அத்தியாயம்  யூஸுஃப்  12 : 53-111 / 111
12:53 மேலும், நான் என்னைத் தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், திண்ணமாக மனித மனம், தீயவற்றை அதிகமாக தூண்டிவிடக்கூடியதாகும்; ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் தவிர! திண்ணமாக, என் இறைவன் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெரும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.” 12:54 அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: “இப்போது நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.” 12:55 அதற்கு யூஸுஃப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார். 12:56 மேலும், இவ்வாறு நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார். நாம் விரும்புகின்றவர்கள் மீது நமது கருணையைப் பொழிகின்றோம். நல்லவர்களின் கூலியை நாம் வீணாக்கிட மாட்டோம். 12:57 மேலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறப்புடையதாகும். 12:58 பிறகு யூஸுஃபின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்து அவருடைய அவைக்குச் சென்றார்கள். அப்போது அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை. 12:59 யூஸுஃப், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்துவிட்டு (அவர்கள் புறப்படும் நேரத்தில்) கூறினார்: “உங்கள் தந்தைவழிச் சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் எவ்வளவு நிறைவாக அளந்து தருகின்றேன்; எப்படிச் சிறந்த முறையில் விருந்துபசாரம் செய்பவனாக இருக்கின்றேன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? 12:60 நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிடில், இனி என்னிடத்திலிருந்து உங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. ஏன், என் அருகிலும்கூட நீங்கள் வரக்கூடாது.” 12:61 அதற்கு அவர்கள், “அவரை எங்களுடன் அனுப்புவதற்காக அவருடைய தந்தையின் சம்மதத்தைப் பெற முயல்வோம். கண்டிப்பாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள். 12:62 யூஸுஃப், தம் பணியாட்களிடம் “தானியத்துக்காக அவர்கள் கொடுத்த சரக்குகளை அவர்களுடைய பொதிகளிலேயே (மறைத்து) வைத்து விடுங்கள்!” என்று கூறினார். அவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றதும் (மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்ட) பொருட்களை அறிந்து கொள்ளக்கூடும். (மேலும், இந்தப் பேருதவிக்கு நன்றியுள்ளவர்களாகக் கூடும்) மேலும், அவர்கள் திரும்பி வரவும் கூடும் (எனும் நம்பிக்கையில் யூஸுஃப் இவ்வாறு செய்தார்.) 12:63 அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வரும்போது, “எங்கள் தந்தையே! (இனிமேல்) நமக்குத் தானியம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரையும் அனுப்பி வையுங்கள், நாங்கள் தானியம் வாங்கி வருகின்றோம். மேலும், அவரைப் பாதுகாக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று கூறினார்கள். 12:64 அதற்கு யஃகூப், “இதற்கு முன் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் உங்களை நான் நம்பியது போன்று இவர் விஷயத்தில் இப்பொழுது உங்களை நான் நம்புவேனா? அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாதுகாவலன்; அவன் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன்” என்று பதில் கூறினார். 12:65 பின்னர் அவர்கள் தம் பொதிகளை அவிழ்த்தபோது அவர்களின் சரக்குகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு “எங்கள் தந்தையே! இனி நமக்கு என்ன வேண்டும்? இதோ (பாருங்கள்!) நம்முடைய சரக்குகள் நம்மிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. (நாங்கள் சென்று) நமது குடும்பத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்; மேலும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்வோம்; மேலும், ஓர் ஒட்டகச் சுமையளவு தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம். இந்த அளவு அதிக தானியம் எளிதில் கிடைத்துவிடும்” என்று கூறினார்கள். 12:66 அதற்குத் தந்தை கூறினார்: “நீங்கள் கண்டிப்பாக அவரை என்னிடம் (திரும்ப) அழைத்து வந்து விடுவீர்கள் என்று அல்லாஹ்வின் பெயரால் எனக்கு உறுதிமொழி தராதவரை ஒருபோதும் அவரை நான் உங்களுடன் அனுப்ப மாட்டேன்; ஆனால் ஏதேனும் ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர!” அவர்கள் அவ்வாறு அவரிடம் உறுதிமொழி அளித்தபோது, அவர் கூறினார்: “நாம் இவ்வாறு பேசிக் கொள்வதை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்!” 