அத்தியாயம்  யூனுஸ்  10 : 26-109 / 109
10:26 எவர்கள் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப் புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள். 10:27 மேலும், தீமைகளைச் சம்பாதித்தவர்கள், அத் தீமைக்கேற்பக் கூலி பெறுவார்கள். மேலும், அவர்களை இழிவு சூழ்ந்திருக்கும்; அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இரவின் இருட்திரைகளால் மூடப் பட்டிருப்பது போன்று அவர்களின் முகங்களில் இருள் படிந்திருக்கும். அவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 10:28 மேலும், ஒரு நாளில் அவர்கள் அனைவரையும் (நம்முடைய நீதிமன்றத்தில்) நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இறைவனுக்கு இணைவைத்தவர்களிடம், “நீங்களும், நீங்கள் ஏற்படுத்திய கடவுளர்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். பின்னர் அவர்களுக்கிடையிலிருந்த அறிமுகமற்ற நிலையை அகற்றிவிடுவோம். அப்போது அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்கள், “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை என்று கூறுவார்கள்; 10:29 எங்களுக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சி போதுமானது. (நீங்கள் எங்களை வணங்கியிருந்தாலும்) உங்கள் வணக்கத்தை நாங்கள் அறவே அறியாதிருந்தோம்’ என்றும் கூறுவார்கள். 10:30 அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த வினைக(ளுக்குரிய கூலிக)ளை அனுபவிப்பான். மேலும், தம்முடைய உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடம் அவர்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் கற்பனை செய்து வந்த பொய்(த் தெய்வங்)கள் அனைத்தும் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும்! 10:31 (நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும், உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? மேலும், அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் (உண்மைக்கு மாறாக நடப்பதை) தவிர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேளும். 10:32 ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன்! இந்த உண்மையைக் கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன எஞ்சியிருக்கும்? நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்? 10:33 (நபியே! பாரும்:) இவ்வாறு இறைக்கட்டளைக்கு மாறு செய்யும் போக்கினை மேற்கொள்வோர் குறித்து “திண்ணமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்ற உம் இறைவனின் வாக்கு உண்மையாகிவிட்டது. 10:34 “நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும் நீர் கூறும்: “அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?” 10:35 (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளர்களில் சத்தியத்தின் பக்கம் வழி காட்டக்கூடியவர் எவரேனும் உண்டா?” நீர் கூறும்: “அல்லாஹ்தான் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகின்றான். ஆகவே, சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா? அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெறமுடியாதவன் பின்பற்றத் தகுந்தவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எப்படியெல்லாம் (தவறான) முடிவுகளை எடுக்கின்றீர்கள்!” 10:36 உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான். 10:37 இந்தக் குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று; உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும், ‘அல் கிதாபின்’ விளக்கமாகவும் திகழ்கின்றது. இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 10:38 என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக் குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!” 10:39 உண்மையில் எந்த வேதத்தை இவர்கள், தம் அறிவால் புரிந்து கொள்ளவில்லையோ அந்த வேதத்தையும், அது விடுக்கும் எச்சரிக்கையின் இறுதி விளைவு அவர்களிடம் வராத நிலையில் அதையும் (வெறும் கற்பனையின் அடிப்படையில்) பொய் என்று கூறுகின்றார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன் சென்றுபோன மக்களும் பொய்யென்று கூறி வந்தனர். எனவே, அந்த அக்கிரமக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாரும்! 10:40 அவர்களில் சிலர் இதன் மீது நம்பிக்கை கொள்வார்கள். வேறு சிலர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். இத்தகைய குழப்பவாதிகளை உம்முடைய இறைவன் நன்கறிபவனாக இருக்கின்றான். 10:41 மேலும், இவர்கள் உம்மைப் பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: “என்னுடைய செயல் எனக்குரியது; உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்கின்ற செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளர்களல்லர். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கு நானும் பொறுப்பாளன் அல்லன்!” 10:42 மேலும், நீர் கூறுவதைக் கேட்பவர் (கள் போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் விளங்காமல் இருந்தாலும் அச்செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா? 