அத்தியாயம்  அல்ஹிஜ்ர்  15 : 1-99 / 99
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
15:1 அலிஃப், லாம், றா. இறைமறையின் மற்றும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும் இவை. 15:2 (இன்று இஸ்லாத்தின் அழைப்பை) ஏற்க மறுத்தவர்கள் “நாமும் இறைவனுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏக்கத்துடன் கூறும் நேரம் விரைவில் வரும். 15:3 (நபியே!) அவர்களை அவர்களுடைய போக்கில் விட்டுவிடும்! அவர்கள் உண்டு மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொள்ளட்டும்! மேலும், அவர்களின் நப்பாசைகள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி வைத்திருக்கட்டும்! இவர்கள் விரைவில் அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்; 15:4 இதற்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோமோ அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது. 15:5 எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும் முன்பே அழியவும் முடியாது; அது முடிந்த பின்பு வாழவும் முடியாது. 15:6 இம்மக்கள் கூறுகின்றார்கள்: “இறை வாக்கு (திக்ர்) இறக்கியருளப்பட்டிருப்பவரே! திண்ணமாக, நீர் ஒரு பைத்தியக்காரர் ஆவீர். 15:7 நீர் உண்மையாளராய் இருப்பின் ஏன் எங்களிடம் வானவர்களை நீர் அழைத்து வருவதில்லை?” 15:8 நாம் வான வர்களை (வெறுமனே இறக்குவதில்லை.) அவர்கள் இறங்கும்போது சத்தியத்துடனே இறங்குவார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை. 15:9 திண்ணமாக, இந்த நல்லு ரையை நாம்தாம் இறக்கிவைத்தோம். மேலும், நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம். 15:10 (நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம். 15:11 அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதும் அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருக்கவில்லை. 15:12 இவ்வாறே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இந்நல்லுரையை (கம்பியைப் போன்று) செலுத்துகிறோம். 15:13 அதன்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. தொன்றுதொட்டே இத்தகைய இயல்புடைய மக்களிடம் இதே நடைமுறைதான் இருந்து வருகிறது. 15:14 மேலும், வானத்தின் வாயிலொன்றை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டிருந்தாலும், அதில் அவர்கள் பட்டப் பகலிலே ஏறத் தொடங்கிவிட்டிருந்தாலும் 15:15 அப்பொழுதும் அவர்கள் இவ்வாறே கூறியிருப்பர்: “எங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன; சரியாகச் சொல்வதானால் எங்களுக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது!” 15:16 (இது நமது செயல் திறனாகும்:) திண்ணமாக நாம், வானத்தில் உறுதி வாய்ந்த அரண்களை அமைத்தோம்; பார்ப்பவர்களுக்காக (நட்சத்திரங்களால்) அவற்றை அலங்கரித்தோம்; 15:17 மேலும், விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானைவிட்டும் அவற்றைப் பாதுகாக்கவும் செய்தோம். 15:18 ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது; எதையேனும் ஒட்டுக் கேட்பதைத் தவிர! (அப்படி அவன் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவனைப் பின்சென்று விரட்டும்! 15:19 மேலும், நாம், பூமியை விரித்தோம்; அதில் மலைகளை நாட்டினோம். அதில், எல்லா வகையான தாவரங்களையும் மிகப் பொருத்தமான அளவில் முளைக்கச் செய்தோம். 15:20 மேலும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நாம் அதில் அமைத்தோம் உங்களுக்காகவும் நீங்கள் எவற்றுக்கு உணவளிப்பவர்களாக இல்லையோ அத்தகைய எண்ணற்ற படைப்பினங்களுக்காகவும்! 15:21 எந்தப் பொருள்களாய் இருந்தாலும் சரி, அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கின்றோம். 15:22 மேலும் (மேகங்களை) கருக்கொள்ளச் செய்யும் காற்றை நாமே அனுப்புகின்றோம். பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். மேலும், அதனை உங்களுக்குப் புகட்டுகின்றோம். அதன் கருவூலதாரர் நீங்கள் அல்லவே! 15:23 திண்ணமாக, வாழ்வையும் மரணத்தையும் நாமே அளிக்கின்றோம். மேலும், அனைத்திற்கும் நாமே வாரிசாவோம். 