அத்தியாயம்  அல்ஃபாத்திஹா  1 : 1-7 / 7
1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) 1:2 எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். 1:3 அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். 1:4 இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். 1:5 உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். 1:6 எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! 1:7 (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
அத்தியாயம்  அல்பகறா  2 : 1-74 / 286
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
2:1 அலிஃப். லாம். மீம். 2:2 இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். 2:3 அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். 2:4 மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். 2:5 இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள். 2:6 (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர். 2:7 அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர். 2:8 இன்னும் “அல்லாஹ்வையும் இறுதி(த் தீர்ப்பு) நாளையும் நம்பியிருக்கிறோம்” எனக் கூறுவோர் சிலரும் மனிதர்களில் உளர். ஆயினும், அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். 2:9 (இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. 2:10 அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் (இந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டான். மேலும் அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்குண்டு. 2:11 இன்னும் “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!” என அவர்கள் கூறுகிறார்கள். 2:12 எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகளாவர். ஆயினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. 2:13 இன்னும் “மற்ற மனிதர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?” என்றே அவர்கள் பதில் சொல்கிறார்கள் எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்களாவர். ஆயினும் (இதனை) அவர்கள் அறிவதில்லை! 2:14 இன்னும் இறைநம்பிக்கை கொண்டிருப்போரை அவர்கள் சந்தித்தால், ‘நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்எனக் கூறுகின்றனர். மேலும் தங்கள் ஷைத்தான்களுடன் அவர்கள் தனிமையில் இருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்! உண்மையில் நாங்கள் அவர்களைப் பரிகாசம்தான் செய்து கொண்டிருக்கிறோம்” எனச் சொல்கின்றனர். 2:15 அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். (அவன்) அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டு இருக்கின்றான்; (அவர்களோ) தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்று கொண்டேயிருக்கிறார்கள். 2:16 இத்தகையோரே நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டைக் கொள்முதல் செய்தோர்! ஆனால் இவர்களின் இவ்வாணிபம் இலாபம் தரக்கூடியதாக இல்லை. இன்னும் (அறவே) நேர்வழி பெற்றவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை. 2:17 இத்தகையோரின் உவமானம் (பின்வரும்) உதாரணத்தைப்போல் இருக்கிறது: ஒருவர் தீயை மூட்டினார்; அது அவரைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்து விட்டான். மேலும் எதையுமே அவர்கள் காணமுடியாத நிலையில் அவர்களை இருள்களில் விட்டு விட்டான். 2:18 அவர்கள் செவிடர்களாய், ஊமையர்களாய், குருடர்களாய் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்; 2:19 அல்லது இவர்களுடைய உவமானம், இவ்வாறு இருக்கிறது: வானத்திலிருந்து கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது; அத்துடன் காரிருளும் இடியும் மின்னலும் உள்ளன. (அதில் மாட்டிக் கொண்டவர்கள்) இடி முழக்கங்களைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சி தம் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கின்றார்கள். மேலும் (சத்தியத்தை) நிராகரிக்கும் இத்தகையோரை அல்லாஹ் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். 2:20 அவர்களுடைய பார்வைகளைப் பறிப்பது போல் (பயங்கரமாக) மின்னல் வெட்டுகிறது. அவர்களுக்கு அது (கொஞ்சம்) ஒளிதரும் போதெல்லாம் அதில் (சிறிது தூரம்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். மேலும், இருள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலன்களையும், பார்வைப் புலன்களையும் முழுமையாகப் பறித்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவனாய் இருக்கின்றான். 2:21 மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 2:22 அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். 2:23 நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)! 