அத்தியாயம்  அஷ்ஷûஅரா  26 : 111-227 / 227
26:111 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே!” 26:112 அதற்கு நூஹ் கூறினார்: “அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்? 26:113 அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பிலுள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா? 26:114 நம்பிக்கை கொள்வோரை விரட்டிவிடுவது என் பணியன்று. 26:115 நானோ, தெளிவாக எச்சரிக்கை செய்பவனாயிருக்கின்றேன்.” 26:116 அதற்கு அவர்கள், “நூஹே! நீர் இதனைத் தவிர்த்துக்கொள்ளாவிடில், கல்லடிபட்டு விரட்டப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்” என்று கூறினார்கள். 26:117 நூஹ் இறைஞ்சினார்: “என் இறைவனே! என் சமூகத்தார் என்னைப் பொய்யனென்று தூற்றிவிட்டனர். 26:118 இனி எனக்கும் அவர்களுக்குமிடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!” 26:119 இறுதியில், நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம். 26:120 பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை மூழ்கடித்துவிட்டோம். 26:121 திண்ணமாக, இதில் ஒரு சான்று உள்ளது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர். 26:122 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:123 ஆத் சமூகத்தினர் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். 26:124 அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? 26:125 நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன். 26:126 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 26:127 நான் இப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. 26:128 என்ன இது! உயரமான இடங்களிலெல்லாம் வீணாக நினைவுக் கட்டடங்களை நீங்கள் எழுப்புகின்றீர்கள் 26:129 பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல! 26:130 மேலும், நீங்கள் எவரையேனும் பிடித்தால் கொடூரமாகப் பிடிக்கிறீர்கள். 26:131 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 26:132 நீங்கள் அறிந்திருப்பவற்றையெல்லாம் எவன் உங்களுக்கு வழங்கினானோ, அவனுக்கு அஞ்சுங்கள்! 26:133 அவன் உங்களுக்குக் கால்நடைகளையும், பிள்ளைகளையும், 26:134 தோட்டங்களையும், நீரூற்றுகளையும் அருளினான். 26:135 நான் உங்கள் விஷயத்தில் ஒரு மாபெரும் நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்!” 26:136 இதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் நல்லுரை கூறினாலும் கூறாவிட்டாலும் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான். 26:137 இந்த விஷயங்கள் எல்லாம் தொன்றுதொட்டே கூறப்பட்டு வருபவைதாம். 26:138 மேலும், நாங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களல்லர்!” 26:139 இறுதியில் அவர்கள் அவரைப் பொய்யர் எனக் கூறிவிட்டார்கள். நாம் அவர்களை அழித்துவிட்டோம்.திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். 26:140 மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:141 ஸமூத் சமுதாயத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர். 26:142 அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? 26:143 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன். 26:144 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 26:145 இப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. 26:146 நீங்கள் இங்குள்ள அனைத்துப் பொருள்களுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்வதற்கு விட்டு வைக்கப்படுவீர்களா என்ன? 26:147 (அதாவது) இந்தத் தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும், 26:148 பயிர்நிலங்களிலும் கனிந்த குலைகளையுடைய பேரீச்சந் தோப்புகளிலும்! 26:149 மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள். 26:150 அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்! 26:151 மேலும், வரம்பு மீறி வாழ்பவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள். 26:152 அவர்களோ பூமியில் அராஜகம் விளைவிக்கின்றார்கள். இன்னும், எவ்விதச் சீர்திருத்தமும் செய்வதில்லை.” 26:153 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட மனிதராகவே இருக்கின்றீர். 