அத்தியாயம்  பனூ இஸ்ராயீல்  17 : 99-111 / 111
17:99 வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்ற அல்லாஹ் இவர்கள் போன்றவர்களைப் படைப்பதற்குத் திண்ணமாக வல்லமை பெற்றவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா, என்ன? அவனே அவர்களை ஒன்று சேர்ப்பதற்கென குறிப்பிட்ட ஒரு காலத்தை நிர்ணயித்துள்ளான்; அது வருவது திண்ணம்! ஆயினும், கொடுமை புரிபவர்கள் அதனை மறுப்பதிலேயே பிடிவாதமாக இருக்கின்றார்கள். 17:100 (நபியே! இவர்களிடம்) கூறும்: ஒருவேளை என் அதிபதியின் அருட்களஞ்சியங்கள் உங்கள் கைவசத்தில் இருந்திருந்தால் செலவாகிவிடுமோ எனும் அச்சத்தில் நிச்சயம் அவற்றை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள். மனிதன் உண்மையிலேயே குறுகிய மனம் படைத்தவனாக இருக்கின்றான். 17:101 தெளிவாகப் புலப்படக்கூடிய ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு நாம் வழங்கியிருந்தோம். நீங்கள் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் மூஸா வந்தபோது ஃபிர் அவ்ன் அவரிடம், “மூஸாவே! நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே கருதுகின்றேன்” என்றல்லவா கூறினான்! 17:102 அதற்கு மூஸா கூறினார்: “அகத் தெளிவை ஏற்படுத்தக்கூடிய சான்றுகளை வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இறக்கி வைக்கவில்லை என்பதை நீ நன்கறிவாய். ஃபிர்அவ்னே! திண்ணமாக, நான் உன்னை நாசத்திற்குள்ளாகக் கூடிய மனிதனாகவே கருதுகின்றேன்.” 17:103 இறுதியில் மூஸாவையும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் அந்தப் பூமியிலிருந்து அடியோடு வெளியேற்றிட வேண்டும் என்று ஃபிர்அவ்ன் எண்ணியிருந்தான். ஆயினும், நாம் அவனையும் அவனுடைய ஆட்களையும் கூண்டோடு மூழ்கடித்தோம். 17:104 மேலும், அவனுக்குப் பின்னர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் கூறினோம்: “நீங்கள் இந்தப் பூமியில் குடியிருங்கள். மறுமை பற்றி வாக்களிக்கப்பட்ட காலம் வரும்போது நாம் உங்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம்.” 17:105 இந்தக் குர்ஆனை நாம் சத்தியத்துடனேயே இறக்கியருளினோம்; அது சத்தியத்துடன்தான் இறங்கியுள்ளது. மேலும் (நபியே!) நாம் உம்மை, (ஏற்றுக் கொண்டவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பதற்கும் (ஏற்றுக் கொள்ளாதோருக்கு) எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எதற்காகவும் அனுப்ப வில்லை. 17:106 நாம் இந்தக் குர்ஆனை எதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளினோமெனில், நீர் இதனை மக்களுக்கு நிறுத்தி நிறுத்தி ஓதிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும், இதனை நாம் படிப்படியாக (சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு) இறக்கி வைத்தோம். 17:107 (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்; “இதனை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; இதற்கு முன்பு ஞானம் வழங்கப்பட்ட மக்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் முகங்குப்புற ஸஜ்தாவில் வீழ்கிறார்கள். 17:108 மேலும், “தூய்மையானவன் எங்கள் இறைவன்; அவனுடைய வாக்குறுதி நிச்சயம் நிறை வேற வேண்டியிருந்தது” என்று கூறுகின்றார்கள்; 17:109 அழுத வண்ணம் முகங்குப்புற விழுகின்றார்கள்! இதனைச் செவிமடுப்பது அவர்களின் இறையச்சத்தை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றது. 17:110 (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி; ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி; நீங்கள் எந்தப் பெயரைக் கூறியும் அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம்’. மேலும், உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும். 17:111 கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும் மகனாக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல! மேலும், எடுத்துரைப்பீராக, அவனுடைய பரிபூரணமான பெருமையை!
