அத்தியாயம்  அல்பகறா  2 : 203-252 / 286
2:203 இன்னும், குறிப்பிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூரல் வேண்டும். பின்னர் எவரேனும் இரண்டே நாட்களில் அவசரமாகத் திரும்பி விட்டால் அவர் மீது குற்றமேதுமில்லை. எவரேனும் சிறிது தாமதித்துப் புறப்பட்டால் அவர் மீதும் குற்றமில்லை. ஆனால் (ஒரு நிபந்தனை:) அவர் இந்த நாளை இறையச்சத்துடன் கழித்திருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! மேலும் (ஒரு நாள்) நீங்கள் அவனுடைய திருமுன்னர்தான் ஒன்று திரட்டப்பட விருக்கின்றீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்! 2:204 மனிதர்களில் இப்படி ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய பேச்சு இவ்வுலக வாழ்க்கையில் உமக்கு கவர்ச்சியாகத் தென்படுகிறது. மேலும், அவன் தன் மனத்தில் உள்ளவை தூய்மையானவை என (நிரூபிக்க அடிக்கடி) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றான். ஆனால் உண்மையில் அவனே (சத்தியத்தின்) கொடிய பகைவன் ஆவான். 2:205 அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை. 2: 206 மேலும் “நீ அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்திடு!” என்று அவனிடம் கூறப்பட்டால், அவனது வறட்டு கௌரவம் அவனைப் பாவத்திலாழ்த்தி விடுகின்றது. இத்தகைய மனிதனுக்கு நரகமே போதுமானதாகும். மேலும் அது மிக மோசமான தங்குமிடமாகும். 2:207 மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்: அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி தன் வாழ்வையே அர்ப்பணித்துவிடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகுந்த பரிவுடையவனாய் இருக்கின்றான். 2:208 இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள்! மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான்; 2:209 (முழுக்க முழுக்கத்) தெளிவான அறிவுரைகள் உங்களுக்கு வந்த பின்னரும் நீங்கள் வழி பிறழ்ந்து போவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையோன்; நுண்ணறிவுள்ளோன் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். 2:210 (இவ்வளவு அறிவுரைகளும், ஏவுரைகளும் பெற்ற பின்னரும் கூட மக்கள் நேர்வழியில் செல்லவில்லையென்றால்) மேகக் குடைகளினூடே இறைவனும் வானவர்களும் தங்களிடம் வரவேண்டும்; மேலும் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்பதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? இறுதியில் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடமே கொண்டுவரப்பட விருக்கின்றன. 2:211 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு எத்துணைத் தெளிவான சான்றுகளை நாம் வழங்கியிருக்கின்றோம் என்பதை அவர்களிடமே கேளுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து நற்பேறு வந்த பின்னர் யார் அதனை (துர்பாக்கியத்திற்கு) பரிமாற்றம் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் எத்துணைக் கடுமையாகத் தண்டிக்கின்றான் என்பதையும் அவர்களிடம் கேளுங்கள். 2:212 யார் இறைநிராகரிப்பை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை ஏளனம் செய்கின்றார்கள். ஆனால் இறையச்சத்துடன் வாழ்பவர்கள்தாம் மறுமைநாளில் இவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இவ்வுலக வசதிகளையோ அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றான். 2:213 (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். 2:214 உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.” 2:215 தாம் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக: “நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளையும் செலவு செய்யுங்கள்; (அதனை உங்கள்) பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் செலவழியுங்கள்! மேலும் நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனைத் திண்ணமாக அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.” 2:216 போர் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது; ஆனால் அதுவோ உங்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை. 