அத்தியாயம்  தாஹா  20 : 1-135 / 135
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
20:1 தா; ஹா. 20:2 நீர் துன்பத்திற்குள்ளாக வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை உம்மீது நாம் இறக்கியருளவில்லை. 20:3 இதுவோ அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டுதலாகும்; 20:4 பூமியையும் உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதும் ஆகும். 20:5 கருணைமிக்க இறைவன் (பேரண்டத்தின்) ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளான். 20:6 வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றிற்கும் அவற்றிற்கிடையே உள்ளவற்றிற்கும் மற்றும் மண்ணுக்கு அடியில் உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன் ஆவான். 20:7 நீர் உம்முடைய சொற்களை உரக்கக் கூறும்; ஆனால், இரகசியமாகப் பேசுவதையும் ஏன், அதைவிட மறைவானவற்றையும் திண்ணமாக அவன் அறிகின்றான். 20:8 அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு மிகவும் அழகிய பெயர்கள் உள்ளன. 20:9 மேலும் (நபியே!) மூஸாவின் செய்தி உமக்கு எட்டியதா? 20:10 அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.” 20:11 அங்குச் சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: “மூஸாவே! 20:12 நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். 20:13 மேலும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே “வஹியாக”* அருளப்படுகின்றவற்றைச் செவியேற்பீராக! 20:14 திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! 20:15 மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக! 20:16 எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர் 20:17 மேலும், மூஸாவே! உம்முடைய வலக்கரத்தில் இருப்பது என்ன?” 20:18 அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.” 20:19 அப்போது இறைவன், “மூஸாவே! நீர் அதனைக் கீழே எறிந்துவிடும்” என்றான். 20:20 அவர் அதனை எறிந்துவிட்டார். உடனே அது நெளிந்து செல்லும் பாம்பாயிற்று; 20:21 இறைவன் கூறினான்: “இதனைப் பிடியும்; அஞ்சாதீர்; முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இதனை மீண்டும் ஆக்கிவிடுவோம். 20:22 மேலும், உம்முடைய கையை உம்முடைய கக்கத்தில் சேர்த்து வைப்பீராக! அது பிரகாசமாக வெளிப்படும், எத்தகைய ஊறுமின்றி! இது மற்றொரு சான்றாகும். 20:23 ஏனெனில், நாம் உமக்கு நம்முடைய மாபெரும் சான்றுகளைக் காண்பிக்கக் கூடியவராய் இருக்கிறோம். 20:24 இனி, நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான்.” 20:25 அதற்கு மூஸா வேண்டிக் கொண்டார்: “என் இறைவா, என் நெஞ்சத்தை விரிவாக்கியருள்வாயாக! 20:26 மேலும், என் செயல்களை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக. 20:27 என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக; 20:28 நான் கூறுவதை மக்கள் புரிந்து கொள்வார்கள். 20:29 மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை; 20:30 என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; 20:31 அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! 20:32 மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக 20:33 நாங்கள் உன்னை அதிகம் துதித்து மேலும், 20:34 உன்னை அதிகம் நினைவுகூரவேண்டும் என்பதற்காக! 20:35 திண்ணமாக, நீ எங்கள் நிலைமைகளை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றாய்.” 20:36 இறைவன் கூறினான்: “மூஸாவே! நீர் வேண்டியவை யாவும் உமக்கு வழங்கப்பட்டுவிட்டன. 20:37 நாம் மற்றொரு தடவையும் உமக்கு உபகாரம் செய்துள்ளோம். 20:38 வஹியின் மூலமாகவே உணர்த்தப்படுகின்ற செய்தியை நாம் உம்முடைய தாய்க்கு உணர்த்திய நேரத்தை நினைவு கூரும். 