அத்தியாயம்  அல்பகறா  2 : 253-286 / 286
2:253 (மனித குலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக) நாம் அனுப்பிய அந்தத் தூதர்களில் சிலரை, சிலரைவிடச் சிறப்புடையோராக்கினோம். அல்லாஹ், நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு. மேலும் சிலருக்கு வேறு பல உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கினோம். மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளைக் கொடுத்தோம். இன்னும் ரூஹுல் குத்ஸைக்* கொண்டு அவரை வலுப்படுத்தவும் செய்தோம். அல்லாஹ் நாடியிருந்தால், (அந்தத் தூதர்களுக்குப்) பின்னர் வந்தவர்கள், தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் (அம் மக்களை வேற்றுமைகளிலிருந்து கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது அல்லாஹ்வின் நாட்டமல்ல; ஆதலால்) அவர்கள் (தமக்குள்ளேயே) வேறுபட்டுக் கொண்டனர். அவர்களில் சிலர் இறைநம்பிக்கை கொண்டனர்; வேறு சிலர் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் செய்கின்றான். 2:254 நம்பிக்கை கொண்டவர்களே! எந்த விதமான பேரமும், நட்பும், பரிந்துரையும் பயன்தர முடியாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருமுன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். இன்னும் நிராகரிக்கும் போக்கை மேற்கொள்பவர்கள்தாம் உண்மையில் அக்கிரமம் புரிபவர் ஆவர். 2:255 அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான். 2:256 தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை* நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் திட்டமாக, மிகப் பலமான பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது. (அவர் தன்னுடைய ஆதரவாளனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட) அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிவோனுமாய் இருக்கின்றான். 2:257 இறைநம்பிக்கை கொண்டோருக்குப் பாதுகாப்பளித்து உதவுபவன் அல்லாஹ்தான்! அவன், அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும் இறைநிராகரிப்பை மேற்கொண்டவர்களுக்கு உதவுவோர், தாஃகூத்களேயாவர். அவர்கள் இவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர். அத்தகையவர்கள் நரகவாசி களேயாவர்; அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் வீழ்ந்து கிடப்பார்கள்! 2:258 இப்ராஹீமுடைய அதிபதி யார் என்பது குறித்து அவருடன் தர்க்கம் புரிந்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரம் வழங்கியிருந்த காரணத்தாலேயே அவன் தர்க்கம் புரிந்தான். “எவன் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றானோ அவனே என்னுடைய அதிபதி!” என இப்ராஹீம் கூறியதற்கு, “நானும் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றேனே!” என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம் “அப்படியானால் அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். நீ அதைச் சற்று மேற்கிலிருந்து உதிக்கச் செய்!” என்று கூறினார். (இதைக் கேட்ட மாத்திரத்தில்) சத்தியத்தை மறுத்த அவன் திகைத்துப் போனான். அல்லாஹ் அக்கிரமம் புரிபவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை. 2:259 அல்லது முகடுகள் இடிந்து வீழ்ந்து கிடந்த ஓர் ஊரினைக் கடந்து சென்ற ஒரு மனிதரின் உதாரணத்தை நீர் கவனிக்க வில்லையா? அவர் “(முற்றிலும்) அழிந்து போய்விட்ட இந்த ஊர் மக்களை அல்லாஹ் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறான்?” என வினவினார். அதற்கு அல்லாஹ் அவருடைய உயிரைக் கைப்பற்றி நூறாண்டுகள் அவரை உயிரற்றவராய்க் கிடக்கச் செய்தான்! பின்னர் அவரை உயிர்த்தெழச் செய்து வினவினான்: “நீர் எவ்வளவு காலம் இவ்வாறு கிடந்தீர்?அதற்கு அவர் “ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் நான் இப்படிக் கிடந்திருப்பேன்” என்று கூறினார். அல்லாஹ் கூறினான்: “இல்லை; (இந்நிலையிலேயே) நீர் நூறாண்டுகள் கிடந்தீர்! உம்முடைய உணவையும் பானத்தையும் சற்றுப் பாரும்! அவை சிறிதும் கெட்டுப் போகவில்லை. மேலும் உம்முடைய கழுதையைப் பாரும்! (அதன் எலும்புகள்கூட மக்கிப் போய்விட்டன). உம்மை மக்களுக்கோர் சான்றாக விளங்கச் செய்வதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம். அந்த எலும்புகளை நாம் எவ்வாறு ஒன்று சேர்த்துப் பின்னர் சதையால் அவற்றைப் போர்த்துகிறோம் என்பதைப் பாரும்! இப்படி, உண்மை அவருக்குத் தெளிவானபோது, “திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். 