அத்தியாயம்  ஹூத்  11 : 6-83 / 123
11:6 உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11:7 அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.” 11:8 ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் அவர்களுடைய தண்டனையை தாமதப்படுத்தினால் அதனைத் தடுத்து வைத்திருப்பது எது? என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அத்தண்டனை அவர்களிடம் வந்துவிடும் நாளில் அவர்களை விட்டு அதனை யாராலும் தடுத்துவிட முடியாது! மேலும், எதனை அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்! 11:9 மேலும், மனிதனுக்கு எப்போதேனும் நாம் நமது அருட்கொடையை வழங்கிய பிறகு அதனை அவனிடமிருந்து பறித்துக் கொண்டால், திண்ணமாக அவன் நிராசையடைந்து விடுகின்றான். மேலும், நன்றி கெட்டவன் ஆகிவிடுகின்றான். 11:10 மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்துக்குப் பிறகு அவனுக்கு நாம் அருளை வழங்கி இன்புறச் செய்தால், ‘துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன!’ என்று கூறுகின்றான். பிறகு பூரிப்பில் திளைத்தவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் ஆகிவிடுகின்றான்; 11:11 ஆனால் பொறுமையை மேற்கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள்தாம் இத்தகைய குறைபாடு இல்லாதவர்கள். அவர்களுக்குத்தான் மன்னிப்பும் பெரும்கூலியும் இருக்கின்றன. 11:12 (நபியே!) வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை நீர் (எடுத்துரைக்காமல்) விட்டு விடுவது கூடாது! மேலும், ‘ஏதேனும் செல்வக் கருவூலம் இவருக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருடன் யாரேனும் வானவர் வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் இவர்கள் கூறுவதால் உமது நெஞ்சம் சஞ்சலமடைவதும் கூடாது. நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்! அதற்குப் பிறகு அனைத்திற்கும் பொறுப்பேற்பவனாக அல்லாஹ் இருக்கின்றான். 11:13 “இவர்தான் இவ்வேதத்தைப் புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகின்றார்களா? நீர் கூறும்: “அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர யார் யார் (உங்கள் கடவுள்களாக) இருக்கின்றார்களோ அவர்களையும் (முடிந்தால்) உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள்; (அவர்களைக் கடவுள்களாகக் கருதுவதில்) நீங்கள் உண்மையானவர்களாயின்! 11:14 ஆனால், அவர்கள் உங்கள் உதவிக்கு வரவில்லையென்றால், இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே இறக்கியருளப்பட்டிருக்கிறது என்பதையும் மேலும், அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இனியாவது நீங்கள் (இந்த சத்தியத்திற்கு) முற்றிலும் அடிபணிவீர்களா? 11:15 எவர்கள் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் நாடுகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கே நாம் அளித்து விடுகின்றோம்; அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைபாடும் செய்யப்பட மாட்டாது. 11:16 ஆனால், இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறொன்றும் இருக்காது. மேலும், அவர்கள் இவ்வுலகில் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து வந்தவை யாவும் வீணானவை (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)! 11:17 ஒருவர் தன் இறைவனிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கும்போது, மேலும் அதன் பிறகு (அதற்கு வலுவூட்டும் வண்ணம்) வேறொரு சான்றும் தொடர்ந்து இறைவனிடமிருந்து வந்துள்ளபோது, அத்துடன் இதற்கு முன்பே மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் வந்திருக்கும்போது (பிற உலகாயதவாதிகளைப் போன்று இவரும் இதனை மறுக்க முடியுமா?) இத்தகையோர் இதன்மீது நம்பிக்கை கொள்ளத்தான் செய்வார்கள். மேலும், மனித சமூகங்களைச் சேர்ந்த எவரேனும் இதனை மறுத்தால் அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகமாகும். எனவே, (நபியே!) நீர் இதைப்பற்றி எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம். திண்ணமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. 11:18 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிட கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டு வரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் “இவர்கள்தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்” என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். 11:19 இந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுக்கின்றார்கள்; அதனைக் கோணலாக்க விரும்புகின்றார்கள். மேலும், மறுமையை மறுக்கின்றார்கள் 11:20 இப்புவியில் அல்லாஹ்வை இயலாமையிலாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், அல்லாஹ்வுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இருக்கவில்லை! இப்போது இவர்களுக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். இவர்களால் எதையும் செவியுறவும் முடியவில்லை; எதுவும் இவர்களுக்குப் புலப்படவும் இல்லை. 