20:39 “நீர் இக்குழந்தையைப் பெட்டகத்தினுள் வைத்து, பெட்டகத்தை ஆற்றில் விட்டு விடும். ஆறு, அதனைக் கரையில் ஒதுக்கிவிடும்; எனக்கும் அக்குழந்தைக்கும் பகைவனான ஒருவன் அதனை எடுத்துக்கொள்வான்.” “மேலும், என்னிடமிருந்து அன்பை உம்மீது பொழிந்திருக்கின்றேன். இன்னும் என் மேற்பார்வையில் உம்மை வளர்க்க ஏற்பாடு செய்தேன். 20:40 இதனையும் நினைத்துப் பாரும்: உம்முடைய சகோதரி நடந்து சென்று கொண்டிருந்தாள்; பிறகு, அங்குச் சென்று, “இக்குழந்தையை நல்லவிதமாக வளர்க் கக்கூடிய ஒருவரை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டாள். இவ்வாறு நாம் உம் தாயாரிடம் உம்மைக் கொண்டு வந்து சேர்த்தோம், அவர் கண்குளிரவும் கவலைப்படாமலும் இருப்பதற்காக! மேலும் (இதனையும் நினைத்துப்பாரும்:) நீர் ஒருவனைக் கொலை செய்துவிட்டிருந்தீர். அந்தச் சிக்கலில் இருந்தும் நாம் உம்மை விடுவித்தோம்! மேலும், நாம் உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். நீர் ‘மத்யன்’ வாசிகளிடம் பல ஆண்டுகள் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே, இப்போது நீர் சரியான நேரத்தில் வந்திருக்கின்றீர். 20:41 நான் உம்மை என்னுடைய பணிக்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன்; 20:42 எனவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய சான்றுகளோடு செல்லுங்கள். மேலும் (பாருங்கள்) என்னை நினைவுகூர்வதில் நீங்கள் குறைபாடு செய்து விடக்கூடாது. 20:43 நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டிருக்கின்றான். 20:44 அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது அஞ்சக்கூடும்.” 20:45 இருவரும் பணிந்து கூறினர்: “எங்கள் இறைவனே! அவன் அநீதியாகவோ, அல்லது கொடூரமாகவோ எங்களுடன் நடந்து கொள்வான் என்று நாங்கள் அஞ்சுகின்றோம்.” 20:46 அதற்கு அல்லாஹ் கூறினான்: “அஞ்சாதீர்கள். நான் உங்களுடன் இருக்கின்றேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கின்றேன்.” 20:47 அவனிடம் சென்று கூறுங்கள்: “நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்களாவோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களைத் துன்புறுத்தாதே! உன் இறைவனுடைய சான்றை உன்னிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம். மேலும், சாந்தி உண்டாகும் நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு! 20:48 வஹி மூலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அளிக்கும் வேதனை திண்ணமாக இருக்கிறது பொய்யென்று தூற்றுபவர்க்கும், புறக்கணிப்பவர்க்கும்.” 20:49 ஃபிர்அவ்ன் கேட்டான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?” 20:50 அதற்கு மூஸா கூறினார்: “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பமைப்பைக் கொடுத்து பின்னர் அதற்கு வழிகாட்டியவன் யாரோ அவன்தான் எங்கள் இறைவன்.” 20:51 ஃபிர்அவ்ன் கேட்டான்: “முன்சென்ற தலைமுறையினரின் நிலைமை என்ன?” 20:52 மூஸா கூறினார்: “அதைப் பற்றிய விவரம் என் இறைவனிடம் ஒரு பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது. என்னுடைய இறைவன் தவறிழைப்பதுமில்லை. மறப்பதுமில்லை; 20:53 அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாக அமைத்து, அதில் நீங்கள் நடப்பதற்கான வழிகளை ஏற்படுத்தினான். மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச்செய்து அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை வெளிப்படுத்தினான். 20:54 உண்ணுங்கள்; உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். திண்ணமாக, இதில் அறிவுடையோர்க்கு நிறையச் சான்றுகள் உள்ளன.” 20:55 இதே பூமியிலிருந்துதான் நாம் உங்களைப் படைத்தோம். இதிலேயே நாம் உங்களைத் திருப்பிச் சேர்த்து விடுவோம். மேலும், இதிலிருந்தே உங்களை நாம் மறு தடவையும் வெளிக்கொணர்வோம். 