2:24 நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்! 2:25 மேலும், (நபியே! இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற்செயல்கள் புரிவோர்க்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைக் கூறுவீராக! அந்தச் சுவனங்களில் ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் அக்கனிகள் பூமியிலுள்ள கனிகளைப் போல் தோற்றத்தில் ஒத்திருப்பதால், “இத்தகைய கனிதான் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டது” என அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும், அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். 2:26 நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை. 2:27 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வுடன் உறுதியான உடன்பாடு செய்துகொண்ட பின்னர் அதை முறித்து விடுவார்கள். மேலும், எந்த உறவு முறைகள் இணைத்து வைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவற்றைத் துண்டிப்பார்கள். மேலும், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிவார்கள். (உண்மையில்) இத்தகையோரே இழப்புக்குரியவர்களாவர். 2:28 அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். 2:29 அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 2:30 அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு (வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்” என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!” என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்.” 2:31 பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்” எனக் கூறினான். 2:32 “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள். 2:33 (பின்னர்) இறைவன் கூறினான்: “ஆதமே! இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்!” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும், “வானங்களிலும், பூமியிலும் (உங்களுக்கு) மறைந்திருக்கக்கூடிய (உண்மைகள்) அனைத்தையும் நிச்சயமாக நான் நன்கறிவேன். மேலும் நீங்கள் வெளிப்படுத்தக்கூடியவற்றையும், மறைத்துக் கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான். 2:34 பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். 2:35 பிறகு “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தின் அருகே நீங்கள் நெருங்காதீர்கள்; நெருங்கினால் அக்கிரமம் செய்தவர்களாவீர்கள்!” என்று கட்டளையிட்டோம். 2:36 ஷைத்தான் அவ்விருவருக்கும் அம்மரத்தின் மீது ஆசை காட்டி, அவர்களை நம் கட்டளையிலிருந்து பிறழச் செய்து விட்டான். மேலும் அவ்விருவரும் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டான். மேலும் நாம் கட்டளையிட்டோம்: “நீங்கள் எல்லாரும் (இங்கிருந்து) இறங்கி விடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். இன்னும், உங்களுக்காகக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை பூமியில் தங்குமிடமும் இருக்கிறது; வாழ்க்கை வசதிகளும் இருக்கின்றன.” 2:37 அப்போது, ஆதம் தம் இறைவனிடமிருந்து கற்ற சில சொற்களைக் கொண்டு அவனிடம் பாவமன்னிப்புக் கோரினார். அதனை அவருடைய இறைவன் ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். 2:38 நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 2:39 அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!” 2:40 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடைகளை நீங்கள் நினைவுகூருங்கள்; மேலும், எனக்கு நீங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! (அவ்விதமாயின்) உங்களுக்குத் தந்த வாக்குறுதியை நானும் நிறைவேற்றுவேன். மேலும், எனக்கு மட்டுமே நீங்கள் அஞ்சுங்கள்! 2:41 மேலும் நான் இறக்கியுள்ள இந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடமிருந்த வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் நீங்களே அனைவருக்கும் முதலில் (இதனை) நிராகரிப்பவர்களாகி விடாதீர்கள். என்னுடைய திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்காதீர்கள். மேலும் எனக்கே அஞ்சுங்கள்! 2:42 அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்துகொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள். 2:43 தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; இன்னும் என் முன்னிலையில் தலைசாய்ப்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் தலை சாயுங்கள். 2:44 பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு, உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறிதளவும் (இதைப் பற்றி) சிந்திப்பதில்லையா? 