அத்தியாயம்  அல் முஃமினூன்  23 : 1-118 / 118
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
23:1 திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். 23:2 அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்; 23:3 மேலும், வீணானவற்றைவிட்டு விலகியிருக்கின்றார்கள்; 23:4 இன்னும் ஜகாத்தை அதன் நெறிமுறைப்படி செயல்படுத்தக் கூடியவராய் இருக்கின்றார்கள். 23:5 மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; 23:6 தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர். 23:7 ஆயினும், எவர்கள் இதற்கப்பாலும் ஆசைப்படுகின்றார்களோ அவர்களே வரம்பு மீறக்கூடியவர்களாவர். 23:8 இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள். 23:9 மேலும், தங்களுடைய தொழுகைகளையும் பேணுபவராய் இருக்கின்றார்கள். 23:10 இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர். 23:11 இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். 23:12 மனிதனை நாம் களி மண்ணின் சத்திலிருந்து படைத்தோம். 23:13 பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம். 23:14 பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்! 23:15 பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்! 23:16 பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள். 23:17 திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம். மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை. 23:18 இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம். 23:19 மேலும், அதன் மூலம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக நாம் உருவாக்கினோம். இத்தோட்டங்களில் (சுவை மிகுந்த) ஏராளமான கனிகள் உங்களுக்கு இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உணவைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். 23:20 மேலும், ‘தூர் ஸைனா’ வளர்கின்ற மரத்தையும் நாம் படைத்தோம். எண்ணெய்யுடனும் உண்ணுகின்றவர்களுக்குக் குழம்புடனும் அது முளைக்கின்றது. 23:21 திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை (பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றை உண்ணவும் செய்கின்றீர்கள். 23:22 அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றீர்கள். 23:23 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் அஞ்சமாட்டீர்களா?” 23:24 அவருடைய சமுதாயத்தில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர்கள் கூறலானார்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களைவிட உயர்வடைய வேண்டும் என நினைக்கின்றார்! அல்லாஹ் யாரையேனும் தூதராக அனுப்ப நாடியிருந்தால் வானவர்களை அனுப்பி வைத்திருப்பான். (மனிதர் இறைத்தூதராய் வருவார் எனும்) இச்செய்தியை எங்கள் மூதாதையரிடமிருந்து நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே! 23:25 இந்த மனிதருக்குக் கொஞ்சம் பைத்தியம் பிடித்திருக்கின்றது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இவருடைய விஷயத்தில் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள். (இவருடைய பைத்தியம் தெளியக்கூடும்!)” 23:26 அதற்கு நூஹ் “என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யனென்று கூறிவிட்டதனால் இனி நீயே எனக்கு உதவி செய்வாயாக!” என்று இறைஞ்சினார். 23:27 நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். நாம் அறிவிக்கின்றபடியும், நமது கண்காணிப்பிலும் ஒரு கப்பலைத் தயார் செய்யும்! பின்னர், நம் கட்டளை வந்ததும் உலையிலிருந்து தண்ணீர் பொங்கி எழ ஆரம்பித்தால், எல்லா வகைப் பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியையும், உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்ளும்; அவர்களில் யாருக்கு எதிராக முன்னரே தீர்ப்பாகி விட்டதோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமைக்காரர்களைப் பற்றி நீர் எம்மிடம் எதுவும் பேசாதீர். இதோ! இவர்கள் மூழ்கடிக்கப்படவிருக்கின்றார்கள்; 23:28 நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக் கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!” 