12:67 பிறகு யஃகூப் கூறினார்: “என்னுடைய மக்களே! (எகிப்தின் தலைநகரினுள்) நீங்கள் எல்லோரும் ஒரே வாயில் வழியாக நுழையாதீர்கள்! மாறாக பல்வேறு வாயில்கள் வழியாக நுழையுங்கள். ஆயினும், அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்து உங்களை என்னால் சிறிதும் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறெவருக்கும் இல்லை. நான் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். சார்ந்திருப்பவர்கள் அனைவரும் முழுமையாக அவனைச் சார்ந்திருக்கட்டும்!” 12:68 ஆனால் (நடந்தது இது தான்:) அவர்கள் தம் தந்தை கட்டளையிட்டபடி நகரினுள் (பல்வேறு வாயில்கள் வழியாக) நுழைந்தபோது அவர்களின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக எவ்விதப் பலனையும் அவர்களுக்கு அளித்திடவில்லை. ஆனால் யஃகூபின் மனத்திற்குள் ஒரு சஞ்சலம் இருந்தது. அதனை நீக்குவதற்கு அவராக ஒரு முயற்சி செய்து கொண்டார். மேலும், அவருக்கு நாம் கற்றுத் தந்தவற்றைக் கொண்டு அவர் அறிவுடையவராகவே திகழ்ந்தார். ஆனால், மக்களில் பெரும்பாலோர் (இந்த விஷயத்தின் எதார்த்தத்தை) அறிந்து கொள்வதில்லை. 12:69 அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது அவர் தம் சகோதரரை மட்டுமே தம்மருகே அமர்த்திக் கொண்டார். பிறகு, “நான்தான் (காணாமல் போன) உன்னுடைய சகோதரன்; எனவே, இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீ வருந்தாதே!” என்று கூறினார். 12:70 யூஸுஃப் (தம் சகோதரர்களாகிய) அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வழங்கிட ஏற்பாடு செய்தபின் தம் சகோதரரின் பொதியுனுள் தமது கோப்பையை வைத்துவிட்டார். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “பயணக்கூட்டத்தினரே! நீங்களெல்லோரும் திருடர்கள்!” என உரக்கக் கூவினார். 12:71 அதற்கு அவர்கள் அவரை நோக்கித் திரும்பி வந்து, “உங்களுடைய எந்தப் பொருள் காணாமல் போய்விட்டது?” என்று வினவினார்கள். 12:72 அதற்கு (அரசு ஊழியர்களாகிய) அவர்கள், “அரசரின் அளவுக் கோப்பையைக் காணவில்லை” என்று கூறினார்கள். மேலும் (அந்த ஊழியர்களின் தலைவர் கூறினார்:) “யார் அதனைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை அளவு வெகுமதி உண்டு; அதனை வாங்கித்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.” 12:73 அச்சகோதரர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை என்பதையும், நாங்கள் திருடர்கள் அல்லர் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.” 12:74 அதற்கு அவர்கள், “சரி, நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபணமானால் திருடியவருக்குரிய தண்டனை என்ன?” என்று வினவினார்கள. 12:75 அதற்கவர்கள் “அவருக்குரிய தண்டனை...? எவருடைய மூட்டையில் அந்தப் பொருள் காணப்படுகின்றதோ அவரைப் பிடித்து வைத்துக்கொள்வதே அவருக்குரிய தண்டனையாகும். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு இம்முறையில்தான் நாங்கள் தண்டனை வழங்குவோம்” என்று மறுமொழி கூறினார்கள். 12:76 (அப்போது யூஸுஃப்) தம் சகோதரரின் மூட்டையைச் சோதனையிடுவதற்கு முன் அவர்களின் மூட்டைகளைச் சோதனையிடத் தொடங்கினார். பின்னர் தம் சகோதரரின் மூட்டையிலிருந்து காணாமல் போன பொருளைக் கண்டெடுத்தார். இவ்வாறு (நமது உபாயத்தின் மூலம்) யூஸுஃபுக்கு நாம் உதவினோம். மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை; ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர! நாம் நாடுபவர்களின் தகுதிகளை உயர்த்தி விடுகின்றோம். மேலும், அனைத்து அறிவாளிகளுக்கும் மேலாக ஓர் அறிவாளி இருக்கின்றான். 12:77 அச்சகோதரர்கள் கூறலானார்கள்: “இவர் திருடினார் என்றால் ஆச்சரியம் எதுவுமில்லை; ஏனெனில் இதற்கு முன்பு (யூஸுஃப் எனும்) இவருடைய சகோதரரும் திருடியிருக்கின்றார்.” அவர்களின் இந்தப் பேச்சை யூஸுஃப் தம் மனத்திற்குள் வைத்துக் கொண்டார். உண்மை நிலையை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் கெட்டவர்கள்; மேலும், (என் முன்னிலையில் என்மீது) நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றீர்களோ, அதன் உண்மை நிலையை அல்லாஹ் நன்கறிவான்!” என்று (மெதுவாகக்) கூறினார். 