அத்தியாயம்  பனூ இஸ்ராயீல்  17 : 1-98 / 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 17:2 (இதற்கு முன்பு) நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். மேலும், அதனை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டக் கூடியதாக அமைத்தோம்; “நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் உங்களின் பொறுப்பாளனாய் ஆக்கிக்கொள்ளக்கூடாது” எனும் அறிவுறுத்தலுடன்! 17:3 நீங்கள் நூஹுடன் கப்பலில் நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்கள் ஆவீர்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகத் திகழ்ந்தார். 17:4 பிறகு, நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ‘திண்ணமாக நீங்கள் பூமியில் இரு தடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள்’ என்றும் ‘பெரிதும் அக்கிரமம் புரிவீர்கள்’ என்றும் முன்பே அறிவித்திருந்தோம். 17:5 இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தர்ப்பம் வந்தபோது (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே!) மிகவும் சக்தி வாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக, நாம் எழச் செய்தோம்; அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி, எல்லாத் திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகவே இருந்தது. 17:6 இதன் பின்னர், அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச் செய்தோம். 17:7 பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!” 17:8 இனி, உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை பொழியக்கூடும். ஆயினும், நீங்கள் உங்களுடைய முந்தைய நடத்தையை மீண்டும் மேற்கொள்வீர்களாயின் நாமும் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். மேலும், நன்றி கொல்லும் மக்களுக்கு நரகத்தைச் சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம். 17:9 உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது. 17:10 ஆனால், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறோம் என்று அறிவிக்கிறது. 17:11 நன்மையை எவ்வாறு கோர வேண்டுமோ அவ்வாறு தீமையை மனிதன் கோருகின்றான். மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான். 17:12 (பாருங்கள்) நாம் இரவையும் பகலையும் இரு சான்றுகளாய் அமைத்துள்ளோம். இரவு எனும் சான்றினை ஒளியற்றதாய் ஆக்கினோம். பகல் எனும் சான்றினை ஒளிரக்கூடியதாய்ச் செய்தோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் இறைவனின் அருட் கொடையைத் தேட வேண்டும்; மேலும், மாதங்கள், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இவ்வாறு ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக நாம் வகைப்படுத்தி வைத்துள்ளோம். 17:13 மேலும், ஒவ்வொரு மனிதனின் சகுனத்தையும் நாம் அவனது கழுத்திலேயே மாட்டிவிட்டிருக்கின்றோம். மேலும் மறுமைநாளில், ஒரு வினைச் சுவடியை அவனுக்காக வெளிப் படுத்துவோம். அதனை அவன் ஒரு திறந்த புத்தகத்தைப் போன்று காண்பான். 17:14 “படித்துப்பார், உன்னுடைய இந்த வினைப்பட்டியலை! இன்று உன்னுடைய கணக்கைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்!” 17:15 ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறிதவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். மேலும் (சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்திட) ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் யாரையும் தண்டிப்பவர் அல்லர்! 