11:21 இவர்கள் தமக்குத் தாமே இழப்பினை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். மேலும், இவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்டிருந்த அனைத்தும் இவர்களை விட்டு மறைந்துவிடும். 11:22 மறுமையில் இவர்கள்தாம் மற்றவர்களைவிட அதிக இழப்பிற்குரியவர்களாய் இருப்பர் என்பதில் ஐயமே இல்லை! 11:23 திண்ணமாக, எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தம் இறைவனுக்கே உரித்தானவர்களாகி விடுகின்றார்களோ அவர்கள்தாம் சுவனவாசிகள்! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். 11:24 இவ்விரு வகையினரின் உவமை இரு மனிதர்களைப் போன்றுள்ளது: ஒருவன் குருடனாகவும் செவிடனாகவும் இருக்கின்றான். மற்றொருவன் பார்வையுடையவனாகவும் செவியுறுபவனாகவும் இருக்கின்றான். இவ்விருவரும் சமமானவராய் ஆக முடியுமா? (இவ்வுவமையின் மூலம்) நீங்கள் எந்த ஒரு படிப்பினையும் பெறுவதில்லையா? 11:25 திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் தூதராக அனுப்பினோம். (அப்போதும் மக்களின் நிலைமை இவ்வாறே இருந்தது. நூஹ் கூறினார்:) நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன். 11:26 அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அணிபணியாதீர்கள்! (இல்லையானால்) துன்புறுத்தும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.” 11:27 (அவருடைய அறிவுரையை) ஏற்க மறுத்த அவருடைய சமுதாயத் தலைவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறல்லர்...! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்விதச் சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில் உங்களைப் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.” 11:28 அதற்கு நூஹ் கூறினார்: “என் சமுதாயத்தினரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றுள்ளேன்; மேலும், அவன் தனது தனிப்பட்ட அருளையும் எனக்கு வழங்கியிருக்கின்றான். ஆனால் அது உங்கள் பார்வைக்குப் புலப்படுவதில்லை; நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை எனில், நாம் அதனை வலிந்து உங்கள் மீது திணிக்க முடியுமா? 11:29 மேலும், என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பொருளும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கின்றார்கள்; ஆனால் நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன். 11:30 மேலும், என் சமுதாயத்தினரே! நான் இவர்களை விரட்டிவிட்டால், அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? இதைக்கூட நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா? 11:31 மேலும், அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், நான் மறைவானவற்றை அறிபவன் என்றும் உங்களிடம் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் வாதிடவில்லை. மேலும், எவர்களை உங்கள் கண்கள் இழிந்தவர்களாய்க் காண்கின்றனவோ அவர்களைக் குறித்து ‘அல்லாஹ் எந்த நன்மையையும் அவர்களுக்கு அளிக்கவில்லை’ என்றும் நான் கூற மாட்டேன் அவர்களின் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கறிகின்றான் அவ்வாறு கூறினால் திண்ணமாக நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்!” 11:32 இறுதியில் அவர்கள் “நூஹே! நீர் எங்களிடம் தர்க்கம் புரிந்துவிட்டீர்! அதுவும் அளவுக்கதிகமாக தர்க்கம் செய்துவிட்டீர்! நீர் உண்மையாளராயின் எந்த வேதனையைப் பற்றி எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறினார்கள். 11:33 அதற்கு மறுமொழியாக நூஹ் கூறினார்: “அல்லாஹ் நாடினால் அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான். (அது வந்துவிட்டால்) அதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு நீங்கள் வலிமையுடையவர்கள் அல்லர். 11:34 உங்களை வழிகேட்டிலாழ்த்திட வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தால், உங்களின் நன்மைக்காக நான் எது கூறினாலும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளித்திடாது. அவன்தான் உங்கள் இறைவன்; அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்!” 11:35 “இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால் நீங்கள் செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளி அல்லன்.” 11:36 மேலும், நூஹுக்கு இவ்வாறு வஹி அனுப்பப்பட்டது: “உம்முடைய சமுதாயத்தினரில் எவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர இனி வேறெவரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்களின் தவறான செயல்களுக்காக நீர் துயரப்பட வேண்டாம். 11:37 மேலும், நமது கண்காணிப்பில் நம் கட்டளைக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டத் தொடங்குவீராக! மேலும், அநீதி இழைத்தவர்களுக்காக என்னிடம் பரிந்துரை செய்யாதீர்! அவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்படுபவர்களேயாவர்”. 