அத்தியாயம்  ஹூத்  11 : 84-123 / 123
11:84 மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷûஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. மேலும் அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (இன்று) உங்களை நல்ல நிலையில் நான் காண்கின்றேன். ஆனால் (விரைவில்) துன்பம் சூழும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பீடிக்குமோ என நான் அஞ்சுகின்றேன். 11:85 மேலும், என்னுடைய சமுதாயத்தினரே! நேர்மையான முறையில் முழுமையாய் அளந்து கொடுங்கள்; முழுமையாய் நிறுத்துக் கொடுங்கள்! மேலும் மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துத் தராதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்! 11:86 அல்லாஹ்வினால் மீதப்படுத்தப்பட்ட லாபமே உங்களுக்குச் சிறந்ததாகும் நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின்! ஆயினும் நான் எந்நிலையிலும் உங்களைக் கண்காணிப்பவன் அல்லன்.” 11:87 அதற்கு அவர்கள், “ஷûஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது? உண்மையில் நீர் பெருந்தன்மையும் நேர்மையும் கொண்டவர்தாம்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். 11:88 அதற்கு ஷûஐப் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! நீங்களே சற்று சிந்தியுங்கள். நான் என் இறைவனிட மிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கிறேன். அத்துடன் அவன் தன் சார்பிலிருந்து தூய்மையான உணவையும் எனக்கு வழங்கி இருக்கின்றான். (அதற்குப் பிறகும் உங்களுடைய தவறான செயல்களிலும், தடுக்கப்பட்டவற்றை உண்பதிலும் உங்களோடு எவ்வாறு நான் கூட்டுச் சேர முடியும்?) மேலும், எவற்றைச் செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கின்றேனோ அவற்றை நான் செய்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன். மேலும் (நான் ஆற்ற விரும்புகின்ற அனைத்தும்) அல்லாஹ்வின் பேருதவியைப் பொறுத்தே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்துவிட்டேன்! மேலும், (ஒவ்வொரு விஷயத்திலும்) அவன் பக்கமே நான் திரும்புகின்றேன். 11:89 மேலும், என் சமூகத்தினரே! என்னோடு நீங்கள் கொண்டுள்ள பிணக்கும், பகைமையும் நூஹுடைய சமுதாயத்தினரை அல்லது ஹூத் மற்றும் ஸாலிஹ் உடைய சமுதாயத்தினரைப் பீடித்தது போன்ற வேதனையில் உங்களையும் கொண்டு போய்ச் சேர்த்துவிடக் கூடாது. மேலும், லூத் சமூகத்தினரோ உங்களிலிருந்து வெகு தூரத்தில் இல்லை. 11:90 எனவே, உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! பிறகு அவன் பக்கம் மீளுங்கள்! திண்ணமாக, என் இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின்றான்.” 11:91 அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “ஷûஐபே! நீர் கூறுகின்ற பெரும்பாலான விஷயங்கள் எங்களுக்குப் புரிவதில்லை. மேலும், எங்களுக்கிடையே நீர் வலிமை குன்றியவராக இருப்பதைத்தான் நாங்கள் காண்கிறோம். உம்முடைய குடும்பத்தார் இல்லையென்றால், எப்பொழுதோ உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம்! மேலும் (நாங்கள் உம்மை மதிக்கும் அளவுக்கு) நீர் எங்களிடையே வலிமையுடையவர் அல்லர்!” 11:92 ஷûஐப் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார்களையா அதிக வலிமையுள்ளவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள்? (என்னுடைய குடும்பத்தாருக்கு அஞ்சுகின்றீர்கள்; ஆனால்) அல்லாஹ்வை அலட்சியமாகப் புறக்கணித்து விட்டீர்கள்! திண்ணமாக, என்னுடைய அதிபதி நீங்கள் செய்கின்றவற்றைச் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான். 11:93 என் சமுதாயத்தினரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நான் (எனது வழியில்) செயல்பட்டுக் கொண்டு இருப்பேன். இழிவுறுத்தும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், யார் பொய் உரைக்கின்றார் என்பதையும் விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே, நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!” 