அத்தியாயம்  அல் கஹ்ஃப்  18 : 1-74 / 110
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
18:1 புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை. 18:2 இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது; 18:3 அதை என்றென்றும் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நற்செய்தி அளிப்பதற்காகவும் 18:4 மேலும், “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்!” என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்தான்! 18:5 அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள். 18:6 (நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! 18:7 திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! 18:8 இறுதியில் திண்ணமாக, நாம் இவையனைத்தையும் வெற்றுத்திடலாய் ஆக்கிட இருக்கிறோம். 18:9 குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? 18:10 இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே! உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!” 18:11 அப்போது நாம் அவர்களை அதே குகையில் பல்லாண்டுகள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினோம். 18:12 பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச்சரியாக கணக்கிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக! 18:13 அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். 18:14 அவர்கள் எழுந்து, “யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்” என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம். 18:15 (பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்:) “இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை? அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? 18:16 நீங்கள் இவர்களை விட்டும், அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக்குள் சென்று அபயம் தேடுங்கள்! உங்கள் இறைவன் தன் கருணையை உங்கள் மீது இன்னும் விரிவாக்குவான். மேலும், உங்கள் பணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் உங்களுக்கு உருவாக்கித் தருவான்.” 18:17 (நீர் குகையில் அவர்களைப் பார்த்தால்) சூரியன் உதயமாகும்போது அவர்களின் குகையைவிட்டு விலகி வலப்பக்கமாக உயர்வதையும் அது மறையும்போது அவர்களை விட்டுக் கடந்து இடப்பக்கமாகத் தாழ்வதையும் காண்பீர்; ஆனால், அவர்களோ குகையினுள் ஒரு விசாலமான இடத்தில் இருப்பார்கள். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாரை அல்லாஹ் நெறிபிறழச் செய்கின்றானோ அவருக்கு உதவி புரிந்து வழிகாட்டுபவரை ஒருபோதும் நீர் காணமாட்டீர். 18:18 நீர் (அவர்களைப் பார்த்தால்) அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்று கருதுவீர். உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களை வலப்புறமும் இடப்புறமுமாகப் புரட்டிக் கொண்டேயிருந்தோம். மேலும், அவர்களின் நாய் குகைவாசலில் தன்னுடைய முன்னங்கால்களை விரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. நீர் அவர்களைச் சற்று எட்டிப் பார்த்தால் உடனே விரண்டோடியிருப்பீர்; மேலும், அவர்களைப் பார்த்ததினால் திகிலடைந்து போயிருப்பீர்! 18:19 மேலும், இவ்வாறே வியக்கத்தக்க முறையில் அவர்களை நாம் விழித்தெழச் செய்தோம், அவர்கள் தங்களுக்கிடையில் விசாரித்துக் கொள்வதற்காக! அவர்களில் ஒருவர் கேட்டார், “நீங்கள் எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர்கள்?” என்று! அதற்கு மற்றவர்கள் கூறினார்கள்: “ஒருநாள் முழுவதும் அல்லது அதைவிடச் சற்றுக் குறைவாக இருந்திருப்போம்.” பிறகு, அவர்கள் கூறினார்கள்: “நாம் எவ்வளவு காலம் இவ்வாறு இருந்தோம் என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். இனி நம்மில் யாரேனும் ஒருவர் இந்த வெள்ளி நாணயத்துடன் நகருக்குள் செல்லட்டும். மிகவும் நல்ல உணவு எங்கு கிடைக்கும் என்று அவர் பார்க்கட்டும். அங்கிருந்து சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வரட்டும். அவர் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளட்டும். நாம் இங்கு இருப்பதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். 