அத்தியாயம்  அல் ஹஜ்  22 : 1-78 / 78
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
22:1 மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்! 22:2 அதனை நீங்கள் பார்க்கும் நாளில் நிலைமை எவ்வாறு இருக்குமெனில், பாலூட்டும் ஒவ்வொரு தாயும் பால் அருந்தும் தன் குழந்தைகளை மறந்துவிடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பமும் வீழ்ந்துவிடும். மேலும், மக்கள் மயக்கமுற்றவர்களாய் உமக்குத் தென்படுவார்கள். உண்மையில் அவர்கள் மயக்கத்தில் இருக்கமாட்டார்கள். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை அந்த அளவுக்குக் கடுமையாய் இருக்கும். 22:3 மனிதர்களில் சிலர் இவ்வாறு இருக்கின்றார்கள்: அவர்கள் ஞானமில்லாமல் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றார்கள். 22:4 ஆனால், அந்த ஷைத்தானுடைய விதியில் எழுதப்பட்டுள்ளது என்ன? அவனுடன் யாரேனும் நட்பு கொண்டால் அவர்களை அவன் திண்ணமாக, வழிகெடுத்து விடுவான். நரக வேதனையின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டுவான். 22:5 மனிதர்களே! மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; நாம் உங்களை மண்ணிலிருந்து பிறகு இந்திரியத்திலிருந்து பிறகு இரத்தக்கட்டியிலிருந்து பிறகு வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத சதைப் பிண்டத்திலிருந்து படைத்தோம். உண்மை நிலையை உங்களுக்கு நாம் விளக்குவதற்காகத்தான் (இவற்றை நாம் எடுத்துரைக்கின்றோம்). நாம் நாடுகின்ற (இந்திரியத்)தை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறைகளில் தங்க வைக்கின்றோம். பிறகு, உங்களைக் குழந்தை வடிவில் வெளிக்கொணர்கின்றோம்; (பிறகு உங்களை வளர்க்கின்றோம்;) நீங்கள் வாலிபத்தை அடைவதற்காக! மேலும், உங்களில் சிலர் முன்னரே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றார்கள். வேறு சிலர் மிக மோசமான வயோதிகத்தின் பக்கம் திருப்பப்படுகின்றார்கள்; யாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாத நிலையை அடைவதற்காக! இன்னும் நீங்கள் பார்க்கின்றீர்கள்: பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது. 22:6 இவையனைத்திற்கும் காரணம் இதுதான்: திண்ணமாக, அல்லாஹ்தான் உண்மையானவன். மேலும், உயிரற்றவற்றை அவனே உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 22:7 இன்னும் மறுமை நாள் வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை (என்பதற்கும் இது ஒரு சான்றாகும்). மேலும், மண்ணறைகளில் உள்ளவர்களைத் திண்ணமாக அல்லாஹ் எழுப்புவான். 22:8 மக்களில் வேறு சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஞானமோ, வழிகாட்டுதலோ, ஒளியூட்டும் வேதமோ எதுவுமின்றி பிடரியை நிமிர்த்திக் கொண்டு அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் புரிகின்றார்கள். 22:9 மக்களை இறைவழியிலிருந்து பிறழச் செய்ய வேண்டும் என்பதற்காக! இத்தகையவர்களுக்கு உலகில் இழிவுதான் இருக்கிறது. மேலும், மறுமையில் அவர்களை நாம் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம். 22:10 இதுதான் உன்னுடைய கைகள் உனக்காக தயார்செய்து வைத்துள்ள எதிர்காலம். தவிர அல்லாஹ் தன்னுடைய அடிமைகள் மீது அக்கிரமம் இழைப்பவன் அல்லன். 22:11 மேலும், மனிதர்களில் இன்னும் சிலர் இருக்கின்றார்கள்; அவர்கள் ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மனநிறைவு கொள்கின்றார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் வெளிப்படையான நஷ்டமாகும்! 22:12 பிறகு, அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்களுக்கு எவ்வித நஷ்டத்தையும் இலாபத்தையும் அளிக்க முடியாதவற்றை அழைக்கின்றார்கள். இதுதான் வழிகேட்டின் இறுதி எல்லை! 22:13 எவர்களின் தீமை, நன்மையைவிட நெருக்கமாக இருக்கின்றதோ, அவர்களையே இவர்கள் அழைக்கின்றார்கள். அவர்களுடைய பாதுகாவலர்களும் மிக மோசமானவர்கள்! அவர்களுடைய தோழர்களும் மிக மோசமானவர்கள். 22:14 (இதற்கு மாறாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அல்லாஹ் நுழைவிப்பான். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்கின்றான். 22:15 இம்மையிலும் மறுமையிலும், தனக்கு எவ்வித உதவியும் அல்லாஹ் புரிந்திட மாட்டான் என்று எவன் சந்தேகம் கொள்கின்றானோ அவன் ஒரு கயிற்றின் துணையால் வானத்திற்குச் சென்று அதைப் பிளக்கட்டும். பின்னர், தனது உபாயத்தைக் கொண்டு தனக்கு எது வெறுப்பாய் உள்ளதோ அதைத் தடுத்திட முடியுமா என்று பார்க்கட்டும்! 22:16 இவ்வாறே தெளிவான விஷயங்களைக் கொண்டதாக இந்தக் குர் ஆனை நாம் இறக்கியருளினோம். மேலும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழி அளிக்கின்றான். 22:17 இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரி டையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது. 22:18 வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காணவில்லையா? அல்லாஹ் யாரைக் கேவலப்படுத்துகின்றானோ, அவரைக் கண்ணியப்படுத்துபவர் எவருமில்லை. திண்ணமாக, அல்லாஹ், தான் நாடியதைச் செய்கின்றான். 22:19 இவர்கள் தங்களுடைய இறைவனைப் பற்றி தர்க்கம் புரிந்து கொண்டிருக்கும் இரு பிரிவினர் ஆவர். (இவர்களில்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நெருப்பு ஆடைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய தலைகளின் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். 22:20 அதனால் இவர்களின் தோல்கள் மட்டுமல்ல; வயிற்றினுள் இருக்கும் பகுதிகளும் வெந்து உருகிவிடும்! 22:21 மேலும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காக இரும்புச் சம்மட்டிகள் இருக்கின்றன. 22:22 மன வேதனையினால், நரகத்திலிருந்து வெளியேற அவர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், “சுட்டெரிக்கும் தண்டனையைச் சுவையுங்கள்” என்று மீண்டும் அதிலேயே தள்ளப்படுவார்கள். 22:23 (மறுபுறத்தில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்கு தங்கக் காப்புகளும் முத்துகளும் அணிவிக்கப்படும். மேலும், அவர்களின் ஆடை பட்டாக இருக்கும்! 22:24 பரிசுத்த வாக்கியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது. மேலும், மாபெரும் புகழுக்குரிய தன்மைகளைக் கொண்ட இறைவனின் வழி அவர்களுக்குக் காட்டப்பட்டது. 22:25 திண்ணமாக, எவர்கள் நிராகரித்தார்களோ மேலும், எவர்கள் (இன்று) அல்லாஹ்வின் வழியை விட்டு தடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ, இன்னும் மக்கள் அனைவருக்காகவும் நாம் நிர்மாணித்த மஸ்ஜிதுல் ஹராமை உள்ளூர் மக்களுக்கும் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் சம உரிமை உள்ள மஸ்ஜிதுல் ஹராமை தரிசிப்பதைத் தடை செய்கிறார்களோ (அத்தகையோரின் நடத்தை கண்டிப்பாக தண்டனைக்குரியதாக இருக்கிறது) மேலும், எவர்கள் இ(ந்த மஸ்ஜி)தில் நேர்மை தவறிக் கொடுமை இழைக்கின்றார்களோ அத்தகையவர்களுக்கு நாம் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்! 22:26 நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் நிர்ணயம் செய்து கொடுத்த சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘எப்பொருளையும் என்னோடு இணையாக்காதீர்; மேலும் தவாஃப் சுற்றி வருவோர்க்காகவும் நின்றும் குனிந்தும் தரையில் சிரம் வைத்தும் வணங்குவோர்க்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!’ 22:27 ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்; 22:28 அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்; 22:29 பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்! 22:30 இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள். 22:31 அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அவரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார். 22:32 உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும். 22:33 (பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்! 