26:154 நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீர் உண்மையாளராயின் ஏதேனுமொரு சான்றினைக் கொண்டு வாரும்!” 26:155 அதற்கு ஸாலிஹ் கூறினார்: “இதோ! ஒரு பெண் ஒட்டகம்; (ஒரு நாள்) இது தண்ணீர் அருந்தட்டும். மற்றொரு நாள் நீங்களெல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். 26:156 இதற்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள்; அப்படி தீங்கு இழைத்தீர்களானால் ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்!” 26:157 ஆயினும், அவர்கள் அதன் கால் நரம்புகளை வெட்டி விட்டார்கள். பிறகு வருந்தக்கூடியவர்களாகி விட்டார்கள். 26:158 அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது! நிச்சயமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். 26:159 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:160 லூத்தின் சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யரெனத் தூற்றினார்கள். 26:161 அவர்களிடம் அவர்களின் சகோதரர் லூத் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? 26:162 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதரா வேன். 26:163 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்! 26:164 நான் இப்பணிக்காக உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. 26:165 உலகப் படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் செல்கின்றீர்களா? 26:166 மேலும், உங்கள் மனைவியரிடம் உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருப்பனவற்றை விட்டுவிடுகின்றீர்களா? உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் மக்களாவீர்கள்!” 26:167 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளாவிடில், (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்படுகிறவர்களில் நீரும் சேர்க்கப்படுவீர்!” 26:168 அவர் கூறினார்: “உங்கள் தீய செயல்களைக் கண்டு வெறுப்பவர்களில் நானும் ஒருவன். 26:169 என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” 26:170 இறுதியில், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றிக் கொண்டோம்; 26:171 பின்னால் தங்கிவிட்டவர்களோடு இருந்த ஒரு கிழவியைத் தவிர! 26:172 பிறகு, மற்றவர்களை அழித்து விட்டோம். 26:173 இன்னும் அவர்கள் மீது பொழிய வைத்தோம், ஒரு மழையை! அது மிக மோசமான மழையாக இருந்தது. அதுவோ எச்சரிக்கப்பட்டவர்கள் மீது இறங்கியது. 26:174 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். 26:175 மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:176 அய்க்காவாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர். 26:177 அவர்களிடம் ஷûஐப் கூறியதை நினைவு கூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? 26:178 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன். 26:179 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 26:180 நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கோரவில்லை. எனது கூலியோ அனைத்துலகங்களின் அதிபதியிடமே உள்ளது. 26:181 நிறைவாக அளந்து கொடுங்கள்; யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்! 26:182 மேலும், சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். 26:183 மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள். 26:184 மேலும், எவன் உங்களையும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தாரையும் படைத்தானோ அவனுக்கு அஞ்சுங்கள்.” 26:185 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரே ஆவீர்! 26:186 மேலும், நீர் எங்களைப் போன்று ஒரு மனிதரேயன்றி வேறல்லர் மேலும், நாங்கள் உம்மை முற்றிலும் பொய்யரென்றே கருதுகின்றோம். 26:187 நீர் உண்மையாளராயின் வானத்தின் சில பகுதிகளை எங்கள்மீது விழச்செய்வீராக!” 26:188 அதற்கு ஷûஐப் கூறினார்: “நீங்கள் செய்துகொண்டிருப்பவை பற்றி என் இறைவன் நன்கறிகின்றான்.” 26:189 அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினர். இறுதியில் குடை நாளின் வேதனை அவர்களைப் பீடித்துக்கொண்டது. திண்ணமாக, அது பயங்கரமான ஒரு நாளின் வேதனையாய் இருந்தது! 