அத்தியாயம்  அல்பகறா  2 : 75-141 / 286
2:75 (முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்குணர்ந்த பின்னரும் வேண்டுமென்றே அதனை மாற்றக்கூடிய ஒரு பிரிவினரும் இவர்களில் இருக்கிறார்கள். 2:76 (இறைத்தூதர் முஹம்மத் மீது) நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்திக்கும்போது “நாங்களும் (அவர் மீது) நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொள்ளும்போது, “என்ன, நீங்கள் மதியிழந்து விட்டீர்களா? உங்களுக்கு அல்லாஹ் அறிவித்துத் தந்திருப்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுகின்றீர்களே! அதை வைத்துக் கொண்டு உங்கள் இறைவனிடத்தில் அவர்கள் உங்களுக்கு எதிராக வாதிடுவதற்காகவா (இவ்வாறு செய்கின்றீர்கள்)?” என்று கூறுகின்றார்கள். 2:77 அவர்கள் மறைத்துக் கொள்கின்றவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான் என்பதை அவர்கள் அறியவில்லையா? 2:78 மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேதத்தைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் வெறும் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான்! மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2:79 சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தம் கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது” என்று (மக்களை நோக்கிக்) கூறுவோர்க்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் (அதனைக் கொண்டு) அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்! 2:80 மேலும் “குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர நெருப்பு எங்களை ஒருபோதும் தீண்டாது” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதிமொழி நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அப்படியானால் அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்! அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?” (உங்களை நரக நெருப்பு ஏன் தீண்டாது?) 2:81 அப்படியல்ல, எவர்கள் தீமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்களோ, மேலும் தம்முடைய பாவங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 2:82 இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். 2:83 இன்னும் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குமூலம் வாங்கியதை நினைத்துப் பாருங்கள்; “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வழிபடாதீர்கள்; (உங்களுடைய) பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், மிஸ்கீன் (வறியவர்)கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள்; மனிதர்களிடம் நல்லனவற்றைப் பேசுங்கள். மேலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத் கொடுத்து வாருங்கள்.” ஆனால் உங்களில் சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் (அந்த வாக்குறுதியைப்) புறக்கணித்து விட்டீர்கள். இப்பொழுதும்கூட (அதனைப்) புறக்கணித்துக் கொண்டிருக்கின்றீர்கள். 2:84 மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘நீங்கள் இரத்தம் சிந்தாதீர்கள்; உங்களுடைய ஊர்களிலிருந்து ஒருவரை ஒருவர் வெளியேற்றாதீர்கள்’ என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். நீங்களும் அதனை ஏற்றுக் கொண்டீர்கள்; இன்னும் நீங்கள் அதற்குச் சாட்சியாக இருந்தீர்கள். 2:85 (ஆனால் அதற்குப்) பின்னரும் கூட நீங்கள் ஒருவரையொருவர் கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு அநீதியும் அக்கிரமமும் செய்து அவர்களுக்கு எதிராக ஆள் சேர்க்கிறீர்கள். ஆனால் அவர்கள் (போரில்) பிடிபட்டு கைதிகளாய் உங்களிடம் வரும்போது மீட்புப் பணம் கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். ஆனால், அவர்களை (அவர்களின் ஊர்களிலிருந்து) வெளியேற்றுவதே உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்ததே! அப்படியென்றால், நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமைநாளிலோ மிகக் கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை 2:86 மறுமை வாழ்வை விற்று, இம்மை வாழ்வைக் கொள்வினை செய்து கொண்டவர்கள் இவர்கள்தாம்! ஆகவே, இவர்களுக்குச் சிறிதளவும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. மேலும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. 