அத்தியாயம்  அல் அன்பியா  21 : 1-112 / 112
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
21:1 நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். 21:2 அவர்களுடைய இறைனிடமிருந்து புதிது புதிதாக எந்த அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை விருப்பமின்றியே செவியேற்கிறார்கள்; கேளிக்கைகளிலும் இலயித்துக் கொண்டிருக்கிறார்கள். 21:3 அவர்களுடைய உள்ளங்கள் (வேறு சிந்தனைகளில்) மூழ்கியிருக்கின்றன. கொடுமையாளர்கள் தமக்கிடையே இரகசியமாகப் பேசிக்கொள்கின்றார்கள். “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே! இதனை நீங்கள் கண்கொண்டு பார்த்தும் மாயவலையில் சிக்கிக் கொள்வீர்களா, என்ன?” 21:4 அதற்கு இறைத்தூதர் கூறினார்: “என்னுடைய இறைவன் வானம் மற்றும் பூமியில் பேசப்படுபவை அனைத்தையும் அறிகின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.” 21:5 அதற்கு அவர்கள் கூறுகின்றார்கள்: “இவை வீண் கனவுகள்; இல்லையில்லை இவை, இவர் கற்பனை செய்து கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு கவிஞரே! இல்லையென்றால் முற்காலத்து இறைத்தூதர்கள் சான்றுகளுடன் அனுப்பப்பட்டதுபோல் இவரும் நமக்கு ஒரு சான்றினைக் கொண்டுவரட்டும்!” 21:6 உண்மை யாதெனில், இவர்களுக்கு முன்னால் நாம் அழிவிற்குள்ளாக்கிய எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இனி, இவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்களா? 21:7 மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 21:8 அத்தூதர்களுக்கு உணவு உட்கொள்ளாத உடலை நாம் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் நித்திய ஜீவிகளாயும் இருக்கவில்லை. 21:9 பின்னர் பாருங்கள், நாம் அவர்களிடம் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். மேலும் அவர்களையும், நாம் யார் யாரை நாடினோமோ அவர்கள் அனைவரையும் காப்பாற்றினோம். மேலும், வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம். 21:10 (மக்களே!) உங்களுக்கு ஒரு வேதத்தை அனுப்பியுள்ளோம். அதில் உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. என்ன, நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களா? 21:11 கொடுமைகள் புரிந்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களை நாம் தகர்த்தெறிந்திருக்கிறோம். அதற்குப் பின் வேறு ஒரு சமூகத்தைத் தோற்றுவித்தோம். 21:12 நம்முடைய வேதனைச் சாட்டை தங்கள் மீது படப் போகிறது என அவர்கள் உணர்ந்தபோது, அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். 21:13 (அப்போது கூறப்பட்டது:) “ஓடாதீர்கள்! நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆடம்பர வாழ்வு மற்றும் இன்புற்று வாழ்ந்த இல்லங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் அவற்றைப் பற்றி வினவப்படக் கூடும்.” 21:14 அதற்கு அவர்கள் புலம்பலானார்கள்: “அந்தோ, எங்கள் துர்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் அக்கிரமக்காரர்களாயிருந்தோம்.” 21:15 தொடர்ந்து அவர்கள் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். எதுவரையெனில், வாழ்வின் ஒரு பொறியும் அவர்களிடம் எஞ்சி நிற்காத அளவுக்கு, அரிதாள்கள் அழிக்கப்படுவதுபோல் நாம் அவர்களை அழிக்கும்வரை! 21:16 நாம் இந்த வானத்தையும் பூமியையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை. 21:17 விளையாட்டிற்காக நாம் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடியிருந்தால் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்றிருந்தால் நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம். 