18:20 அவர்கள் நம்மைப் பிடித்துவிட்டால், திண்ணமாய் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; அல்லது அவர்களுடைய மார்க்கத்திற்கு நம்மைப் பலவந்தமாகக் கொண்டு சென்று விடுவார்கள். அப்படி நடந்துவிட்டால் ஒருபோதும் நம்மால் வெற்றி பெற முடியாது” 18:21 இவ்வாறு அவர்களின் நிலைமையை ஊர் மக்களுக்கு நாம் அறிவித்தோம். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், மறுமைக்குரிய வேளை நிச்சயமாக வந்தே தீரும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக! (ஆனால், சற்று கவனியுங்கள்: சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுவாக இருக்க) அந்நேரத்தில் (குகைவாசிகளான) இவர்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மக்கள் தங்களிடையே தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர், “இவர்கள் மீது ஒரு சுவரை எழுப்புங்கள். இவர்களின் இறைவன்தான் இவர்களைக் குறித்து நன்கறிவான்” என்று கூறினார்கள். ஆயினும், இவர்கள் விஷயத்தில் அதிகாரம் பெற்றிருந்தவர்கள் கூறினார்கள்: “நாங்கள் இவர்கள் மீது ஒரு வணக்கத்தலத்தை அமைப்போம்.” 18:22 “அவர்கள் மூன்று பேர்; நான்காவது அவர்களின் நாய்” என மக்களில் சிலர் கூறுவர். வேறு சிலர், “அவர்கள் ஐந்து பேர், ஆறாவது அவர்களின் நாய்” என்று கூறுவர். இவர்கள் அனைவரும் குருட்டுத்தனமாக உளறுகிறார்கள். இன்னும் சிலர், “அவர்கள் ஏழுபேர்; எட்டாவது அவர்களின் நாய்” எனக் கூறுவர். நீர் கூறுவீராக: “அவர்கள் எத்தனை பேர் என்பதை என்னுடைய இறைவனே நன்கறிவான்.” அவர்களின் சரியான எண்ணிக்கையை வெகுசிலரே அறிவர். எனவே, அவர்களின் எண்ணிக்கை விஷயத்தில் மேலோட்டமான முறையிலே அன்றி (மக்களிடம்) அதிகமாக தர்க்கம் செய்யாதீர். அவர்களைப் பற்றி யாரிடத்திலும் எதுவும் கேட்காதீர். 18:23 மேலும், (பாருங்கள்) எந்தச் செயலைக் குறித்தும், “நாளை நான் அதனைச் செய்துவிடுவேன்” என்று ஒருபோதும் கூறாதீர்; 18:24 (உம்மால் எதுவும் செய்திட முடியாது) அல்லாஹ் நாடினால் அன்றி! ஆனால், மறந்து அவ்வாறு கூறிவிடுவீராயின், உடனே தம் இறைவனை நினைவுகூர்ந்து ‘இவ்விஷயத்தில் இதைவிட நேர்மைக்கு நெருக்கமானவற்றின் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டக் கூடும் என நான் நினைக்கிறேன்’ என்று கூறும்; 18:25 அவர்கள் தங்களுடைய குகையில் முந்நூறு ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். சிலர் (காலத்தைக் கணிப்பதில்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கினார்கள். 18:26 நீர் கூறுவீராக: “அவர்கள் தங்கியிருந்த காலத்தை அல்லாஹ்தான் நன்கறிவான்.” வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்கள் யாவும் அவனுக்கே தெரியும்! அவன் அனைத்தையும் எத்துணை நன்றாய்ப் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்! (பூமியிலும், வானத்திலும் உள்ள) படைப்புகளுக்கு அவனைத் தவிர வேறு பாதுகாவலர் யாரும் இல்லை! அவன் தனது ஆட்சியதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை! 18:27 (நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல் வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. 18:28 எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனத்தைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களைவிட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ எவன் தன் செயல்முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்! 18:29 தெளிவாகக் கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகிவிட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடு கெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் தீயதாகும். 18:30 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. 