15:24 உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களையும் பின்னால் வரப்போகின்றவர்களையும் நாம் அறிந்திருக்கின்றோம். 15:25 நிச்சயம் உம் அதிபதியே அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான்; திண்ணமாக அவன் நுண்ணறிவாளனும் மிக அறிந்தவனுமாவான். 15:26 பேதகமடைந்த, (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம். 15:27 அதற்கு முன்பு தீயின் கடும் வெப்பத்திலிருந்து ஜின்களைப் படைத்திருந்தோம். 15:28 பின்பு உம் அதிபதி வானவர்களை நோக்கிக் கூறியதை நினைவுகூரும்: “பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை திண்ணமாக நான் படைக்கப் போகின்றேன். 15:29 நான் அவரை முழுமையாக்கி, அவருக்குள் என்னுடைய உயிரிலிருந்து ஊதியதும் நீங்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்திட வேண்டும்!” 15:30 வானவர்கள் அனைவரும் அவ்வாறே சிரம் பணிந்தார்கள். 15:31 இப்லீஸைத் தவிர! அவன் சிரம்பணிபவர்களுடன் சேர்ந்திட மறுத்து விட்டான். 15:32 அப்போது இறைவன் கேட்டான்: “இப்லீஸே! உனக்கு என்ன நேர்ந்து விட்டது? சிரம் பணிந்தவர்களுடன் நீ சேரவில்லையே, ஏன்?” 15:33 அதற்கு அவன் கூறினான்: “இந்த மனிதருக்குச் சிரம்பணிவது என் வேலை அல்ல! ஏனெனில் பேதகமடைந்த (சுண்டினால் ஓசை வரக்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து அவரை நீ படைத்துள்ளாய்!” 15:34 அதற்கு இறைவன் “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனெனில், திண்ணமாக நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய்! 15:35 இனி கூலி கொடுக் கப்படும் நாள் வரை திண்ணமாக உன்மீது சாபம் விதிக்கப்பட்டிருக்கும்!” என்று கூறினான். 15:36 அதற்கு அவன், “என் இறைவனே! (அப்படியானால்) மக்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று வேண்டிக் கொண்டான். 15:37 அதற்கு அல்லாஹ் கூறினான்: “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. 15:38 “நாம் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய அந்த நாள் வரும்வரை.” 15:39 அதற்கு அவன் கூறினான்: “என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று, திண்ணமாக நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செய்வேன்; 15:40 ஆனால், உன் அடியார்களில் எவர்களை வாய்மையாளர்களாய் நீ ஆக்கினாயோ அவர்களைத் தவிர!” 15:41 அதற்கு அல்லாஹ் கூறினான்: “இதுதான் (அந்த வாய்மையாளர்களின் வழிதான்) என் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் நேரிய வழியாகும். 15:42 திண்ணமாக, என்னுடைய வாய்மையான அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது. ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகின்றார்களோ, அவர்களிடம் மட்டும் உனது அதிகாரம் செல்லுபடியாகும். 15:43 திண்ணமாக, அத்தகையவர்கள் அனைவர்க்கும் நரகம் இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.” 15:44 (இப்லீஸைப் பின்பற்றுவோருக்கு எச்சரிக்கப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 15:45 ஆனால், இறையச்சமுள்ளவர்கள் சுவனங்களிலும் (அங்குள்ள) நீரூற்றுகளிலும் இருப்பார்கள். 15:46 மேலும், அவர்களிடம் கூறப்படும்: “எவ்வித அச்சமுமின்றி சாந்தியுடன் அவற்றினுள் நுழையுங்கள்!” 15:47 அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்; 15:48 அங்கு அவர்களுக்கு யாதொரு சிரமமும் ஏற்படாது; அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். 15:49 ‘திண்ணமாக நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்’ என்பதை என் அடிமைகளுக்கு (நபியே!) நீர் அறிவித்து விடும்! 15:50 ‘அத்துடன் என்னுடைய வேதனை மிகவும் துன்புறுத்தும் வேதனையாய் இருக்கும்’ என்பதையும் அறிவித்துவிடும். 15:51 மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக!” 15:52 அவ்விருந்தாளிகள், “உம் மீது சாந்தி நிலவுவதாக!” என்று கூறி அவரிடம் வந்தபோது “உங்களைக் குறித்து எங்களுக்குப் பயமாக இருக்கிறது!” என்று அவர் கூறினார். 