அத்தியாயம்  அல் கஹ்ஃப்  18 : 75-110 / 110
18:75 அதற்கு அவர் சொன்னார்: “என்னுடன் பொறுமையாக இருக்க திண்ணமாக உம்மால் முடியாது என்று நாம் உம்மிடம் கூறவில்லையா?” 18:76 அதற்கு மூஸா கூறினார்: “இதற்குப் பின்னர் எதையேனும் உங்களிடம் நான் கேட்டால், என்னை உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்து விட்டது.” 18:77 மேலும் அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில், ஓர் ஊரை அடைந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அங்கே அவர்கள் ஒரு சுவரைக் கண்டார்கள். அது கீழே விழ இருந்தது. அவர் அந்தச் சுவரைச் சரிப்படுத்தி நிறுத்தினார். மூஸா கூறினார்: “நீர் விரும்பியிருந்தால், இப்பணிக்காகக் கூலி வாங்கியிருக்கலாமே!” 18:78 அதற்கு அவர் கூறினார்: “நானும் நீரும் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது! உம்மால் பொறுமையாய் இருக்க முடியாத விஷயங்களின் உண்மை நிலையை இனி நான் உமக்கு அறிவித்துவிடுகின்றேன். 18:79 அந்தக் கப்பலைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது கடலில் கூலி வேலை செய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. நான் அதைப் பழுதாக்கிட நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது! அவன் ஒவ்வொரு கப்பலையும் நிர்ப்பந்தமாகப் பறித்துக் கொண்டிருந்தான். 18:80 மேலும், அந்தச் சிறுவனைப் பற்றிய விஷயம் என்னவெனில், அவனுடைய தாய்தந்தையர் இறைநம்பிக்கையாளர்களாய்த் திகழ்ந்தனர். அவன் தன்னுடைய வரம்புமீறிய போக்கினாலும், நிராகரிப்பினாலும் அவர்களுக்குச் சிரமம் கொடுப்பானோ என்று நாம் அஞ்சினோம். 18:81 ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறுவனுக்குப் பதிலாக, அவனைவிடச் சிறந்த ஒழுக்கமுள்ள, குடும்ப உறவுகளைப் பெரிதும் பேணக்கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம். 18:82 மேலும், அந்தச் சுவரைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது அவ்வூரிலிருந்த இரு அநாதைச் சிறுவர்களுக்குரியது. அதன் அடியில் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. மேலும், அவர்களின் தந்தை நல்ல மனிதராக இருந்தார். ஆகையால், அவர்கள் இருவரும் பருவ வயதை அடையவேண்டும் என்றும், அவர்களுக்குரிய புதையலை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உம் இறைவன் கருதினான். இவையெல்லாம் உம் இறைவனுடைய கருணையினால் நிகழ்ந்தவையாகும். இவற்றில் எதையுமே நான் என் விருப்பப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமை கொள்ள முடியாதிருந்த விஷயங்களின் உண்மைநிலை இதுதான்!” 18:83 மேலும் (நபியே,) இவர்கள் உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் இவர்களிடம் கூறும்: “நான் அவரைப் பற்றிய சில விவரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.” 18:84 திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். 18:85 அவர் (ஒரு முக்கியமான பணிக்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார். 18:86 சூரியன் மறையும் எல்லையை அவர் அடைந்தபோது கறுப்பு நீரில் அது மறைவதைக் கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறினோம்: “துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும் உம்மால் முடியும்.” 18:87 அதற்கு அவர் கூறினார்: “யாரேனும் கொடுமை புரிந்தால் அவரைத் தண்டிப்போம். பிறகு அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான்.” 18:88 ஆனால், அவர்களில் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகின்றாரோ அவருக்கு நற்கூலி இருக்கிறது. மேலும், நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்குவோம். 18:89 மீண்டும் அவர், (மற்றொரு முக்கியமான பணிக்காகப்) புறப்பட்டார். 18:90 சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்துவிட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார் மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. 18:91 இதுதான் அச்சமுதாயத்தாரின் நிலை! துல்கர்னைனிடம் இருந்தவை அனைத்தையும் நாம் நன்கு அறிந்திருந்தோம். 18:92 பிறகு அவர், (வேறொரு முக்கிய பணியை முன்னிட்டு) புறப்பட்டார். 18:93 அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். 18:94 அம்மக்கள் கூறினார்கள்: “துல்கர்னைனே! யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் பரவலாக அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீர் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?” 18:95 அதற்கு அவர் பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை ஏராளமானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்; 18:96 இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இறுதியில் இரு மலைகளுக்கிடையிலான பகுதியை நிரப்பிவிட்டபோது அவர் (மக்களை நோக்கி) கூறினார்: “இப்பொழுது நெருப்பை மூட்டுங்கள்!” கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்தபோது அவர் கூறினார்: “கொண்டு வாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன்.” 18:97 யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் ஏறி வராத அளவுக்கு உயரமாகவும், துளையிட முடியாத அளவுக்கு வலுவாகவும் அந்தச் சுவர் அமைந்திருந்தது. 18:98 துல்கர்னைன் கூறினார்: “இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்துவிட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும்.” 