அத்தியாயம்  அல் ஃபுர்கான்  25 : 22-77 / 77
25:22 எந்த நாளில் இவர்கள் வானவர்களைக் காண்பார்களோ அந்த நாள் குற்றவாளிகளுக்கு நற்செய்திக்குரிய நாளாக இராது “அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்” என்று அவர்கள் கதறுவார்கள். 25:23 மேலும், அவர்கள் செய்த செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைப் புழுதியாக்கிப் பறக்க விட்டுவிடுவோம். 25:24 ஆனால், எவர்கள் சுவனத்துக்குத் தகுதியானவர்களோ அவர்கள்தாம் அந்நாளில் சிறந்த இடத்தில் தங்குவார்கள். மதிய வேளையைக் கழிப்பதற்கு மிக அழகிய இடத்தைப் பெறுவார்கள். 25:25 அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும். மேலும், வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள். 25:26 அந்நாளில் உண்மையான ஆட்சியதிகாரம், ரஹ்மானுக்கே கருணைமிக்க இறைவனுக்கே உரியதாக இருக்கும். மேலும், அது இறைநிராகரிப்பாளர்களுக்கு மிகக் கடினமான நாளாக இருக்கும். 25:27 மேலும், அந்நாளில் கொடுமை புரிந்த மனிதன் தன்னுடைய கைகளைக் கடித்தபடிக் கூறுவான்: “அந்தோ! நான் இறைத்தூதருக்குத் துணைபுரிந்திருக்கக் கூடாதா? 25:28 ஐயகோ! எனது துர்பாக்கியமே! நான் இன்ன மனிதனை நண்பனாக்காமல் இருந்திருக்க வேண்டுமே! 25:29 நான் அவனுடைய வழிகேட்டுக்குப் பலியாகி என்னிடம் வந்த அறிவுரையை ஏற்காமல் இருந்துவிட்டேனே! ஷைத்தான் மனிதனை மிகவும் ஏமாற்றக்கூடியவன் என்று நிரூபணமாகிவிட்டது.” 25:30 மேலும், இறைத்தூதர் கூறுவார்: “என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குர்ஆனை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.” 25:31 (நபியே!) இவ்வாறே நாம் குற்றவாளிகளை இறைத்தூதர் ஒவ்வொருவருக்கும் பகைவர்களாக்கினோம். மேலும், வழிகாட்டுவதற்கும், உதவி புரிவதற்கும் உங்கள் இறைவனே உங்களுக்குப் போதுமானவன். 25:32 மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: “இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம். 25:33 மேலும் (இதில் இந்த விவேகம் இருக்கின்றது:) அவர்கள் உம்மிடம் விநோதமான விஷயத்தை (அல்லது வியப்புக்குரிய கேள்வியை)க் கேட்டு வந்த போதெல்லாம் அதற்குரிய சரியான விடையை (உரிய நேரத்தில்) உமக்கு நாம் அளித்துள்ளோம். மேலும், மிக அழகான முறையில் விஷயத்தை விளக்கியுள்ளோம். 25:34 நரகத்தை நோக்கி எவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படவிருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிகமிகத் தவறானதாகும். 25:35 மேலும், நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவி யாளராய் ஆக்கினோம். 25:36 அவ்விருவர்க்கும் கூறினோம்: “நமது சான்றுகளைப் பொய்யென வாதிட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தாரிடம் செல்லுங்கள்!” இறுதியில், அச்சமூகத்தை நாம் அழித்தொழித்துவிட்டோம். 25:37 இதே கதிதான் நூஹ் உடைய சமூகத்தார்க்கும் ஏற்பட்டது; தூதர்களைப் பொய்யர்களென்று அவர்கள் தூற்றியபோது! அவர்களை நாம் மூழ்கடித்தோம். மேலும் (அனைத்துலக) மக்களுக்கும் ஒரு படிப்பினை தரும் சான்றாக அவர்களை ஆக்கினோம். மேலும், அந்தக் கொடுமைக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். 25:38 இதேபோன்று ஆத், ஸமூத் சமூகத்தினரும் ‘ரஸ்’ சமூகத்தினரும், மேலும், அவர்களுக்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்த அநேக மக்களும் அழித்தொழிக்கப்பட்டனர். 25:39 மேலும், அவர்களில் ஒவ்வொருவருக்கும் (முன்னர் அழிந்து போனவர்களின்) உதாரணங்களைக் கூறி விளக்கினோம். இறுதியில், ஒவ்வொருவரையும் அடியோடு அழித்துவிட்டோம். 25:40 மேலும், எந்த ஊர் மீது கொடுமையான மழை பொழிவிக்கப்பட்டதோ அந்த ஊரினூடே இவர்கள் சென்றிருக்கின்றார்கள். என்ன, அதனுடைய கதியை இவர்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், இவர்கள் மரணத்திற்குப் பின் மற்றொரு வாழ்க்கையை நம்பாதவர்களாகவே இருக்கின்றனர். 25:41 மேலும், இவர்கள் உம்மைக் காண்பார்களானால், உம்மைக்கேலிக்கு உரியவராக எடுத்துக் கொள்கின்றார்கள். (அவர்கள் கூறுகின்றார்கள்:) “இவரைத்தான் இறைவன் தூதராய் அனுப்பியிருக்கின்றானா? 