23:29 மேலும், கூறுவீராக: “என் இறைவனே! அருள் வளம் கொண்டதோர் இடத்தில் என்னை இறக்குவாயாக! நீ மிகச் சிறந்த இடத்தை நல்கக் கூடியவன்.” 23:30 திண்ணமாக, இவ்வரலாற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. திண்ணமாக, நாம் சோதனை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். 23:31 அவர்களுக்குப் பிறகு நாம் வேறொரு கால கட்டத்து சமூகத்தினரைத் தோற்றுவித்தோம். 23:32 பிறகு, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்:) “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை; நீங்கள் அஞ்சுவதில்லையா என்ன?” 23:33 மேலும் அவருடைய சமூகத்தில் எந்தத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ இன்னும் இறுதிநாளின் சந்திப்பை, பொய்யென்று வாதாடினார்களோ மேலும், இவ்வுலகில் ஆடம்பரமான வாழ்க்கையை எவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோமோ அந்தத் தலைவர்கள் கூறலானார்கள்; “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்ணுகின்றவற்றையே இவரும் உண்ணுகின்றார். மேலும், நீங்கள் பருகுகின்றவற்றையே இவரும் பருகுகின்றார். 23:34 எனவே, உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்களாயின் அப்போது திண்ணமாக, நீங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவீர்கள்! 23:35 நீங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பிறகு நீங்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளியாக்கப்படுவீர்கள் என்று இவர் உங்களிடம் எச்சரிக்கின்றாரா? 23:36 உங்களிடம் விடுக்கப்படும் இந்த எச்சரிக்கை சாத்தியமற்றது; முற்றிலும் சாத்தியமற்றது! 23:37 நம்முடைய இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு ஒரு வாழ்க்கை இல்லை; நாம் இறக்கப்போவதும் உயிர் வாழ்வதும் இங்குதான்! நாம் ஒருபோதும் எழுப்பப்படமாட்டோம். 23:38 அல்லாஹ்வின் பேரில் பொய்யைப் புனைந்து உரைத்துக் கொண்டிருக்கும் மனிதரே இவர். நாம் ஒருபோதும் இவரை நம்பமாட்டோம்!” 23:39 அதற்கு அந்தத் தூதர் இறைஞ்சினார். “என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யன் என்று தூற்றிவிட்ட காரணத்தால் நீயே எனக்கு உதவி புரிந்திடுவாய்!” 23:40 அதற்கு இறைவன், “நெருங்கிவிட்டது இவர்கள் (தாங்கள் செய்தவற்றைக் குறித்து) வருந்தப்போகின்ற காலம்!” என பதில் அளித்தான். 23:41 இறுதியில் முற்றிலும் நியாயத்திற்கேற்பவே ஓர் உரத்த ஓசை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அவர்களை நாம் குப்பைக் கூளங்களாக்கி எறிந்துவிட்டோம். தொலைந்து போகட்டும் கொடுமை புரிந்த சமூகத்தார்! 23:42 பின்னர், வேறு பல சமூகங்களை அவர்களுக்குப் பிறகு நாம் தோற்றுவித்தோம். 23:43 எந்தச் சமூகமும் தன்னுடைய தவணை வருமுன் அழிந்து போவதுமில்லை; அதற்குப்பிறகு வாழ்வதும் இல்லை. 23:44 பிறகு, நாம் தொடர்ந்து நம் தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். எந்த ஒரு சமூகத்திலும் அதனுடைய தூதர் அதனிடம் வந்தபோது அந்தச் சமூகத்தினர் அவரைப் பொய்யரென்றே தூற்றினர். நாமும் அந்தச் சமூகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அழித்துக் கொண்டே வந்தோம். இறுதியில் அவர்களை நாம் வெறும் கதைகளாய் ஆக்கிவிட்டோம். சாபம் உண்டாகட்டும், நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது! 23:45 பிறகு, நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் சான்றுகள் மற்றும் தெளிவான ஆதாரத்துடன் 23:46 ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரமுகர்களிடமும் அனுப்பினோம். ஆனால், அவர்கள் பெரும் செருக்குடன் நடந்து கொண்டனர். மேலும், ஆணவம் கொண்ட மக்களாகவும் இருந்தனர். 23:47 “எங்களைப் போன்ற இரு மனிதர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? அவர்களின் சமூகத்தினர் எங்களுக்கு அடிமைகளாயிற்றே!” என்று கூறலானார்கள். 23:48 ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் என்றனர். எனவே, அழிக்கப்பட்டவர்களில் இவர்களும் சேர்க்கப்பட்டனர். 