2:87 மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம். இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். இது என்ன போக்கு? 2:88 “எங்களுடைய இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று அவர்கள் கூறுகின்றனர். இல்லை, அவர்களுடைய அவநம்பிக்கையின் காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான் (என்பதுதான் உண்மை). ஆகவே, மிகச் சொற்பமாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். 2:89 மேலும், அல்லாஹ்விடமிருந்து வேதம் அவர்களிடம் வந்தபோது (அதனுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்?) அதுவோ, அவர்களிடம் இருந்த வேதத்தை உறுதிப்படுத்துகின்றது. மேலும் (அது வருவதற்கு) முன்பு அவர்களே, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியும் உதவியும் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அறிந்துகொண்ட ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அத்தகைய நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! 2:90 எதனைக்கொண்டு அவர்கள் மன ஆறுதல் பெறுகின்றார்களோ அது எத்துணைக் கெட்டது! (அதாவது) அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது தன் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே (இப்போது) அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு. 2:91 “அல்லாஹ் இறக்கியருளியதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “எங்களுக்கு (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு) எது இறக்கி அருளப்பட்டிருக்கிறதோ அதன் மீது மட்டும்தான் நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அதைத் தவிர மற்றதை அவர்கள் நிராகரிக்கின்றார்கள். உண்மையில், அது சத்தியமானதாகவும் (முன்னரே) அவர்களிடம் இருந்த அறிவுரைகளை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது! அவர்களைக் கேளும்: “உங்களுக்கு அருளப்பட்டவற்றின் மீது நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இதற்கு முன் (இஸ்ராயீல் வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை நீங்கள் ஏன் கொலை செய்து கொண்டிருந்தீர்கள்?” 2:92 மேலும், மூஸா உங்களிடம் (எத்துணைத்) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர் (உங்களை விட்டுத் திரும்பிச்) சென்ற உடனேயே நீங்கள் காளைக் கன்றை தெய்வமாக்கிக் கொண்டீர்கள். அந்த அளவுக்கு அக்கிரமக்காரர்களாய் நீங்கள் இருந்தீர்கள். 2:93 பிறகு உங்கள் மீது தூர் மலையை நாம் உயர்த்தி, நாம் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உறுதியான ஒப்பந்தத்தை (சற்று) நினைத்துப் பாருங்கள். “உங்களுக்கு நாம் அருளுகின்ற அறிவுரைகளை வலுவாகக் கடைப்பிடியுங்கள். மேலும் (நம்முடைய கட்டளைக்குச்) செவிசாயுங்கள்” என்று நாம் கூறினோம். அதற்கு உங்கள் முன்னோர்கள் “நாங்கள் செவியேற்றோம்; ஆனால் மாறு செய்வோம்” என்று கூறினார்கள். அவர்களின் அசத்தியப்போக்கு எந்த அளவு முற்றியிருந்ததெனில், அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் காளைக் கன்று வழிபாட்டின் மீது அவர்களின் உள்ளங்கள் மோகம் கொண்டிருந்தன. “நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இழிவான இச்செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகின்ற உங்கள் நம்பிக்கை எத்துணை விசித்திரமானது!” என்று நீர் கூறும். 2:94 அவர்களிடம் நீர் சொல்வீராக: “அல்லாஹ்விடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)” 2:95 தம் கைகளினால் சம்பாதித்துள்ள தீவினைகளின் காரணத்தால், அவர்கள் அதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). மேலும், இந்த அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 2:96 எல்லா மனிதர்களை விடவும் ஏன், இணைவைத்து வணங்குபவர்களை விடவும் இவர்களே வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாய் இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் (எப்படியாவது) ஓராயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆயினும், அவனுடைய நீண்ட ஆயுள், வேதனையிலிருந்து அவனை விலக்கிவிடாதே! அவர்கள் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். 