21:18 ஆயினும், நாம் சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்திற்கு அடி கொடுக்கின்றோம். அது, அசத்தியத்தின் தலையைப் பெயர்த்துவிடுகின்றது. பிறகு பார்த்துக் கொண்டிருக்கவே அசத்தியம் அழிந்தும் விடுகின்றது. நீங்கள் இட்டுக்கட்டிய பேச்சின் காரணத்தால் உங்களுக்குக் கேடுதான் இருக்கிறது. 21:19 வானங்களிலும், பூமியிலும் உள்ள படைப்பினங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எவர்கள் அவன் அருகில் இருக்கின்றார்களோ (அதாவது வானவர்கள்) அவர்கள் கர்வம் கொண்டு அவனுக்கு அடிபணிய மறுப்பதில்லை; களைத்துப் போவதுமில்லை. 21:20 (மாறாக) இரவு பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதி பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்; சோர்வடைவதும் இல்லை. 21:21 இவர்கள் உருவாக்கிய பூலோக தெய்வங்கள் (உயிரில்லாதவற்றிற்கு உயிர் கொடுத்து) எழுப்பிக் கொண்டு வரக்கூடியவையா, என்ன! 21:22 வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். எனவே, அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து ‘அர்ஷû’க்கு* உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன். 21:23 அவன் தன்னுடைய செயல்களுக்கு (எவர் முன்னிலையிலும்) பதில் சொல்ல வேண்டியவனல்லன். மற்றவர்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டியவர்களே! 21:24 அவனை விடுத்து அவர்கள் மற்ற கடவுள்களை ஏற்றுக்கொண்டார்களா? (நபியே! இவர்களிடம்) கூறும்: “உங்களின் சான்றினைக் கொண்டு வாருங்கள். இந்த வேதமும் இருக்கிறது. இதில் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்களுக்கு அறிவுரை நல்கப்பட்டுள்ளது. மேலும், எனக்கு முன் சென்றுபோன மக்களுக்கு அறிவுரை வழங்கிய வேதங்களும் இருக்கின்றன.” ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் உண்மையைப் புரியாதவர்களாய் இருக்கின்றனர்; எனவே, அவர்கள் முகம் திருப்பிச் செல்பவர்களாய் இருக்கின்றனர். 21:25 உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும், “நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே நீங்கள் அடிபணிய வேண்டும்” என்றே வஹி*யின் மூலம் நாம் அறிவித்திருந்தோம். 21:26 (கருணைமிக்க இறைவனாகிய) ரஹ்மானுக்கு பிள்ளைகள் உண்டு என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவன் மிகத் தூய்மையானவன்! உண்மையில் அவர்கள் (வானவர்கள்) அடியார்களாவர். அவர்களுக்குக் கண்ணியம் அளிக்கப்பட்டிருக்கின்றது. 21:27 அவர்கள் அவனது திருமுன் யாதொரு வார்த்தையையும் மீறிப் பேசுவதில்லை. அவனது கட்டளை எதுவோ அதன்படியே செயல்படுகின்றார்கள். 21:28 அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். அவர்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை; எவருக்காகப் பரிந்துரை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களுக்காகத் தவிர! மேலும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 21:29 “அல்லாஹ்வையன்றி நானும் ஒரு கடவுள்தான்” என்று அவர்களில் எவரேனும் கூறினால், அவருக்கு நாம் நரகத்தினுடைய தண்டனையைக் கொடுப்போம். கொடுமையாளர்களுக்கு நாம் கொடுக்கும் கூலி இதுதான். 21:30 (நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? 21:31 மேலும், பூமியில் நாம் மலைகளை ஊன்றி வைத்தோம்; அவர்களோடு அது சாய்ந்துவிடாமலிருப்பதற்காக! மேலும், அதில் அகன்ற சாலைகளையும் அமைத்தோம். மக்கள் தங்கள் பாதைகளை அறிந்து கொள்வதற்காக. 21:32 மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை. 