17:16 நாம் ஓர் ஊரை அழித்திட நாடினால் அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அவர்கள் அங்கு (இக்கட்டளைக்கு) மாறு செய்யத் தலைப்படுகிறார்கள். அப்போது தண்டனைக்குரிய தீர்ப்பு அவ்வூரின் மீது விதிக்கப்பட்டு விடுகின்றது. ஆகவே, அதனை நாம் அழித்தொழித்து விடுகின்றோம். 17:17 (பாருங்கள்!) நூஹுக்குப் பிறகு வாழ்ந்த எத்தனையோ தலைமுறையினர் நம் கட்டளைக்கேற்ப அழிக்கப்பட்டிருக்கிறார்கள். தன் அடிமைகளின் பாவச் செயல்கள் குறித்து உம் இறைவன் நன்கறிந்தே இருக்கின்றான். மேலும் அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கிறான். 17:18 விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில், அவனுக்கு இங்கேயே நாம் அதனைக் கொடுத்துவிடுகிறோம் நாம் நாடுகின்றவற்றை நாம் நாடுபவர்க்கு மட்டும்! பிறகு, நாம் அவனுடைய பங்கில் நரகத்தை எழுதிவிடுகின்றோம். சபிக்கப்பட்டவனாகவும் இறையருளை இழந்தவனாகவும் அவன் அதில் கிடந்து எரிவான். 17:19 மேலும், இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில், யார் மறுமையை விரும்புகின்றாரோ அதற்காகப் பாடுபடுகின்ற முறைப்படி பாடுபடுகின்றாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும். 17:20 (இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக இரு சாரார்க்கும் (உலகில்) நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக்கொண்டிருக்கிறோம். இது உம் இறைவனின் கொடையாகும். மேலும், உம் இறைவனின் கொடையைத் தடுக்கக் கூடியவர் யாருமில்லை. 17:21 ஆயினும், (இம்மையிலேயே) அவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட எவ்வாறு நாம் சிறப்பு அளித்துள்ளோம் என்பதைப் பாருங்கள். மேலும், மறுமையிலோ அவர்களுக்கு இன்னும் அதிக அந்தஸ்து உண்டு; பெரும் சிறப்பும் கிடைக்கும். 17:22 அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் நீர் இழிந்தவராயும் நாதியற்றவராயும் ஆகிவிடுவீர்! 17:23 உம் அதிபதி விதித்துள்ளான்: “அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர்! மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! 17:24 மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக: “என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!” 17:25 உங்கள் இதயங்களில் என்ன இருக்கின்றன என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான். நீங்கள் உத்தமர்களாய் வாழ்வீர்களாயின் தம் தவறை உணர்ந்து, அடிபணிந்து வாழ்வதன் பக்கம் திரும்புவோரை திண்ணமாக, அவன் மன்னித்தருளக்கூடியவனாக இருக்கின்றான். 17:26 உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள். ஆனால், வீண் செலவு செய்யாதீர்! 17:27 திண்ணமாக, வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான். 17:28 உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (உறவினர்கள், வறியவர்கள் மற்றும் வழிப்போக்கர்களில் தேவையுடையோரை) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! 17:29 உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர். 17:30 திண்ணமாக உம் இறைவன், தான் நாடுவோர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். திண்ணமாக, அவன் தன்னுடைய அடிமைகளை நன்கறிபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 17:31 வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம்தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில், அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும். 17:32 மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது. 17:33 மேலும், இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் கொலை செய்யாதீர்கள்; நியாயத்தின் அடிப்படையிலன்றி! மேலும், யாரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பழிவாங்கக் கோரும் உரிமையை அவருடைய பொறுப்பாளருக்கு நாம் அளித்திருக்கின்றோம். ஆனால் (பழிக்குப் பழியாகச் செய்யும்) கொலையில், அவர் வரம்பு மீற வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்படுவார். 