20:56 நாம் ஃபிர்அவ்னுக்கு நம் சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். ஆயினும், அவன் அவற்றைப் பொய்யென்று தூற்றிக்கொண்டே இருந்தான்; ஏற்க மறுத்தான். 20:57 மேலும், கேட்டான்: “மூஸாவே! நீ உன்னுடைய சூனிய வலிமையால் எங்களுடைய நாட்டை விட்டு எங்களை வெளியேற்றவா வந்திருக்கிறாய்? 20:58 நாமும் அதே போன்ற சூனியத்தை உனக்கு எதிராகக் கொண்டு வருவோம். எப்போது எங்கே போட்டி போடலாம் என்று முடிவு செய்துகொள்! அதிலிருந்து நாங்களும் பின்வாங்க மாட்டோம். நீயும் பின் வாங்கக் கூடாது. ஒரு திறந்தவெளியில் நேரில் வா!” 20:59 அதற்கு மூஸா கூறினார்: “பண்டிகை நாளில் வைத்துக்கொள்ளலாம். மேலும் அன்று மக்கள் அனைவரும் முற்பகலில் ஒன்று சேர்க்கப்படட்டும்.” 20:60 ஃபிர்அவ்ன் திரும்பி வந்து தன்னுடைய (மந்திரச்) சூழ்ச்சிகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு (போட்டிக்கு) வந்தான். 20:61 மூஸா (உரிய நேரத்தில் எதிர்த்தரப்பினரை நோக்கி) கூறினார்: “துர்ப்பாக்கியவான்களே! அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின் ஒரு கடுமையான வேதனையின் மூலம் உங்களை அவன் அழித்து நாசமாக்கிவிடுவான். பொய்யை எவர்கள் புனைந்துரைத்தார்களோ அவர்கள் நிச்சயம் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.” 20:62 அவர்கள் (இதனைக் கேட்டு) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டார்கள். மேலும் இரகசிய ஆலோசனை செய்யலானார்கள். 20:63 இறுதியில், சிலர் கூறினர்: “இவர்கள் இருவரும் சூனியக்காரர்களே ஆவர். தம் சூனிய வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்றும் உங்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறையை ஒழித்துவிட வேண்டும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். 20:64 எனவே (இன்று) உங்களின் அனைத்து சூழ்ச்சிகளையும் ஒன்றுதிரட்டி ஒருசேர (களத்திற்கு) வாருங்கள். இன்று எவருடைய கை மேலோங்குகிறதோ அவர்தான் வெற்றியடைந்தவராவார் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.)” 20:65 சூனியக்காரர்கள் கூறினர்: “மூஸாவே, நீர் எறிகின்றீரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா?” 20:66 (அதற்கு மூஸா கூறினார்:) “இல்லை, நீங்களே எறியுங்கள்.” உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனிய வலிமையால் ஓடுவதுபோல் மூஸாவிற்குத் தென்படலாயின. 20:67 மூஸா தம் மனத்திற்குள் அஞ்சினார். 20:68 நாம் கூறினோம்: “அஞ்சாதீர்! நீர்தான் வெற்றியாளராவீர். 20:69 உம்முடைய கையில் உள்ளதை எறியும்! அவர்கள் உருவாக்கியவை அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் போலியாக உருவாக்கிக் கொண்டு வந்திருப்பவை சூனியக்காரர்களின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடைவதில்லை. அவன் எத்தனை ஆரவாரத்தோடு வந்தாலும் சரியே!” 20:70 இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஸஜ்தாவிற்குத் தள்ளப்பட்டார்கள். மேலும், “நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள். 20:71 அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் குரு என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்துவிடுவேன்; மேலும் பேரீச்ச மரத்தின் கம்பங்களில் உங்களை அறைந்து கொல்லப்போகின்றேன். அப்போது, எங்களில் யாருடைய வேதனை மிகக்கடுமையானது; நீடித்து நிற்கக்கூடியது (அதாவது, என்னால் உங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க முடியுமா? அல்லது மூஸாவினாலா) என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.” 20:72 அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். 