25:42 நம் தெய்வங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கவில்லையானால் இவரோ நம்மை வழிகெடுத்து அந்தத் தெய்வங்களை விட்டு நம்மை விலக்கியே வைத்திருப்பார்.” சரி! அந்த நேரம் வெகு தூரத்தில் இல்லை இவர்கள் வேதனையைக் காணும்போது யார் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தாமாகவே தெரிந்துவிடும். 25:43 தனது மனஇச்சையைத் தன் கடவுளாக்கிக் கொண்டவனின் நிலை குறித்து என்றேனும் நீர் சிந்தித்ததுண்டா? இத்த கையவனை நேர்வழியில் கொண்டுவரும் பொறுப்பை நீர் ஏற்க முடியுமா? 25:44 என்ன, இவர்களில் பெரும்பாலோர் செவியேற்கின்றார்கள் என்றோ, புரிந்து கொள்கின்றார்கள் என்றோ நீர் கருதுகின்றீரா? இவர்களோ கால்நடைகளைப் போன்றவர்களாவர். ஏன், அவற்றை விடவும் இவர்கள் மிகவும் தரங்கெட்டவர்களாவர். 25:45 உம் இறைவன் எவ்வாறு நிழலை விரிக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால், அந்நிழலை நிலையானதாய் ஆக்கியிருப்பான். பிறகு, நாம் சூரியனை அதற்கு வழிகாட்டி ஆக்கினோம். 25:46 பிறகு (சூரியன் மேலே செல்லச் செல்ல) அந்நிழலை நாம் மெல்ல மெல்ல நம் பக்கமாக சுருட்டிக் கொண்டே போகின்றோம். 25:47 மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான். 25:48 மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான். பிறகு, வானத்தில் இருந்து தூய்மையான நீரை இறக்குகின்றான். 25:49 பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு அதன் மூலம் நாம் உயிர் கொடுப்பதற்காகவும், மேலும், நம்முடைய படைப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும்தான்! 25:50 இந்த விந்தைகளை அவர்களிடையே அடிக்கடி நாம் நிகழ்த்துகின்றோம், அவர்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பு மற்றும் நன்றி கொல்லும் நடத்தையைத் தவிர வேறெதனையும் மேற்கொள்ள மறுக்கின்றார்கள். 25:51 மேலும், நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் எச்சரிக்கையாளரை அனுப்பி வைத்திருப்போம். 25:52 எனவே, (நபியே!) நிராகரிப்பாளர்களின் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்! மேலும், இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள். 25:53 மேலும், இரு கடல்களை ஒன்றிணைத்து வைத்திருப்பவன் அவனே! ஒன்று சுவையும் இனிமையும் வாய்ந்தது; மற்றொன்று, உப்பும் கசப்பும் கலந்தது. மேலும், இரண்டுக்குமிடையே ஒரு திரை ஒரு தடுப்பு இருக்கிறது. (அவை ஒன்றோடொன்று கலந்து விடாதவாறு) அது தடுத்துக் கொண்டிருக்கிறது. 25:54 மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான். 25:55 மேலும், அல்லாஹ்வை விடுத்து தமக்கு எவ்வித நன்மையும் தீமையும் அளித்திட இயலாத தெய்வங்களை மக்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இது தவிர நிராகரிப்பாளன் தன் இறைவனுக்கு எதிரான ஒவ்வொரு துரோகிக்கும் உதவியாளனாக இருக்கின்றான். 25:56 (நபியே!) நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மட்டுமே உம்மை நாம் அனுப்பியிருக்கின்றோம். 25:57 இவர்களிடம் கூறிவிடும்: “இப்பணிக்காக உங்களிடம் நான் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலியோ, எவர் தன் இறைவன் பக்கம் சென்றடைவதற்கான வழியினை மேற்கொள்ள விரும்புகின்றாரோ அவர் இதனை மேற்கொள்வதுதான்!” 25:58 மேலும் (நபியே!) என்றென்றும் உயிருடன் இருப்பவனும் ஒருபோதும் மரணிக்காதவனுமான இறைவனை முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவனைப் புகழ்வதுடன் அவன் தூய்மையையும் எடுத்துரைப்பீராக! தன்னுடைய அடிமைகளின் பாவங்களை நன்கு அறிந்துகொள்ள அவனே போதுமானவன். 25:59 அவன் எத்தகையவனெனில் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கிடையேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு அர்ஷின்* மீது அமர்ந்தான்; அவன் ரஹ்மான்கருணை மிக்கவன். அவனுடைய மாட்சிமை பற்றி யாரேனும் அறிந்தவரிடம் கேளுங்கள். 25:60 “ரஹ்மானுக்கு கருணைமிக்க இறைவனுக்கு ஸுஜூது• செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “ரஹ்மான் என்றால் யார்? நீர் சொல்வோருக்கெல்லாம் நாங்கள் ஸஜ்தா செய்துகொண்டிருக்க வேண்டுமா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். இந்த அழைப்பு அவர்களுடைய வெறுப்பை இன்னும் அதிகமாக்கி விடுகின்றது. 