18:31 அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்கக் காப்புகள் அணிவிக்கப்படும். மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சை நிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும். 18:32 (நபியே!) அவர்களிடம் ஓர் உதாரணத்தை எடுத் துரைப்பீராக இரண்டு மனிதர்கள்; அவர்களில் ஒருவருக்கு நாம் இரு திராட்சைத் தோட்டங்களை வழங்கினோம். அவற்றைச் சுற்றிலும் பேரீச்சை மரங்களை அமைத்தோம். அத்தோட்டங்களுக்கு இடையே பயிர் நிலத்தையும் உருவாக்கியிருந்தோம். 18:33 அவ்விரு தோட்டங்களும் நல்ல விளைச்சலைக் கொடுத்தன. அதில் அவை சிறிதளவும் குறை வைத்திடவில்லை! அத்தோட்டங்களின் நடுவே ஓர் ஆறு ஓடச்செய்தோம். 18:34 அவனுக்கு நல்ல பலன் கிடைத்தது. (இவற்றையெல்லாம் பெற்றிருந்த) அவன் ஒருநாள் தன் நண்பனிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது கூறினான்: “நான் உன்னைவிட அதிக செல்வமுடையவன்; உன்னைவிட அதிக ஆள் பலமும் கொண்டவன்.” 18:35 பிறகு அவன் தனது தோட்டத்தினுள் நுழைந்தான்; அப்பொழுது தன்னுடைய ஆன்மாவுக்கே கொடுமை இழைப்பவனாய்க் கூறலானான்: “இந்தச் செல்வம் என்றைக்காவது அழிந்துவிடும் என்று நான் கருதவில்லை! 18:36 மறுமை எப்பொழுதேனும் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால்கூட திண்ணமாக இதைவிட மகத்தான இடத்தையே நான் பெறுவேன்!” 18:37 அதற்கு அவனுடைய நண்பன் அவனிடம் உரையாடிக் கொண்டே கூறினான்: “அந்த மாபெரும் ஆற்றலுடையவனையா நிராகரிக்கிறாய்? அவனோ உன்னை மண்ணிலிருந்தும் பிறகு விந்திலிருந்தும் படைத்தான். பின்னர் உன்னை ஒரு முழு மனிதனாய் ஆக்கினான். 18:38 ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் அந்த அல்லாஹ்தான் என்னைப் பரிபாலிக்கும் இறைவன்! அந்த இறைவனுடன் எவரையும் நான் இணையாக்குவதில்லை. 18:39 நீ உன்னுடைய தோட்டத்தில் நுழைந்தபோது உன் நாவிலிருந்து ‘மாஷா அல்லாஹ், லா குவ்வத இல்லா பில்லாஹ்’* எனும் வார்த்தைகள் ஏன் வெளிப்படவில்லை? நான் பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் உன்னை விடக் குறைந்தவனாக இருக்கின்றேன் என்று நீ கருதினால், 18:40 என்னுடைய இறைவன் உன் தோட்டத்தைவிடச் சிறந்ததை எனக்கு அளித்துவிடக்கூடும். உன்னுடைய தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஏதேனுமொரு ஆபத்தை அனுப்பிவிடக்கூடும். அதனால், அத்தோட்டம் வெறும் வெட்ட வெளியாக மாறிவிடக் கூடும் 18:41 அல்லது எந்தவிதத்திலும் உன்னால் வெளிக்கொணர முடியாத அளவுக்கு அதன் தண்ணீர் வற்றிப் போய்விடக்கூடும்!” 18:42 இறுதியில், அவனுடைய விளைபொருள்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. அவனுடைய திராட்சைத் தோட்டம் அதன் பந்தலில் குப்புற விழுந்து விட்டதைக் கண்டு, தான் அதில் முதலீடு செய்ததெல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் தன் கைகளைப் பிசைந்து கொண்டு கூறலானான்: “அந்தோ! நான் என் இறைவனுடன் எவரையும் இணை வைக்காமல் இருந்திருக்கக் கூடாதா?” 18:43 அல்லாஹ்வை விடுத்து, அவனுக்கு உதவிபுரிவதற்கு எந்தக் கூட்டத்தாரும் இருக்கவில்லை. தானாகவே அந்த ஆபத்தைச் சமாளிப்பதற்கும் அவனால் இயலவில்லை. 18:44 காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அதிகாரம் உண்மையானவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது என்று அப்போது தெரிந்து விட்டது. மேலும், அவன் அருள்வதே சிறப்பான வெகுமதியாகும். இன்னும் அவன் காண்பிக்கின்ற முடிவே மகத்தான முடிவாகும். 18:45 (நபியே!) இவர்களுக்கு இம்மை வாழ்வின் உண்மைநிலையை இந்த உதாரணத்தைக் கொண்டு விளக்குவீராக: நாம் (இன்று) வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். பிறகு, அதன் மூலம் பூமியில் செடிகொடிகள் நன்கு அடர்ந்து வளர்ந்தன. (நாளை) அதே கொடிகள் காற்றடித்துச் செல்லும் காய்ந்த பதராகிவிடுகின்றன. அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். 18:46 இந்தப் பொருள்களும் இந்தப் பிள்ளைகளும் உலகவாழ்க்கையின் நிலையற்ற அலங்காரமே. உண்மையில், நிலைத்திருக்கக்கூடிய நற்செயல்கள் தாம், பலனைப் பொறுத்து உம் இறைவனிடம் சிறந்தவையாகும். மேலும், அவற்றின் மீதுதான் நல்ல எதிர்பார்ப்புகள் கொள்ள முடியும். 