21:33 இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. 21:34 (நபியே!) நாம் உமக்கு முன்னரும் எவருக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கவில்லை. எனவே, நீர் இறந்துவிட்டால், இவர்கள் மட்டும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்களா? 21:35 ஒவ்வோர் உயிரினமும் மரணத்தைச் சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். 21:36 உண்மையை நிராகரிக்கும் இவர்கள் உம்மைக் காணும்போது கேலி செய்கின்றார்கள். “உங்களுடைய தெய்வங்களை (இழிவாகப்) பேசுகிறவர் இவர்தாமா?” (என்று கேட்கின்றார்கள்). ஆனால், இவர்களோ (கருணை மிக்க இறைவனாகிய) ரஹ்மானை நினைவுகூரவும் மறுக்கின்றார்கள். 21:37 மனிதன் மிகவும் அவசரப்படக்கூடிய படைப்பாவான். வெகு சீக்கிரத்தில் நான் என்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். எனவே, நீங்கள் என்னிடம் அவசரப்படாதீர்கள் 21:38 அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்?” 21:39 அந்தோ! தங்களுடைய முகங்களையும் முதுகுகளையும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாத, மேலும், தமக்கு எங்கிருந்தும் உதவி கிட்டாத ஒரு நேரத்தைக் குறித்து இந்நிராகரிப்பாளர்கள் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டுமே! 21:40 ஆயினும் அந்த ஆபத்து திடீரென்று அவர்களைத் தாக்கும். அது அவர்களை எந்த அளவு திகைப்படையச் செய்து விடும் எனில், அவர்களால் அதனைத் தடுக்க முடியாது; மேலும், ஒரு கணப்பொழுது கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. 21:41 (நபியே!) உமக்கு முன்பும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். ஆயினும், அவர்களைப் பரிகாசம் செய்தவர்கள், எதைக் குறித்துப் பரிகாசம் செய்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. 21:42 (நபியே!) “இரவிலோ, பகலிலோ கருணை மிக்க இறைவனின் பிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றக் கூடியவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேளும். ஆயினும், அவர்கள் தம்முடைய இறைவனின் நல்லுரையைப் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். 21:43 நமக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கக்கூடிய வேறு கடவுள்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா, என்ன? அவை தமக்கே உதவி செய்ய முடியாதவையாக இருக்கின்றன. மேலும், நம்முடைய ஆதரவையும் அவை பெற்றிருக்கவில்லை. 21:44 உண்மை யாதெனில், இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையருக்கும் நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக் கொண்டிருந்தோம். அவ்வாறு அவர்களுடைய காலம் நீண்டு ஓடியது...! ஆனால், நாம் பூமியை பல்வேறு திசையிலிருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா? பிறகு, இவர்கள் (நம்மை) வெற்றி கொண்டு விடுவார்களா? 21:45 நபியே! நீர் அவர்களிடம் கூறும்: “நான் வஹியின் அடிப்படையில் உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்” ஆயினும், செவிடர்கள் அழைப்பை செவியேற்கவே மாட்டார்கள்அவர்கள் எச்சரிக்கப்படும்போது! 21:46 உம்முடைய இறைவன் தரும் வேதனை சிறிதளவு அவர்களைத் தீண்டிவிட்டால் கூட “எங்களின் துர்ப்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் கொடுமையாளர்களாய் இருந்தோம்” என்று அலறுவார்கள். 21:47 நாம் மறுமைநாளில் துல்லியமாக எடை போடும் தராசுகளை நிறுவுவோம். பிறகு, எவருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. எவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர்முன் கொண்டு வருவோம். கணக்கு வாங்குவதற்கு நாமே போதும். 