11:94 இறுதியில், நமது கட்டளைக்குரிய நேரம் வந்து விட்டது. அப்போது நமது அருளால் நாம் ஷûஐபையும் அவருடைய நம்பிக்கை கொண்ட தோழர்களையும் காப்பாற்றினோம். மேலும், அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கரமான ஓசை தாக்கியது! அவர்கள் தம் ஊர்களில் தலைக்குப்புற வீழ்ந்து மடிந்தனர்; 95 அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பது போல! 11:95 தெரிந்து கொள்ளுங்கள்: இறையருளிலிருந்து மத்யன் வாசிகளும் தூக்கி எறியப்பட்டார்கள்; ஸமூத் இனத்தார் தூக்கி எறியப்பட்டது போன்று! 11:96 மேலும், மூஸாவை ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய அரசுப் பிரமுகர்களிடம் நம் சான்றுகளுடனும், (தூதுத்துவத்திற்கான) வெளிப்படையான அத்தாட்சியுடனும் நாம் அனுப்பி வைத்தோம். 11:97 ஆயினும் அம்மக்கள் ஃபிர்அவ்னுடைய கட்டளையையே பின்பற்றினார்கள் அவனுடைய கட்டளை நேர்மையற்றதாக இருந்தபோதிலும்! 11:98 மறுமைநாளில் அவன் தன் சமுதாயத்தினர் அனைவரையும்விட முன்னணியில் இருப்பான். மேலும் தன் தலைமையில் அவர்களை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். சேருமிடங்களில் எத்துணைக் கொடிய இடமாகும் அது! 11:99 மேலும், அம்மக்கள் மீது இம்மையிலும் சாபம் ஏற்பட்டது. மறுமையிலும் ஏற்பட்டே தீரும்! வழங்கப்படும் வெகுமதிகளில் எத்துணை மோசமான வெகுமதி இது! 11:100 இவை சில ஊர்களைப் பற்றிய வரலாறுகளாகும்; அவற்றை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். அவற்றில் சில இன்றும் இருக்கின்றன; சில முற்றிலும் அழிந்துவிட்டன. 11:101 நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். மேலும் உம் இறைவனின் கட்டளை வந்துவிட்டபோது, அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைத்தவண்ணம் இருந்த அவர்களுடைய கடவுள்கள் அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. நாசத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் அவை அவர்களுக்குத் தரவில்லை. 11:102 மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய தண்டனை இப்படித்தான் இருக்கும்! திண்ணமாக, அவனது தண்டனை வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும். 11:103 உண்மையில், மறுமைநாளின் வேதனை குறித்து அஞ்சும் ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு சான்று இருக்கிறது. அது மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும் நாளாகும். அன்று நடைபெறுகின்ற அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறும். 11:104 அந்நாளைக் கொண்டு வருவதில் நாம் அதிக தாமதம் செய்யப்போவதில்லை; நிர்ணயிக்கப்பட்ட சொற்ப காலத்தைத் தவிர! 11:105 அந்நாள் வரும்போது இறைவனின் அனுமதி இன்றி எந்த மனிதனும் பேச முடியாது. பிறகு அவர்களில் சிலர் துர்பாக்கியவான்களாகவும் வேறு சிலர் நற்பேறுடையவர்களாகவும் இருப்பார்கள். 11:106 எவர்கள் துர்பாக்கியவான்களோ அவர்கள் நரகம் செல்வார்கள்! அங்கு (வெப்பம் மற்றும் தாகத்தின் கடுமையால்) மூச்சிரைக்கக் கூச்சலிடுவார்கள்; கதறுவார்கள். 11:107 வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கு அவர்கள் அதே நிலையிலேயே கிடப்பார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! தான் நாடுவதைச் செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளவனாக அவன் இருக்கின்றான். 11:108 மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். 11:109 எனவே (நபியே!) இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கடவுள்கள் குறித்து நீர் சற்றும் சந்தேகம் கொள்ள வேண்டாம். இவர்களோ முன்பு தம் மூதாதையர் எவ்வாறு ஆராதனை செய்து வந்தார்களோ அவ்வாறே (கண்மூடித்தனமாக) ஆராதனை செய்து வருகிறார்கள். மேலும், திண்ணமாக நாம் இவர்களுக்குரிய பங்கினை யாதொரு குறைவுமின்றி நிறைவாகக் கொடுப்போம். 