18:99 அந்நாளில் நாம் மக்களை (கடல் அலைகளைப்போன்று) சிலருடன் சிலர் மோதிக்கொள்ளும் நிலையில் விட்டுவிடுவோம். (சூர்)எக்காளம் ஊதப்படும். பிறகு மனிதர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டுவோம். 18:100 அந்நாளில் இறைமறுப்பாளர்களின் முன்னே நரகத்தைக் கொண்டு வருவோம். 18:101 அந்நிராகரிப்பாளர்களோ, அவர்கள் எனது நல்லுரைகள் விஷயத்தில் குருடர்களாயும், அதனை செவியுறுவதற்கு முன்வராதவர்களாயும் இருந்தார்கள். 18:102. இறைவனை நிராகரிக்கும் இம்மக்கள் நினைத்திருக்கின்றார்களா, என்னை விடுத்து என்னுடைய அடிமைகளை (தங்களுடைய) காரியம் நிறைவேற்றுபவராய் ஆக்கிக் கொள்ளலாம் என்று? இத்தகைய நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். 18:103 (நபியே,) இவர்களிடம் நீர் கூறும்: தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 18:104 அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால், அவர்களோ தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். 18:105 அவர்கள்தாம் தங்களுடைய இறைவனின் சான்றுகளை ஏற்க மறுத்துவிட்டவராவர். மேலும் அவனுடைய சந்திப்பினைக் குறித்து நம்பிக்கைகொள்ளாதவராவர். இதனால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மேலும் மறுமையில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் நாம் அளிக்கமாட்டோம். 18:106 அவர்களுக்குரிய கூலி நரகமேயாகும் அவர்கள் நிராகரித்ததன் காரணத்தாலும், என்னுடைய வசனங்களையும் என்னுடைய தூதர்களையும் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணத்தாலும்! 18:107 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை உபசரிப்பதற்காக ‘ஃபிர்தௌஸ்’ எனும் சுவனங்கள் இருக்கின்றன. 18:108 அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றை விட்டு வெளியேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும் விரும்பமாட்டார்கள். 18:109 (நபியே,) கூறும்: “என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாகிவிட்டாலும், கடல்நீர் தீர்ந்து போய்விடுமே தவிர என் இறைவனின் வாக்குகள் தீர்ந்துபோய் விடாது. அதேபோல இன்னொரு மடங்கு மையை நாம் கொண்டு வந்தாலும் அதுவும் போதாது.” 18:110 (நபியே,) கூறும்: “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்! உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி வருகிறது. எனவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும்; அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்!”
அத்தியாயம்  மர்யம்  19 : 1-98 / 98
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
19:1 காஃப், ஹா, யா, ஐன், ஸாத். 19:2 உம் இறைவன் தன் அடியார் ஜகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது. 19:3 அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது! 19:4 அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. 19:5 எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக! 19:6 அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!” 19:7 (பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.” 19:8 அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.” 19:9 பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!” 19:10 அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான். 19:11 பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார். 19:12 “யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம். 19:13 மேலும், நம்மிடமிருந்து இளகிய மனத்தையும் தூய்மையையும் வழங்கியிருந்தோம். 19:14 அவர் மிகவும் பேணுதல் உள்ளவராயும் தம் தாய் தந்தையரின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவராகவும் திகழ்ந்தார். அவர் முரடராகவோ, கீழ்ப்படியாதவராகவோ இருக்கவில்லை. 19:15 அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்! 19:16 மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். 19:17 உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!” 19:18 அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” 19:19 மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” 19:20 அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; 19:21 மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!” 19:22 பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். 19:23 பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார். 19:24 அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான். 19:25 மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்; 19:26 ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.” 19:27 பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே...! 19:28 ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!” 19:29 அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?” 19:30 உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்; 19:31 பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை! 19:32 மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை. 19:33 என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!” 