26:190 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். 26:191 மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:192 மேலும், திண்ணமாக, இது அகிலங்களின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும். 26:193 நம்பிக்கைக்குரிய ரூஹ்* இதனை எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கின்றது 26:194 உமது உள்ளத்தின் மீது! எதற்காகவெனில் (அல்லாஹ்வின் சார்பில் மனிதர்களை) எச்சரிக்கை செய்பவர்களுள் நீரும் ஒருவராய் ஆக வேண்டும் என்பதற்காக! 26:195 தெள்ளத் தெளிந்த அரபி மொழியில். 26:196 மேலும், முன்னோர்களின் வேதங்களிலும், திண்ணமாக இது உள்ளது. 26:197 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த மக்(காவாசி)களுக்கு ஒரு சான்றாக இல்லையா? 26:198 (ஆயினும், இவர்களின் பிடிவாதமான நடத்தை எவ்வாறுள்ளது என்றால்) நாம் இதனை அரபியரல்லாத எவர் மீதாவது இறக்கி வைத்திருந்தால், 26:199 மேலும், அவர் (தெள்ளிய அரபி வேதமாகிய) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினால் அப்போதும் இவர்கள் அதனை நம்பக்கூடியவர்களாய் இருக்கமாட்டார்கள். 26:200 இதேபோன்று நாம் இ(ந்நல்லுரை)தனை குற்றம் புரிந்தோரின் இதயங்களில் செலுத்தி விடுகின்றோம். 26:201 துன்புறுத்தும் வேதனையை அவர்கள் கண்ணால் காணாத வரை அவர்கள், இதன் மீது நம்பிக்கை கொள்வதில்லை! 26:202 பிறகு, அவர்கள் உணராதிருக்கும் நிலையில் அது அவர்கள் மீது திடீரென வந்துவிழும்! 26:203 அப்போது அவர்கள் புலம்புவார்கள்: “எங்களுக்குச் சற்று அவகாசம் கிடைக்காதா?” 26:204 இவர்கள் நம்முடைய வேதனை சீக்கிரம் வரவேண்டும் என்றா அவசரப்படுகின்றார்கள்? 26:205 நீர் கொஞ்சம் சிந்தித்தீரா? பல்லாண்டுகள்வரை சுகமாய் வாழ்ந்திட இவர்களுக்கு நாம் அவகாசம் அளித்துவிட்டிருந்தாலும், 26:206 பின்னர் எதனைக்கொண்டு இவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்களோ அது இவர்களிடம் வந்துவிடுமானால் 26:207 அப்போதுஇவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்த வாழ்க்கைச் சாதனங்கள் இவர்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றன? 26:208 (பாருங்கள்:) நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை எச்சரிக்கை செய்பவர்கள் அவர்களிடம் வந்து, 26:209 நல்லுரை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றாத வரையில்! மேலும், நாம் கொடுமை புரிபவராயும் இருந்ததில்லை. 26:210 இதனை (தெளிவான இந்த வேதத்தை) ஷைத்தான்கள் எடுத்துக் கொண்டு இறங்கவில்லை. 26:211 அது அவர்களுக்குரிய பணியுமல்ல; அவ்வாறு செய்வதற்கும் அவர்களால் இயலாது! 26:212 திண்ணமாக, அவர்கள் இதனைச் செவியுறுவதிலிருந்தும்கூட விலக்கித் தூரமாக வைக்கப்பட்டுள்ளார்கள். 26:213 ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்காதீர்கள். அவ்வாறாயின் தண்டனை பெறுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர். 26:214 உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்; 26:215 மேலும், நம்பிக்கையாளர்களில் யார் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும்! 26:216 அவர்கள் உமக்குக் கீழ்ப்படியாது மாறு செய்தால், “நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பாளியல்லன்!” என்று அவர்களிடம் கூறிவிடும்! 26:217 மேலும், வல்லமை மிக்கவனும், பெரும் கிருபையாளனுமாகிய இறைவனையே முழுமையாகச் சார்ந்திரும்! 26:218 அவன் எத்தகையவன் எனில், நீர் எழும்போது உம்மைப் பார்க்கிறான். 26:219 மேலும், சிரம்பணிந்து வணங்குவோர்களிடையே உம் அசைவையும் பார்க்கின்றான். 26:220 திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 26:221 (மக்களே!) ஷைத்தான்கள் யார்மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கவா? 26:222 பெரும் பொய்யனாகிய, பாவம் புரியக்கூடிய ஒவ்வொருவன் மீதும் அவர்கள் இறங்குகின்றார்கள். 26:223 அவர்கள் கேள்விப்பட்டதை யெல்லாம் காதுகளில் ஊதி விடுகின்றார்கள். மேலும், அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே! 26:224 மேலும், கவிஞர்களையோ வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்களைப் பின்பற்றுகின்றார்கள். 26:225 அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும், 26:226 தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா? 26:227 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்தார்களோ, மேலும், அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ, மேலும், தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக மட்டும் பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமை புரிகின்றவர்கள், அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்துகொள்வார்கள்.