12:78 அவர்கள் கூறினார்கள்: “அரசாதிபதியே! (அஜீஸே!) இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கின்றார். எனவே இவருக்குப் பதிலாக எங்களில் எவரையேனும் நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, உங்களை மிகவும் நல்லவராக நாங்கள் காண்கிறோம்.” 12:79 அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எவரிடத்தில் எங்கள் பொருள் இருப்பதைக் கண்டோமோ, அவரைத் தவிர வேறொருவரை எவ்வாறு நாங்கள் பிடித்து வைத்துக் கொள்ள இயலும்? அவ்வாறு செய்தால் திண்ணமாக நாங்கள் அக்கிரமக்காரர்களாகி விடுவோம்.” 12:80 யூஸுஃபிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் எல்லோரும் தனியாகச் சென்று தங்களுக்கிடையே ஆலோசனை செய்தார்கள். அவர்களில் மூத்தவர் கூறினார்: “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் வாக்குறுதி வாங்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இதற்கு முன்னர் யூஸுஃபின் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, என் தந்தை எனக்கு அனுமதி தரும் வரையில் அல்லது அல்லாஹ் என் விஷயத்தில் ஏதாவது தீர்ப்பு வழங்கும் வரையில் நான் இங்கிருந்து வரவே மாட்டேன்! அவன் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவனாவான். 12:81 நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று கூறுங்கள்: எங்கள் தந்தையே! திண்ணமாக உங்கள் மகன் திருடிவிட்டார். அவர் திருடியதை நாங்கள் பார்க்கவில்லை; ஆனால் எங்களுக்குத் தெரியவந்ததைச் சொல்கின்றோம். மேலும், மறைவில் நடைபெற்ற விஷயங்களை எங்களால் கண்காணிக்க இயலவில்லை. 12:82 நாங்கள் தங்கியிருந்த ஊர் மக்களிடமும் (கேட்டுப் பாருங்கள்!) எந்தப் பயணக் கூட்டத்துடன் நாங்கள் வந்தோமோ அந்தப் பயணக் கூட்டத்திட மும் விசாரித்துப் பாருங்கள்; திண்ணமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்!” 12:83 (இதைக் கேட்ட) தந்தை கூறினார்: “உண்மை என்ன வெனில், உங்கள் மனம் இன்னொரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கி விட்டது. இப்போது நான் அழகிய பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடக் கூடும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், அனைத்துச் செயல்களையும் நுண்ணறிவோடு மேற்கொள்பவனும் ஆவான்!” 12:84 பிறகு அவர், அவர்களை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஐயகோ, யூஸுஃபே!” என்று புலம்பலானார். கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போயிருந்தன. இந்தக் கடும் துன்பத்தை அவர் மனத்திற்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார். 12:85 அதற்கு அவருடைய புதல்வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃப் பற்றி கவலைப்பட்டு அந்தக் கவலையிலேயே உருகிப் போய்விடும் அளவுக்கு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவரை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்களே!” என்று கூறினர். 12:86 அதற்கு அவர் கூறினார்: “என்னுடைய துக்கத்தையும் துயரத்தையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நான் பெற்றிருக்கும் அறிவை நீங்கள் பெற்றிருக்கவில்லை. 12:87 என் பிள்ளைகளே! நீங்கள் சென்று யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரைப் பற்றித் தீர விசாரியுங்கள்; அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள். 12:88 அவர்கள் (எகிப்து சென்று) யூஸுஃபின் அவைக்கு வந்தபோது கூறினார்கள்: “அரசாதிபதியே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; (அவற்றுக்குப் பதிலாக) நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்குத் திண்ணமாக அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.” 12:89 (இதைக் கேட்டதும் பொறுக்க முடியாமல்) யூஸுஃப் கூறினார்: “நீங்கள் அறிவற்றவர்களாய் இருந்தபோது, யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது நீங்கள் அறிந்த விஷயம்தானே!” 12:90 உடனே அவர்கள், “நீர்தானா யூஸுஃப்?” என்று (ஆச்சரியத்துடன் கேட்டனர்.) அதற்கவர், “(ஆம்!) நான்தான் யூஸுஃப். இவர் என் சகோதரர்! அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். திண்ணமாக, எவர்கள் இறையச்சம் கொண்டு, நிலைகுலையாது இருக்கின்றார்களோ அத்தகைய நல்லவர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விடுவதில்லை!” என்று கூறினார். 12:91 அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் அல்லாஹ் எங்களைவிட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான். மேலும், திண்ணமாக நாங்கள் தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள். 