20:73 திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன்மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம், எங்களின் குற்றங்களையும் எந்த சூனியத்தைக் கையாளுமாறு எங்களை நீ நிர்பந்தித்தாயோ அந்த சூனியச் செயலையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ்தான் சிறந்தவனும் நிலைத்திருப்பவனுமாவான்” 20:74 எவன் குற்றம் புரிந்தவனாய் தன் இறைவனிடம் வருவானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் உண்டு. அதில் அவன் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான். 20:75 மேலும், எவர்கள் நம்பிக்கையாளராய் நற்செயல்கள் புரிந்த வண்ணம் அவன் திருமுன் வருகின்றார்களோ அத்தகைய அனைவருக்கும் உயர்பதவிகள் உள்ளன. 20:76 நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். நற்கூலியாகும் இது, தூய வாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்காக! 20:77 நாம் மூஸாவிற்கு வஹி அனுப்பினோம்: “நீர் இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு செல்வீராக! மேலும், கடலில் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ என சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை: (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டியதில்லை.” 20:78 ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. 20:79 ஃபிர்அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை. 20:80 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! “நாம் உங்கள் பகைவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். மேலும், ‘தூர்’ மலையின் வலப் பக்கத்தில் நீங்கள் வருவதற்கென நேரம் நிர்ணயித்தோம். ‘மன்னு’ மற்றும் ‘ஸல்வா’வை* உங்களுக்கு இறக்கி அருளினோம். 20:81 புசியுங்கள் நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்மையான உண் பொருள்களை! அவற்றைப் புசித்துவிட்டு வரம்பு மீறிச் செயல்படாதீர்கள். அப்படிச் செய்தால் எனது கோபம் உங்கள் மீது இறங்கும்! எவன்மீது எனது கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக வீழ்ச்சி அடைந்தே தீருவான். 20:82 ஆயினும், எவன் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பிறகு நேர்மையாகவும் வாழ்கின்றானோ, அவனைத் திண்ணமாக, நான் பெரிதும் மன்னிக்கக்கூடியவனாய் இருக்கின்றேன். 20:83 மேலும், “மூஸாவே! உம்மை உமது சமூகத்தாரை விட முதலில் வரச்செய்தது எது?” 20:84 அதற்கு அவர் கூறினார்: “இதோ! அவர்கள் எனக்குப் பின்னால் வந்து கொண்டே இருக்கிறார்கள். என் இறைவனே! நான் அவசரமாக உன் திருச்சமூகம் வந்து விட்டிருப்பது நீ என்மீது திருப்திகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்!” 20:85 அவன் (இறைவன்) கூறினான்: “கேளும்! நீர் வந்த பிறகு நாம் உம்முடைய சமுதாயத்தினரைத் திண்ணமாக சோதனைக்குள்ளாக்கியிருக்கிறோம். அவர்களை ஸாமிரி வழிகெடுத்துவிட்டான்.” 20:86 மூஸா கடுஞ்சினத்துடனும், மனவேதனையுடனும் தம் சமூகத்தாரிடம் திரும்பிவந்து கூறினார்: “என் சமூகத்தாரே! உங்கள் இறைவன் உங்களிடம் அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? அவ்வாறு வாக்குறுதி அளித்து நீண்டகாலம் ஓடிவிட்டதா என்ன? அல்லது உங்கள் இறைவனின் சினம் உங்கள் மீது இறங்க வேண்டும் என்று கருதி என்னிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொண்டீர்களா?” 20:87 அதற்கு அவர்கள் கூறினர்: “நாங்கள் எங்களின் சுய நாட்டப்படி உம்மிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொள்ளவில்லை; நடந்தது என்னவெனில், மக்களுடைய நகைகளின் பெருஞ்சுமை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அவற்றை எறிந்து விட்டோம். பிறகு இதே போன்று ஸாமிரியும் கொஞ்சம் எறிந்தான். 