2:217 தடை செய்யப்பட்ட மாதத்தில் போர் செய்வது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: “அதில் போர் செய்வது மிகக் கொடியதுதான்! ஆனால் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுப்பது, இன்னும் அவனுக்கு மாறு செய்வது, மேலும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வர விடாமல் (இறையடியாரைத்) தடுப்பது மற்றும் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது ஆகியவை அல்லாஹ்வினிடத்தில் அதைவிடக் கொடியனவாகும்.” மேலும், ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியதாகும். அவர்களுக்குச் சாத்தியமானால் உங்கள் தீனை (நெறியை) விட்டு உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் அவர்கள் போர் செய்து கொண்டே இருப்பார்கள். (ஆனால் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.) உங்களில் யாரேனும் தமது தீனை விட்டு மாறி, குஃப்ரின் இறைநிராகரிப்பின் நிலையிலேயே மரணித்துவிட்டால், இம்மையிலும் மறுமையிலும் அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மேலும் அத்தகையோர் அனைவரும் நரகவாசிகளேயாவர்! அதில் அவர்கள் என்றென்றும் விழுந்துகிடப்பார்கள். 2:218 மாறாக எவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டார்களோ மேலும் இறைவனுக்காக தம் வீடு வாசல்களைத் துறந்தார்களோ, மேலும் இறைவழியில் ஜிஹாத் செய்தார்களோ அவர்களே அல்லாஹ்வின் நல்லருளை (நியாயமாக) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்லாஹ், அவர்களின் பிழைகளைப் பெரிதும் மன்னிப்பவனா கவும், இன்னும் அவர்கள் மீது பேரருள் புரிபவனாகவும் இருக்கின்றான். 2:219 மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும், அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனைவிட அதிகமாக இருக்கின்றது. (இறைவழியில்) என்ன செலவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள்” என அவர்களிடம் கூறுவீராக! இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; 2:220 நீங்கள் இம்மை மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக! அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல் முறையை மேற்கொள்வதே உத்தமமாகும். நீங்களும், அவர்களும் சேர்ந்து வாழ்வதில் (உணவு, உறைவிடம் போன்றவைகளுக்குக் கூட்டாகச் செலவு செய்வதில்) குற்றமேதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். தீமை செய்பவர்களையும் நன்மை செய்பவர்களையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். ஆனால் அல்லாஹ் பேராற்றலுள்ளவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.” 2:221 இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் ஒருபோதும் திருமணம் செய்யாதீர்கள். இணைவைக்கும் ஒரு பெண் உங்களுக்குப் பிடித்தமானவளாய் இருந்தபோதிலும், இறைநம்பிக்கையுள்ள பெண்ணே சிறந்தவள். அவள் அடிமையாக இருந்தாலும் சரியே! மேலும் (உங்கள் பெண்களை) இறைவனுக்கு இணைவைப்போருக்கு அவர்கள் ஈமான் கொள்ளும் வரை ஒருபோதும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணைவைக்கும் ஓர் ஆண் உங்களுக்குப் பிடித்தமானவராய் இருந்தபோதிலும் இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையே, அவரைவிடச் சிறந்தவராவார். இத்தகையோர் நரகத்தை நோக்கியே உங்களை அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ, தன் உத்தரவின் மூலம் சுவனம் மற்றும் மன்னிப்பின் பக்கம் (உங்களை) அழைக்கின்றான். மேலும் தன் கட்டளைகளை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் காண்பிக்கின்றான் அவர்கள் அறிவுரையை ஏற்று படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக! 2:222 இன்னும் மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அது ஒரு தூய்மையற்ற நிலை; ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்! பிறகு அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான். 