2:260 “என் அதிபதியே! மரித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறிய சந்தர்ப்பத்தையும் நினைவுகூரும். அப்பொழுது இறைவன், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான்: “ஆம்! (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) எனினும் என்னுடைய மனம் அமைதியடையும் பொருட்டே இவ்வாறு கேட்கிறேன்!” என்று அவர் கூறினார். அதற்கு அல்லாஹ், “அப்படியானால் நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை (நன்கு பழக்கி) உம்முடன் இணங்கி இருக்கச் செய்யும். பின்னர் (அவற்றைத் துண்டுகளாக்கி) அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிடும்; பிறகு அவற்றை நீர் கூப்பிடும்! அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும். மேலும் அல்லாஹ், நிச்சயமாக வல்லமை மிக்கோனும் நுண்ணறிவுடையோனுமாயிருக்கின்றான் என்பதை நீர் நன்கு அறிந்து கொள்ளும்” என்று கூறினான். 2:261 அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை) பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான். 2:262 எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும், (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு உரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்! 2:263 கனிவான சொல்லும் (விரும்பாத விஷயங்களை) மன்னித்து விடுவதும், மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்புடையனவாகும். மேலும் அல்லாஹ் தன்னிறைவுள்ளவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான். 2:264 இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் ஈமான் கொள்ளாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளை செலவு செய்பவனைப் போல நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்! அவன் (செய்யும் செலவுக்கு) உவமை, மண் மூடிய ஒரு வழுக்குப் பாறையைப் போன்றதாகும். அதன் மீது பெருமழை பெய்து, (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டுபோய்) அதை வெறும் பாறையாக்கி விட்டது. இத்தகையவர்கள் செய்யும் தான தர்மங்களால் எதையும் (எந்த நன்மையையும்) ஈட்ட முடியாது. மேலும் நன்றி கொல்லும் மக்களுக்கு நேர்வழி காண்பிப்பது அல்லாஹ்வின் நியதி அல்ல! 2:265 (இதற்கு மாறாக) யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி உளப்பூர்வமாக தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, உயரமான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தன்னுடைய கனிகளை அது இருமடங்காகத் தருகிறது. அப்படிப் பெரு மழை அதில் பெய்யவில்லை என்றாலும், இலேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான். 2:266 உங்களில் யாரேனும் ஒருவர் இதை விரும்புவாரா? (அதாவது) அவருக்குப் பேரீச்சைகளும், திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதனூடே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கனிவகைகள் அனைத்தும் அ(த் தோட்டத்)தில் கிடைக்கின்றன. (எதுவும் செய்ய) இயலாத சிறு குழந்தைகளே அவருக்கு இருக்கின்ற நிலையில் அவரை முதுமை வந்தடைகிறது. அப்போது தீயுடன் கூடிய புயற்காற்று அ(த்தோட்டத்)தை தாக்கிப் பொசுக்கிவிடுகிறது. இவ்வாறு அல்லாஹ், உங்களுக்குத் தன் சான்றுகளை, நீங்கள் சிந்தித்துணரும் பொருட்டு விவரிக்கின்றான். 2:267 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதித்த பொருள்களிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்தவற்றிலிருந்தும் சிறந்தவற்றை (இறை வழியில்) செலவு செய்யுங்கள். அவற்றில் மோசமான பொருள்களைத் (தேர்ந்தெடுத்து) அவனுடைய வழியில் நீங்கள் செலவு செய்ய முற்படாதீர்கள். உண்மையில் அது போன்ற மோசமான பொருள்களை உங்களுக்கு எவரேனும் கொடுத்தால், நீங்கள் அதனை விரும்பமாட்டீர்களே! அல்லது கண்டும் காணாமல்தானே அதனை ஏற்றுக் கொள்வீர்கள்? நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு உள்ளவனும் மாபெரும் புகழுடையோனுமாய் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 2:268 ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகின்றான்; மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். அல்லாஹ் விசாலமான கொடையாளனும் எல்லாம் அறிந்தவனுமாவான். 2:269 தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள். 2:270 நீங்கள் ஏதேனும் செலவு செய்திருந்தால் அல்லது நீங்கள் ஏதேனும் நேர்ச்சை நேர்ந்திருந்தால் அதனை நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான். மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 2:271 நீங்கள் தர்மங்களை வெளிப்படை யாகச் செய்யின் அதுவும் நல்லதுதான்; நீங்கள் அவற்றை யாருக்கும் தெரியாமல் தேவையுடையோர்க்கு கொடுப்பீர்களாயின் அது இன்னும் உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் இத்தகைய செயல்கள் காரணமாக உங்கள் தீமைகளை அல்லாஹ் அழித்து விடுகின்றான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாய் இருக்கின்றான். 