15:53 அதற்கு அவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்! அறிவுக் கூர்மையுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உமக்கு நாங்கள் அறிவிக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள். 15:54 அதற்கு இப்ராஹீம், “இந்தத் தள்ளாத வயதிலா எனக்கு (குழந்தைப்பேறு பற்றி) நற்செய்தி அறிவிக்கின்றீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட நற்செய்தியை அறிவிக்கிறீர்கள் என்பதைச் சற்று சிந்தியுங்கள்!” என்று கூறினார். 15:55 அதற்கு அவர்கள், “நாங்கள் சத்தியமான நற்செய்தியைத்தான் உமக்கு அறிவிக்கின்றோம்; நீர் நம்பிக்கை இழந்துவிடாதீர்!” என்று பதில் கூறினார்கள். 15:56 “வழிபிறழ்ந்தவர்கள் தாம் தம் இறைவனின் கருணை குறித்து நம்பிக்கையிழப்பார்கள்” என்று இப்ராஹீம் கூறினார். 15:57 பிறகு, “இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பவர்களே! உங்கள் வருகையின் முக்கிய நோக்கம் என்ன?” என்று அவர் வினவினார். 15:58 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “குற்றம் புரிந்த சமுதாயத்தினரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். 15:59 ஆனால் லூத்துடைய குடும்பத்தார்கள் விதிவிலக்கானவர்கள். திண்ணமாக, அவர்கள் அனைவரையும் நாம் காப்பாற்றுவோம்! 15:60 ஆனால், அவருடைய மனைவியைத் தவிர! (அவளைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “வேதனையை அனுபவிக்க) தங்கியிருப்பவர்களுள் அவளும் ஒருத்தியாவாள் என்று நாம் விதித்துவிட்டோம்.” 15:61 பிறகு அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, 15:62 “நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே” என்று லூத் கூறினார். 15:63 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இல்லை! எதனைக் குறித்து இவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்களோ அதனையே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். 15:64 நாங்கள் சத்தியத்துடன் உம்மிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம். 15:65 எனவே, நீர் இரவு சற்று இருக்கும்போதே உம்முடைய குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வெளியேறிவிடும்; மேலும், நீர் அவர்களைப் பின்தொடர்ந்தே செல்லும்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள்!” 15:66 மேலும், விடிவதற்குள் இவர்கள் அனைவரும் வேரோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நமது இந்த முடிவை நாம் திட்டவட்டமாக அவருக்கு அறிவித்து விட்டோம். 15:67 (இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர். 15:68 லூத் கூறினார்; “(சகோதரர்களே!) இவர்கள் என்னுடைய விருந்தாளிகள்; என்னை அவமானப்படுத்திவிடாதீர்கள்; 15:69 அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்!” 15:70 அதற்கு அவர்கள், “ஊர் உலகத்துக்கெல்லாம் நீர் வக்காலத்து வாங்க வேண்டாமென்று நாம் பலமுறை உம்மைத் தடுக்கவில்லையா?” என்றார்கள். 15:71 அதற்கு லூத், “நீங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென்றால் இதோ என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர்!” என்று கூறினார். 15:72 (நபியே!) உம்முடைய உயிர் மீது ஆணையாக! சந்தேகமின்றி அவர்கள் ஒருவிதமான மயக்கத்தில் சிக்கி, அதில் தங்களை மறந்து தட்டழிந்து கொண்டிருந்தார்கள். 15:73 இறுதியில் விடியும் வேளையில் பயங்கரமான பேரோசை ஒன்று அவர்களைத் தாக்கியது! 15:74 மேலும், நாம் அவ்வூரைத் தலைகீழாகப் புரட்டினோம்; அவர்கள் மீது சுடப்பட்ட கற்களைப் பொழியச் செய்தோம். 15:75 திண்ணமாக, இந்நிகழ்ச்சிகளில் நுணுக்கமாய் சிந்திப்பவர்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. 15:76 மேலும், இந்த (நிகழ்ச்சி நடைபெற்ற) இடம் முதன்மைச் சாலையிலேயே அமைந்துள்ளது. 15:77 நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. 15:78 திண்ணமாக, ‘அய்கா’ வாசிகள் அக்கிரமக்காரர்களாய் இருந்தார்கள். 