20:88 மேலும், அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றின் உருவச் சிலையைச் செய்து கொடுத்தான். அதிலிருந்து காளை மாட்டின் குரலைப் போன்று ஓசை வெளியாகிக்கொண்டிருந்தது. உடனே, மக்கள் உரக்கக் கூறினார்கள்: “உங்கள் இறைவனும் மூஸாவின் இறைவனும் இதுதான். ஆனால் மூஸா இதனை மறந்து விட்டார்.” 20:89 ‘அது, அவர்களின் கூற்றுக்கு மறுமொழி அளிக்காது என்பதையும், அவர்களுக்கு இலாபமோ, நட்டமோ அளிக்கும் யாதொரு ஆற்றலையும் அது பெற்றிருக்கவில்லை என்பதையும் இவர்கள் பார்க்கவில்லையா?’ 20:90 (மூஸா வருவதற்கு) முன்னரே அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்: “என் சமூகத்தினரே! இக்காளைக் கன்றின் காரணமாக நீங்கள் குழப்பத்தில் வீழ்ந்துவிட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக ரஹ்மான் கருணை மிக்க இறைவன்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.” 20:91 ஆயினும் அவர்கள், “மூஸா எங்களிடம் திரும்பி வரும்வரை நாங்கள் இதனை வழிபட்டுக்கொண்டே இருப்போம்” என்று (அவரிடம்) கூறிவிட்டார்கள். 20:92 மூஸா (தம் சமூகத்தினரைக் கண்டித்துவிட்டு ஹாரூனை நோக்கி) “ஹாரூனே! அவர்கள் வழிதவறிச் சென்று கொண்டிருந்ததை நீர் பார்த்தபோது, என் வழிமுறைப்படி செயல் படுவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது? 20:93 நீர் என் கட்டளைக்கு ஏன் மாறு செய்துவிட்டீர்?” என்று கேட்டார். 20:94 அதற்கு ஹாரூன் பதிலளித்தார்: “என் தாயின் மகனே! என் தாடியைப் பிடிக்காதீர்; என் தலைமுடியை இழுக்காதீர்; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடையே நீ பிரிவினை ஏற்படுத்திவிட்டாய்; மேலும், என்னுடைய சொல்லுக்காக காத்திருக்கவும் இல்லை’ என்று நீர் கூறிவிடுவீரோ என நான் அஞ்சினேன்.” 20:95 மூஸா கேட்டார்: “ஸாமிரியே! உன் விவகாரமென்ன?” 20:96 அதற்கு அவன், “இவர்களுக்குத் தென்படாத ஒன்றை நான் கண்டேன்; தூதரின் காலடியிலிருந்து நான் ஒரு பிடி மண்ணை எடுத்து அதனை எறிந்தேன்; இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியது.” 20:97 அதற்கு மூஸா கூறினார்: “சரி, நீ போய்விடு, வாழ்நாள் முழுவதும் ‘என்னைத் தொடவேண்டாம்’ என்றே நீ கூறிக்கொண்டிருப்பாய். மேலும், உனக்காக விசாரணை நேரம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உன்னைவிட்டு ஒருபோதும் நீங்கிவிடாது. இன்னும் நீ ஆர்வத்துடன் வழிபட்டு வந்த உனது தெய்வத்தைப் பார். இப்போது நாம் அதனை எரித்து விடுவோம். பிறகு, அதனைச் சாம்பலாக்கிக் கடலில் வீசி விடுவோம். 20:98 (மக்களே!) உங்கள் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுடைய அறிவு அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.” 20:99 (நபியே!) இவ்வாறே கடந்தகால நிகழ்ச்சிகளை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். மேலும் நம் சார்பிலிருந்து தனிப்பட்ட ஒரு ஞானத்தை உமக்கு நாம் வழங்கியுள்ளோம். 20:100 யாரேனும் அதனைப் புறக்கணிப்பாராயின் அவர் மறுமைநாளில் கடுமையான பாவச் சுமையைச் சுமப்பார். 20:101 இத்தகையோர் அனைவரும் அந்தத் துன்பத்தில் என்றென்றும் கிடப்பார்கள்; மறுமைநாளில் இந்த(க் குற்றத்திற்குப் பொறுப்பேற்கும்) சுமை அவர்களுக்கு மிகக் கடுமையான சுமையாக இருக்கும். 20:102 எக்காளம் ஊதப்படும் நாளில், மேலும் (திகைப்பின் காரணத்தால்) கண்கள் நீலம் பூத்திருக்கும் நிலையில் குற்றவாளிகளை நாம் ஒன்று திரட்டுவோம். 20:103 அந்நாளில் அவர்கள் தமக்கிடையே மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்: “நீங்கள் (உலகில்) அதிகபட்சம் பத்து நாட்கள் தங்கியிருந்திருப்பீர்கள்” 20:104 அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவ்வேளை அவர்களில் மிகமிகக் கவனமாக மதிப்பிடக்கூடியவர், “ஒரே நாள்தான் நீங்கள் (உலகில்) வாழ்ந்துள்ளீர்கள்” என்று கூறுவார் (என்பதையும் நாம் நன்கறிவோம்) 20:105 மலைகள் (அன்றைய நாளில் எங்குச் சென்றுவிடும் என்பது) பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறுவீராக: “என் இறைவன் அவற்றைத் தூள்தூளாக்கிப் பறக்க விட்டுவிடுவான். 