17:34 நேர்மையான முறையிலன்றி அநாதைகளின் சொத்தை நெருங்காதீர்கள்; அவர்கள் வாலிபத்தை அடையும்வரை! மேலும், ஒப்பந்தத்தை முறையாகப் பேணி வாழுங்கள். ஏனெனில், ஒப்பந்தம் குறித்து நீங்கள் விசாரணை செய்யப்பட்டே தீருவீர்கள்! 17:35 மேலும் நீங்கள் அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளந்து கொடுங்கள். எடைபோடும்போது சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். இதுவே முறையானதும் (இறுதி முடிவைப் பொறுத்து) மிக நல்லதுமாகும். 17:36 உங்களிடம் எதைப்பற்றிய அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்கள். திண்ணமாக காது, கண், இதயம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டே தீரும். 17:37 மேலும், பூமியில் செருக்காக நடக்காதீர்கள். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையளவுக்கு உயர்ந்துவிடவும் முடியாது! 17:38 இவை ஒவ்வொன்றிலுமுள்ள தீமை உம் இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும். 17:39 உம் இறைவன் உமக்கு வஹி மூலம் அறிவித்திருக்கின்ற அறிவார்ந்த விஷயங்களாகும் இவை. மேலும் (பாரீர்) அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தாதீர்! அவ்வாறு செய்தால் பழிக்கப்பட்டவராயும் நன்மைகள் அனைத்தையும் இழந்தவராயும் நரகில் போடப்பட்டு விடுவீர். 17:40 எத்துணை ஆச்சரியமான விஷயம்! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை வழங்கி, தனக்கு வானவர்களைப் பெண் மக்களாய் எடுத்துக்கொண்டானா? திண்ணமாக உங்கள் நாவிலிருந்து நீங்கள் வெளிப்படுத்துவது பெரும் பொய்தான்! 17:41 மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனில் (உண்மைகளை) விதவிதமாக நாம் விளக்கினோம். ஆனால், அவர்கள் சத்தியத்தை விட்டு மேலும் மேலும் விலகி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். 17:42 (நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “இவர்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு கடவுளரும் இருந்திருந்தால், நிச்சயமாக அவர்கள் அர்ஷûடைய அதிபதியின் இடத்தை அடைவதற்குத் திண்ணமாக வழிவகையைத் தேடியிருப்பார்கள். 17:43 அவன் மிகத் தூய்மையானவனும், மிக உயர்ந்தவனும், மேலானவனும் ஆவான்; இவர்கள் கூறிக்கொண்டிருப்பதை விட்டு! 17:44 ஏழு வானங்களும் பூமியும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்துமே அவனுடைய தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. அவனைப் புகழ்வதுடன் அவனைத் துதி செய்து கொண்டிராத எந்த ஒரு பொருளும் இல்லை. ஆயினும், அவை துதி செய்வதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. உண்மையில், அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னித்தருள்பவனாகவும் இருக்கின்றான். 17:45 நீர் குர்ஆனை ஓதும்போது உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் நாம் ஒரு திரையைப் போட்டு விடுகிறோம். 17:46 எதையும் அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்கள் மீது உறைபோட்டு விடுகிறோம். மேலும், அவர்களின் காதுகளை மந்தமாக்கி விடுகிறோம். நீர் குர்ஆனில் உம்முடைய ஏகனாகிய அதிபதியைப் பற்றி எடுத்துரைக்கும்போது அவர்கள் வெறுப்போடு முகம் திருப்பிச் சென்றுவிடுகிறார்கள். 17:47 நீர் கூறுகின்றவற்றை அவர்கள் செவிதாழ்த்திக் கேட்கும்போது உண்மையில் எதனைக் கேட்கிறார்கள் என்பதையும், அவர்கள் தமக்கிடையே கிசுகிசுக்கும்போது என்ன பேசுகிறார்கள் என்பதையும் நாம் நன்கறிவோம். இந்த அக்கிரமக்காரர்கள் தமக்கிடையே கூறுகிறார்கள்: “இவரோ சூனியம் செய்யப்பட்டுள்ள மனிதர்; இவரைப் போய் நீங்கள் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறீர்களே!” 