21:48 முன்பு நாம் மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தக்கூடிய) ஃபுர்கானையும், ஒளியையும், அறிவுரையையும் அருளியிருந்தோம். இவை இறையச்சமுடையோருக்கு பயனளிக்கக் கூடியவையாகும். 21:49 அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், கண்ணால் பார்க்காமலே தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்கள். மேலும் (கணக்கு வாங்கும்) அந்நாளைப் பற்றி அஞ்சுகின்றார்கள். 21:50 மேலும், பாக்கியங்கள் நிறைந்த இந்த அறிவுரையை இப்பொழுது நாம் (உங்களுக்காக) இறக்கியிருக்கின்றோம். இனி, நீங்கள் இதனை ஏற்க மறுக்கின்றீர்களா, என்ன? 21:51 அதற்கும் முன்பு நாம் இப்ராஹீமுக்கு நல்லறிவை வழங்கியிருந்தோம். மேலும், நாம் அவரை நன்கு அறிந்திருந்தோம். 21:52 அவர் தம்முடைய தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும். “என்ன இது! நீங்கள் இந்த உருவச்சிலைகள் மீது இத்தனை ஆர்வத்துடன் பற்று கொண்டுள்ளீர்களே!” 21:53 அதற்கு அவர்கள், “எங்கள் மூதாதையர் அவற்றை வணங்கி வந்ததை நாங்கள் கண்டோம்” என்று மறுமொழி தந்தார்கள். 21:54 அதற்கு அவர் கூறினார்: “நீங்களும் வழி பிறழ்ந்திருக்கின்றீர்கள்; உங்களுடைய மூதாதையரும் வெளிப்படையான வழிகேட்டில் கிடந்தார்கள்” 21:55 அதற்கவர்கள் கேட்டார்கள்: “எங்களிடம் உண்மையான கருத்தைத்தான் எடுத்துரைக்கின்றீரா? அல்லது கேலி செய்கின்றீரா?” 21:56 அதற்கவர் பதிலளித்தார்: “இல்லை, உண்மையில் வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிற்கு அதிபதியாக இருப்பவன் யாரோ அவனே உங்களின் அதிபதி ஆவான். இதற்கு நான் உங்கள் முன் சாட்சியம் கூறுகின்றேன். 21:57 மேலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் இல்லாத சமயம் உங்களுடைய உருவச் சிலைகளை திண்ணமாக, நான் ஒரு கை பார்ப்பேன்.” 21:58 பிறகு அவர் அவற்றைத் துண்டு துண்டாய் உடைத்தார். அவற்றில் பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்தார். அவர்கள் அதனை நோக்கி வரக் கூடும் என்பதற்காக! 21:59 அவர்கள் (திரும்பி வந்து சிலைகளின் இந்த நிலையைக் கண்டதும்) கேட்கலாயினர்: “நம்முடைய தெய்வங்களை இந்நிலைக்கு ஆளாக்கியவன் யார்? உண்மையில் அவன் பெரும் கொடுமைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்.” 21:60 (சிலர்) கூறினர்: “இப்ராஹீம் எனும் பெயருடைய ஓர் இளைஞர் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாங்கள் கேட்டிருந்தோம்.” 21:61 அதற்கவர்கள் கூறினர்: “பிடித்துக் கொண்டு வாருங்கள் அவரை, எல்லோர் முன்னிலையிலும்! (அவர் மீது எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை) மக்கள் பார்க்கட்டும்!” 21:62 (இப்ராஹீம் வந்ததும்) அவர்கள் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீர்தாமா எங்கள் கடவுள்களுடன் இவ்வாறு (தரக்குறைவாக) நடந்து கொண்டது?” 21:63 அதற்கு அவர், “இவற்றில் இந்தப் பெரிய சிலைதான் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டும். (துண்டுபட்ட) இவை பேசுமாயின் இவற்றிடமே கேட்டுப் பாருங்கள்” என்றார். 21:64 இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியின் பக்கம் திரும்பினர். பிறகு, ஒவ்வொருவரும் (தங்களுக்குள்) “உண்மையில் நீங்களே அக்கிரமக்காரர்கள்” என்று கூறினார்கள். 21:65 ஆனால் பிறகு அவர்களுடைய புத்தி தலைகீழாக மாறிற்று. “இப்ராஹீமே! இவை பேசமாட்டா என்பது உமக்குத் தெரிந்ததுதானே!” என்று கூறினார்கள். 