23:49 மேலும், மூஸாவுக்கு நாம் வேதம் வழங்கினோம், மக்கள் (அதன் மூலம்) நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக! 23:50 மேலும், நாம் மர்யத்தின் குமாரரையும், அவருடைய அன்னையையும் ஒரு சான்றாக ஆக்கினோம். அமைதியான நீரூற்று ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஓர் உயரமான இடத்தில் அவ்விருவருக்கும் நாம் தஞ்சம் அளித்தோம். 23:51 தூதர்களே! உண்ணுங்கள் தூய்மையானவற்றை! செய்யுங்கள் நன்மைகளை! நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றேன். 23:52 மேலும், உங்களுடைய இந்தச் சமுதாயம் திண்ணமாக ஒரே சமுதாயமாகும். மேலும், நான் உங்கள் அதிபதி ஆவேன்; எனவே, எனக்கே அஞ்சுங்கள். 23:53 ஆயினும், (பிற்காலத்தில்) மக்கள் தங்களுடைய தீனைநெறியை தங்களுக்கிடையே துண்டு துண்டாக்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் எது இருக்கின்றதோ அதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றார்கள் 23:54 சரி, அவர்களை விட்டுவிடுவீராக; ஒரு குறிப்பிட்ட காலம் வரை தம் அலட்சியப்போக்கில் அவர்கள் மூழ்கிக் கிடக்கட்டும்! 23:55 நாம் அவர்களுக்குப் பொருளையும், மக்களையும் அளித்து உதவி புரிந்து கொண்டிருக்கின்றோமெனில், 23:56 நாம் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அதிவேகமாய் இருக்கின்றோம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? (இல்லை, உண்மை நிலவரத்தை) அவர்கள் அறிவதில்லை. 23:57 உண்மையில் எவர்கள் தம் இறைவனின் அச்சத்தால் நடுங்கக்கூடியவர்களாய் இருக்கின்றார்களோ, 23:58 மேலும், எவர்கள் தம் இறைவனின் வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, 23:59 இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எவரையும்) இணைவைக்காது இருக்கின்றார்களோ, 23:60 எவர்கள் தானதர்மங்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்களோ, மேலும், தம் இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றோம் எனும் எண்ணத்தில் இதயம் நடுங்கியவாறு இருக்கின்றார்களோ 23:61 அத்தகையவர்கள் மட்டுமே நன்மைகளின் பக்கம் விரைந்து செல்பவர்களாகவும் அவர்கள் ஒருவரையொருவர் முந்திச் சென்று அவற்றை அடையக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். 23:62 நாம் எந்த மனிதனுக்கும் அவனது சக்திக்கு அதிகமாக சிரமம் அளிப்பதில்லை. (ஒவ்வொருவரின் நிலையையும்) மிகச்சரியாக எடுத்துரைக்கக்கூடிய ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. ஆகையால் மக்கள் அநீதியிழைக்கப்படமாட்டார்கள். 23:63 ஆயினும், இம்மக்கள் இதனைப் பற்றி அறியாமலிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய செயல்களும் (மேலே கூறப்பட்ட) அந்த வழி முறைக்கு மாறுபட்டிருக்கின்றன. அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்து கொண்டேயிருப்பார்கள். 23:64 இறுதியில், அவர்களில் சுகபோகங்களிலேயே மூழ்கிக்கிடப்பவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்ளும்போது அவர்கள் ஓலமிட்டு அலறத் தொடங்குவார்கள்; 23:65 இன்று நீங்கள் எதைப்பற்றியும் முறையிடவோ, புலம்பவோ வேண்டாம். நிச்சயம் எம்மிடமிருந்து எந்த உதவியையும் பெறமாட்டீர்கள்! 23:66 என் வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டு வந்தன. அப்போது (தூதரின் குரலைக் கேட்டதும்) பின்னோக்கி ஓடினீர்கள். 23:67 இறுமாப்புக் கொண்டவர்களாய் அவரை அலட்சியம் செய்து கொண்டும், தங்கள் அவைகளில் அவரைப் பழித்துரைத்துக் கொண்டும், பொல்லாங்கு கூறிக்கொண்டும் இருந்தீர்கள்! 23:68 என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது? 23:69 அல்லது தங்களின் இந்தத் தூதரை இவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லையா? (அப்படி அறியாது இருந்த காரணத்தாலா) அவரைப் புறக்கணிக்கின்றார்கள்? 23:70 அல்லது ‘அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது’ என்று கூறுகின்றார்களா? இல்லை, மாறாக அவர்களிடம் அவர் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். சத்தியத்தை விரும்பாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர். 