11:38 நூஹ் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய சமுதாயத் தலைவர்களில் எவரேனும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர். அதற்கு அவர் கூறினார்: “நீங்கள் எங்களைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கின்றீர்கள் எனில், நீங்கள் சிரிப்பது போன்று நாங்களும் உங்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்! 11:39 இழிவுபடுத்தக்கூடிய வேதனைக்கு யார் ஆளாகப் போகின்றார் என்பதையும், தடுத்து நிறுத்த முடியாத வேதனை யார் மீது இறங்கப் போகின்றது என்பதையும் வெகு விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.” 11:40 இறுதியில் நம்முடைய கட்டளை வந்துவிட்டது; மேலும் அந்த உலை அடுப்பு பொங்கியது. அப்போது நாம் கூறினோம்: “எல்லா வகையான பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை இக்கப்பலில் ஏற்றிக்கொள்வீராக! உம்முடைய குடும்பத்தினரையும் யாரைக் குறித்து முன்னரே கூறப்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர அதில் ஏற்றிக் கொள்வீராக! மேலும், யார்யாரெல்லாம் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களையும் (ஏற்றிக் கொள்வீராக!)” மேலும், நூஹுடன் இறைநம்பிக்கை கொண்டிருந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள்; 11:41 மேலும், நூஹ் கூறினார்: “இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது செல்வதும் நிலை கொள்வதும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே ஆகும். திண்ணமாக, என் அதிபதி பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.” 11:42 அக்கப்பல் அவர்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே!” 11:43 அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” அதற்கு அவர் கூறினார்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து காப்பாற்றக் கூடியது எதுவும் இல்லை; ஆனால், அல்லாஹ் யாருக்குக் கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள்.” இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்! 11:44 பின்னர், “பூமியே! உனது நீர் முழுவதையும் விழுங்கிவிடு; வானமே, நிறுத்திக்கொள்!” என்று கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நீர் வற்றிவிட்டது. கட்டளை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் கப்பல், ஜூதி எனும் மலையில் நிலை கொண்டது; பிறகு கூறப்பட்டது: “ஒழிந்து விட்டார்கள், அக்கிரமம் புரிந்த மக்கள்!” 11:45 நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய்!” 11:46 அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான ‘செயல்’ ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்! அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.” 11:47 உடனே, நூஹ் பணிந்து கூறினார்: “என் இறைவனே! எதைப் பற்றி எனக்கு அறிவு இல்லையோ அதைப்பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டு உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ என்னை மன்னிக்காவிட்டால் மேலும், அருள் புரியாவிட்டால் நான் அழிந்து போய்விடுவேன்!” 11:48 கட்டளை அருளப்பட்டது: “நூஹே! இறங்குவீராக; உம்மீதும், உம்முடன் இருக்கும் சமூகத்தின் மீதும் நம்முடைய சாந்தியும் அருள்வளங்களும் உண்டாகட்டும்! மேலும், உங்களில் வேறு சில சமூகங்களும் (தோன்ற) உள்ளன. அவர்களுக்கு சொற்ப காலத்திற்கான வாழ்க்கை வசதிகளை வழங்குவோம். பிறகு, நம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனை வந்து அவர்களைப் பிடித்துக் கொள்ளும்!” 11:49 (நபியே!) இவை மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரும் இவற்றை அறிந்திருக்கவில்லை; உம்முடைய சமுதாயத்தினரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கே உரியதாகும். 11:50 மேலும், ஆத் சமுதாயத்தினரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத் தவரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. நீங்கள் பொய்யானவற்றைத்தான் (கடவுள்களாக) ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள். 11:51 என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. என்னுடைய கூலி என்னைப் படைத்தவன் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சிந்தித்துணர்வதில்லையா? 11:52 மேலும், என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பின்னர் அவன் பக்கம் திரும்புங்கள்; உங்கள் மீது மழையை அதிகமாகப் பொழியும்படிச் செய்வான். மேலும், உங்களுக்கு வலிமைக்கு மேல் வலிமையை வழங்குவான். எனவே நீங்கள் பாவம் புரிபவர்களாகி (இறைவனுக்கு அடிபணிவதிலிருந்து) முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்!” 11:53 அவர்கள் பதில் கூறினார்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் தெளிவான சான்று எதனையும் கொண்டுவரவில்லை. மேலும், நீர் கூறுவதால் நாங்கள் எங்களுடைய கடவுள்களை விட்டுவிடக் கூடியவர்களல்லர். மேலும், உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களாகவும் இல்லை; 11:54 எங்கள் கடவுள்களில் ஏதோ ஒரு கடவுள் உம்மைத் தாக்கியிருக்கிறது என்றே நாங்கள் கருதுகின்றோம்.” அதற்கு ஹூத் கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அவனுடைய இறைமையில் நீங்கள் இணையாக்குகின்றீர்கள். அவற்றுக்கும் எனக்கும் திண்ணமாக எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றேன்; நீங்களும் சாட்சிகளாய் இருங்கள்! 