21:66 அதற்கு இப்ராஹீம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு இலாபத்தையோ, நஷ்டத்தையோ அளிக்க வலிமையற்ற தெய்வங்களையா வணங்குகின்றீர்கள்? 21:67 சீச்சி! எவ்வளவு கேவலம்! உங்களுக்கும் நீங்கள் வழிபாடு செய்கின்ற தெய்வங்களுக்கும்! உங்களுக்குக் கொஞ்சமும் அறிவில்லையா, என்ன?” 21:68 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “எரித்துவிடுங்கள் இவரை! உதவுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு நீங்கள் ஏதும் செய்வதாயிருந்தால்!” 21:69 நாம் கூறினோம்: “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும், சாந்தமாகவும் ஆகிவிடு!” 21:70 அவர்கள் இப்ராஹீமுக்குத் தீங்கு செய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே தோல்வியுறச் செய்தோம். 21:71 நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றி, உலக மக்கள் அனைவர்க்கும் நாம் பாக்கியம் பொழிந்திருக்கிற பூமிக்கு அவர்களைக் கொண்டு வந்தோம். 21:72 நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம்; அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இவர்கள் ஒவ்வொருவரையும் நன்மக்களாகவும் நாம் ஆக்கினோம். 21:73 நாம் அவர்களை நம்முடைய கட்டளைப்படி வழிகாட்டுகின்ற தலைவர்களாக (இமாம்களாக) திகழச் செய்தோம். மேலும், அவர்கள் நற்செயல்கள் புரியும்படியும், தொழுகையை நிலை நாட்டும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் வஹியின் மூலம் அவர்களுக்கு நாம் வழிகாட்டினோம். அவர்கள் நமக்கே அடிபணிபவர்களாய்த் திகழ்ந்தார்கள். 21:74 மேலும், லூத்திற்கு நாம் ஹுக்ம் விவேகத்தையும் ஞானத்தையும் வழங்கினோம். மேலும், அருவருக்கத்தக்க செயல்கள் புரிந்து வந்த ஊரிலிருந்து அவரைக் காப்பாற்றி வெளியேற்றினோம். திண்ணமாக, அவ்வூர் மக்கள் மிகவும் கெட்டவர்களாகவும், பாவிகளாகவும் இருந்தார்கள் 21:75 மேலும், நாம் லூத்தை நம்முடைய அருளுக்கு உட்படுத்தினோம். அவர் உத்தமர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார். 21:76 இதே அருட்பேற்றினை நாம் நூஹுக்கும் வழங்கினோம். இவர்களனைவருக்கும் முன்னதாக அவர் நம்மிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்! நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அவரையும் அவர் குடும்பத்தையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம். 21:77 நம் சான்றுகளைப் பொய்யெனத் தூற்றிய சமுதாயத்தார்க்கு எதிராக நூஹுக்கு நாம் உதவியளித்தோம். திண்ணமாக, அம்மக்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தார்கள். எனவே, நாம் அவர்களனைவரையும் மூழ்கடித்தோம். 21:78 இதே அருட்பேற்றினை தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வழங்கினோம். அவர்கள் இருவரும் ஒரு வயல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்ததை நினைத்துப் பாரும்: அந்த வயலிலோ இரவு நேரத்தில் மாற்றாரின் ஆடுகள் பரவலாக மேய்ந்து கொண்டிருந்தன. மேலும், அவர்கள் தீர்ப்பு வழங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வேளை நாம் ஸுலைமானுக்குச் சரியான தீர்ப்பினை புலப்படுத்தினோம். ஆயினும், இருவருக்குமே தீர்ப்பு கூறும் நுண்ணறிவையும், ஞானத்தையும் நாம் வழங்கியிருந்தோம். 21:79 மலைகளையும், பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை அவருடன் துதிபாடிக் கொண்டிருந்தன. இந்தச்செயலைச் செய்தவர்கள் நாமேதாம்! 