22:34 மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந்தச் சமூக) மக்கள் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக! 22:35 அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால், அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன. அவர்களுக்கு எவ்விதத் துன்பம் நேரிடினும் அதனைப் பொறுத்துக் கொள்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றார்கள். நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள். 22:36 மேலும் (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்குப் பெரும் நன்மை இருக்கின்றது. எனவே, நிற்க வைத்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள். (குர்பானி கொடுத்த பின்) அவற்றின் விலாப்புறங்கள் பூமியில் சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்; இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்க்கும் மற்றும் தங்களுடைய தேவையை வெளிப்படுத்துகின்றவர்களுக்கும் புசிக்கக் கொடுங்கள். இவ்வாறே இப்பிராணிகளை நாம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளோம்; நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு! 22:37 அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக! 22:38 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு திண்ணமாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கின்றான். நம்பிக்கைத்துரோகம் செய்யக்கூடிய, நன்றி கொல்லக் கூடிய எவரையும் நிச்சயம் அல்லாஹ் நேசிப்பதில்லை! 22:39 எவர்களுக்கு எதிராகப் போர்புரியப்படுகின்றதோ அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டது. ஏனெனில், அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கின்றான். 22:40 தங்களின் வீடுகளை விட்டு அவர்கள் நியாயமின்றி வெளியேற்றப்பட்டார்கள். ‘அல்லாஹ்தான் எங்கள் இறைவன்’ என்று அவர்கள் கூறியதுதான் அவர்கள் செய்த குற்றம். அல்லாஹ் மக்களில் சிலரைக்கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், யூத ஆலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிக அளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும்! திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான். நிச்சயம் அல்லாஹ் வலிமை வாய்ந்தவனும் யாவற்றையும் மிகைத்தவனுமாவான். 22:41 அவர்கள் எத்தகையவர்களெனில், நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும், நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். மேலும், எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. 22:42 (நபியே! இறைநிராகரிப்பாளர்களான) அவர்கள் உம்மைப் பொய்யர் எனத் தூற்றுகின்றனர் எனில், அவர்களுக்கு முன்னர் நூஹின் சமுதாயத்தினரும் ஆத், ஸமூத் இனத்தார்களும்; 22:43 இப்ராஹீமின் சமூகத்தினர், லூத்தின் சமூகத்தினர் ; 22:44 மற்றும் மத்யன்வாசிகள் ஆகிய அனைவரும் பொய்யர் எனத் தூற்றியுள்ளார்கள். மூஸாவும் பொய்யர் எனத் தூற்றப்பட்டிருக்கிறார். சத்தியத்தை நிராகரித்த இவர்கள் அனைவருக்கும் நான் முதலில் சிறிது அவகாசமளித்தேன்; பின்னர், அவர்களைப் பிடித்துக் கொண்டேன். (பாருங்கள்;) எனது தண்டனை எப்படியிருந்தது என்பதை! 22:45 அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். (இன்று) அவை தலைகீழாக கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் பாழடைந்தும் எத்தனையோ மாடமாளிகைகள் சீரழிந்தும் கிடக்கின்றன. 22:46 பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக்கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே! உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை; ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகிவிடுகின்றன. 22:47 வேதனை விரைவில் வரவேண்டுமென உம்மிடம் இம்மக்கள் அவசரப்படுகின்றார்கள்! அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்! ஆனால், உம் இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். 22:48 கொடுமை புரிந்த எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. நான் (முதலில்) அவற்றுக்கு அவகாசம் அளித்து, பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன். மேலும், (அனைவரும்) என்னிடமே திரும்பி வர வேண்டியுள்ளது. 