2:223 உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்! மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக முன்கூட்டியே ஏதாவது செய்துகொள்வதில் அக்கறை காட்டுங்கள்; அல்லாஹ்வின் சினத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!” மேலும் நிச்சயமாக நீங்கள் (ஒரு நாள்) அவனைச் சந்திக்கவிருக்கிறீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்! இன்னும் (நபியே!) உம்முடைய அறிவுரைகளை ஏற்றுக் கொண்டிருப்போருக்கு, (வெற்றியையும், பேறுகளையும் குறித்து) நற்செய்தி கூறுவீராக! 2:224 நன்மை செய்தல், இறையச்சத்துடன் வாழ்தல், மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வின் பெயரைக் கருவியாக்காதீர்கள்! அல்லாஹ் உங்கள் பேச்சுகள் அனைத்தையும் கேட்பவனாகவும் (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான். 2:225 (உள்நோக்கம் எதுவுமின்றி) தற்செயலாக நீங்கள் செய்யும் அபத்தமான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், நீங்கள் உளப்பூர்வமாகச் செய்த சத்தியங்களுக்காக நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், அதிகம் சகிப்புத்தன்மையுடையோனாகவும் இருக்கின்றான். 2:226 தங்கள் மனைவியரை நெருங்குவதில்லையென்று சபதம் செய்து விலகி இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுண்டு. எனவே அதற்குள் (தங்கள் மனைவியரிடம்) அவர்கள் திரும்பிவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான். 2:227 ஆனால் அவர்கள் ‘தலாக்’ சொல்வதென்று தீர்மானித்துவிட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்! 2:228 தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும். தங்களுடைய கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் ஒருபோதும் அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது! அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான். 2:229 தலாக் இரு தடவைகள்தாம்! பின்னர் நேரிய விதத்தில் அவர்களை (மனைவியராகவே) வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அழகிய முறையில் அவர்களை விடுவித்துவிட வேண்டும். அவ்வாறு விடுவித்த பிறகு அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த பொருள்களிலிருந்து எதனையும் நீங்கள் திருப்பி வாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. மேலும், அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருக்க முடியாது என (கணவன் மனைவியாகிய இருவரும்) அஞ்சினால், மேலும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருக்கமாட்டார்கள் என்று (நடுவர்களாகிய) நீங்களும் அஞ்சினால், மனைவி, கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்துவிடுவதில் அவர்கள் மீது தவறில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரம்புகளாகும். எனவே, நீங்கள் அவற்றை மீறிச் செல்லாதீர்கள்; மேலும் யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறார்களோ அவர்களே அக்கிரமக்காரர்கள் ஆவர்! 2:230 (இரண்டு தடவை தலாக் சொன்ன) பின்னர் (மூன்றாம் தடவை மீண்டும்) அவளை அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டால், பிறகு அவள் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் (ஹலால்) அல்ல வேறு ஓர் ஆணை அவள் மணந்து, அவனும் தலாக் சொல்லும் வரை! ஆனால் அவன் (இரண்டாம் கணவன்) அவளைத் தலாக் சொல்லிவிட்டால் அப்போது முதற் கணவனும் அவளும் அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருப்போம் என்று எண்ணினால், அவ்விருவரும் (மீண்டும் மணவாழ்வுக்குத்) திரும்புவதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இறை வரம்புகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை) அறிந்திருக்கும் மக்களுக்கு அவன் இவற்றை விளக்குகிறான். 2:231 நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்ல முறையில் அவர்களை உங்களுடன் வாழச் செய்யுங்கள்; அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பிவிடுங்கள்! ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும், தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள்! அப்படி எவரேனும் செய்தால், உண்மையில் அவர் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவராவார். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலும் அல்லாஹ், உங்கள் மீது பொழிந்திருக்கும் அருட்கொடையை நினைவில் வையுங்கள்! மேலும் அவன் உங்கள் மீது இறக்கியிருக்கும் வேதத்தையும், ஞானத்தையும் கண்ணியப்படுத்துங்கள் என உங்களுக்கு அவன் அறிவுரை கூறுகின்றான். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். மேலும், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 2:232 நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா) தவணையை நிறைவு செய்தால் பிறகு அவர்கள், தங்களுக்குரிய துணைவர்களை நேர்மையான முறையிலும் பரஸ்பர பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள். இவ்வாறு (ஒருபோதும் செயல்படக் கூடாது என்று) உங்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்புநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரை கூறப்படுகின்றது. இதுவே உங்களுக்கு மிகத் தூய்மையானதும், பண்புமிக்கதுமான வழிமுறையாகும். மேலும், அல்லாஹ் நன்கு அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்! 2:233 (தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை நிறைவு செய்ய வேண்டும் என்று தந்தையர்களில் யாராவது விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். (இந்நிலையில்) அத்தாய் மார்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும், உடை கொடுப்பதும் குழந்தைகளின் தந்தையர்க்குரிய பொறுப்பாகும். (ஆனால்) எவர் மீதும் அவரது சக்திக்கேற்பவே தவிர பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது. தாயும் தனது குழந்தையின் காரணத்தால் சிரமத்திற்குள்ளாக்கப்பட மாட்டாள். தந்தையும் தனது குழந்தையினால் சிரமத்திற்குள்ளாக்கப்படமாட்டான். பாலூட்டும் தாய்க்கு உணவும், உடையும் அளிப்பது தந்தை மீது எப்படி பொறுப்பாகுமோ அது போன்றே அவனுடைய வாரிசு மீதும் பொறுப்பாகும். ஆயினும், அவர்களிருவரும் (தாயும், தந்தையும்) ஒருவருக்கொருவர் பரஸ்பர மனநிறைவு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் பால்குடிப் பழக்கத்தை நிறுத்திவிடக் கருதினால் (அவ்வாறு செய்வதில்) அவ்விருவர் மீதும் குற்றமெதுவுமில்லை. மேலும் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய்கள் மூலம் பாலூட்ட விரும்பினால், இதிலும் உங்கள் மீது எவ்விதக் குற்றமுமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை: அவர்களுக்குப் பிரதிபலனாக கொடுக்க வேண்டியதை நீங்கள் முறைப்படிக் கொடுத்துவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் செய்வது அனைத்தையும் அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கின்றான் என்பதை (நன்கு) அறிந்து கொள்ளுங்கள்! 2:234 உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு மரணமடைந்து விட்டால், அவருடைய அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். அப்படித் தங்களின் தவணையை நிறைவு செய்துவிட்டு தங்கள் தனிப்பட்ட விஷயத்தில் (தம் விருப்பத்துக்கொப்ப) ஒழுங்கான முறையில் செயல்பட அவர்களுக்கு உரிமையுண்டு. அதில் உங்கள்மீது எந்தத் தவறும் இல்லை. நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். 2:235 (விதவையான) பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை (அவர்களின்) இத்தா காலத்தில் நீங்கள் சாடையாகத் தெரிவிப்பதிலோ, உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தத் தவறுமில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் (இதோ பாருங்கள்:) அவர்களிடம் இரகசிய உடன்படிக்கை எதுவும் செய்யாதீர்கள்! அவர்களிடம் பேச வேண்டியிருந்தால், வெளிப்படையாக நேர்த்தியாகப் பேசுங்கள்! நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்யத் தீர்மானிக்காதீர்கள்; மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையோனுமாய் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! 2:236 நீங்கள் உங்கள் மனைவியரைத் தீண்டாமலும் அவர்களுக்கு மஹரை நிர்ணயிக்காமலும் இருக்கின்ற நிலையில், அவர்களைத் தலாக் சொல்வீர்களேயானால் உங்கள்மீது குற்றமேதுமில்லை. ஆனால் (இந்நிலையில்) அவர்களுக்கு வாழ்க்கைக்குப் பயனுள்ள ஏதேனும் பொருள்களை அவசியம் கொடுத்து விடுங்கள்! வசதியுள்ளவன் தன்னுடைய சக்திக்கேற்பவும், வசதியற்றவன் தன்னுடைய சக்திக்கேற்பவும் நல்ல முறையில் கொடுத்துவிட வேண்டும். இது நல்லோர் மீதுள்ள கடமையாகும். 