11:110 நாம் (இதற்கு முன்பு) மூஸாவுக்கும் வேதத்தை அருளியிருக்கின்றோம். அது குறித்தும் கருத்து முரண்பாடு கொள்ளப்பட்டது; (இன்று உமக்கு அருளப்பட்டிருக்கும் இந்த வேதத்தை ஏற்பதில் கருத்து முரண்பாடு கொள்ளப்படுவதைப் போன்று!) உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்படாதிருந்தால், கருத்து முரண்பாடு கொண்டவர்களுக் கிடையே எப்போதோ தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். உண்மை யாதெனில் இவர்கள் இதனைக் குறித்து கடும் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மேலும், மனக்கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள். 11:111 மேலும், உம் இறைவன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை நிறைவாகக் கொடுத்தே தீருவான்! திண்ணமாக, அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் நன் கறிந்தவனாய் இருக்கின்றான். 11:112 எனவே, (நபியே!) நீரும் (நிராகரிப்பையும், கீழ்ப்படியாமையையும் கைவிட்டு, நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் பக்கம்) திரும்பிய உம்முடைய தோழர்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள். மேலும், அடிபணிவதற்கான வரம்புகளை மீறிவிடாதீர்கள். நீங்கள் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் திண்ணமாக உங்கள் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் 11:113 இந்த அக்கிரமக்காரர்களின் பக்கம் சிறிதும் சாய்ந்துவிடாதீர்கள். அவ்வாறு சாய்ந்தால், நரக நெருப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! மேலும் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 11:114 பிறகு (எங்கிருந்தும்) உங்களுக்கு உதவி கிடைக்காது. மேலும், பகலின் இரு ஓரங்களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும். 11:115 மேலும், பொறுமையைக் கைக்கொள்வீராக! நற்செயல்கள் புரிவோரின் கூலியை திண்ணமாக அல்லாஹ் வீணாக்குவதில்லை. 11:116 பூமியில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கக்கூடிய நல்லவர்கள் உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமூகங்களில் இருந்திருக்க வேண்டாமா? அப்படிப்பட்டவர்கள் இருந்தாலும் மிகக் குறைவாக இருந்திருக்கிறார்கள். அவர்களை அம்மக்களிட மிருந்து நாம் காப்பாற்றினோம். ஆனால் அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுகபோக வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தார்கள்; மேலும் குற்றவாளிகளாக இருந்தார்கள். 11:117 மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன். 11:118 உம் இறைவன் நாடினால், நிச்சயம் மனித இனம் முழுவதையும் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு இல்லை.) ஆதலால், இனி அவர்கள் மாறுபட்ட வழிமுறைகளில்தான் சென்று கொண்டிருப்பார்கள். 11:119 மேலும், உம் இறைவன் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்கள் மட்டுமே மாறுபட்ட வழியில் செல்வதிலிருந்து விலகியிருப்பார்கள். இதற்காகவே (தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கிச் சோதித்துப் பார்ப்பதற்காகவே) அவன் அவர்களைப் படைத்துள்ளான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரைக் கொண்டும் திண்ணமாக நான் நரகத்தை நிரப்புவேன் எனும் உம் இறைவனின் வாக்கு நிறைவேறிவிட்டது. 11:120 (நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும், இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன. 11:121 ஆனால், நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நாங்கள் எங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 11:122 விளைவை நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.” 11:123 வானங்கள், பூமி ஆகியவற்றில் மறைந்துள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டனவாகும். மேலும், அனைத்து விவகாரங்களும் அவனிடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன. எனவே, (நபியே!) நீர் அவனுக்கே அடிபணிவீராக! மேலும் அவனையே முழுவதும் சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்து கொண்டிருப்பவை அனைத்தையும் உம் இறைவன் கவனிக்காமல் இல்லை.