11:55 நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் எந்தக் குறையும் வைக்காதீர்கள்! பிறகு சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்! 11:56 திண்ணமாக நான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாகிய அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருக்கின்றேன். எந்த உயிரினமானாலும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது! நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான். 11:57 நீங்கள் புறக்கணித்தால் (புறக்கணித்துக் கொள்ளுங்கள்!) எந்தத் தூதுச் செய்தியுடன் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். இனி என் இறைவன் உங்களுக்குப் பகரமாக வேறொரு சமுதாயத்தினரைக் கொண்டு வருவான். நீங்கள் யாதொரு தீங்கும் அவனுக்கு இழைத்திட முடியாது. உறுதியாக என் இறைவன் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.” 11:58 பிறகு நம்முடைய கட்டளை வந்தபோது, நாம் நமது அருளால் ஹூதுக்கும் அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கும் ஈடேற்றம் அளித்தோம்; மேலும் கடுமையான வேதனை யிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம். 11:59 இவர்கள்தாம் ஆத் இனத்தவர்! இவர்கள் தம் இறைவனின் சான்றுகளை மறுத்தார்கள். அவனுடைய தூதர்களின் அழைப்பையும் ஏற்கவில்லை. மேலும், சத்தியத்துக்கு எதிரியான கொடுங்கோலர்கள் ஒவ்வொருவரின் கட்டளையையும் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். 11:60 இறுதியில், இவ்வுலகிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். மறுமைநாளிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகுவார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! ஆத் இனத்தவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! தூக்கி எறியப்பட்டார்கள், ஹூதுடைய சமுதாயத்தினரான ஆத் மக்கள்! 11:61 ஸமூத் இனத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. அவன்தான் உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். மேலும், அதில் உங்களை வாழச் செய்துள்ளான். எனவே, அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பின்னர் அவன் பக்கம் நீங்கள் மீளுங்கள்! திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான். (பிரார்த்தனைகளுக்குப்) பதிலளிப்பவனாக இருக்கின்றான்.” 11:62 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! இதற்கு முன்போ எங்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்குரியவராய் எங்கள் மத்தியில் இருந்தீர்! இப்பொழுதோ எங்கள் மூதாதையர் வணங்கிக் கொண்டிருந்த கடவுள்களை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களைத் தடுக்கின்றீரே? மேலும், நீர் எந்த நெறியின் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதுபற்றிக் கடும் சந்தேகத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். அது எங்களைப் பெரும் மனக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது!” 11:63 அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! இதனையும் கொஞ்சம் சிந்தித்தீர்களா? நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான ஒரு சான்றினைப் பெற்று, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருக்கும் நிலையில் நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? எனக்கு மேலும் இழப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய இயலும்? 11:64 மேலும் என் சமுதாயத்தினரே! (பாருங்கள்) இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம்! உங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றது. எனவே இதனை அல்லாஹ்வின் பூமியில் (சுதந்திரமாய்) மேய்வதற்கு விட்டுவிடுங்கள்; இதற்கு யாதொரு தீங்கும் இழைக்காதீர்கள்! அவ்வாறு தீங்கிழைத்தால், இறைவனின் வேதனை உங்களைப் பீடிப்பதற்கு வெகுநேரம் ஆகாது!” 11:65 ஆயினும், அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள்! அப்போது ஸாலிஹ் (அம்மக்களுக்கு) எச்சரிக்கை செய்தார்: “மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல!” 11:66 இறுதியில், நம் தீர்ப்பு(க்கான வேளை) வந்துவிட்டது. இப்போது, நமது அருளால் ஸாலிஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் காப்பாற்றினோம்; மேலும், அந்நாளின் இழிவிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தோம். திண்ணமாக, உம் இறைவன் மாபெரும் வலிமையுடையவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான். 11:67 அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்துவிட்டனர்; 11:68 அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பதுபோல! தெரிந்து கொள்ளுங்கள்! ஸமூத் இனத்தார் தம் இறைவனை நிராகரித்தார்கள்; தெரிந்து கொள்ளுங்கள்! இறையருளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள், ஸமூத் இனத்தார்! 