2:45 பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல! 2:46 அவர்கள் எத்தகையோர் எனில் இறுதியில் தங்கள் இறைவனைச் சந்திப்பவர்களாய் இருக்கின்றோம் என்றும், அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள். 2:47 இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். 2:48 மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்து உதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. எவரிடமிருந்தும் மீட்புப் பணம் பெறப்பட்டு, எவரும் விடுதலை செய்யப்படவும் மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. 2:49 ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரி(ன் அடிமைத் தளையி)லிருந்து நாம் உங்களுக்கு விடுதலை அளித்த சந்தர்ப்பத்தையும் நினைவு கூருங்கள்! அவர்கள் கொடிய வேதனையில் உங்களை ஆழ்த்தி வைத்திருந்தார்கள். உங்களுடைய ஆண் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டும், உங்களுடைய பெண் மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்தார்கள். இதன் மூலம் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. 2:50 மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்(து வழி ஏற்படுத்தித்தந்)து, பின்னர் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் மூழ்கடித்ததையும் எண்ணிப் பாருங்கள்! 2:51 மேலும், இதையும் நினைவுகூருங்கள்: நாம் மூஸாவுக்கு நாற்பது இரவுபகல்களை வாக்களித்திருந்தோம்; ஆனால், அவர் சென்ற பிறகு நீங்கள் காளைக்கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள்! அப்போது நீங்கள் பெரும் அக்கிரமம் புரிந்தவர்களாக இருந்தீர்கள். 2:52 அதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் இருக்கக்கூடும் என்பதற்காக நாம் உங்களை மன்னித்தோம். 2:53 (நீங்கள் இவ்வாறு அக்கிரமம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில்) நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும், ‘ஃபுர்கானை’*யும் அருளியதை நினைவுகூருங்கள். 2:54 மேலும், இதையும் நினைவுகூருங்கள்: மூஸா, (இந்த அருட்கொடைகளைப் பெற்றுத் திரும்பி வந்து) தம் சமுதாயத்தார்களை நோக்கி, “என்னுடைய சமுதாயத்தாரே! காளைக்கன்றை நீங்கள் தெய்வமாக்கிக் கொண்டதனால் திண்ணமாக உங்களுக்கு நீங்களே (பெரும்) அநீதி இழைத்துக் கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். மேலும் உங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளுங்கள். இதுவே உங்களைப் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நன்மை பயக்கும்” என்று கூறினார். (அந்நேரத்தில்) உங்கள் இறைவன், உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான். 2:55 “மூஸாவே! நாங்கள், அல்லாஹ்வை (உம்முடன் உரையாடும் நிலையில் எங்கள் கண்களால்) வெளிப்படையாகக் காணாத வரை உம் கூற்றை நாங்கள் ஒருபோதும் நம்பமாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை ஒரு பேரிடி தாக்கிற்று! உடனே நீங்கள் மாண்டு வீழ்ந்துவிட்டீர்கள். 2:56 அதன்பிறகும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு நாம் மீண்டும் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். 2:57 மேலும் நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். உங்களுக்கு மன்னுஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்(என்றும் உங்களிடம் கூறினோம்). எனினும் (உங்கள் மூதாதையர் வரம்பு மீறினார்கள்; அதன் மூலம்) அவர்கள் எமக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர். 2:58 மேலும் “(அருகிலிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பனவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். ஊருக்குள் நுழையும்போது அதன் தலைவாசலில், சிரம் தாழ்த்திய வண்ணமும் “ஹித்தத்துன்” என்று சொல்லியவாறும் நுழையுங்கள்! உங்கள் குற்றங்களை நாம் மன்னிப்போம். மேலும் சிறந்த முறையில் நற்செயல்கள் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்” என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள். 2:59 ஆனால் அந்த அக்கிரமக்காரர்கள் தமக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். இறுதியில் அந்த அக்கிரமக்காரர்கள் மீது, விண்ணிலிருந்து வேதனையை நாம் இறக்கினோம். இறைக் கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ததினால் கிடைத்த தண்டனையாகும் இது. 2:60 இன்னும், மூஸா தம் சமுதாயத்தினருக்காக தண்ணீர் கோரிப் பிரார்த்தித்ததையும் நினைவுகூருங்கள். அப்போது “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தாரும் (அவ்வூற்றுகளிலிருந்து) தாம் தண்ணீர் அருந்த வேண்டிய பகுதியை அறிந்து கொண்டனர். (அப்பொழுது நாம் அறிவுறுத்தினோம்:) “அல்லாஹ் அருளிய உணவை உண்ணுங்கள்; பருகுங்கள். ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!” 2:61 மேலும், நீங்கள் (மூஸாவை நோக்கி) இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மூஸாவே! நாங்கள் ஒரே வகையான உணவைக் கொண்டு பொறுமையாய் இருக்க முடியாது; எனவே, பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்காக உற்பத்தி செய்து தரும்படி உமது இறைவனை நீர் பிரார்த்திப்பீராக!” அதற்கு மூஸா கூறினார்: “சிறந்த பொருள்களுக்குப் பதிலாக மட்டமான பொருள்களை நீங்கள் விரும்புகிறீர்களா? (அப்படியானால்) நீங்கள் ஏதாவது ஒரு பட்டணத்திற்குச் சென்று (தங்கி) விடுங்கள். நீங்கள் கேட்பவை எல்லாம் உங்களுக்கு அங்கே கிடைக்கும்.” (இறுதியில் அவர்களின் நிலை என்னவாயிற்று என்றால்) இழிவும், தாழ்வும், (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டும், நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும், (ஷரீஅத்தின்) வரம்பை மீறிக்கொண்டும் இருந்ததுதான்! 2:62 (முஹம்மத் அவர்கள் மீது) நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஸாபீகள் ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 2:63 இந்தச் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருங்கள்: தூர் மலையை நாம் உங்களுக்கு மேலே உயர்த்தி உங்களிடமிருந்து உறுதியான வாக்குமூலம் வாங்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கியுள்ள (வேதத்)தை உறுதியுடன் (கடைப்)பிடியுங்கள். அதிலுள்ள (அறிவுரைகள், கட்டளைகள் ஆகிய)வற்றை நினைவில் வையுங்கள். (அப்போதுதான்) நீங்கள் இறையச்சமுடையோராய்த் திகழலாம்” எனவும் நாம் கூறினோம். 2:64 (எனினும்) அதன் பின்னர் நீங்கள் (உங்கள் வாக்குறுதியிலிருந்து) மாறிவிட்டீர்கள். (அப்படி இருந்தும்) அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்களைக் கைவிடவில்லை; அவ்வாறு கைவிட்டிருந்தால், நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள். 2:65 மேலும், உங்களில் எவர்கள் சனிக்கிழமை வரையறையை மீறினார்களோ அவர்களைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்தே இருக்கிறீர்கள்; அவர்களை நோக்கி, “நீங்கள் குரங்குகளாகி (அனைவராலும் வெறுக்கப்பட்டு) இழிவடைந்தவர்களாகி விடுங்கள்” என்று நாம் கூறினோம். 2:66 (இவ்வாறு) அவர்களின் இறுதி முடிவை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சம் உடையோர்க்கு நல்லுரையாகவும் ஆக்கினோம். 2:67 மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: மூஸா, தமது சமூகத்தாரிடம் “ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” எனக் கூறினார். (அப்போது அவர்கள் “மூஸாவே!) நீர் எங்களை கேலி செய்கிறீரா?” என்றார்கள். அதற்கு அவர், “நான் (அவ்வாறு பேசி) அறிவீனர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார். 2:68 அவர்கள் கூறினார்கள்: “அது (பசு) எத்தன்மையுடையது என எங்களுக்கு விவரிக்கும்படி உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது கிழடாகவோ, கன்றாகவோ இல்லாமல் நடு வயதுள்ளதாய் இருக்க வேண்டும் என இறைவன் கூறுகின்றான்; எனவே, உங்களுக்கு இடப்படுகின்ற கட்டளையைச் செயல்படுத்துங்கள்!” என்றார். 2:69 மீண்டும் அவர்கள் கூறினார்கள்: (“மூஸாவே!) அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விவரிக்குமாறு உமது இறைவனிடம் நீர் வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசுவாக இருக்க வேண்டும்; அதன் நிறம் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் வண்ணம் (அடர்த்தியாக) இருக்க வேண்டும்!” என்றார். 2:70 அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) அது எத்தன்மை உடையது என (மிக மிகத்)தெளிவாக எங்களுக்கு விவரிக்கும்படி உம் இறைவனை வேண்டுவீராக! ஏனெனில், நிச்சயமாக அந்தப் பசு (எதுவென்பது) பற்றி எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மேலும், அல்லாஹ் நாடினால் (உரிய பசுவின் பக்கம்) நாங்கள் வழிகாட்டப் பெறுவோம்.” 2:71 மூஸா பதிலளித்தார்:“பூமியை உழுவதற்கோ, வேளாண்மைக்கு நீரிறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, ஊனமேதுமற்ற, எவ்வித வடுவுமற்ற பசுவாக அது இருக்க வேண்டும் என அவன் கூறுகின்றான்.” பிறகு அவர்கள் (ஆரவாரத்துடன்) கூறினார்கள்: “இப்போதுதான் நீர் சரியான (விளக்கத்)தைத் தந்துள்ளீர்.” பின்னர் அவர்கள் அந்தப் பசுவை அறுத்தார்கள். ஆயினும் அவர்கள் அதனை முழு மனத்தோடு செய்பவர்களாய் இருக்கவில்லை. 2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். 2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான். 2:74 ஆனால் இத்தகைய சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் மிகக் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன; இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)