10:43 மேலும், உம்மைப் பார்ப்பவர்(போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் புலப்படாவிட்டாலும் அக்குருடர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியுமா? 10:44 உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள். 10:45 (இன்று இவர்கள் உலக வாழ்க்கையில் மதிமயங்கிக் கிடக்கின்றார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், (இவ்வுலக வாழ்க்கை அவர்களுக்கு எவ்வாறு தோன்றுமெனில்) தமக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக பகலின் சொற்ப நேரமே தவிர (உலகில்) தாங்கள் தங்கியிருக்கவில்லை என்பது போல் தோன்றும்! அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யென்று கூறியவர்களும், ஒருபோதும் நேர் வழியின்படி வாழாதவர்களும் நிச்சயமாக பேரிழப்பிற்கு ஆளாகி விட்டார்கள் (என்பதும் அன்று உறுதியாகிவிடும்). 10:46 அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கின்ற தீய விளைவின் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும் போதே) காண்பித்து விட்டாலும் அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மை எடுத்துக் கொண்டாலும் எவ்வாறாயினும் நம்மிடமே அவர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது. மேலும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அவற்றுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான். 10:47 ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் இறைத்தூதர் இருக்கிறார். பிறகு (ஏதேனும் உம்மத்தாரிடம்) அவர்களின் தூதர் வந்துவிட்டால், அவர்களுடைய கதி நீதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. மேலும், அவர்கள் மீது (இம்மியளவும்) அநீதி இழைக்கப்படுவதில்லை. 10:48 மேலும், “உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்போது நிறைவேறும்?” என்று அவர்கள் வினவுகின்றார்கள். 10:49 (நபியே!) நீர் கூறும்: “எனக்கு நானே பலனளித்துக் கொள்ளவும், நஷ்டம் விளைவித்துக் கொள்ளவும்கூட எனக்கு அதிகாரமில்லை. ஆனால், அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இத்தவணை நிறைவடைந்து விட்டால் அவர்கள் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.” 10:50 (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் என்றாவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ (திடீரென்று) உங்களிடம் வந்துவிட்டால் (அப்போது உங்களால் என்ன செய்ய இயலும்?) இக்குற்றவாளிகள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? 10:51 அது உங்களை வந்து தாக்கும்போதுதான் அதனை நம்புவீர்களா? இப்போது தப்பிக்கப் பார்க்கின்றீர்களா? அது வரவேண்டுமென்று நீங்கள்தானே அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். 10:52 பிறகு அந்த அக்கிரமக்காரர்களிடம் கூறப்படும்: “இதோ! நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! எதனை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ அதற்குரிய தண்டனையைத் தவிர வேறு என்ன கூலிதான் உங்களுக்கு அளிக்கப்படும்?” 10:53 மேலும், “நீர் கூறுவது உண்மைதானா?” என்று உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “என் இறைவன் மீது ஆணையாக! அது முற்றிலும் உண்மையானதே! மேலும், அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையை நீங்கள் பெற்றிருக்கவில்லை.” 10:54 அக்கிரமம் செய்த ஒவ்வொருவனும் தன்னிடம் இந்த பூமியில் உள்ள செல்வம் அனைத்தும் இருந்தாலும், அந்த வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனை (முழுவதும்) ஈடாக அளிப்பதற்குத் தயாராகி விடுவான். மேலும், இவர்கள் அவ்வேதனையைக் காணும்போது உள்ளூரப் பெரிதும் வருந்து வார்கள். ஆயினும், அவர்களிடையே முற்றிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கப்படும்; அவர்கள் (எவ்வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். 10:55 தெரிந்து கொள்ளுங்கள்! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமலிருக்கின்றனர். 10:56 அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! 10:57 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. 10:58 (நபியே) நீர் கூறும்: “அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்.” 10:59 (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஜ்கில் (அருட்பேற்றில்) சிலவற்றைத் தடுக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே!” (நபியே! இவர்களிடம்) கேளுங்கள்: “இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கின்றீர்களா?” 10:60 அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? திண்ணமாக, அல்லாஹ் மக்கள் மீது கருணையுடையவனாக இருக்கின்றான். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. 