17:48 பாரும்! எப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் இவர்கள் உம்மீது அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் வழிபிறழ்ந்து விட்டார்கள். இனி இவர்களுக்கு நேர்வழி கிடைக்கப்போவதில்லை. 17:49 அவர்கள் கேட்கிறார்கள்: “நாங்கள் வெறும் எலும்புகளாகி மண்ணோடு மண்ணாகிய பிறகு மீண்டும் புதிய படைப்பாய் எழுப்பப்படுவோமா?” 17:50 (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள். 17:51 அல்லது உயிர் பெறவே முடியாது என்று நீங்கள் கருதுகின்ற இதைவிடவும் கடினமான வேறொரு பொருளாய் ஆகிவிடுங்கள்!” (எப்படியானாலும் நீங்கள் எழுப்பப்படுவீர்கள்!) “மீண்டும் எங்களை வாழ்க்கையின் பக்கம் திரும்பக்கொண்டு வருபவர் யார்?” என்று அவர்கள் அவசியம் கேட்பார்கள். நீர் கூறும்: “எவன், உங்களை முதல் தடவை படைத்தானோ, அவன்தான்!” தங்களின் தலையை ஆட்டி ஆட்டி அவர்கள் உம்மிடம் கேட்பார்கள், “சரி, அது எப்போது நிகழும்?” என்று! நீர் பதில் கூறும்: “வியப்பென்ன? மிக விரைவிலேயே அது நிகழக்கூடும்.” 17:52 எந்நாளில் அவன் உங்களை அழைப்பானோ அந்நாளில் அவனது அழைப்பிற்குப் பதில் அளிக்கும் வகையில், நீங்கள் அவனது புகழ்பாடிக் கொண்டு வருவீர்கள். ‘நாம் சிறிதுகாலமே இந்நிலையில் கிடந்திருந்தோம்’ என்பதுதான் அப்பொழுது உங்களுடைய நினைப்பாக இருக்கும்! 17:53 மேலும், (நபியே! நம்பிக்கையாளர்களான) என் அடியார்களிடம், அவர்கள் மிகவும் சிறந்த பேச்சைத்தான் பேச வேண்டும் என்று நீர் கூறுவீராக! உண்மையாதெனில், ஷைத்தான் மனிதர்களிடையே குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறான். திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான். 17:54 உங்கள் இறைவன் உங்கள் நிலைமையை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான்; அவன் நாடினால் உங்களைத் தண்டிப்பான். மேலும் (நபியே!) மக்களுக்குப் பொறுப்பேற்பவராக நாம் உம்மை அனுப்பி வைக்கவில்லை. 17:55 உம் இறைவன் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறான். நாம் தூதர்களில் சிலருக்கு சிலரைவிட சிறப்பளித்திருக்கிறோம். மேலும், நாம் தாவூதுக்கு ஜபூர் வேதத்தை வழங்கியிருந்தோம். 17:56 இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வை விடுத்து (உங்கள் காரியங்களை நிறைவேற்றுபவர்களாய்) எந்தக் கடவுளர்களை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிட முடியாது; மாற்றிவிடவும் முடியாது. 17:57 அவர்களேகூட தம் இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வஸீலாவை வழிவகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்; தங்களில் யார் அவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது என்பதற்காக! மேலும், அவனுடைய அருளை எதிர்பார்த்துக் கொண்டும் அவன் தரக்கூடிய வேதனைக்கு அஞ்சிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அஞ்ச வேண்டியது உம் அதிபதி தரும் வேதனைக்குத்தான்! 17:58 எந்த ஊரையும் மறுமைநாளைக்கு முன் அழித்தொழிக் காமலோ, கடுமையான வேதனையில் ஆழ்த்தாமலோ நாம் விட்டு விட மாட்டோம். இது இறைவனின் பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. 17:59 சான்றுகளை அனுப்புவதிலிருந்து நம்மைத் தடுக்க வில்லை; முன்பு வாழ்ந்தவர்கள் அவற்றைப் பொய்யெனத் தூற்றி விட்டார்கள் என்பதைத் தவிர! (பாருங்கள்:) ஸமூத் கூட்டத்தார்க்கு ஒரு பெண் ஒட்டகத்தை எல்லோரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக கொடுத்தோம். ஆனால், அவர்கள் அதற்குக் கொடுமை இழைத்தார்கள். நாம் சான்றுகளை அனுப்புவது, மக்கள் அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பதற்காகவே! 