21:80 மேலும், உங்கள் நன்மைக்காக கவசம் தயார் செய்யும் கலையை நாம் அவருக்குக் கற்றுத் தந்தோம்; நீங்கள் போரிடும்போது உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக! பிறகு நீங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கின்றீர்களா, என்ன? 21:81 மேலும், நாம் ஸுலைமானுக்கு வேகமான காற்றை வசப்படுத்தித் தந்தோம். அது அவருடைய கட்டளைக்கிணங்கி நாம் அருள் வழங்கிய நாடுகளின் பக்கம் வீசிக்கொண்டிருந்தது. மேலும், நாம் ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்தவராகவே இருக்கின்றோம். 21:82 மேலும், ஷைத்தான்களில் பலவற்றை நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருக்காக (கடலில்) மூழ்கக்கூடியவையாகவும், இதர பணிகளைப் புரிபவையாகவும் இருந்தன. அவர்கள் அனைவரையும் கண்காணிப்பவராக நாமே இருந்தோம். 21:83 இவற்றையே (விவேகம், நுண்ணறிவு மற்றும் ஞானம் ஆகிய அருட்பேறுகளை) நாம் அய்யூபுக்கும் வழங்கியிருந்தோம். அவர், தம்முடைய இறைவனிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்: “என்னை நோய் பீடித்துவிட்டது; நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாய் இருக்கின்றாய்.” 21:84 நாம் அவருடைய இறைஞ்சுதலை ஏற்று அவருக்கிருந்த நோயைப் போக்கிவிட்டோம். அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தை மட்டும் வழங்கவில்லை, அவர்களுடன் அதே அளவுக்கு இன்னும் அதிகமானவர்களையும் வழங்கினோம் இது நம்முடைய சிறப்பான கிருபையாகவும், அடிபணிந்து வணங்குவோருக்கு ஒரு நினைவூட்டுதலாகவும் அமைவதற்காக! 21:85 மேலும், இதே அருட்பேற்றினை இஸ்மாயீலுக்கும், இத்ரீஸுக்கும், துல்கிஃப்லுக்கும் நாம் வழங்கியிருந்தோம். இவர்களனைவரும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாய் இருந்தார்கள். 21:86 மேலும், நாம் அவர்களை நம்முடைய அருளில் நுழைவித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் நல்லடியார்களாகவே திகழ்ந்தார்கள். 21:87 மேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட்டோம் என்று நினைத்து, கோபப்பட்டுக் கொண்டு அவர் சென்றுவிட்டதை நீர் நினைவுகூரும்! இறுதியில் அவர் இருள்களுக்குள் இருந்துகொண்டு இவ்வாறு இறைஞ்சினார்: “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.” 21:88 அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம். 21:89 மேலும், ஜக்கரிய்யாவுக்கும் அருட்பேற்றினை வழங்கினோம். அவர்தம் இறைவனிடம், “என் இறைவனே! என்னை நீ தன்னந்தனியாக விட்டுவிடாதே! நீயே மிகச்சிறந்த வாரிசு ஆவாய்!” என்று பிரார்த்தித்த சமயத்தை நினைவுகூரும். 21:90 பிறகு நாம் அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, அவருக்கு யஹ்யாவை கொடையாக வழங்கினோம். அவருடைய மனைவியை அதற்கு அருகதையுள்ளவராகவும் ஆக்கினோம். இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாயும் திகழ்ந்தார்கள். நம் முன் பணிந்தவர்களாயும் விளங்கினார்கள். 21:91 தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்ட அந்தப் பெண்ணிற்குள் நம்முடைய ரூஹிலிருந்து* ஊதினோம். மேலும், அப்பெண்ணையும் அவளுடைய மைந்தரையும் உலகத்தாரனைவருக்கும் சான்றாய் திகழச்செய்தோம். 21:92 உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். 21:93 (ஆயினும், இந்த மக்கள் செய்த தவறு என்னவெனில்) அவர்கள் தமக்கிடையே தம்முடைய தீனை மார்க்கத்தை துண்டு துண்டாக்கிவிட்டார்கள் அனைவரும் நம்மிடமே திரும்பி வரக் கூடியவர்களாவர். 21:94 பிறகு, எவர் நம்பிக்கையாளராய்த் திகழ்ந்து நற்செயல்கள் புரிகின்றாரோ அவருடைய உழைப்பு மதிப்பற்றுப் போகாது. மேலும், அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். 