அத்தியாயம்  அந்நம்ல்  27 : 1-55 / 93
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
27:1 தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும். 27:2 இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும். 27:3 அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். 27:4 உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம். எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள். 27:5 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கின்றது; மேலும், மறுமையில் அவர்கள்தாம் அனைவரையும்விட அதிக இழப்புக்குரியவர்களாய் இருப்பார்கள். 27:6 மேலும், (நபியே!) நுண்ணறிவாளனும் நன்கு அறிந்தவனுமான இறைவனிடமிருந்து திண்ணமாக இந்தக் குர்ஆனை நீர் பெற்றுக் கொண்டிருக்கின்றீர். 27:7 (அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததை இவர்களுக்கு நினைவூட்டுங்கள்) மூஸா தம் குடும்பத்தாரிடம் அப்பொழுது கூறினார்: “நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் இப்பொழுதே அங்கிருந்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டு வருகின்றேன். அல்லது தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் குளிர் காய்ந்து கொள்ளலாம்.” 27:8 அங்கு அவர் சென்றதும் ஓர் உருவிலி (அசரீரி) கேட்டது: “பாக்கியம் உள்ளவர்கள் ஆவர் இந்த நெருப்பில் உள்ளவரும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும்!” தூய்மையானவன் ஆவான்; அகிலத்தார் அனைவரையும் வளர்த்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்! 27:9 “மூஸாவே! நான்தான் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்! 27:10 மேலும், உமது கைத்தடியைச் சற்று எறியும்!” உடனே அது (அந்தத் தடி) பாம்பு போல் அசைவதை மூஸா கண்டபோது பின்னோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மூஸாவே அஞ்சாதீர்! திண்ணமாக, என் முன்னிலையில் தூதர்கள் அஞ்சுவதில்லை; 27:11 ஏதேனும் தவறு செய்திருந்தாலே தவிர! பின்னர் தீமை செய்த பிறகு (தன் செயலை) அவர் நன்மையாக மாற்றிக் கொண்டால் திண்ணமாக நான் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றேன். 27:12 மேலும், நீர் உமது கையை உமது (சட்டையின்) மார்புப் பகுதியில் நுழைப்பீராக! அது பிரகாசிக்கக் கூடியதாய் வெளிப்படும் எவ்விதக் கேடுமின்றி!” இவை (இந்த இரு சான்றுகளும்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்தாரிடமும் (கொண்டு செல்வதற்குரிய) ஒன்பது சான்றுகளில் உள்ளவையாகும். அவர்கள் மிகவும் தீய நடத்தை உடைய மக்களாய் இருக்கின்றார்கள். 27:13 ஆயினும், நம்முடைய மிகத் தெளிவான சான்றுகள் அம்மக்களின் முன் வந்தபோது இது அப்பட்டமான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். 27:14 அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழப்பவாதிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை இப்போது நீர் பார்த்துக் கொள்ளும். 27:15 (மற்றொரு புறம்) நாம் தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். மேலும், அவ்விருவரும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்; அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரைவிட எங்களுக்கு சிறப்பை வழங்கினான்.” 27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார்: “மக்களே! எங்களுக்குப் பறவைகளின் பேச்சுகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. எல்லாவிதமான பொருள்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திண்ணமாக, இது (அல்லாஹ்வின்) வெளிப்படையான அருளாகும்.” 27:17 மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. 