10:61 (நபியே!) நீர் எந்த நிலைமையிலிருந்தாலும், குர்ஆனிலிருந்து எதை நீர் ஓதிக் காண்பித்தாலும், (மக்களே) நீங்களும் எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும், அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆக, வானம் மற்றும் பூமியில் உள்ள பொருள்களில் அணுவளவும் உம் இறைவனின் பார்வையை விட்டு மறைவானதல்ல! அதைவிடச் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை. 10:62 தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 10:63 அவர்களோ நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கினை மேற் கொண்டிருந்தார்கள். 10:64 இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்திகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வாக்குகள் மாறக்கூடியவையல்ல! இதுதான் மாபெரும் வெற்றியாகும். 10:65 (நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 10:66 அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்கள், பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்குரியவர்களாவர். எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு (தாம் உருவாக்கிக் கொண்ட) தெய்வங்களை அழைக்கின்றார்களோ அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகின்றார்கள். மேலும், வெறும் கற்பனைகளில்தான் மூழ்கியிருக்கின்றார்கள். 10:67 அல்லாஹ்தான் உங்களுக்காக இரவை அமைத்தான்; அதில் நீங்கள் நிம்மதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், பகலை ஒளிமிக்கதாக அமைத்தான்! திண்ணமாக (திறந்த மனத்துடன் இறைத்தூதரின் அழைப்பைச்) செவிமடுக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன. 10:68 ‘அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்’ என மக்கள் கூறிவிட்டார்கள். (ஸுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் புனிதமானவன்! அவன் தேவைகள் இல்லாதவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். இந்நிலையில் இக்கூற்றுக்கு உங்களிடம் என்னதான் ஆதாரம் இருக்கிறது? நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்களா? 10:69 (நபியே!) நீர் கூறும்: “எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றியடைவதில்லை.” 10:70 உலகில் (அவர்கள் அனுபவிப்பது) கொஞ்ச நாள் வாழ்க்கைதான்! பிறகு நம்மிடமே அவர்கள் திரும்ப வரவேண்டியுள்ளது. பின்னர் அவர்கள் மேற்கொண்டிருந்த நிராகரிப்புப் போக்கிற்குப் பகரமாக கடுமையான வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். 10:71 மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன்னுடைய சமுதாயத்தினரை நோக்கி கூறினார்: “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒருமித்த தீர்மானத்திற்கு வாருங்கள்! பிறகு அந்தத் தீர்மானத்தின் எந்த அம்சமும் உங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிடாவண்ணம் அதனைப் பற்றி நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள்; பிறகு (அதனை) எனக்கெதிராகச் செயல்படுத்துங்கள்; மேலும், எனக்குச் சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள்! 10:72 நீங்கள் (என் நல்லுரையைப்) புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டு விடாது. நான் உங்களிடம் கூலி எதனையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” 10:73 அவர்கள் அவரைப் ‘பொய்யர்’ என்று கூறினார்கள். இதன் விளைவாக நாம் அவரையும் அவருடன் கப்பலிலிருந்த மக்களையும் காப்பாற்றினோம்; மேலும் அவர்களை (இப்பூமியில்) பிரதிநிதிகளாக்கினோம். மேலும், நம் வசனங்களைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த அனைவரையும் மூழ்கடித்தோம். பாருங்கள்! எச்சரிக்கப்பட்டிருந்(தும் ஏற்றுக் கொள்ளா)தவர்களின் கதி என்னவாயிற்று? 10:74 பின்னர், நாம் நூஹுக்குப் பிறகு தூதர்கள் பலரை அவரவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும், அத்தூதர்கள் அவர்களிடம் மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆயினும், எவற்றை முன்னர் பொய்யெனக் கூறிவந்தார்களோ அவற்றை அவர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். 10:75 பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸா மற்றும் ஹாரூனை, ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமூகப் பிரமுகர்களிட மும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் தற்பெருமை கொண்டதோடு குற்றம் புரியும் கூட்டத்தினராய் இருந்தனர். 10:76 எனவே, நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது, “திண்ணமாக இது வெளிப்படையான சூனியம்” என்று கூறினார்கள். 10:77 அதற்கு மூஸா கூறினார்: “சத்தியம் உங்களிடம் வந்த பிறகு அதைப் பற்றியா இவ்வாறு கூறுகின்றீர்கள்? இது என்ன சூனியமா? உண்மையில் சூனியக்காரர்கள் வெற்றி பெறுவதில்லை.” 10:78 அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்கள் எந்த வழியில் வாழ்ந்திடக் கண்டோமோ அந்த வழியிலிருந்து எங்களைத் திருப்பிவிட வேண்டும்; மேலும், இப்புவியில் உங்களுடைய மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? ஆகவே உங்களிருவரையும் நாங்கள் நம்பவே மாட்டோம்!” 