23:71 மேலும், சத்தியம் அவர்களின் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்லுமாயின் வானங்கள், பூமி மற்றும் அவற்றில் வாழும் அனைத்தின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் இல்லை, மாறாக அவர்களுக்கே உரிய நல்லுரையை அவர்களிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்; அவர்களோ தங்களுக்கே உரிய நல்லுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். 23:72 அல்லது நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா, என்ன? உமக்கு உம் இறைவன் வழங்கியதே மிகச் சிறந்ததாகும். மேலும், வாழ்வாதாரம் வழங்குபவர்களில் எல்லாம் அவன் மிகச் சிறந்தவனாவான். 23:73 திண்ணமாக, நீர் அவர்களை நேரிய வழியில் அழைத்துக் கொண்டிருக்கின்றீர். 23:74 ஆயினும் மறுமையை நம்பாதவர்கள் நேரிய வழியை விட்டு விலகிச் செல்ல விரும்புகின்றார்கள். 23:75 இவர்களுக்கு நாம் கருணை புரிவோமாயின், மேலும் (இன்று) இவர்களுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நாம் அகற்றி விடுவோமாயின், அவர்கள் தங்களுடைய வரம்பு மீறிய நடத்தையில், முற்றிலும் மூழ்கிவிடுவார்கள். 23:76 (இவர்களின் நிலைமை எப்படிப்பட்டதெனில்) நாம் இவர்களைத் துன்பத்திற் குள்ளாக்கினோம்; அவ்வாறிருந்தும் அவர்கள் தம் இறைவனின் திருமுன் சிரம் சாய்க்கவோ பணிவை மேற்கொள்ளவோ இல்லை. 23:77 இறுதியில், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விட்டாலோ உடனே அவர்கள் எல்லாவித நன்மைகளை விட்டும் நிராசை அடைந்துவிடுவர் (என்பதை நீர் காண்பீர்!) 23:78 அந்த அல்லாஹ்தானே உங்களுக்கு கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வேண்டிய ஆற்றல்களையும், சிந்திப்பதற்கு இதயத்தையும் வழங்கியிருக்கின்றான். ஆயினும், மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள். 23:79 மேலும், அவன்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். மேலும், அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். 23:80 அவனே வாழ்வளிக்கின்றான்; மரணமடையச் செய்கின்றான். மேலும், இரவுபகல் மாறி மாறி வருவது அவன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவையெல்லாம் உங்கள் அறிவுக்குப் புலப்படவில்லையா என்ன? 23:81 ஆயினும், இவர்களுடைய முன்னோர்கள் கூறியதைப் போன்றே இவர்களும் கூறுகின்றார்கள். 23:82 இவர்கள் சொல்கிறார்கள்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆன பின்னர் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவோமா, என்ன? 23:83 இத்தகைய எச்சரிக்கைகளை நாங்களும் நிறையக் கேள்விப்படுகின்றோம். இதற்கு முன்னர் எங்கள் முன்னோர்களும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். இவை தொன்மையான கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை!” 23:84 (இவர்களிடம்) கேளுங்கள்: “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் இதிலுள்ள அனைவரும் யாருக்குரியவர்கள் என்பதைக் கூறுங்கள்.” 23:85 திண்ணமாக, அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள், “அல்லாஹ்வுக்கு உரியவர்கள்” என்று! பிறகு, “நீங்கள் ஏன் உணர்ந்து கொள்வதில்லை” என்று கேளுங்கள். 23:86 “ஏழு வானங்களின் உரிமையாளனும் மகத்துவம் மிக்க அர்ஷின் உரிமையாளனும் யார்?” என்று இவர்களிடம் வினவுங்கள். 23:87 இவர்கள் திண்ணமாக பதில் கூறுவார்கள், “அல்லாஹ்தான்” என்று! கேளுங்கள்: “பிறகு ஏன் நீங்கள் அஞ்சுவதில்லை?” 23:88 மேலும், அவர்களிடம் கேளுங்கள்: “உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஒவ்வொரு பொருளின்மீதுள்ள அதிகாரமும் யாருடைய கைவசம் இருக்கின்றது என்றும் மேலும், அனைவருக்கும் அபயம் அளிப்பவனும் எவராலும் அபயம் அளிக்கப்பட முடியாதவனும் யார் என்றும்!” 23:89 திண்ணமாக, அவர்கள் கூறுவார்கள்: “இவை அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” பிறகு, கேளுங்கள்: “எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்?” 23:90 சரியாகச் சொல்வதானால் சத்தியத்தையே நாம் இவர்கள் முன் கொண்டு வந்துள்ளோம். ஆயினும், இவர்கள் பொய்யர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 23:91 அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு! 23:92 வெளிப்படையானவற்றையும், மறைவானவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். அவர்களுடைய இணைவைப்பிலிருந்து அல்லாஹ் மிக மேலானவன். 