12:92 அதற்கு அவர் கூறினார்: “இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னிப்பான். அவன் எல்லோரையும்விட அதிகம் கருணை புரிபவனாவான். 12:93 எனது இந்த அங்கியைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் படச் செய்யுங்கள்; அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிடும். மேலும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” 12:94 அந்தப் பயணக் கூட்டம் (எகிப்தை விட்டு) புறப்பட்டபோது, அவர்களின் தந்தை (கன்ஆன் என்ற ஊரில்) கூறினார்: “திண்ணமாக நான் யூஸுஃபின் நறுமணத்தை உணர்கின்றேன்; முதுமையில் நான் ஏதோ, அறிவிழந்து போய் பேசுவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள்!” 12:95 வீட்டிலுள்ளவர்கள் கூறினர்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (இன்னும்) உங்களுடைய பழைய மனக்குழப்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறீர்கள்.” 12:96 பிறகு நற்செய்தி அறிவிப்பவர் (யஃகூபிடம்) வந்தார்; யூஸுஃபின் அங்கியை அவருடைய முகத்தில் படச்செய்தார். உடனே அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிட்டது! (அப்போது) அவர் கூறினார்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று உங்களிடம் நான் முன்பே கூறவில்லையா?” 12:97 பிறகு அவர்கள் எல்லோரும் “எங்கள் தந்தையே! நீங்கள் எங்கள் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; உண்மையிலேயே நாங்கள் தவறிழைத்தவர்கள்தாம்!” என்று வேண்டினார்கள். 12:98 அதற்கவர், “நான் உங்களுக்காக என் இறைவனிடம் மன்னிப்புக்கோருவேன். திண்ணமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார். 12:99 பிறகு, அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரைத் தம்முடன் அமர்த்திக் கொண்டார். மேலும் (தம் குடும்பத்தார் அனைவரையும் நோக்கி,) “நகரத்தினுள் செல்லுங்கள்! அல்லாஹ் நாடினால் நிம்மதியுடனும் அமைதியுடனும் வாழ்வீர்கள்!” என்றார். 12:100 (நகரத்தில் நுழைந்த பின்னர்) அவர் தம்முடைய தாய் தந்தையரை (தம் அருகிலிருந்த அரியணையின் மீது) அமர வைத்தார். அனைவரும் (தம்மையும் அறியாமல்) அவர் முன் சிரம் பணிந்தார்கள். அப்பொழுது யூஸுஃப் கூறினார்: “என் தந்தையே! நான் முன்னர் கண்ட கனவிற்கு இதுதான் விளக்கமாகும். என் இறைவன் அக்கனவை நனவாக்கிவிட்டான். மேலும் எனக்கு அவன் பேருதவி செய்தான். அதாவது சிறையிலிருந்து எனக்கு விடுதலை அளித்தான். எனக்கும் என்னுடைய சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்திய பின்னரும் உங்களையெல்லாம் பாலைவனச் சிற்றூரில் இருந்து (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்தான். உண்மை யாதெனில், என் இறைவன் மிக நுட்பமான முறையில் தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான். 12:101 என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத் தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!” 12:102 (நபியே!) இவ்வரலாறு நீர் அறியாத செய்திகளைச் சேர்ந்ததாகும். அதனை நாம் உமக்கு வஹியின் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம். யூஸுஃபின் சகோதரர்கள் சதித் திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்தபோது நீர் அவர்களிடையே இருக்கவில்லையே! 12:103 ஆனால், நீர் எவ்வளவுதான் விரும்பினாலும், மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ளக்கூடி யவர்களாய் இல்லை. 12:104 உண்மையில் இதற்காக நீர் அவர்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. இந்தக் குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும். 12:105 வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. இவர்கள் அவற்றைக் கடந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். ஆயினும் அவற்றைக் குறித்து சற்றும் கவனம் செலுத்துவதில்லை. 12:106 அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள். 12:107 அல்லாஹ்வின் வேதனைகளிலிருந்து அவர்களைத் திணற அடிக்கக்கூடிய ஒரு வேதனை அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று இறுதிநாள் அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றார்களா 12:108 நீர் அவர்களிடம் தெளிவாகக் கூறி விடும்: “இதுதான் என்னுடைய வழி; நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் முழுத் தெளிவுடன் (எங்கள் பாதை எது என்பதை அறிந்து) இருக்கின்றோம்; மேலும் அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் எனக்கு எத்தகைய தொடர்பும் இல்லை. 