அத்தியாயம்  அல்பகறா  2 : 142-202 / 286
2:142 மக்களில் அறிவீனர்கள், “(இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?) இவர்கள் எந்தக் கிப்லாவை* முன்னோக்கிக் கொண்டிருந்தார்களோ அதிலிருந்து (திடீரென) இவர்களைத் திருப்பியது எது?” என நிச்சயம் கேட்பார்கள். (நபியே! அவர்களிடம்) சொல்வீராக: “கிழக்கு, மேற்கு அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான்.” 2:143 மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’ சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம் நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி நீர் தொழுது வந்தீரோ, அதனை கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவதற்காகத்தான்! இது (கிப்லா மாற்றம்) மிகக் கடினமாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்கவில்லை. அல்லாஹ் உங்களுடைய ஈமானை நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்கி விடமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் அளப்பரிய கருணையும், மிகுந்த பரிவும் உடையவன் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). 2:144 (நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மைத் திருப்பிவிடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமாகவே உங்கள் முகங்களைத் திருப்புவீர்களாக! வேதம் அருளப்பட்டவர்கள் (கிப்லா மாற்றம் பற்றிய) இக்கட்டளை உண்மையானதுதான்; தம் இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதைத் திண்ணமாக அறிவார்கள். ஆனால், (இவ்வாறு உண்மையை அறிந்திருந்தும்) இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை! 2:145 வேதம் அருளப்பட்டவர்களிடம் நீர் எந்த ஒரு சான்றினைக் கொண்டு வந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. மேலும் (தமக்கிடையேயும்) அவர்களில் சிலர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுவோராய் இல்லை. எனவே, உமக்கு மெய்யறிவு வந்த பின்னர் அவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின், திண்ணமாக நீர் அக்கிரமக்காரர்களுள் ஒருவரா(ய்க் கருதப்படு)வீர். 2:146 எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக்கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினும் அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். 2:147 (உறுதியாக) இது உம் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமா(ன கட்டளையா)கும். எனவே, (இது பற்றி) ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்! 2:148 மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் திரும்பக்கூடிய ஒரு திசையிருக்கிறது. எனவே, நீங்கள் நன்மைகள் புரிவதில் முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக்கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான். 2:149 மேலும் நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உம்முடைய முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் நோக்கித் திருப்புவீராக. ஏனென்றால், இது உம்முடைய இறைவனிடமிருந்து வந்த (முற்றிலும்) உண்மை(யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பற்றிக் கவனமற்றவனாக இல்லை. 2:150 மேலும் நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகத் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமாகத் திருப்புங்கள். ஆனால் அவர்களைச் சேர்ந்த அக்கிரமக்காரர்கள் தர்க்கித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுவீர்களாக! (இன்னும் இந்தக் கட்டளையைப் பேணி வாழ்வீர்களாக!) எதற்காகவெனில், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் நீங்கள் நேரிய பாதையை அடையக்கூடும் என்பதற்காகவும்தான்! 2:151 (அது எத்தகைய அருட்கொடை என்றால்) நம் வேத வசனங்களை உங்களுக்கு ஓதி உணர்த்துபவரும் உங்க(ள் வாழ்க்கை நடைமுறைக)ளைத் தூய்மைப்படுத்துபவரும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பவரும், நீங்கள் அறியாதிருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களிடம் அனுப்பி வைத்தபோது நீங்கள் பெற்ற அருட்கொடையைப் போன்றதாகும் இந்தக் கொடை 2:152 எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நானும் உங்களை நினைவுகூருகின்றேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; (என்னுடைய அருட்கொடைகளை மறுத்து) நன்றி கொல்லாதீர்கள்! 2:153 இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான். 2:154 மேலும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, அவர்கள் (உண்மையில்) உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் நிலையை நீங்கள் அறியமாட்டீர்கள். 2:155 மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! 2:156 அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். 2:157 அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! 2:158 நிச்சயமாக ‘ஸஃபா’ ‘மர்வா’(எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகையால், யார் இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா* செய்கிறாரோ அவர் மீது அந்த இரண்டுக்குமிடையே ‘ஸயீ’• செய்வதில் குற்றமில்லை. மேலும் எவரேனும் தாமாக விரும்பி ஏதேனும் நன்மையைச் செய்தால், அல்லாஹ் அதை மதிப்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 2:159 நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவர்க்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள். 2:160 ஆனால் யார் (இத்தவறிலிருந்து) திருந்தி தம் செயல்முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்திருந்தவற்றை) எடுத்துரைக்கிறார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன். 2:161 எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, அதே நிலையில் இறந்து விடுகின்றார்களோ அத்தகையோர் மீது அல்லாஹ் மற்றும் வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபம் நிச்சயமாக உண்டாகும். 