2:237 மேலும், மஹரை நிர்ணயித்து விட்டு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன்னர் தலாக் சொல்லி விட்டால், நீங்கள் நிர்ணயித்த மஹரில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் அப்பெண்கள் (மஹரை வாங்காமல்) விட்டுக் கொடுத்தாலே தவிர, அல்லது திருமண ஒப்பந்தம் யாருடைய பொறுப்பில் உள்ளதோ அவர் (முழு மஹரையும்) விட்டுக் கொடுத்தாலே தவிர! மேலும் நீங்கள் (கணவர்கள்) விட்டுக் கொடுப்பதுதான் இறையச்சத்திற்கு மிக இணக்கமானதாகும். நீங்கள் உங்களுக்கிடையில் தயாள குணத்துடன் நடந்துகொள்ள மறந்துவிட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் உற்று நோக்கியவனாக இருக்கின்றான். 2:238 எல்லாத் தொழுகைகளையும், (குறிப்பாக, தொழுகையின் சிறப்பனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள) ஸலாத்துல் உஸ்தாவையும் நீங்கள் பேணித் தொழுது வாருங்கள்; அல்லாஹ்வின் திருமுன் முற்றிலும் அடிபணிந்தவர்களாய் நில்லுங்கள். 2:239 அச்சம் தரும் சூழ்நிலை உருவானால் நீங்கள் நடந்து கொண்டோ, சவாரிசெய்து கொண்டோ (முடிந்த அளவு) தொழுங்கள். பின்னர் உங்களுக்கு அமைதி ஏற்பட்டதும் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்; (எப்படியெனில்) நீங்கள் அறியாதிருந்ததை எவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தானோ அவ்வாறே அவனை நினைவுகூருங்கள்! 2:240 உங்களில் மனைவியரை விட்டு மரணமடைவோர், தம் மனைவியரின் நலன் கருதி, (வீட்டை விட்டு) அவர்கள் வெளியேற்றப்படாமல் ஓராண்டு வரை அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி அளிக்கப்பட வேண்டுமென மரண சாஸனம் செய்ய வேண்டும். ஆனால், அவர்களாகவே வெளியேறிய பிறகு அவர்கள் தங்களின் தனிப்பட்ட விஷயத்தில் ஒழுங்கான முறையில் செயல்பட்டால் உங்கள் மீது எந்தப் பொறுப்புமில்லை. மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் வல்லமை மிக்கோனும், பேரறிவாளனுமாய் இருக்கின்றான். 2:241 இவ்வாறே ‘தலாக்’ சொல்லப்பட்ட பெண்களுக்குப் பொருத்தமாக ஏதேனும் வழங்கி அவர்களை அனுப்பிவிட வேண்டும். இது இறையச்சமுடையோரின் மீது கடமையாகும். 2:242 இப்படி அல்லாஹ் தன்னுடைய கட்டளைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படும் பொருட்டு உங்களுக்கு விளக்கிக் கூறுகின்றான். 2:243 மரணத்துக்கு அஞ்சித் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ, ஆயிரக் கணக்கில் இருந்தனர். ‘நீங்கள் மரணமடைந்து விடுங்கள்!” என்று அல்லாஹ் அவர்களிடம் கூறினான். பின்னர் அவர்களை மீண்டும் அவன் உயிர்ப்பித்தான். (உண்மையில்) அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் பாலிப்பவனாக இருக்கின்றான். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. 2:244 (முஸ்லிம்களே!) அல்லாஹ்வின் வழியில் போர் புரியுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும் பேரறிவாளனாகவும் இருக்கின்றான் என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள்! 2:245 அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் உளர்? (அப்படிக் கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனைப் பல மடங்குகளாக்கி அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ்தான் (செல்வத்தைக்) குறைக்கவும் பெருக்கவும் செய்கின்றான். நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். 2:246 மூஸாவுக்குப் பின்னர் இஸ்ரவேலர்களின் தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றி நீர் சிந்தித்துப் பார்க்கவில்லையா? “அல்லாஹ்வின் வழியில் நாங்கள் போர் புரிவதற்காக எங்களுக்கு ஓர் அரசனை நியமனம் செய்யுங்கள்!” என்று அவர்கள் தம் நபியிடம் கூறியபோது அவர், “போர் உங்கள் மீது விதியாக்கப்படும்போது, நீங்கள் போர் புரியாமல் இருந்து விட்டால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டும், எங்கள் பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டும் இருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போர் புரியாமலிருக்க, எங்களுக்கு என்ன கேடு?” என்று கூறினார்கள். ஆனால் போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டனர்! மேலும், அல்லாஹ் இத்தகைய அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவான். 