10:79 மேலும், ஃபிர்அவ்ன், “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று தன்னைச் சேர்ந்தவர்களிடம் கூறினான். 10:80 சூனியக்காரர்கள் வந்தபோது மூஸா, அவர்களை நோக்கி, “நீங்கள் எறிய இருப்பவற்றை எறியுங்கள்!” என்றார். 10:81 அவர்கள் எறிந்தபோது, மூஸா கூறினார்: “நீங்கள் நிகழ்த்திக்காட்டியது சூனியமேயாகும். திண்ணமாக, அல்லாஹ் அதனை இப்பொழுதே தகர்த்து விடுவான். ஏனெனில், அல்லாஹ் குழப்பம் புரிவோரின் செயலைச் சீர்படுத்துவதில்லை. 10:82 அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை சத்தியம்தான் என்று நிரூபித்து விடுகின்றான். குற்றவாளிகளுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!” 10:83 (பாருங்கள்!) ஃபிர்அவ்னுக்கு அஞ்சியும், அவன் வேதனையில் ஆழ்த்திவிடுவானோ என்று பயந்த சமூகப் பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவருடைய சமூகத்தாரில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை சில இளைஞர்களைத் தவிர! உண்மை யாதெனில், ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெரும் வல்லமை கொண்டவனாக இருந்தான். திண்ணமாக, அவன் எந்த எல்லையை மீறுவதற்கும் தயங்காதவர்களில் ஒருவனாக இருந்தான். 10:84 மூஸா (தன் சமூகத்தாரை நோக்கிக்) கூறினார்: “என் சமூகத்தவரே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவனையே முற்றிலும் சார்ந்து வாழுங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால்!” 10:85 அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! 10:86 மேலும், நிராகரிக்கும் கூட்டத்தாரிடமிருந்து உனது கருணையினால் எங்களைக் காப்பாற்றுவாயாக!” 10:87 மேலும், நாம் மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் வஹி அறிவித்தோம்: “உங்களுடைய சமுதாயத்தாருக்காக எகிப்தில் சில இல்லங்களை அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், உங்களுடைய அந்த இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலைநாட்டுங்கள்! மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவியுங்கள்!” 10:88 மூஸா இவ்வாறு இறைஞ்சினார்: “எங்கள் இறைவனே! நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய்; எங்கள் இறைவனே! உன் வழியில் செல்லவிடாமல் (மக்களை) அவர்கள் திசை திருப்புவதற்காகவா (அவற்றை நீ அளித்திருக்கின்றாய்)? எங்கள் இறைவனே! அவர்களின் செல்வங்களை அழித்து விடுவாயாக! மேலும், துன்புறுத்தும் வேதனையைக் கண்ணால் காணும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களை இறுகச்செய்வாயாக!” 10:89 அதற்கு அல்லாஹ் பதில் கூறினான்: “உங்கள் இருவருடைய இறைஞ்சுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள்! அறியாதவர்களின் வழிமுறையை ஒருபோதும் நீங்கள் பின்பற்றாதீர்கள்!” 10:90 மேலும், நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்!” 10:91 (பதில் கூறப்பட்டது:) “இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய். 10:92 இன்று உன் உடலை மட்டும் நாம் காப்பாற்றுவோம்; உனக்குப் பின்னால் வரக்கூடிய மக்களுக்குப் படிப்பினை தரும் சான்றாக விளங்கும் பொருட்டு! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நம் சான்றுகளை அலட்சியப்படுத்துபவர்களாய் இருக்கின்றனர்.” 10:93 நாம் இஸ்ராயீயிலின் வழித்தோன்றல்களை மிகச் சிறந்த இடத்தில் வசிக்கச் செய்தோம். மேலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதிகளையும் வழங்கினோம். உண்மையான அறிவு அவர்களிடம் வந்த பின்னரேயன்றி, அவர்கள் பிளவுபடவில்லை. அவர்கள் எதில் பிளவுபட்டிருந்தார்களோ அதைக் குறித்து மறுமைநாளில் அவர்களுக்கு இடையே திண்ணமாக உம்முடைய இறைவன் தீர்ப்பு வழங்குவான். 10:94 நாம் உம்மீது இறக்கியருளியவற்றில் உமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உமக்கு முன்பிருந்தே வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீர் கேளும். உண்மையில் உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்தியமே வந்துள்ளது. எனவே, சந்தேகம் கொள்வோருள் நீரும் ஒருவராகிவிடவேண்டாம். 10:95 மேலும், எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களுள் ஒருவராகவும் நீர் ஆகிவிடவேண்டாம். அவ்வாறாயின் இழப்புக்கு ஆளானோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்! 10:96 உண்மை யாதெனில், எவர்கள் மீது உம்முடைய இறைவனின் வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். 10:97 எத்தனை சான்றுகள் அவர்களிடம் வந்தாலும் சரியே! அவர்கள் துன்புறுத்தும் வேதனையைக் கண்டால் அன்றி; (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்). 10:98 (இறைத்தண்டனையைக் கண்டபோது) நம்பிக்கை கொண்ட எந்த ஊர் மக்களுக்காவது அவர்களுடைய நம்பிக்கை பயன் அளித்திருப்பதாக எந்த ஓர் எடுத்துக்காட்டாவது இருக்கிறதா யூனுஸுடைய சமுதாயத்தைத் தவிர? (அத்தகைய எடுத்துக்காட்டு எதுவும் இல்லை) அந்தச் சமுதாயத்தினர் நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை நாம் அவர்களை விட்டு அகற்றி விட்டோம். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் செய்தோம். 10:99 (உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது) உம் இறைவனின் நாட்டமாக இருந்தால், இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்களாகி விடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்துவீரா? 10:100 எந்த மனிதனும் அல்லாஹ்வின் நாட்டமின்றி நம்பிக்கை கொள்ள முடியாது. மேலும், எவர்கள் சிந்தித்துணரவில்லையோ அவர்கள்மீது அவன் மாசுபடியச் செய்கின்றான். (இதுவே அவனது நியதியாகும்.) 10:101 (நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்.” நம்பிக்கை கொள்ள விரும்பாத கூட்டத்தாருக்கு, சான்றுகளும் எச்சரிக்கைகளும் என்ன பலனை அளித்துவிடப் போகின்றன? 10:102 தமக்கு முன்னால் சென்று போன மக்கள் அனுபவித்ததைப் போன்ற வேதனை நிறைந்த நாட்களைத் தவிர வேறு எதனை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? எனவே, இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களோடு எதிர்பார்ப்பவனாய் இருக்கின்றேன்.” 10:103 பிறகு (இவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது) நாம் நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றிவிடுகின்றோம். இதுவே நம்முடைய வழிமுறையாகும். நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவது நம் மீது கடமையாகும். 10:104 (நபியே!) நீர் கூறிவிடுவீராக: “மனிதர்களே, நீங்கள் (இப்பொழுதும்கூட) என்னுடைய தீனை (நெறியை)ப் பற்றி ஏதேனும் சந்தேகம் கொண்டிருந்தால் (தெரிந்து கொள்ளுங்கள்!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாருக்கெல்லாம் அடிபணிகின்றீர்களோ அவர்களுக்கு நான் அடிபணிவதில்லை. மாறாக, எந்த இறைவனின் பிடியில் உங்கள் மரணம் இருக்கிறதோ அந்த இறைவனுக்கு மட்டும் நான் அடிபணிகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன். 10:105 மேலும், ‘ஒருமனப்பட்டு இந்த தீனில் (நெறியில்) உம்மை முற்றிலும் நிலைப்படுத்திக் கொள்வீராக! மேலும், எந்நிலையிலும் இணை வைப்பவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்’ என்றும் நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.” 10:106 மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு உமக்குப் பலனளிக்கவும் கேடு விளைவிக்கவும் இயலாதவற்றிடம் நீர் பிரார்த்திக்காதீர். அவ்வாறு செய்வீராயின் அப்போது நீர் திண்ணமாக அக்கிரமம் செய்பவர்களுள் ஒருவராகி விடுவீர். 10:107 மேலும், ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடிமைகளில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். 10:108 (நபியே!) நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே, யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும். யாரேனும் வழிகெட்டுப்போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஷயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்.” 10:109 (நபியே!) வஹியின் வாயிலாக உமக்கு அனுப்பப்படுகின்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பீராக! அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை பொறுமையுடன் இருப்பீராக! மேலும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவனாவான்.
அத்தியாயம்  ஹூத்  11 : 1-5 / 123
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
11:1 அலிஃப், லாம், றா. வேதக் கட்டளையாகும் இது. அனைத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இதனுடைய வசனங்கள் உறுதியான முறையிலும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 11:2 (அந்தக் கட்டளை இதுதான்:) ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!’ திண்ணமாக, நான் அவன் சார்பில் உங்களை எச்சரிக்கை செய்பவனாகவும் உங்களுக்கு நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கின்றேன். 11:3 மேலும், நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக்கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! அப்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகான வாழ்வாதாரங்களை வழங்கி இன்புறச் செய்வான். மேலும், சிறப்புக்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய சிறப்புக்கேற்ப தன் அருளை வழங்குவான். நீங்கள் புறக்கணிப்பீர்களேயானால், திகிலூட்டக்கூடிய ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். 11:4 அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிவரவேண்டியுள்ளது. மேலும், அவன் அனைத்தையும் செய்வதற்கு ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான். 11:5 பாருங்கள்! அவருடைய பார்வையை விட்டு மறைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் தங்களுடைய நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! இவர்கள் ஆடைகளால் தங்களை மூடி மறைத்துக்கொண்ட போதிலும் அவர்களின் இரகசியங்களையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களையும் நன்கறியக்கூடியவனாக இருக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)