25:61 பெரும் பாக்கியம் உடையவனாவான்; விண்ணில் உறுதியான மண்டலங்கள் அமைத்து அதில் ஒளிவிளக்கையும் ஒளிர்கின்ற சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவன்! 25:62 அவனே, இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து வரக்கூடியதாக அமைத்தான்படிப்பினை பெற நாடும் அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்காகவும்! 25:63 மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், “உங்களுக்கு ஸலாம்சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிவிடுவார்கள். 25:64 மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் திருமுன் ஸுஜூது செய்தும் நின்றும் வணங்கியவாறு இரவைக் கழிப்பார்கள். 25:65 மேலும், அவர்கள் இறைஞ்சுவார்கள்: “எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக! அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியதாக இருக்கின்றது. 25:66 திண்ணமாக, நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கின்றது!” 25:67 மேலும், அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும். 25:68 மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபச்சாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் தன் பாவத்திற்கான கூலியைப் பெற்றே தீருவான்; 25:69 மறுமைநாளில் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் என்றென்றும் அவன் வீழ்ந்து கிடப்பான். 25:70 ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பின்னர்) எவர் மன்னிப்புக்கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத்தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனுமாவான்! 25:71 எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார். 25:72 மேலும் (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள். 25:73 மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை. 25:74 மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!” 25:75 இத்தகையோரே தங்களுடைய பொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள். 25:76 அவர்கள் என்றென்றும் அங்குத் தங்கி வாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றது அந்தத் தங்குமிடம்! எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்! 25:77 (நபியே!) மக்களிடம் கூறுங்கள்: “என்னுடைய இறைவனை நீங்கள் அழைக்கவில்லையென்றால், அவனுக்கு உங்களுடைய தேவைதான் என்ன? இப்போது நீங்கள் (இறைத்தூதைப்) பொய்யெனக் கூறிவிட்டீர்கள். தடுக்க முடியாத கடும் தண்டனையை, விரைவில் நீங்கள் பெறத்தான் போகிறீர்கள்!”
அத்தியாயம்  அஷ்ஷûஅரா  26 : 1-110 / 227
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
26:1 தாஸீம்மீம். 26:2 இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும். 26:3 (நபியே!) இவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை என்பதற்காக(க் கவலைப்பட்டு) உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போன்றிருக்கின்றதே! 26:4 நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்! 26:5 கருணைமிக்க இறைவனிடமிருந்து புதிதாக எந்த ஓர் அறிவுரை இவர்களிடம் வந்தாலும் இவர்கள் அதனைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்; 26:6 இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும். 26:7 இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்! 26:8 திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர். 26:9 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும், பெருங்கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:10 அந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு நீர் கூறும்: “உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம் 26:11 ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும். அவர்கள் அஞ்சுவதில்லையா?” 