுத்தும்! அது பிரகாசிக்கக்கூடியதாய் வெளிப்படும், எவ்வித மாசுமருவுமின்றி! மேலும், அச்சத்தைப் போக்குவதற்காக உம்முடைய தோள்களை நெருக்கமாக வையும். இவை இரண்டும் இறைவனிடமிருந்துள்ள தெளிவான சான்றுகளாகும், ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அவைப் பிரமுகர்களிடமும் சமர்ப்பிப்பதற்காக! அவர்கள் அறவே கீழ்ப்படியாத மக்களாக இருக்கின்றார்கள்.” 28:33 மூஸா கூறினார்: “என் அதிபதியே! நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன். எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்னு நான் அஞ்சுகின்றேன். 28:34 மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பிவைப்பாயாக! அவர் எனக்குத் துணையிருப்பார். என்னைப் பொய்யன் என்று அம்மக்கள் மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.” 28:35 இறைவன் கூறினான்: “நாம் உம்முடைய சகோதரர் மூலம் உம்முடைய கையைப் பலப்படுத்துவோம். மேலும், நாம் உங்களிருவருக்கும் எத்தகைய அதிகாரத்தை வழங்குவோம் என்றால், உங்களுக்கு அவர்கள் எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. நம்முடைய சான்றுகளின் பலத்தினால் நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுகின்றவர்களுமே வெற்றியார்களாய்த் திகழ்வீர்கள்!” 28:36 பிறகு, மூஸா தெளிவான சான்றுகளோடு அம்மக்களிடம் வந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “இது புனையப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை. எங்களுடைய முன்னோர்களின் காலத்தில்கூட இதனை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.” 28:37 அதற்கு மூஸா பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் தன்னிடமிருந்து நேர்வழியைப் பெற்று வந்தவரின் நிலை என்னவென்பதையும், இறுதி முடிவு எவருக்கு நல்லவிதமாக அமையும் என்பதையும் நன்கு அறிவான். உண்மையாக, கொடுமைக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.” 28:38 மேலும், ஃபிர்அவ்ன் கூறினான்: “அவையோரே! உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹாமானே! களிமண்ணைச் சுட்டு கற்கள் தயாரித்து எனக்காக ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பும். ஒருவேளை, அதன் மீதேறி நான் மூஸாவுடைய இறைவனைப் பார்க்கக்கூடும். திண்ணமாக, நான் அவரைப் பொய்யர் என்றே கருதுகின்றேன்.” 28:39 அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றித் தற்பெருமை கொண்டனர். மேலும், அவர்கள் எப்போதும் நம் பக்கம் திரும்பி வரவேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டனர். 28:40 இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம்; அவர்களைக் கடலில் சிதறடித்தோம். இப்போது பார்த்துக் கொள்ளுங்கள், அந்தக் கொடுமைக்காரர்களின் கதி என்னவாயிற்று என்பதை! 28:41 நாம் அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கும் தலைவர்களாக ஆக்கினோம். மேலும், மறுமைநாளில் எங்கிருந்தும் எவ்வித உதவியும் அவர்களால் பெறமுடியாது. 28:42 இவ்வுலகில் சாபம் அவர்களைத் தொடரும்படிச் செய்தோம். மேலும், மறுமைநாளில் அவர்கள் மிகவும் அருவருப்பான நிலைக்கு ஆளாவார்கள். 28:43 மேலும், முந்தைய தலைமுறையினரை அழித்த பிறகு, நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் மக்களுக்கு அறிவொளி ஊட்டக்கூடியதாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் கருணையாகவும் அது திகழ்ந்தது மக்கள் படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக! 28:44 மேலும் (நபியே!) நாம் மூஸாவுக்கு இந்த ஷரீஅத் சட்டத்தை வழங்கியபோது நீர் அந்த மேற்குப் பகுதியில் இருக்கவில்லை. சாட்சியாளர்களில் ஒருவராயும் இருக்கவில்லை. 28:45 ஆயினும், அதன் பின்னர் (உமது காலம் வரை) நாம் பற்பல தலைமுறையினரைத் தோற்றுவித்திருக்கின்றோம். மேலும், அவர்கள் மீது காலங்கள் பல உருண்டு சென்றன. மேலும், நீர் மத்யன்வாசிகளிடையே, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காண்பிப்பவராயும் இருக்கவில்லை. ஆயினும் (அக்காலத்தில் நிகழ்ந்த இந்தச் செய்திகளையெல்லாம்) அனுப்பித் தருவது நாம்தான்! 28:46 மேலும், நாம் (முதன்முறையாக மூஸாவை) அழைத்தபோதும் ‘தூர்’ அருகில் நீர் இருக்கவில்லை. ஆயினும், (இந்த விவரங்களை இவ்வாறு உமக்குத் தெரியப்படுத்துவது) உம் இறைவனின் கருணையாகும்; எதற்காகவெனில், உமக்கு முன்பு எந்த எச்சரிக்கையாளரும் வந்திராத இந்தச் சமூகத்தினரை அவர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு நீர் எச்சரிக்கை செய்வதற்காக! 28:47 மேலும், (இவ்வாறு நாம் செய்தது) அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக ஏதேனும் துன்பம் அவர்களுக்கு வந்தால் அவர்கள், “எங்கள் இறைவனே! நீ யாரேனும் ஒரு தூதரை எங்களிடம் ஏன் அனுப்பவில்லை? நாங்கள் உன்னுடைய வசனங்களைப் பின்பற்றி நம்பிக்கையாளர்களோடு சேர்ந்திருப்போமே!” என்று கூறாமல் இருப்பதற்காகத்தான். 28:48 ஆனால், நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கேட்கலானார்கள்: “மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததைப் போன்று இவருக்கு ஏன் வழங்கப்பட வில்லை?” முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததை இவர்கள் நிராகரித்திடவில்லையா? இவர்கள் கூறினார்கள்: “இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுகின்ற இரு சூனியங்கள்.” மேலும், கூறினார்கள்: “நாங்கள் எதையும் நம்பக்கூடியவர்களல்லர்.” 28:49 (நபியே! இவர்களிடம்) கூறுங்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின், இவ்விரண்டையும் விட அதிக அளவு நேர்வழிகாட்டும் வேதம் ஒன்றை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவாருங்கள். நான் அதனைப் பின்பற்றுகின்றேன்.” 28:50 உம்முடைய இந்தக் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றவில்லையாயின், அவர்கள் தங்களின் மன இச்சைகளைத்தான் பின்பற்றுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளும். மேலும், அல்லாஹ்வின் வழிகாட்டலின்றி தன்னுடைய மன இச்சைகளை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றவனைவிட வழிகெட்டவன் யார்? இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)