20:106 பூமியை அதில் யாதொரு மேடுபள்ளத்தையும் நீர் காணாத அளவுக்கு 20:107 சமதளமாக்கிவிடுவான். 20:108 அந்நாளில் மக்கள் அனைவரும் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்டு நேராக நடந்து வருவார்கள். யாரும் சிறிதளவும் முரண்டு பிடிக்க முடியாது. மேலும், கருணைமிக்க இறைவனின் முன்னிலையில் குரல்களெல்லாம் அடங்கி ஒடுங்கி விடும். இலேசான முணுமுணுப்பைத் தவிர வேறு எதையும் நீர் கேட்கமாட்டீர். 20:109 அந்நாளில் எவருடைய பரிந்துரையும் பலனளிக்காது, கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதியளிப்பானோ எவருடைய பேச்சைக் கேட்க விரும்புவானோ அவருடைய பரிந்துரையைத் தவிர! 20:110 அவன், மக்களின் முந்தைய பிந்தைய நிலைமைகள் அனைத்தையும் நன்கறிகின்றான். ஆனால், மற்றவர்களுக்கோ அவனைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லை. 20:111 நித்திய ஜீவனும் (பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவனுமாகிய இறைவன் முன்னிலையில் மக்களின் தலைகள் பணிந்துவிடும். (அன்று) அக்கிரமத்தின் பாவச் சுமையைச் சுமந்து கொண்டவன் தோல்வி அடைந்தவன் ஆவான். 20:112 ஆனால், எவர் நம்பிக்கையாளராயிருந்து நற்செயல்கள் புரிகின்றாரோ (அவருக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு பற்றிய எந்த அச்சமும் இருக்காது.) 20:113 (நபியே!) இது போன்றே நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக இறக்கியருளியுள்ளோம். மேலும், இதில் விதவிதமான எச்சரிக்கைகளும் கொடுத்துள்ளோம். இதன் மூலம் இவர்கள் (தவறான நடத்தையை) தவிர்த்துக் கொள்ளக்கூடும் அல்லது இது இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். 20:114 அல்லாஹ் மிக உயர்ந்தவன் உண்மையான அரசன். மேலும் (பாரும்) குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; அதனுடைய வஹி முழுமையாக உமக்கு நிறைவு பெறுவதற்கு முன்பே! “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக! 20:115 நாம் முன்னர் ஆதத்துக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருந்தோம். ஆயினும் அவர் அதனை மறந்துவிட்டார். மேலும், நாம் அவரிடத்தில் மன உறுதியைக் காணவில்லை. 20:116 ‘ஆதத்துக்குச் சிரம்பணியுங்கள்’ என்று வானவர்களுக்கு நாம் கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் மட்டும் மறுத்துவிட்டான். 20:117 அப்போது நாம் கூறினோம்: “ஆதமே! (பாருங்கள்) இவன் உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். இவன் உங்களிருவரையும் சுவனத்திலிருந்து வெளியேற்றிவிடக்கூடாது. மேலும், நீங்கள் துன்பத்தில் விழுந்து விடவும் கூடாது. 20:118 பசி தெரியாமலும் நிர்வாணமாகாமலும் இருக்க இங்கு உமக்கு வசதிகள் இருக்கின்றன. 20:119 மேலும், இங்கே தாகமும் வெப்பமும் உம்மை வாட்டாது.” 20:120 ஆயினும் ஷைத்தான் அவரைக் குழப்பினான். “ஆதமே! உமக்கு நிலையான வாழ்வையும் அழியாத அதிகாரத்தையும் தரக்கூடிய ஒரு மரத்தைக் காண்பிக்கவா?” என்று கேட்டான் 20:121 இறுதியில் (கணவன்மனைவியாகிய) அவ்விருவரும் அம்மரத்தின் பழத்தைப் புசித்துவிட்டார்கள். உடனே, அவ்விருவரின் மர்மஸ்தலங்கள் பரஸ்பரம் வெளிப்பட்டு விட்டன. மேலும், இருவரும் சுவனத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலாயினர். ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்தார். நேர்வழி தவறினார். 20:122 பிறகு, அவருடைய இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தான். மேலும் அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவருக்கு நேர்வழி அருளினான். 