26:12 அதற்கு அவர் பணிந்து கூறினார்: “என் இறைவனே! என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன். 26:13 என் நெஞ்சம் இடுங்கிவிடுகின்றது; என் நாவுக்கு சரளமாகப் பேச வருவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக! 26:14 மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.” 26:15 இறைவன் கூறினான்: “அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் உங்களுடன் அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம். 26:16 இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். மேலும், அவனிடம் கூறுங்கள்: அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான்; 26:17 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நீ எங்களுடன் அனுப்பிவிட வேண்டுமென்பதற்காக!” 26:18 அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீ குழந்தையாய் இருந்தபோது உன்னை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா? மேலும், உன் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீ எம்மிடம் கழித்திருக்கின்றாய். 26:19 அதன் பின்னர் நீ செய்துவிட்ட அந்தச் செயலையும் செய்துள்ளாய். நீ பெரிதும் நன்றிகெட்ட மனிதன்தான்!” 26:20 மூஸா பதில் கூறினார்: “அப்போது நான் அறியாமையினால் அக்காரியத்தைச் செய்துவிட்டேன். 26:21 பின்னர், நான் உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடிவிட்டேன். பின் என் இறைவன் எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்கினான்; என்னைத் தூதர்களில் ஒருவனாகவுமாக்கினான். 26:22 எனக்குச் செய்ததாக நீ சொல்லிக் காட்டும் அந்த உபகாரத்தின் உண்மைநிலை யாதெனில், நீ இஸ்ராயீல் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததேயாகும்.” 26:23 ஃபிர்அவ்ன் கேட்டான்: “மேலும், இந்த அகிலங்களின் இறைவன் என்பது என்ன?” 26:24 அதற்கு மூஸா பதிலளித்தார்: “அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதி ஆவான் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால்!” 26:25 ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறினான்: “கேட்கிறீர்களல்லவா?” 26:26 அதற்கு மூஸா கூறினார்: “அவன் உங்களுடைய இறைவனும், முன்னோர்களான உங்கள் மூதாதையருடைய இறைவனுமாவான்.” 26:27 அதற்கு ஃபிர்அவ்ன் (அவையோரை நோக்கி) கூறினான்: “உங்களிடம் அனுப்பப்பட்ட இந்தத் தூதர் சரியான பைத்தியக்காரராய்த் தெரிகின்றார்!” 26:28 அதற்கு மூஸா கூறினார்: “கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான் நீங்கள் சற்றேனும் அறிவுடையோராக இருந்தால்!” 26:29 அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீர் என்னைத் தவிர வேறு எவரையேனும் வணக்கத்திற்குரியவராய் ஏற்றுக் கொண்டால், சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன் உம்மையும் நான் சேர்த்து விடுவேன்!” 26:30 மூஸா கேட்டார்: “தெளிவான ஒரு சான்றை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?” 26:31 அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “அதனைக் கொண்டுவாரும்; நீர் உண்மையாளராயின்!” 26:32 (அவன் இவ்வாறு கூறியதும்) மூஸா தன் கைத்தடியைப் போட்டார். உடனே அது சந்தேகமின்றி ஒரு பாம்பாயிற்று. 26:33 பிறகு, அவர் தம் கையை (அக்குளிலிருந்து) வெளியே எடுத்தார். உடனே அது பார்ப்போர் அனைவரின் முன்னிலையிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. 26:34 ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றிலுமிருந்த தலைவர்களிடம் கூறினான்: “இவர் உண்மையில் ஒரு கைதேர்ந்த சூனியக்காரர்! 26:35 தன்னுடைய சூனியத்தின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார். இப்போது கூறுங்கள், நீங்கள் என்ன கட்டளை இடப்போகின்றீர்கள்?” 26:36 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இவரையும், இவருடைய சகோதரரையும் தடுத்து வையுங்கள். முரசறைவோரை நகரங்களுக்கு அனுப்புங்கள். 26:37 திறமை வாய்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் தங்களிடம் அவர்கள் அழைத்துக் கொண்டு வரட்டும்!” 