அத்தியாயம்  யூஸுஃப்  12 : 1-52 / 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
12:1 அலிஃப் லாம் றா. இவை (தனது கருத்தைத்) தெளிவாக விவரிக்கும் வேதத்தின் வசனங்களாகும். 12:2 இதனை (அரபிகளாகிய) நீங்கள் நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனாக அரபிமொழியில் திண்ணமாக நாம் இறக்கிவைத்துள்ளோம். 12:3 (நபியே!) நாம் இந்தக் குர்ஆனை உமக்கு வஹி மூலம் அருளி, சம்பவங்களையும் உண்மை நிலைகளையும் மிக அழகிய முறையில் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் (இவற்றைப் பற்றி) எதுவும் அறியாதிருந்தீர். 12:4 இதனை நினைவுகூர்வீராக: யூஸுஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என் முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்!” என்று கூறினார். 12:5 அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள். திண்ணமாக, ஷைத்தான் மனிதனின் வெளிப்படையான பகைவனாவான். 12:6 மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யஃகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்.” 12:7 யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன. 12:8 (இந்த வரலாறு இப்படித் தொடங்குகின்றது:) அவருடைய சகோதரர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாய் இருக்கின்றனர். ஆயினும், நாம்தாமே அதிக எண்ணிக்கையுள்ள ஒரு குழுவாக இருக்கின்றோம். திண்ணமாக, நம் தந்தை பெருந் தவறில் இருக்கின்றார். 12:9 எனவே, யூஸுஃபைக் கொன்று விடுங்கள்; அல்லது அவரை எங்காவது கொண்டுபோய் வீசி விடுங்கள்! இவ்வாறு செய்தால்தான் உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் மட்டும் திரும்பும். மேலும், இதன் பின்னர் நீங்கள் நல்ல மனிதர்களாகிவிடுவீர்கள்.” 12:10 அவர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்றுவிடாதீர்கள்! நீங்கள் ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும் என்று இருந்தால், அவரை ஆழமானதொரு கிணற்றில் போட்டுவிடுங்கள்! அவ்வழியே வந்து போகும் பயணிகளில் எவரேனும் அவரை வெளியே எடுத்துக் கொண்டு போகக்கூடும்.” 12:11 (இந்தத் திட்டத்தின்படித் தம் தந்தையிடம் சென்று) அவர்கள் கேட்டார்கள்: “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், அவர் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்பாமலிருக்கக் காரணம் என்ன? 12:12 நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள்; அவர் உண்டு மகிழ்ந்து விளையாடட்டும்! அவரைப் பாதுகாத்திட நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறினார்கள். 12:13 தந்தை கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. மேலும், நீங்கள் அவர் விஷயத்தில் கவனக் குறைவாக இருக்கும்போது அவரை ஓநாய் அடித்துத் தின்றுவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.” 12:14 அதற்கு அவர்கள், “நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது அவரை ஓநாய் தின்று விடுமானால், திண்ணமாக, நாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் அல்லவா ஆகி விடுவோம்!” என்று பதில் கூறினார்கள். 12:15 (இவ்வாறு வற்புறுத்தி) அவரை அழைத்துச் சென்று, ஓர் ஆழமான கிணற்றில் போட்டுவிட வேண்டுமென அவர்கள் முடிவு செய்தார்கள். அப்போது நாம் யூஸுஃபுக்கு அறிவித்தோம்: “ஒரு காலம் வரும்; அப்போது அவர்கள் தங்களுடைய இந்தச் செயல்களின் விளைவுகளை அறியாதிருக்கும் நிலையில் நீர் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பீர்!” 12:16 அந்தி சாயும் நேரத்தில் அழுது புலம்பிக் கொண்டு தங்கள் தந்தையிடம் அவர்கள் வந்து கூறினார்கள்: 12:17 “எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.” 