17:60 மேலும் (நபியே!) திண்ணமாக உம் இறைவன் மக்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நாம் உம்மிடம் கூறியிருந்ததை நினைத்துப் பாரும்! மேலும், இப்போது நாம் உமக்குக் காண்பித்துத் தந்தவற்றையும் குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு அச்சுறுத்தலும் இவர்களுடைய வரம்பு மீறும் நடத்தையை அதிகப்படுத்தவே செய்கிறது. 17:61 மேலும், நினைத்துப் பாரும்: ஆதத்துக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அனைவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீசைத் தவிர! அவன் கேட்டான்: “நீ மண்ணினால் படைத்த ஒருவருக்கு நான் சிரம் பணிவேனா?” 17:62 மேலும், அவன் கூறினான்: “சற்று நீயே பார்! என்னைவிட இவருக்கு நீ கண்ணியம் அளித்துள்ளாயே, அதற்கு அவர் தகுதியுடையவர்தானா? நீ எனக்கு மறுமை நாள் வரை அவகாசம் அளித்தால், அவருடைய வழித்தோன்றல்கள் அனைவரையும் அடியோடு நான் ஒழித்துக்கட்டுவேன். மிகக் குறைவான மக்கள்தாம் என்னிடமிருந்து தப்ப முடியும்!” 17:63 அல்லாஹ் கூறினான்: “சரி! நீ போய்விடு; அவர்களில் யார் உன்னைப் பின்பற்றினாலும் உன்னோடு சேர்த்து அவர்கள் அனைவர்க்கும் நரகம்தான் நிறைவான கூலியாகும். 17:64 உனது பசப்பு வார்த்தையின் மூலம் அவர்களில் யாரை உன்னால் வழிபிறழச் செய்ய முடியுமோ வழிபிறழச் செய்! மேலும், உனது குதிரைப் படையையும் காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டு! சொத்துக்களிலும் பிள்ளைகளிலும் நீ அவர்களுடன் பங்காளியாகிவிடு. உன்னுடைய வாக்குறுதி வலைக்குள் அவர்களைச் சிக்கவை! ஷைத்தானின் வாக்குறுதி பெரும் ஏமாற்றமே தவிர வேறொன்றுமில்லை 17:65 திண்ணமாக, என் அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மேலும் முற்றிலும் சார்ந்து இருப்பதற்கு உம் இறைவனே போதுமானவன்!” 17:66 உங்கள் (உண்மையான) இறைவன் யாரெனில், அவன்தான் உங்களுக்காக கடலில் கப்பலைச் செலுத்துகிறான்; நீங்கள் அவனது அருளைத் தேடும்பொருட்டு! திண்ணமாக, அவன் உங்களுக்கு மிகவும் கிருபை புரிபவனாக இருக்கின்றான். 17:67 கடலில் உங்களுக்குத் துன்பம் ஏற்படும்போது அந்த ஏகனை விடுத்து, நீங்கள் யார் யாரையெல்லாம் அழைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் மறைந்துபோய் விடுகிறார்கள். ஆனால், அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிடும்போது நீங்கள் அவனைப் புறக்கணித்துவிடுகிறீர்கள். உண்மையில் மனிதன் மிகவும் நன்றி கொல்பவனாக இருக்கிறான். 17:68 கரை சேர்ந்த பிறகு என்றேனும் ஒருநாள் இறைவன் உங்களைப் பூமி விழுங்கும்படிச் செய்துவிடுவான் என்பது குறித்தும் அல்லது உங்கள் மீது கற்களைப் பொழியும் புயலை அனுப்பிவிடுவான் என்பது குறித்தும் பிறகு, அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற எந்தப் பாதுகாவலனையும் நீங்கள் காணமாட்டீர்கள் என்பதைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா என்ன? 17:69 அல்லது அல்லாஹ் மீண்டும் ஒருமுறை உங்களைக் கடலுக்குக் கொண்டு சென்று, நீங்கள் நன்றி கொன்றதற்குப் பதிலாக உங்கள் மீது கடும் புயல்காற்றை அனுப்பி, உங்களை மூழ்கடித்துவிடுவான்; அல்லது உங்களுக்கு ஏற்பட்ட இந்தக் கதி பற்றி அவனிடம் விசாரணை செய்யக்கூடிய எவரும் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்கள் என்பவற்றைக் குறித்தும் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? 