2:247 அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை, உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றான்” என்று அவர்களிடம் கூறினார். (இதைக் கேட்டதும்) அவர்கள், “எங்கள் மீது ஆட்சி செலுத்த அவர் எவ்வாறு உரிமையுடையவராவார்? நாங்களோ ஆட்சியதிகாரத்திற்கு அவரைவிட அதிகத் தகுதியுடையோராய் இருக்கின்றோம்; மேலும் அவர் செல்வ வளம் அளிக்கப்பட்டவரும் அல்லவே!” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபி கூறினார்: “உங்களுக்கு மேலாக அல்லாஹ் அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும் அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான். தான் நாடுபவர்க்கு தன்னுடைய (பூமியில்) ஆட்சியதிகாரத்தை வழங்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும் அல்லாஹ் மிக விசாலமானவனும் பேரறிவுடையோனாகவும் இருக்கின்றான்.” 2:248 மேலும், அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார்: “அவருடைய ஆட்சி அதிகாரத்திற்கான சான்று (என்ன வென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தில்) உங்களுக்கு ஒரு பேழை திரும்பக் கிடைத்து விடுவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட மன அமைதிக்கான பொருள்களும் மூஸாவுடைய குடும்பத்தினர் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தினர் விட்டுச் சென்ற சிறப்புப் பொருள்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து நிற்கின்றனர். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராக இருந்தால், திண்ணமாக உங்களுக்கு இதில் (மகத்தான) சான்று இருக்கின்றது.” 2:249 பின்னர் தாலூத் படைகளுடன் புறப்பட்டபொழுது கூறினார்: “திண்ணமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். எவரேனும் அதிலிருந்து நீர் அருந்தினால் அவர் என்னைச் சார்ந்தவரல்லர்; யார் அதிலிருந்து தாகம் தணிக்கவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவராவார். ஆயினும் எவரேனும் சிறங்கைத் தண்ணீரை அள்ளிக் குடிப்பதாக இருந்தால் குடித்துக் கொள்ளலாம்.” ஆனால் அவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் அதிலிருந்து தாராளமாக அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தோரும் ஆற்றைக் கடந்து சென்றபோது, “ஜாலூத்தையும் அவனுடைய படையையும் எதிர்த்துப் போரிட இன்று எங்களிடம் வலுவில்லை!” என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் (ஒரு நாள்) அல்லாஹ்வைத் திண்ணமாகச் சந்திப்போம் என உறுதியாக நம்பிக்கை கொண்டவர்கள் கூறினர்: “எத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பெரும் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கிறது; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடனேயே இருக்கின்றான்.” 2:250 மேலும் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் எதிர்த்துப் போரிட அவர்கள் புறப்பட்டபொழுது (இப்படிப்) பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! மேலும், இறை நிராகரிப்பாளர்களான இந்தக் கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி செய்வாயாக!” 2:251 (இறுதியில்) அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறைநிராகரிப்பாளர்களை அவர்கள் முறியடித்து விட்டார்கள். தாவூத், ஜாலூத்தைக் கொன்றார்; மேலும் அல்லாஹ் தாவூதுக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் அருளினான். மேலும் தான் நாடியவற்றையெல்லாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தான். இவ்வாறு மனிதர்களில் ஒரு கூட்டத்தைப் பிறிதொரு கூட்டத்தைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இந்த பூமியே குழப்பத்தால் சீர்குலைந்து போயிருக்கும். எனினும் அல்லாஹ் உலகோர் மீது பேரருள் புரிபவனாகவே இருக்கின்றான். (அவனே இவ்வாறு சீர்கேடுகளை அகற்றுகின்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்கின்றான்). 2:252 இவை அல்லாஹ்வின் திருவசனங்களாகும். இவற்றை மிகச் சரியாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும் (முஹம்மதே!) நிச்சயமாக நீரும் தூதர்களில் ஒருவராவீர்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)