26:38 அவ்வாறு ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர். 26:39 மக்களிடம் கோரப்பட்டது: “நீங்கள் கூட்டத்திற்கு வருவீர்களா? 26:40 நாம் சூனியக்காரர்களின் மார்க்கத்திலேயே இருந்து விடலாம்; அவர்கள் வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தால்!” 26:41 சூனியக்காரர்கள் (களத்திற்கு) வந்தபோது, ஃபிர்அவ்னிடம் கேட்டார்கள்: “நாங்கள் வெற்றியடைந்துவிட்டால், திண்ணமாக எங்களுக்கு வெகுமதி கிடைக்குமல்லவா?” 26:42 அதற்கு அவன், “ஆம்! மேலும், நீங்கள் அப்போது எனக்கு நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்றான். 26:43 மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எறிய இருப்பதை எறியுங்கள்!” 26:44 உடனே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தனர்; மேலும், கூறினர்: “ஃபிர்அவ்னின் மகிமை கொண்டு நாங்களே வெற்றியாளர்களாய்த் திகழ்வோம்!” 26:45 பிறகு, மூஸா தமது கைத்தடியை எறிந்தார். உடனே அது அவர்களின் பொய் வித்தைகளை விழுங்கிக் கொண்டே சென்றது. 26:46 இதனைக் கண்ட சூனியக்காரர்கள் அனைவரும் தம்மையுமறியாமல் ஸஜ்தாவில் வீழ்ந்துவிட்டார்கள். 26:47 பிறகு, அவர்கள் உரக்கக் கூறினார்கள்: “ஏற்றுக்கொண்டு விட்டோம் அகிலங்களின் அதிபதியை, 26:48 மூஸா மற்றும் ஹாரூனுடைய அதிபதியை!” 26:49 ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸா கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே! திண்ணமாக, உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களின் பெரிய குருவாக இருக்கின்றார் இவர்! சரி, இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும். நிச்சயமாக, நான் உங்கள் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்துவிடுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்!” 26:50 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “பரவாயில்லை! நாங்கள் எங்கள் இறைவனின் திருமுன் சென்று விடுவோம். 26:51 எங்கள் இறைவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அனைவர்க்கும் முன்னதாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டோமே!” 26:52 மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!” 26:53 இதன்படி ஃபிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லியனுப்பினான்:) 26:54 “இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தாம்! 26:55 மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள். 26:56 நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!” 26:57 இவ்வாறு நாம் அவர்களை அவர்களுடைய தோப்புகள், நீருற்றுகள், 26:58 செல்வக் களஞ்சியங்கள் மற்றும் சிறந்த இருப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறச் செய்தோம். 26:59 அவர்களுக்கு நேர்ந்தது இதுதான். (மற்றொருபுறம்) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை இவை அனைத்திற்கும் வாரிசுகளாக்கிவிட்டோம். 26:60 பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். 26:61 இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர். 26:62 அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!” 26:63 மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது. 26:64 அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம். 26:65 மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். 26:66 பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம். 26:67 திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் ஒரு சான்று இருக்கிறது. எனினும் இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். 26:68 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:69 மேலும், இப்ராஹீமின் சரிதையை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்: 26:70 ஒருபோது அவர்தம் தந்தையிடமும், சமூகத்தாரிடமும், “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். 26:71 அதற்கு அவர்கள் “சிலைகளை நாங்கள் பூஜிக்கின்றோம்; மேலும், அவற்றிற்கு சேவை செய்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள். 