17:70 நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்குக் கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும் கடலிலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கினோம். தூய பொருள்களிலிருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளைவிட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம். இவை நமது கொடைகளாகும். 17:71 மேலும் ஒவ்வொரு சமூகத்தையும் அவர்களுடைய தலைவருடன் நாம் அழைக்கவிருக்கும் நாளினை நினைவு கூருங்கள்: அந்நாளில் எவர்களின் வினைப்பட்டியல் அவர்களுடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர்கள் தமது வினைப்பட்டியலைப் படிப்பார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. 17:72 மேலும், எவன் இவ்வுலகில் குருடனாக இருந்தானோ அவன் மறுமையிலும் குருடனாகவே இருப்பான். ஏன், வழியை அறிவதில் குருடனை விட அதிகம் தோல்வியுற்றவனாக இருப்பான். 17:73 (நபியே!) இம்மக்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, உம்மைத் திசை திருப்பும் முயற்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை நாம் உமக்கு அனுப்பிய வஹியை விட்டு வேறு எதையாவது நீர் நம் மீது புனைந்துரைக்க வேண்டும் என்பதற்காக! நீர் அவ்வாறு புனைந்துரைத்திருந்தால் அவர்கள் உம்மை நண்பராக்கியிருப்பார்கள். 17:74 நாம் உமக்கு உறுதிப்பாட்டை வழங்காதிருந்தால், நீர் அவர்களின் பக்கம் சிறிதேனும் சாய்ந்திருக்கக் கூடும். 17:75 நீர் அவ்வாறு சாய்ந்திருந்தால், உலக வாழ்வில் இரு மடங்கு வேதனையையும் மரணத்திற்குப் பின்பு இரு மடங்கு வேதனையையும் நீர் சுவைக்கும்படிச் செய்திருப்போம். பிறகு நமக்கு எதிராக உதவிபுரிபவர் எவரையும் நீர் காணமாட்டீர். 17:76 இந்த மண்ணிலிருந்து உமது பாதத்தைப் பெயர்த்திட வேண்டும்; உம்மை இங்கிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று அவர்கள் மும்முரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது! 17:77 உமக்கு முன்னால் அனுப்பப்பட்ட நம்முடைய அனைத்துத் தூதர்கள் விஷயத்திலும் நாம் கடைப்பிடித்து வந்த நிலையான நியதி இதுவே. நமது நியதியில் நீர் எந்த மாறுதலையும் காணமாட்டீர்! 17:78 சூரியன் (நடுவானை விட்டு) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை தொழுகையை நிலைநிறுத்தும்! அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியும். திண்ணமாக அதிகாலையில் (குர்ஆன்) ஓதுவது சாட்சி சொல்லப்படக்கூடியதாகும். 17:79 இரவில் தஹஜ்ஜுத் தொழுகையைக் கடைப்பிடியும். இது நீர் செய்யவேண்டிய அதிகப்படியான தொழுகையாகும். உம் இறைவன் உம்மை ‘மகாமே மஹ்மூத்’ எனும் அந்தஸ்துக்கு உயர்த்தலாம். 17:80 மேலும், பிரார்த்தனை புரிவீராக: “என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!” 17:81 மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” 17:82 இந்தக் குர்ஆனை இறக்கியருளும் தொடரில் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளவற்றை நாம் இறக்கியருளிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கொடுமை புரிபவர்களுக்கு அது பேரிழப்பைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்துவதில்லை. 17:83 மனிதனின் நிலை என்னவெனில், அவனுக்கு நாம் அருள்புரிந்தால் அகந்தையுடன் நடந்து கொள்கிறான்; மேலும், முகம் திருப்பிச் செல்கிறான். அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின் நிராசை யடைந்து போகிறான். 17:84 (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: “ஒவ்வொருவரும் தத்தமது வழிமுறைப்படி செயலாற்றுகின்றனர். ஆனால், எவர் மிகவும் நேரான வழியில் உள்ளவர் என்பதை உம் அதிபதியே நன்கு அறிகின்றான்.” 17:85 ‘ரூஹ்’ பற்றி இவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். கூறுவீராக: “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் வருகிறது. ஆனால், உங்களுக்கு மிகக் குறைவாகவே ஞானம் வழங்கப்பட்டுள்ளது. 