2:97 (நபியே!) நீர் கூறும்: யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது (எத்தகைய வேதமெனில்) தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், வெற்றிக்கான நற்செய்தி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (ஜிப்ரீல் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு இதுவே காரணமெனில், நபியே! நீர் கூறும்:) 2:98 “எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் பகைவராக இருந்தால், நிச்சயமாக அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் பகைவனாகவே இருப்பான்.” 2:99 இன்னும் (நபியே! சத்தியத்தை) தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்களை நிச்சயமாக உமக்கு நாம் இறக்கி அருளியிருக்கிறோம். ஃபாஸிக்களை (கீழ்ப்படியாதவர்களை)த் தவிர வேறு எவரும் அவற்றை(ப் பின்பற்றுவதை) நிராகரிக்க மாட்டார்கள். 2:100 அவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதும், (பிறகு) அவர்களில் யாராவது ஒரு சாரார் அதனை முறித்து விடுவதும் எப்பொழுதுமே (அவர்களுடைய) வழக்கமாக இருந்து வந்ததில்லையா? தவிரவும் அவர்களில் பெரும்பாலோர் உளமார்ந்த நம்பிக்கை கொள்வதில்லை. 2:101 மேலும், அல்லாஹ்விடமிருந்து யாரேனும் ஓர் இறைத்தூதர் அவர்களிடமிருந்த வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக அவர்களிடம் வந்தபோது, வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் தாம் எதுவும் அறியாதவர்கள் போன்று அல்லாஹ்வின் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டார்கள். 2:102 (இதற்குப் பதிலாக) ஸுலைமானுடைய ஆட்சியின்போது ஷைத்தான்கள் எடுத்தோதி வந்த (சூனியத்)தை அவர்கள் பின்பற்றலானார்கள். ஆனால் ஸுலைமான் (ஒருபோதும்) நிராகரிக்கவில்லை. ஆயினும் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஷைத்தான்கள்தாம் நிராகரித்தார்கள். மேலும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். (ஆனால்) எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்” என எச்சரித்து விடுவார்கள். ஆனால், இதற்குப் பிறகும், கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிளவை உருவாக்குகின்ற சூனியத்தை அவ்விருவரிடம் இருந்து அவர்கள் கற்று வந்தனர். அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இந்த சூனியத்தைக் கொண்டு எவருக்கும் (எந்த வகையிலும்) அவர்களால் தீங்கிழைக்க முடியாது. உண்மையில் தங்களுக்குப் பலனளிக்காததும், தீங்கிழைக்கக் கூடியதுமானதையே அவர்கள் கற்றனர். மேலும் (சூனியத்தைக் கற்று) அதனை விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுமையில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தனர். தங்கள் உயிர்களை விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணைக் கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? 2:103 உண்மையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கைகொண்டு, இறையச்சமுள்ள வாழ்வை மேற்கொண்டிருந்தால் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலி மேலானதாக இருந்திருக்கும். அந்தோ! இதனை அவர்கள் அறிந்திருக்கவில்லையே! 2:104 இறைநம்பிக்கை கொண்டவர்களே! ‘ராஇனா’ என்று சொல்லாதீர்கள். மாறாக ‘உன்ளுர்னா’ என்று சொல்லுங்கள்; மேலும் (கவனத்துடன்) செவியுறுங்கள். இந்த நிராகரிப்பாளர்களுக்கோ துன்புறுத்தும் வேதனை உண்டு. 2:105 சத்தியத்தை மேற்கொள்ள மறுப்பவர்கள் அவர்கள் வேதம் அருளப் பெற்றவர்களாய் இருந்தாலும் சரி, இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாய் இருந்தாலும் (சரியே) உம் இறைவனிடமிருந்து (ஏதேனும்) ஒரு நன்மை உம்மீது இறக்கியருளப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆனால், தன் கருணையை வழங்க, தான் நாடியவர்களையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், அல்லாஹ் மகத்தான கருணை பொழிபவனாய் இருக்கின்றான். 2:106 எந்த ஒரு வசனத்தையாவது நாம் அகற்றிவிட்டால் அல்லது மறக்கச் செய்துவிட்டால் (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த அல்லது அதே போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? 2:107 வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத் தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா? 