15:79 எனவே, நாம் அவர்களையும் பழி வாங்கினோம் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்)! இவ்விரு சமூகத்தாரின் (பாழடைந்துபோன) பகுதிகள் அனைவரும் அறியக்கூடிய பாதையில் இருக்கின்றன. 15:80 “ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். 15:81 நாம் நம்முடைய வசனங்களை அவர்களுக்கு அருளி (நம்முடைய சான்றுகளைக் காட்டி)னோம். ஆனால், அவர்கள் அவை அனைத்தையும் புறக்கணித்துக் கொண்டேயிருந்தார்கள். 15:82 மலைகளைக் குடைந்து, வீடுகள் அமைத்து அவற்றில் (எவ்வித அச்சமுமின்றி) நிம்மதியாக இருந்தார்கள். 15:83 இறுதியில் கடுமையான பேரோசையொன்று அதிகாலையில் அவர்களைத் தாக்கியது! 15:84 அப்போது அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. 15:85 நாம் வானங்களையும், பூமியையும் இன்னும் அவற்றில் இருக்கின்ற அனைத்தையும் சத்தியத்தின் அடிப்படையிலேயே அன்றி படைக்கவில்லை. திண்ணமாக, இறுதித் தீர்ப்பு நாள் வரத்தான் போகிறது! எனவே (நபியே!) நீர் (அவர்களுடைய முறையற்ற செயல்களை) பொருட்படுத்தாமல் கண்ணியமான முறையில் விட்டுவிடும்! 15:86 திண்ணமாக, உம் அதிபதி அனைத்தையும் படைத்தவனும் நன்கறிந்தவனுமாவான். 15:87 திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம். 15:88 நாம் இம்மக்களில் பலதரப்பட்டவர்களுக்கு அளித்திருக்கும் வாழ்க்கை வசதிகளை நீர் ஏறிட்டும் பார்க்காதீர்! இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். (இவர்களை விட்டுவிட்டு) நம்பிக்கையார்களின்பால் பணிவுடனும் கனிவுடனும் இருப்பீராக! 15:89 “திண்ணமாக, நான் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கக்கூடியவனே!” என்று (சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களிடம்) நீர் கூறிவிடும். 15:90 இந்த எச்சரிக்கை, பிளவை ஏற்படுத்தியவர்களுக்கு நாம் அனுப்பியிருந்த எச்சரிக்கையைப் போன்றதாகும். 15:91 அவர்களோ (தங்களுடைய) வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து விட்டிருந்தார்கள். 15:92 உம் இறைவன் மீது ஆணையாக, இவர்கள் அனைவரையும் நாம் நிச்சயமாக விசாரிப்போம்! 15:93 இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று. 15:94 எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்! 15:95 (உம்மை) ஏளனம் செய்கின்ற இந்த மக்களைக் கவனித்துக்கொள்ள உமக்காக நாமே போதுமாக இருக்கின்றோம். 15:96 அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் கடவுளாக்குகின்றவர்கள் விரைவில் அறிந்துகொள்ளத்தான் போகின்றார்கள். 15:97 (உம்மைக் குறித்து) இவர்கள் கூறும் கூற்றுகளால் உமது உள்ளம் வருந்துவதை திண்ணமாக நாம் அறிவோம். 15:98 (அதற்கான நிவாரணம் இதுதான்:) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! அவன் முன் சிரம்பணிபவராய்த் திகழ்வீராக! 15:99 மேலும், கட்டாயம் வரக்கூடிய அந்தக் கடைசி நேரம் வரை உம் இறைவனுக்கு அடிபணிந்து கொண்டிருப்பீராக!
அத்தியாயம்  அந்நஹ்ல்  16 : 1-50 / 128
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
16:1 வந்துவிட்டது, அல்லாஹ்வின் கட்டளை! எனவே, அதற்காக நீங்கள் அவசரப்படாதீர்கள்! இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் தூய்மையானவனும், உயர்ந்தவனும் ஆவான். 16:2 அவன் இந்த ரூஹை* வானவர்களின் மூலம், தனது கட்டளையினால் தான் விரும்பும் அடியார்கள் மீது இறக்கி வைக்கின்றான்; (இந்த ஏவுரையுடன் மக்களை) எச்சரிக்கை செய்யுங்கள்: ‘நிச்சயமாக, வணக்கத்திற்குரிய இறைவன் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே, எனக்கே அஞ்சுங்கள்!’ 16:3 அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கின்றான். இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் மிகவும் மேலானவன். 16:4 அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான்! இப்போது அந்த மனிதன் இறைவனுக்கு எதிராக வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாகி விட்டான். 