12:18 மேலும், அவர்கள் யூஸுஃபின் சட்டையில் போலி இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்திருந்தார்கள். இதனைக் கேட்ட அவர்களுடைய தந்தை கூறினார்: “அவ்வாறில்லை, உங்கள் மனம் ஒரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கிவிட்டது. சரி, மிக அழகிய முறையில் நான் பொறுமையை மேற்கொள்வேன். நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்.” 12:19 (அங்கு) பயணக் கூட்டமொன்று வந்தது. அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்தவரை அனுப்பி வைத்தார்கள். அவர் (கிணற்றினுள்) தம்முடைய வாளியை விட்டதும் யூஸுஃபைக் கண்டார். உடனே, “இதோ ஒரு நற்செய்தி! இங்கு ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று (உரக்கக்) கூறினார். அவர்கள் அச்சிறுவனை வணிகப் பொருளாகக் கருதி மறைத்துக் கொண்டனர். ஆயினும், அவர்கள் செய்து வந்தவற்றை அல்லாஹ் நன்கறிந்திருந்தான். 12:20 இறுதியாக அவர்கள் அவரை மிக அற்ப விலைக்கு ஒரு சில வெள்ளி நாணயங்களுக்கு விற்று விட்டார்கள்! அவருக்கு விலை நிர்ணயிப்பதில் அவர்கள் அதிகம் எதிர்பார்க்காதவர்களாய் இருந்தார்கள். 12:21 அவரை விலை கொடுத்து வாங்கிய எகிப்தியர் தன் மனைவியிடம் கூறினார்: “இவரைக் கண்ணியமான முறையில் கவனித்துக்கொள்; இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது இவரை நாம் மகனாக ஆக்கிக் கொள்ளலாம்.” இவ்வாறு, அந்த பூமியில் காலூன்றுவதற்கான சூழ்நிலையை யூஸுஃபுக்கு நாம் ஏற்படுத்தினோம். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் தக்க ஏற்பாடு செய்தோம். அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. 12:22 அவர் முழுமையான வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்குத் தீர்மானிக்கும் ஆற்றலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் நல்லவர்களுக்குக் கூலி வழங்குகின்றோம். 12:23 அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தாள்! (ஒரு நாள்) வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தாள். அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்! திண்ணமாக என் ரப் அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். (அப்படியிருக்க இத்தகைய இழிசெயலை நான் செய்வேனா? இத்தகைய) அக்கிரமக்காரர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை!” 12:24 அவள் அவரை அடைய முனைந்து விட்டாள். தன் அதிபதியின் தெளிவான சான்றினை உணராதிருந்தால் அவரும் அவளை அடைய முனைந்திருப்பார்! தீமையையும் மானக்கேடானவற்றையும் அவரை விட்டு விலக்கிவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம். உண்மையிலேயே அவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களுள் ஒருவராவார். 12:25 இறுதியில் யூஸுஃபும், அவளும் (முன்னும் பின்னுமாக) வாயிலை நோக்கி ஓடினார்கள். அவள் பின்புறத்திலிருந்து அவருடைய சட்டையை (இழுத்து)க் கிழித்தாள்! அவ்வேளை வாயிலில், அவளுடைய கணவர் நிற்பதை இருவரும் கண்டார்கள். (அவரைப் பார்த்ததும்) அவள் கூறலானாள்: “உம்முடைய மனைவியிடம் தீய நோக்கத்துடன் நடந்துகொள்ள முயன்றவனுக்குத் தண்டனை என்ன? சிறையில் அடைப்பதையோ, கடும் வேதனையில் ஆழ்த்துவதையோ தவிர வேறு என்னதான் தண்டனை இருக்க முடியும்?” 12:26 அதற்கு யூஸுஃப், “இவள்தான் தவறான வழிக்கு என்னை அழைத்தாள்!” என்று கூறினார். அவளுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் (சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு) சாட்சியம் கூறினார்: “யூஸுஃபுடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொல்வதுதான் உண்மை; அவர் பொய்யராவார்! 12:27 அவருடைய சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் கூறுவது பொய்; அவர் கூறுவது உண்மையாகும்!” 12:28 அவளுடைய கணவர், யூஸுஃபுடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது கூறினார்: “திண்ணமாக, இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சிதான். உண்மை யாதெனில், உங்கள் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானதாகும். 12:29 யூஸுஃபே! இதனைப் பொருட்படுத்தாதீர்!” பிறகு (தன் மனைவியை நோக்கி), “உனது குற்றத்திற்காக நீ மன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் நீதான் உண்மையில் தவறிழைத்திருக்கின்றாய்!” 