20:123 மேலும், கூறினான்: நீங்கள் இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து வெளியேறிவிடுங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாயிருப்பீர்கள்; இனி, என்னிடமிருந்து ஏதேனும் வழிகாட்டல் உங்களுக்குக் கிடைத்தால், யார் என் வழிகாட்டலைப் பின்பற்றினாரோ அவர் வழிதவற மாட்டார்; துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகவும் மாட்டார். 20:124 எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது. மேலும், மறுமை நாளில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம்” 20:125 அவன் கேட்பான்: “என் இறைவா! (உலகில்) நான் பார்வையுள்ளவனாக இருந்தேனே, இங்கு நீ என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” 20:126 அதற்கு அல்லாஹ், “ஆம்; இவ்வாறே நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தபோது நீ அவற்றை மறந்து விட்டிருந்தாய்; அவ்வாறே இன்று நீயும் மறக்கடிக்கப்படுகின்றாய்” என்று கூறுவான். 20:127 இவ்விதமே, வரம்பு மீறிச் செல்வோருக்கும் தம்முடைய இறைவனின் வசனங்களை ஏற்காதோருக்கும் நாம் (இவ்வுலகில்) கூலி வழங்குகின்றோம். மேலும், மறுமையின் வேதனை மிகக் கடினமானதும் நீடித்து நிற்கக்கூடியதாகவும் இருக்கிறது. 20:128 பிறகு, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். (இந்த வரலாற்றின் படிப்பினைகளிலிருந்து) இவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லையா என்ன? அவ்வாறு (அழிக்கப்பட்ட) அவர்களின் ஊர்களில் (இன்று) இவர்கள் நடமாடித் திரிகின்றார்கள். உண்மையில் இதில் நல்லறிவு உடையவர்களுக்கு சான்றுகள் நிறைய உள்ளன. 20:129 உம் இறைவனிடமிருந்து முன்னரே ஒரு விஷயம் முடிவாகாமலும், மேலும், குறிப்பிட்ட ஒரு காலத்தவணை நிர்ணயிக்கப்படாமலும் இருந்திருந்தால் இவர்களுடைய விஷயம் கண்டிப்பாக முன்பே தீர்க்கப்பட்டிருக்கும். 20:130 எனவே (நபியே!) இவர்கள் இட்டுக்கட்டிக்கூறும் விஷயத்தை நீர் பொறுத்துக் கொள்ளும். சூரியன் உதிப்பதற்கு முன்பும் அது மறைவதற்கு முன்பும் மேலும், இரவு நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இதன் மூலம் நீர் மனத்திருப்தி அடையக் கூடும். 20:131 மேலும், நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுக போகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். மேலும், உம் இறைவனால் வழங்கப்பட்டுள்ள (ஆகுமான) வாழ்வாதாரம்தான் சிறந்ததும் நிலையானதுமாகும். 20:132 மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக. ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்திற்கே இருக்கின்றது. 20:133 “தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்றை (முஃஜிஸாவை) இவர் ஏன் கொண்டுவரவில்லை” என்று அவர்கள் கேட்கின்றார்கள். முந்தைய வேதங்களில் உள்ள முழு அறிவுரைகளின் விளக்கம் அவர்களிடம் வரவில்லையா என்ன? 20:134 அவர் வருகைக்கு முன்பே ஏதேனும் ஒரு வேதனையை இறக்கி அவர்களை நாம் அழித்திருந்தால் அப்போது அவர்களே கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் இழிவிற்கும் கேவலத்திற்கும் நாங்கள் ஆளாகும் முன்பே, உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!” 20:135 (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்! “(தமது செயலின் விளைவை) ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தாம். எனவே நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். அதிவிரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும் நேர்வழியில் நடப்பவர் யார், மேலும், நேர்வழியைப் பெற்றவர்கள் யார் என்பது!”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)