26:72 அதற்கு அவர் கேட்டார்: “நீங்கள் அழைக்கும்போது உங்கள் அழைப்பை இவை கேட்கின்றனவா? 26:73 அல்லது இவை உங்களுக்கு ஏதேனும் இலாபமோ, நஷ்டமோ அளிக்கின்றனவா?” 26:74 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “இல்லை. ஆயினும், எங்கள் முன்னோர் இவ்வாறே செய்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.” 26:75 அதற்கு இப்ராஹீம் கூறினார்: “எவற்றை நீங்களும், உங்களுடைய முற்காலத்து மூதாதையர்களும் வணங்கிவந்தீர்களோ , 26:76 அவற்றை நீங்கள் என்றாவது (கண்திறந்து) பார்த்திருக்கின்றீர்களா? 26:77 என்னைப் பொறுத்தவரை திண்ணமாக, இவை அனைத்தும் விரோதிகளாகும்; ஆனால், அகிலங்களின் அதிபதியைத் தவிர! 26:78 அவன் எத்தகையவனெனில், அவன்தான் என்னைப் படைத்தான்; மேலும், அவனே எனக்கு பின்னர் வழிகாட்டுகின்றான். 26:79 எனக்கு உண்ணவும் அருந்தவும் தருகின்றான். 26:80 மேலும், நான் நோயுற்றால் அவனே எனக்கு குணமளிக்கின்றான். 26:81 அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் மீண்டும் எனக்கு வாழ்வளிப்பான். 26:82 மேலும், கூலி கொடுக்கப்படும் நாளில் அவன் என் பாவங்களை மன்னித்தருள்வான் என்று நான் அவனிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.” 26:83 (இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக! 26:84 மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக! 26:85 மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக! 26:86 மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக! திண்ணமாக, அவர் வழிகெட்டுப் போனவர்களில் ஒருவராய் இருக்கின்றார். 26:87 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே! 26:88 அந்நாளில், செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திடமாட்டா. 26:89 ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர!” 26:90 (அந்நாளில்) சுவனம் இறையச்சமுடையவர்களின் அருகில் கொண்டுவரப்படும்; 26:91 வழிகெட்டுப் போனவர்களின் முன்னிலையில் நரகம் திறந்து வைக்கப்படும். 26:92 மேலும், அவர்களிடம் வினவப்படும்: நீங்கள் வணங்கி வந்த தெய்வங்கள் எங்கே? 26:93 “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வணங்கி வந்தீர்களே அந்தத் தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டிருக்கின்றனவா? அல்லது அவற்றால் தம்மையேனும் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா?” 26:94 பின்னர் அந்த தெய்வங்களும், வழிகெட்டுப் போனவர்களும், 26:95 இப்லீசின் சேனைகளும் அனைவரும் நரகில் தலைகீழாக எறியப்படுவார்கள்! 26:96 அங்கு இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வார்கள். 26:97 வழி தவறியவர்கள் (தங்கள் தெய்வங்களிடம்) கூறுவார்கள்: “இறைவன் மீது ஆணையாக! நாங்கள் வெளிப்படையான வழிகேட்டிலிருந்தோம். 26:98 அகிலங்களின் அதிபதியுடன் உங்களுக்கு சரி சமமான தகுதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது! 26:99 குற்றவாளிகள் தாம் எங்களை இந்த வழிகேட்டில் தள்ளி விட்டார்கள். 26:100 இப்போது, எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் யாரும் இல்லை!” 26:101 உற்ற நண்பர் எவருமிலர். 26:102 அந்தோ! மீண்டும் ஒருமுறை எங்களுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாய்த் திகழ்வோமே!” 26:103 திண்ணமாக, இதில் பெரியதொரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் அல்லர். 26:104 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 26:105 நூஹுடைய சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். 26:106 அவர்களிடம் அவர்களின் சகோதரர் நூஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா? 26:107 நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன். 26:108 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள். 26:109 நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது. 26:110 எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (தயக்கமின்றி) எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)