27:18 (ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.” 27:19 ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!” 27:20 (மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா? 27:21 நிச்சயம் அதனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன். இல்லாவிட்டால் பொருத்தமான காரணத்தை என்னிடம் அது சமர்ப்பிக்க வேண்டும்.” 27:22 அதிக தாமதமின்றி அது வந்து கூறியது: “தங்கள் அறிவுக்கு வராத சில செய்திகளை நான் பெற்றிருக்கின்றேன். நான் ஸபஃ பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். 27:23 அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது. 27:24 அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான். 27:25 இதனால் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும், நீங்கள் மறைத்து வைப்பவற்றையும் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு சிரம் பணிய வேண்டும் எனும் நேர்வழியை அவர்கள் அடையாதவர்களாய் இருக்கின்றார்கள். 27:26 அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே மாபெரும் அர்ஷûக்கு* உரிமையாளன் ஆவான். 27:27 ஸுலைமான் கூறினார்: “நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப் போதே நாம் பார்த்துவிடுகின்றோம். 27:28 என்னுடைய இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று அவர்களிடம் போட்டுவிடு. பிறகு, அவர்களை விட்டு விலகி நின்று அவர்கள் என்ன பதில் நட வடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை நீ கவனி!” 27:29 அரசி கூறினாள்: “அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டிருக்கின்றது. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. 27:30 மேலும், அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது. “எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். 27:31 மேலும், முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும் எனும் வாசகம் அதில் உள்ளது.” 27:32 (கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத் தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள். நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.” 27:33 அவர்கள் பதிலளித்தார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும் கடுமையாகப் போரிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.” 27:34 அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்துவிடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள். 27:35 எனவே, அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.” 27:36 அ(ரசியின் தூது)வர் ஸுலைமானிடம் வந்ததும் ஸுலைமான் கேட்டார்: “நீங்கள் பொருளால் எனக்கு உதவி புரிந் திட விரும்புகின்றீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது உங்களுக்கு வழங்கியிருப்பதைவிட எவ்வளவோ அதிகமாகும். எனவே, உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ந்திருங்கள். 27:37 (தூதரே!) உம்மை அனுப்பியவர்களிடம் நீர் திரும்பிச் செல்லும். அவர்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்குப் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு அவர்களிடம் நாம் திண்ணமாக வரப்போகின்றோம். அவர்கள் கேவலப்பட்டுப் போகும் வகையில் அங்கிருந்து அவர்களை இழிவானவர்களாக வெளியேற்றி விடுவோம்!” 27:38 ஸுலைமான் கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப் படிந்தவர்களாய் என்னிடம் வருமுன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வரமுடியும்?” 27:39 பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.” 27:40 அவர்களுள் ஓரளவு வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (உரக்கக்) கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா, நன்றி கொல்கின்றேனா என என்னை அவன் சோதிப்பதற்காக! மேலும், யாரேனும் நன்றி செலுத்தினால் அவருடைய நன்றி அவருக்கே நன்மை தரும். தவிர, யாரேனும் நன்றி கொன்றால் திண்ணமாக, என்னுடைய இறைவன் தேவைகள் அற்றவனாகவும், பெரும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றான்!” 