21:95 எந்த ஊர் மக்களை நாம் அழித்துவிட்டோமோ அவர்கள் மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லை. 21:96 எதுவரையெனில், யாஃஜூஜ், மாஃஜுஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை. 21:97 மேலும், உண்மையான வாக்குறுதி நிறைவேறும் வேளை வரும் வரை! அப்போது சத்தியத்தை நிராகரித்தவர்களின் விழிகள் நிலைகுத்தி நின்றுவிடும். “ஆ! எங்கள் துர்ப்பாக்கியமே! இவ்விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோமே! ஏன், நாங்கள் கொடுமை புரிந்தவர்களாய் இருந்துவிட்டோமே!” என்று அவர்கள் புலம்புவார்கள். 21:98 திண்ணமாக, நீங்களும், அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தவைகளும் நரகத்தின் எரிபொருள்களாவீர்கள். நீங்கள் அங்குதான் செல்லவேண்டியிருக்கும். 21:99 உண்மையில் இவர்கள் தெய்வங்களென்றால், அங்குப் போயிருக்கவே மாட்டார்கள். இனி, இவர்கள் எல்லாரும் என்றென்றும் அதிலேயே தங்க வேண்டியுள்ளது. 21:100 அதில் அவர்கள் கதறுவார்கள். நிலைமை எப்படியிருக்குமெனில், கூச்சல் குழப்பத்தால் அவர்கள் எதையும் செவிமடுக்க முடியாது. 21:101 நம்மிடமிருந்து எவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று முன்னரே முடிவு செய்யப்பட்டதோ அவர்கள் திண்ணமாக, நரகத்தைவிட்டு தொலைவில் வைக்கப்படுவார்கள். 21:102 அந்த நரகின் சலசலப்பைக்கூட அவர்கள் கேட்கமாட்டார்கள். தம் மனத்திற்குகந்த இன்பங்களுக்கு மத்தியில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். 21:103 பெரும் திகிலை ஏற்படுத்தும் அந்நேரம் அவர்களைச் சிறிதளவும் துயரத்தில் ஆழ்த்தாது. மேலும், “உங்களிடம் வாக்களிக்கப்பட்ட நாள்தான் இந்நாள்” என்று கூறிக்கொண்டு வானவர்கள் அவர்களை எதிர் கொண்டு வரவேற்பார்கள். 21:104 எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். திண்ணமாக, அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம். 21:105 “ஜபூரில்”* நல்லுரை வழங்கிய பிறகு, “நம்முடைய நல்லடியார்களே இப்பூமிக்கு வாரிசுகள் ஆவார்கள்” என்று எழுதி வைத்துவிட்டோம். 21:106 அடிபணிந்து வாழும் மக்களுக்கு இதில் மாபெரும் அறிவிப்பு இருக்கிறது. 21:107 (நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். 21:108 நீர் அவர்களிடம் கூறும்: “உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அவனுக்கு அடிபணிந்தவர்களாய் இருக்கிறீர்களா, என்ன?” 21:109 அவர்கள் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: “நான் வெளிப்படையாக உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டேன். இனி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்ற அந்த விஷயம் அண்மையில் இருக்கிறதா அல்லது வெகு தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியேன். 21:110 உரக்கக் கூறுவனவற்றையும் நீங்கள் மூடி மறைத்துச் செய்வனவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிவான். 21:111 நான் புரிந்துகொள்வது இதுவே: ஒருவேளை இது (கால அவகாசம்) உங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். மேலும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் இன்பம் அனுபவிக்க கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் இருக்கலாம்.” 21:112 இறுதியில் இறைத்தூதர் கூறினார்: “என் அதிபதியே! நீ சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! மேலும், மக்களே! நீங்கள் இட்டுக்கட்டி கூறுவதற்கு எதிராக எங்களுக்கு உதவி யாளனாக இருப்பவன் கிருபையுள்ள எங்கள் இறைவன்தான்!”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)