12:30 நகரத்திலுள்ள பெண்கள், தமக்கிடையே பேசிக் கொள்ளலாயினர்: “அஜீஸுடைய மனைவி தன்(னிடம் அடிமையாய் உள்ள) இளைஞரிடம் தகாத முறையில் நடந்திட முயன்றிருக்கின்றாள். அவர் மீதுள்ள காதல் அவளை நிதானமிழக்கச் செய்து விட்டது! உண்மையில் ஒரு வெளிப்படையான தவறை அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.” 12:31 இவ்வாறு அப்பெண்கள் இழிவாகப் பேசிக் கொள்வதை அவள் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு அழைப்பு அனுப் பினாள். அவர்களுக்காக சாய்விருக்கைகளைக் கொண்ட மண்டபத்தைத் தயாராக்கினாள். மேலும் (விருந்துண்ணும்போது) அப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். (அவர்கள் பழத்தை அறுத்துத் தின்னும் சந்தர்ப்பத்தில், யூஸுஃபை நோக்கி) அவர்களின் முன்னே செல்லும் என சாடை காட்டினாள். அப்பெண்கள் அவரைப் பார்த்ததும் பிரமித்துப் போய் தம் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்) இவர் ஒரு மனிதரே அல்லர்; இவர் சிறப்புக்குரிய ஒரு வானவரே ஆவார்!” என்று (தங்களையும் மறந்து) கூறினர். 12:32 மன்னரின் மனைவி கூறினாள்: “(பார்த்தீர்களா!) எவர் விஷயத்தில் என்னை நீங்கள் பழித்தீர்களோ அவர் இவர்தான்; சந்தேகமில்லாமல், நான்தான் இவரை என் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் இவர் தப்பிவிட்டார்; நான் சொல்வதை இவர் கேட்டு நடக்காவிட்டால் திண்ணமாக சிறையிலடைக்கப்பட்டு, சிறுமைக்குள்ளாவார்!” 12:33 யூஸுஃப் கூறினார்: “என் இறைவனே! எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென என்னை இவர்கள் அழைக்கின்றார்களோ அந்தச் செயலைவிட சிறையே எனக்கு மிகவும் உவப்பானது! மேலும், அவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால், நான் அவர்களுடைய வலையில் சிக்கியிருப்பேன். மேலும், அறியாதவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்” 12:34 அவருடைய இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, அப்பெண்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவரைக் காப்பாற்றினான். திண்ணமாக, அவனே அனைத்தையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். 12:35 பிறகு, (யூஸுஃபுடைய ஒழுக்கத் தூய்மைக்கும், தம் பெண்கள்தாம் தவறிழைத்தவர்கள் என்பதற்கும்) தெளிவான சான்றுகளை அவர்கள் கண்ட பின்பும், சிறிதுகாலம் அவரைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றியது. 12:36 அவருடன், இரு இளைஞர்களும் சிறை புகுந்தார்கள். (ஒருநாள்) அவ்விருவரில் ஒருவர், “நான் திராட்சைச் சாறு பிழிந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். மற்றொருவர் கூறினார்: “நான் என் தலை மீது ரொட்டிகளைச் சுமந்திருப்பதாகவும் அவற்றைப் பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.” (அவ்விருவரும் யூஸுஃபிடம் கூறினர்:) “நீர் இதன் விளக்கத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உம்மை ஒரு நல்ல மனிதராக நாங்கள் காண்கிறோம்.” 12:37 அதற்கு அவர் கூறினார்: “இங்கு உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்பே இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலும், மறுமையை ஏற்காமலும் வாழ்கின்ற சமூகத்தாரின் வழிமுறையைத் திண்ணமாக நான் விட்டுவிட்டேன். 12:38 என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக் மற்றும் யஃகூப் ஆகியோரின் வழிமுறையைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்குவது எங்களுடைய பணி அல்ல. உண்மையிலேயே, (அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் நாம் அடிமைகளல்லர் எனும்) இந்நிலை, நம்மீதும் மனித குலம் அனைத்தின் மீதும் அல்லாஹ் பொழிந்துள்ள ஓர் அருட்பேறாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதற்கு நன்றி செலுத்துவதில்லை. 