2:108 இதற்கு முன்னால் மூஸாவிடம் வினவப்பட்டது போல (இப்பொழுது) நீங்கள், உங்கள் இறைத்தூதரிடம் வினவ விரும்புகிறீர்களா? உண்மை யாதெனில், எவர் இறைநம்பிக்கையுடைய நடத்தையை விட்டுவிட்டு நிராகரிப்புப் போக்கை மேற்கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக நேரான வழியை விட்டுப் பிறழ்ந்து விட்டார். 2:109 வேதம் அருளப்பட்டவர்களில் பலர் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை (எவ்விதத்திலாவது) நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம் தமக்குத் தெளிவாகிவிட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக (இவ்வாறு செய்ய முனைகின்றார்கள்;) அல்லாஹ் தன் தீர்ப்பைச் செயல்படுத்தும் வரை நீங்கள் அவர்களுடைய செயல்களை மன்னித்து விடுங்கள். மேலும் பொறுத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் (என்பதை நம்பி நிம்மதியாய் இருங்கள்). 2:110 மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்; உங்(கள் மறுமை நலன்)களுக்காக நற்செயல் எதையேனும் நீங்கள் சம்பாதித்து முன்னரே அனுப்பி இருந்தால் அதனை அல்லாஹ்விடம் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்கியவனாய் இருக்கின்றான். 2:111 “ஒரு யூதராகவோ (கிறிஸ்தவர்கள் வாதிக்கின்றபடி) ஒரு கிறிஸ்தவராகவோ இல்லாத எவரும் சுவனம் புகமாட்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை அவர்களின் நப்பாசைகளே ஆகும். அவர்களிடம் கூறுவீராக: “(உங்கள் வாதத்தில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், அதற்குரிய உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” (உண்மையில் தனிப்பட்ட உரிமை உங்களுக்கும் இல்லை. வேறு எவருக்கும் இல்லை.) 2:112 ஆம்! எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்கொள்பவராய் இருக்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 2:113 யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை.” கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை” ஆயினும் இந்த இரு சாராரும் வேதம் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் சொல்வது போன்றுதான் வேதத்தை அறியாதவர்களும் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி இறுதிநாளில் இவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். 2:114 மேலும் மஸ்ஜித்களில் இறையில்லங்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதை எவன் தடுக்கின்றானோ, மேலும் அவற்றைப் பாழாக்க முயற்சி செய்கின்றானோ அவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? அத்தகையவர்கள் அந்த இறையில்லங்களில் நுழைவதற்கே அருகதையற்றவர்களாவர்; ஒருவேளை அங்கே அவர்கள் செல்ல வேண்டியதாய் இருந்தாலும் அச்சம் கொண்டவர்களாகவே (செல்லும் சூழ்நிலை) இருக்க வேண்டும். அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் பெரும் வேதனை உண்டு. 2:115 கிழக்கு, மேற்கு யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, நீங்கள் எங்கு திரும்பினாலும், அங்கு அல்லாஹ்வின் திசை இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் மிக விசாலமானவன்; மிக அறிந்தவன். 2:116 “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (இக்கூற்றிலிருந்து) தூய்மையானவன். உண்மை யாதெனில், வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனுக்கே உரியனவாகும். அனைத்தும் அவனது கட்டளைக்கே கீழ்ப்படிபவைகளாய் இருக்கின்றன. 2:117 ஆதியில் வானங்களையும், பூமியையும் படைத்து உருவாக்கியவன் அவனே! அவன் எதனையும் படைப்பதற்குத் தீர்மானித்தால், ‘ஆகுக’ என்றுதான் அதற்கு ஆணையிடுவான். அது உடனே ஆகிவிடுகின்றது. 2:118 “எங்களுடன் நேரடியாகவே அல்லாஹ் ஏன் பேசக்கூடாது? அல்லது எங்களிடம் ஏதேனும் ஒரு சான்று ஏன் வரக்கூடாது?” என்று அறியாதவர்கள் கேட்கிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்பு சென்றவர்களும் கூறிக்கொண்டிருந்தார்கள். (நேர்வழி தவறிய) இந்த மக்கள் அனைவரின் மனப்பாங்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் இருக்கின்றது. உறுதியாக நம்புவோர்க்கு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்கிக் காட்டி விட்டோம். 