2:272 (நபியே!) அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பு உம்முடையதல்ல. எனினும், தான் நாடுபவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் நீங்கள் எந்த நல்ல பொருளை (இறைவழியில்) செலவு செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாய் இருக்கும். அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்வதில்லையே...! எனவே எந்த நல்ல பொருளை (இறைவழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்; மேலும் நீங்கள் (ஒருபோதும்) அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். 2:273 பூமியில் (தம் தேவைகளுக்காக) ஓடியாடி உழைக்க முடியாத வண்ணம் அல்லாஹ்வின் பாதையில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களான வசதியற்றவர்கள்தாம் உங்கள் தர்மங்களுக்கு மிகவும் உரித்தானவர்கள் ஆவர்! (அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர்களிடமுள்ள தன்னடக்கத்தைக் கண்டு அவர்களை தன்னிறைவு பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள். அவர்களின் முகங்களைப் பார்த்தே அவர்களின் உண்மை நிலையை நீர் அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களோ மக்களிடம் வற்புறுத்திக் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அவர்களுக்காக) நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 2:274 எவர்கள் தங்களுடைய பொருள்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் அதிபதியிடம் உரிய கூலி இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 2:275 (ஆனால்) வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும்; வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே, எவர் தம் இறைவனிடமிருந்து இந்த அறிவுரை வந்த பிறகு (இனி வட்டி வாங்குவதை விட்டு) விலகிக் கொள்கின்றாரோ அவர் முன்னர் வாங்கியது வாங்கியதுதான் என்றாலும் அவருடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. ஆனால் (இந்தக் கட்டளை வந்த பிறகும்) யாரேனும் (இந்தக் குற்றத்தை) மீண்டும் செய்தால், அவர்கள் நரகவாசிகளே ஆவர்; அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 2:276 அல்லாஹ் வட்டியை அழித்து விடுகின்றான்; இன்னும் தானதர்மங்களை வளரச் செய்கின்றான். மேலும் நன்றி கொன்று, தீய செயல் புரிவோர் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 2:277 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி, தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 2:278 இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளராக இருப்பின் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (உங்களுக்கு வரவேண்டிய) வட்டிப் பாக்கிகளை விட்டு விடுங்கள். 2:279 ஆனால், அவ்வாறு நீங்கள் செய்யாவிடின், அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள். (இப்பொழுதும்கூட) நீங்கள் பாவமன்னிப்புக்கோரி (வட்டியைக் கைவிட்டு) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. 2:280 உங்களிடம் கடன் பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும்வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும். 2:281 வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. 2:282 இறைநம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுக்கல், வாங்கல் மேற்கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (அதாவது) உங்களுக்கிடையில் ஓர் எழுத்தர் நீதியோடு எழுத வேண்டும்; எழுதவும், படிக்கவும் உள்ள ஆற்றலை அல்லாஹ் யாருக்கு வழங்கியுள்ளானோ அவர் அதனை எழுத மறுக்கக் கூடாது. அவர் எழுத வேண்டும்; எவர் மீது கடனைச் செலுத்தும் பொறுப்பு இருக்கிறதோ அவர், (எழுதுவதற்கு) வாசகம் சொல்லிக் கொடுக்க வேண்டும். (அப்போது) அவருடைய அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ள வேண்டும். மேலும் கடன் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். ஆனால் எவர் மீது (கடனைச் செலுத்தும்) பொறுப்பு இருக்கிறதோ அவர் (போதிய) அறிவு இல்லாதவராகவோ, இயலாதவராகவோ, தானே வாசகம் சொல்ல ஆற்றல் இல்லாதவராகவோ இருந்தால் அப்போது அவரின் பொறுப்பாளர் நீதியான முறையில் வாசகம் சொல்ல வேண்டும். மற்றும் உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால், மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவாள் என்பதற்காக! இந்த சாட்சிகள் உங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாய் இருக்க வேண்டும். சாட்சி சொல்ல வேண்டியவர்கள் (சாட்சியத்துக்காக) அழைக்கப்படும்போது