18:47 அந்த நாளைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். அன்று நாம் மலைகளைப் பெயர்த்துவிடும்போது பூமி முற்றிலும் வெட்ட வெளியாக இருப்பதை நீர் காண்பீர். மேலும், மனிதர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம். (முற்காலத்து மற்றும் பிற்காலத்து மக்களில்) எவரையும் விட்டு வைக்க மாட்டோம். 18:48 மேலும், எல்லோரும் உம் அதிபதியின் முன்னிலையில் கொண்டு வந்து அணியணியாய் நிறுத்தப்படுவார்கள் “(பார்த்துக் கொள்ளுங்கள்!) வந்து விட்டீர்கள் அல்லவா, நீங்கள் எம்மிடம்? நாம் உங்களை முதல் தடவை எவ்வாறு படைத்திருந்தோமோ அவ்வாறு! உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட எந்த ஒரு நேரத்தையும் நாம் நிர்ணயிக்கவில்லை என்றுதானே நீங்கள் கருதியிருந்தீர்கள்! 18:49 மேலும், வினைப்பட்டியல் முன்னால் வைக்கப்பட்டுவிடும். நீர் பார்ப்பீர்: அவ்வேளை குற்றம் புரிந்தோர், தமது வாழ்க்கைப் புத்தகத்தில் உள்ளவற்றைக் கண்டு அஞ்சிக்கொண்டிருப்பார்கள்; மேலும் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்: “அந்தோ...! எங்கள் துர்பாக்கியமே! இது என்ன பதிவேடு! எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே!” தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். மேலும், உம் அதிபதி எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்கமாட்டான். 18:50 நாம் வானவர்களிடம் ‘ஆதத்திற்குச் சிரம் பணியுங்கள்’ என்று கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால், இப்லீஸ் சிரம் பணியவில்லை. அவன் ஜின்களைச் சார்ந்தவனாக இருந்தான். ஆகையால், அவன் தன் அதிபதியின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தான். (இப்போது) என்னை விடுத்து நீங்கள் அவனையும், அவனுடைய சந்ததிகளையும் உங்களுடைய பாதுகாவலர்களாய் ஆக்கிக் கொள்கிறீர்களா, என்ன? அவர்களோ உங்களின் பகைவர்களாவர். எத்தனை மோசமான மாற்றை இந்தக் கொடுமையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 18:51 நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபோது அவர்களை அழைக்கவில்லை. ஏன், அவர்களைப் படைக்கும்போதுகூட அவர்களை கூட்டுச் சேர்க்கவில்லை. வழி கெடுப்பவர்களை உதவியாளர்களாய் ஆக்கிக்கொள்வது என் நியதியல்ல. 18:52 “என்னுடன் இணையானவர்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தவர்களை இப்போது அழையுங்கள்!” என்று இவர்களின் இறைவன் இவர்களிடம் கூறும் நாளில் (இவர்கள் என்ன செய்வார்கள்?) இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்ய வரமாட்டார்கள். மேலும், நாம் அவர்களுக்கிடையே ஓர் அழிவுப்படுகுழியை அமைத்துவிடுவோம். 18:53 குற்றவாளிகள் அனைவரும் அந்நாளில் நரகநெருப்பைக் காண்பார்கள்; தாம் அதில் விழவிருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்புவதற்கான எந்தப் புகலிடத்தையும் அவர்கள் காணமாட்டார்கள்! 18:54 நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான். 18:55 மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது...? முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைத்தண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர! 18:56 நற்செய்தி அறிவிப்பதற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாம் தூதர்களை அனுப்புவது இல்லை. ஆயினும் இறைநிராகரிப்பாளர்கள், அசத்தியத்தின் ஆயுதங்கள் கொண்டு சத்தியத்தை வீழ்த்த முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் என்னுடைய வசனங்களையும், தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் பரிகாசமாக்கினார்கள். 