23:93 (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால் 23:94 என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!” 23:95 இவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும் அந்த வேதனையை உமது கண்ணெதிரிலேயே கொண்டு வருவதற்கும் உண்மையில் நாம் முழு வலிமை பெற்றிருக்கின்றோம். 23:96 (நபியே!) எது மிக உன்னத வழிமுறையாய் உள்ளதோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் (உம்மீது) புனைந்து கூறுகின்றவற்றை நாம் நன்கறிவோம். 23:97 மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். 23:98 மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.” 23:99 (இம்மக்கள் தம் செயல்களைவிட்டு விலகிக் கொள்ளவே மாட்டார்கள்;) இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்துவிடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! 23:100 அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான் அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்! (இறந்து போகும்) இவர்கள் அனைவருக்கும் பின்னால், ‘பர்ஸக்’* திரையாக இருக்கின்றது; இவர்கள் மீண்டும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரையில்! 23:101 பிறகு, சூர்எக்காளம் ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள். 23:102 (அவ்வேளை) எவர்களுடைய (நன்மையின்) எடைத் தட்டுகள் கனத்திருக்குமோ அவர்களே வெற்றி பெறுவார்கள். 23:103 எவர்களுடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ அவர்கள் தங்களைத் தாங்களே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டவர்களாவர். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாயிருப்பார்கள். 23:104 நெருப்பு அவர்களுடைய முகங்களின் தோலை நக்கித் தின்றுவிடும். மேலும், அங்கே அவர்களின் தாடைகள் வெளிப்பட்டுவிடும். 23:105 “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட போது, அவற்றைப் பொய்யென்று கூறிய மக்கள் நீங்கள் அல்லவா?” 23:106 அதற்கு அவர்கள் கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களின் துர்ப்பாக்கியம் எங்களை அமுக்கிவிட்டிருந்தது. உண்மையிலேயே நாங்கள் வழிதவறிய மக்களாகவே இருந்தோம். 23:107 எங்கள் இறைவனே! (இப்பொழுது) எங்களை இதிலிருந்து வெளியேற்றி விடு; நாங்கள் மீண்டும் (இவ்வாறு) தவறு செய்தால் நிச்சயம் நாங்கள் கொடுமைக்காரர்களாவோம்.” 23:108 அல்லாஹ் பதிலளிப்பான்: “விலகிச் செல்லுங்கள் என் எதிரிலிருந்து; அதிலேயே வீழ்ந்து கிடங்கள்! என்னிடம் பேசாதீர்கள்.” 23:109 என் அடியார்களில் சிலர் “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; எனவே, எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கருணை புரிவாயாக! கருணை புரிவோரிலெல்லாம் நீயே சிறந்த கருணையாளன்” என்று இறைஞ்சிக்கொண்டிருந்தார்கள். 23:110 அப்போது நீங்கள் அவர்களை ஏளனம் செய்து கொண்டிருந்தீர்கள். எதுவரையெனில், அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பகைமை, நான் ஒருவன் இருக்கின்றேன் என்பதையே உங்களை மறக்கச் செய்து விட்டது. மேலும், நீங்கள் அவர்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள். 23:111 அவர்கள் சகித்துக் கொண்டதற்காக இன்று நான் இந்தக் கூலியை அளிக்கின்றேன். அதாவது, அவர்களே வெற்றி பெற்றவர்கள். 23:112 பிறகு, அல்லாஹ் (அவர்களிடம்) “நீங்கள் பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்பான். 23:113 அதற்கவர்கள், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் கொஞ்சநேரம் அங்கு நாங்கள் தங்கியிருந்தோம்; கணக்கிடுவோரிடம் கேட்பாயாக!” என்று கூறுவார்கள். 23:114 அல்லாஹ் கூறுவான்: “நீங்கள் சிறிது காலமே தங்கியிருந்தீர்கள்! (இதனை அப்போது) நீங்கள் அறிந்திருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கும்! 23:115 நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன?” 23:116 மிக உயர்ந்தவனாவான், உண்மையான அரசனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, சங்கைமிகு அர்ஷின் உரிமையாளன். 23:117 யாரேனும் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைத்தால் அது பற்றி அவனிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடமே உள்ளது! இத்தகைய நிராகரிப்பாளர்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. 23:118 (நபியே!) நீர் இறைஞ்சுவீராக: “என் இறைவனே! மன்னித்து கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்!”