2:119 சத்திய(ஞான)த்துடன், நற்செய்தியை அறிவிப்பவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் உம்மை திண்ணமாக நாம் அனுப்பியிருக்கின்றோம். (இதனைவிடத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?) நரகத்துடனேயே தங்களை இணைத்துக் கொண்டவர்களைப் பற்றி நீர் வினவப்படமாட்டீர். 2:120 (நபியே!) யூதர்களும் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய வழி முறையை நீர் பின்பற்றாத வரை உம்மைப் பற்றி மன நிறைவடையவே மாட்டார்கள். “அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும்” என்று அவர்களிடம் நீர் தெளிவாகச் சொல்லி விடும். மேலும் இந்த ஞானம் உம்மிடம் வந்த பிறகும், அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின் அல்லாஹ்வின் பிடியிலிருந்து காப்பாற்றும் நண்பரோ உதவியாளரோ எவரும் உமக்கு இருக்கமாட்டார். 2:121 எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். அவர்கள் இதன் மீது (இந்தக் குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர். 2:122 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலக மக்கள் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். 2:123 மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்துதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தவிதமான ஃபித்யாவும் (மீட்புப் பணமும்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தப் பரிந்துரையும் எவர்க்கும் பயன் தராது; மேலும் (குற்றவாளிகளாகிய) அவர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது. 2:124 மேலும், இப்ராஹீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர், அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார். (அப்பொழுது) அவன் கூறினான்: “நான் நிச்சயமாக உம்மை மனித குலத்திற்குத் தலைவராக்கப் போகின்றேன்.” இப்ராஹீம் வினவினார்: “என்னுடைய வழித்தோன்றல்களையும் (இந்த வாக்குறுதி) சாருமா?” அதற்கு அவன் கூறினான்: “அநீதியாளர்களை என்னுடைய இந்த வாக்குறுதி சாராது!” 2:125 மேலும் நினைவுகூருங்கள்: நாம் (கஅபத்துல்லாஹ் எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒரு மையமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், “இப்ராஹீம் (வணக்கத்திற்காக நின்ற) இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும், “தவாஃப், இஃதிகாஃப், ருகூவு, ஸுஜூது* ஆகியவற்றைச் செய்பவர்களுக்காக எனது இவ்வீட்டை நீங்கள் இருவரும் தூய்மையாக்கி வையுங்கள்” என்று இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளை பிறப்பித்தோம். 2:126 மேலும் இந்தச் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருவீராக! இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்: “என் அதிபதியே! நீ இந்நகரத்தை அமைதி அளிக்கும் நகரமாக்கி வைப்பாயாக! இங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு, (அனைத்து விதமான) பழங்களையும் (உணவு வகைகளையும்) வழங்குவாயாக!” அதற்கு அவருடைய அதிபதி பதிலளித்தான்; “நம்பிக்கை கொள்ளாதவனுக்கும் இவ்வுலகின் சொற்ப வாழ்வுக்குரிய வசதிகளை நான் வழங்குவேன். ஆயினும், இறுதியில் அவனை நரக வேதனையின் பக்கம் இழுத்துச் செல்வேன். (அவ்வாறு) அவன் சேருமிடம் மிகவும் கெட்டது!” 2:127 மேலும் நினைவுகூருங்கள்: இப்ராஹீமும் இஸ்மாயீலும் அவ் வீட்டின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுடைய இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். 2:128 எங்கள் இறைவனே! மேலும், எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் முஸ்லிம்களாய் ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் வழித்தோன்றலிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காண்பிப்பாயாக! மேலும் எங்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் பெரிதும் மன்னிப்பவனும் மிக்க கருணையுடையோனுமாய் இருக்கிறாய். 2:129 எங்கள் இறைவனே! மேலும், இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவராகவும், மேலும் அவர்களை (அவர்களுடைய வாழ்க்கையைத்) தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும். திண்ணமாக நீயே பேராற்றலுள்ளவனும், பேரறிவாளனுமாய் இருக்கின்றாய்.” 