12:109 (நபியே!) உமக்கு முன்னர் (பல்வேறு ஊர்களுக்கு) தூதர்களாக நாம் அனுப்பி வைத்திருந்த அனைவரும் மனிதர்களாகவும் அந்தந்த ஊர்களைச் சார்ந்தவர்களாகவும்தாம் இருந்தார்கள். அவர்களுக்கு நாம் வஹி அறிவித்துக் கொண்டிருந்தோம். பின்னர் இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் சென்றுபோனவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? எவர்கள் (இறைத்தூதர்களின் சொல்லை ஏற்று) இறையச்சத்துடன் வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மறுமை இல்லம் மிகவும் சிறந்ததாகும். (இனியும்) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? 12:110 (முந்திய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால் மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும் தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி இறைத்தூதர்களுக்குக் கிடைத்துவிட்டது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் நமது நியதி இதுதான்:) நாம் யாரை நாடுகின்றோமோ அவர்களைக் காப்பாற்றி விடுகின்றோம். மேலும் குற்றம் புரிந்த மக்களை விட்டு நமது தண்டனை அகற்றப்படுவதே இல்லை. 12:111 முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்தக் குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது; மேலும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் திகழ்கின்றது.
அத்தியாயம்  அர்ரஃத்  13 : 1-18 / 43
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
13:1 அலிஃப், லாம், மீம், றா. இவை இறைமறையின் வசனங்களாகும். மேலும், எது உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும். ஆயினும் (உமது சமுதாயத்தில்) பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்கிறார்கள். 13:2 உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான். இந்த முழு அமைப்பிலுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். அல்லாஹ்தான் இவ்வனைத்துக் காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அவன் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றான்; உங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக! 13:3 அவன்தான் இந்த பூமியை விரித்து, அதில் மலைகளை நாட்டி ஆறுகளை ஓடச் செய்துள்ளான். மேலும், ஒவ்வொரு கனி வகை(தாவரங்)களின் ஜோடிகளையும் அதில் அவனே படைத்து உள்ளான். அவனே இரவை பகலின் மீது போர்த்துகிறான்! சிந்திக்கும் மக்களுக்கு இவை அனைத்திலும் பல சான்றுகள் உள்ளன. 13:4 மேலும், (பாருங்கள்:) அருகருகே அமைந்துள்ள (தனித்தனித் தன்மைகள் கொண்ட) பல பகுதிகள் பூமியில் உள்ளன; திராட்சைத் தோட்டங்களும் உள்ளன; வயல்களும் இருக்கின்றன; பேரீச்சை மரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில ஒற்றையாகவும் வேறு சில இரட்டையாகவும் முளைக்கின்றன. அனைத்திற்கும் ஒரே விதமான நீரே புகட்டப்படுகின்றது. ஆயினும் அவற்றில் சிலவற்றைச் சுவை மிகுந்ததாகவும் சிலவற்றை சுவை குறைந்ததாகவும் ஆக்குகின்றோம். திண்ணமாக, இவை அனைத்திலும் சிந்தித்துணரும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன. 13:5 நீர் ஆச்சரியப்பட வேண்டுமாயின் மக்களின் இந்தக் கூற்றைக் குறித்துதான் ஆச்சரியப்பட வேண்டும்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் புதிதாகப் படைக்கப்படுவோமா?” இவர்கள் தம் இறைவனை நிராகரித்தவர்கள் ஆவர். இவர்களின் கழுத்துகளில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ளன. மேலும், இவர்கள் நரகவாசிகள் ஆவர். அதில் இவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! 13:6 நன்மை வருவதற்கு முன் தீமையை விரைவாகக் கொண்டு வருமாறு இவர்கள் உம்மை வற்புறுத்துகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு முன்னர் (இதேபோன்ற போக்கினை மேற்கொண்டவர்மீது இறைவேதனை இறங்கியதற்கான) படிப்பினைமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றனவே! மக்கள் அக்கிரமம் இழைத்தும்கூட உம் இறைவன் அவர்களை மன்னிப்பவனாக இருக்கின்றான் என்பதும் உண்மைதான்; மேலும், உம் இறைவன் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதும் உண்மைதான். 