18:57 தன்னுடைய இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்டபோது அவற்றைப் புறக்கணித்து தன் கைகளே செய்த தீவினைகளின் கதியை மறந்து விட்டவனைவிட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? (எவர்கள் இத்தகைய நடத்தையை மேற்கொண்டார்களோ) அவர்கள் குர்ஆனை உணர்ந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்களின் மீது நாம் திரையிட்டு வைத்திருக்கின்றோம். மேலும், அவர்களின் செவிகளில் மந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றோம். நேர்வழியின் பக்கம் அவர்களை நீர் எவ்வளவுதான் அழைத்தாலும், இந்நிலையில் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறமாட்டார்கள். 18:58 உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பிவைத்திருப்பான்! ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். 18:59 அழிவுக்குள்ளான இந்த ஊர்கள் உங்கள் முன் இருக்கின்றன. அவர்கள் கொடுமை செய்தபோது, அவர்களை நாம் அழித்துவிட்டோம். அவை ஒவ்வொன்றின் அழிவிற்கும் குறிப்பிட்ட தொரு காலத்தை நிர்ணயித்து இருந்தோம். 18:60 (மூஸாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்!) ஒருபோது மூஸா தம் பணி யாளரிடம் கூறினார்: “நான் இரு நதிகள் சங்கமம் ஆகுமிடத்தை அடையும்வரை என்னுடைய பயணத்தை முடித்துக் கொள்ள மாட்டேன்; இல்லையெனில் நெடுங்காலம் வரை நடந்து கொண்டே இருப்பேன்.” 18:61 பிறகு அவை சங்கமமாகும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, தங்களுடைய மீனை மறந்துவிட்டார்கள். அது நதியில் சுரங்கம் போல் வழியமைத்துக் கொண்டு சென்றுவிட்டது. 18:62 அவ்விருவரும் சற்று முன்னேறிச் சென்றபோது மூஸா தம் பணியாளரிடம் கூறினார்: “நமது சிற்றுண்டியைக் கொண்டு வாரும். இன்றைய பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம்.” 18:63 அதற்குப் பணியாளர் கூறினார்: “பார்த்தீர்களா, என்ன நடந்துவிட்டது என்று? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது எனக்கு மீனைப் பற்றி நினைவில்லாமல் போய்விட்டது. ஷைத்தான் என்னைக் கவனக்குறைவில் ஆழ்த்திவிட்டான். எனவே (தங்களிடம்) அதனைப் பற்றிக் கூற நான் மறந்துவிட்டேன். ஆனால், அதிசயமான முறையில் மீன் நதியினுள் சென்று விட்டது.” 18:64 மூஸா கூறினார்: “அந்த இடத்தைத்தானே நாம் தேடிக்கொண்டிருந்தோம்?” பிறகு அவர்கள் இருவரும் வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். 18:65 மேலும், அங்கு அவர்கள் நம்முடைய அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். அவருக்கோ நம்முடைய அருளை நாம் வழங்கியிருந்தோம். மேலும், நம் சார்பிலிருந்து சிறப்பான ஞானத்தையும் வழங்கியிருந்தோம். 18:66 மூஸா, அவரிடம் கேட்டார்: “தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு நான் உங்களுடன் இருக்கலாமா?” 18:67 அதற்கு அவர் பதிலளித்தார்: “என்னோடு பொறுமையாய் இருக்க திண்ணமாக உம்மால் இயலாது. 18:68 மேலும், உமக்குச் சரியாகத் தெரியாத விஷயத்தில் எவ்வாறு உம்மால் பொறுமையாய் இருக்க முடியும்...?” 18:69 அதற்கு மூஸா கூறினார்: “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்!” 18:70 அதற்கு அவர் கூறினார்: “சரி, நீர் என்னுடன் வருகிறீர் என்றால், நானே உம்மிடம் கூறும்வரை எதைப்பற்றியும் நீர் என்னிடம் கேட்கக்கூடாது.” 18:71 பிறகு அவர்கள் இருவரும் பயணம் மேற்கொண்டு ஒரு கப்பலில் ஏறியபோது, அவர் அதில் ஒரு துளையிட்டார்! அப்போது மூஸா கேட்டார்: “கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் அதில் துளையிட்டீர்கள்...? ஒரு கொடுமையான செயலைச் செய்து விட்டீர்களே!” 18:72 அதற்கு அவர் கூறினார்: “என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் உம்மிடம் கூறவில்லையா?” 18:73 அதற்கு மூஸா கூறினார்: “நான் மறந்து போனதற்காக என்னைக் கண்டிக்காதீர்கள்! என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.” 18:74 பிறகு இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கையில், ஒரு சிறுவனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் அவனைக் கொன்றுவிட்டார். மூஸா கூறினார்: “ஒரு நிரபராதியின் உயிரைக் கொன்று விட்டீர்களே! அவன் யாரையும் கொலை செய்யவில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்.”
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)