மறுக்கக் கூடாது. (தவிர கடன் ஒப்பந்தம்) சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி தவணை குறிப்பிட்டு அதை எழுதி வைப்பதில் அலட்சியமாய் இருந்து விடாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு மிக நீதியான முறையாகும்; மேலும் சாட்சியத்தை மிக (இலகுவாக) உறுதிப்படுத்தக் கூடியதும் உங்கள் சந்தேகங்களைக் குறைக்கக்கூடியதுமாகும். ஆனால், அந்த ஒப்பந்தம் உங்களுக்கிடையே நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்ற உடனடி ரொக்கக் கொள்முதலாக இருந்தால், அதை நீங்கள் எழுதி வைக்காமலிருப்பதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆயினும் வியாபார ஒப்பந்தங்களைத் தீர்மானித்து விட்டீர்களாயின் அவற்றிற்குச் சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும், சாட்சிகளும் துன்புறுத்தப் படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால், அது நிச்சயமாக உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் சினத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்; மேலும் அவன் உங்களுக்கு (நேரான வழிமுறையைக்) கற்றுக் கொடுக்கின்றான்; மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கறிபவனாய் இருக்கின்றான். 2:283 நீங்கள் பயணத்திலிருந்தால்மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையாயின் அடகுப் பொருளைப் பெற்றுக்கொண்டு நீங்கள் கொடுக்கல்வாங்கல் செய்து கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றொருவரை நம்பி ஏதேனும் பொருளை ஒப்படைத்தால் நம்பப்பட்டவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருளைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இன்னும் தன் அதிபதியான அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ளட்டும்! மேலும் சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். யாரேனும் சாட்சியத்தை மறைத்தால் அவருடைய இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்கின்ற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கின்றான். 2:284 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்து வைத்தாலும் எந்நிலையிலும் அல்லாஹ் உங்களிடம் அவை பற்றிக் கணக்குக் கேட்பான். பின்னர் தான் நாடுபவர்களை அவன் மன்னிப்பான்; தான் நாடுபவர்களைத் தண்டிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான். 2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!”
அத்தியாயம்  ஆலு இம்ரான்  3 : 1-14 / 200
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
3:1 அலிஃப், லாம், மீம். 3:2 அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. 3:3 (நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் 3:4 இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான். 3:5 திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று! 3:6 அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை. 3:7 (நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள். 3:8 அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய். 3:9 எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.” 3:10 நிச்சயமாக, இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள். 3:11 ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல்தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள். எனவே அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். (உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கின்றான். 3:12 எனவே (நபியே!) உமது அழைப்பை ஏற்க மறுத்தவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் வெகு விரைவில் கீழடக்கப்படுவீர்கள். மேலும், நீங்கள் நரகத்தை நோக்கி கூட்டமாக விரட்டிச் செல்லப்படுவீர்கள்; அதுவோ மிகக் கெட்ட தங்குமிடமாகும்!” 3:13 (பத்ரில்) மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் திண்ணமாக உங்களுக்குப் படிப்பினை தரும் சான்று இருக்கிறது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வழியில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் (அவனை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். நம்பிக்கையாளர்களைவிட நிராகரிப்பாளர்கள் இரு மடங்கு அதிகமாய் இருந்ததை பார்ப்பவர்கள் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு உதவி செய்து வலுவூட்டுகின்றான் (என்பதைப் போரின் முடிவு நிரூபித்து விட்டது). திண்ணமாக அகப்பார்வை உடையோருக்கு இதில் மாபெரும் படிப்பினை (பொதிந்து) இருக்கிறது. 3:14 பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)