13:7 (உமது அழைப்பை) ஏற்க மறுத்துவிட்டவர்கள், “இம்மனிதர் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கி வைக்கப்படவில்லை?” என்று கேட்கின்றார்கள். ஆனால், நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். மேலும், ஒவ்வொரு சமூகத்துக்கும் வழி காட்டும் ஒருவர் இருக்கின்றார். 13:8 ஒவ்வொரு கர்ப்பிணியின் கருப்பையில் உள்ளதையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான். 13:9 மறைவான, மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அவன் அறியக் கூடியவனாகவும், மிக உயர்ந்தவனாகவும், (எல்லா நிலையிலும்) மேலானவனாகவும் இருக்கின்றான். 13:10 உங்களில் ஒருவர் மெதுவாகப் பேசினாலும் சரி, உரத்துப் பேசினாலும் சரி, மற்றும் இரவின் இருளில் ஒளிந்திருந்தாலும் சரி, பகலின் ஒளியில் நடந்து கொண்டிருந்தாலும் சரி இவை அனைத்தும் (அல்லாஹ்வைப் பொறுத்துச்) சமமானதே! 13:11 ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர். 13:12 பளீரெனத் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும், ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும், அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தை எழுப்புகின்றான். 13:13 இடி முழக்கம் அவனைப் புகழ்வதோடு அவன் தூய்மையையும் பறைசாற்றுகின்றது. வானவர்களும் அவனுடைய பேரச்சத்தால் நடுங்கிய வண்ணம் அவனைப் புகழ்கின்றார்கள். மேலும், இடிகளை அவன் அனுப்புகின்றான்; தான் நாடுகின்றவர்கள் மீது அவர்கள், அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் (சில சமயம்) அவற்றை விழச் செய்கின்றான். உண்மையில் அவனுடைய சூழ்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். 13:14 அவனை அழைப்பதுதான் சரியானதாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக்கக் கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, “தண்ணீரே, எனது வாயினுள் வந்து விடு!” என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும். 13:15 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கே தலைசாய்க்கின்றன. மேலும், அனைத்துப் பொருட்களின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் அவன் முன்னிலையில் பணிந்து கொண்டிருக்கின்றன. 13:16 வானங்கள் மற்றும், பூமியின் அதிபதி யார் என்று அவர்களிடம் கேளும். “அல்லாஹ்” என்று (அதற்கு நீரே பதில்) கூறும். “உண்மை இவ்வாறிருக்க, அவனை விடுத்து, தமக்கே நன்மையும், தீமையும் அளிக்க சக்தியற்ற கடவுள்களையா நீங்கள் உங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டீர்கள்?” என்று அவர்களிடம் கேளும். “பார்வையற்றவனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருளும் ஒளியும் சமமாகுமா?” என்றும் கேளும். இல்லையெனில், அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கடவுள்களும் அவன் படைத்திருப்பதைப் போல் (எதனையும்) படைத்திருந்து, அதன் காரணமாக இது யாருடைய படைப்போ என்று இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதோ? நீர் கூறும்: “ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல்லாஹ்வே! அவன் தனித்தவனும் அனைத்தையும் அடக்கியாள்பவனுமாவான்!” 13:17 அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும்போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. அல்லாஹ் இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது; எது மக்களுக்குப் பலன் அளிக்கின்றதோ அது பூமியில் தங்கிவிடுகின்றது! இவ்வாறு அல்லாஹ் உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான். 13:18 எவர்கள் தம் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மிகச் சிறந்த நன்மைகள் இருக்கின்றன. எவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லையோ, அவர்கள் உலகத்திலுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் உரிமையாளர்களாய் இருந்தாலும், மேலும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கை அவர்கள் பெற்றிருந்தாலும் (அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக) அவை முழுவதையும் ஈடாகத் தந்துவிடத் தயாராகி விடுவார்கள்! அத்தகையவர்களிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். மேலும், அவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மிகவும் கொடிய இருப்பிடமாகும்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)