2:130 இப்பொழுது இப்ராஹீமின் வழிமுறையை யார் புறக்கணிப்பார்? தன்னைத்தானே எவன் மூடனாக்கிக் கொண்டானோ அவனைத் தவிர! இப்ராஹீமையோ நாம் திண்ணமாக இவ்வுலகில் (எமது பணிக்காகத்) தேர்ந்தெடுத்தோம். இன்னும் நிச்சயமாக மறு உலகிலும் அவர் நல்லடியார்களில் ஒருவராக இருப்பார். 2:131 (அவருடைய நிலை எத்தகையதாயிருந்ததென்றால்) அவருடைய இறைவன், “நீர் ‘முஸ்லிமாகி விடுவீராக’ என அவரிடம் கூறினான். அதற்கு அவர் (உடனே) பதில் கூறினார்: “அகிலமனைத்தின் அதிபதிக்கு நான் (கீழ்ப் படிந்த) முஸ்லிமாகிவிட்டேன்.” 2:132 இதே வழிமுறையில் செல்லும்படித் தம் மக்களுக்கும் இப்ராஹீம் அறிவுறுத்தியிருந்தார். மேலும், இதனையே பின்பற்றி வாழும்படி யஃகூபும் தம் மக்களுக்கு அறிவுறுத்திச் சென்றார். அவர் கூறினார்: “என்னுடைய மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இந்த தீனையே (நெறியையே) தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி இறந்து விடாதீர்கள்!” 2:133 யஃகூபை மரணம் நெருங்கியபொழுது நீங்கள் அங்கிருந்தீர்களா என்ன? (அவர் மரணிக்கும் தருவாயில்) தம் மக்களிடம் வினவினார்: “மக்களே, எனக்குப் பின்னர் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” அதற்கு அவர்கள் அனைவரும் பதிலளித்தனர்: “உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அத்துடன் நாங்கள் அவனுக்கே (கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகத் திகழ்வோம்!” 2:134 அந்தச் சமூகத்தினர் சென்று விட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அனைத்தும் அவர்களுக்கே; நீங்கள் சம்பாதிப்பவை உங்களுக்கே! மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். 2:135 (யூதர்கள் கூறுகிறார்கள்:) “நீங்கள் யூதர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்!” (கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்:) “நீங்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்!” (அவர்களிடம்) சொல்வீராக: “இல்லை, நான் அனைத்திலிருந்தும் முகம் திருப்பி இப்ராஹீமின் வழிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” 2:136 (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: “அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கி அருளப்பட்டதையும், மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பட்டதையும், மற்றும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவர்க்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக இருக்கின்றோம்.” 2:137 நீங்கள் நம்பிக்கை கொண்டதுபோல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவார்கள். ஆனால், அவர்கள் புறக்கணிப்பார்களேயானால் அவர்கள் பகைமையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் (என்பது வெளிப்படையானதாகும்). ஆகையால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு(த் துணை செய்ய)ப் போதுமானவன் (என்று உறுதி கொண்டு நிம்மதியாய் இருங்கள்). அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். 2:138 கூறுவீராக: “அல்லாஹ்வின் வர்ணத்தை மேற்கொள்வீர்களாக! அல்லாஹ்வின் வர்ணத்தைக் காட்டிலும், யாருடைய வர்ணம் சிறந்தது? மேலும் நாங்கள் அவனுக்கே பணிந்து வாழ்பவராய் இருக்கின்றோம்.” 2:139 (நபியே! அவர்களிடம்) கேட்பீராக: “அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களுடன் நீங்கள் தர்க்கம் புரிகின்றீர்களா? அவனோ எங்களின் அதிபதியும் உங்களின் அதிபதியும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே! மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே எங்கள் அடிபணிதலை முற்றிலும் உரித்தானதாக்கி விட்டோம். 2:140 அல்லது இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோரும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் அனைவரும் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?” அவர்களிடம் கேளுங்கள்: “நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லாஹ் நன்கறிந்தவனா?” அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதனை மறைப்பவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார்? மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை 2:141 அந்தச் சமூகத்தினர் சென்றுவிட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)