16:5 மேலும், அவன் கால்நடைகளையும் படைத்தான்! அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது; உணவும் இருக்கிறது; இன்னும் பல பயன்களும் இருக்கின்றன. 16:6 மேலும், மாலை நேரத்தில் அவற்றை நீங்கள் ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவற்றை நீங்கள் ஓட்டிச் செல்லும் போதும் அவை உங்களுக்கு அழகாகக் காட்சியளிக்கின்றன. 16:7 மேலும், மிகவும் சிரமப்பட்டே தவிர உங்களால் அடைய இயலாத இடங்களுக்கெல்லாம் அவை உங்கள் சுமைகளைச் சுமந்து செல்கின்றன. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும் கருணையும் உடையவனாயிருக்கின்றான். 16:8 மேலும், குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள் ஆகியவற்றையும் அவன் படைத்தான்; அவற்றின் மீது நீங்கள் பயணம் செய்ய வேண்டும்; மேலும், அவை உங்கள் வாழ்க்கையின் அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதற்காக! இன்னும் நீங்கள் அறிந்தேயிராத பலவற்றை (உங்கள் நன்மைக்காக) அவன் படைக்கின்றான். 16:9 மேலும், கோணலான பல வழிகள் இருக்கும் நிலையில், நேரிய வழியினைக் காண்பிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டியிருப்பான். 16:10 அவனே வானத்திலிருந்து உங்களுக்காக மழையை இறக்கினான். அதனை நீங்களும் நன்கு அருந்துகின்றீர்கள்; மேலும், அதிலிருந்து உங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக புற்பூண்டுகளும் முளைக்கின்றன. 16:11 மேலும், அந்த நீரைக் கொண்டு பயிர்களை முளைக்கச் செய்கின்றான். மேலும், ஜைத்தூன் மற்றும் பேரீச்சை மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், விதவிதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது. 16:12 மேலும், உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன. 16:13 மேலும், பூமியில் உங்களுக்காகப் பல்வேறுபட்ட நிறங்களும் நன்மைகளும் கொண்ட பொருள்களை அவன் படைத்திருக்கின்றான். இவை அனைத்திலும் திண்ணமாக, படிப்பினை பெறும் மக்களுக்கு அரிய சான்று உண்டு. 16:14 அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதையும் நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் இருக்கின்றன. 16:15 மேலும், பூமியில் மலைகளை (முளைகளாக) அவன் ஊன்றினான்; உங்களோடு சேர்ந்து அது சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக! மேலும், அவனே ஆறுகளை ஓடச் செய்தான்; இயற்கைபூர்வமான பாதைகளையும் அமைத்துத் தந்தான்; நீங்கள் நேர்வழியினைப் பெற வேண்டும் என்பதற்காக! 16:16 மேலும் (பூமியில்) வழிகாட்டும் அடையாளங்களையும் அமைத்தான். நட்சத்திரங்களின் வாயிலாகவும் மக்கள் நேரான வழியினை அடைந்துகொள்கின்றனர். 16:17 ஆகவே, படைக்கின்றவனும் படைக்காதவனும் சமமா வார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? 16:18 அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 16:19 நீங்கள் இரகசியமாய்ச் செய்வதையும், வெளிப்படையாய்ச் செய்வதையும் அல்லாஹ் நன்கறிகின்றான். 16:20 மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு எவர்களை(த் தெய்வங்களாக) மக்கள் அழைக்கின்றார்களோ, அவர்கள் எந்தப் பொருளுக்கும் படைப்பாளர்கள் அல்லர். மாறாக, அவர்களே படைக்கப்பட்டவர்களாவர். 16:21 அவர்கள் இறந்து போனவர்களே தவிர உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் எப்போது (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். 16:22 உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; ஆயினும், மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் நிராகரிப்பின் உறை விடமாய் உள்ளன. மேலும், அவர்கள் தற்பெருமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். 16:23 இவர்கள் மறைமுகமாகவும், வெளிப் படையாகவும் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். அகந்தை கொள்வோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை. 16:24 “உங்கள் இறைவன் எதை இறக்கியருளியுள்ளான்?” என்று எவரேனும் அவர்களிடம் கேட்டால், “இவையெல்லாம் முற்காலத்தவர்களின் கட்டுக்கதைகள்” என்றே அவர்கள் கூறுகின்றார்கள். 16:25 இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்! 