2:162 அவர்கள் அந்தச் சாபத்திலேயே என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள். தண்டனை அவர்களுக்கு இலகுவாக்கப்பட மாட்டாது; அவகாசமும் அவர்களுக்கு அளிக்கப்படமாட்டாது! 2:163 உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; 2:164 (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. 2:165 (ஆனால் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்! அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்! 2:166 (தண்டனை வழங்கப்படும்) அந்த நேரத்தில், (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மைப் பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்! மேலும் அவர்களுக்கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்! 2:167 அப்பொழுது அத்தலைவர்களைப் பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், இன்று நம்மைவிட்டு அவர்கள் விலகிக் கொண்டது போல நாமும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” இவ்வாறு வேதனையாலும், துக்கத்தாலும் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும் வகையில் அவர்கள் (இவ்வுலகில்) செய்த தீய செயல்களை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்துக் கொடுப்பான். மேலும், நெருப்பிலிருந்து (எவ்வகையிலும்) அவர்கள் வெளியேறிவிட முடியாது. 2:168 மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருள்களைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்! 2:169 அவன் பாவத்தையும், மானக்கேடான செயல்களையும் செய்யுமாறுதான் உங்களை ஏவுகிறான்; இன்னும் நீங்கள் அறியாத விஷயங்களையெல்லாம் அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லுமாறு உங்களை அவன் ஏவுகின்றான். 2:170 “அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “இல்லை! எங்கள் தந்தையார், பாட்டனார் எந்த வழியைப் பின்பற்றியதாகக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று மறுமொழி கூறுகின்றார்கள். அப்படியானால் அவர்களின் தந்தையார், பாட்டனார் எதையும் சிந்தித்து உணராதவர்களாயும் நேர்வழி பெறாதவர்களாயும் இருந்தாலுமா இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்? 2:171 இறைநெறியைப் பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர அவை வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள் செவிடர்களாய், ஊமையராய், குருடர்களாய் இருக்கின்றனர்; எனவே எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள். 2:172 இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். 2:173 செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 2:174 அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இறக்கியருளிய சட்டங்களை எவர்கள் மறைக்கின்றார்களோ மேலும் (இம்மையின்) அற்ப இலாபத்திற்காக அவற்றை விற்கின்றார்களோ அவர்கள், உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் நிரப்பிக் கொள்வதில்லை. இன்னும் இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்! மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு. 2:175 இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்! நரக வேதனையைச் சகித்துக் கொள்வதற்கு(த் தயாராய் உள்ள) இவர்களின் துணிவு எத்துணை வியப்புக்குரியது! 2:176 இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் முழுக்க முழுக்க சத்தியத்துடனேயே வேதத்தை இறக்கியிருந்தும், வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தம் பிணக்குகளில் மூழ்கி (சத்தியத்தை விட்டு) வெகு தூரம் சென்று விட்டதுதான்! 2:177 நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள். 2:178 இறைநம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்தச் சுதந்திரமான மனிதனிடமும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும், கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமுமே பழிவாங்கப்பட வேண்டும். கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்டவரின் உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால், பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை உண்டு. 2:179 நல்லறிவுடையோரே! (கொலைக்குப்) பழிவாங்குதல் எனும் இவ்விதிமுறையில் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது. (இதனை உணர்ந்தால்) இறைச்சட்டங்களை மீறுவதிலிருந்து நீங்கள் விலகியிருக்கக் கூடும். 2:180 உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது: உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது, அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாரானால் தம் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் முறைப்படி அவர் வஸிய்யத் (மரண சாஸனம்) செய்தல் வேண்டும். இறையச்சமுடையோர் மீது இது கடமையாகும். யாரேனும் அ(ந்த வஸிய்யத்)தைக் கேட்டு, 2:181 பின்னர் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவம் அவ்வாறு மாற்றியவர்களைத்தான் சாரும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், அறிவோனாகவும் இருக்கின்றான். 2:182 ஆயினும், வஸிய்யத் செய்தவர் தெரிந்தோ தெரியாமலோ அநீதி இழைத்துவிட்டார் என்று எவரேனும் அஞ்சி, சம்பந்தப்பட்டவர் மத்தியில் இந்த விவகாரத்தை ஒழுங்குபடுத்திவிட்டால் அது அவர் மீது குற்ற மாகாது. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணைபுரிபவனுமாக இருக்கின்றான். 2:183 இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும். 2:184 (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும். 2:185 ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!) 2:186 மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.” 