27:41 ஸுலைமான் கூறினார்: “அரசியின் அரியணையை அடையாளம் காண முடியாத வகையில் அவள்முன் வைத்து விடுங்கள். உண்மை நிலையைத் தெரிந்து கொள்கின்றாளா, அல்லது சரியான வழியை அறிந்து கொள்ளாதவர்களுள் ஒருத்தியாய் இருக்கின்றாளா என்று நாம் பார்த்துவிடுவோம்.” 27:42 அரசி வருகை தந்ததும் ‘உம்முடைய அரியணை இப்படித்தான் உள்ளதா?’ என்று அவளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவள் கூறினாள்: “இதுவோ, அதைப் போலவே இருக்கின்றது. நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். சிரம் தாழ்த்தி கீழ்ப்படிந்தவர்களாய் இருந்தோம் (அல்லது முஸ்லிம்களாகி விட்டிருந்தோம்.)” 27:43 அல்லாஹ்வை விட்டுவிட்டு அவள் எந்த தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தாளோ அந்த வணக்கம்தான் (நம்பிக்கை கொள்ளவிடாமல்) அவளைத் தடுத்துவிட்டிருந்தது. ஏனெனில், அவள் நிராகரிக்கக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள். 27:44 “மாளிகையினுள் நுழைவீராக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைப் பார்த்தபோது தண்ணீர்த் தடாகம் என்று கருதிக் கொண்டாள். (இறங்குவதற்காகத்) தன் உடையை கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள். ஸுலைமான் கூறினார்: “இது பளபளக்கும் கண்ணாடி மாளிகையின் தரையாகும்!” அதற்கு அவள் கூறினாள்: “என் இறைவனே! (இன்று வரை) எனக்கு நானே கொடுமை புரிந்து கொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலமனைத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ ஏற்றுக் கொள்கின்றேன்!” 27:45 மேலும், நாம் ஸமூத் சமூகத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்” (என்னும் செய்தியுடன் தூதராக) அனுப்பினோம். அப்போது அவர்கள் இரு குழுவினராய்ப் பிரிந்து தர்க்கம் புரியத் தொடங்கிவிட்டார்கள். 27:46 ஸாலிஹ் கூறினார்: “என் சமூகத்தினரே! நன்மை வருமுன் தீமைக்காக ஏன் அவசரப்படுகின்றீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடாதா? உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடுமே!” 27:47 அதற்கவர்கள், “நாங்கள் உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் துர்ச் சகுனமாகக் கருதுகின்றோம்” என்றார்கள். ஸாலிஹ் பதிலளித்தார்: “உங்களின் (நல்ல, கெட்ட) சகுனம் பற்றிய விஷயம் அல்லாஹ்விடம் உள்ளது. உண்மை யாதெனில், நீங்கள் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்!” 27:48 அந்நகரில் ஒன்பது கலகத் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டில் குழப்பத்தைப் பரப்பிக்கொண்டும், மேலும், எவ்விதச் சீர்திருத்தத்தை செய்யாமலும் இருந்தனர். 27:49 அவர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “நீங்கள் இறைவன் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் நாம் ஸாலிஹ் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் இரவில் தாக்குதல் நடத்துவோம் என்று! பிறகு அவருடைய பாதுகாவலரிடம் கூறிவிடுவோம் ஸாலிஹுடைய குடும்பம் கொல்லப்பட்ட சமயத்தில் நாங்கள் அங்கு இருக்கவில்லை. நாங்கள் உண்மைதான் கூறுகின்றோம்.” 27:50 அவர்கள் செய்தது இந்த சூழ்ச்சிதான்! பிறகு, அவர்கள் அறியாத வகையில் நாம் வேறொரு சூழ்ச்சியைச் செய்தோம். 27:51 அவர்களுடைய சூழ்ச்சியின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக் கொள்ளும். அவர்களையும் அவர்களுடைய சமுதாய மக்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம்; 27:52 அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக! அதோ! அவர்களுடைய இல்லங்கள் வெறுமையாய்க் கிடக்கின்றன. திண்ணமாக, அறியக்கூடிய மக்களுக்கு இதில் (படிப்பினை மிக்க) சான்று இருக்கின்றது. 27:53 மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு மாறு செய்வதை விட்டு விலகியும் இருந்தார்களோ அவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம். 27:54 மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். அவர்தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கின்றீர்களா? 27:55 என்ன, பெண்களை விட்டுவிட்டு காம உணர்வைத் தீர்ப்பதற்காக ஆண்களையா தேடி அலைகின்றீர்கள்? உண்மையில் நீங்கள் மிகவும் அறிவீனமான செயல்புரியும் மக்கள் ஆவீர்.”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)