12:39 என்னுடைய சிறைத் தோழர்களே! (நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!) பல்வேறுபட்ட கடவுளர்கள் சிறந்தவர்களா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? 12:40 அவனை விடுத்து எவற்றுக்கு நீங்கள் அடிபணிந்து வருகின்றீர்களோ அவை யாவும் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களே(தவிர வேறொன்றுமில்லை)! அவற்றை வணங்குவதற்கு எத்தகைய ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாதென்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர். 12:41 என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இதுதான்:) உங்களில் ஒருவர் தம் எஜமான(னாகிய எகிப்து அரச)னுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் கழுவிலேற்றப்படுவார்; பறவைகள் அவருடைய தலையைக் கொத்தித் தின்னும்! நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர்களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.” 12:42 பிறகு, அவ்விருவரில் எவரைக் குறித்து திண்ணமாக அவர் விடுதலையாகி விடுவார் என்று யூஸுஃப் கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான(னாகிய எகிப்தின் அரச)னிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்றார். ஆனால், தன் எஜமானனிடம் (யூஸுஃபை) நினைவுபடுத்தவிடாமல் அவரை ஷைத்தான் மறதியிலாழ்த்தி விட்டான். யூஸுஃப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலே கிடந்தார். 12:43 (ஒருநாள்) அரசன் கூறினான்: “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!” 12:44 அதற்கு அவர்கள், “இவை குழப்பமான கனவுகளாகும். இவை போன்ற கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்லர்” என்றனர். 12:45 அவ்விரு கைதிகளில் விடுதலையடைந்தவர், வெகு காலத்திற்குப் பிறகு (யூஸுஃப் பற்றி) நினைவு வந்தபோது கூறினார்: “நான் இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை(ச்சிறையில் உள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!” 12:46 (அவர் அங்கு சென்று கூறினார்:) “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருப்பதாகவும், மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து போன ஏழு கதிர்களையும் கனவில் கண்டால் அதன் விளக்கம் என்ன என்பதை எங்களுக்குக் கூறுவீராக! நான் இம்மக்களிடம் திரும்பச் செல்ல வேண்டும்; அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்!” 12:47 யூஸுஃப் கூறினார்: “ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்! 12:48 அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர! 12:49 பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!” 12:50 அரசர், “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்றார். (அரசரின்) தூதுவர் வந்தபோது, யூஸுஃப் அவரிடம் கூறினார்: “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, ‘தம் கைகளை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று?’ என்று கேட்டுவாரும். திண்ணமாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான்.” 12:51 பிறகு அரசன் அப்பெண்களிடம் வினவினான்: “நீங்கள் யூஸுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?” அதற்கு அப்பெண்கள், “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்!) நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை” என ஒருமித்த குரலில் கூறினர். அஜீஸின் மனைவி கூறினாள்: “இப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிட்டது. நானே அவரை என் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்தேன். திண்ணமாக, அவர் முற்றிலும் வாய்மையுடையவரே!” 12:52 (யூஸுஃப் கூறினார்): “இதில் எனது நோக்கம் என்ன வெனில், திரை மறைவில் அஜீஸுக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை என்பதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வோரின் சூழ்ச்சிகளை அல்லாஹ் ஒருபோதும் வெற்றியடையச் செய்வதில்லை என்பதையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)