22:49 (நபியே!) நீர் கூறும்: “மனிதர்களே! (மோசமான அந்நாள் வரும் முன்) நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே ஆவேன்.” 22:50 பின்னர், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், நற்பேறும் உண்டு. 22:51 ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காக முயற்சி செய்வார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். 22:52 (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும் நபியானாலும் ஒரு விஷயம் நடைபெற வேண்டு மென அவர் விரும்பும்போது ஷைத்தான் அவருடைய விருப்பத்தில் இடையூறு விளைவிக்காமல் இருந்ததில்லை. இவ்வாறு ஷைத்தான் ஏற்படுத்தும் இடையூறுகளை அல்லாஹ் நீக்கிவிடுகின்றான். பின்னர் தன்னுடைய வசனங்களை அல்லாஹ் உறுதிப்படுத்திவிடுகின்றான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 22:53 (அவன் இவ்வாறு நிகழச் செய்வது) எதற்காகவெனில், இதயங்களில் (வஞ்சகப்) பிணி உள்ளவர்களுக்கும், உள்ளங்கள் இறுகிப் போய்விட்டவர்களுக்கும் ஷைத்தான் விளைவிக்கின்ற தீமையை ஒரு சோதனையாய் ஆக்கிட வேண்டும் என்பதற்காக! உண்மையில், இந்தக் கொடுமையாளர்கள் பிணக்கிலும், பகைமையிலும் வெகுதூரம் சென்று விட்டிருக்கின்றார்கள். 22:54 மேலும், திண்ணமாக இவ்வேதம் உம்முடைய அதிபதியிடமிருந்து வந்த உண்மையாகும் என்பதை அறிவு வழங்கப்பட்டவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் இதன் மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதற்காகவும் மேலும், அவர்களின் இதயங்கள் அவன் முன் பணிந்து விடுவதற்காகவும்தான் (இவ்வாறெல்லாம் நிகழச் செய்தான்). உறுதியாக, அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு என்றென்றும் நேர்வழியைக் காண்பிக்கக் கூடியவனாக இருக்கின்றான். 22:55 ஆனால், இறைவனை மறுக்கக்கூடியவர்கள் இதைப் பற்றி சந்தேகம் கொண்ட வண்ணமிருப்பார்கள்; எதுவரையெனில், இறுதித் தீர்ப்புநாள் அவர்களிடம் திடீரென வரும் வரை அல்லது துயரம் மிகுந்த ஒரு நாளின் வேதனை அவர்கள் மீது இறங்கும் வரை! 22:56 அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு உரித்தான தாயிருக்கும். அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் அருட்கொடைகள் நிறைந்த சுவனபதிகளுக்குச் செல்வார்கள். 22:57 மேலும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யென்று உரைத்தார்களோ அவர்களுக்கு இழிவு படுத்தும் வேதனை இருக்கின்றது. 22:58 மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டார்களோ அல்லது மரணமடைந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அழகிய நற்பேறுகள் வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் நற்பேறுகள் வழங்குபவர்களில் மிகவும் சிறந்தவனாவான். 22:59 அவர்கள் திருப்திபடுகின்ற இடத்தில் அவர்களை நுழைவிப்பான். திண்ணமாக, அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். 22:60 இதுதான் அவர்களின் நல்ல முடிவாகும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ப ஒருவன் பழிவாங்கிய பிறகு, மீண்டும் அவன் மீதே அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவனுக்கு அவசியம் உதவி புரிவான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான். 22:61 இது ஏனெனில், திண்ணமாக அல்லாஹ்தான் இரவில் இருந்து பகலையும், பகலிலிருந்து இரவையும் வெளிக் கொணர்கின்றான். மேலும், யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 22:62 இது ஏனெனில், அல்லாஹ்தான் உண்மையானவன்; அல்லாஹ்வை விடுத்து இவர்கள் அழைக்கின்ற அனைத்தும் போலியானவை. மேலும், அல்லாஹ்தான் உயர்ந்தவனும் மாபெரியவனுமாவான். 22:63 அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழிய வைக்கின்றான்; அதனால் பூமி பசுமையாகின்றது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? உண்மையில் அல்லாஹ் நுண்மையானவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 22:64 வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். ஐயமின்றி அல்லாஹ் தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான். 