2:187 நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டான். எனினும், உங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றான்; மேலும் உங்கள் குற்றங்களைப் பொறுத்தருளினான். இனி (இரவில்) அவர்களுடன் நீங்கள் கூடுங்கள். அல்லாஹ் அனுமதித்துள்ள இன்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும், கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் (இவற்றையெல்லாம் தவிர்த்து) இரவு (தொடங்கும்) வரை நோன்பை நிறைவு செய்யுங்கள். ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப்* இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள். இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள். மக்கள் (தவறான வழிகளிலிருந்து) தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னுடைய கட்டளைகளை(யும் விதிகளையும்) அல்லாஹ் இவ்வாறு தெளிவாக்குகின்றான். 2:188 மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள். 2:189 (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” 2:190 மேலும், உங்களோடு போர்புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. 2:191 (போரின் போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்! மேலும் எங்கிருந்து உங்களை அவர்கள் வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். (கொலை கொடியதுதான் என்றாலும்) ‘ஃபித்னா’(அராஜகத்தைத்) தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்காதவரை நீங்களும் அதன் அருகே அவர்களுடன் போர் புரிய வேண்டாம். ஆயினும் (அங்கே) அவர்கள் உங்களோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி) அவர்களோடு போர் புரியுங்கள். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும். 2:192 ஆயினும் அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). 2:193 ‘ஃபித்னா’ இல்லாதொழிந்து, தீன் (வாழ்க்கை நெறி) அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் அவர்களோடு தொடர்ந்து போர்புரியுங்கள். ஆனால், அவர்கள் (இத்தகைய ஃபித்னாவிலிருந்து) விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்களைத் தவிர வேறு எவரையும் துன்புறுத்துவது அனுமதிக்கப்பட்டதல்ல. 2:194 போர் தடை செய்யப்பட்ட சங்கைக்குரிய மாதத்திற்கு சங்கைக்குரிய மாதமே ஈடாகும். மேலும் சங்கைக்குரிய அனைத்திற்கும் (அவற்றின் கண்ணியம் மீறப்பட்டால்) சமமான அளவில் ஈடு செய்யப்படும். எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால், அவர் எந்த அளவிற்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவிற்கே நீங்களும் அவருக்குப் பதிலடி கொடுங்கள். ஆயினும் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். வரம்புகளை முறிப்பதிலிருந்து விலகி இருப்பவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். 2:195 அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான். 2:196 அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும் (நிறைவேற்றிட நீங்கள் நாடினால் அவற்றை) நிறைவேற்றுங்கள். ஆனால் (வழியில் எங்காவது) நீங்கள் முற்றுகையிடப்பட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலி (குர்பானி) பிராணிகளில் உங்களுக்குச் சாத்தியமானதை (அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பியுங்கள்) பலிப் பிராணி தனக்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைமுடியை மழிக்காதீர்கள்! ஆனால் உங்களில் யாரேனும் நோயாளியாக அல்லது தன் தலையில் ஏதேனும் பிணி உள்ளவராக இருந்தால், (அதன் காரணமாக தலைமுடியை மழிக்கும் கட்டாயம் ஏற்பட்டிருந்தால்) அதற்குப் பரிகாரமாக அவர் நோன்புகள் நோற்கவோ, தர்மம் செய்யவோ, குர்பானி கொடுக்கவோ வேண்டும். மேலும், உங்களுக்கு அமைதி கிட்டிவிட்டால், (இன்னும் ஹஜ் உடைய காலம் வருமுன், நீங்கள் மக்காவை அடைந்துவிட்டால், அவ்வாறு அடைந்தவர்களில்) எவரேனும் ஹஜ் காலம் வருமுன் உம்ரா செய்ய நாடினால் அவர், பலிப்பிராணிகளில் தனக்கு சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும் (வீடு) திரும்பி விட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இப்படி முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பிருத்தல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவர் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் குடியிருக்கவில்லையோ அவர்களுக்கேயாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனது கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். 2:197 ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மேலும், நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான். மேலும், நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித் துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! 2:198 (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. இன்னும் அரஃபாத்திலிருந்து நீங்கள் திரும்பி வரும்போது, மஷ்அருல் ஹராமில் (முஸ்தலிஃபாவில்) தங்கி அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும் அவன் எவ்வாறு (தன்னை நினைவுகூர வேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னரோ நீங்கள் வழிதவறியவர்களாய் இருந்தீர்கள். 2:199 பின்னர் மற்ற மனிதர்கள் எல்லாரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 2:200 பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவுகூர்ந்தது போல ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மக்களில் (அல்லாஹ்வைப் பல வழிகளில் நினைவுகூருவோர் உளர்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும் இல்லை. 2:201 இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனை யிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர். 2:202 இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு. மேலும் கணக்கு வாங்குவதில் அல்லாஹ் மிக விரைவானவன்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)