16:26 இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் பலரும் (சத்தியத்தை வீழ்த்துவதற்காக இவ்வாறே) சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சிக் கட்டடத்தை அடியோடு பெயர்த்துவிட்டான்! மேலிருந்து அதனுடைய முகடு, அவர்களின் தலைமீது விழுந்தது. மேலும், அவர்கள் சற்றும் எண்ணிப்பாராத திசையிலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. பிறகு மறுமைநாளில் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்! 16:27 மேலும், அவர்களிடம் கேட்பான்: “இப்பொழுது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்காகத்தானே நீங்கள் சத்திய சீலர்களுடன் மோதிக் கொண்டிருந்தீர்கள்?” அறிவு வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “இன்று இழிவும், துர்பாக்கியமும் நிராகரிப்பாளர்களுக்கே!” 16:28 அவர்கள் எத்தகையவர்களென்றால், தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (வரம்பு மீறும் போக்கை விட்டுவிட்டு) சரணடைந்து “நாங்கள் எந்தக் குற்றமும் செய்து கொண்டிருக்கவில்லையே?” என்று கூறுவார்கள். அதற்கு (வானவர்கள்) பதில் கூறுவார்கள்: “செய்து கொண்டிருக்கவில்லையா...? அல்லாஹ் உங்களுடைய இழிசெயல்களை நன்கறிந்திருக்கின்றான். 16:29 இப்பொழுது நரக வாயில்களிலே நுழையுங்கள்! அங்கே நீங்கள் என்றென்றும் வீழ்ந்துகிடக்க வேண்டும்.” உண்மையில் ஆணவம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும். 16:30 (மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: “உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)” என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும். 16:31 அது நிலைத்திருக்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறே கூலி வழங்குகின்றான். 16:32 அவர்கள் எத்தகையவர்களென்றால், தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக சுவனத்தில் நுழையுங்கள்!” 16:33 (நபியே!) இப்போது இவர்களிடம் வானவர்கள் வருவதைத் தவிர அல்லது உம் அதிபதியின் தீர்ப்பு வருவதைத் தவிர வேறு எதையேனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா? இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் இவ்வாறே (ஆணவப் போக்கினை) மேற்கொண்டு வந்தார்கள். பிறகு அல்லாஹ் அவர்களுக்கு யாதொரு அநீதியும் இழைக்கவில்லை; ஆனால், அவர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். 16:34 எனவே, அவர்களுடைய இழிசெயல்களின் கேடுகள் அவர்களையே பற்றிக்கொண்டன. மேலும், அவர்கள் எதனைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. 16:35 இந்த இணைவைப்பாளர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதையர்களும் அவனை விடுத்து வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம். அவனது கட்டளையின்றி எதனையும் விலக்கப்பட்டதாய் ஆக்கியிருக்கமாட்டோம்.” இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் இத்தகைய சாக்குபோக்குகளைத்தான் கூறிக்கொண்டிருந்தார்கள். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர வேறு ஏதேனும் பொறுப்பு தூதர்கள் மீது உண்டா? 16:36 மேலும், நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம். மேலும், “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; தாஃகூத்துக்கு அடிபணிவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!” என்று (அவரின் வாயிலாக அனைவரையும்) எச்சரித்தோம். அதன் பின்னர் அவர்களில் சிலருக்கு அல்லாஹ் நேர்வழியை அளித்தான். வேறு சிலர் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. எனவே, பூமியில் சுற்றித்திரிந்து பாருங்கள் பொய்யாக்கியவர்களின் கதி என்னவாயிற்று என்பதை! 16:37 (நபியே!) அவர்கள் நேர்வழி அடைய வேண்டும் என்று நீர் எவ்வளவுதான் ஆர்வம் கொண்டாலும் சரியே, அல்லாஹ் எவரை வழிபிறழச் செய்கின்றானோ அவருக்குத் திண்ணமாக அவன் நேர்வழியைக் காட்டுவதில்லை. மேலும், இத்தகையோர்க்கு யாராலும் உதவி செய்ய இயலாது. 