22:65 நீங்கள் பார்க்கவில்லையா, என்ன? அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக வசப்படுத்தி வைத்துள்ளான்; மேலும், கப்பலை ஒரு நியதிக்கு உட்படுத்தி வைத்திருப்பதும் அவன்தான். அது அவனுடைய கட்டளைப்படி கடலில் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், அவனே வானத்தைத் தன் பிடியில் வைத்திருக்கின்றான், தன் உத்தரவின்றி அது பூமியின் மீது விழுந்துவிடாமல் இருப்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் மனிதர்கள் மீது மிகவும் பரிவு கொண்டவனாகவும் பெரும் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். 22:66 உங்களுக்கு வாழ்வு அளிப்பவன் அவனே. பின்னர், அவனே உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், அவனே உங்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பான். உண்மையில், மனிதன் பெரிதும் சத்தியத்தை நிராகரிப்பவனாக இருக்கின்றான். 22:67 நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை நிர்ணயித்திருக்கின்றோம்; அதனை அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்! எனவே, (நபியே!) இவ்விவகாரத்தில் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்ய வேண்டாம். நீர் உம் இறைவன் பக்கம் அழைப்பு விடுப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியிலேயே இருக்கின்றீர். 22:68 அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால் நீர் கூறி விடுவீராக: “நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்விற்கு நன்கு தெரியும். 22:69 நீங்கள் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றீர்களோ அவை அனைத்தைப் பற்றியும் அல்லாஹ் மறுமைநாளில் உங்களிடையே தீர்ப்பு வழங்குவான்.” 22:70 நீங்கள் அறியவில்லையா? வானம் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். அவை அனைத்தும் ஓர் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்ணமாக, இது அல்லாஹ்வுக்குச் சற்றும் சிரமமானதன்று. 22:71 இவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. மேலும், அவற்றைக் குறித்து இவர்கள் எந்தவிதமான ஞானத்தையும் பெற்றிருக்கவில்லை. கொடுமை புரியும் இம்மக்களுக்கு உதவிபுரிபவர் யாரும் இல்லை. 22:72 மேலும், இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படும்பொழுது சத்தியத்தை நிராகரிப்பவர்களின் முகங்களில் வெறுப்பு ஏற்படுவதைக் காண்பீர். நம்முடைய வசனங்களை இவர்களுக்கு ஓதிக்காண்பிக்கின்றவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போல் தெரிகின்றது! (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “இதைவிடத் தீயதை உங்களுக்கு நான் அறிவித்துத் தரவா? நரகம்! சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அல்லாஹ் அதைத்தான் வாக்களித்திருக்கின்றான். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.” 22:73 மனிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டு போனாலும்கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே! 22:74 இவர்கள் அல்லாஹ்வின் மதிப்பை எந்த முறைப்படி உணர வேண்டுமோ அந்த முறைப்படி உணரவே இல்லை. உண்மை யாதெனில், பெரும் வலிமையும் கண்ணியமும் உடையவன் அல்லாஹ்வே ஆவான். 22:75 திண்ணமாக அல்லாஹ் (தன்னுடைய கட்டளைகளை சேர்ப்பிப்பதற்காக) வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 22:76 மக்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். மேலும், எல்லா விவகாரங்களும் அவன் பக்கமே திருப்பப் படுகின்றன. 22:77 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும்* செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணி ஆற்றுங்கள். (இதன் மூலமே) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! 22:78 மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு இதே பெயர்தான்!) தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள்; மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய பாதுகாவலன். அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)