19:34 இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும். 19:35 எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது. 19:36 மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!” 19:37 ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர். எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்! 19:38 அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்! 19:39 (நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது. 19:40 இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். 19:41 மேலும், இவ்வேதத்தில் உள்ள இப்ராஹீமின் சரிதையை விவரிப்பீராக! திண்ணமாக, அவர் வாய்மை உள்ளவராகவும், நபியாகவும் இருந்தார். 19:42 (சற்று அவர்களுக்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை நினைவூட்டும்:) அப்போது அவர் தம் தந்தையிடம் கூறினார்: “என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்? 19:43 என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீர்களாக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன். 19:44 என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான். 19:45 என் தந்தையே! கருணைமிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ; மேலும் ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!” 19:46 அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!” 19:47 அதற்கு இப்ராஹீம் கூறினார்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான். 19:48 மேலும், உங்களைவிட்டும், அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன்; நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனைப் பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.” 19:49 பிறகு, அம்மக்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கி வருகின்ற பிற தெய்வங்களையும் விட்டு அவர் ஒதுங்கிக் கொண்டபோது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் மற்றும் யஃகூப் போன்ற மக்களையும் வழங்கினோம். மேலும், அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். 19:50 மேலும், அவர்களுக்கு நம்முடைய அருட்கொடையிலிருந்து வழங்கினோம். உயர்ந்த, உண்மையான புகழையும் அவர்களுக்கு அளித்தோம். 19:51 மேலும், மூஸாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக. நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார். 19:52 மேலும், நாம் ‘தூர்’ மலையின் வலப்பக்கத்தில் இருந்து அவரை அழைத்தோம்; தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம். 19:53 மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம். 19:54 (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். 19:55 மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்; மேலும், தம் இறைவனிடம் விரும்பத்தக்க மனிதராகவும் இருந்தார். 19:56 (நபியே!) இத்ரீஸைப் பற்றி இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் ஒரு நேர்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். 19:57 மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம். 19:58 இவர்களோ, அல்லாஹ் தன் அருட்பேறுகளை வழங்கியுள்ள நபிமார்கள் ஆவர். இவர்கள் ஆதத்தின் வழித்தோன்றல்களிலிருந்தும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்களிலிருந்தும் இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்தும் தோன்றியவர்களாவர். மேலும், நாம் நேர்வழி காட்டி, தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களைச் சார்ந்தவர்களுமாவர். இவர்களின் நிலைமை எவ்வாறிருந்த தெனில் கருணைமிக்க இறைவனின் வசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அழுதுகொண்டே ஸுஜூதில்* விழுந்துவிடுவார்கள். 19:59 அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள். 19:60 ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. 19:61 கருணைமிக்க இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில், அளித்துள்ள வாக்குறுதியான நிலையான சுவனபதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும். 19:62 அங்கு அவர்கள் எவ்வித வீணான விஷயத்தையும் செவியுறமாட்டார்கள். எதைச் செவியுற்றாலும் சரியானவற்றையே செவியுறுவார்கள். மேலும், அங்கு அவர்களுக்குரிய உணவு காலையிலும், மாலையிலும் (தொடர்ந்து) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். 19:63 இத்தகைய சுவனமாகும் அது! நம் அடியார்களில் எவர்கள் இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களையே இதற்கு வாரிசுகளாக்குவோம். 19:64 (நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன். 19:65 வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்குமிடையே உள்ள அனைத்திற்கும் அவன் அதிபதி ஆவான். எனவே, அவனுக்கு நீர் அடிபணிவீராக! மேலும், அவனுக்கு அடிபணிவதிலேயே நிலைத்திருப்பீராக! அவனுக்கு சமமானவர் எவரையேனும் நீர் அறிவீரா?” 19:66 மனிதன், கேட்கின்றான்: “நான் இறந்துவிட்டால், உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவேனா?” 19:67 முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா? 19:68 உம் இறைவன் மீது ஆணையாக! அவர்கள் அனைவரையும் (அவர்களோடு) ஷைத்தான்களையும் அவசியம் நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, நரகத்தைச் சுற்றிலும் அவர்களைக் கொண்டுவந்து முழங்காலிட்டு நிறுத்துவோம். 