11:69 மேலும் (பாருங்கள்!) நம்முடைய வானவர்கள் இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்; “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்!” என்றார்கள். அதற்கு, “உங்கள் மீதும் சாந்தி நிலவுக!” என்று இப்ராஹீம் பதிலளித்தார். பிறகு சிறிது நேரத்திற்குள் (அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) வறுத்த கன்றின் மாமிசத்தைக் கொண்டு வந்தார். 11:70 ஆனால், அவர்களின் கைகள் உணவைத் தொடவே இல்லை என்பதை இப்ராஹீம் பார்த்தபோது அவர்களைப் பற்றி அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர்களைக் கண்டு அவர் அஞ்சினார். அதற்கு அவ்வானவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்; திண்ணமாக நாங்கள் லூத் சமூகத்தாரின்பால் அனுப்பப்பட்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். 11:71 அப்போது இப்ராஹீமுடைய மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் (இதனைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) பற்றியும் இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி அறிவித்தோம்! 11:72 அதற்கு அவர் “அந்தோ! என் துர்பாக்கியமே! நானும் முதியவளாகி விட்டேன். என்னுடைய கணவராகிய இவரும் முதுமை அடைந்து விட்டார். இந்நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? திண்ணமாக, இது ஒரு வியப்புக்குரிய செய்தியாய் இருக்கின்றது!” என்று கூறினார். 11:73 வானவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கட்டளை குறித்து வியப்புறுகின்றீரா? இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய வாழ்த்துக்களும் பொழிந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் பெரும் புகழுக்குரியவனாகவும், பெரும் மாட்சிமை உடையவனாகவும் இருக்கின்றான்.” 11:74 இப்ராஹீம் அச்சம் அகன்று (குழந்தைப் பேறு பற்றிய நற்செய்தியால்) அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டபோது, லூத் இனத்தாரைப் பற்றி அவர் நம்மிடம் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டார். 11:75 திண்ணமாக, இப்ராஹீம் இரக்கமுடையவராகவும் மென்மையான உள்ளமுடையவராகவும் இருந்தார். 11:76 மேலும், எந்நிலையிலும் (நம் பக்கம்) மீளக்கூடியவராகவும் இருந்தார்! (இறுதியில் நம் வானவர்கள் அவரிடம் கூறினார்கள்:) “இப்ராஹீமே, இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக! திண்ணமாக, உம் அதிபதியின் கட்டளை வந்தாகிவிட்டது. இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாத வேதனை அவர்களிடம் வந்தே தீரும்!” 11:77 மேலும், நம்முடைய வானவர்கள் லூத்திடம் வந்தபோது அவர் பீதியடைந்தார். மேலும், மனவேதனைக்குள்ளானார். மேலும், கூறலானார்: “இது துன்பமானதொரு நாளாகும்.” 11:78 (இந்த விருந்தாளிகளைக் கண்டதும்) அவருடைய சமுதாயத்தினர் அவரது வீட்டை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் முன்பே தீய செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள். லூத் (அவர்களிடம்) கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உங்களுக்கு மிகவும் தூய்மையானவர்களாவர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! என் விருந்தாளிகள் விஷயத்தில் என்னைக் கேவலப்படுத்தாதீர்கள்! நேர்மையான சிந்தனை கொண்டவர் உங்களில் யாரும் இல்லையா?” 11:79 அதற்கு அவர்கள் “உம்முடைய பெண்மக்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை நீர் நன்கு அறிவீர். மேலும், நாங்கள் எதை விரும்புகின்றோம் என்பதையும் திண்ணமாக நீர் அறிவீர்!” என்று பதிலளித்தார்கள். 11:80 அதற்கு லூத், “அந்தோ! உங்களைத் திருத்துகின்ற அளவுக்கு என்னிடம் வலிமை இருந்திருக்கக் கூடாதா? அல்லது நான் புகலிடம் பெறும் அளவுக்கு ஒரு வலிமைமிக்க துணை எனக்கு இருந்திருக்கக் கூடாதா?” என்று கூறினார். 11:81 அப்பொழுது வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! திண்ணமாக நாங்கள் உம் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம். இவர்கள் உமக்கு எவ்விதத் தீங்கும் அளித்திட முடியாது! எனவே, இரவின் ஒரு பகுதி இருக்கும்போது நீர் உம்முடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிடும். உங்களில் எவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்! ஆனால் உம்முடைய மனைவியை உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்! ஏனெனில், எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?” 11:82 பிறகு நமது கட்டளை(க்குரிய நேரம்) வந்த போது, அந்த ஊரைத் தலைகீழாகப் புரட்டிவிட்டோம்! மேலும், அதன் மீது சுட்டகளிமண் கற்களைத் தொடர்ந்து பொழியச் செய்தோம்; 11:83 அக்கற்கள் ஒவ்வொன்றும் உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது! மேலும் அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை!
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)