16:38 இவர்கள், அல்லாஹ்வின் பெயரில் அழுத்தமான சத்தியங்கள் செய்து கூறுகின்றார்கள், “இறந்துவிடுகின்ற எவரையும் அல்லாஹ் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்யமாட்டான்” என்று! ஏன் எழுப்பமாட்டான்! இது ஒரு வாக்குறுதியாயிற்றே! இதனை நிறைவேற்றுவதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கியுள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 16:39 (இறந்தவர்களை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வது) இவர்கள் எதனைப் பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களோ அதனை அல்லாஹ் அவர்களுக்குத் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதற்காகவும் மேலும், சத்தியத்தை மறுப்பவர்கள் தாங்கள் பொய்யர்களாக இருந்ததை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவு மேயாகும். 16:40 (இவ்வாறு எழுப்புவது சாத்தியமே; ஏனெனில்) நாம் ஒரு பொருளை உருவாக்க நாடிவிட்டால் ‘ஆகிவிடு!’ என்று மட்டும்தான் ஆணையிடுகின்றோம்; உடனே அது ஆகிவிடுகின்றது. 16:41 எவர்கள் கொடுமைக்கு ஆளான பிறகு அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தார்களோ அவர்களுக்கு நாம் இவ்வுலகிலேயே நல்ல வசிப்பிடத்தை வழங்குவோம். மேலும், மறுமையின் கூலியோ அதைவிட மிகவும் மகத்தானதாகும். அவர்கள் (எத்தகைய நல்ல முடிவு தங்களுக்குக் காத்திருக்கின்றது என்பதை) அறிந்திட வேண்டுமே! 16:42 (கொடுமைக்கு ஆளான) அந்த மக்கள் பொறுமையைக் கைக்கொண்டு தம் அதிபதியை முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள். 16:43 (நபியே!) நாம் உமக்கு முன்பும் மனிதர்களையே தூதர்களாக அனுப்பிவைத்தோம். அவர்களுக்கு நம்முடைய செய்திகளை (வஹியை) அறிவித்துக் கொண்டிருந்தோம். எனவே, நீங்கள் அறியாதவர்களாய் இருந்தால் வேத அறிவு வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்! 16:44 முன் சென்ற அத்தூதர்களுக்குத் தெளிவான சான்றுகள் மற்றும் வேதங்களை வழங்கி அவர்களை அனுப்பி வைத்திருந்தோம். மேலும், இப்பொழுது இந்நல்லுரையை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கின்றோம். எதற்காகவெனில் மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அறிவுரையை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும், அவர்களும் (சுயமாக) சிந்தித்துணர வேண்டும் என்பதற்காகவும்! 16:45 இனி எவர்கள் (தூதரின் அழைப்புக்கு எதிராக) தீய சூழ்ச்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ் தங்களை பூமி விழுங்கும்படிச் செய்திடுவான் அல்லது எங்கிருந்து வேதனை வரும் என்று அவர்கள் சற்றும் ஊகிக்கவில்லையோ அங்கிருந்து அல்லாஹ் தங்கள் மீது வேதனையைக் கொண்டு வந்து விடுவான் 16:46 அல்லது அவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று அவ்வேதனை தங்களைப் பிடித்துவிடும் அல்லது தங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் பற்றி அஞ்சிக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை மும்முரமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும் (என்பன போன்ற பேரபாயங்கள் ஏற்படாது) என அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா? 16:47 (அவன் என்ன செய்ய நாடினாலும்) அவனை இயலாமைக்குள்ளாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும், பெரும் கிருபையும் கொண்டவனாக இருக்கின்றான். 16:48 அல்லாஹ் படைத்துள்ள பொருள்களுள் எதனையும் இவர்கள் பார்க்கவில்லையா அவற்றின் நிழல்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் அல்லாஹ்வின் திருமுன் எவ்வாறு பணிந்து விழுகின்றன என்பதை! இப்படி அனைத்தும் பணிவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 16:49 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும், அனைத்து வானவர்களும் அல்லாஹ்வின் திருமுன் சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஆணவம் கொள்வதில்லை. 16:50 அவர்கள் தங்களுக்கு மேலே இருக்கின்ற அதிபதிக்கு அஞ்சுகின்றார்கள். தங்களுக்கு இடப்படும் கட்டளைக்கு ஏற்ப செயல்படுகின்றார்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)