அத்தியாயம்  அந்நூர்  24 : 1-20 / 64
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
24:1 இது ஓர் அத்தியாயம்; இதனை நாம் இறக்கியருளினோம். இதனை நாம் விதியாக்கியிருக்கின்றோம். மேலும், இதில் தெளிவான கட்டளைகளையும் நாம் இறக்கியிருக்கின்றோம். (இதனால்) நீங்கள் பாடம் பெறக்கூடும்! 24:2 விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும். 24:3 விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண் ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண் ணையோ தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம். விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இறைவனுக்கு இணை வைப்பவனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இது இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. 24:4 எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். 24:5 ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 24:6 ஆனால், யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு சுமத்துகின்றார்களோ மேலும், அதற்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். 24:7 மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும். 24:8 ‘இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்’ என்று அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி, 24:9 ஐந்தாவது தடவை இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் அளிக்கும் சாட்சியம், அவளைவிட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும். 24:10 உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்து, மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிட்டிருக்கும்!) 24:11 இந்த அவதூறைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது. 24:12 நீங்கள் இதனைச் செவியுற்ற போதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி ஏன் நல்லெண்ணம் கொள்ளவில்லை? இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று ஏன் அவர்கள் கூறிடவில்லை? 24:13 அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) ஏன் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லை? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர். 24:14 உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் பொழிந்திருக்கா விட்டால் எந்த விஷயங்களில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் பயனாக உங்களுக்குப் பெரும் வேதனை ஏற்பட்டிருக்கும். உங்களில், ஒருவரின் நாவிலிருந்து மற்றவரின் நாவுக்கு இந்த அவதூறுச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவறைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்று சிந்தியுங்கள்! 24:15 நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது. 24:16 நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, “இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதல்ல; ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று ஏன் நீங்கள் கூறிடவில்லை? 24:17 நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான். 24:18 மேலும், அல்லாஹ் உங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் நன்கு அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆவான். 24:19 இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை. 24:20 அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது பொழிந்திராவிட்டால், மேலும், அல்லாஹ் மிகுந்த பரிவு கொண்டவனாயும் கிருபையாளனாயும் இல்லாதிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்)!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)