17:86 (நபியே!) நாம் நாடினால் வஹியின் மூலம் உமக்கு வழங்கியிருக்கும் அனைத்தையும் பறித்துவிடுவோம். பிறகு, நமக்கு எதிராக அவற்றைத் திரும்பப் பெற்றுத் தரக்கூடிய ஆதரவாளர் எவரையும் நீர் காணமாட்டீர். 17:87 உமக்குக் கிடைத்திருப்பவையெல்லாம், உம் அதிபதியின் கருணையால்தான் கிடைத்திருக்கின்றன. உண்மையாக, உம் மீது அவன் பொழியும் அருள் மாபெரியதாகும். 17:88 கூறும்: “மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் குர்ஆனைப் போன்று ஒன்றைக் கொண்டுவர முயன்றாலும் இதைப்போன்று அவர்களால் கொண்டுவர முடியாது; அவர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” 17:89 நாம் இந்தக் குர்ஆனில் பலவிதமான உவமைகளின் மூலம் மக்களுக்கு (உண்மைகளை) விவரித்துள்ளோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நிராகரிப்பிலேயே விடாப்பிடியாய் இருக்கிறார்கள். 17:90 மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீர் பூமியைப் பிளந்து எங்களுக்காக ஒரு நீரூற்றை ஓடச் செய்யாதவரை, 17:91 அல்லது பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதன் நடுவே ஆறுகளை நீர் ஓடச்செய்யாதவரை நாங்கள் உமது பேச்சை நம்ப மாட்டோம். 17:92 அல்லது நீர் வாதிடுவதுபோல் வானத்தை துண்டு துண்டாக்கி எங்கள்மீது போடாதவரை, அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரடியாக எங்கள் முன் கொண்டுவராத வரை உம்மை நாங்கள் நம்பமாட்டோம். 17:93 அல்லது தங்கமாளிகை ஒன்று உமக்காக உருவாகாத வரை அல்லது வானத்தில் நீர் ஏறிச் செல்லாத வரை நீர் வானத்தில் ஏறினாலும்கூட நாங்கள் படிப்பதற்கு ஒரு நூலை எங்கள் மீது இறக்கித் தராத வரை உம்மை நம்பமாட்டோம்” (நபியே! இவர்களிடம்) கூறுவீராக: “தூய்மையானவனாக இருக்கிறான், என்னைப் பரிபாலிப்பவன்! நான் தூதுச் செய்தியைக் கொண்டுவருகின்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லையே!” 17:94 மக்களிடம் நேர்வழி வந்தபோதெல்லாம் அதன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் அவர்களைத் தடுத்தது, “அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்பியிருக்கிறான்?” என்று அவர்கள் கேட்டதுதான். 17:95 அவர்களிடம் கூறும்: “பூமியில் வானவர்களே நிம்மதியுடன் நடந்து திரிந்து கொண்டிருப்பார்களேயானால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்து திண்ணமாக ஒரு வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்!” 17:96 (நபியே! அவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கும் உங்களுக்கு மிடையே அல்லாஹ்வின் சாட்சியமே போதுமானது. அவன் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கறிந்து கொண்டும் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான்.” 17:97 யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் எவர்களை வழிகேட்டிலே ஆழ்த்துகின்றானோ அவர்களுக்கு அல்லாஹ்வை விடுத்து வேறு எந்தப் பாதுகாவலரையும் நீர் காணமாட்டீர். மறுமைநாளில் நாம் அவர்களை முகம் குப்புற இழுத்து வருவோம்; குருடர்களாய்; செவிடர்களாய் மேலும், ஊமையர்களாய்! அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அதன் வெப்பம் தணியத் தொடங்கும்போது நாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியும்படிச் செய்வோம். 17:98 அவர்கள் நம் சான்றுகளை நிராகரித்ததற்கும், “நாங்கள் வெறும் எலும்புகளாகி மக்கி மண்ணோடு மண்ணாய் ஆகிவிட்ட பிறகு புத்தம் புதிய படைப்பாய் நாங்கள் எழுப்பப்படுவோமா?” என்று கேட்டதற்கும் உரிய கூலியாகும் இது.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)