19:69 பிறகு, அவர்களில் எவன் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்துவிடுவோம். 19:70 பின்னர், அனைவரையும்விட நரகில் புகுத்தப்படுவதற்கு யார் அதிகம் தகுதியுடையவர்களோ அவர்களை நாம் நன்கு அறிவோம். 19:71 உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாகும்; இதனை நிறைவேற்றுவது உம்முடைய இறைவனின் பொறுப்பாகும். 19:72 (உலக வாழ்வில்) இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். கொடுமையாளர்களை அதிலேயே வீழ்ந்து கிடக்குமாறு விட்டுவிடுவோம். 19:73 இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால், நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம், “நம் இரு பிரிவினரில் யார் நல்ல நிலையில் உள்ளவர்கள், யாருடைய அவைகள் மிகக் கம்பீரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்” என்று கூறுவார்கள். 19:74 உண்மையில், இவர்களுக்கு முன் இவர்களைவிட எவ்வளவோ அதிகச் சாதனங்களை வைத்திருந்தவர்களும் வெளிப்பகட்டில் இவர்களைவிட மிகைத்திருந்தவர்களுமான எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். 19:75 இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டிலே வீழ்ந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கருணைமிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கின்றான். எதுவரையெனில், தங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததை அது அல்லாஹ் அளிக்கும் வேதனையாக இருந்தாலும் சரி, மறுமையாக இருந்தாலும் சரி, அதனை அவர்கள் காண்கிறார்கள்; அப்போது யாருடைய நிலைமை மோசமானது; யாருடைய கூட்டம் பலம் குன்றியது என்பது அவசியம் அவர்களுக்குத் தெரிந்துவிடும். 19:76 (இதற்கு மாறாக) எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும். 19:77 எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கின்றானோ மேலும், ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்’ என்றும் கூறுகின்றானோ அவனை நீர் பார்த்தீரா? 19:78 அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கின்றானா? 19:79 அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம். 19:80 எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி அவன் பெருமையடித்துக் கொள்கின்றானோ அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான். 19:81 அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுளரை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் இவர்களுக்கு உதவியாளராய் ஆக வேண்டும் என்பதற்காக! 19:82 அவ்வாறு (எந்த உதவியாளரும்) இல்லை! அக்கடவுளர் அனைவரும் இவர்களின் வழிபாட்டை மறுத்துவிடுவர். ஏன், இவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுவர். 19:83 நீர் கவனிக்கவில்லையா? சத்தியத்தை நிராகரிப்போர் மீது ஷைத்தான்களை நாம் ஏவி விட்டிருக்கின்றோம். அவர்கள் (சத்தியத்தை எதிர்க்குமாறு) இவர்களை அதிகம் அதிகம் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள்! 19:84 எனவே, இவர்கள் மீது வேதனை இறங்க வேண்டுமென நீர் அவசரப்படாதீர். நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கின்றோம். 19:85 அந்த நாள் வரத்தான் போகின்றது. அன்று, கருணை மிக்க இறைவனின் திருமுன் இறையச்சமுள்ள மக்களை, விருந்தினரைப் போன்று ஒன்று சேர்ப்போம். 19:86 குற்றவாளிகளையோ தாகித்த மிருகங்களைப் போன்று நரகத்தின் பக்கம் விரட்டிச் செல்வோம். 19:87 அந்நாளில் எவராலும் எவ்விதப் பரிந்துரையும் சமர்ப்பிக்க இயலாது கருணை மிக்க இறைவனின் ஒப்புதல் பெற்றவர்களைத் தவிர! 19:88 “கருணைமிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். 19:89 எத்தகைய அபத்தமான விஷயத்தை நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்! 19:90 அதனால் வானங்கள் உடைந்துவிடவும், பூமி பிளந்துவிடவும், மலைகள் தகர்ந்து நொறுங்கிவிடவும் போகின்றன. 19:91 (ஏனெனில்) இப்படி கருணைமிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்று மக்கள் கூறுவது கொடூரமான பேச்சாகும். 19:92 ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல! 19:93 வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் அடிமைகளாய் கருணை மிக்க இறைவனின் திருமுன் வரத்தான் போகின்றனர். 19:94 அவன் அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான்; மேலும், அவர்களைக் கணக்கிட்டும் வைத்துள்ளான். 19:95 மறுமை நாளில் இவர்கள் எல்லோரும் தனித்தனியாக அவனது திருமுன் வருவார்கள். 19:96 எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான். 19:97 எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது, இறையச்சம் கொண்டவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும் மேலும், பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை இதன் மூலம் எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும். 19:98 இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம்; (இன்று) அவர்களில் எவருடைய அடையாளத்தையேனும், நீர் எங்கேயாவது காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய எந்த அரவத்தையாவது எங்கேயாவது கேட்கின்றீரா?
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)